வனத்தின் அழைப்பு – அஸ்வகோஸ்: ‘மகனும்,ஈ கலைத்தலும் ‘ (சிறு குறிப்பு)

This entry is part [part not set] of 28 in the series 20051104_Issue

ப.வி.ஸ்ரீரங்கன்


‘…என்னை ஒறுத்த ஒறுத்து

அழித்துக் கொள்கையில்

என் மகன் போயிருந்தான்

தன்னை அர்தப் படுத்தவென்று

என் கனவுகள் வீழவும்

மண்ணின் குரலிற்கு

செவியீந்து போயிருந்தான்… ‘

ஒரு ஓரத்தில் ஒதுங்கிக் கொண்டேன்,

நான் துயருற வேண்டி.

சிலவேளைகளின் பொருட்டு இஃது மிகவும் சாதரணமாக நான் கொள்ளும் தியானம்!

படித்து முடித்த ‘வனத்தின் அழைப்பு ‘ கையிலிருக்க,மனம் மட்டும் கிளர்ச்சிக்குள்ளாகியபடி.

‘இறுதியாக

என்னிடம் வந்திருந்தான்

அவனது தேகம் குளிர்ந்திருந்தது

இரத்தமுறிஞ்ச நுளம்பகள் வரவில்லை

ஈக்களை அண்ட

நான் விடவில்லை ‘

சதா செவிகளில் விழும் கனத்த அதிர்வுகள்.

என்னயிது ?

சவப்பெட்டி நட்டநடுவே.

ஒன்றல்ல, பல.

ஆங்காங்கு ஈக்கள் பறந்து,மொய்த்தபடி.

என் கைகள் நாலாபக்ககமும் வீசியடித்தபடி,வேகமாயின.

முடியவில்லை.

அவைகளின் வேகத்தில் நான் சோம்பலுற்றேன்.

யாருமேயில்லை!

எங்கு போய்விட்டார்கள் இந்த ஊர்ச் சனங்கள் ?

இது வீதியாகவும் இருக்கு,வீட்டு முற்றமாகவும் இருக்கு.

சவப் பெட்டிகள் எங்கும் பரவிக்கிடக்கிறது.சில அழுகுரல்கள் எழுப்புகின்றன!,ஈக்களின் மொய்ப்பில் அவை ஊளையிடுகின்றன.

நான் தனியாகவேயுள்ளேன்.

கனவுதாம்.

ஒரு கவிதைத் தொகுப்புக்கூடாகக் கனவுதாம்.

நிஜம் கனவாகிறதா ?

ஏன் ?

நான் வெகு தூரத்தில்.

மிகப்பெரிய இடைவெளி உறவுகளுக்கும்,இன்றைய என் வாழ்வுக்கும்.

‘வதை தாங்காது அழுது சென்றவர்களும்

வார்த்தையின்றி மெளனித்தவர்களும்

நடந்த தெரு,முற்றமிது

வெறிச்சோடித் துயருடன்

எத்தனையோ இரவுகளில்

புலர்ந்து கிடந்த மண்ணினது மைந்தா;கள்

சாய்ந்து போன உடல்களாய்

சவப் பெட்டிகளுள் ஈயுடன் போராடி… ‘ வார்த்தைகளுக்குப் பஞ்சமேயில்லை.

தெருவோரச் சொறிநாய் மாதிரி ஊளையிட்டுக்கொள்ளும் இலக்கியச் சூழலில் இப்படிச் சிலர்,அஸ்வகோஸ் போல்…

இரத்தமும் சதையுமான வாழ்வோடு வருவதுதாம் கவிதைகள்.ஒரு பாரதிபோல,சு.வில்வரெத்தினம் போல.

‘இத்தனை காலமும்

ஏங்கித் தவித்ததின் அர்த்தமென்ன ?

நீங்கள் கூறுங்கள்

தாய்மையின் கதறல்

கேலிக்குரியதா ? ‘

இல்லை!

