கம்பராமாயணத்தில் புறத்திணைக் கூறுகள் (முதற்போர்புரி படலப்பகுதி மட்டும்)

This entry is part [part not set] of 31 in the series 20051021_Issue

முனைவர் மு.பழனியப்பன்


அகம், புறம் என்ற இரு தொல்காப்பியப் பாடுபொருள்கள் தமிழிலக்கியங்களில் தொடர்ந்து கையாளப் பெற்று வருகின்றன. சங்க காலத்துடன் இவ்விரு பாடுபொருள்கள் நின்றுவிடாமல் அடுத்த அடுத்த காலப் பகுதிகளில் மேலும் மேலும் அவை வளமும் நலமும் சேரும் வகையில் படைப்பாளர்களால் கையாளப் பெற்று வருகின்றன.

தமிழிலக்கிய வரலாற்றில் அகம் என்ற பாடுபொருள் புறம் என்ற பாடுபொருளைவிட அதிக அளவில் மாறுபாடுகளும், வேறுபாடுகளும் இல்லாமல் எடுத்தாளப் பெற்று வந்திருக்கிறது. புறம் என்ற பாடுபொருளில் பற்பல மாற்றங்கள் காலப்போக்கில் நிகழ்ந்துள்ளன. எடுத்துக்காட்டிற்கு தொல்காப்பிய கால போர்முறைக்கும், தற்கால போர்முறைக்கும் பெருத்த வேறுபாடு இருப்பதையும், அவற்றை இலக்கியங்கள் பதிவு செய்திருப்பதையும் காட்டலாம். இவ்வடிப்படையில் புறம் என்ற விரிந்த எல்லையை உடைய பாடுபொருள் – அறம், போர் முறை, கொடை, கொடைமடம், சான்றாண்மை போன்ற பல நிலைகளில் வேறுபட்டும், மாறுபட்டும் படைப்பாளர்களால் தமிழ் இலக்கியங்களில் கையாளப் பெற்று வந்திருப்பதை தமிழிலக்கியத் தொடர் வாசிப்பின் மூலம ி அறிய இயலும்.

இவ்வடிப்படையில் கம்பராமாயணத்தில் அமைந்துள்ள புறத்திணைக் கூறுகளை எடுத்துரைப்பதாக இக்கட்டுரை அமைகின்றது. புறத்திணைக் கூறுகள் என்பது இக்கட்டுரையைப் பொறுத்த அளவில் போர்நெறிகள் என்பதாக மட்டும் கொள்ளப் பெறுகின்றது. இக்கட்டுரைக்காக கம்பராமாயணம் – யுத்த காண்டம் – முதற்போர் புரி படலம் மட்டும் எல்லையாகக் கொள்ளப்படுகிறது.

கம்பரின் காலம், கம்பர் படைத்த இராமனின் காலம், கம்பனைக் கற்கும் சுவைஞரின் காலம் என்ற மூன்று வேறுபட்ட கால தளத்தில் கம்பர் கையாண்ட புறத்திணைக் கூறுகளை ஆராய வேண்டிய சூழல் இக்கட்டுரைக்கு அமைகின்றது. இராமாயணச் செய்திகளைச் சங்ககாலப் புலவர்கள் அறிந்திருந்தனர் என்பதற்.குப் பல அகச் சான்றுகள் சங்க இலக்கியங்களிலேயே காணப்பெறுகின்றன. இதனைக் கருத்தில் கொண்டு மேற்கண்ட காலம் கருதிய சிக்கலுக்கு ஓரளவிற்குத் தீர்வு காண இயலும், கம்பர் தன் இராமாயணப் போர்முறையை இராமாயண காலத்துடன் பின் ஒட்டில் ஒட்டுவதான சங்ககால அதாவது தொல்காப்பிய காலப் பின்புலத்தில் அணுகிய ுருக்க வேண்டும் என்று கருத முடிகின்றது.

