இருளும் சுடரும் – (தமஸ் – மொழிபெயர்ப்பு நாவல் அறிமுகம் )

This entry is part [part not set] of 23 in the series 20050805_Issue

பாவண்ணன்


(தமஸ் – மொழிபெயர்ப்பு நாவல் அறிமுகம் )

தமஸ் என்னும் இந்திச்சொல்லின் பொருள் இருள். நாவலை வாசித்து முடித்ததும் இருள் தொடர்பான பல அம்சங்கள் மனத்தில் அலைமோதுகின்றன. முதலில் தோன்றுவது மானுட மனத்தில் மண்டியிருக்கும் அறியாமை என்னும் இருள். இது நம் தேசம், இங்கு வாழ்பவர்கள் அனைவரும் நம் மக்கள், நாம் அனைவரும் ஒரு தாய் மக்களாக இணைந்து வாழ்வதில் மதம் என்பது ஒருபோதும் தடையாக மாறி நிற்கக்கூடாது என்னும் உண்மையை அறிந்துகொள்ள முடியாத அறியாமை. அடுத்துத் தோன்றுவது வெறப்பு என்னும் இருள். காலம்காலமாக உடன்பிறவாச் சகோதரர்களாக பழகியவர்கள் ஏதோ ஒரு காரணத்துக்காக தம் நெஞ்சில் நிரப்பிக்கொள்ளும் வெறுப்பு. இப்படி தொடர்ந்து பல உண்மைகள் தோன்றுகின்றன. தன்னலம் என்னும் இருள். கொலைவெறி என்னும் இருள். அன்பின்மை என்னும் இருள். மதவெறி என்னும் இருள். பொறாமை என்னும் இருள். எரிச்சல் என்னும் இருள். இப்படி மானுட மனத்துக்குள் ஒளிந்திருக்கும் பல இருள் புள்ளிகளை இந்நாவல் தன் போக்கில் கண்டடைகிறது. இந்த இருள் அப்பாவிகளைத் தீயவர்களாக்குகிறது. நண்பர்களைப் பகைவர்களாக்குகிறது. நல்லவர்களைக் கொலைகாரர்களாக்குகிறது. இவ்வளவு இருட்டுக்கிடையேயும் மனிதப் பண்புகளை இழக்காத ஏழை மக்கள் எல்லா இடங்களிலும் சின்னச்சின்ன தீபங்களாக சுடர்விடுவதையும் நாவல் கண்டடைகிறது. இருளையும் சுடரையும் அருகருகே கண்டடையும் தருணம் நாவலில் எழுச்சி மிகுந்த தருணமாக அமைந்திருக்கிறது. முற்றிலும் இருள் கவிந்துவிட்டதாக எண்ணி அஞ்சுவது பேதைமையாகிவிடும். எங்கெங்கும் சுடர் ஒளிர்ந்து உலகமே அன்புமயமாகி மாறிவிட்டதாக எண்ணிக்கொள்வதும் கற்பனையாகி விடக்கூடும். ஒன்றையடுத்து ஒன்று அமைவதே இந்த மண்ணில் குறைந்தபட்ச சாத்தியமாக உள்ளது. பற்பல நுாற்றாண்டுகளாக பல சாதியினரும் மதத்தினரும் சகோதரர்களாக சேர்ந்து வாழ்ந்து பழகிய இந்த மண்ணில் மானுடம் இன்று இருள் அல்லது சுடர் இரண்டில் எதைத் தழுவி நிற்கிறது அல்லது எதை நோக்கிப் பயணப்படுகிறது என்பதுதான் நாவலில் ஆதாரமான கேள்வியாகத் திரண்டு நிற்கிறது. எழுதப்பட்டு முப்பது ஆண்டுகள் கடந்த நிலையிலும் இந்தக் கேள்வியில் பெருகியிருக்கும் அழுத்தம் இந்த நாவலின் மக்கியத்துவத்தை மேலும் கூட்டுகிறது. இந்தி எழுத்தாளரான பிஷ்ம சாஹ்னி சாகித்திய அகாதெமி விருது பெற காரணமாக இருந்த இப்படைப்பை தமிழில் மொழிபெயர்த்திருப்பவர் வெங்கட் சாமிநாதன். தெளிவான, படிக்கத் துாண்டும்படியான சிறப்பான நடையில் மொழிபெயர்த்திருக்கும் வெங்கட் சாமிநாதனுக்குத் தமிழ் வாசக உலகம் கடமைப்பட்டுள்ளது.

