மானுட வாழ்வின் ஆனந்தம்-( வெளி ரெங்கராஜனின் ‘இடிபாடுகளுக்கிடையில் ‘ -கட்டுரைத் தொகுதி அறிமுகம்)

This entry is part [part not set] of 30 in the series 20050715_Issue

பாவண்ணன்


முப்பது தலைப்புகளில் வெவ்வேறு தளம்சார்ந்து கடந்த சில ஆண்டுகளில் வெளி.ரெங்கராஜன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக இந்த நூல் வெளிவந்துள்ளது.

குஜராத் பூகம்பத்தைத் தொடர்ந்து மனிதர்களிடையே பெருகிய பரிவையும் நேசத்தையும் பகிர்ந்து கொள்கிறது ஒரு கட்டுரை. தடைசெய்யப்பட்டுவிட்ட கர்பா நடனத்தின்மீது குஜராத் கிராமத்துப் பெண்களுக்கு இருந்த அளவுகடந்த ஈடுபாட்டை முன்வைக்கிறது இன்னொரு கட்டுரை. ஒரு பத்திரிகை நிரூபரின் தற்கொலைக்காகப் பரிவு காட்டாத உலகத்தின் அலட்சியம், தாய்மொழிக்கல்வியின் அவசியம், நகுலன், கோபிகிருஷ்ணன், தி.ஜானகிராமன் போன்றோரின் இலக்கியப் படைப்புகள் தந்த வாசிப்பனுவபங்கள், அவ்வப்போது நிகழ்த்தப்படுகிற கூத்துகள், நாடகங்கள், ஆய்வரங்குகள் ஆகிய நிகழ்வுகள் ஊட்டிய சிந்தனைகள் என விதம்விதமான தளம்சார்ந்தவையாக கட்டுரைகள் உள்ளன.

ரெங்கராஜன் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இலக்கிய உலகுடன் தொடர்பு கொண்டவர். தன் பார்வைக்கும் வாழ்க்கைக்கும் உள்ள உட்பட்ட ஒவ்வொன்றைப்பற்றியும் தனக்கென சொந்தமான ஒரு பார்வைக்கோணத்தை வெளிப்படுத்துபவர். இவருடைய பார்வைக்கோணங்களே வெவ்வேறு சாந்தர்ப்பங்களில் கட்டுரைகளாக மாறுகின்றன. ஒருவகையில் அனைத்துமே சமூகவாழ்க்கையை ஒட்டி இவர் நிகழ்த்தும் எதிர்வினைகள் என்றுதான் சொல்லவேண்டும்.

ரெங்கராஜன் மனம் இயங்கும் தளத்தையும் எதிர்பார்ப்புகளையும் இக்கட்டுரைகள் மறைமுகமாகச் சுட்டியபடியே உள்ளன. தொகுப்பின் மிகமுக்கியமான கட்டுரை ‘நாடகத்தில் சாத்தியப்படும் உறவு நிலைகள் ‘. எல்லாக் கலைகளும் அடிப்படையில் மனிதர்களை மகிழ்விக்கவும் மனித மனத்தை உற்சாகப்படுத்தவும் மனிதனின் படைப்புணர்வையும் ஆற்றல்களையும் வெளிப்படுத்தவுமே தோன்றியவை. கலையாக்கத்தின் மூலமாக கலைஞன் வெளிப்படுத்தும் உணர்வுகளும் பார்வைகளும் பார்வையாளனை வசப்படுத்தி தமக்குரியவனாக தகவமைக்கின்றன. இந்தப் பகிர்தலில் வலிமை கூடும்பொழுதுதான் கலைக்கும் பார்வையளானுக்குமிடையே பலவித உறவுநிலைகள் சாத்தியமாகிறது. மேலான அந்த அனுபவத்தின் பின்னணியில் அவன் ஆழ்மனத்தில் உறைந்திருக்கும் எல்லா உணர்வுகளும் மறு ஆக்கம் கொள்கின்றன. புதிய வெளிச்சத்தில் அவை வேறொன்றாகத் தோற்றமளிக்கின்றன. அவன் கற்பனைகள் எல்லையின்மையை நோக்கி மெல்ல சிறகு விரிக்கத் தொடங்குகின்றன. மறக்க முடியாதவையாக மனத்தில் ஆழப் பதிந்துவிட்ட காட்சிகளையும் பாடல்களையும் எடுத்துக்காட்டி இந்த உறவுகளின் வலிமையை விவரிக்கிறார் ரெங்கராஜன். நிகழ்கலையில் சாத்தியமாகும் இந்த உறவுநிலைகள், வாசிப்பிலும் சாத்தியப்படுவதுண்டு. கோபி கிருஷ்ணன், தி.ஜானகிராமன் எனப் பல கலைஞர்களின் படைப்புகளை முன்வைத்து அவர் எழுதிய கட்டுரைகளும் இதற்கு எடுத்துக்காட்டுகளாகவே உள்ளன.

