‘இடிபாடுகளுக்கிடையில்” – வெளி ரெங்கராஜனின் கட்டுரைத் தொகுப்பு

This entry is part [part not set] of 46 in the series 20050401_Issue

லதா ராமகிருஷ்ணன்


ஒளி ஒலி ஊடகங்களில் றாம் காணக் கிடைக்கும் நிஜ வாழக்கை ‘Truth is Stranger than Fiction ‘ என்ற கூற்றை மெய்ப்பிப்பதாய் இருக்கின்ற காரணத்தால் இன்று புனைகதைகளை வாசிக்கும் ஆர்வம் மக்களிடம் குறைந்து போயிருப்பதாகத் தோன்றுகிறது. தவிர ஒரு புனைகதையில் வரும் பாத்திரங்கள் சம்பவங்கள் எல்லாமே எழுத்தாளனின் ‘Whims and Fancies ‘ற்கு உட்பட்டது என்ற எண்ணமும் தவிர்க்க முடியாமல் எழுகிறது. இதன் காரணமாகவே முடிந்த முடிவாக ஒன்றைக் கூறாமல் பல கதவுகளைத் திறந்து இயங்கும்’பின்நவீனத்துவ” எழுத்துக்களுக்கான தேவையும் அதிகம் உணரப்படுகிறது. இதன் இன்னொரு பக்கமாக ஒன்றைக் குரல் விமர்சனங்கள் இன்று மதிப்பிழந்து கொண்டு வருகின்றன. கூட்டணி ஆட்சி என்ற ஒன்றின் தேவை உணரப்பட்டிருப்பது போலவே எந்தவொரு படைப்பு குறித்தும் பல்வேறு பார்வைகளைப் பெறுவது அந்தப் படைப்பு குறித்த ஒரு முழுமையான மதிப்பீட்டை அடைவதற்கான அடிப்படைத் தேவையாகப் பலராலும் கருதப்படுகிறது.

இந்த பின்னணியில் வெளி ரெங்கராஜனின் முப்பது கட்டுரைகள் அடங்கிய இந்த நூல் குறிப்பிட்டுச் சொல்லத் தக்கது. கட்டுரைகள் ஒவ்வொன்றும் அதிகபட்சமாக நான்கைந்து பக்கங்களுக்கு மேல் போவதில்லை. பேச எடுத்துக் கொண்ட விஷயத்தைப் பற்றிய தனது பார்வைகளை பீடமேறாத பகிர்வுத் தொனியில் சுருக்கமாகப் பேசிச் செல்கிறார் ஆசிரியர். ‘அகல்விரிவாகப் பேசுதல்” என்பது ஏற்புடையதே என்றாலும் சமயங்களில் அகல்விரிவாகப் பேசும் ஆர்வம் ஒரு கட்டுரையில் வாசக பங்கேற்பைக் குறைத்து விடும் அபாயமும் உண்டு. தனி ஆவர்த்தனமாய் கட்டுரையாளர் பாட்டுக்கு ஒரு விஷயத்தை அக்குவெறு ஆணிவேராக பிரித்துப் போட்டுக் கொண்டே செல்வார். தன்னைத் துருத்திக் கொண்டு வெளிச்சம் போட்டுக் காட்டுவதும் தெவையற்ற பல விவரங்களை சேர்த்துக் கொள்வதும் முடிந்த முடிவாய் ஒற்றை முடிவை அர்த்தத்தை வாசகர் மண்டைக்குள் திணிக்க முயற்ச்சிப்பதுமாய் பிரக்ஞாபூர்வமாகவோ அல்லது தன்னையுமறியாமலோ கட்டுரைகளை வாசகனிடமிருந்து விலக்கி வைத்து விடுவார் ஆசிரியர். அதுவும் பேச எடுத்துக் கொண்ட விஷயம் பற்றிய உண்மையான ஈடுபாடு இல்லாமல் ‘என்னாலும் இந்த விஷயத்தைப் பற்றிப் பேச முடியும்” என்று மார்தட்டிக் கொள்வதற்காக ஒருவர் கட்டுரை எழுதப் புகுந்தால் அந்தக் கட்டுரை தகவல்கள் மட்டும் நிரம்பியதாய் எனில் உயிர்ப்பின்றி வறண்டு அமைந்து விடுவது இயல்பு.

