பிரக்ஞையின் தளங்கள் : மாண்டூக்ய உபநிடதமும் யூத கபாலாவும்

This entry is part [part not set] of 29 in the series 20050422_Issue

எஸ். அரவிந்தன் நீலகண்டன்


முன்குறிப்பு:

[மாண்டூக்ய உபநிடதம் குறித்த அனைத்துக் கருத்துகளும், உபநிடத வாக்கிய மொழிப்பெயர்ப்புகளும் சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின், துறவி சுவாமி ஆசுதோஷானந்தர் அவர்களது ‘மாண்டூக்ய உபநிடதம் ‘ எனும் விளக்க நூலிலிருந்து கொடுக்கப்பட்டுள்ளன.

கபாலாவின் பிரக்ஞை குறித்த அனைத்து விளக்கங்களும் ரபாய் ஆரியல் பார் த்ஸாடோக் அவர்களது கட்டுரையான Insights into the Construct of the Human Mind and Psychological Processes in Accordance to Kabbalah and Jungian Psychoanalysis என்பதிலிருந்து அளிக்கப்படுகின்றன. கோஷர்தோரா.காம் -KosherTorah.com எனும் ஆச்சார யூத இணையதளத்தில் இக்கட்டுரை கிடைக்கும்.]

பிரக்ஞை(consciousness) என்றால் என்ன ? அதன் அமைப்பியக்கம் எத்தன்மையது ? இது குறித்து பாரதிய ஞானமரபு மிகவும் ஆழ்ந்து ஆராய்ந்துள்ளது. பிரக்ஞையே பிரபஞ்சமனைத்துமாக விரிந்துள்ளதாக அதன் ஒரு பிரிவு கூறுகிறது. காலமும், வெளியும், பருப்பொருளும், ஆற்றலுமாகவும் இவற்றிடையேயான உறவாகவும், இவற்றின் இயக்கமுமாகவும் அதுவே விளங்குகிறது என்பது பாரதிய ஞானமரபு கண்டடைந்ததோர் முடிவாகும். எனவே அனைத்துமாகி பிரபஞ்சக் கூத்தாடும் பிரக்ஞையே தானும் என்பதை உணரும் விரிவடைதலே மானுட வாழ்க்கையின் உண்மை நோக்கம் என பாரத ஞானியர் கருதினர். மானுட இருப்பில் இப்பிரக்ஞை எத்தகைய பரிமாணங்களில் வெளிப்படுகிறது என்பது உட்பட அனைத்து அக-மர்மங்களையும் அவர்கள் ஆராய்ந்து அறிந்தனர். அதனை அக-பிரயாணத்தின் கவித்துவ சமன்பாடுகளாக சமைத்தனர். என்ற போதிலும் இந்த ஞானியர் தம்மை இவ்வுண்மைகளின் கண்டுபிடிப்பாளர்களாக முன்னிறுத்தவில்லை மாறாக, மிகுந்த அடக்கத்துடன் தம் முன்னவரான மகான்களிடமிருந்து தாம் பெற்றதாகவே குறிப்பிட்டனர். இப்பொக்கிஷங்களை நாம் உபநிடதங்கள் என வழங்குகிறோம்.

இவற்றுள் மாண்டூக்ய உபநிடதம் பிரக்ஞையின் பரிமாணங்களை மிகத் தெளிவாக பேசுகிறது. பின்னர் யோக தரிசனத்திலும் அத்வைதத்திலும் விரியும் பிரக்ஞை குறித்த ஆழமான பார்வைகளின் வேர்களை இவ்வுபநிடதத்திலிருந்தே நாம் பெறமுடியும். மாண்டூக்யம் என்றால் தவளை எனப்பொருள். தவளை நீரின் அடியாழங்களில் சென்று 8-10 மாதங்கள் வாழும். பின்னர் மழைக்காலங்களில் வெளிவந்து குரல் கொடுக்கும். அவ்வாறே தனித்து தவவாழ்வு வாழ்ந்து பின்னர் தாம் கண்டறிந்த உண்மைகளை ஞானியர் அளித்த நூல் என்பதால் இப்பெயர் இந்த உபநிடதத்திற்கு அளிக்கப்பட்டிருக்கலாம்.

