அதிர்ச்சியும் ஆற்றாமையும் (சுகுமாரனின் மொழிபெயர்ப்புக் கவிதைகள்)

This entry is part [part not set] of 41 in the series 20050415_Issue

பாவண்ணன்


எழுபதுகளின் பிற்பகுதியில் தமிழ்க்கவிதை உலகில் அழுத்தமாக் தடம்பதித்த ஒரு பெயர் சுகுமாரன். வசீகரமான சொற்சேர்க்கைகளாலும் புதுமையான படிமங்களாலும் உருவான இவரது கவிதைகள் ஆழமான வாசிப்பைக் கோரும் தன்மையுடன் பிரசுரமாயின. இவருடைய சொந்தக் கவிதைகள் அளவுக்கு இவர் மொழிபெயர்த்த பல தேசத்துக் கவிதைகளும் வாசக ஈர்ப்பைக் கொண்டவை. வெவ்வேறு மொழிகளிலிருந்து தம்மை வந்தடையும் இத்தகு மொழிபெயர்ப்புக் கவிதைகளை வாசிக்கும்போது கிட்டும் பலவிதமான மனக்காட்சிகளையும் பலவிதமான கருத்தாக்கங்களையும் உள்வாங்கி தம் அனுபவமாக அவற்றைத் தமக்குள் கரைத்துக்கொள்வது கவிதை வாசகர்களுக்கு எப்போதும் உவப்பான செயல்பாடாகவே இருக்கும். கவிதை மனத்தின் மொழியாக இருப்பதால் கவிதை வாசிப்பு என்பது இன்னொரு மனத்தின் ஊடாக இன்னொரு கலாச்சாரத்துக்குள் ஊடுருவிச் செல்லும் பயணத் துக்கு நிகரானதாகவே மாறிவிடுகிறது.

இந்த மொழிபெயர்ப்புக் கவிதைத்தொகுப்பில் அயல்நாட்டுக் கவிஞர்கள் எண்மர் இடம்பெற்றுள்ளார்கள். இவர்களில் குந்தர் கிராஸ், நசீம் ஹிக்மத் (துருக்கி), வஸ்லவா ஸிம்பொர்ஸ்கா (போலந்து) , லாங்க்ஸ்டன் ஹியூஸ் (அமரெிக்கா) ஆகியோரின் கவிதைகள் ஏற்கனவே உதிரிஉதிரியாக இதழ்களில் இடம்பெற்றதன்வழியாக தமிழ் வாசகர்களுக்கு அறிமுகமானவை. இத்தொகுப்பு இவர்களை மறுஅறிமுகம் செய்கிறது. செகார் வயெஹோ ( ஸ்பானிஷ்), நிக்கொலெஸ் கியென் ( கியூபா), ராக்வெல் ஜோதோரெக்ஸ் (சிலி), பெஞ்சமின் ஸஃபானியா (ஜமைக்கா) ஆகிய கவிஞர்கள் இத்தொகுப்பின் வழியாக முதன்முதலாக அறிமுகமாகிறார்கள்.

மொழிவேறுபாடின்றி, எல்லாக் கவிதைகளும் அடிப்படையில் எளிமையான அமைப்பைக் கொண்டிருந்தாலும் அழுத்தமான மனப்பதிவுகளை உருவாக்குவதாக உள்ளன. விடுதலை தாகம் உள்ளவை சில. நிறவெறியை அம்பலப்படுத்தி தனக்குரிய நியாயத்துக்காக குரலெழுப்பும் கவிதைகள் சில. போராடும் மனிதர்களின் ஆவேசத்தையும் வேதனையையும் பகிர்ந்துகொள்பவை சில. ஒவ்வொரு நாளும் பொறுமையுடன் வாழ்வின் நெருக்கடிகளைத் தாங்கிக்கொள்ளும் வலியை முன்வைப்பவை சில. தனிமனித யதார்த்தங்களை வெளிப்படுத்துக் கவிதைகள் சில. வாழ்வின் தணியாத வேட்கையுடன் மரணத்துக்கு அறைகூவல் விடுப்பவை சில. அடக்குமுறைக்கு எதிரான குமுறலையும் போராடுகிறவர்களின் சோர்வின்மையையும் ஒடுக்கப்பட்டவர்களின் கண்ணீரையும் முன்வைப்பவை சில. எல்லாக் கவிதைகளுமே வாசிக்க நல்ல அனுபவத்தைக் கொடுக்கின்றன.

