புனைவுகளும்,இறையியற் றன்மைகளும்!

This entry is part of 33 in the series 20051125_Issue

ப.வி.ஸ்ரீரங்கன்


நமது மொழிக்குள் வந்து சேர்ந்த புனைவுகளுக்கு இறையின் வாயிலான மதிப்பீடுகளை கற்பித்து,அவற்றைக் கேள்விக்கிடமற்ற அமரத்துவப் படைப்புகளாக்க முனைந்த அரசியல் நோக்கங்கள்-இன்றும் புதிய வகை மாதிரியான ஏமாற்று வித்தைகளை சூழலின்பால் தள்ளி விட்டுப் படைப்பாளியை வெறும் ஊடகமாக்கும் கண்ணிகளைக் கொண்டியங்குகின்றன.படைப்பாளி செத்து,படைப்புப் பற்றிய புரிதலைவேண்டிக் கொள்வது ஒரு வகையான அரசியலில் மையங்கொண்ட மேற்குலகச் சிந்தனைதாம்.வடிவம் செத்து உள்ளடக்கமே உந்தித் தள்ளும் இயங்கியல் விதியைக் கொச்சைப் படுத்தும் கருத்துமுதல் வாதியான நீச்சேயின் கால மதிப்பீட்டின் பிறிதொரு வகையான புனைவுதாம், இந்தப் படைப்பாளியைக் காப்பாற்றும் ஒற்றைத் துரவ இலக்கியக் கொள்கை.நமது காலத்தின் அவசியமானது வெறும் மதிப்பீடுகளில் காலத்தைக் கண்டு கொள்வதில் மையங்கொள்ள முடியாது.காலத்தில் வாழாத மானுடத் தேவைகள் மக்களின் நலனினது விழுமியமாக இருக்க முடியாது.எனவே இந்தப் பெரும் கதையாடல்கள்-மனிதக் கதையாடல்களாக இனிமேலும் விருத்தியுற முடியாது.இந்நோக்கில் பழமையான நமது புனைவுகளைக் கட்டுடைத்தல் அவசியமான பணிதாம்.மாற்றத்தை வேண்டியவொரு மனித வாழ்வு அனைத்தையும் மாற்றியே தீரும்.

மறுத்தலின் வரட்டுத்தனமான விருப்புறுதி கணித்துக்கொள்ளத்தக்க எந்தப் புறநிலை மாற்றத்தையும் மொளனமாக உதாசீனப் படுத்துவதில் முன்நிலை வகிப்பதிலும்,அதன் தொன்மைமிக்க கருத்தநிலைத் தர்க்கத்தாலும் புதியவகைப் புரிதற்பாட்டினது கட்டுடைப்பின் மீதான மறுதலிப்பையும்-அதன் தன்னுணர்வுமிக்க ஒற்றைத்துருவ வியாக்கிமான கருத்துநிலை தாண்டா திடசங்கற்பத்தாலும் தனதிருப்பின் மூலத்தையுறுதிப்படுத்தும் மனநிலையைத் தோற்றுவிக்கும் மாதிரி மனித்தேவைகளை -பெரும் பரபரப்பின் வாயிலாக் கொட்டி வைத்திருப்பதில் இதுகாறும் நிலை நாட்டும,; அறிவின்மீது. இந்தத் தளத்தின் மீது எவரொருவர் அறிவாந்த தேடலையிட்டுக் கொள்ள முனைந்தாலும் அந்தத் தேடல்மீதான எதிர்போக்கான மறுதலிப்பின் வினையாற்று குறிப்பிட்வொரு தளத்தில் தன் தர்க்கத்துக்குமாற்றான கருதுகோளை -அதன் உச்சபச்ச நிராகரித்தலூடாய் இருப்பிழக்கத்தக்க பனுவல்களாக மாற்றவதிலும்,குறுகிய மனத்தளவான மதிப்பீடுகளின் மாதிரிகளைக் கொண்டு வெற்றிடத்தை நிரப்புதலில் இதுகால வரை காலத்தைக் கடத்திவருகிறது.