உனக்கும் தெரியும்,எனக்கும் தெரியும் இரஞ்சகுமாரின் சீலனுக்கும்,குலத்துக்கும் என்ன நடந்ததென்று.கோசலையின் நிலை,ரொம்ப ரொம்ப எங்கள் அம்மாக்கள் அநுபவப்பட்டதுதாமே ?

எங்கள் உடன் பிறப்புகள் சீலனுக்கும்,குலத்துக்கும் நடந்ததையிட்டு கோசலைகளாக மாறிய அம்மாக்களின் கதறல்கள் கேலிக்குரியதாக மாறிவிட்டால்:

‘பாழாய்ப்போன தேசமே நீ மீண்டும் பாழ்!

மனித வதை,மனித வதை,

இலங்கையில் மட்டுமல்ல

இந்தப் பூமிப்பந்தில் எங்கும்! ‘ ஒவ்வொரு வகையில் தொடர்கிறது.எல்லாம் ‘ஒவ்வொரு ‘நலத்திற்காக.யார்,யாரோ சாகிறார்கள்,யார் யாரோ அரியாசனம் அமர்கிறார்கள்!

எங்கள் நிலை ?

‘விலங்குகளுக்கெல்லாம் விலங்குகள் செய்த விடுதலை ‘ குறித்துப் பேசியவர்கள்கூட தம்மைத் தாமே அழிக்கமுனைந்த இருள் சூழ்ந்த இழி நிலை,இன்றைய நம் நாட்டில்.இது குறித்து:

‘எம் சோகம் சிறையிருந்த

காலம் போதும்

செவிடராய் மெளனித்துப் போன

மக்களின் செவிகளில்

அலைகளை மீட்ட வா! ‘ என்று,அஸ்வகோஸ் அழைப்பு விடுப்பது மிகவும் சரியானதுதாம்.இல்லை ?

‘நிறையவே சிந்திக்க வேண்டும்! ‘

மனிதவிடுதலை குறித்து,தேசவிடுதலை குறித்து,தோழமை குறித்து…

உண்மைதாம்!

கடந்தகால அல்லோலகல்லோலப்பட்ட இயக்கவாத மாயையில் நாம் ரொம்பத்தாம் முடமாகிப் போய்விட்டோம்.

அஸ்வகோஸ் புது இரத்தம் பாய்ச்சுகிறார்.

கவிதை ஒருவாழ்வு.

‘வாழ்வு கவிதையாக வேண்டும்.கவிதை வாழ்வாக வேண்டும் ‘என்று சேரன் அடிகடி கூறிக் கொள்வார்.

இங்கு அஸ்வகோஸ் கவிதையில் வாழ்ந்து பார்க்கிறார்.

சமூகசிவியம் சீர்குலைந்து,சின்னாபின்னமாகி மனித இருத்தலே கேள்விக்குறியாகிப் போன தேசத்தின் குரலாய் ஒலிக்கும் ‘வனத்தின் அழைப்பு ‘ ஒரு காலக்கட்டத்தின்(சமகால) தேச தரிசனத்தைத் தரவில்லை ?

தருகிறது!,புயலாக.

‘போரின் கனத்த குரல்

இப்போது கேட்கவில்லை

அனேகமாக எல்லோரும் போய்விட்டார்கள்

எங்கு என்ற கேள்வி வேண்டாம்

போரின் கனத்த குரல்

ஒலிக்கும்போது

கேள்விகளைக் குறைத்துக் கொள்வோம் ‘

தன் சிரசை உயர்த்தி அறுதியிட்டுக் கூறி முடிக்கும் வரிகளால்,தான் மண்ணைளைந்து விளையாடிய மண்ணின் வாழ்நிலை குறித்து ஓங்கியோங்கி ஒலிக்கிறான்,இங்கு இந்தக் கவிஞன்.

எதற்கெடுத்தாலும் கொலை.