ஒரு பார்வையாளனாக மிக முக்கியமான விஷயங்களை வாசகர்களின் கவனத்துக்குக் கொண்டுவருபவராக இருக்கிறார் ரெங்கராஜன். ‘விளையாட்டின் உலகங்கள் ‘ என்னும் கட்டுரையில் தற்செயலாக இடம்பெறும் இரு குறிப்புகள் முக்கியமானவை. ‘ஒரு கால்பந்து போட்டியின்போது வெற்றி தோல்விகளைத் தீர்மானிக்கக்கூடிய பெனால்டி கார்னர் வாய்ப்புகளைத் தவறவிட்ட வருத்தத்தில் ஒரு அணியின் கேப்டன் திகைத்து நின்றிருக்கும்போது எதிர்அணியின் கேப்டன் மனம் தளரவேண்டாம் என அவனைத் தேற்றுகிறான் ‘ என்பது ஒரு குறிப்பு. ‘பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே நிகழ்ந்த கிரிக்கெட் போட்டியின் கடைசி ஆட்டத்தில் பாகிஸ்தான் தோல்வி அடைந்ததும் அணிக்கேப்டனான இம்சமாம் உல்ஹக்கின் முகத்தில் படர்ந்திருந்த அமைதியின் களை வசீகரமாக இருந்தது ‘ என்பது மற்றொரு குறிப்பு. இக்குறிப்புகள் வழியே நாம் கற்றுக்கொள்ள ஏராளமான விஷயங்கள் உள்ளன. முடிவின் நிச்சயமின்மைதான் விளையாட்டுக்கு ஓர் ஆர்வத்தைத் தருகிறது. பலவிதமான கணக்குகள் ஒவ்வொருவர் மனத்திலும் சுழன்றபடியிருக்க, வெற்றி தோல்விகள் மாறிமாறி இடம்பெயர்ந்தபடி இருக்கும். உண்மையில் விளையாட்டில் ஈடுபட்டிருப்பவர்களை இந்த வெற்றி தோல்விகள் அதிகம் பாதிப்பதில்லை. வெற்றியும் தோல்வியும் தற்செயலானவை. அவ்வளவுதான். விளையாட்டில் உண்மையான திளைப்பே ஆட்டக்காரனுக்கு அளவற்ற ஆனந்தம் தருகிறது. இந்தத் திளைப்பு சாத்தியமானதாலேயே இன்சமாம் அமைதிக்களையோடு நிற்க முடிகிறது. விளையாட்டு மட்டுமல்ல, இலக்கியம், நாடகம், கூத்து, இசை என கலைசார்ந்த துறைகளாக இருந்தாலும் சரி, வாழ்க்கையாக இருந்தாலும் சரி, இந்தத் திளைப்பு முக்கியம். இத்திளைப்புதான் மானுட வாழ்வில் எஞ்சியிருக்கும் ஒரே ஆனந்தம். ஒன்று நம்மைக் கடந்துபோக அனுமதித்தபடி நாமே உடகமாக நின்றிருக்கும் ஆனந்தம். இக்கட்டுரைத் தொகுப்பில் எல்லா இடங்களிலும் ரெங்கராஜன் பல இடங்களில் பல்வேறு பெயர்களில் இந்த ஆனந்தத்தைச் சுட்டிக் காட்டுகிறார்.

எனி இந்தியன்.காம் இணையதளத்தில் இந்த புத்தகத்தினை வாங்க

(இடிபாடுகளுக்கிடையில் – வெளி ரெங்கராஜன். காவ்யா வெளியீடு. 14, முதல் குறுக்குத் தெரு, டிரஸ்டுபுரம், கோடம்பாக்கம், சென்னை-24, விலை ரூ80)

paavannan@hotmail.com

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்