தொகுப்பின் மிகச்சிறந்த கவிதைகளில் ஒன்று நீக்ரோ இலக்கியத்தின் முக்கியக் கவிஞர்களில் ஒருவரான லாங்ஸ்டன் ஹியுஸ் எழுதிய ‘சிறிய பழைய கடிதம் ‘. பதினேழு வரிகளை மட்டுமே கொண்ட அக்கவிதை வாசித்துமுடித்ததும் மனத்தில் உருவாகும் அதிர்ச்சியும் கலக்கமும் கடுமையானவை. மிக எளிய சித்தரிப்புத்தன்மை உடையதுதான் அக்கவிதை. ஒருநாள் காலை கடிதங்களுக்காக தன் வீட்டின் முகப்பில் தொங்கும் அஞ்சல் பெட்டியைத் திறந்து பார்க்கிறார் ஒருவர். அதில் காணப்படுகிற ஒரு கடிதம் அவரது முகத்தை வெளிறச் செய்கிறது. தனிமையை உணரவைக்கிறது. ஒரு மனிதனுடைய வாழ்க்கையை முடித்துக்கொள்ள துப்பாக்கியோ கத்தியோ தேவையில்லை. ஒரு கடிதமே போதும் என்று பெருமூச்சோடு முற்றுப்பெறுகிறது கவிதை. ஒரு கறுப்பு மனிதன் நிறவெறி மிகுந்த வெள்ளை மனிதர்களிடையே வாழ நேர்கிற அவஸ்தையையும் துயரத்தையும் கவிதையின் ஒவ்வொரு வரியிலும் காணமுடிகிறது.

ஒரு கடிதம் எப்போதும் ஆழ்ந்த உறவின் அடையாளமாகவே உலகெங்கும் கருதப்படுகிறது. கடிதங்களை எழுதியவர்களும் பெற்றுக்கொண்டவர்களும் மறைந்தபிறகும்கூட ஆண்டாண்டு காலமாக கடிதங்களைப் பாதுகாப்பது என்பது ஒரு பழக்கமாகவே எல்லா மொழிகளிலும் பின்பற்றப்படுகிறது. தனிப்பட்ட குடும்ப நிலைகளிலும்கூட பலர் வீடுகளிலலலல் பரம்பரைபரம்பரையாக பாதுகாக்கப்பட்டு வரும் கடிதங்கள் உண்டு. நினைவுகளுக்கு இனிமையைவழங்கும் கடிதங்களை அவ்வப்போது எடுத்துப் படித்து மனம் மலர்ந்து ஊக்க்முட்டும் ஊற்றுக் கண்களாக உருவகித்துக் கொள்வதும் உண்டு. இப்படிப்பட்ட சூழலில் ஒரு கடிதம் அதைப் பிரிப்பவருக்கு மரண அவஸ்தையாக எந்தச் சூழலில் உருமாறுகிறது என்கிற பின்னணியிலிருந்து அசைபோடத் தொடங்கும்போது கவிதை பல திசைகளில் விரிவடைந்து தளமாற்றம் பெறுகிறது. எச்சரிக்கைகளோ, அருவருப்பூட்டும் வசை வார்த்தைக் குறிப்புகளோ எதுவுமே இல்லாமல் சொல்லாமல் சொல்லும் அந்த வெற்றுக் கடிதம் எதை உணர்த்துகிறது ? நீ கறுப்பன், இங்கு நீ வாழ அனுமதிக்கப்பட்டிருப்பதே பெரிய விஷயம், உனக்கெல்லாம் படிப்பு ஒரு கேடா, உறவு ஒரு கேடா, கடிதங்கள் ஒரு கேடா, அஞ்சல் பெட்டி ஒரு கேடா என்னும் கேள்விகளையா ? உன்னிடம் பரிவுகொள்ள உலகத்துக்கு என்ன அவசியம் வந்துவிட்டது என்னும் கேள்வியையா ? உலக உறவுகளை கடிதங்கள்மூலம் வளர்த்துக்கொள்கிற அளவுக்கு உனக்கெப்படி ஞானம் வந்தது என்னும் கேள்வியையா ? இப்படி அடுக்கடுக்காக எண்ணற்ற கேள்விகள் இந்த மெளனப்புள்ளிக்கடியே உறைந்திருப்பதை உணரலாம். நாவினால் சுட்ட வடு ஆறாமல் காலமெல்லாம் தங்கி நினைவூட்டிக்கொண்டே இருக்கும் சூழலை திருக்குறளில் படித்திருக்கிறொம். இது கடிதத்தாலேயே கொல்லும் சூழல். கத்தி, துப்பாக்கியைப்போல கடிதம் ஒரு கொலை ஆயுதமாக மாறிவிடுகிறது. மனிதனின் வாழ்க்கைத் தகுதியை உடலின் நிறத்தால் தீர்மானிக்கும் அவமானமான சூழலில்தான் மனிதர்கள் இன்னும் வாழ்கிறார்கள் என்பது வருத்தத்துக்குரியது. மனிதனின் தோற்றம் நிகழ்ந்து ஆயிரமாயிரம் ஆண்டுகள் கடந்தபிறகும் நிறவேறுபாடு கொண்ட இருவரிடையே சமமான, சகஜமான வாழ்க்கை உருவாகும் சாத்தியங்களைக் குலைக்கும் கூறுகளை உதறித் தள்ளாமல் மீட்சி ஒருபோதும் உருவாவதில்லை. கவிதையில் நிறம் என்னும் கூறு மையப்பட்டிருந்தாலும் உயர்வு தாழ்வுக்கு வழிகோலக்கூடிய சாதி, மதம், மொழி, செல்வம் என்ற எல்லாக் கூறுகளையும் மையப்படுத்தியதாக வாசிக்கும்போது கவிதை நம்முடன் மேலும் நெருக்கமாகிறது.