மனிதர்களின் எந்த விருப்புகளுக்கும் மதிப்பில்லை.மனிதா;களின் விருப்புகளுக்கெல்லாம் சிகரம் வைத்த விருப்பு உயிர்வாழும் ‘விருப்பு ‘ ஆகும்.இன்று, இலங்கையில் உயிர்வாழ்தலுக்குரிய மதிப்பு|பெறுமானம் சொறிநாயின்-விசர்நாயின் இருத்தலைப் போலுள்ளது.

‘கருணையுள்ளோரே கேட்டாரா

காகங்கள் கரைகின்றன

சேவல்கள் கூவுகின்றன

காற்றில் மரங்கள் அசைகின்றன

மரணங்கள் நிகழ்கின்றன ‘

இந்தக் கவிதை வரிகளை எதுக்குள் அடக்கமுடியும் ?

மரபுக்குள்ளா,நவீனத்துக்குள்ளா ?இதுவா இப்போதுள்ள பிரச்சனை ?இல்லை!

இஃது ஒரு ‘காலத்தின் ‘பதிவு.இலங்கை அரசியலில் நிகழ்ந்து கொள்ளும் வரலாற்று நிகழ்வுப்போக்கு.இதைக் கவிஞன் பதிவு செய்வது மட்டுமல்ல,கலகக்காரனாகவும் அவன் தன் இறக்கைகளை விரிக்கிறான்.பேனா முனையின் கூரை இன்னுமின்னும் கூராக்கிக் கொள்கிறான்.

அஸ்வகோஸ்க்கும் அவர் படைப்புகளுக்கும் மரபு ரீதியான எந்தப் புரிதலும் சரிவராது. அவர் கவிதைகள் இலக்கணத் தளைகளை மீறி வாழ்வாய் மலரும் அதேவேளை,தம்மளவில் கவிதைக்கான இயல்பைக் கொண்டேயிருக்கின்றன-இயங்குகின்றன.

ஈழத்தின் கவிஞர்களில் பலர் ‘வெறும் ‘கவிஞர்கள் இல்லை.அதாவது பண்டைய மன்னன் புகழ் பரப்பும்,இன்றைய சினிமாவுக்கு கூலிக்குழைக்கும் ‘கூழை ‘க் கவிஞர்கள் போலில்லை.மாறாக இவர்கள் சமுதாயத்துள் ஐக்கியமாகி,அதனுடன் கரைந்தவர்கள்.இவர்களே போராளிகளாக தோளில் சுடுகலங்களுடன் காடும்,மேடும் அலைந்து மக்களுக்காக தம் ஆயுளைச் செலுத்தியவர்கள்.முற்றுகைக்குள்ளான தேசத்தின் இதயத்திலிருந்து பீறிட்டெழும் விடுதலைத் தீயிலிருந்து சுடரெழுப்பும் இக் கவிஞர்கள்,தீக் குஞ்சுகள்!,அக்கினிக் குழந்தைகள்.

இந்தக் கவிஞர்களின் கவிதைகளில் காணும் அநுபவங்கள் இவர்களின் அசல் நாணயமான அநுபவம்.இவர்களின் வேர்கள் சமூகத்தின் அதியுண்மையான சமூக முரண்களிலிருந்து பத்திப் படர்கிறது.இங்கு ஒரு அஸ்வகோஸ் தோன்றவில்லைஒ.பலருள்ளார்கள்,அவர்களுள் அஸ்வகோஸ் மிகவும் சிறப்பான முறையில் உருவாகி வருகிறார்.இவரின் ஒப்புமைகள்,புதிய குறியீடுகளை உருவாக்கிவிடுகிறது.புராணஈஇதிகாச அநுபவம் அவரது நீண்ட கவிதைகளில் மிகவும் உன்னதமான வடிவில் புதிய குறியீடுகளாக உயிர்க்கின்றன!இவரது மொழியாற்றல் மிக அபாரம்.தமிழைப் புதுப்பொலிவோடு கையாளுகிறார்.

