உலகத் தமிழ் அடையாளமும் மலேசிய, சிங்கப்பூர் இலக்கியமும்-ஓர் எதிர்வினை

This entry is part of 32 in the series 20050623_Issue

தமிழவன்


என் கட்டுரைக்கான (திண்ணை, ஜூன் 3)சுப்பிரமணியன் ரமேஷ் மற்றும் ரே.கார்த்திகேசு கருத்துக்களைப் படித்தேன்.(திண்ணை, ஜூன் 17)அவர்களின் எதிர்வினையை மதிக்கிறேன். ஆனால் என் பார்வைகளுக்கான முகாந்திரம் இவை:

நான் இலங்கையிலிருந்தும் உலகின் பிற பகுதிகளில் இருந்தும் வரும் தமிழ் இலக்கியம் பற்றித் தெரிந்து கொள்வது தமிழகச் சிறு பத்திரிகை மூலம்.அல்லது சிறுபத்திரிகை இயக்க ஆற்றலோடு தொடர்புடையவர்கள் மூலம்.மலேசிய, சிங்கப்பூர் இலக்கியம் பற்றி சிறுபத்திரிகைகள் நான் அறிந்த அளவில் என் கவனத்தை ஈர்த்ததில்லை.எந்தச் சிங்கப்பூர் படைப்பு, மற்றும் படைப்பாளி பற்றியும் சீரிய விவாதம் ஏதும் நான் மதித்த சிறு பத்திரிகைகளில் வந்ததில்லை. சிங்கப்பூர்,மலேசியத் திறனாய்வாளர்கள் இன்னார் இன்னார் என்று யாரும் சொல்லக் கேட்டதில்லை.சிங்கப்பூர்,மலேசிய நாடக ஆசிரியனோ,சிறுகதை ஆசிரியனோ,நாவலாசிரியனோ தமிழக அல்லது இலங்கை எழுத்தாளர்களை விடச் சிறப்பாக எழுதுகிறார்கள் என்று யாரும் ஒரு விவாதத்தைச் சிங்கப்பூரிலிருந்தோ மலேசியாவிலிருந்தோ சொன்னதில்லை.அப்படி ஒரு கட்டுரையோ, நூலோ வந்திருந்தால் நான் அவற்றைப் படிக்க ஆவலாக இருக்கிறேன்.அப்படி விவாத பூர்வமாக இலக்கியத் தர்க்கத்தைப் பயன்படுத்தித் தற்கால இலக்கியத்தில் எழுதும் திறமை அங்கு யாருக்கும் இருப்பதாக நான் கருதவில்லை.ஒரு கைலாசபதி அளவுள்ள நாவல் பற்றிய நூல் இந்த நாடுகளில் இருந்து வந்ததில்லை.அங்கிருந்த சுப்பையா போன்ற பேராசிரியர்கள் பழைய இலக்கியத்தில் தமிழகத்தாரைவிட தகுதியுடையவர்கள். நான் மறுக்கவில்லை.ஆனால் தற்கால இலக்கியத்தில் சிவத்தம்பி போலவோ கைலாசபதி, நுக்மான் போலவோ கனகசபாபதி போலவோ அல்லது இப்போதுள்ள க.பஞ்சாங்கம்,ராஜ்கொதமன் போல யாரும் அங்கு இல்லை என்று கருதுகிறேன்.அப்படி யாரும் இருந்தால் சிறுபத்திரிகை கொண்டுவந்து எனக்குக் கொடுத்திருக்கும். இவர்கள் எல்லாம் தமிழ்ப் பேராசிரியர்கள்.பேராசிரியர் அல்லாத எழுத்தாளர்களுக்கு வருகிறேன்.திரு கார்த்திகேசு கூறுவதைப் போல சுந்தரராமசாமி,மற்றும் திலிப் குமார் இருவரும் சொல்லும் கருத்தில் எனக்கு ஈடுபாடு உண்டு.அவர்கள் தமிழகத்தை விட இந்தத் துறையில் இன்னார் சிறப்பாக எழுதுகிறார்கள் என்று சொன்னால் அவர்களின் சொல்லுக்கு மதிப்பளிக்கத் தயாராக உள்ளேன்.ஏன் சுந்தர ராமசாமியும் திலீப் குமாரும் சிங்கப்பூர்,மலேசிய எழுத்தாளர்கள் பற்றிக் கட்டுரையோ நூலோ எழுதவில்லை ?அப்படி ஏதும் அங்குள்ள எழுத்தாளர்கள் பற்றி உயர்ந்த அபிப்பிராயம் இவர்களுக்கு இருக்காதென்பதே என் எண்ணம்.

