கனவுவெளியில் ஒரு பயணம் (அபத்தங்களின் சிம்பொனி-கரிகாலன் கவிதைத் தொகுதி அறிமுகம்)

This entry is part [part not set] of 32 in the series 20050513_Issue

பாவண்ணன்


கனவும் கற்பனையும் நிறைந்த கவிதைளைக் கொண்ட இத்தொகுப்பு கரிகாலனுடைய மற்ற தொகுப்புகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக உள்ளது. குழந்தைமையின் துடிப்பும் ஆர்வமும் பரவசமும் இக்கவிதைகளின் உலகமாக விரிந்திருக்கிறது. எதார்த்தத்தின் வலிகளையும் தோல்விகளையும் தாங்கி மீண்டும் உயிர்த்தெழுவதற்காக வலிமையை கறபனைமட்டுமே வழங்கமுடியும். கனவுகளின் சாரமே மானுடனின் உயிர்ச்சாரம். அவனை எல்லாத் தருணங்களிலும் இயக்கிக்கொண்டிருக்கும் உந்துசக்தி. கற்பனைவெளியில் கட்டுப்படுத்தும் குரல் இல்லை. மாறாக, ஆனந்தத்தின் இசைமழை பொழிந்தபடி இருக்கிறது. அருவியின் உச்சியில் சுதந்தரமாகத் திரிகிற பட்டாம்பூச்சிகளைப்போல கனவுவெளியில் மனம் மிதந்துமிதந்து அலைகிறது. அப்பயணங்களின் சுவடுகளை கவிதைகளாகப் பதிவுசெய்கிறார் கரிகாலன். தொகுப்பை வாசிக்கத் தொடங்கும் ஒரு வாசகனை வசீகரமான அத்தடங்கள் இனிய புன்னகையோடு வரவேற்கின்றன. அங்கே ஒலிக்கும் பறவைகளின் குரல்களும் செடிகளின் நடனமும் காற்றின் பாடலும் அத்தடங்களில் சோர்வேயின்றி நடக்கத் துணையாக இருக்கின்றன. வாசிக்கக் கிடைக்கும் ஒவ்வொரு வரியும் கற்பனையும் அதற்கு இணையான மற்றொரு வரியையும் கற்பனையையும் மனத்துக்குள் விரிவடையவைக்கின்றன. கரிகாலன் கவிதையுலகத்தின் மிகப்பெரிய பலம் இது.

‘பூனை வீடு ‘ மிக எளிய வரிகளால் ஆன கவிதை. வாசித்து முடித்ததும் வீடுபற்றிய பல கேள்விகளை அலையலையாய் எழுப்புகிறது. பெரியவர்கள் அலுவலகங்களுக்கும் குழந்தைகள் பள்ளிக்கும் சென்றபிறகு பூட்டப்பட்டிருக்கும் வீடு பூனை வசிக்கும் வீடாகிறது. மாலையில் வெளியே போன அனைவரும் திரும்பியபிறகு பூனையின் கட்டுப்பாட்டில் இருந்த வீடு மீண்டும் மனிதர்களுக்கு உரியதாக மாறிவிடுகிறது. கண்ணுக்குத் தெரியாமலேயே இந்த மாற்றம் நித்தமும் நிறைவேறியபடி இருக்கிறது. உரிமையை எடுத்துக்கொள்ளத் தெரிந்த பூனைக்கு உரிமைகளை விட்டுத்தரவும் தெரிகிறது. ஓர் ஊமை விளையாட்டைப்போல தோற்றமளிக்கும் இந்தக் காட்சி அசைபோடுதற்குரிய அழுத்தமான சித்திரமாக மாறிவிடுகிறது. மனிதர்களும் விலங்குகளும் மாறிமாறி வசிக்கும் வீட்டுநினைவு முற்றுப்பெறும் தருணத்தில் உயிர் வசிக்கும் வீடான உடலின் நினைவு படர்கிறது. இந்த உலகில்தான் எத்தனை எத்தனை உடல்கள். எல்லா உடல்களும் உயிர் வசிக்கும் வீடுகளே. உடலுக்கும் உயிர் தரித்திரிக்கும்வரைதான் வாழ்க்கை. உடலைத் துறந்து உயிர் போனபிறகு மரணம். பூனையின் வருகையும் விலகலும் சத்தமின்றி நடைபெறுவதைப்போல உயிரின் வருகையும் விலகலும் சத்தமின்றி நடப்பதில்லை. வருகை ஜனனமென்று பெயரிடப்பட்டு கொண்டாடப்படுகிறது. விலகல் மரணமெனப் பெயரிடப்பட்டு துக்கத்துக்குள் அமிழ்கிறது. மனிதர்களால் எதையும் சகஜமாக எடுத்துக்கொள்ள முடிவதில்லை என்பதுதான் துக்கம். இந்தத் திசையில் இன்னும்கூட பல எண்ணங்களை உருவாக்கியபடி இருக்கிறது கவிதையமைப்பு.