எந்தவொரு துறைக்கும் பொத்தாம் பொதுவான,முடிந்த முடிவான திட்ட மாதிரி வடிவமுமில்லை.காலத்தால் யாவும் மாற்றமுறும்.நியூட்டனின் அரிய

கண்டுபிடிப்புகளாலும் சரி,அன்றி வியக்கத்தக சமூக விஞ்ஞானக் கட்டங்களும் சரி மாற்றமுற்றே தீரும்.இன்று மெய்யாகியிருக்கும் தளம் நாளை பொய்யாகிப் போவதொன்றும் இந்த மனித வாழ்வுக்குப் புதியதல்ல.இந்த விஞ்ஞான விளையாட்டுகளுக்கே இந்தக் கோலமென்றால் நமது புராண இதிகாச மெளன வாசிப்புகளுக்கு மட்டும் பொருந்தாத் தன்மையான திடவுறுதி நிலைத்திருப்பது தர்க்கத்தின் நியாயப்பாட்டிற்கு பொருந்தாத அதி மத்திமமான சமூக உளவியலாகும்.இந்தத் தளத்தின் மீதான மறு வாசிப்பென்பது அதன் உள்ளாாந்த படிமங்களில் நிலவும் சமூக்தன்மைகளின் அறை கூவல்களை புதிய வீரியமான சமுதாயத்தின் தேவைகளோடு ஒப்பிட்டுக் கொள்வதும்-மாதிரி வகைப்படுத்தலுக்குமான சமூகத்தேவையின் அவசியத்தின் அதீதநோக்கமாகும்.இந்த மானுடத்தேவை மனித வாழ்வினது சகல தளங்களிலும் சாத்தியமானவொரு புதிய நிலையை எடுத்துவிடுவது தவிர்க்கமுடியாது.காலகாலமாக கேள்விக்கிடமற்ற படிமங்களை,பனுவல்களை கடைந்தேற்றும் காரியமொன்று புதிய மாதிரிக் கூறுகளாக மாற்றமுறுவது நமது இதுகாலவரையான அறிவார்ந்த இலக்கியப் பரப்புக்கு பசளையாக இருக்கும்.இதன் பாலான கட்டுடைப்பு அவசியத்தை மறுதலிக்க முனைதலானது இலக்கியத்தை வெறும் உணர்வுத் தளத்துக்குள் உந்தித் தள்ளுவதாகும்.உயிர்புமிக்க கலை மரபுகளாக வளரவேண்டிய இந்தத் தமிழ் இலக்கியத் தளமானது வெறும் உணர்ச்சிகளினது கோர்வைகளாகவும்-மொழி விளையாட்டாகவும் குறுகியுள்ளது.இந்தக் காலத்தின் புதிய தேவைகள் இலக்கியத் தளத்தின் மீது பண்புரீதியான மாற்றத்தைக் கோரிநிற்கின்றன.இவற்றின் தேவைகளை மறுதலிக்கும் எந்த எழுத்து வடிவமானாலும் சரி அது மானுடவிரோதமான தளத்தைத் தாம் உறுதி செய்யும்.

கலையிலக்கியத்தின் அவசியமான புரிதற் பாடு நமக்கான-நமது மக்கள் சார்ந்த மதிப்பீடுகளை உருவாக்கி,அதன் வாயிலான புதிய மாதிரி கருத்தமைவுகளை,சமூக மதிப்பீடுகளை-வாழ்வின் பெறுமானங்களை மீளுருவாக்கஞ் செய்தல் கடந்த கால அடிமைத்தனங்களை களைவதற்கான முன்னெடுப்பின் முகிழ்ப்புத்தாம்.எனவே இது தவிர்க்க முடியாத காலத்தின் அவசியமான பணி.பண்டுதொட்டு வாசிப்புக்குள்ளாகிய மரபுசார்ந்த மதிப்பீடுகளையுருவாக்கிய நமது இதிகாச-புராணப் புனைவுகளால் நாம் மனவளர்ச்சியற்வொரு கூட்டமாகவே இருக்கிறோம்.இன்றும் நமது பழமைவாய்ந்த மதிப்பீடுகளால் மனிதத்தைக் குற்றுயிரோடு மரணப்போராட்டத்துக்குள் தள்ளியுள்ளோம்.இந்த இலக்கிய மரபு வெறும் மொழிவிளையாட்டின் பிரிக்க முடியாத கற்பனைக் களஞ்சியமாக இருப்பது நவீன இலக்கிய விஞ்ஞானத்துக்கு புறம்பானது.சமூகத்தின் விருப்புறுதியானது அதன் உயிராதாரமான மனித விழுமியத்தைக் கொண்டியங்கக்கூடி மறுவார்ப்பைக்கோரி நிற்கின்றது.இதைத் திடகாத்திரமான முறையிற் வளர்த்தெடுப்பதும்,வீரயிமிக்கதான- அறிவார்ந்த,மக்கள்சார்ந்த தேவைகளுக்கு வித்திடக்கூடிய படைப்புகளைக் கொண்ருக்கக்கூடிய தளத்தை நிறுவுதலே இலக்கியத்தின் பணியாக உள்ளது.