ரே.கர்த்திகேசு இப்படிக் கூறுகிறார்: ‘…இவர்களில் சிலரெங்கள் இலக்கியங்களில் வடிவத்தையும் சொல்முறையையும் பற்றிய குறைகளைப் பற்றிக் கூறியிருந்தாலும் தமிழ்நாட்டின் இலக்கியங்களைப் பிரதி எடுத்துக் கொண்டிருக்கிறோம் என்று கூறவில்லை. ‘

இலக்கியத்தைப் பிய்த்து இது வடிவம் இது சொல்முறை என்று கூறும் பார்வை எந்த அளவு ஆரோகியமான பார்வை என்று தெரியவில்லை.எனக்கு உடன்பாடில்லை.மண்ணின் இயல்புக்கு ஏற்ற இலக்கியம் என்று நான் கூறுவது வேறு. நீலபத்மனாபனின் ‘தலைமுறைகளை ‘ மண்ணின் இயல்புக்கு ஏற்ற இலக்கியம் என்கிறேன்.வடிவம் சொல்முறை என்று பிரிக்காமல்,பிரிக்க முடியாதபடி இரண்டறக் கலந்திருக்கும் உயர்மனமொழியை மண்ணின் இயல்புக்கேற்ற இலக்கியம் என்கிறேன்.தலைமுறைகள் போன்ற ‘மண்ணின் இயல்புக்கு ஏற்ற ‘ சிங்கப்பூர், மலேசிய இலக்கியம் உண்டா ?இதுதான் என் கேள்வி.உயர்ந்த இலக்கியத்தில்தான் அடையாளம் உருவாகும்.அந்த அடையாளம் மண்ணின் அடையாளமா இலக்கியத்தின் அடையாளமா என்று பிரிக்க முடியாமல் இரண்டறக் கலந்திருக்கும்.வடிவம், உள்ளடக்கம் போன்ற ஆரம்பக் கட்ட இலக்கியத் திறனாய்வு மொழி நடையை நாம் பயன் படுத்தாமல் இருப்பது பயன்உள்ளது.

நானும் இவர்கள் பிரதி எடுக்கிறார்கள் என்ற வாசகத்தைப் பயன்படுத்தவில்லை. ரமேஷ் அவர்களின் கடிதக் கருத்தை முன் வைக்கிறேன்: ‘ சிங்கப்பூரில் தமிழ் இலக்கியம் என்பது பெரும்பாலும் தமிழ் நாட்டின் இலக்கியப் போக்கைப் பின் பற்றும் இயக்கமாகவே இருந்து வந்திருக்கிறது ‘. ரமேஷ் கூறுகிறார்.

கார்த்திகேசு மற்றும் ரமேஷ் இருவரும் இருவித கருத்துக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் இருவரின் கருத்துப் பின்னணி எனக்குத் தெரியாது.கார்த்திகேசு இலக்கியம் என்ற பெயரில் அங்குக் கொஞ்சநஞ்சமிருப்பதை விட்டு விடக்கூடாது என்று கருதுகிறார் என்று நினைக்கிறேன்.ரமேஷ் இருப்பது எல்லாம் இந்திய மாதிரி, இது வேண்டாம் என்று கருதுகிறார்.அழகாக

‘சிங்கபூரர்கள் தாம் யார் என்பதை அறியும் தெளிவிலிருந்தே, சிறப்பான இலக்கியம் தோன்றமுடியும் ‘ என்கிறார்.

அடுத்ததாக ரமேஷ் கூறுவது(திண்ணை17-6-2005) முக்கியமானது.அவர் மூன்று குழுக்களை இனம் காண்கிறார். 1.பண்டிதர்/திராவிடக் குழுக்கள்