பிரக்ஞை குறித்து மிகவும் ஆராய்ந்த மேற்காசிய ஞானமரபு யூதர்களது. கபாலா (Kabbalah) எனப்படுவது. கபாலா என்பது வாங்குதல் என்பதற்கான ஹீப்ரூ வித்திலிருந்து பெறப்பட்டது. மரபு என்பதனைக் குறிப்பதாகும். யூத மதத்தின் தொடக்கம் முதலே மறைக்கப்பட்ட இரகசிய ஞான மரபொன்று வெளிப்படுத்தப்பட்ட சமயாச்சாரங்களுடன் இருந்து வந்துள்ளதாகவும் அதுவே கபாலாவில் கூறப்படும் மறைஞானம் எனவும் எனவே இப்பார்வையில் கபாலாவே யூத மதத்தின் உண்மையான ஆத்மாவாக இருந்து வருகிறது எனவும் இம்மரபினர் கருதுகின்றனர். இரண்டாம் நூற்றாண்டில் ரோமர்கள் யூதப்பிரதேசங்களை ஆக்கிரமித்து இருந்தபோது ஷிமான் பார் யோசாய் எனும் ரபாய்* குகைகளில் 12 வருடங்கள் தனிமை வாழ்க்கை வாழ்ந்ததாகவும் பின்னர் அவர் வெளியே வந்த போது அவர் மேலே பறந்த பறவைகள் அவரிலிருந்து பிரகாசித்த நெருப்பினால் இறந்ததாகவும் பின்னர் அவர் தம்மிடமிருந்து வேறுபட்டு நின்ற மக்களிடமும் கோபம் கொண்டபோது எரித்ததாகவும் அதனை இறைவன் கண்டித்து மேலும் ஒரு வருடம் அவர் குகைக்குள் தம் ஞான உக்கிரத்தைக் கட்டுப்படுத்த அனுப்பப்பட்டதாகவும். ஒருகதை வழங்கப்படுகிறது. (முக்கியமான வேறுபாடுகள் இருப்பினும் கூட, ‘கொக்கென நினைத்தாயோ கொங்கணவா ‘ எனும் மகாபாரதக் கதையினை இத்துடன் இணைத்துப்பார்க்கலாம்.) இந்த ஞானி கபாலா மரபில் முக்கியமானவராகக் கருதப்படுகிறார். இவரே சுருக்கமாக ஸோகர் என வழங்கப்படும் ஸெபர்-ஹா-ஸொகர் (பெரும் பிரகாச நூல்) எனும் நூலை எழுதியவர் எனக் கருதப்படுகிறது. இந்நூலே கபாலாவின் மறைஞான வழிகாட்டியாகக் கருதப்படுகிறது. ஷிமானின் குருவான ரபாய் அகிர்வா ஸெஃபிராத் (Sephirah/Sefriot, pl. Sephiroth) எனப்படும் இறை-முகிழ்ப்புகளை (manifestations) யூத சமய ஆச்சாரங்களையும் யூத மறை வெளிப்பாடுகளையும் இணைக்கும் ஞான இழைகளாகப் போதித்திருந்தார். ரபாய் ஷிமான் இவற்றின் அக-சாதனையின் குறியீட்டுத்தன்மையை விளக்கினார். இவரது ‘ஸோகர் ‘ ஆயிரம் வருடங்கள் இரகசியமாக பாதுகாக்கப்பட்டது. மேற்கில் சிறிதே மதவெறி தணிந்து அறிவுப்புத்தொளி கண்ட பின்னர் ரபாய் மோஷே தி லியோன் என்பவரால் பிரசுரிக்கப்பட்டது.

இனி மாண்டூக்ய உபநிடதத்திற்கும் கபாலா ஞானமரபிற்கும் இருக்கும் இணைத்தன்மைகளை காணலாம்.

மாண்டூக்ய உபநிடதம் ‘அயம் ஆத்மா ப்ரஹ்ம ‘ எனும் மகா வாக்கியத்தை உடையது. இது ஆன்மாவிற்கு நான்கு பரிமாணங்களை கூறுகிறது. இதில் முதல் பரிமாணமாவது வைசுவானரன் என்பதாகும். வைசுவானரன் என்பதற்கு ‘அனைத்து மானுடர்க்கும் பொதுவானது ‘ என்றாகும் -பொது மானுடன் ‘(விஸ்வநரன்) என்பதே பொருளாகும். இது விழிப்பு நிலை (ஜாகரித:) என அறியப்படுகிறது. இது புறமுகத்தன்மை (பஹி) கொண்டது. புற உலகை அனுபவிப்பது (ஸ்தூலபுக்). வைசுவானரன் அறிவுக்கருவிகள், செயற்கருவிகள், பிராணன்கள் ஆகியவற்றுடன் உணர்வுநிலை மனம் (conscious mind), புத்தி, நான்-உணர்வு(ego) மற்றும் சித்தம் ஆகியவற்றினை அனுபவத்திற்கான வாசலாகக் கொண்டது. இவை அனைத்தின் மூலமாகவும் புறப்பிரபஞ்சத்தினை அறிந்து அனுபவித்து வரும் பொதுவான மானுடப்பிரக்ஞையாக விழிப்பு நிலையில் செயல்படும் பகுதியே இது. இது அனைவருக்கும் பொதுவானது என்கிற நிலையில் புற உலகினைக் குறித்து இந்திரியங்களால் வாங்கப்பட்ட அறிவு அனைத்து மானுடருக்கும் பொதுவான விதத்தில் அகவயத்தன்மையற்ற நிலையில் தூய்மையாக்கப்பட்ட (objective) நிலையில் விளங்குவதாகும். வைசுவானரன் அதன் முழுமையான நிலையில் அகவயச் சார்பற்றதாக விளங்கும் மானுட விழிப்புணர்வின் பிரபஞ்ச அனுபவமும் அறிதலுமாகும்.