போராட்டம் இவரைத் தத்துவத்தில்,வரலாற்றில்,சமுதாய அநுபவத்தில் பட்டறவுள்ளவராக்கி விட்டுள்ளது.இவரின் சிந்தனை இவருள் முகிழ்த்த அதியுன்னதச் சிந்தனை.இஃது பிறரிடமிருந்து பெற்றதல்ல.இதனால் இவர் உயிர்த்து நிற்கிறார்.எந்தவித இலக்கணக் கட்டுக்களையும் காவாது பேச்சோசையோடு அநுபவத்தைப் பகிர்வதும்,வாழ்வை அதன் இயல்போடு சித்தரிப்பதும்,வரலாற்றைப் பதிவு செய்வதும்தாம் இம்மாதிரியான கவிதைகளுக்கு இலக்கணம்.

அஸ்வகோஸின் கவிதைகளுக்கும்,ஏன் ஈழத்தின் கவிதைகளுக்கு இதற்கு மீறிய எந்தத் தளைகளையும் நாம் ஏற்றிச் சுமைகாவிக் கொள்ள அனுமதிக்க முடியாது.ஏனெனில் இவை நம் உண்மையான-அசலான வாழ்வு.

குரூரமான நமது மெய்வாழ்வுக்கு எந்தவிதப் பூச்சும் வேண்டியதில்லை.நம் வாழ்வும்,கலையும் நமக்குள் முரண்படவில்லை.அது இரண்டும் ஒன்றாய்ப்போய் நமக்குள் சுடர்விடும் உயிராய் மாறுவதில் வெற்றி பெற்றுவிடுகிறது. ‘வனத்தின் அழைப்பு ‘ அதற்குச் சிறு உதாரணம்.

இக் கவிதைகள் தம்மளவில் தமக்கானவொரு ‘அழகியல் தொடர்ச்சியை ‘உள்வாங்கியே வெளிப்படுகிறது.இஃது பாரதியிலிருந்து தொடர்கிறது.மனித விடுதலையும்,தேசவிடுதலையும் இந்த அழகியலை இயக்குகின்றன.இக்கவிதைகளின் ‘அகவடிவம் ‘சிறப்புப் பெற்று உள்ளடக்கத்தையும்,உருவகத்தையும் பிரிக்கமுடியாது-இரண்டும் பிணைந்து நிற்கும் ஒரு புதுவகை அழகியலைத் ஈழத்துக் கவிதைகளுக்கு இயல்பாக வற்புறுத்தி வெற்றி கொண்டுவிட்டது.அஸ்வகோஸின் பல கவிதைகளுள் இந்தப் பண்பைக் காணலாம்,உணரலாம்.

இஃதுதாம் இவரது சிறப்பு.இந்தச் சிறப்பு ஆளுமையான படைப்பாளிகளால்தாம் பேணப்படுகிறது,உருவாக்கம் கொள்கிறது.அஸ்வகோஸ் இதற்கு நல்ல உதாரணமாகிறார்.

குதறப்படும் மனித இருப்பின் மெய்யான சூழ்நிலையை ,அதன் உண்மைத் தனத்துடன் படைக்கப்படும்போது அவை சிலவேளைகளில் சகல கவிதை மரபுகளையும் மீறிவிடும்.இத்தகைய மீறலின்றி கவிதை பாரிய எதிர்வினையை வாசககர்களிடம் உண்டுபண்ணமுடியாது.கம்பன் அல்லது வள்ளுவன் பாணியில் இன்றைய நம் அவலத்தைப் பாடினால்-எழுதினால் இஃது மிக மிக அற்ப எதிர்வினையையும் செய்யாத அபாயம் உண்டு.

இத் தேவையால்தாம் மீறல்கள் இயல்பாகிறது.அத்தோடு இந்த மீறல்களால்தாம் கவிதைக்குரிய புதிய வடிவம் தோன்றிக் கொண்டேயிருக்கு.

நவீனக் கவிதைகள் வெறும் வார்த்தை விளையாட்டாகிப் போன இன்றைய புலம்பெயர்வுச் சூழலில் இத்தகைய ‘உயர் திறன் கவிதைகள் ‘கவிதை ஜீவனைக் காவிக் கொண்டே சமூக விமர்சனம் செய்வதால் இஃது உயரிய இலக்கியமாகவும் விரிகிறது.

