கவிதைகளின் திசைக்காட்டி

This entry is part [part not set] of 24 in the series 20050520_Issue

புதியமாதவி


மும்பை

‘தமிழில் படைப்பிலக்கியம் வளர்ந்த அளவிற்கு திறனாய்வு வளரவில்லை. க.நா.சு, கா.சிவத்தம்பி, க.கைலாசபதி, கோ.கேசவன், கோவை ஞானி, தி.க.சி, அ.மார்க்ஸ், தமிழவன் போன்றவர்களைத் தொடர்ந்து இலக்கிய விமர்சனம் தொய்ந்து போயிருக்கும் சூழலில், படைப்பிலக்கியத்தோடு தொடர்புடைய படைப்பாளர்கலே விமர்சன வேலையையும் செய்ய வேண்டியிருக்கிறது. இது கயிற்றின் மீது அல்ல கத்தி மேல் நடப்பது. சக படைப்பாளியின் படைப்புகளை சரியான முறையில் உள்வாங்கி, அறிமுகம் செய்வது ஒருபுறமிருக்க, படைப்பாளிகளை காயப்படுத்தாமல் படைப்பின் குறைகளை பக்குவமாக சொல்லப்பட வேண்டும். ‘ என்று கவிஞர் அன்பாதவன் கவிஞர் பொன்.குமாரின் ‘ஒரு படைப்பாளியின் பார்வையில் ‘ என்ற விமர்சனக்கட்டுரைகளூக்கு விமர்சனம் எழுதும்போது குறிப்பிடுவது அவருடைய பல விமர்சனக்கட்டுரைகளின் தொகுப்பாக வந்திருக்கும் ‘கவிதையின் திசைகள் ‘ என்ற விமர்சனக்கட்டுரைகளை அவருடைய மொழியிலேயே முன்மொழிகிறது எனலாம்.

கவிஞர்களின் படைப்புகளை அவர் எப்படி புரிந்து உள்வாங்கிக்கொள்கிறார் என்பதும் அவருடைய விமர்சன மொழிநடையும் இக்கட்டுரைகளின் பலமாக அமைகின்றன. கவிஞர் கரிகாலனின் ‘ஆறாவதுநிலம் ‘ பற்றி விமர்சிக்கும்போது ‘கரிகாலனுக்கே உரிய மிகச் சிறப்பான த ‘னீக் கவிமொழி வாசிப்பவனை உள்ளுக்குள் இழுத்து கொண்டு கவிச் சூழலில் சிக்க வைத்து விடுகிறது. ஆயினும் அது சுகமானச் சூழல். பல்வேறு தலைப்புகளில் கவிதை கொத்துகள் புனைவின் மாயக்காட்சிகளாக நுட்பமானதொரு மொழியில் பேசி வாசகனை ஈர்க்கின்றன. அபத்தம் நிரைந்த நவீன வாழ்வில் கவிதை வரிகளுக்கிடையில் கணித சூத்திரத்தை எழுதி வைக்கவும், கணித தேற்றத்தினிடையே மலரை வரையவும் நேரிடுகிறது.ஆறாவது நிலம் வாசகனைக் கேள்விக்குழியில் தள்ளி கவிதைகளால் மூடி விடுகிறது. நுட்பங்களின் உதவியுடன் அவன் மேலேறி வர வைக்குமொரு மாயவித்தையை மிக லாவகமாக கையாண்டு வெற்றியும் பெற்றிருக்கிறார் கரிகாலன் ‘ ..அன்பாதவனின் நுட்பமான பார்வையும் அந்தப் பார்வையில் பட்டுத்தெறிக்கும் லாவகமான விமர்சன மொழிநடை இது.

புதுமைகளைப் படைக்கும் புதிய முயற்சிகளைத் தட்டிக்கொடுத்து தோழமையுடன் வரவேற்கிறது இவருடைய கவிதையுள்ளம்.

முத்துக்கந்தனின் ‘உதடுகள் ‘ கவிதைநூலைப் பற்றி எழுதும்போது ‘முத்துக்கந்தனின் கவிதைகளை விடவும் அவரின் தலைப்புகளில் வெளிப்படும் எள்ளலும், துள்ளலும் ரசமிக்கவை. ஒரு தலைப்பு: பட்டசாமி..பீர்சாமி..சரக்சாமி.. இதுகாறும் சொல்லப்பட்ட பொதுமொழியைப் புறக்கணித்து இளைஞனுக்கே உரிய வேகத்தோடு தனக்கென ஒரு புதுகவிதை மொழியை உருவாக்கி கொண்டிருக்கும் முத்துக்கந்தன்.. ‘ என்று அறிமுகம் செய்கிறார்.