ஒரு சிறைக்கைதியின் குரலாக ஒலிக்கும் ‘நான் இங்கே எறியப்பட்ட பிறகு ‘ என்னும் நசீம் ஹிக்மத்தின் கவிதையும் மனத்தை உறையவைக்கும் தன்மை கொண்டது. பத்தாண்டுகளை சிறையில் கழிக்கும் ஒருவன் தன் சிறைவாசத்தை புற உலகின் இயங்குமுறைகள் ஒவ்வொன்றோடும் இணைத்து இணைத்துப் பார்த்து அடுக்கிக்கொண்டே போகும் விதம் கவிதையின் வலிமையைக் கூட்டுகிறது. இந்தப் பத்தாண்டுகளில் பூமி பத்துமுறை சூரியனைச் சுற்றிவிடுகிறது. தண்டனைக்கைதி சிறையிலிரந்து விடுதலையாகி வெளியே சென்று திருமணம் செய்துகொண்டு குழந்தை பெற்றுக்கொள்கிறான். குதிரைக் குட்டிகள் வளர்ந்து பெரியதாகி வலிமையுடன் காட்சி தருகின்றன. தெளஷா வதைமுகாமில் வாயுக் கிடங்குகள் உருவாக்கப்படுகின்றன. ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசப்படுகிறது. ஆனால் அவன்மட்டும் அந்த இருட்டறையில் முடக்கப்பட்டிருக்கிறான். இயங்கும் தன்மையோடு இயங்க இயலாத இருப்பையும் இணைத்தபடி தகவல்களால் அடுக்கப்பட்டு முன்னகர்கிறது கவிதை. முக்கியமான ஒரு தகவல் கவிதையின் பெருமையை உயர்த்துகிறது. அது ஒரு பென்சிலைப்பற்றிய தகவல். சிறைக்குள் வரும்போது தன்னோடு கொண்டுவந்த பொருள் அது. ஒரே வாரத்தில் எழுதிஎழுதி தீர்ந்துவிட்ட பொருள் அது. ஜடப்பொருள்களுக்கு வாய்க்கும் பயன்பாடு கூட சிறைக்குள் ஒரு உயிருக்கு வாய்க்கவில்லை. பத்தாண்டுகள் நகர்ந்துவிடுகின்றன. ஒரேஒரு வாரகாலம் பயனுடன் வாழப்பட்ட பென்சிலின் வாழ்க்கைக்கும் எவ்விதப் பயனுமில்லாமல் பத்தாண்டுகள் கொட்டடியில் வாழ்கிற கைதியின் வாழ்க்கைக்கும் இடையே தீர்க்கமுடியாத ஒரு முரண் வீற்றிருப்பதை உணரமுடிகிறது. ஆண்டு என்பது ஒரு பேச்சுமட்டும்தான். ஆற்றாமையோடு முன்வைக்கப்படும் குரலின் வீச்சு நம் நெஞ்சையும் ஊடுருவித் தைக்கிறது.

