அரவாணிகளின் முதல் வாழ்க்கை ஆவணம்

This entry is part [part not set] of 39 in the series 20060526_Issue

தேவமைந்தன்



ரேவதி அவர்கள் ஏற்கனவே சென்னையில் அரங்க நிகழ்ச்சிகள்(stage arts) வடிவில் காட்சி வெளிப்பாடாக உணர்த்தியுள்ளதாகக் கேள்விப்பட்டிருந்த அரவாணிகளின் வாழ்க்கைக் கதைகளை ‘உணர்வும் உருவமும்’ என்ற நூல் வடிவில் வாசிக்கும் வாய்ப்பை எல்லோருக்கும் நல்கிய அடையாளம் & சங்கமா பதிப்பாளர்களுக்குப் பாராட்டுகள். எனக்கு அவ்வாய்ப்பைத் தந்தவர்களான பிரேம் ரமேஷுக்கும் மாலதி மைத்ரிக்கும் நன்றி.
இந்த ஆராய்ச்சி ஆவணத்தை உருவாக்க ரேவதி அவர்களுக்கு உந்துதல் எப்படிக் கிடைத்தது? அவரே சொல்கிறார்: “எனக்கு மட்டுந்தான் இவ்வளவு கஷ்டம்’ என்று நினைத்திருந்த எனக்கு, என்னைவிடவும் பலமடங்கு அதிகமான கஷ்டங்களை அனுபவித்து வாழ்க்கையோடு போராடிக்கொண்டிருக்கும் அரவாணிகளின் பேச்சு மரணம் குறித்த என் எண்ணத்தை முழுவதுமாக மாற்றியது… ஒரு கட்டத்தில் நான் என்னுடைய வாழ்க்கை வரலாறு எழுதிய கவிதைகள் எழுதிய அனுபவம் என்னை மற்றவர் பற்றியும் எழுத வைத்தது. அவையெல்லாம் ஆவணங்களாக இருக்கின்றன.”
அரவாணி ஒருவரே அரவாணியான மற்றவரை வினாக்கள் கேட்டு, தரவுகள் பெறுவதில் உள்ள நம்பகத்தன்மைகள் பின்வருமாறு:
1. “ஒரு அரவாணியால் மட்டும்தான் மற்றொரு அரவாணியின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடியும்.”
2. “ஒரு ஆணிடத்திலோ, ஒரு பெண்ணிடத்திலோ பகிர்ந்துகொள்ள முடியாத விஷயங்களைக்கூட இருவரும் பகிர்ந்துகொள்ள முடிகிறது.”
3. “ஒரு அரவாணி, தன் இனத்தார் பற்றி ஆய்வு செய்து நூலாகக் கொண்டு வரும்போது அது ஒரு முழுமையான ஆய்வாக மட்டுமல்லாது அரவாணிகளின் உண்மையான மாற்றங்களுக்கும், சமூக மாற்றத்திற்கும் வழிவகுப்பதாக இருக்கும்.”
இவை எல்லாம் ஒருபுறம் இருந்தாலும் தனிப்பட்ட முறையில் அந்தப்பணி, தன்னுடைய மன அழுத்தத்தைக் குறைத்து, தன்னை மறுபடியும் உயிர்ப்பித்ததாகவே கருதுவதாகவும் ரேவதி தெரிவித்திருக்கிறார்.
சகமானுட வாழ்வில், நெடுங்காலமாக ஆவணப்படுத்தாதிருந்த, அதனால் அறிதலுக்கும் புரிந்துகொள்ளப்பெறுதலுக்கும் மறைக்கப்பட்டிருந்ததொரு வாழ்க்கை இந்தப் புத்தகத்தின் மூலம் முதன்முதலாக வெளிப்பட்டிருப்பது, வெறும் வாசிப்புக்கு மட்டுமல்லாமல் சிந்தித்துச் செயலாற்றுவதற்கு, நம்மைப் பொறுத்த அளவில் ஒவ்வொருவரும் அரவாணிகளைச் சரியான முறையில் சகமனிதர்களாக மதிப்பதற்கு மிகவும் உதவும்.