கம்பர் தம் போர்ச் செய்திகளைத் தொல்காப்பிய அடிப்படையிலேயே வழங்கியுள்ளார் என்பதற்குச் சிறந்த சான்றாக விளங்குவது கம்பராமாயணத்தில் அமைந்துள்ள முதற்போர் புரி படலம் ஆகும், தொல்காப்பியத்திற்கு அடுத்ததாகத் தோன்றிய பன்னிரு படலம் கம்பரின் காலத்திற்கு முன் தோன்றிய புறப்பொருள் நூல் என்ற போதிலும் அந்நூல் செய்திகளைக் கொண்டு கம்பர் தம் போர்காட்சிகளை வகுத்துக் கொண்டிருக்க இயலாது. அதற்குப் பின்வரும் இரு காரணங்கள் உள்ளன, அவை பின்வருமாறு. பன்னிருபாட்டியல் நூல் முழுவதும் கிடைக்கப்பெறாத சூழல் நிலவுவதாலும், ? ?காப்பியரின் புறத்திணை மரபு தொன்மை மிக்கது என்பதும், பன்னிருபடலம் காட்டும் இலக்கணமரபு பிற்பட்டது என்பதும் தெளுவு ? ? ( சோ, ந, கந்தசாமி, புறத்திணை வாழ்வியல், ப, 8) என்ற கருத்தினாலும் கம்பர் பன்னிருபடலத்தின் அடிப்படையில் கம்பராமாயண புறப்பொருள் செய்திகளை ஆக்கியிருக்க இயலாது என்று முடியலாம். புறப்பொருள் வெண்பாமாலை, வீரசோழியம் ஆகியன கம்பர் காலத்திற்கு ஏறக்குறைய பிந்தையன என்பதையும் இங்கு கருத வேண்டியுள்ளது. இந்நிலையில் கம்பர் தொல்காப்பியத்தையே மூலநூலாகக் கொண்டிருக்க வேண்டும் என்பது தெளுவாகிறது. கால அடிப்படையில் ஏற்கப் பெறும் இக்கருத்து இலக்கிய அடிப்படையில் முதற்போர்புரி படலத்தினை ஆராய்கையில் இன்னும் வலுப்பெறுகிறது.

கம்பராமாயண யுத்த காண்டத்திற்குள் நுழைகையில் கற்பவர் மனதில் ஓர் அடிப்படை கேள்வி எழும். இராமாயணக் கதைப்படி இராமனின் மனைவி சீதையை இராவணன் கவர்ந்து போகிறான். இராவணனிடமிருந்துச் சீதையை மீட்க இராமன் எண்ணுகிறான். ஒரு பெண் குறித்து எழுந்த இந்த முரண்பாடு இராமன் இராவணன் ஆகியோர் இடையே ஏற்பட்ட தனிப்பட்ட முரண்பாடு மட்டுமே. தனிப்பட்ட இரு மனிதர்க்குள் நிகழ்ந்த இம்முரண்பாடு பெரிய போராக்கப்பட்டு ஏன் இரு பகுதி வாழ் மக்களையும் இது பாதிப்படையச் செய்ய வேண்டும் என்பதே யுத்த கா;ண்டத்துள் புகும் கற்பவருக்கு ஏற்படும் அடிப்படைக் கேள்வியாகும். இக்கேள்விக்கு உரிய பதில் வெள்ளிடைமலை என்ற போதிலும் காப்பிய ஆசிரியரான கம்பர் இத்தனிப்பட்ட முரண்பாட்டை பெரிய போர்க்குரிய காரணமாகக் காட்ட ஏற்ற சூழலை தன் காப்பியத்துள் அமைத்துக் கொண்டுள்ளார்.

