அ… ஆ… ஒரு விமர்சனம்

This entry is part [part not set] of 28 in the series 20050916_Issue

கோவிந்த்


அன்னை மேரிமாதா வின் படம் வழங்கும் கிராபிக்ஸ் ஆசீர்வாதத்துடன் படம் தொடங்குகிறது.

அ ( சிங்கம் ) … ஆ(ஆன்மீகம் ) இரண்டும் சினிமாவில் ‘சூப்பர் ‘ நிலை கொள்பவர்களின் இரண்டும் கண்கள் என்பதுபோல் சூப்பர் இயக்குனர் சூர்யாவின் முதல்காட்சி நிரூபிக்கிறது.

அதன் முன் S.J.சூர்யா பற்றி…

தொழில் வித்தகத்தில் இன்று விரல் விட்டு எண்ணக்கூடிய தலையாய இயக்குனர்களின் ஒருவர். ஒளிவடிவமைப்பில் காட்சிகளை முழுமையாகத் தருவதில் தன்னிகரில்லாதவர்.

சாதாரண அலுவலக கடைநிலை உதவியாளராக இருந்து இன்று வெற்றிகர இயக்குனராக உயர்ந்துள்ளவர்.

தாள நயமுள்ள எடிடிங்குடன் காட்சிகளை அமைப்பதில் கில்லாடி. பாடல்காட்சிகளில் புதுமை புகுத்துவதில் முன்னோடிகளில் ஒருவர்.

அவரது தொழில் திறமைகளை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

இப்படத்தின் ஒளிப்பதிவாளருக்கு மிகப் பெரிய சபாஷ். பாச படைப்பென்றாலும் சிற்பியின் திறமை பளிச்சிடுகிறது.

அதுபோலவே சினிமாவில் அவரின் நிலைப்பாடு மற்றும் அவர் எந்த மாதிரி படங்கள் தர விரும்புகிறார் என்பதில் அவர் தெளிவாக உள்ளார்.

இந்தப் படத்தில் கூட, பிரிந்த கூடிவாழும் ( living together ) கதாபாத்திரங்களைச் சேர்ப்பிக்க, எண்ணங்கள் வடிவாக வரும் சூர்யா, மானிட சூர்யாவை எப்படி கவர்வது என்பதற்கு, எண்ணங்கள் நிலாவிடம் காதில் கிசுசிசுக்க, அவரோ.. ‘சீ… ‘ என்று சொல்ல, அதற்கு சூர்யா, ‘இந்த நாய்க்கு என்ன புடிக்குமுன்னு உலகுக்கே தெரியுமே… ‘ என்று நம்மை நோக்கி கையை காண்பிக்கிறார். தொடர்வது … காமஉச்ச கவர்ந்திழுக்கும் காட்சி….

இப்படியாக தனது சினிமா, காம உணர்வு சம்பந்தப்பட்டது என்று வெளிப்படையாக பிரகடனப்படுத்துகிறார். இந்த வசனத்திற்கு தியேட்டரே அதிரும் வண்ணம் கைத்தட்டலும், கூச்சலும் பொளந்து கட்டுகிறது. அச் சத்தம் எதிர்பார்த்து வந்த ரசிகர்களின் வழிமொழிதலாகவும் உள்ளது.

படத்தின் பல காட்சிகள் சூர்யாவின் வக்கிரப்புத்திக் கண்ணோட்டத்தை பளிச்சென்று காட்டுகிறது.

ஆனால், முன்பு பாக்யராஜ் வசனத்தின் மூலம் காண்பித்ததை சூர்யா , ஒளி வடிவமாக காண்பிக்கிறார்.

முன்பு, பாக்யராஜ் படத்தில் , ‘உங்க ஆப்பம் ஒன்றும் எங்களுக்குத் தேவையில்லை என்ற வசனங்களும், கமலஹாசன் – AVM – இளையராஜா சகலகலாவல்லவனில் ‘ம்ஹீம்.. .. …. .. ‘ என்று உடலுறவு சப்தங்களை பட்டிதொட்டிகளில் பரவச்செய்த சப்த ஓசையைத் தான் சூர்யா விஷீவலாகத் தொடர்ந்துள்ளார்.