பறவைகளிடையே குயில்கள்போல, மனிதர்களிடையே வெளிப்பட்டும் வெளிப்படாமலும் தங்கள் இருத்தலை மட்டும் உணர்த்திக்கொண்டு வாழ்ந்த அரவாணிகளின் வாழ்க்கை நிகழ்ச்சிகளை ஒரு சராசரி மனதுக்கும் புரியும் வகையில் மனிதநேயமும் தோழமையும் கொண்டு ஒன்பது இயல்களில் புலப்படுத்தியிருக்கிறார் ரேவதி.
‘குழந்தைப் பருவமும் பள்ளிப் பருவமும்” தொடங்கி – பெற்றோரும் சமுதாயமும், தொழில் அனுபவங்கள், காதலும் குடும்ப வாழ்வும், தாய் நிலை, கலாச்சாரம், விழாவும் வழிபாடும், ஆக்டிவிஸம் என்ற சமூக நிறுவனக் கட்டுமானங்களின் மூலம் விளக்கி – அரவாணிகளின் வாழ்க்கையில் மாற்றங்கள் எவ்வாறு சிந்தனையிலும் தொழில்முறையிலும் சமூக – ஊடகப் போக்கிலும் இடம்பெற்று வருகின்றன என்பது முடிவாக, அரவாணிகள் அவரவர் சொல்லும் மொழிவழியாக, புத்தக வடிவில் தொகுத்து வழங்கியிருக்கிறார்.
முதன் முதலாக அரவாணியொருவராலேயே அரவாணிகளின் வாழ்க்கை நிகழ்வுகள் முறைப்படுத்தி ஆவணப்படுத்தப்பெற்றிருப்பது – இந்தப் புத்தகத்துக்குக் கிடைத்துள்ள ஆராய்ச்சி வரலாற்று முக்கியத்துவம்.
அடிக்குறிப்புகள் முதலான ஆய்வின் புறஅடையாளங்கள் இந்நூலில் அமைந்திருந்தாலும், “என்னுடைய இந்த நூலைப் பெரும் ஆராய்ச்சி நூலாக அல்லாமல் நாங்கள் பட்ட வேதனைகளை, சந்தோஷங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வதைப்போல் கொண்டு சென்றுள்ளேன்” என்று ‘என்னுரை’யில் ரேவதி குறிப்பிடுவதுபோல், வறட்டுத்தனமில்லாமல் செயல்சாத்தியத்துக்குரியதாகத் தன் நூலை அமைத்துக்கொண்டதற்காகவும் அவரைப் பாராட்டவேண்டும்.
பாலியல் ரீதியாக மட்டுமல்லாமல் பன்முகமாகவும் ஒடுக்கப்பட்டவள் பெண். வயலில் சேற்றில் இறங்கி, கொடிய வெயிலிலும் சில சமயம் இடிமின்னலின்பொழுதும் வேலைசெய்ய வேண்டிய நிலையிலிருக்கும், பிறப்பை வைத்தும் ஒடுக்கப்பட்ட பெண்களைக் காட்டிலும் இந்துவருண சாதி என்கிற பாதுகாப்புக்கு உட்பட்டு வாழும் பெண்கள் பாதுகாப்பில் எத்துணையோ மேலானவர்கள் அல்லவா? இந்த இரண்டு சமூக கட்டங்களுக்கும் வெளியே விளிம்பில் பல்வேறு பயங்களுடனும் அன்றாடங்களைக் கழித்துக் கொண்டு, பற்பல கேள்விகள் அவ்வப்பொழுது அடிமனத்தைக் கலக்கிச் சங்கடப்படுத்த, சமூகச் சட்டங்களாலும் அதை நிறைவேற்றப் பணியேற்றவர்களின் அடக்குமுறையாலும் இன்னும் பல அக – புற அழுத்தங்களாலும் நொந்திருக்கையில், “ஒன்பது” என்று விடலைகளாலும் சமூகப் பொறுப்பற்றவர்களாலும் கொச்சைப்படுத்தப்படும்பொழுது தன்னளவில் பொறுத்துக்கொண்டு போனாலும், மற்ற அரவாணியைக் கேவலப்படுத்திப் பேசினால் பொங்கியெழுவது(ப.48) அவர்களுக்குள்ளே ஊடுருவியிருக்கும் மெய்யான நேசத்தை நிரூபிக்கிறது.