போர்க்கான காரணம்

? ?தேவியை விடுக அன்றேல் செருக்களத்து எதிர்ந்து தன்கண் ஆவியை விடுக ? ?(யுத்த காண்டம்-945) என்று இராவணனிடம் பேசிய அங்கதனின் தூது மொழிகள் முரண்பாடு போராக மாற்றம் பெற்றதற்கான அடையாள மொழிகளாகின்றன. மாறியதற்கான சூழலைத் தருகின்றது, இராவணன் என்ற தனிமனிதன் தனிமனிதனாக மட்டுமில்லாமல் அரக்கர் குலத்திற்குத் தலைமை வகிப்பவனாகவும், இலங்கை நாட்டின் அரசனாகவும் விளங்குவதன் காரணமாக- இராமன் தனிமனிதனாக மட்டுமில்லாமல் அவன் அறத்தின் நாயகனாகவும், குரங்கு இனத்தின் தலைவனாகவும் இருப்பதன் காரணமாக- இரு தனி மனிதர்களுக்கு இடையேயான முரண்பாடு பெரிய போராக இரு பகுத ு மக்களுக்கு இடையே உருவெடுக்கிறது.

இத்தனிமனிதர்கள் அடைய விரும்பும் பொருள் அவ்வவ் நாட்டு மக்களுக்கு ஏற்புடையதோ, இல்லையோ இவ்விருவர் விருப்பத்தினையும் இவ்விரு நாட்டின் மக்களும் ஏற்க வேண்டிய கட்டாய சூழல் உண்டாக்கப்படுகிறது, எனவே தனிமனித முரண்பாடு பெரிய போராக மாற்றம் பெறுகிறது.

எயில்போர்

போர் ஏற்படுத்தப்பட்டுவிட்ட சூழலில் முதன் முதலாக இராமன் அவனது கூட்டத்தினரிடம் எயில் போர் தொடங்கக் கூறுகிறான்.

? ?இடுமின் பல்மரம் எங்கும் இயங்கு அறத்

தடுமின் போர்க்கு வருக எனச் சாற்றுமின்

கடுமின் இப்பொழுதே கதிர் மீன் செலாக்

கொடிமதில் குடுமித்தலைக் கொள்க என்றான் ? ?(யுத்த, 960)

கடல்கடந்து வந்த வானரப்படைகளின் எதிரில் இலக்கை நகரின் காப்பு மதில் பெரிதாக நிற்கிறது. இராமன் இம்மதிலையும் அதனைச் சுற்றி உள்ள அகழியையும் அழிக்கத் தன் படைகளுக்குக் கட்டளையிடுகிறான். எயில் போர் தொடங்கும் இம்மரபு தொல்காப்பியப் போர் மரபை ஒட்டியதாகும்.எயில் கருதி விளைவிக்கும் போர் உழிஞை என தொல்காப்பியத்தால் அழைக்கப் பெறுகிறது.

? ?உழிஞைதானே மருதத்துப் புறனே

முமுமுதல் அரணம் முற்றலும் கோடலும்

அனைமரபிற்று ஆகும் என்ப ? ?

என்ற தொல்காப்பிய நூற்பாவின்படி கோட்டையைக் காத்தலும், கோட்டையை அழித்தலும் உழிஞை எனத் தொல்காப்பியரால் சுட்டப்பெறுள்ளது. தொல்காப்பியத்திற்குப் பின்னால் எழுந்த இலக்கண நூல்களில் அரண் முற்றல், அரண் அழித்தல் ஆகியன நொச்சி உழிஞை ஆகிய இருதிணைகளாக வகுக்கப் பெற்றுள்ளன. கம்பர் தொல்காப்பிய அடிப்படையிலே அரண் முற்றல் அழித்தல் இரண்டையும் ஒரே காட்சியில்(படலத்தில்) அமைத்துக் கொண்டுள்ளார். இராமனின் சார்புடைய வானரப்படைகள் அரணை அழிக்க முயல்வதும், இராவணனின் சார்புடைய அசுரப்படைகள் அரணைக் காப்பதும் ஒரே காட்சியாகக் கம்பரால் அமைக்கப் பெற்றுள்ளன. மேலும் தொல்காப்பியர் காட்டும் உழிஞைத் துறைகள் பல கம்பராமாயணத்துள் எடுத்தாளப்பெற்றுள்ளன. அவை பின்வருமாறு.

