கொணர்ந்திங்கு சேர்க்கும் மதுமிதா (நூல் அறிமுகம்)

This entry is part [part not set] of 34 in the series 20051209_Issue

ஜெயந்தி சங்கர்


மகாகவி பர்த்ருஹரின் கவிதைகளை மஹாகவி பாரதியின் ஆசைப்படி ‘சுபாஷிதம் ‘ என்ற நூலாக தமிழுக்குக் கொணர்ந்திருக்கிறார் கவிதாயினி மதுமிதா. ஆகஸ்டு மாதத்திலேயே நூல் வந்து விட்டிருக்கிற விஷயம் சமீபத்தில் தான் அதிகாரப்பூர்வ செய்தியாக என்னை எட்டியது. அதைத் தொடர்ந்து ‘உலக நாயகர்(ன்) ‘ புரட்டிப் பார்த்துவிட்டு, நூலினால் ஈர்க்கப் பட்டு ஒரு பிரதியை போகிற போக்கில் எடுத்துக்கொண்டு போய்விட்டார் என்ற நம்பத் தகுந்த நபர் கூறக் கேட்டேன். ஏற்கனவே நூலைப் படிக்க வேண்டும் என்றிருந்த ஆவல் இன்னும் மிகுந்தது.

ஒரு வாரத்திற்கு முன் தான் கைக்கு நூல் வந்து சேர்ந்தது. முதல் பார்வையிலேயே என் எதிர் பார்ப்பையும் தாண்டி நூல் என்னைக் கவர்ந்ததை உணர்ந்தேன். நல்ல மொழிப் புலமை மற்றும் விமரிசனப் பார்வையுடைய அறிஞர் இந்நூலுக்கு விமரிசனமாகவோ மதிப்புரையாகவோ எழுதுவது தான் பொருத்தம். இருப்பினும், ஒரு அறிமுகமாகவேனும் எழுதிவி ட என் கை பரபரத்தது. எழுத முடிவெடுத்தேன். முடிவு சரி தானாவென்று ஐயம் மட்டும் ஓரத்தில்.

‘சுபாஷ்ிதம் ‘ நூலின் முகப்பு அட்டை வடிவமைப்பு டிராட்ஸ்கி மருது. பொருத்தமாக கோயில் சிற்பங்களைப் பின்னணியில் கொடுத்து, நாட்டியப் பெண்ணின் ஒரு சிற்பத்தினை முன்னணியில் அமைத்து அமரிக்கையாகச் செய்துள்ளார். கெட்டி அட்டையில் வரத்தகுதி கொண்ட நூல் இது என்பதில் மறுகருத்து இருக்க வழியில்லை. இந்த அட்டையும் சோடையில்லை தான். பளபளப்போடு (glace) கவர்ச்சியாகவேயிருக்கிறது. காகிதம் வெள்ளை என்பது ஒன்றும் பெரிய குறையில்லை. இருப்பினும், தாள் மெலிதாக இருக்கிறது என்பதை மட்டும் வாசகர்கள் உணர்வார்கள்.

மதுமிதா நூலைத் தன் பாட்டனாரான சுதந்திர போராட்ட தியாகி காந்தி அரங்கசாமி ராஜா அவர்கட்கும் சமுதாயத் தத்துவச் சிந்தனையாளரான தந்தை ரகுபதி ராஜா அவர்கட்கும் அர்ப்பணித்துள்ளார்.

பாராட்டுரை கொடுத்திருப்பது ஜெயகாந்தன். ஒரு பக்கத்திற்கு அவரது கையெழுத்திலேயே தட்டச்சாமல் போட்டுவிட்டார்கள். சுருக்கமாக இல்லாமல், கொஞ்சம் ஆழமாக, அதாவது சில கவிதைகளைப் படித்துவிட்டு ஒரு அணிந்துரையாக எழுதியிருக்கலாமே என்று தோன்றியது. காரணம், ஓரளவிற்கேனும் வடமொழி பரிச்சயமானவர். மொழிபெயர்ப்பின் சிறப்பினை மட்டுமில்லாமல் வேறு ஏதேனும் குறையாகத் தோன்றியிருந்தாலும் ஓரளவிற்காவது சொல்லியிருக்கலாமே என்று படிப்பவருக்குத் தோன்றும்.மதுமிதாவின் ‘நன்றியுரை ‘யைத் ெ தாடர்ந்து பன்மொழிப்புலவர் மு.கு.ஜகந்நாதராஜா அவர்களின் முன்னுரை. ‘சுபாஷிதம் ‘ குறித்த தகவல்கள் பலவற்றைக் கொடுத்து மதுமிதாவின் மொழியாக்கம் சிறப்பாக அமைந்துள்ளது என்று கூறுகிறார். அதனைத் தொடர்ந்து ‘என்னுரை ‘யில் பர்த்ருஹரினால் எவ்வாறு கவரப்பட்டு மொழிபெயர்க்கும் செயலில் இறங்கினார் என்று சுருக்கமாகச் சொல்கிறார் மதுமிதா.

