வாழ்க்கைக் கவிஞன் வல்லிக்கண்ணன்

This entry is part [part not set] of 28 in the series 20050826_Issue

தேவமைந்தன்


1974-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், சி.சு. செல்லப்பா ‘அமரவேதனை ‘ என்றொரு கவிதைத் தொகுப்பு வெளியிட்டார். அதன் ஆசிரியர் வல்லிக்கண்ணன். அச்சிட்டவரும் கவிஞரே. சென்னையில் அச்சகம் வைத்த காரைக்குடிக் கவிஞர் நாரா. நாச்சியப்பன். என் நினைவு தவறாயின் நண்பர்கள் திருத்தலாம்.

திருவல்லிக்கேணி பிள்ளையார் கோயில் தெருவில் ‘எழுத்து பிரசுரம் ‘ இருந்தது. வெளியிட்ட நூல்களைத் தோள்பையில் சுமந்து கொண்டு சென்று, ஒவ்வொரு பள்ளிக்கும் தனிமனிதருக்கும் நேரடியாக விற்பனை செய்து வந்தார் செல்லப்பா. அதன் விரிவு இங்கு வேண்டாம்… மூன்று ரூபாய் விலையிட்டார் ‘அமரவேதனை ‘ தொகுப்புக்கு.

1942-ஆம் ஆண்டு முதலே வாழ்க்கைக் கவிதைகள் வடித்த சிற்பி வல்லிக்கண்ணன் அவர்களின் 1960-க்குப் பிந்திய கவிதைகள் முப்பத்தைந்து, அதில் இடம் பெற்றன.

‘எழுத்து ‘ ‘செளராஷ்டிர மணி ‘ ‘சிவாஜி ‘ முதலான இதழ்களில் வெளிவந்தவை அவை. பல புனைபெயர்களுக்குள் தம்மை மறைத்துக் கொண்டு கவிதைகள் படைத்தார் வல்லிக்கண்ணன்.

1962-இல் ‘ ‘விதி ‘ ‘ என்ற கவிதையைப் படைத்தார். அதே ஆண்டில் ‘ ‘வாழ்க்கை ‘ ‘ என்ற கவிதையையும் படைத்திருந்தார். ‘அமர வேதனை ‘ தொகுப்பில் அவை தட்டாமல் இடம் பெற்றன. அவற்றைப் பார்ப்போமா ?

விதி

நடந்தே கழியணும்

வழி;

கொடுத்தே தீரணும்

கடன்;

செய்தே அழியணும்

வேலை;

அழுதே ஓழியணும்

துக்கம்;

வாழ்ந்தே முடியணும்

வாழ்வு;

இதுவே உலகின் நியதி.

(1962)

வாழ்க்கை

முதலும் முடிவும்

காண முடியாக்

கருங்குகை வழியோ

வாழ்க்கை ?

அதனுள் சிக்கிய

அப்பாவிப் பிராணியோ

மனிதன் ?

திறக்கும் கதவும்

மூடும் கதவும்

உணர்வில் புரியா

இருட்டறை தானா

வாழ்க்கை ?

அதனுள் ஓடும்

கறுப்புப் பூனையை

தேடித் திணறும்

குருடனா மனிதன் ?

எட்டாத விண்ணோக்கி ஏங்கி,

கவலைச் சுமையால் குனிந்து,

மண்ணைப் பார்த்து மூச்செறிந்து,

காலப் பாழில் அடிபதியா தழியும்

அர்த்தமில் பயணியோ மனிதன் ?

அவனை வருத்தும்

தண்டனை தானோ வாழ்க்கை ?

(1962)

‘அமர வேதனை ‘ என்ற தொகுப்புத் தலைப்பிற்குரிய க விதை 1972-இல் வெளிவந்தது. ‘ ‘மனிதர் மனிதம் மறந்தது கண்டு ‘ ‘ புத்தன், இயேசு, காந்தி, சாக்ரடாஸ், லிங்கன் முதலானோரின் ஆத்மாக்கள் அமைதியற்றுத் தவிக்கின்றன என்றென்றும்…

என வல்லிக்கண்ணன் அதில் உணர்த்தியது தன் உள்ளக் குமுறலைத்தான்.

‘ ‘உங்கள் வாழ்க்கையைத் தத்துவப்படுத்திக் கொண்டே அதை வாழ்ந்துவிடவும்

முடியாது ‘ ‘ என்று தோன் ஜெரால்ட் குறிப்பிட்டதும், பொதெலேர் ‘ ‘வாழ்க்கை ஒரு மருத்துவ மனை; அதில் படுத்திருக்கும் ஒவ்வொரு நோயாளிக்கும் ஓர் ஆசை வரலாம்: அது, தான் படுத்திருக்கும் படுக்கையை எப்படியாவது மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதாகத்தான் இருக்கலாம் ‘ ‘ என்று கிண்டலடித்ததும் ஏனோ இப்பொழுது என் நினைவுக்கு வருகின்றன.

—-

pasu2tamil@yahoo.com

Series Navigation

தேவமைந்தன்

தேவமைந்தன்