ரஜினிகாந்தின் எல்லா படங்களிலும் ஜட்டி பாடிகளுடன் பெண்களை காம இச்சைப் பொருளாக பயன்படுத்துவதும், பெண்களை மட்டரகமாக சித்திரிப்பதும் அவர் தைரிய லஷ்மியிடம் கைகட்டி நிற்கும் காலம் தாண்டி தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.

நிலை இப்படியிருக்க…. சூர்யா மட்டுமே ஏதோ குற்றவாளி போல் கையாளப்படுவது வியப்புக்குரியது.

பின், யார் குற்றவாளி… ?

சந்தேகமில்லாமல் சென்சார் போர்டும் அதை பின்னிருந்து ஆட்டுவிப்பவர்களூம் தான்…

சில பாசகாட்சிகள் கரைபுரண்டு ஓடும் இந்தப் படத்திற்கு சென்சார் தந்துள்ளது ‘UA ‘ … இது தான் கண்டணத்திற்குரிய , விசாரணைக்குரிய ஒன்று.

இந்தப்படம் ‘X ‘ ரேட்டிங் தரப்படவேண்டிய படம். அல்லது குறைந்தபட்சம் ‘AA ‘ தரப்பட வேண்டிய படம்.

போன முறை ஆத்திரத்தில் செல் போனை விட்டெறிந்த சூர்யா, இந்த முறை அறிவுடன் விட்டெறிய வேண்டியதை விட்டெறிந்துள்ளார்.. UA ( ‘UA’ certificates (unrestricted public exhibition with parental guidance for children below the age of 12 yerars) ) கிடைத்துள்ளது.

சென்சாருக்கு சாதாரணமாக 12 வயது கீழ்க் குழந்தைகளைப் பெற்றோர் பார்க்க அனுமதிப்பதாகத் தெரிந்துள்ள காட்சிகள் சில…. கீழே..

1. பட ஆரம்பத்தில், ஒரு சாதாரண இறுக்க பனியனை போட்டு ஒரு பெண் வருகிறாள். அவளின் பின்னரே சில ரெளடிகள் இரு கையையும் நீட்டி பிசையும் அபிநயத்துடன் வருகின்றனர். அது கண்ட சூர்யா… அவர்களின் கையை முறுக்கி, பெண்களைப் பார்த்து, தொறந்து போட்டா இப்படித்தான் போ … போய் வேலியைப் போட்டுக்கோ… என்கிறார்.

தியேட்டர் அதிர்கிறது.

பெண்களும் படத்திற்கு வந்திருந்தனர்.

மாதர் சங்கங்கள் நிச்சயம் இந்த எதேச்சிகாரத்திற்கு ஏதேனும் செய்தல் வேண்டும்.

2. காலை விரித்து தரையில் அமர்ந்தபடி, நிலா மடிமேல் புகைப்பட ஆல்பத்தை திறந்து வைக்க. ஷோபாவில் அமர்ந்தவாறு புகைப்படங்களை அடுக்கிய சூர்யா, இதோ பார் ‘சொருகுகிறேன் ‘ என்றாவாறே நிலா காலை பரப்பி விரித்து மடிமேல் வைத்துள்ள ஆல்பத்தில் , சர்சர் என்று புகைப்படங்களை சொருகிறார். தியேட்டர் கத்தி கூச்சலிடுகிறது. நிலா தொடர்ந்து, ‘என்னங்க தலைகீழா சொருகீட்டாங்க… ‘ எனச்சொல்ல.. தியேட்டர் மீண்டும் அதிர்ந்து கூச்சலிடுகிறது. எல்லாம் ஆட்சேபித்தல்ல.. குஷாலில் தான்.

3. தொழிலில் பார்டனராக இருந்த தன் மனைவியை தன் நண்பன் தள்ளிக் கொண்டு போய்விட்டான் என்று ஒருவன் சோகமாயிருக்க, அதற்கு இன்னொருவன், அதாவது ‘கல் சூடாயிருக்கு என்று ஒருவன் தோசை சுட்டுவிட்டான் ‘ என்று சொல் என்கிறான்.