அரவாணிகளுள் விதிவிலக்காக அம்மாவின் அடர்ந்த பாசமும், மூன்றாவது அக்காவின் தொடர்ந்த ஆதரவும் கிடைக்கப்பெற்ற ராஜத்தின் கதையும் இதில் இருக்கிறது.
தான் அரவாணியென்பதால் சொத்திலும் தனக்குத் துரோகம் பண்ணிய தந்தையை எதிர்த்து கிராமபஞ்சாயத்தில் போராடியவரும்; தான் அரவாணியாக இருந்தாலும் – தன் சொந்த ஊரிலேயே ‘கையளவு வீடு, சொந்தவீடு’ வேண்டுமென்று ‘ஆம்பள வேஷம்’ போட்டுக்கொண்டு போராடியவரும்;, “அரவாணிங்களே ஊருக்குள்ள வரக்கூடாதுன்னு” நிலவிய நிலையை மாற்றியதுடன் ஊர்விசேஷத்தின்பொழுது “ஐநூறு ரூபாய்க்கி ஒரு கேன் சாராயம் வாங்கி ஊத்தி ஜெனங்கள குஷிப்படுத்தி” தானும் ஊரில் ஒரு மனுஷியாக ஆனவரும்; ‘ரவுடிகளுக்குப் பயந்துபயந்து வாழ்ந்தாலும்’ அக்கம் பக்கத்தில் இருப்பவர்களின் மரியாதையையும் ஆதரவையும் பெற்றவரும்; கரகாட்டக் கலையின்மேல் கவனம் மிகவைத்து ஏழைகள் கலைரசிகர்களாக இருந்தால் அவர்களுக்காக இலவசமாகவும் ஆடுபவரும்; மாறாக வயதாவதற்குள் சம்பாதித்துவிடவேண்டும் என்று எப்படியும் ஆடுபவரும்; மும்பையிலுள்ள அரவாணிகள் கூட்டமைப்பு ஒன்றை நம்பமுடியாமல் தமிழகத்திலுள்ள தன்னூருக்கு வந்துவிட்டு இங்கே வீட்டிலேயே சிறைப்பட்டு ‘ஏண்டா பம்பாயிலிருந்து வந்தோம்?’ என்று குமைபவரும்; ‘கெட்டவங்க மத்தியில நல்லவங்களும் இருக்கத்தான் செய்றாங்க’ என நல்லவரை இனங்கண்டு அவரிடத்தில் பணிபுரிபவரும் -என்று பலவிதமான தளங்களில் அரவாணிகள் இந்நூலில் நம்முடன் தங்குதடையில்லாமல் தங்கள் சுகதுக்கங்களைப் பகிர்ந்துகொள்ள முடிகிறது என்றால் அதற்கு முழுக்காரணம் தொகுப்பாசிரியர் ரேவதி அவர்களின் உழைப்பும் நேர்மையுமே.
“கேவலத்துக்கு நாம ஏன் இடம் குடுக்கணும்? நம்ம உரிமைகளை அரசாங்கத்துக்கிட்ட கேட்டு வாங்கணும். சொந்தமா தொழில் செய்யணும். பொறாமை, சண்டை, சச்சரவு இல்லாம நாம ஒத்துமையா இருந்து நம்முடைய உரிமையைப் பெறணும்… ஜெனங்களும் பாதி பேரு திருந்திட்டாங்க” என்று மனம் திறந்து நம்பிக்கையுடன் பேசும் அரவாணி ஒருவரின் ஆரோக்கியம் மனநிறைவு தருகிறது(பக்.105-106).