அஸ்வகோஸின் மொழியைப் புரிந்து கொள்ளும்போது இவ்வுண்மைகள் புரிந்துவிடும்.

ஒருசில கவிதைகள்(செவல்,நீ போனாய்,ஏவாள்,என் வசந்தம் வராமலே போய்விட்டது) அகம் சார்ந்து வெறும் விபரிப்பு என்ற பச்சோதாபச் சுற்றுக்குள் முடங்கிவிடினும் அஸ்வகோஸ் ரொம்பவும் நிதானமாகவேயுள்ளார், புறநிலை சார்ந்த கவனிப்புகளில்! அவர் வெறும் ஒப்புமைக்குள்ளோ ஓசை நயங்களுக்குள்ளோ மயங்கவில்லை. ‘மெய்வாழ்வு ‘ இதற்காகவே எழுத்தை நடைபயில விடுகிறார்.இத் தொகுப்பிலுள்ள கவிதைகளை வெறும் வார்த்தைக் கட்டுக்குள் முடக்கி விளக்கிட வேண்டிய தேவைகள் இல்லை.கவிதைகள் நாம் அன்றாடம் அநுபவிக்கும் வாழ்சூழலை நம் விழிகள்முன் விரித்தக்காட்டி விடுகின்றென.

இவைகளின் எதிர்வினை நம் எல்லோருக்கும் பொதுவான அநுபவமாகிறது.அதாவது சமுதாய அநுபவம்,ஆவேசம்!

ஏன் ?

நாம் ‘மனிதமறுப்புச் செய்யும் நாட்டின் ‘குடிகள்.போராட்டமே வாழ்வாய்ப்போன தேசத்தின் குரல்கள் எம் அகத்துள் சதா ஒலித்துக்கொண்டேயிருக்கு,போருழைச்சல் நம் அகத்தை வாட்டி அழுகுரலாக ஒலிக்கிறது.

‘மனித அவலங்கள் நினைவில் எழ

மடுமாத கோயிலில்

ஒதுங்கிய மனிதர்களின்

ஜீவத் துடிப்பாய் எழுந்த

கீதங்களில் எனையிழந்தேன்… ‘

இக்குரல்கள்தாம் எமக்குள் இக்கவிதைகளை வாழ்வாய்,அநுபவமாய் உணரவைக்கிறது.யாவருக்கும் பொதுவான வன்மத்தை தீயாய்-ஜுவாலையாய் ஆத்மாவுக்குள் நிறைத்து வைக்கிறது.

உலகத்தில் சில கவிதைகளுக்கு ரொம்ப ரொம்ப உயர் ஸ்த்தானமுண்டு.பாலஸ்த்தீனக் கவிதைகள்,இலத்தீன் அமெரிக்க-ஆப்பிரிக்க் கவிதைகளுக்கு,இரஷ்சிய-மாவோ சேதுங் கவிதைகளுக்கு இந்த ஸ்த்தானம் என்றுமுண்டு.இன்றோ ‘ஈழத்துக் கவிதைகள் ‘ என்றிந்த ‘உயர் திறன் ‘மிக்க கவிதைகள் அந்த ஸ்த்தானத்தை நொருக்கிவிடும்.

ஈழத்தின் நவீனக் கவிஞர்களான மகாகவி,நீலாவாணன்,நுஃமான்,சிவசேகரம்,மு.பொ.,சு.வில்வரெட்னம் நீட்சியாக ஜெயபாலன்,சேரன்,செல்வி,சிவரமணி தாண்டி அஸ்வகோஸ் உயர்கிறார்.இவரது நீண்ட கவிதைகள் இதை நிச்சியம் ஊர்ஜிதப்படுத்தும்.