பூனை இடம்பெறும் மற்றொரு கவிதையான ‘விடுதலை ‘யும் நல்ல அனுபவத்தைத் தரக்கூடிய கவிதை. கவிதையில் பள்ளிக்கூடம் செல்லும் சிறுவனுக்கு, அப்படி எந்தத் தேவையுமில்லாத பூனையின் மீது பொறாமையாக இருக்கிறது. சிறுவனும் பூனையும் ஒருநாள் சந்தித்துக்கொள்கிறார்கள். இருவருக்குமிடையே ஓர் ஒப்பந்தம் உருவாகிறது. சிறுவன் வாலை வாங்கிக்கொண்டு ஒருநாள்மட்டும் என்ற கணக்கின் அடிப்படையில் பூனையாக மாறுகிறான். புத்தகப்பையை வாங்கிக்கொள்ளும் பூனை சிறுவனாக மாறி பள்ளிக்குச் செல்கிறது. இருவருக்குமே பகல்பொழுது வெவ்வேறு விதங்களில் கழிகிறது. மாலையில் உடல் மாறியாகவேண்டிய தருணம். பூனையாக மாறிய சிறுவன் வீட்டுக்குத் திரும்புவதில்லை. ஒப்பந்தம் மீறப்பட்டுவிடுகிறது. சிறுவனான பூனை அழுதுகொண்டே பாடம் படிக்கிறது.

கற்பனையும் எளிமையும் நிரம்பிய இன்னொரு கவிதை ‘இல்லம் ‘. மூன்று குழந்தைகள் தம் அம்மா, அப்பாவோடு உணவுண்ணத் தொடங்கும் கட்சியோடு தொடங்குகிறது கவிதை. எளிய உணவுதான் பரிமாறப்படுகிறது. கேழ்வரகுக்களி. தொட்டுக்கொள்ள மீன்குழம்பு. குழம்பின் ருசியைப் பாராட்டி ரசித்துச் சாப்பிடுகிறார்கள் எல்லாரும். எஞ்சிய மீன்சதையை உணவாக உண்ணுகிறது பூனைக்குட்டி. உணவுக்குப் பிறகு படுக்கை தயாராகிறது. பூனைக்குட்டியை குழந்தைகளும், குழந்தைகளை அம்மாவும் அம்மாவை அப்பாவும் அன்போடு அணைத்தபடி உறங்கிப் போகிறார்கள். ‘பூமியின் கண்ணைப் போலிருக்கும் அவ்வீட்டின்மீது கவிழ்கிறது நிலவொளி ‘ என்று முற்றுப்பெறுகிறது கவிதை. பூமியின் கண்ணாக வீடு ஏன் சித்தரிக்கப்படுகிறது என்கிற கேள்வி முக்கியமாகப்படுகிறது. ஏராளமான வீடுகள் இருக்கக்கூடிய ஒரு தெருவில் அந்த வீடு மட்டுமே ஏன் கண்ணாக இருக்கவேண்டும் ? ‘கண்ணோட்டம் என்னும் கழிபெரும் காரிகை உண்மையால் உண்டு இவ்வுலகு ‘ என்பதும் ‘பண்ணென்னாம் பாடற்கியைபின்றேல் கண்ணென்னாம் கண்ணோட்டம் இல்லாத கண் ‘ என்பதும் கண்களை முன்வைத்துச் சொல்லப்பட்டிருக்கும் குறள்கள். இரக்கம், பரிவு, அன்பு, ஆதரவு என்பவைதான் கண்ணோட்டத்தின் அடிப்படை. அந்த இல்லத்தில் வசிக்கும் குழந்தைகளிடமும் பெரியவர்களிடமும் பூனைகளிடமும் குடிகொண்டிருப்பது இத்தகைய கண்ணோட்டம்தான். அதனாலேயே அந்த வீடு பூமியின் கண்ணாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. சந்தர்ப்பம் சார்ந்து யார்யாருக்கோ நெருப்பாகவும் கசப்பாகவும் வேதனையாகவும் வெறுப்பாகவும் தோன்றக்கூடிய நிலவு, தன் குளுமையான ஒளிமழையை அந்த இல்லத்தின்மீது பொழிவதில் ஆச்சரியமே இல்லை.