அடுத்த ஆறு பக்கங்களின் நூலாசிரியர் பர்த்ருஹரியின் வரலாறைக் கொடுத்திருப்பது பயனுள்ளது. ஏனெனில், மூல நூலின் ஆசிரியரைப்பற்றி எல்லா வாசர்களும் அறிந்திருக்க வழியில்லை. இப்பகுதியில் உள்ள கவிதை படிப்பவரை நிச்சயம் மிகவும் கவரும்.

நான் எப்பொழுதும்

யாரை என்னுடையவளென

நினைத்துக்கொண்டிருக்கிறேனோ

அவள் என்னை விரும்பவில்லை

அவள் அதிகமாக யாரை நேசிக்கிறாளோ

அவன்

வேறொரு பெண்ணை

விரும்புகிறான்

என்னிடம் மகிழ்ச்சி காண்கிறாள்

வேறொரு பெண்

இந்தப்பெண்ணையா

நான் விரும்பும் பெண்ணையா

அவள் விரும்பும் அவனையா

என்னையா

அல்லது மன்மதனையா

இதற்கு

யாரை

நொந்து நிந்திப்பது … !

இந்தக் கவிதை ஒரு முழுப்புத்தகத்தின் ஒரு சோற்றுப் பதம்.

அறத்துப்பால், பொருட்பால் மற்றும் காமத்துப்பால் என்று வள்ளுவர் மூன்றாகப் பிரித்ததைப்போல பர்த்ருஹரியும் ‘நீதி சதகம் ‘, ‘சிருங்கார சதம் ‘ மற்றும் ‘வைராக்ய சதகம் ‘ என்று மூன்று பகுதியில் வகைக்கு நூறு பாடியிருக்கிறார். ஒவ்வொன்றிலும் பத்து தலைப்புகள். தலைப்புக்கு பத்து பாட்டு. ஆக மொத்தம் முந்நூறு.

முதல் பகுதி நீதி சதகம். இக்கவிதைகளில் பெரும்பான்மையானவை நடைமுறை வாழ்க்கைக்கும் பொருந்தி வருவதாக உணர்ந்தேன்.பக்கம் 24ல் இருக்கும்

அறிவில்லாதவரை எளிதாக

சமாதானப்படுத்திவிடலாம்

நன்கு கற்றறிந்தவரை சுலபமாக

ஒத்துக் கொள்ளச் செய்யலாம்

அரைகுறையாகக் கற்று

ஆணவத்துடன் இருப்பவனை

பிரம்மனாலும்

மகிழ்விக்கமுடியாது

என்ற கவிதையைப் படிக்கும் போது, அரைகுறை விஷயத்துடன் இருக்கும் ஆணவக்காரர்களை இதை விட அழகாகக் கணித்துச் சொல்ல முடியாது என்றே தோன்றுகிறது.

பிறந்த பிறப்பிற்குப் பெருமை சேர்க்கா விட்டால் பிறக்கவேண்டாம் என்றாரே வள்ளுவர் ‘தோன்றிற்ப் புகழொடு தோன்றுக ‘ என்று இதமாகச் சொல்லி. ‘அஃதலின் தோன்றலின் தோன்றாமை நன்று ‘ என்று நறுக்கென்று குட்டுவது நினைவுக்கு வருகிறது பக்கம் 46ல் உள்ள கவிதையைப்படிக்கும் போது. ஒரு நாட்டின் தலைவன் செய்யவேண்டிய தலையாய கடமை சொல்லப்பட்டிருப்பதால் (பக்கம் 59), எக்காலத்திற்கும் பொருந்தும்.

ஆகா! ஒரு மேட்டுக்குடியைச் சேர்ந்த கவி எத்தனை அழகாக வேலையாளின் இடத்திலிருந்து யோசித்தெழுதியிருக்கிறார் என்றே வியக்க வைக்கிறது ? (பக்கம் 69) அற்புதம்.

காவல்/சட்டம் போன்ற துறையினருக்கு வேண்டிய பண்பு வலியுறுத்தப் படுவ தால் (பக்கம் 68) , இக்காலத்தும் மிகவும் பொருந்துகிறது. நல்லாருக்குள் உரைந்திருக்கும் நற்பண்புகளைச் சொல்லும் இக்கவிதை (பக்கம் 78/79) கச்சிதம் கருத்திலும் வடிவத்திலும்.சிறந்த மனிதர்களின் நட்பு குறித்துப் பேசும் கவிதையில் (பக்கம் 88) துருத்திக் கொண்டிராமல் பின்னிப் பிணைந்து கிடக்கும் உவமை எனக்குப் பிடித்தது. நட்பின் மேன்மையை இதைவிட அழகாகச் சொல்லிட முடியாது என்றே நினைக்கிறேன். பக்கம் 105ல் இந்தக் கவிதை சொல்லும் உவமை அருமை.இருப்பினும், அக் காலத்திலேயே BOUNCE ஆகக்கூடிய பந்துகளும் இருந்திருக்கின்றன (வாஹ்!) என்ற செய்தி சுவாரஸ்யமாயிருக்கிறது.