நாவல் நிகழும் காலம் இந்திய சுதந்தரப் போராட்டத்தின் இறுதிக்கட்டம். பாகிஸ்தான், இந்தியா என இரண்டு பிரிவாக நாடு துண்டாகிப் பிரிவதைத் தவிர வேறு வழியில்லை என்னும் குரல்கள் தேசம் முழுக்க ஓங்கி ஒலித்துக்கொண்டிருந்த காலம். ஆங்கில அரசு அதிகாரிகள் இந்தியவர்களின் மத விவகாரங்களில் தலையிடுவதில்லை என்னும் நிலைபாட்டின்படி ஒதுங்கி நின்று மதங்களிடையே பகைமை ஊறிப் பெருக மறைமுகத் துாண்டுகோலாக இயங்கிக்கொண்டிருந்த காலம். சுதந்தர விழிப்புணர்ச்சியூட்ட மக்களைத் திரட்டி கூட்டம் நடத்துவதற்காக இயக்கத்தவர்களை தடியடியாலும் துப்பாக்கிச் சூட்டாலும் கலைத்துச் சிதறடிக்கிற ஆங்கில அரசாங்கம் மதக் கலவரங்களால் அங்கங்கே கிராமங்கள் எரிந்து சாம்பலகாகிக் கொண்டிருந்த போதும் மனித உடல்கள் வாழைமரங்களைப்போல வெட்டி வீழ்த்தப்பட்டபோதும் தடுப்பதற்கான எந்த நடவடிக்கைளிலும் இறங்காமல் இலட்சியப் போர்வை போர்த்தி நாடகம் ஆடிக்கொண்டிருந்த காலம். ஒரு சில பக்கங்களுக்கு நீளும் கூர்மையான சித்தரிப்பு வழியாகவே அக்காலத்தின் தீவிரத்தை வாசகர்களின் மனத்தில் பதிய வைத்துவிடுகிறார் பீஷ்ம சாஹ்னி.

பஞ்சாபில் ஒரு சின்ன ஊரில்தான் நாவலின் சம்பவங்கள் நடைபெறுகின்றன. மிகச் சாதாரண கிராமம் அது. முஸ்லிம் மதத்தினர் குடியிருக்கும் பகுதியிலேயே இந்துக்களும் இந்துக்களின் குடியிருப்புக்கு நடுவிலேயே முஸ்லிம்களும் வீடுகட்டிக்கொண்டு பேதமின்றி வாழ்கிற கிராமம். காங்கிரஸ், கம்யூனிச இயக்கங்களின் தாக்கம் அந்தக் கிராமத்திலும் பரவியிருக்கிறது. விடுதலையை முன்வைக்கும் குரல்களாக அவற்றின் செயல்பாடுகள் உள்ளனவே தவிர எந்த இடத்திலும் பிரிவினையுணர்வையோ வெறுப்பையோ ஊட்டும் அளவுக்குத் தாழ்வதில்லை. எல்லா இயக்கங்களிலும் எல்லா மதத்தினரும் இணைந்தே செயல்படுகிறார்கள். இந்த இயக்கங்களின் செயல்பாடுகளையும் மீறி தேசம் முழுக்க எதிரொலிக்கும் பிரிவினைக் குரலும் மத வெறுப்பும் அக்கிராமத்திலும் நுழைந்துவிடுகிறது. வன்முறையின் வழியாக மதங்களைக் காப்பாற்றும் போர்வையில் சின்னச்சின்ன குழுக்கள் பல தோன்றுகின்றன. கொலைவெறி இளைஞர்கள் நடுவே பரப்பப்படுகிறது. கோழியை ஒரே வெட்டில் துண்டாக்கிக்காட்டி கொலைக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. கத்தியையும் ரத்தத்தையும் பார்த்தும் திடம் குலையாதவனாக உறுதியுடன் நிற்பவனே குழுவின் சிறந்த சீடனாகிறான். சிறந்த சீடன் மிகச்சிறந்த சீடனாக மாறுவதற்காக மனிதக்கொலைகள் நிகழ்த்துகிறான். அணைக்கமுடியாத ஒரு நெருப்பைப்போல வன்முறைக்கு சிறுகச்சிறுகப் பலியாகிறது கிராமம். எங்கெங்கும் கொலைகள். கொள்ளைகள். மக்கள் கூட்டம்பட்டமாக ஊரைவிட்டு வெளியேறுகிறார்கள். வன்முறையின் கணம் வசதி மிக்கவர்களை ஏழைகளாக்குகிறது. ஏழைகளை ஆண்டிகளாக்குகிறது. நாடோடிகளாக்குகிறது. பிழைக்க வழிதேடி இலக்கின்றி அலையவைக்கிறது.