கொள்ளார்தேயம் குறித்த கொற்றம்

?பூசலே; பிறிது இல்லை ? எனப் புறத்து

ஆசை தோறும் முரசம் அறைந்து என

பாசறைப் பறையின் இடம் பற்றிய

வாசல் தோறும் முறையின் வகுத்திரால் ? ? (யுத்த 958)

என்ற இப்பாடல் இராவணனின் நாட்டை வளைக்க இராமன் குறித்த கொற்றமாகும்.

உள்ளியது முடிக்கும் வேந்தனது ஆற்றல்

நினைத்ததை முடிக்கும் வேந்தனது ஆற்றல் குறித்தது இத்துறையாகும்,

? ?மற்றும் நின்ற மலையும் மரங்களும்

பற்றி வீசிப் பரவையின் மும்முறை

கற்ற கைகளினால் கடி மாநகர்

ி சுற்றி நின்ற அகழியைத் தூர்த்திரால் ? ? (யுத்த 956)

என்ற பாடல் வழி நாட்டைப் பெற மதிலைச் சுற்றியுள்ள அகழியைத் தூர்க்க வேண்டும் என்று இராமன் தன் படைகளுக்குக் கட்டளையிடுகிறான். இதன் மூலம் அவன் நாட்டைப் பெற வேண்டும் என்ற இராமனின் எண்ணம் வெளிப்படுகிறது,

தொல் எயிற்று இவர்தல்

? ?தூர்த்த வானரம் சுள்ளி பறித்து இடைச்

சீர்த்த பேர் அணை தன்னையும் சிந்தின;

வார்த்தது அன்ன மதிலின் வரம்பு கொண்டு

ஆர்த்த ஆர்கலி காரொடும் அஞ்சவே ? ? (யுத்த 970)

என்ற இப்பாடலில் வானரப்படைகள் அகழியைத் தூர்த்து மதிலில் ஏறியமை சுட்டப்பட்டுள்ளது. தொல் எயிற்று இவர்தல் என்பது மதிலின் மீது பகைப்படைகள் பரந்திருத்தலைத் தெரிவிக்கும் துறையாகும்.

தோலது பெருக்கம்

? ?பல் கொடும் நெடும் பாதவம் பற்றியும் கல் கொடும் சென்றது அக்கவியின் கடல் ? ? (யுத்த 976) என்ற அடிகள் இராமனின் படைப்பெருக்கம் காட்டும் அடிகள் ஆகும்..

அகத்தோன் செல்வம்

? ?வில் கொடும் நெடு வேல் கொடும் வேறு உள எல் கொடும் படையும் கொண்டது இக்கடல் ? ?(யுத்த 976) என்ற பாடலடிகள் அரணின் அகத்து உள்ள இராவணனின் படைச் சிறப்பைக் காட்டும் வரிகளாகும். இதுதவிர குதிரைப்படை (996), யானைப்படை(994), தேர்ப்படை(995), காலாட்படை(997) ஆகியனவும் அரணிலிருந்து வெளிப்பட்ட அழகைக் கம்பர் காட்டுகின்றார். இவை அகத்தோன் செல்வம் என்ற நிலையில் இராவணனின் படைப்பெருக்கத்தைக் காட்டும் பகுதிகளாகும்.

புறத்தோன் அணங்கிய பக்கம்

? ?சாய்ந்த தானைத் தளர்வும் சலத்து எதிர்

பாய்ந்த தானைப் பெருமையும் பார்த்து உறக்

காய்ந்த நெஞ்சன் கனல் சொரி கண்ணினன்

ஏய்ந்தது அங்கு ஒர் மராமரம் ஏந்தினான் ? ?(யுத்த 1000)

என்ற பாடலின்வழி புறத்தோர் ஆகிய இராமனின் படைகள் அயர்வுற்றமை காட்டப்பெறுகிறது. இதனைத் தடுக்க சுக்கிரீவன் முனைகின்றான். அவன் ஒரு மராமரத்தை ஏந்தி சேரர்வுற்ற வானரப்படைகளுக்குத் துணையாகப் போர்புரியக் களமிறங்குகிறான்.