மில்டனின் ‘இழந்த சொாக்கத்தின் ‘மகுடத்தை வனத்தின் அழைப்புத் தொகுப்பிலுள்ள ‘இருள் ‘கவிதை உடைத்து நொருக்கி விடுகிறது.இத்தகைய தகர்வை நாளைய வரலாறு சொல்லும்.நம் சிறுசுகள் அதைச் செய்து காட்டுவார்கள் சர்வகலாசாலைக்குள்ளிருந்து ?…

சுஇவில்வரெத்தினம்,சோலைக்கிளி போன்றோருக்க மிகமிக நேர்த்தியாக அநுபவமாகிய ‘கவிதைஜீவன் ‘ இந்தக் அஸ்வகோசுக்கு ஒரு சில கவிதைகளுள் எப்படி முகிழ்க்கிறது ?

பிடுங்கியெறியப்பட்ட தேசத்தின் புதல்வனின் கவிப்பாங்கு அபாரம்தாம்.மரபுக்குள் மடிந்துபோன ‘மக்களின் ஆன்வுணர்வு ‘இவ்வகைக் கவிஞர்களால் உன்னதமான வகையில் சமுதாய ஆவேசமாக வெளிவருகிறது.உருதுக் கவிஞன் இக்பால் போலவே இங்கும் கவிஞர்கள் பீறிட்டெழுகிறார்கள்.

அஸ்கோஸின் கவிதைகளை வாசிக்கும்போது,கவிதைகளுக்கள் நீரோட்டமாக சதா ஊறிக்கொண்டிருக்கும் சமகால வாழ்வியல் இயக்கப்பாடு நம்மையொரு இக்கட்டான சூழலுக்குள் நகர்த்திச் செல்கிறது.

இது ஒரு அஸ்த்தை!

கவிதையூடே அநுபவமாகும் வாழ்வு,நம்முடைய மெய்யான வாழ்வு-குருதி சொட்டும் போராட்ட வாழ் சூழலிது.இந்தச் சூழலுக்குள் நகரும் ஈழத்து வாசகர்களுக்கு கவிதையின் பாரம்பரியப் படிம்,குறியீடு,உத்தி,உள்ளடக்கம்,இறைச்சி இவைகள் பற்றிப் பேசமுடியாது போகிறது.

இஃதொரு நெருக்கடி.

இந்தக் கவிதைப் போக்கைச் சமுதாயச் சூழலே தீர்மானிக்கின்ற யதார்த்தப் போக்கால் இக் கவிதைகளுக்கு எந்தப் பூட்டுக்களையும் போடமுடியாது போகிறது.இந்திய சுதந்திரத்தைப் பாடிய பாரதியின் விடுதலைக் கவிதைகளுக்குக்கூட நாம் விமர்சன ரீதியாக சில இலக்கண மீறல்களைப் பொருத்திப் பார்க்க முடியும்.ஆனால் இன்றைய ஈழத்தின் கவிதைகளுக்கு இதைச் செய்யக்கூடிய சூழ்நிலைகளை இக் கவிதைகள் விட்டுவைப்பதில்லை.

‘என்னை உறுத்தும்

நினைவுகளைச் சொல்வேன்

நொந்துபோன என் நாட்களின்

வேதனைச் சுமைகளைச் சொல்வேன்

சிதழுறும் காயங்கள் பேசும்

மொழியினில்

என்னைப் பேசவிடுங்கள். ‘

கவிஞரே ‘காலச் சூழலைப் பரதிபலிக்கின்ற மெய்மையை ‘தன் படைப்பூடே சொல்லி விடுகிறார்.

உண்மைதாம்! மண்ணின் குறிப்பை-மானுடவாழ்வை,தரிசனத்தை,வரலாற்று ஊற்றைத் தன்னகத்தே புதைத்துக் கவிதை வாழ்வாகிவிடுகிறது.

‘பேரதிர்வுகளில் உயிரிழந்து

சிதைவுகளை நெஞ்சில் சுமந்து

வலிகளைத் தாங்க ஏலாது

முறிந்த வாழ்வுடன்

இடம் பெயர்ந்துழலும் அவலம்… ‘

இது ஒரு சத்தியப் பதிவு.