தொகுப்புநூல்களைப் பற்றி எழுதும்போது ‘கூட்டுத்தொகுப்புகளின் பலமெனப்படுவது ‘கலைடாஸ்கோப் ‘காட்சிகளாய் விரிகின்ற பல்வேறு பதிவுகள்..ஒருவருக்கு கிடைத்து இன்னொருவருக்கு வாய்க்காது போன வேறு வேறு அனுபவங்கள். இவை நூலை சுவராஸ்யமாக்குகிறதோடு மட்டுமல்லாமல் வாசகனுக்கு புதிய காட்சிகளை, புதிய அனுபவங்களை காட்டுகின்றன.. ‘ என்று கூட்டுத்தொகுப்புகளுக்கான அடிப்படை காரணத்தை விளக்கிச்சொல்லுவார். கவிஞர் அன்பாதவனே பல கூட்டுத்தொகுப்புகளைத் தொகுத்தவர் என்பதும் நினைவில் கொள்ள வேண்டும்.

பாரதி வசந்தனின் எள்ளல் கவிதைகளைப் பற்றி எழுதும்போது, ‘கோபமான ஆக்ரோஷமான கூரிய விமர்சனங்களை எள்ளல் நடையில் தர தேர்ந்த பயீற்சியும் திறமையும் வேண்டும். பாரதி வசந்தன் தன் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார்.

கடுமையான நிதி நெருக்கடி

சிக்கனமாகத்தான் சேர்க்கிறார்கள்

கோடிக் கணக்கில் சொத்து

என்றெல்லாம் தொகுதி முழுக்க தமிழக அரசியல் மீதான விமர்சனங்களாக இருப்பதே நூலின் சிறப்பெனில் அதுவே பலவீனமாகவும் அமைந்து விடுகிறது.

கவிஞர் புதுவைக்காரர். தமிழக அரசியலை விமர்சிப்பது எளிது. எந்தவொரு இடத்திலும் புதுவை அரசியலை தொடக்கூட இல்லை. ஒருவேளை அவருடைய சென்ரியூ தான் பதிலோ.. ?

எழுதி என்ன ஆகப்போகிறது

பேசாமல் இருந்து விடுவது நல்லது

உருட்டுக் கட்டைகளுடன் அடியாட்கள் ‘

… அங்கேயுமா கவிஞரே.. ‘

என்று சுவைப்பட விமர்சனத்தை எழுதும் திறமை அன்பாதவனின் ஒவ்வொரு கட்டுரைகளிலும் காணலாம்.

ஹைக்கூ கவிதைகளையும் அந்தக் கவிதைகளுக்கு வரையப்பட்டிருக்கும் கார்ட்டூன்களையும் தன் விமர்சனத்தில் ‘காரம்போகாத கடுகு கவிதைகளுக்கு வெள்ளை உளுத்தம் பருப்பாக கார்ட்டூன்கள் ‘ என்று தாளித்துக் கொட்டுகிறார்.

உலகமயமாக்கல் பற்றிய ஹைக்கூ கவிதைகளின் கட்டுரையில் உலகமயமாக்கல் பற்றிய வரலாற்று குறிப்புகளையும் தெளிவாக எழுதிச்செல்கிறார்.

பல கவிதைகளை விமர்சிக்கும்போது இந்த வரிகளில் தடம்பதித்த கவிஞர் பழமலயின் கவிதை வரிகள் நினைவுக்கு வருகிறது என்று ஒப்புமைப் படுத்திப் பார்க்கிறார். கவிஞர்களில் புதியவர்கள், பெரியவர்கள் யாராக இருந்தாலும் குறைகளை மிகவும் பக்குவமாக நயத்தக்க பண்பாட்டுடன் முன்வைக்கிறார்.

கவிஞர் சிற்பியின் ‘ஒரு கிராமத்து நதி ‘ பற்றி எழுதும்போது ‘நவீனக்கவிதைகள் மிக இறுக்கமானதொரு மொழிக் கட்டமைப்பில் எழுதப்படும் வேளையில் சிற்பியின் கவிமொழி மிக எளிதாய், புதியதாய் இருக்கிறது. அழகியல் தொனி சற்று தூக்கலாகவே தெரியும் இத்தொகுதியில் கவிதைக்கூறுகள் சற்றே இளக்கமாகிக் கதையம்சம் மிக்கதாகவோ அல்லது கவிதைநடையில் எழுதப்பட்ட நட்சத்திரங்களாகவோ ஆகிவிட்டிருக்கிறது. புதுக்கவிதையின் பிதாமகனான எஸ்ரா பவுண்ட் வார்த்தைகளை நாம் சற்றெ பின்னோக்கிப் பார்க்க வேண்டியுள்ளது.