குழந்தையுடன் தொடர்புடைய இன்னொரு நல்ல கவிதை ‘நீலக்கழுத்துப்பறவை ‘. உண்மையில் எங்கும் அப்படி ஒரு பறவை வசிக்கவில்லை. பெரியவர்களின் அச்சத்தால் உருவாகிறது இப்பறவை. எக்கணத்திலும் அப்படிப்பட்ட ஒரு பறவை தரையில் இறங்கி வந்து குழந்தைகளைக் கவ்விக் கொண்டு சென்றுவிடும் என்று அச்சப்படுகிறார்கள் பெற்றோர்கள். அப்பறவையிடமிருந்து குழந்தைகளை மீட்டெடுக்கும் முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள் பெற்றோர்கள். ஆனாலும் ரகசியமாக தரைக்கு இறங்கிவரும் பறவை குழந்தைகளைத் தூக்கிச் செல்கிறது. பெரியவர்கள் நடந்துகொள்கிறமாதிரி அப்பறவை நடந்துகொள்வதில்லை. மாறாக, உற்சாகம் பொங்க வண்டியோன்றில் உட்கார்ந்து வீடுமுறையில் ஊரைச் சுற்றிப் பார்ப்பதைப்போல பறவைக்காலில் தொங்கியபடி வேடிக்கை பார்க்கின்றார்கள் குழந்தைகள். பெரியவர்களின் பீதி சிறிதும் அவர்களிடம் இல்லை. மகிழ்ச்சியையே கண்டடைகிறார்கள். வாசிக்கவாசிக்க நமக்கும் பறப்பதைப்போன்ற உணர்வைத் தருகிறது இக்கற்பனை. உண்மையில் இந்த நீலக்கழுத்துப்பறவையாக எது இருக்கக்கூடும் என்னும் கேள்வி எழுகிறது. தொலைக்காட்சி அல்லது கணிப்பொறி அல்லது பிள்ளைகளை வசீகரிக்கிற ஏதோ ஓர் ஊடகம் என எதுவேண்டுமானாலும் இருகக்கூடும். ஊடகம் பிள்ளைகளைக் கவர்ந்திழுத்து சக்கையாக்கி செயலற்றவர்களாக மாற்றிவிடும் என்றும் பீதியில் பெற்றோர்கள் தடுமாறியபடியே இருப்பதை நாள் தோறும் பார்க்கிறோம். சில நண்பர்கள் தம் குழந்தைகள் வீட்டிலிருக்கும் கணிப்பொறியில் இணையதளங்களில் நீலப்படங்களைத் தேடிக்கொண்டிருக்குமோ என்ற பதற்றத்தில் படபடப்பதையும் பார்க்கிறோம். இதனாலேயே இணைய தளங்களுக்குள் நுழைவதற்கான உரிமை எண்ணை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருப்பதையும் பார்க்கிறோம். இதற்கு நேர்மாறாக, பெரும்பாலான குழந்தைகள் அந்த ஊடகங்களில் நிறைந்திருக்கும் விளையாட்டு அம்சங்களின் வசீகரங்களைக் கவனிப்பதில்தான் ஆர்வம் காட்டுகின்றன. முலைப்பாலின் விஷத்தையூட்டிக் கொல்லவந்த பூதகியின் உடலிலிருந்து அவ்விஷத்தையே வெளியேற்றி அவள் உடல்மீது குதித்தாடுகிற கண்ணனின் குழந்தைமையே இன்று எல்லாக் குழந்தைகளிடமும் நிறைந்திருக்கிற ஒன்று. கள்ளங்கபடற்ற அக்குழந்தைமையை எண்ணி அசை போடவைக்கிறது கவிதை. இதே அலைவரிசையில் நல்ல வாசிப்பனுபவத்தைத் தரக்கூடிய சில கவிதைகள் ‘வீட்டுக்கு வந்த புலி ‘, ‘சிரிப்பை மறந்த ஊர் ‘, ‘நீல இரவு ‘.