கபாலாவில் மானுட அகவழியாக ஸெஃபிராத் வெளிப்படும் மூன்று தள நிலைகள் கூறப்படுகின்றன. மானுட அக-உலகம் கபாலாவில் மோகின் (Mohin) என அழைக்கப்படுகிறது.கபாலாவில் மோகின் ஸெஃப்ரியாத்களில் ஒன்றான பினா தன்னுணர்வு வைசுவானரனுக்கு இணையானதாகக் கொள்ளலாம். இது அறிதல் என்பதலிருந்து பெறப்படுகிறது.பினாவினை ரபாய் ஏரியல் பார் த்ஸாடோக் ‘பகுத்தறியும் புத்திபூர்வமான கல்வியுடன் பெறப்படும் அறிவு ‘ என வரையறுக்கிறார். இது விழிப்பு நிலையிலான மானுட அறிதல், பகுப்பாய்வு, வியாக்கினாம் மற்றும் அறிவினைப் புறச்சூழலில் பயன்படுத்துதல் ஆகியவற்றுடன் தொடர்புபடுத்துகிறார். விழிப்புடனான மானுட நனவுநிலையிலிருந்து அகவயப்படாத புற உலகினை அறிதலும் அனுபவித்தலுமே பினா தளத்தில் வெளிப்படும் பிரக்ஞையின் இயல்புகள்.

மாண்டூக்ய உபநிடதம் கூறும் அடுத்த பரிமாணமானது தைஜஸன் என்பதாகும். தைஜஸன் என்பதற்கு ஒளிவிடுபவன்-பிரகாசமானவன் என்பது பொருள். வைசுவானரன் தூக்கத்தில் ஆழ்கையில் ஜாக்ரதன் விழிப்படைகிறான். இவன் தனியன். அகமுகமானவன் (அந்த:). இங்கு ஒரு அகமுக உலகம் உருவாக்கப்பட்டு அதனில் தைஜஸன் தனது அனுபவங்களையும் அறிதல்களையும் மேற்கொள்கிறான். இவனது அனுபவங்களும் அறிதலும் நிகழும் களமாக கனவுலகு விளங்குகிறது (ஸ்வப்ன:ஸ்தானோ). ‘ஜாக்ரத ‘ நிலையில் நாம் சந்திக்கும் சில பிரச்சனைகளுக்கான தீர்வுகள் இந்த தளத்திலிருந்து நுண்ணிய அக அனுபவங்களாக பீறிட்டு வெளிப்படவும் செய்யலாம். வேதியியல் அறிஞர் கெகலே பென்ஸீன் மூலக்கூறின் உருவை இத்தளத்திலே தன் வாலைத்தானே கடிக்கும் பாம்பாகக் கண்டறிந்தார். பல்லாயிரம் ஆண்டுகளாக இரசவாத குறியீடாக விளங்கியது அந்த சர்ப்பக்குறியீடு. கபாலாவில் இத்தளம் கோஹ்மா(Hokhma) என அழைக்கப்படுகிறது. பினா தளத்தின் பகுப்பாய்வு அறிதலியக்கத்தின் எல்லை இங்கே நீளுவதில்லை. மாறாக, இது கனவுகளின் மூலமாக இயங்கும் தன்மை கொண்டது. பகுத்தறிவுத்தன்மையும் தர்க்கமும் சார்ந்த மொழிகள் பினா தளத்தில் அனுப-அறிதல்களை வெளிப்படுத்த பயன்படுவது போல, இத்தளத்தில் கனவுலகத்தன்மையில் எழும் மனவோவியங்களே அதற்கு பயன்படுகின்றன.