>எழுதும்பொருள் எதுவாயினும் நேர்முகமாய் அணுக வேண்டும்.

>கவிதையின் வெளிப்பாட்டுக்கும் பயன்படாத எந்த ஒரு சொல்லையும் சேர்க்கக்கூடாது.

>சொற்றொடர்களில் இசை தழுவிய தொடர்ச்சி அமைய வேண்டும்.

என்று முத்தாய்ப்பாக முடித்திருப்பார்.

‘கவிதைகள் உருவான மொழி எதுவானாலும் அவை மனதுக்கு நெருக்கமான விஷயங்களைப் பற்றிப் பேசும்போது வாசகனுக்கு அருகில் வந்து அவன் தோளில் அமர்ந்து கொள்கின்றன ‘ என்று ஒரியாமொழிக் கவிஞரான டாக்டர் மனோரமா பிஸ்வால் மஹபத்ரா கவிதைகளை அறிமுகம் செய்விக்கும் வரிகள் அனைத்து மொழி பெயர்ப்பு கவிதைகளுக்கும் பொதுவானவை.

ரவுத்திரம் பழக்கும் கவிதைகள், நவீன வாழ்வின் புதிர்க்காடுகள், வானவில்லைத் தாண்டி ஒளிரும் கண்ணாடி மனசு, அதிர்வுகளின் எழுச்சியாய்.. சாம்பலாடை, மனக்குளத்தில் கல்லெறியும் உனக்கானப் பொழுதுகளில், காட்சிப் படலங்களால் விரிகின்ற சும்மாடு,ரேகை பதித்த வீடு, புதின வறட்சிக்கு தாகசாந்தியாய் முத்து, ஏறுதல் சிரமமில்லா கறுப்புச்சிகரம்…என்று இவர் கட்டுரைக்கு இவர் தரும் தலைப்புகளில் கவிதைமணம் வீசுகிறது.

சாதிச் சான்று மோசடி: பறிபோகும் தலித் வாழ்க்கை என்ற கட்டுரை கவிதையின் திசைகளில் சேராமல் தனித்து நிற்கிறது. 39 கட்டுரைகளும் எந்தவித கட்டமைப்பும் இல்லாமல் தொகுக்கப்பட்டிருக்கின்றன.சில இடங்களில் அதனாலேயே ஒன்றிரண்டு பக்க கட்டுரைகள் துணுக்குகள் போல காட்சி அளிக்கின்றன.கட்டுரைகளை குறிப்பாக தலித்தியம், ஹைக்கூ, புதினங்கள், புதுக்கவிதைகள், நிகழ்வுகளின் அனுபவப்பகிர்வுகள் என்று வரிசைப் படுத்தி தொகுத்திருந்தால் விமர்சனங்களின் கூர்மை வாசிப்பில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும். முத்துக்களின் சிதறல் மாலையாகிவிடமுடியாது.

நூல்களுக்கான தனித்தனி விமர்சனக்கட்டுரைகளிருந்து விடுபட்டு கவிதைகளுக்கான திசைகளை அடையாளப்படுத்தும் திசைகாட்டிகளாக மிகச்சிறந்த விமர்சனக்கட்டுரைகளை எதிர்காலத்தில் அவரால் எழுத முடியும் என்கிற அவருடைய எழுதும் ஆற்றலை அடையாளப்படுத்தி இருக்கின்றன அவருடைய தனித்தனி நூல்களுக்கான இக்கட்டுரைகள்.

விமர்சனக்கட்டுரைகளைச் சிறந்த நூலாக வெளியிட்டிருக்கும் வள்ளிசுந்தர் பதிப்பகத்தார்க்கு வாழ்த்துகள்.

நூல்: கவிதையின் திசைகள்

பக்: 176, விலை ரூ.75/

வெளியிடூ: வள்ளிசுந்தர் பதிப்பகம்

சென்னை 14.

puthiyamaadhavi@hotmail.com

Series Navigation

புதியமாதவி, மும்பை

புதியமாதவி, மும்பை