2.வானம்பாடி பாணி குழுக்கள்

3.நவீனக் குழுக்கள்

முதல் இரண்டு குழுக்களை நான் ஒதுக்க மாட்டேன் என்றாலும் மூன்றாவது குழுவினரின் எழுத்தைப் படிக்க எனக்கு ஆவல்.ஏனெனில் தமிழகத்தில் இன்றைய எழுத்தில் வரலாறு காணாத மாற்றத்தைச் செய்தவர்கள் இந்த இலக்கிய இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் ஆங்கிலப் பாதிப்புக்கு நேரடியாக உட்பட்டும் மறைமுகமாக உட்பட்டும் தம் படைப்பைச் செய்கிறார்கள்.உதாரணமாக, சுந்தர ராமசாமியின் ‘ஜே.ஜே..சில குறிப்பில் ‘ காம்யுவின் ஒருவித பாதிப்பு உண்டு.அசோகமித்திரனில் ஒருவிதமான காப்கா பாதிப்பு உண்டு.இருவரும் தமிழ் நவீனத்துவத்தின் பிரதிநிதிகள்.சி.மணி என்ற அதிகம் தெரியவராத கவி தற்காலத் தமிழ்க் கவிதையை அதிகம் பாதித்தவர்.அவரிடம் டி.எஸ்.எலியட் பாதிப்பு நேரடியாக உண்டு.நாடகத்தில் ந.முத்துசாமி.மேற்கத்திய அப்சர்ட் நடகப் பாதிப்புடன் எழுதினார்.இவர்கள் எல்லோரும் திராவிட எழுத்திற்கு வெளியில் இருப்பவர்கள்.இதில் மணி ஆங்கில மற்றும் சங்க இலக்கியப் பாதிப்பு காட்டியவர்.மற்ற மூவரும் பழைய இலக்கியப் பாதிப்பு இல்லாதவர்கள். இவர்கள் அனைத்துலகத் தமிழ் அடையாளத்தைக் கட்டப் பயன்படுவார்களா என்ற சர்ச்சை மூலம்தான் பல விஷயங்கள் தெளிவாகும்.எனினும் தமிழில் முதன் முதலாக, தனிமனிதனின் அங்கலாய்ப்புகளையும்,உளவியல் பரபரப்பையும்,ஆழ்ந்த மனநிலை நெருக்கடிகளையும் இந்த நான்குபேரும் பதிவு செய்ததுபோல் வேறுயாரையும் சொல்லமுடியாது.

இந்த நான்கு பேரையும் அளவு கோலாக வைத்துப் பேசுவதாக இருந்தாலும் மலேசியா,சிங்கப்பூரில் இவர்களுக்குச் சமதையாகப் படைக்கக் கூடியவர்கள் இல்லை.இதற்காக இந்த நாட்டு எழுத்தாளர்களின் பெயர்களை நான் கூற வேண்டுமென்றில்லை.நூல்பட்டியல் தரவும் தேவை இல்லை.அப்படி யாரும் இருந்திருந்தால் இங்கே நான் கூறும் படைப்பாளிகள் பற்றித் தமிழகத்தில் நடந்த விவாதத்தில் இவர்களுக்குச் சமமாக அல்லது உயர்வாக எழுதும் இந்த மூன்று நாட்டுப் படைப்பாளர்கள் பற்றிக் கண்டிபாகப் பேச்சு வந்திருக்கும்.திரு.இளங்கோவனின் ‘கட்டியம் ‘நாடக இதழ்(இவ்விதழ் சென்னையிலிருந்து பேராசிரியர் வீ.அரசு போன்றோரின் ஆசிரியத்துவத்தில் வருகிறது.) பேட்டியைப் படித்தபோது தான் சிங்கப்பூரில் சிறுபத்திரிகை பாதிப்புக்கும் நவீன நாடகத்துக்கும் இருக்கும் எதிர்ப்புப் புரிந்தது.எனக்கு இளங்கோவன் முக்கியமாகப் படுகிறார்.அவர் கருத்துக்களைப் படித்தபோது தமிழகத்திலும் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு பண்டிதர்கள் காட்டிய சண்டித்தனம் தான் ஞாபகத்துக்கு வந்தது.புதுக்கவிதை பற்றி இந்தப் பண்டிதர்கள் போடாத சாபம் இல்லை.இன்று இந்தப் பண்டிதர்களைக் காணவில்லை.புதுக் கவிதை எல்லா இடத்திலும் கோலோச்சுகிறது.அதனால் இளங்கோவன் கருத்துக்கள் மூலம் சிங்கப்பூரில் ஒரு புது இலக்கிய இயக்கத்தை ஏற்படுத்தும் கோபத்தை வெளிப் படுத்துகிறார் என்றே நான் எடுத்துக் கொள்கிறேன்.தமிழகத்தில் கோபம் புது இலக்கியத்தின் அடிப்படை என்பது பலருக்குத்தெரியும்.ரமேஷ் சிங்கப்பூர் பற்றிக் கூறுவதுபோல் மலேசியாவில் இதே போன்ற மாதிரிகள் உண்டா என்று எனக்குத் தெரியவில்லை.இராமையாவின் நூலைப் படித்துவிட்டுச் சில படைப்புக்களைப் படித்துப் பார்த்தபோது அவை ஆரம்ப படைப்புகள் என்றே எனக்குத் தோன்றின.ஆரம்பப் படைப்புக்களில் இலக்கியமும் இருக்காது அடையாளமும் இருக்காது.மலேசியாவின் மண் கல், தெரு பற்றி படைப்பில் இருந்தால் அது இலக்கிய அடையாளம் அல்ல.இலக்கியத்தில் அடையாளம் என்பது இலக்கிய அம்சத்தோடு பின்னி பிணைந்த ஒன்று. அதில் மண்,கல்,எல்லாம் ஒரு இலக்கியத்தின் பூடகத்தன்மையைப் பெற்றிருக்கும். இந்த ஆரம்ப முயற்சிகளால் உலகத்தமிழ் இலக்கிய அடையாளத்துக்கு எந்த பயனும் இல்லை. இப்போதைக்குத் தமிழக மற்றும் இலங்கை எழுத்துக்களை உலகத்தமிழ் அடையாளத்தின் பிரதிநிதிகளாக எடுத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.ஏனெனில் அவற்றில் மட்டுமே ஆழமான வருங்கால உலகத்தமிழுக்கு, உலகத் தமிலக்கியம் என்ற பொது தமிழ்ப் படைப்பு வீரியத்துக்கு, தூண்டுதல் தரும் அம்சங்கள் உள்ளன.