மொத்த நாவலிலும் நிகழ இருக்கும் வன்முறைகளையும் விளைவுகளையும் படிமப்படுத்துவதைப்போல நாவலின் முதல் காட்சி அமைந்துள்ளது. பீஷ்ம சாஹ்னியின் கலை ஆளுமைக்கு எடுத்துக்காட்டான காட்சி அது. அக்காட்சியில் ஒரு குடிசை இடம்பெறுகிறது. இருள். மண்விளக்கின் வெளிச்சத்தில் ஒரு மனிதன் அக்குடிசைக்குள் ஒரு பன்றியைக் கொல்ல முயற்சி செய்கிறான். அப்பன்றிக்கும் அவனுக்கும் எவ்விதமான பகையும் இல்லை. எவ்விதமான தொடர்பும் இல்லை. எஞ்சிய பழத்தோலின் வாசனையைப் பின்பற்றி குடிசைக்குள் தவறுதலாக நுழைந்தது அடைபட்டுவிடுகிறது பன்றி. உணவை எதிர்பார்த்து வந்த இடத்தில் மரணம் காத்திருக்கிறது அதற்கு. யாருக்காகவோ வேண்டுமென யாரோ பணம் கொடுத்து ஆசைகாட்டியதால் அக்கொலையைச் செய்கிறான் அவன். கொன்றபிறகு ஒரு கணம்கூட அக்குடிசைக்குள் அவனால் இருக்கமுடியவில்லை. குற்ற உணர்ச்சியின் தாக்கத்தால் குடிசையைவிட்டு வெளியேறிவிடுகிறான். அதற்கடுத்த காட்சிகளில் மதக்கலவரங்கள் நிகழும் தெருக்கள் சித்தரிக்கப்படுகின்றன. கொல்பவனுக்கும் கொல்லப்படுவனுக்கும் இடையே எவ்விதமான நேரடிப்பகையும் இல்லை. துாண்டப்பட்ட விலங்குகளைப்போல அவர்கள் செயல்படுகிறார்கள். அவர்கள் ஆவேசத்தை மேலும்மேலும் கூர்மைப்படுத்தித் துாண்டுவதற்காகவே மதத்தின் பெருமைஅ ல்லது மதத்துக்கான தியாகம் போதிக்கப்படுகிறது. கொலைக்குப் பின்னாலிருக்கும் அர்த்தமின்மை ஒவ்வொரு கட்டத்திலும் வாசிப்பவர்களின் மனத்தில் அழுத்தமாகப் பதியும்படி அமைக்கப்பட்டுள்ளது.