4. சூர்யா சேலை உடுத்த நிலாவிற்கு உதவும் காட்சியில் தொப்புளுக்கடியில் சேலைக்குள் கையை விட்டு விட்டு,, ‘சூடாயிருக்கு ‘ என்பது…

5. ஜீப்பை திற மூடு என்ற காமாந்தக நகைச்சுவைக் காட்சி….

அய்யா.. சென்சார் மக்களே… என்ன இதெல்லாம் சாதாரண குழந்தைகளுக்கு பார்க்க அறிவுருத்தும் சமாச்சாரமா… ? சொல்லுங்கப்பே….

இந்த நிலைத் தொடர்ந்தால் விரைவில் புளூ பிலிம்களை சென்சாரின் UA யுடன் தியேட்டரில் பார்க்கலாம்.

இப்படி பட்டியலிட பட்டியலிட…. நிறைய இருக்கு.

அப்புறம் அசிங்கங்களைப் பட்டியலிட அசிங்கங்கள் தான் இங்கும் மிஞ்சும்…

சென்சார் என்ன செய்கிறது என்று கலாச்சார உணர்வாளர்கள் சிந்திக்க வேண்டும். அது விடுத்து வெறும் இந்த மாதிரி வக்கிரப்புத்தி மனிதர்களை பிரயோஜனமின்றி வெறுமனே தாக்கினால் தொடர் தோல்வியே மிஞ்சும்.

நமது கடும் கண்டணத்தை சென்சாருக்குத் தெரிவிப்போம்.

அதும் போக, U UA ( PG ) A X XX XXX முறைகளில் சென்சார் வரட்டும் . இல்லையெனில் இந்த மாதிரி சென்சாரின் கயமைத்தனங்கள் தொடரும்.

பி.கு:

1. ஜிம் கெர்ரி, ரஜினி , சிவாஜி கணேசனையையும் கலந்து ஒரு நடிப்பு வடிவத்தை சூர்யா அழகாக பல இடங்களில் தந்துள்ளார்.

இவர் தன் மீது தானே ஒரு மரியாதை கொண்டால் தமிழுக்கு நல்ல பொழுது போக்குப் படைப்புகளைத் தர முடியும்.

2. சூர்யாவை FETNA போன்ற விழாக்களுக்கு அழைத்து மேடையேற்றுவது தவிர்த்தல் நன்று.

நாசமாகிப் போய் கொண்டிருக்கும் தமிழக கலாச்சாரத்தை அயல்நாட்டில் வாழும் தமிழர்கள் தான் பாதுகாக்க முடியும்.

அதற்கு அம்மாதிரி அமைப்புகள் இம்மாதிரி, ‘ காமக்கலைஞர்கள் ‘ புறக்கணித்தலே நலம்.

அதற்கு, ‘அ.. ஆ… ‘ பட ஆரம்பத்தில் நன்றி தெரிவிக்கப்படும் ‘ பால் பாண்டியன் USA ‘ போன்றவர்கள் தரமான படங்களுக்கு உதவி புரிதல் வேண்டும் என பணிவாக வேண்டுவோம்.

3. மேலும், படத்தில் எண்ணங்கள் வடிவாக வரும் சூர்யா, நிலா எப்போதும் ‘BLUE ‘ உடையில் வருவார்கள் என்கிறார். அவரின் எண்ணங்கள் ‘BLUE ‘ தொடர்பானது என்பதாலா என்பது நமக்குத் தெரியாது…

4. இன்று மாலை (12-09-05) மாலை முரசு செய்தி , ‘ஆபாச டைரக்டர் சூர்யா கைது ‘ ::: சூர்யாவே, இந்த அடைமொழி தான் தாங்கள் எதிர்பார்க்கும் கெளரவமா… ? சிந்தியுங்கள்.

::::கோவிந்த் ::::

gocha2004@yahoo.com

Series Navigation

கோவிந்த்

கோவிந்த்