வாழ்வின்மீது கவிந்த கயமைப் போக்கால் முறிந்து விடுகிறது வாழ்வு.இனி ஒவ்வொரு திக்குத்திக்காய் வாழ்வின் பாதுகாப்புக்காக-உயிர் வாழ்தலை அச்சமின்றிப் போக்க இடம்பெயர்ந்துழலும் அவலமாக வாழ்வு விரிகிறது.வாழ்வை அவலம் காவுகொள்கிறது.

கவிஞன் ஆவேசமடைகிறான்,கோபக் கனலோடு உரக்கக் குரலெடுத்து, அவலத்தைச் செய்யும் அரசியல் போக்கை-அதை நகர்த்திச் செல்லும் வர்க்க மனிதர்களின் முகத்தில் தன் வார்த்தைகளால் ஓங்கியடிக்கிறான் இந்த அஸ்வகோஸ்.

‘வாவிகளில் பிணமாய்க் கரைந்து

போகையில்

திறந்த வெளியரகுகளில்

மலரேந்தித் துதித்தவர்

புதை குழிகளில் ஓய்ந்திருந்ததை

துயில் எழுப்பி

ஊர்த்திகளில்

வேட்டைக் அனுப்பியவர்

நீவீர்… ‘

மனித வரலாறு பூராகவும் கவிஞர்களில் பலர் சமுதாய நீதிமான்களாக இருந்துள்ளார்கள். அவர்கள் சமூகச் சீரழிவுகளைச் செய்யும் நிறுவனங்களை நியாயக் கூண்டில் ஏற்றி,தங்கள் சத்திய வாக்கால் சவுக்கடி கொடுத்துள்ளார்கள்.

சிலம்பு சொல்லும் கதை தெரியும் தானே ?

மதுரையையே எரித்தான் இளங்கோ முனிவன்.

இங்கே,அஸ்வகோஸ் தன் கைகளை நீட்டி கயவர்களைச் சுட்டி மக்கள் முன் இழுத்து வருகிறான் தண்டனைக்காக.ஏனெனில், மக்கள்தாம் வரலாற்றைப் படைப்பவர்கள்.சமூக விரோதிகளை மக்கள் முன் நிறுத்திவிட்டுக் கூறுகிறான்:

‘குரூரத்தை மறக்க இயலவில்லை

போய்ப் பார்

போர் இளமையை

உறிஞ்சி உறிஞ்சிக் குடிக்கிறது. ‘

மானுட விழுமியங்கள் காலில் போட்டு மிதிக்கத் தக்கக்கூடிய நிலைகளாக மாறும்போது, சமூக அக்கறை என்பது ஒவ்வொரு ‘உணர்வுள்ள ‘ மானுட ஜீவனுக்குள்ளும் பிரதிபலிக்கும்.ஆனால் விடுதலைவேண்டி அதற்காகப் பாடுபட்ட சமூகத்திலுள்ள ஒவ்வொரு விடுதலைப்பங்காளருக்கும் நேரடியாக அநுபவமாவது எவ்வளவோ! அவை ஒரு வரலாற்றின் பதிவுகளாக மாறுவதற்கு முன் மானுட ஆத்மாவுக்குள் கேள்வியாக விரிந்து,தன்னையே கேள்விக்குட்படுத்தி ‘சுயவிமர்சனம் ‘ செய்வது இயல்பாகி விடும்.

‘எதுவரை உண்மையினை அவர்கள்

கொண்டு சென்றார்கள்

அதுவரை நான் வந்தேன்

எங்கு வைத்துக் கொலை செய்தார்கள்

நான் அங்கிருந்தேன்

என்னால் முடியாத பேரழிவினை

ஊழியில் இயற்ற

என்னையங்கு தயார்ப்படுத்தினார்கள் ‘

இங்கு மனித இருத்தல் மீளவும் மறு ஆய்வுக்குள்ளாகும்.அஃது புதிய வீச்சோடு மெருகேற்றப்பட்டு,நியாயமான உரிமையாக கிளைபரப்பிக் கொள்ளும் ஒவ்வொரு தனிநபர்களுக்குள்ளும்.