நாவலில் மறக்க முடியாத ஒரு கொலை வளையல்கார முஸ்லிம் கிழவரின் கொலை. நாலு தெரு சுற்றி நாலு இடங்களில் வளையல்களை விற்றுப் பிழைப்பதற்கு வழிதேடுகிறவர் அவர். கலவரமென்று நாள்கணக்கில் வீட்டுக்குள் முடங்கிப்போனால் வயிற்றுப்பாட்டுக்கு வழியில்லை என்கிற எண்ணத்தாலும் காலம்காலமாக தன்னோடு உயிருக்குயிராகப் பழகியவர்கள் வாழும் தெருக்களில் தனக்கு எவ்விதமான ஆபத்தும் வராது என்கிற ஆழ்ந்த நம்பிக்கையாலும் நடந்து செல்கிாறர் கிழவர். கொலை ஆயுதத்தை மறைத்து எடுத்துக்கொண்டு உடன்நடக்கிற இளைஞனுடன் உள்ளார்ந்த நம்பிக்கையோடும் அன்போடும் பேசிச் சிரிக்கிறார் அவர். எதிர்பாராத கணத்தில் ஆயுதத்தை கிழவரின் வயிற்றில் பாய்ச்சிவிடுகிறான் இளைஞன். கொல்லப்பட்டதை நம்ப முடியாதவராக அச்சத்தோடும் அதிர்ச்சியோடும் உறைந்து தரையில் சாய்கிறார் கிழவர். கிட்டத்தட்ட , முதல் காட்சியில் பன்றி வீழ்த்தப்பட்டதைப்போல.

மனிதர்களிடம் மிருககுணம் வெளிப்படும் பல காட்சிகள் நாவலில் இருந்தாலும் முக்கியமான ஒரு காட்சியைப்பற்றிச் சொல்லத் தோன்றுகிறது. ரம்ஜானாவும் நுாருத்தீனும் மற்ற முஸ்லிம்களும் சீக்கிய இளைஞன் ஒருவனைத் துரத்திக்கொண்டு ஓடுகிாறர்கள். துரத்தப்பட்டவன் உயிர் பிழைப்பதற்காக ஒரு குகைக்குள் இறங்கி ஒளிந்துகொள்கிறான். மேலே நின்றபடி மற்றவர்கள் கற்களை குகைக்குள் தொடர்ந்து வீசியபடி இருக்கிறார்கள். பன்றியை அடிப்பதைப்போல.

தன்னலம் செயல்படும் விதத்தை கச்சிதமாகச் சித்தரிக்கும் காட்சியொன்று மறக்கமுடியாத விதத்தில் எழுதப்பட்டுள்ளதைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். தெருமுனைக் கூட்டத்தை முடித்துக்கொண்டு காங்கிரஸ் இயக்கத்தினர் திரும்பிக்கொண்டிருக்கும் காட்சி அது. ஊரின் மறுமுனையில் கலவரம் பரவத் தொடங்கிவிட்ட செய்தி அப்போதுதான் அவர்களுக்குக் கிடைக்கிறது. அந்த இடத்தைவிட்டு உடனடியாகக் கிளம்பி அவரவர்களும் தத்தம் வீடுகளை நோக்கிக் கிளம்புகிறார்கள். ஒருவர் ஓடுகிறார். இன்னொருவர் நடக்கிறார். ஒரு முஸ்லிம் நண்பர் இன்னொரு இந்து நண்பரின் தோளைப் பிடித்தபடி நடக்கிறார் ஒரு இந்து நண்பர் இன்னொரு முஸ்லிம் நண்பரின் கைகளைப் பற்றியபடி நடக்கிறார். அவர் குடியிருப்பில் இவர் வீடும் இவர் குடியிருப்பில் அவர் வீடும் இருப்பதுதான் காரணம். அப்போது வாகனத்தில் ஏறி வீட்டுக்குத் திரும்பும் ஒருவரோடு சேர்ந்துகொள்கிறார் ஒருவர். மற்றவர்களும் ஏறிக்கொள்ள இடம் தரக்கூடும் என்று நினைத்துக்கொண்டிருக்கும்போதே வண்டி கிளம்பிவிடுகிறது. தன்னோடு வந்தவர்களைத் தவிக்கவிட்டுத் திரும்பியது மிகப்பெரிய சுயநலமென்று மனக்கூச்சம் கொள்கிறார். வண்டியிலிருந்து குதித்துவிடவேண்டும் என்று நினைக்கிறார். மற்றவர்களோடு நடந்தே வரவேண்டும் என்றும் நினைக்கிறார். எல்லாமே எண்ணங்கள்தாம். ஆனால் அவர் கால்கள் வண்டியிலிருந்து இறங்கவே இல்லை. தன் சொந்தப் பாதுகாப்பே பிரதானமான நிலையில் மனம் செயல்படும் விதம் விசித்திரமாக உள்ளது.