அடுத்த சதகமான ‘சிருங்கார சதகம் ‘ அக் மார்க் காமத்துப்பால். மொழிபெயர்ப்பினை சிலாகிக்காமல் இருக்க முடியாது. சிருங்கார சதகத்தில் வரும் சில சொற்கள் மொழிபெயர்ப்பில் தவிர்க்க முடியாதது. கொடி பிடிப்பவர்கள் பர்த்ருஹரியை எதிர்த்துக் கொடி பிடிக்கலாம். ஆனால், பர்த்ருஹரி ஒரு பெண்ணில்லை என்ற காரணத்தால், தமிழினம் நிச்சயம் அவ்வாறு செய்யாது என்று நம்பலாம்.ஒரு கவிதை மட்டும் (பக்கம் 137) இங்கே உதாரணத்திற்கு,

தீபம் உண்டு

நெருப்பு உண்டு

சூரிய

சந்திர

நட்சத்திரங்கள் உள்ளன

ஆனால்

மான் விழியாள்

இல்லாது

இவ்வுலகத்தில்

இருள் சூழ்ந்துள்ளது

கடைசி சதகம் வைராக்ய சதகம். ஆசையைப் பழித்தல், விட இயலா விருப்பம், ஏழ்மையும் மானமும், கால மக ிமை, இன்ப நுகர்வு, துறவியும் மன்னனும், மனதிற்கு அறிவுரை,உண்மை அறிதல், சிவ அர்ச்சனை, பற்றறுத்தல் என்ற பத்து பிரிவுகளில் வைராக்ய சதகம் வகைக்கு பத்து கவிதைகளைப் பெற்றுள்ளது.

‘பற்றறுத்தல் ‘ பகுதியில் (பக்கம் 317) உள்ள

பிரம்மாண்ட உலகம்

குழப்பாது

யோகியை

சிறு மீனின் துள்ளலால்

கலங்காது கடல்

என்னும் கவிதையில் உள்ள எளிமையைப் பாருங்கள். மொழிபெயர்ப்புபோலவே தோன்றுவதில்லை. வியக்காமலிருக்க முடியவில்லை. ‘ஆசையைப் பழித்தல் ‘ பகுதியில் இன்னொரு கவிதையைப் பாருங்கள் ( பக்கம் 233).

முகத்தில் சுருக்கங்கள்

நரைகண்ட தலைமுடி

நடுங்கும் உடல்

ஆசை மட்டும்

இன்னும் ஓயவில்லை.

கடைசி ஆறு பக்கங்களில் சில கவிதைகளுக்கு மட்டும் விளக்கம் கொடுத்துள்ளா நூலாசிரியர். இவை வாசகன் கவிதைகளை மேலும் சிறப்பாக ரசிக்க உதவும்.

முழுநூலையும் படித்து முடித்ததும், வடமொழியில் கவிதைகளைக் கொடுத்து தமிழில் கொடுத்திருக்கலாமோ என்று தோன்றியது. இருமொழி அறிந்தவர்கள் மூலத்துடனான ஒத்திசை தனை உணரவும் ரசிக்கவும் முடியுமே.

சிற்சில தட்டச்சுப் பிழைகள் உள்ளன. பிழைகளே இல்லாத நூல் தமிழில் இல்லை என்பது அடிக்கடி பலர் சொல்லக் கேட்டிருந்தாலும், ஏனோ முடியும், செய்யவேண்டும் என்று மட்டும் எப்போதும்போலத் தோன்றியது. குறித்து வைத்து இரண்டாம் பதிப்பில் சரி செய்துவி டலாம். நிச்சயம் இத்தகைய நூல்கள் இரண்டாம் பதிப்பு வரும்; வரவும் வேண்டும்.

பன்மொழித்திறன் படைத்த மதுமிதா தொடர்ந்து இத்தகைய மொழிபெயர்ப்புக்களை செய்யவேண்டும்.

—-

‘சுபாஷிதம் ‘

ஆசிரியர்: பர்த்ருஹரி

தமிழில் : மதுமிதா

பதிப்பகம் : சந்தியா பதிப்பகம்

முகவரி: சந்தியா பதிப்பகம்

57 A, 53 வது தெரு,

அஷோக் நகர்

சென்னை – 83

தொ.பே- 24896979,55855704

—-

sankari01sg@yahoo.com

http://tamil.sify.com/general/deepavali04/fullstory.php ?id=13966112

http://jeyanthisankar.blogspot.com/

Series Navigation

ஜெயந்தி சங்கர்

ஜெயந்தி சங்கர்