திறல்பட ஒருதான் மண்டிய குறுமை

? ?வாரணத்து எதிர் வாசியின் நேர் வயத்

தேர் முகத்தினில் சேவகர் மேல் செறுத்து

ஓர் ஒருத்தர்க்கு ஒருவரின் உற்று உயர்

தோரணத்து ஒருவன் எனத் தோன்றினான். ? ?(யுத்த 1001)

என்ற இப்பாடலில் அழிந்து பட்டு நிற்கும் வானரப்படையைச் சுக்கிரீவன் ஒரு தானாக நின்றமை காட்டப் பெறுகிறது. சுக்கிரீவன் ஒருவன் தானாகக் களமிறங்கிய போதும் அவன் பல பிரதிகளாக அரக்கர் படைஞர் ஒவ்வொருவர் முன்பும் எதிர்த்து ஒவ்வொருவனாக நின்றான் என இத்துறைக்கு சிறப்பு தந்து கம்பர் பாடல் புனைந்துள்ளார்.

முற்றிய முதிர்வும் அன்றி முற்றிய அகத்தோன் வீழ்ந்த நொச்சி

இராமனின் படைகள் இராவணனது அரணை அழித்து அக்காவலில் ஈடுபட்டிருந்த படைத்தலைவர்களை அழித்து வெற்றி கண்டது. அப்பகுதி பின்வருமாறு.

?வடக்கு வாயிலில் வச்சிர முட்டியும

குடக்கு வாயிலில் துன்முகக் குன்றமும்

அடக்கரும் வலத்து ஐம்பது வெள்ளமும்

ி படச் சிதைந்தது நம்படை ?என்றனர்.

?வென்றி வேல் கை நிருதர் வெகுண்டு எழ

தென்திசைப் பெரும் வாயிலில் சேர்ந்துழி

பொன்றினான் அச் சுபாரிசன்; போயினார்

இன்று போன இடம் அறியோம் ?என்றார்.

கீழை வாயில் கிளர் நிருதர் படை

ஊழி நாளினும் வெற்றி கொண்டு உற்ற நின

ஆழி அன்ன அனீகத் தலைமகன்

பூழியான்; உயிர் புக்கது விண் என்றார். (யுத்த 1040-42)

இலங்கையின் அரண் அழிந்தது. இராவணனின் வலிமைக்கு அரணாக இருந்த வாயில் காப்பாளர்கள் அனைவரும் இறந்து பட்டனர். இதன்மூலம் இராமன் முதல் வெற்றியைப் பெறுகிறான்,

கம்பர் தமிழ்ப் புறப்பொருள் மரபில் சிறிதும் மாறுபடாமல் இவ்வெயில் போரை தன் இராமணயத்துள் நடத்தியுள்ளார். உழிஞைத் திணையும் அதன் துறைகளும் கம்பரின் காப்பிய வளர்ச்சிக்கு உதவியுள்ளன. இதனைக் கற்கும் சுவைஞர்கள் கம்ப ராமாயணத்தை தமிழ் மரபுக் காப்பியமாகவே அனுபவிக்க இப்புறப்பொருள் செய்திகள் துணைபுரிகின்றன,

தும்பைத்திணை

இராமனால் இராவணனுக்கு எதிராக எயில் போர் தொடங்கப் பெற்று அதில் அவன் முழு வெற்றியும் பெற்றுவிடுகிறான். இச்சூழலில் இராவணன் தன் அரண் பகைவரால் அழிக்கப் பெற்றது அறிந்து துன்பமுற்று, பகைவரின் ஊடுறுவலைத் தடுக்க படையுன் வருகிறான். அவன் தும்பைப் போரைத் துவக்க ஆயத்தமாகின்றான்.

