கவிஞர். எஸ்.வைதீஸ்வரனின் 70வது வயது நிறைவை ஒட்டி சென்னையில் நடந்தேறிய சிறப்பு இலக்கியக் கூட்டம்….

This entry is part [part not set] of 43 in the series 20051028_Issue

லதா ராமகிருஷ்ணன்


(படத்தில் ந முத்துசாமி , எஸ் வைதீஸ்வரன்)

‘எழுத்து ‘ காலம் முதற்கொண்டு எழுதி வருபவர் கவிஞர் வைதீஸ்வரன். கவிதையோடு இசை, நாட்டியம், ஓவியம், நாடகம் முதலிய பிற கலைகளிலும் நாட்டமும், பயிறிசியும் உடையவர். சிறுகதையாசிரியர். 1935ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ம் தேதி பிறந்த இவரது எழுபதாவது வயது நிறைவு விழாக் கூட்டம் சமீபத்தில் சென்னை மயிலாப்பூரிலுள்ள ‘கோகலே ‘ கூடத்தில் சிறப்பாக நடந்தேறியது. ‘விருட்சம் ‘ அமைப்பின் சார்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் எழுத்தாளர்கள் நா.முத்துசாமி, என்.எம்.பதி, இரா.முருகன், சுஜாதா விஜயராகவன், கவிஞர். அமிர்தம்சூர்யா முதலியோர் கவிஞர்.வைதீஸ்வரனின் படைப்புவெளி குறித்தி தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்கள். இலக்கிய ஆர்வலரும், திறனாய்வாளரும், இந்த விழா நடக்க உதவியவருமான டாக்டர்.கே.எஸ்.சுப்ரமணியன் கூட்டத்திற்கு தலைமை தாங்க, கவிஞர். சிபிச்செல்வன் நிகழ்ச்சிகளைத் தொகுத்தளித்தார்.

‘ப்ருஹத்வனி ‘ என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் திரு வைதீஸ்வரனின் கவிதைகள் சிலவற்றை பாடலாக இசைக்க, நவீன நாடக இயக்கக் கலைஞரான திரு. ஜெயராவின் ‘தியேட்டர் லாப் ‘ குழுவினர் கவிஞரின் கவிதைகள் சிலவற்றை அற்புதமாக நிிகழ்த்திக் காட்டினார்கள். இசை, நாட்டிய வல்லுனரும்,கலைவிமரிசகருமான திருமதி சுஜாதா விஜயராகவன் தனது உரையில் நவீன தமிழ்க் கவிதைகளை ராகம், தாளத்தோடு பாட முடியும், பரதநாட்டியமாக ஆட முடியும் என்றும், தான் மேற்கொண்டு வரும் அத்தகைய முயற்சிகளுக்கு திரு. வைதீஸ்வரன் அளித்து வரும் ஊக்கம், ஆதரவு குறித்தும்விரிவாகப் பேசினார். திரு. நா.முத்துசாமி தனக்கும், கவிஞர் வைதீஸ்வரனுக்கும் இடையில் நிலவும் நீண்ட கால நட்பு குறித்தும் , வைதீஸ்வரனின் கவிதைகள் தரும் காட்சியனுபவங்கள் குறித்தும் உரையாற்ற, திரு என்.எம்.பதி ‘கசடதபற ‘ காலத்திலிருந்து நவீன கவிதை இயக்கம் மேற்கொண்டிருக்கும் பல்வேறு பாணிகளையும், போக்குகளையும் , அவற்றினூடாய் வைதீஸ்வரனின் கவிதைகள் பயணமாகி வந்துள்ள விதம் குறித்தும் பேசினார். இணைய இதழ்களில் கவிஞர் வைதீஸ்வரனின் பங்களிப்பைப் பற்றிப் பேசிய திரு. இரா.முருகனின் உரையில் கவிஞரைப் பற்றிய பல முக்கியமான விவரக்குறிப்புகள் இடம்பெற்றிருந்தன. இன்றைய தலைமுறையைச் சேர்ந்த கவிஞர். அமிர்தம்சூர்யா வைதீஸ்வரனின் படைப்புவெளி குறித்து இரண்டு பேருக்கு இடையே நிகழும் உரையாடலாய் தன்னுடைய கட்டுரையை வித்தியாசமாகக் கட்டமைத்திருந்தார்.

திரு. ஜெயராவின் நாடகக் குழு கவிஞர் வைதீஸ்வரனின் நான்கைந்து கவிதைகளை மேடையில் நிகழ்த்திக் காட்டிய விதத்தில் கவிதைகளின் வரியிடை வரிகளும் நம் கண் முன் விரிந்தன என்றால் மிகையாகாது. நாடகம் என்பதை மூளைவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கும், அன்ன பிறருக்குமான சிகிச்சைமுறையாகப் பயன்படுத்தி வருவதோடு, சமூகப் பிரக்ஞையோடு மாற்று நாடகவெளியில் இயங்கி வருபவருமான திரு. ஜெயராவ் சில மாதங்களுக்கு முன்பு திரு. வெளி ரங்கராஜனின் இயக்கத்தில் மறைந்த எழுத்தாளர் கோபிகிருஷ்ணனின் ‘முடியாத சமன் ‘ என்ற சிறுகதையை அருமையாக மேடையில் நிகழ்த்திக் காட்டினார். இவருடைய நாடகக் குழுவில் ஆராய்ச்சி மாணவர்கள் தொடங்கி வாழ்வொன் பல்வேறு நிலைகளில் உள்ளவர்கள் அடக்கம். பார்வைக் குறைபாடு உடைய மாணவர் ஒருவரும் இடம் பெற்றிருக்கிறார். இந்த இளங் கலையார்வமும், தேர்ச்சியும், மனிதநேயமும் அந்த நாடகங்களில் நுட்பமாக வெளிப்படுவதைக் காண முடிந்தது. சமூகப் பிரக்ஞை மிக்க கவிதைகளை கணிசமான அளவு எழுதியிள்ள கவிஞர் வைதீஸ்வரன் கடந்த சில ஆண்டுகளாக ‘வெல்ஃபேர் ஃபவுண்டேஷன் ஆஃப் தி ப்ளைண்ட் ‘ என்ற ‘பார்வையற்றோர் நன்னல அமைப்பின் இலக்கிய முயற்சிகளுக்கும் பங்களித்து வருகிறார்.