இதற்கு அடுத்ததாக பிராஜ்ஞன் எனப்படும் ஆழ்தூக்க நிலையினை அனுபவிக்கும் பிரக்ஞையின் தளம் கூறப்படுகிறது. ஆசைகளற்ற கனவுகளற்ற ஆழ்தூக்க நிலையிலும் (ஸுஷுப்தம்) அனுபவதாரியாக இருக்கும் பிரக்ஞை இது. உணர்வுத்திரளாக ஆழ் தூக்கத்தின் ஆனந்தத்தை மட்டுமே அனுபவிக்கும் நிலை இது (ஆனந்தபுக்). இந்நிலையினை மேலும் விளக்கும் மாண்டூக்ய உபநிடதம் பிராஜ்ஞனை அனைத்தும் அறிபவனாக (ஸர்வஜ்ஞ) உள்நின்று இயக்குபவனாக (அந்தர்யாமீ) மூலகாரணமாக (யோனி) கூறுகிறது. ‘தூங்கிக்கண்டார் நிலை ‘ என திருமந்திரம் கூறுகிறது. கபாலா அடுத்த தளத்தினை கேதர்(Keter) என அழைக்கிறது. பினா மற்றும் கோஹ்மா ஆகிய இரு நிலைகளிலும் இருக்கும் சலனங்கள் அற்ற நிலையில் வாழும் பிரக்ஞை தளமே கேதர் என அழைக்கப்படுகிறது. இங்கு தன்வயப்பட்ட அனுபவ நிலையில் பிரக்ஞை ஜீவிக்கிறது. தன்னை அது வெளிக்காட்ட விரும்பினால் அன்றி வெளிக்காட்டுவதில்லை. பினாவின் பகுப்பாய்வுத்தன்மையோ கோஹ்மாவின் உள்ளொளித்தன்மையோ பிரக்ஞையின் கேதர் தன்மையினை அனுபவித்தறிய முடியாது. ஆயினும் கேதர் இவ்விரு தளங்களிலும் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளலாம். அல்லது இவ்விருதளங்களும் தம்மை கேதரின் கைக்கருவியாக்கிக் கொள்வதின் மூலம் கேதர் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளுமே அன்றி பினா நிலையிலிருந்து கேதரை முழுமையாக அனுபவிக்கவோ அறியவோ இயலாது.

இனி ஆன்மா குறித்து மாண்டூக்யம் பேசுகிறது: ‘அது அகமுக நிலை அல்ல, புறமுக நிலை அல்ல இரண்டும் நேர்ந்த நிலை அல்ல. அது உணர்வு திரண்ட நிலை அல்ல; உணர்வு நிலை அல்ல. அதனைக் காண முடியாது. செயல்களற்ற புரிந்துகொள்ள முடியாத, அடையாளங்கள் இல்லாத, சிந்தனைக்கு அப்பாற்பட்ட, விளக்கமுடியாத நிலை அது…அது அமைதி மயமானது (சாந்தம்), மங்கலமானது (சிவம்), இரண்டற்றது (அத்வைதம்) இதுவே நான்காம் பரிமாணம். இது ஆன்மா. இதையே அறியவேண்டும். ‘ ஆனால் இது இந்த மூன்று தளங்களும் அப்பால் இருக்கும் நான்காவது தளமல்ல. இதனை மாண்டூக்ய உபநிடதம் விளக்குகிறது. இந்த ஆன்மாவை மேல்கூறிய முந்நிலைகளினை ஓங்காரத்தின் எழுத்துப்பகுதிகளாகக் கூறுகிறது. அகரம் விழிப்புநிலையில் அனுபவிக்கும் வைசுவானரன், உகரம் கனவுநிலையைக் அனுபவக்களமாகக் கொண்டு செயல்படும் தைஜஸன் பின்னர் மகரம் ஆழ்தூக்க நிலையில் ஆனந்த அனுபவனாக விளங்கும் பிராஜ்ஞன். இந்த மூன்றும் இணைந்த ஓங்காரமே ஆன்மா. என மாண்டூக்ய உபநிடதத்தின் இறுதிச்செய்யுள் அறிவிக்கிறது.