நாவலில் இடம்பெறும் பெண்பாத்திரங்கள் குறிப்பிடத்தக்கவர்களாக இருக்கிறார்கள். கதவைத்தட்டி அபயம் கேட்கும் சீக்கியக் கிழத் தம்பதியினருக்கு மகன், கணவனுடைய குணத்தைப்பற்றித் தெரிந்திருந்தும் கூட உணவும் மறைவிடமும் வழங்கும் முஸ்லிம் மாது ராஜோ மகத்தானவள். பன்றியின் கொலைக்கும் ஊரில் பரவிவிட்ட கலவரத்துக்கும் தனக்கும் ஏதோ ஒரு விதத்தில் தொடர்பைக் கற்பனை செய்துகொண்டு மனச்சமநிலை இழந்து திரியும் நத்துவைத் தன் அன்பாலும் ஆதரவாலும் தேற்றி மீட்டெடுக்க முனையும் அவன் மனைவி குறிப்பிடத்தக்கவள். எரியும் கலவரத்தை அடக்கவோ நிறுத்தவோ சற்றும் முயற்சி செய்யாத அதிகாரியான தன் கணவனைப் பார்த்து தன் அப்பாவித் தனமான கேள்விகளால் நிலைகுலையச் செய்யும் லிஸாவின் இயல்பான எழுச்சி சிறந்த சித்தரிப்புத் தன்மையால் மனத்தில் அழுத்தமாகப் பதிந்துவிடுகிறது. அவளுடைய உரையாடலின் நீட்சியாகவே அந்த ஆங்கில அதிகாரியின் ஒப்புதல் வாக்முலமாக இது என் நாடுமல்ல, இவர்கள் என் மக்களுமல்ல என்னும் வார்த்தைகள் வந்துவிழுகின்றன.

கலவரத்தைத் தொடர்ந்து பல தளங்களில் கதை மாறிமாறி தடம்பதிக்கிறது. உயிர்ச்சேதங்களும் பொருள்சேதங்களும் ஒருபுறம். உயிரைக் காப்பாற்றிக்கொள்ள இடம்விட்டு இடம்பெயரும் கூட்டம் மறுபுறம். துாதுக் கோஷ்டிகளுக்கும் அரசு அமைப்புக்கும் இடையே நிகழும் உரையாடல் ஒருபுறம். விடப்பட்டுச் செல்லும் வீடுகளைக் குறைந்த விலையில் வாங்கிச் சொத்து சேர்க்கும் ஆட்களின் திட்டங்கள் இன்னொரு புறம். நஷ்டக்கணக்கு எடுக்கவரும் குழுக்கள் பதிந்துசெல்லும் விவரங்கள் மற்றொரு புறம். எல்லாவற்றுக்கும் இடையே கலவரத்தைக் காரணமாகப் பயன்படுத்திக்கொண்டு வெகுகாலமாக ஆசைப்பட்டிருந்த வேற்றுமத இளம்பெண்ணொருத்தியைத் துாக்கிவந்து மணந்துகொள்ளும் சம்பவமும் நடந்தேறுகிறது. உயிர்த்திருக்கும் ஆசைக்கும் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள முடியாத கலவரங்களுக்கும் இடையே ஒடுங்கிப்போகிறது மானுடம். இருளுக்கும் சுடருக்கும் இடையே பயணம் செய்யும் திசையைத் தீர்மானிக்க இயலாத தடுமாற்றத்தில் தவிக்கிறது.

( தமஸ் -மொழிபெயர்ப்பு நாவல். இந்தி மூலம்: பீஷ்ம சாஹ்னி. தமிழில்: வெங்கட் சாமிநாதன். சாகித்திய அகாதெமி வெளியீடு, விலை. ரூ180)

paavannan@hotmail.com

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்