இன்னும் சற்றே கவனமுடன் இருந்திருக்கலாம் என்று தோற்றமளிக்கும் சில கவிதைகளும் உள்ளன. எடுத்துக்காட்டாக ‘பெரியவர்களின் பூதம் ‘ என்னும் கவிதையைச் சொல்லலாம். இக்கவிதைக்குப் பெரிய தடையே இதன் தலைப்புதான் என்று தோன்றுகிறது. இயற்கையாய்ப் பறந்து மேலே எழுந்து செல்லும் பறவையின் சிறகுகளை ஒடித்து வீழ்த்துவதைப்போல இத்தலைப்பு வீழ்த்திவிடுகிறது. உண்மையில் இக்கவிதை குழந்தைகளிடம் நிரம்பியுள்ள கணிப்புக்கு அப்பாற்பட்ட கற்பனைத் திறமைகளை அடுக்குவதில்தான் தொடங்குகிறது. கல்வியின் சுமையால் வெறுத்தும் சலித்தும் காணப்படும் குழந்தைகள் நெஞ்சில் கற்பனைப்பூக்கள் மலர்ந்து மணம் வீசுகின்றன. புத்தகப்பையில் எப்போதும் மந்திரக்கோலை ஒளித்து வைத்திருக்கிறார்கள். அதன்மூலம் அவர்கள் தேவதைகளைத் துணைக்கு அழைக்கிறார்கள். பறக்கும் கார்களில் ஏறி உலாவருகிறார்கள். மைனாக்களாக மாறி வெகுதுாரம் பறக்கிறார்கள். மணிக்கட்டு வீங்கும் வகையில் அடித்த பாட்டணி மிஸ்ஸையும் எல்லாத் தருணங்களிலும் விசிலோடு மிரட்டித் திரியும் உடற்பயிற்சி ஆசிரியரையும் ஜோசியக்காரனின் கூண்டுக்குள் கிளிகளாக அடைத்து, அவை போடும் கூச்சல்களை மகிழ்ச்சியோடு பார்த்து கைதட்டிச் சிரிக்கிறார்கள். மந்திரக்கோலின் மகிமையால்தான் இப்படி மகிழ்ச்சியில் திளைக்கமுடிகிறது. கற்பனை வானில் இவ்வாறாக உயரேஉயரே போகும் கவிதைவரிகள் அப்படியே எம்பி அந்த வானத்தின் விளிம்புக்கு அப்பால் சென்றிருக்கவேண்டும். மாறாக, சாதாரணமான ஒரு தட்டைவரியால் அப்பயணம் தடைப்பட்டுவிடுகிறது. கற்பனையின் உச்சிக்குப் போன வரிகளை சட்டென எதார்த்தத்தை அம்பலப்படுத்தும் ஒரு வரியை எழுதி தரைக்கு இழுத்துவந்துவிடுகிறார் கரிகாலன். இத்தகு சின்னச்சின்ன பலவீனங்களைத் தாண்டி பல கவிதைகள் மறக்கமுடியாதவையாக நெஞ்சில் இடம்பிடிக்கும் வகையில் அமைந்திருப்பதே இத்தொகுதியின் சிறப்பாகும்.

( அபத்தங்களின் சிம்பொனி. கவிதைகள். கரிகாலன். புதுமைப்பித்தன் பதிப்பகம், 57ஏ, 53வது தெரு, அசோக் நகர், சென்னை-83. விலை. ரூ45)

paavannan@hotmail.com

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்