தும்பைப் போர் என்பது ? ?மைந்து பொருளாக வந்த வேந்தனைச் சென்று தலைஅழிக்கும் சிறப்பிற்று ? ? என்ற இலக்கணமுடையதாகும். இதனடிப்படையில் இராவணன் போருக்குப் புறப்பட்ட போது தும்பை மாலை அணிந்ததாகக் கம்பர் காட்டுகிறார்.

மற்றும் வான்படை வானவர் மார்பிடை

இற்று இலாதன எண்ணும் இலாதன

பற்றினான்; கவசம் படர் மார்பிடைச

சுற்றினான்; நெடுந் தும்பையும் சூடினான். (யுத்த 1054)

இராவணன் போருக்கு தயாராகையில் பலவித அணிகலன்களையும் போர்க்கருவிகளையும் அணிந்து கொள்கிறான். வாள்படை, வானவரிடத்தும் இல்லாத படைகள், கவசம் ஆகியனவற்றை அணிந்த அவன் தும்பை மாலையையும் சூடுகிறான். இதன்மூலம் இராவணன் தும்பைப் போரை தன் பக்கமிருந்து முதன்முதலாகத் தொடங்குகிறான். இப்போருக்குப் பதில் தருபவனாகவே இராமன் இனி செயல்பட வேண்டும்.

இவனுக்கு எதிராகப் போர்க்கோலம் பூண்ட இராமன் துளசி மாலை அணிந்து அதனுடன் தும்பைப்பூ மாலையும் சூடுகிறான், இப்பகுதி வாயிலாக வட நாட்டுச் சார்புடை இராமகாதை தென்நாட்டின் புறப் பொருள் கொள்கைகளை ஏற்பதாகக் கம்பரால் காட்டப்பெற்றுள்ளது. இராமன் தும்பைப்பூ சூடிய பாடல் பின்வருமாறு.

கிளர் மழைக் குழுவிடைக் கிளர்ந்த மின் என

அளவு அரு செஞ்சுடர்ப் பட்டம் ஆர்த்தனன்;

இளவரிக் கவட்டு இலை ஆரொடு ஏர் பெறத்

துளவொடு தும்பையும் சுழியச் சூடினான். (யுத்த 1072)

இராமாயணத்தைப் பொறுத்த வரையில் தும்பைப்போர் தொடங்கப்பட்டுவிட்டது என்றாலும் அப்போரின் வெற்றி தோல்வி உடன் நிகழ்ந்து விடவில்லை, முதற் போரில் தோற்ற இராவணனன் பின்பு தன் மகன், தம்பி ஆகியோரை போர்க்களத்திற்கு அனுப்புகிறான், இதன் காரணமாக போர் தொடர்ந்து நடைபெறும் ஒன்றாக விளங்குகிறது, இதனால் தும்பைப்போரின் முழுத் துறைகளுக்கான பாடல்களை முதற்போர்புரி படலத்தில் காணமுடியவில்லை. சில துறைகள் மட்டும் கம்பரால் இப்படலத்துள் காட்டப்பெறுகின்றன. இவை பின்வருமாறு.

தானைநிலை, குதிரைநிலை

இராவணன் தும்பைப்போரைத் துவக்கியதும் அவனது தானை, குதிரை ஆகியன போர்க்குத் தயாராகின, அவற்றை உணர்த்தும் துறைகள் தானைநிலை, குதிரைநிலை ஆகியனவாகும், இவற்றுக்கு ஏற்ப கம்பர் பாடல்களைப் படைத்துள்ளார்.

தேரும் மாவும் படைஞரும் தெற்றிட

மூரி வல் நெடுந் தானையின் முற்றினான்;

நீர் ஒர் ஏழும் முடிவில் நெருக்கும் நாள்.