ஈன்றளவும் கலை, இலக்கியத் துறைகளில் தனது குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஆரவாரமின்றி அளித்து வரும் மூத்த கவிஞர் வைதீஸ்வரனிக்கு விழாக்குழு சார்பில் எளிய நினைவுப் பரிசு ஒன்று வழங்கப்பட்டது. எழுத்தாளரும், தனியொருவராக கடந்த பதினெட்டு வருடங்களாக ‘விருட்சம் ‘ என்ற சிற்றிதழையும், இலக்கிய அமைப்பையும் நடத்தி வருபவருமான திரு. அழகியசிங்கர் நன்றி கூற நிறைவு பெற்ற இந்த இலக்கியக் கூட்டத்திற்கு எழுத்தாளர்களும், பிற கலைத்ததுறைகளைச் சேர்ந்தவர்களும் கணிசமான எண்ணிக்கையில் வருகை தந்திருந்தனர்.

—-

ஜெயராவ் நாடக நிகழ்விலிருந்து

Series Navigation

லதா ராமகிருஷ்ணன்

லதா ராமகிருஷ்ணன்

கவிஞர் எஸ்.வைதீஸ்வரனின் 70வது பிறந்த நாள்- 22.9.05

This entry is part [part not set] of 26 in the series 20050923_Issue

லதா ராமகிருஷ்ணன்


22, செப்டம்பர் 1935ல் கோயம்பத்தூரில் பிறந்தவர். பள்ளிப்பருவம் சேலத்தில் கழித்த பின் சென்னையில் கல்லூரிப் படிப்பு தொடர குடியேறி நிரந்தரமாய் அங்கேயே வசித்டு வருகிறார்.

இலக்கிய சிற்றேடுகளில் குறிப்பிடத்தக்க பத்திரிகையான சி.சு.செல்லப்பாவின் ‘எழுத்து ‘ மூலம் புதுக்கவிஞராக அறிமுகமானவர்-1961ல் தொடங்கி இன்று வரை இயங்கி வருபவர்.

புதுக்கவிதையின் மலர்ச்சிக்கும், வளர்ச்சிக்கும் பங்களிப்பு செய்த குறிப்பிடத்தக்க கவிஞர்களில் ஒருவராக இன்று பரவலாக அறியப்படுபவர்.

ஓவியக் கலையிலும் இணையான ஆர்வமும், ஈடுபாடும் கொண்டிருக்கும் இவரது ஓவியங்கள் கலைக் கண்காட்சிகளில் இடம் பெற்றுள்ளன. நாடகத் துறையிலும் இணைந்து சில தொழில் நாடகங்களில் இரண்டு மூன்று ஆண்டுகள் நடித்திருக்கிறார்.

மியூசியம் நிர்வாகம், பராமரிப்பு சம்பந்தமான துறையில் ‘பரோடா ‘ சர்வகலாசாலையில் பட்டயப்படிப்பு பெற்றுள்ளார்.

தவிர, இசை நாட்டியம் சார்ந்த துறைகளில் பங்கெடுத்துக் கொண்டுள்ளார். இவரது மெல்லிசைப் பாடல்கள் ஒலிபரப்பாகியுள்ளன. ஆரம்ப இசை மாணாக்கர்களின் சாதகத்திற்கு உதவியாக இவர் இயற்றிய தமிழ் கவிதைகள் ஒலிநாடாவாக வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியை ஏர்லைன்சில் விமான அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் இவர். குடும்பத்துடன் சென்னையில் வாழ்ந்து வருகிறார்.

‘உதய நிழல் ‘, நகரச் சுவர்கள் ‘, விரல் மீீட்டிய மழை ‘(கவிதைத் தொகுதிகள்) ‘கால் முளைத்த மனம் ‘(சிறுகதைத் தொகுதி), தேவனின் எழுத்துலகம் ‘(ஆய்வுக் கட்டுரை) முதலியன இவரது பிற நூல்கள். கவிதா பதிப்பகம் இவரது மொத்தக் கவிதைகளடங்கிய தொகுப்பை ‘வைதீஸ்வரன் கவிதைகள் ‘ என்ற தலைப்பில் வெளியிட்டிருக்கிறது. இன்னும் ஒரு தொகுதிக்காகும் அளவு அவரிடம் சமீபகாலத்தில் எழுதிய கவிதைகள் இருக்கின்றன.

கவிதைக்கு வயதாவதில்லை!

* வரும் அக்டோபர் 2ம் நாள் கவிஞர் வைதீஸ்வரனின் படைப்பு வெளி குறித்து சென்னையில் ஒரு பாராட்டுக் கூட்டம் நடைபெற உள்ளது.


ramakrishnanlatha@yahoo.com

Series Navigation

லதா ராமகிருஷ்ணன்

லதா ராமகிருஷ்ணன்