எந்தவொரு சமுதாயமும் தனது மதிப்பீடுகளை இன்றைய நோக்கு நிலையிலிருந்து மீளுருவாகஞ்செய்யாதுபோனால் அதன் இருப்பானது மிக மிகப் பலவீனமான நிலையையெய்துவிடும்.இன்றைய காலமானது மிகவும் கெடுதியான பொருளியல் நலனே முக்கியம் பெற்ற அதிர்வான சமூக சீவியத்தைக் கொண்டிருக்கும் காலமாகும்.இது மனித வாழ்வைச் சிறைப்படுத்தி-சிண்டெரேல்லா பாணியிலான சமூக அடிமைத்தனத்தைத் தந்துள்ளது.இதைத் தகர்ப்பதற்கு சிண்டேரேலாவுக்கு உதவிய புறாப்போன்று நமது இலக்கிய முன்னெடுப்புகள் அமைவது சாலச் சிறந்தது.இதன்பொருட்டு பழமையான நமது மதிப்பீடுகள் தகர்வதும்-மீளுருவாக்கங்கொள்வதும் தவிர்க்க முடியாதவொரு சமூகக் கடமையைக் கொண்டிருக்கிறது.எனவே கூட்டுணர்வுமிக்கவொரு மனிதப் பண்பையும்,கெளரவமான நேசிப்பை வலியுறுத்தும் அழகியல் மதிப்பீடுகள் நமது இலக்கிய வடிவங்களுக்குள் வந்தாகவேண்டும்.இந்த ஒழுங்கமைந்த படைப்புச் சூழலை உருவாக்கி பழமையான புனைவுகளை களைந்து விடுவது தமிழ்மொழியை அதிகாரத்துவ எல்லையிலிருந்து விடுவித்து மக்களோடு பிணைந்த,அவர் நலன்களை மையப்படுத்தியவொரு புதிய வீரியமுடைய மொழியாக வளரவிடுவது நமக்கான இருப்பினது குறைந்தபட்சத் தேவைதாம்.இவ்வகை நோக்கத்தை அறிவினது பரப்பின் மத்தியிலிருந்து உணர்வுத்தளத்துக்கு மாற்றிவிடும் கேடுகெட்ட மயக்கம், தூய்மைவாதப் புனைவுகளாக கொட்டிவைத்த புராண இதிகாசங்களுக்கு இறையிற்தன்மையைக் கொடுத்தது, இருப்பை நிறுவிக்கொள்வதற்கே.இருப்பை உறுதி செய்த அன்றைய பொருளியல் நலனானது இன்றைய கணினிமயப்பட்ட புதிய வாழ்வியல் மதிப்பீடுகளுக்கேற்றதல்ல.நமது கால பொருளியல் வாழ்வானது மிகவும் முன்னேறிய உற்பத்திச் சக்திகளோடு உறவாடும் மனித்தேவைகளை வலியுறுத்தும்போது பழமையான இலக்கிய-கலை மாதிரிகளால் இன்றைய மனிதர்களின் ஆத்மீகத் தேவைகளை திருப்திப் படுத்த முடியாது.எனவே கட்டுடைப்பும்அதன் வாயிலாக புதிய முன்னெடுப்புகளும் மானுடநோக்கில் அவசியமாகும்.இதைப் புறந்தள்ளும் எந்த முன்னெடுப்புகளும்,விமர்சனங்களும் இன்றைய சூழலை மிகக் கேவலமான முறையிற் புரிந்த அரைவேக்காட்டு உளப் பாங்கின் வெளிப்பாடுகளே!

ப.வி.ஸ்ரீரங்கன்

07.05.2005

srirangan@T-Online.de

Series Navigation