கபாலா இந்நிலையினை ஆன்மா என்று கூறுகிறது. இதற்கானப் பதம் நெஷாமா(Neshama) என்பதாகும். கபாலா ஞானமரபினைச் சார்ந்த ரபாய் மோஷே கார்டெவ்ரோ இந்நிலைகளை பின்வருமாறு விளக்குகிறார். ‘பினா தளத்தில் கேள்வி கேட்கவும் பதிலளிக்கவுமான சாத்தியதை உள்ளது. கோஹ்மாவிலோ கேட்க முடிகிறது ஆனால் பதிலளிக்க இயலாது. கேதரிலோ கேட்கவும் பதிலளிக்கவும் இயலாது. ‘ இது நனவுப் பிரக்ஞையிலிருக்கும் ஒருவனுக்கு இம்மூன்று நிலைகளின் இயற்கையையும் விளங்க வைக்க ரபாய் எடுத்துக்கொண்ட முயற்சியாகும். மாண்டூக்ய உபநிடதத்தில் பிரக்ஞை தளங்களின் அகர-உகர-மகரங்கள் இணைந்து துலங்கும் புலமான ஓங்காரமே (இவ்வெளிப்பாடுகளின் அடித்தளமான) ஆன்மா எனக்கூறப்படுவதைப்போல கபாலாவும் ஆன்மாவினை** முக்கூட்டொருமையாக கஹாப் (KaHaB) என அழைக்கிறது.

ஆனந்தக் களிப்பில் தாயுமானவர் அருளால் பாராது அறிவால் பார்த்தபோது

‘விளையும் சிவானந்த பூமி – அந்த

வெட்ட வெளிநண்ணித் துஷ்ட இருளாம் ‘ எனக் கூறுகிறார். நனவுத்தள உபகரணங்களால் அறியப்படும் பிரக்ஞையின் உயரிய நிலை மிகவும் தொடமுடியாத தூரத்தில் உள்ளது. எனவே கபாலா ஞானமறைகள் அதனை ஏதுமற்றது – ‘அஹீன் (ain, உச்சரிப்பு: ah-een) ‘ என அழைக்கின்றன. மாண்டூக்ய உபநிடதமும் ஆன்மாவினை அறிவிக்கையில் எதிர்மறையான பதங்களினாலேயே அறிவிக்கின்றது என்பதனை காணலாம். ‘அது அகமுக நிலை அல்ல, புறமுக நிலை அல்ல இரண்டும் நேர்ந்த நிலை அல்ல. அது உணர்வு திரண்ட நிலை அல்ல; உணர்வு நிலை அல்ல. அதனைக் காண முடியாது. செயல்களற்ற புரிந்துகொள்ள முடியாத, அடையாளங்கள் இல்லாத, சிந்தனைக்கு அப்பாற்பட்ட, விளக்கமுடியாத நிலை அது… ‘ என்பதுடன் ஓங்காரத்தினையும் ‘செயல்கள் அற்றது, பிரபஞ்ச உணர்வு கடந்தது ‘ எனக் கூறுகிறது.

இவ்விதமாக வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு கலாச்சார மரபுகளில் தோன்றிய உபநிடத ஞான மரபும், கபாலா ஞான மரபும் பிரக்ஞையை குறித்த வெளிப்பாட்டில் அதிசயிக்கத்தக்க விதத்தில் இணைத்தன்மை கொண்டிருப்பது பிரக்ஞை குறித்த நவீன ஆராய்ச்சியாளர்களின் கவனத்திற்குரியது.

– எஸ். அரவிந்தன் நீலகண்டன்

* ரபாய் – யூதகுரு

**கபாலா ‘நெஷாமா ‘ குறித்து மற்றோர் முத்தன்மையுடன் பேசுகிறது – சியா (Chiah) எனும் அழிவற்ற சங்கல்பம், வெளிப்படாத பரம்பொருளுடன் ஆத்மா இணைவு கொள்ளும் யெச்சிதா (Yechidah), மீண்டும் நெஷாமா – இந்நிலையில் ஆன்மா அதன் உயர் இயற்கையுடன் விவரிக்க இயலாவகையில் பிரிவற்று பிணைகிறது. பரம்பொருள் எனும் உயர் சத்தியம் பலவித முத்தன்மையுடன் பாரத ஞான மரபுகளிலும் பேசப்படுகிறது. உதாரணமாக ‘சத்யம் ஞானம் அனந்தம் ‘, ‘சத்யம் சிவம் சுந்தரம் ‘ ‘சத்-சித்-ஆனந்தம் ‘ என்றும் சீக்கிய தர்மத்தில் ‘சத் ஸ்ரீ அகால் ‘ ( ‘சத்யம் சுந்தரம் நிரந்தரம் ‘) எனவும் ஞானியரால் அறியப்படுகிறது.

மாண்டூக்ய உபநிஷதம் – ஒன்றென்றிரு : விளக்கியவர் சுவாமி ஆசுதோஷானந்தர், வெளியீடு: ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர் சென்னை-600004.

Series Navigation

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்