நாம் எதிர் கருத்தை வெளியிடுவதைவிட இந்த நான்கு நாடுகளிலும் உள்ள தமிழ் இலக்கியம் பற்றிய ஒன்று போலான மாதிரிகளையாவது கண்டு பிடிக்கலாமே.அதற்கு முன்மாதிரியாக ரமேஷ் கட்டுரையின் தகவல்கள் அமைந்துள்ளன.

நான்கு தமிழ் பேசும் நாடுகள் பற்றிய இலக்கியப் போக்குகள் பற்றி எந்த உலகத்தமிழ் மாநாட்டுக் கட்டுரைத் தொகுப்பிலும் கூடக் கட்டுரைகள் நான் படித்ததில்லை.எனவே இந்தத் தலைப்புக் கூட புதிது என்று நினைக்கிறேன்.இந்தத் தலைப்பைச் சுற்றி விவாதத்தை வளர்த்தலாமே.இணைய ஊடகம் இதற்கொரு நல்ல வாய்ப்பு.புது ஊடகங்கள் வரும் போது புதிய செய்திகள் வருகின்றன என்ற மார்ஷல் மக்ளூகனின் கருத்து ஞாபகத்துக்கு வருகிறது.

இன்னொரு விஷயமும் முக்கியம்.தமிழில் பத்துச் சிறந்த நாவல்கள் இருந்தால் அடுத்து வரக்கூடிய நாவல் இந்தப் பத்தையும் தாண்டவேண்டும்.சிங்கப்பூரிலிருந்து வருகிறதா,தமிழகத்திலிருந்து வருகிறதா என்பது பொருட்டில்லை.

இங்கு முக்கியத் தகவல் ஒன்று உண்டு.இப்போதைய நாவல்கள் விமர்சனங்கள் எல்லாம் தனி

நபர் சார்ந்த மதிப்பீட்டு முறைகளைப் பயன் படுத்துகின்றன.அதனாலேயே தனிநபர் துதிபாடலை/வசையை அவை முக்கியமாகக் கொள்ளுகின்றன.நாம் இனி உலகத்தமிழ் அடையாளத்தை மதிப்பீட்டு முறையாகக் கொள்ளவேண்டும். இது கடினமான வேலை.அப்போது தேசியம்,தேசியம் கடந்த அனைத்துலகத் தமிழ் அடையாளம் போன்ற விஷயங்களுக்கும் நாவல் அல்லது பிற படைப்புகளுக்கும் உள்ள தொடர்புகள் தெளிவாகும்.வெறும் தூய அழகியல் மறைந்து, ஆழமான மனிதவியல் துறைகளின் அடிப்படையுள்ள இலக்கிய அளவுகோல்கள் வளரும்.எண்பதுகளில் படிகள்,பரிணாமம்,மேலும், நிறப்பிரிகை போன்ற தமிழகப் பத்திரிகைகளிலும் அலை போன்ற இலங்கைப் பத்திரிகையிலும் வந்த காத்திரமான கோட்பாட்டு அடிப்படை கொண்ட இலக்கிய அளவுகோல்கள் மேலும் சிறக்க வழிவகை உருவாகும்.கடந்த பத்தாண்டாகக் கோலோச்சும் தனிநபர் மையம்கொள் இலக்கியச் சர்ச்சையின் வியர்த்தம் எல்லோருக்கும் புரியும்.

இந்த இடத்தில், பெனடிக்ட் ஆண்டர்சனின் நாவலுக்கும் தேசியத்துக்குமான கோட்பாடுகளை மீண்டும் நாம் மையப்படுத்தினால் நிறைய லாபம் உண்டு என்று எனக்குத் தோன்றுகிறது.

Series Navigation