மேரு மால்வரை என்ன விளங்கினான். (யுத்த 1057)

என்பது தானை நிலைத் துறைக்குரிய பாடலாகும்,

ஆயிரம் பரிபூண்டது; அதிர் குரல்

மா இரும் கடல் போன்றது; வானவர்

தேயம் எங்கும் திரிந்தது; திண்திறல்

சாய இந்திரனே பண்டு தந்தது. (யுத்த 1052)

என்பது இராவணன் ஏறிய தேரில் கட்டப்பெற்றிருந்த குதிரை நிலை உரைக்கும் பாடற்பகுதியாகும்,

இராமனும் போர்க்குத் தயாராகித் தன் பக்கத்து வீரர்களுடன் சென்று இணைகின்றான். அப்பாடல் பின்வருமாறு.

ஊழியின் உருத்திரன் உருவு கொண்டு தான்

ஏழ் உயர் உலகமும் எரிக்கின்றான் என

வாழிய வரிசிலைத் தம்பி மாப் படைக்

கூழையின் நெற்றி நின்றானை கூடினான். (யுத்த 1075)

இப்பாடல் வழியாக இராமன் பக்கத்துத் தானை நிலை உணரப்பெறுகிறது.

தான் மீண்டு எறிந்த தார்நிலை

தன் தலைவனைப் பகைவர் சூழக் கண்ட படைத்தலைவன் ஒருவன் அரசனைக் காக்கும் பொருட்டு, தன் போர்த்தொழில் விட்டு வந்து அரசனைக் காத்தல் என்பது இத்துறையாகும்.

சுடுகணை படுதலோடும் துளங்கினான்; துளங்கா முன்னம்

குட திசை வாயில் நின்ற மாருதி, புகுந்த கொள்கை

உடன் இருந்து அறிந்தான் என்ன, ஓர் இமை ஒடுங்கா முன்னர்,

வட திசை வாயில் நின்ற மன்னவன் முன்னன் ஆனான். (யுத்த 1089)

இப்பாடலில் சுக்கிரீவன் இராவணனுடன் போர் செய்து தளர்வடைய, அத்தளர்வில் இருந்து அவனைக் காக்க அனுமன் வருவதாகக் காட்டப் பெறுகிறது.

இருவர் தலைவர் தபுதிப் பக்கம்

இரு பக்கத்துப் படைத்தலைவர்களும் மோதிக்கொள்வது இத்துறையாகும்.

சாய்ந்தது நிருதர் தானை தமர்தலை இடறித் தள்ளுற்று

ஓய்ந்ததும் ஒழிந்தது ஓடி உலந்ததும் ஆக; அன்றே

வேய்ந்தது வாகை வீரற்கு இளையவன் வரிவில்; வெம்பிக்

காய்ந்தது அவ் இலங்கை வேந்தன் மனம் எனும் காலச் செந்தீ. (யுத்த1112)

இலக்குவனும் இராவணனும் தம்முள் மோதிக் கொண்ட போர்த்தன்மையை இப்பாடல் சுட்டுகிறது.

ஒருவன் ஒருவனை உடைபுடை புக்கு கூழை தாங்கிய பெருமை

நீலன் அம்பொடு சென்றிலன்; நின்றிலன் அனிலன்;

காலனார் வயத்து அடைந்திலன், ஏவுண்ட கவயன்;

ஆலம் அன்னது ஓர் சரத்தொடும் அங்கதன் அயர்ந்தான்;

சூலம் அன்னது ஓர்வாளியால் சோம்பினன், சாம்பன்.(யுத்த1156)

மற்றும் வீரர்தம் மருமத்தின் அயில் அம்பு மடுப்ப,

கொற்ற வீரமும் ஆண்தொழில் செய்கையும் குறைந்தார்;

சுற்றும் வானரப் பெருங்கடல் தொலைந்தது; தொலையாது

உற்று நின்றவர் ஓடினர்; இலக்குவன் உருத்தான் (யுத்த1156)

இவ்விரு பாடல்களும் வானரப்படைத் தலைவர்கள் கையற்றுப்போன சூழலில் இலக்குவன் போர்களத்திற்குள் இரங்கி வானரப்படையைக் காத்த நிலையை உரைக்கின்றன. இத்துறைக்கு இவ்விருபாடல்களும் உரியனவாகின்றன.