சமூகத்திலிருந்து ஒதுங்கியே வாழவேண்டிய நிலையிலிருந்த அன்றைய அரவாணிகள்போல் அல்லாமல், இன்றைய அரவாணிகள் கல்வி பெறுகிறார்கள். ஊரையும் வீட்டையும் விட்டுப்போனவர்கள் முன்பெல்லாம் திரும்ப வரவே முடியாமல் பிழைப்புக்குப் போன இடத்திலேயே தங்கள் வாழ்க்கையையே முடித்துக்கொண்ட நிலை இன்று மாறிவிட்டது. சிலர் இப்பொழுது தாங்கள் பிறந்த வீட்டுடனேயே இருந்துகொண்டு நிர்வாணம் (ஆணுறுப்பை வெட்டியெடுத்துவிடும் நிகழ்வு) பண்ணிக் கொண்டும் பண்ணாமலும் வாழ்கிறார்கள்.
முன்பெல்லாம் தம்மை அரவாணிகள் என்றே காட்டிக்கொள்ள விரும்பாத நிலை, இப்பொழுது மாறிவிட்டது. உரிய படிப்பு வாய்ப்பும், சமூக அங்கீகாரமும் கிடைத்துவிட்டால் அரவாணிகளின் அறியாமைகளும் சடங்கு சம்பிரதாயங்களில் பிடிப்பும் முற்றாக அகன்று போகும்.

சாதாரணமாகக் கடன்படுவதுகூட அரவாணிகளின் கூட்டமைப்பில் சடங்காகவும் சட்டதிட்டமாகவும் கட்டமைக்கப்பட்டிருப்பது வியப்புத்தான்(பக்.88-89).
காதலையும் குடும்ப வாழ்வையும் அரவாணிகள் நேசிக்கிறார்கள்.ஆணினத்தின்மீது ஆசைப்பட்டால்தான் புதியவர்களைத் தங்கள் கூட்டமைப்பில் சேர்த்துக் கொள்கிறார்கள். “அரவாணிங்கதான் என்னைத் தேடிவர முடியும். ஆம்பளைங்களா வர முடியும்?”(ப.51) என்ற ஏக்கம் இவர்களை விட்டு முற்றிலும் மறைய, உரிய அறிவியல் பார்வையை இவர்கள் பெற்றாக வேண்டும்.
கணவனை விட்டுக்கொடுக்கும் அளவு நேசிக்கும் இவர்கள்(ப.65), அந்தக் கணவன்மாரின் மறைப்பு வேலைகளுக்கு(ப.67) எதிர்வினை ஆற்றாமல் முடங்குவதற்குக் காரணமும் அவர்கள் ஆண்களுக்குத் தரும் அளவு மீறிய அந்த முக்கியத்துவம்தான்.
மிகவும் பொறுப்பான தாயாக அரவாணி இருக்கிறார்(ப.82). அத்தகைய ராஜம் என்பவர் சொல்பவை, தான் இயல்பான பெண் என்பதாலேயே குழந்தைகளின்மேல் போதிய கவனம் செலுத்த வேண்டுவதில்லை என்ற நம்பிக்கையில் அவர்களின் எதிர்காலத்தைப் பாழடிப்பவர்கள் சிலருக்குப் படிப்பினை தருபவை.
பாலினம் என்று வரும்பொழுது யோக்கியதையுள்ள ஆணையே நேசிக்கும் அரவாணி, குழந்தை என்று வரும்பொழுது மட்டும் பெண்குழந்தையைத்தான் தத்து எடுத்து வளர்க்க வேண்டும் என்று ஆசைப்படுவதற்கு நியாயமான காரணங்கள் எவையென்று துல்லியமாகச் சொல்லப்பட்டுள்ளன(பக்.81-82).