ராக்வெல் ஜோதோரோவ்ஸ்கியின் ‘புதிதாகப் பிறந்த கவிதை ‘யும் தொகுப்பின் முக்கியமான கவிதைகளில் ஒன்றாகும். அக்கவிதையில் இடம்பெற்றிருக்கும் ‘தூங்கு குழந்தாய், கடவுள் இல்லாமல் தூங்கு ‘ என்ற வரிகள் அளிக்கும் அதிர்ச்சி கடுமையானது. கிட்டத்தட்ட ஒரு தாலாட்டு வரியைப்போல முன்வைக்கப்படும் இவ்வரியில் அடங்கியிருக்கும் கோரிக்கையின் விசித்திரமே நம்மை மீண்டும்மீண்டும் இக்கவிதையை நோக்கி ஈர்த்தபடி உள்ளது. கடவுள் இல்லாமல் இருப்பது எப்படி ? கடவுளை ஏன் ஒதுக்கவேண்டும் ? ஒதுக்கும் அளவுக்கு அவர் என்ன செய்தார் ? கடவுளற்ற தனிமையை ஏன் நாடவேண்டும் ? கேள்விகள் மனத்தில் மிதக்கத் தொடங்குகின்றன. கடவுள் என்னும் சொல்லுக்கு எதார்த்தப்பொருளில் வழங்கக்கூடிய காக்கும் தெய்வம் என்னும் பொருள்மட்டுமே பொருத்தமாகி விடுமா ? அச்சொல்லுக்கு உண்மை என்னும் பொருளுமுண்டு. அன்பு, நேசம், ஆதரவு, ஒழுக்கம், நம்பிக்கை, இரக்கம், கருணை, நேர்மை, ஒற்றுமை என ஏராளமான பொருள்களைக்கொண்ட உருவகம்தான் கடவுள் என்னும் சொல். கடவுளோடு வாழ்வது என்பது அல்லது கடவுளை நினைத்தபடி வாழ்வது என்பது இவ்வனைத்தோடும் வாழ நினைப்பதற்குச் சமமாகும். புறவாழ்வில் இவை அனைத்துக்கும் பொருளேதுமற்ற அல்லது அனைத்துமே உதிர்ந்துபோன நிலையில் கடவுள் வெறும் சொல்லாகமட்டுமே எஞ்சியிருக்கிறது. வெறும் சொல்லாக மட்டுமே எஞ்சுகிற கடவுள் மனிதர்களிடையே ஆற்ற ஒரு காரியமும் இல்லை. இந்த வெறுமைதான் உலக வாழ்வில் சாத்தியப்படும் என்னும் நிலையில் அச்சூழலுக்கு பால்யம் முதலே பழகிக்கொள்ளட்டும் என்னும் ஆற்றாமையோடுதான் குழந்தையை முன்வைத்து இவ்வரிகள் எழுதப்பட்டிருக்கவேண்டும்.

தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் எல்லாக் கவிஞர்களைப்பற்றியும் அவர்களுடைய கவிதைகளின் பொதுத்தன்மைபற்றியும் கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்புகள் மிகவும் பயன்வாய்ந்தவை. சராசரியாக ஒவ்வொரு கவிஞருடைய ஐந்து கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. விதிவிலக்காக அதிகபட்ச அளவில் பெஞ்சமின் ஸஃபானியாவின் எட்டுக் கவிதைகள் இடம்பெற்றுள்ளன. குறைந்தபட்சமாக நிக்கொலெஸ் கியெனின் மூன்று கவிதைகள் இடம்பெற்றுள்ளன. எல்லாக் கவிதைகளையும் சிறப்பான முறையில் மொழிபெயர்த்திருப்பதோடு மொழிபெயர்ப்பு அனுபவங்களைச் சுவைபட பகிர்ந்துகொள்ளும் செறிவான முன்னுரையையம் எழுதியிருக்கும் சுகுமாரன் பாராட்டுக்குரியவர். சிறப்பான முறையில் வெளியிட்டுள்ள அகரம் பதிப்பகமும் பாராட்டுக்குரியதாகும்.

( கவிதையின் திசைகள். மொழிபெயர்ப்புக்கவிதைகள். மொழிபெயர்ப்பு : சுகுமாரன். வெளியீடு: அகரம், பிளாட் எண் 1, நிர்மலா நகர், தஞ்சாவூர்-613007. விலை ரூ.40)

—-

paavannan@hotmail.com

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்