படையறுத்து பாழி கொள்ளும் ஏமம்

படைக் கருவிகளை அழித்து எதிர்பக்கத்துத் தலைவனை வெற்றி கொள்ளுதல் இத்துறையாகும். இராமாயணத்தின் மிகு உயர் பகுதியாகக் கருதப்படும் ?இன்று போய்ப் போர்க்கு நாளை வா ? என்ற தொடர் இத்துறைக்கு உரியதாகும். இராமன் இராவணனோடு போர் செய்து இராவணனது படைக்கலன்கள் ஒவ்வொன்றாக அறுத்தான். அவனது மணிமுடி தேர் முதலியனவற்றையும் இராமன் அழித்தான்.

நின்றவன் நிலை நோக்கிய நெடுந்தகை, இவனைக்

கொன்றல் என் ? தனி வெறும் கை நின்றான் ?எனக் கொள்ளா,

?இன்று அவிந்தது போலும், உன் தீமை ?என்று இசையோடு

ஒன்ற வந்தன வாசகம், இனையன உரைத்தான்; (யுத்த 1207)

என தன் பெருமிதத்தை இராவணனுக்கு இராமன் இப்பாடல் வழி உணர்த்துகிறான். தும்பைத்திணையும் அதற்குரிய துறைகளும் இவ்வளவில் முதற்போர்புரிப்படலத்தில் கம்பரால் பின்பற்றப்பட்டு வந்துள்ளன.

இன்னும் இராமாயணப் போர் தொடர்ந்து செல்லும் காப்பியப்போக்கில் கம்பரால் பல இடங்களில் புறத்திணை மரபுகள் பின்பற்றப் பெறுகின்றன. அவை விரிந்த அளவில் ஆராயத் தக்கனவாகும்,

முடிவுகள்

கம்பர் தன் இராமயணத்தில் தொல்காப்பிய புறத்திணை மரபுகளைப் பின்பற்றியுள்ளார்.

முதற்போர் புரிப்படலம் கம்பரின் புறத்திணை மரபுகளைப் பின்பற்றியமைக்குச் சிறந்த சான்றாக விளங்குகிறது,

இப்படலத்தில் தொல்காப்பியம் காட்டும் இலக்கண வரையறைப்படி உழிஞை மற்றும் தும்பைத் திணைகள் எடுத்தாளப்பெற்றுள்ளன. அவற்றின் துறைகளும் பயின்று வருமாறு பாடல்கள் கம்பரால் படைக்கப் பெற்றுள்ளன.

இவற்றின் வாயிலாகக் கம்பராமாயணம் தமிழ்மரபு சார் காப்பியமாக விளங்குகின்றது.

____

உதவிய நூல்கள்

கந்தசாமி,சோ.ந..,புறத்திணை வாழ்வியல்,தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்,1994

கோவிந்தன்,கா,., பண்டைத் தமிழர் போர்நெறி, வள்ளுவர் பண்ணை,சென்னை, இரண்டாம் பதிப்பு 1984.

பூவண்ணன், மாணிக்கம்.அ, கம்பராமாயணம், யுத்த காண்டம், முதல்தொகுதி, வர்த்தமாணன் பதிப்பகம், சென்னை, 2004

தமிழ்இணையப்பல்கலைக்கழக இணையதளநூலகம்

Muppalam2003@yahoo.co.in

Series Navigation

முனைவர் மு. பழனியப்பன்

முனைவர் மு. பழனியப்பன்