மிகவும் விவரமாகவும், முந்திய காலகட்டத்திலேயே அரவாணிகளிடையே தன்னுரிமையுடன் வாழ்ந்த பூக்கார ஆயா சொல்லும் செய்திகள் (சட்டத்தின்மூலம் கோயில் தாசிகள் படிப்படியாகச் சீரழிக்கப்பட்ட நிலை உட்பட) சமூகநோக்குச் சிந்தனையாளர்களுக்கு வேதனையையே ஏற்படுத்தும். தென்னாட்டில் ‘ஜமாத்’ கூடுவது பற்றி வரலாற்று ரீதியாக எடுத்துரைக்கும் சாந்தி அம்மாவும் இங்கே குறிப்பிடத் தக்கவர்(பக்.85-87.)
அரவாணிகளின் சடங்குகளில் மிக முக்கியமானதான ‘தாயம்மா நிர்வாண’த்தை வாசிப்பதே கூட இத்தனைத் துன்பம் தருமென்றால் அதற்கு உட்படுபவர்கள் நிலை எப்படிப்பட்டது?(பக்.90-97) ‘டாக்டர் நிர்வாண’மோ சட்டவிரோதமானதால் அதிலும் தனியாரின் சுரண்டல். இவ்விரண்டுக்கும் 40 நாள் கழித்து ஒரே மாதிரித்தான் சடங்கு என்றாலும் தாயம்மா நிர்வாணத்துக்குத்தான் அரவாணிகளிடையே பெருமையும் அங்கீகாரமும் கிடைக்கிறது என்ற செய்தி வியப்பை உண்டாக்குகிறது(பக்.97-99).
சாதி மத வேறுபாடுகள் அற்றவர்கள் அரவாணிகள் என்று குறிப்பில் உறுதியாகத் தெரிவிக்கிறார் தொகுப்பாசிரியர்(பக்.100-101). ஆக்டிவிஸ்ட் அரவாணிகளின் தொடர்ந்த முயற்சிகளால் பொதுமக்களுக்கு அரவாணிகள் மீதிருந்த தவறான அபிப்பிராயங்கள் மாறிக்கொண்டு வருகின்றன என்றும் தங்கள் கூட்டமைப்பின் சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்படாமல் இருப்பவர்களை விட(ப.89) அந்தக் காலத்திலிருந்தே அரவாணிகளால் உருவாக்கப்பட்டுவரும் தனிப்பட்ட கலாச்சாரத்தில் நிலவும் அடிமைத்தனத்துக்கு எதிராக உரிமைக்குரல் எழுப்பும் இளைய தலைமுறை அரவாணிகள் பாராட்டுதற்குரியவர்கள் என்றும் அறிந்துகொள்கிறோம்(ப.100).
இப்பொழுது அரவாணிகள் தமக்கென்று நல்வாழ்வுக்கான ஆதாரங்களை உருவாக்கிக்கொள்ள சங்கங்களை அமைத்துவருகிறார்கள். இவையெல்லாம் தங்கள் வாழ்க்கையில் ஏற்பட்டுவரும் நல்லவிதமான மாற்றங்களின் தொடக்கம்தான் என்ற அவர்களின் நம்பிக்கையைப் போற்றுவோம்.
புத்தகத்தின் பிற்சேர்க்கையாக உள்ள ‘புரிந்துகொள்ளலின் அரசியல்’ என்ற பெருமாள்முருகன் அவர்களின் கருத்துரை, இத்தகையதோர் ஆய்வுக்குப் புதியவர்களான வாசகர்களுக்கு மிகவும் உதவக் கூடியது.
****
karuppannan.pasupathy@gmail.com

Series Navigation

தேவமைந்தன்

தேவமைந்தன்