‘கணக்குகள்

மீளவும் தீர்க்கப்படுகையில்

நான் அஞ்சுகிறேன்…!! ‘

என்று ஒவ்வொருவரையும் நோக வைக்கும்.

‘பொது மானுட விழுமிய நோக்கை ‘அஃது இயல்பாக ஏற்படுத்தி விடும்.அப்போது தன்னினம்,தன் மொழி,தன் சுயம்மென்பது சுருங்குி சர்வதேசிகளாக மனிதப் பொதுமைக்காக:

‘நியாயம் கூற இயலாக் கண்ணீருடன்

விரட்டப்பட்ட மக்களிடையே

விடுபட்டு உதிரிகளாய்

ஒன்றிப் போன ரசூலின் கதை… ‘ சொல்ல எத்தனிப்புகள் தோன்றும்!,தோன்றிவிடுகிறது.

இஃதுதாம் மனிதப் பண்பு.அஸ்வகோஸிடம் இந்தப் பண்பு மிகுதியாகப் படர்வதை அவர் படைப்புகளில் நாம் அறியலாம்,உணரலாம்.

‘முடிவற்ற மரணம் அவனை உறைக்கவில்லை

அதிலவனுக்குத் திருப்தியில்லை

அழுவானென்றும் நம்பமுடியவில்லை… ‘ என்றும்,

‘அவன் அறிவான்

கண்முன் நடந்ததைவிட

காணாமற்போனது

எதை விட்டுச் செல்லுமென்பதை… ‘

இந்த வரிகளோடு மிகப் பெரிய வெற்றிடமாக ஈழமண் மாறிவிடுகிறது,நம் கண் முன்!யாருமே இருப்பதாக உணர்வு ஏற்குதில்லை.எல்லோருமே அழிந்துபோய் வெறும் சுடுகாடாய் கண்முன் ‘தமிழீழம் ‘ விரியும்போது கவிஞன் ஆவேசம்கொண்டு:

‘மரணத்திற்குக் காத்திருக்கும்

எந்தன் சொற்கள் உண்மையே

வனத்தின் அழைப்பைத் தாண்டி

எந்தன் மரணம் எட்டுமா

கொலைச் சூத்திரங்களை மட்டும்

உனக்குக் கற்பித்தவர்களிடம் சொல்

விண்டுரைக்க முடியா

மரணத்தின் வலியை

இனியும் தீர்மானிக்க வேண்டாம்… ‘ என்று ஓங்கி உரைக்கிறான்.

இப்போது இன்னுமதிகமாக சுதந்திர தாகமும்,மானுட விழுமியமும் வேர் பரப்பி விழுதெறிகறது.

இங்கே அஸ்வகோஸ் எனும் மகாப் பெரிய மானுட நேயன் உண்மையான வாழ்வின் அர்த்தத்தை இலக்காகக் கொண்டு,நம் முன் உயர்ந்து நிற்கிறான்!

இவன்தாம் ஒரு கட்டத்தில் தன் மைந்தனையே விடுதலைக்காக பலியாகக் கொடுத்துவிட்டு,மகனின் உயிரற்ற உடலுக்குப் பாதுகாப்பு அளிப்பான்,ஈகள் மொய்க்காது-காகம்,கழுகுகள் கொத்தாதிருக்கும்படி கவனிப்பான்!

அப்போது அவன் உள்ளத்தில் கேள்விகள் முளைவிட்டு வேர்பரப்பும்:

‘அள்ளப்படுவதற்கு முன்

எளிமையான ஒரு பாதை

பிரியமான வழித் துணை

முடியுமா

எங்கிருந்து தொடங்குவது நண்ப ? ‘

இஃதுதாம் நம் எல்லோர் முன்னும் உள்ள கேள்வியும்.

ப.வி.ஸ்ரீரங்கன்

வூப்பெற்றால் ஜேர்மனி.

Series Navigation

ப.வி.ஸ்ரீரங்கன்

ப.வி.ஸ்ரீரங்கன்