வெளி ரெங்கராஜன் தனக்கு பரிச்சயமான மனதுக்கு இணக்கமான விஷயங்களை மட்டுமே கட்டுரையாக்கியுள்ளார். ஒரு இலக்கியவாதியாகவும் சமூகப் பிரஜையாகவும் இரண்டிற்கும் உள்ள பரிவர்த்தனைகளை ஊடுபாவுத் தன்மையைப் பற்றிய தெளிவு கூடிய விதத்தில் தன்னில் நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் தாக்கம் செலுத்துகின்ற விஷயங்களே அவர் கட்டுரைகளின் உள்ளடக்கங்களாக இருக்கின்றன. கு. அழகிரிசாமி ப்ரமிள் தி. ஜானகிராமன் கோபிக்கிருஷ்ணன் நகுலன் சி.சு. செல்லப்பா மற்றும் கூத்து நாடகக் கலைஞர்கள் கண்ணப்ப தம்பிரான் முருகபூபதி முதலியோரைப் பற்றியெல்லாம் அவர் எழுதியுள்ள கட்டுரைகள் அந்த படைப்பாளிகளை கெளரவப்படுத்துவனவாக அவர்களுடைய படைப்பாற்றல்களை அவற்றின் நுட்பங்களை அடிக்கோடிட்டுக் காட்டுவனவாக அமைந்துள்ளன. சக படைப்பாளி முன்னோடிக் கலைஞன் என்பதான நேயமும் அபிமானமும் அவற்றின் வழியான மரியாதையுணர்வும் கலந்து எழுதப்பட்டிருக்கும் இக்கட்டுரைகளில் ஆசிரியர் தன்னை துருத்திக் காட்ட முயல்வதேயல்லை. ‘அவரோடு நான் காபி குடித்தேன் சுண்டல் சாப்பிட்டேன்” அவருக்கு ஒரு கள்ளக் காதலி இருந்தாள் போன்ற அக்கப்போர்ள் அறவேயில்லை. தவிர இந்தக் கட்டுரைகளின் ‘தொனி” மிரட்டுவதாகவோ மிகையுணர்ச்சி ததும்புவதாகவோ இல்லை என்பதும் குறிப்படத்தக்கது.

கவிதை புனைகதையில் நிஜத்தோடு கற்பனை கலக்க முடியும். கட்டுரையில் அப்படியில்லை. எனவே கட்டுரைகள் வாசக கவனத்தைக் கோர அவை கூடுதலாக உழைக்க வேண்டியிக்கிறது. கூடுதல் கவனத்தோடு கட்டமைக்கப்பட வேண்டியிருக்கிறது. தவிர தனிமனிதப் பார்வையின் வழி பதிவு செய்யப்படும் காட்சிகளும் கருத்தோட்டங்களும் எல்லோராலும் தங்களுடையதாய் இனங்காணப்படவும் ஏற்கப்படவும் மேற்படி தனிமனிதப் பார்வை விரிந்ததாகவும் ஆழம் மிக்கதாகவும் அதிகத் துல்லியமானதாகவும் நடுநிலைமை கூடியதாகவும் காழ்ப்புணர்ச்சியோ அதிகாரச் செருக்கோ இல்லாததாகவும் அமைய வேண்ழயது அவசியமாகிறது. வெளி ரெங்கராஜன் கட்டுரைகளில் இந்த ஆக்கபூர்வமான அம்சங்களை இங்க்காண முடிகிறது. தமிழ் இலக்கிய வெளி பற்றி நாடக நிகழ்வுகளை பற்றி சம கால முக்கிய நிகழ்வுகள் பற்றி தமிழ் போதனா முறை பற்றி தமிழ் சினிமா – தமிழ் ஊடகம் பற்றி குஜராத் பூகம்பம் பற்றி குஜராத்தின் ‘கர்பா” நடனம் பற்றி என்று பல்வேறு விஷயங்ளைப் பற்றிப் பேசும் அவர் கட்டுரைகள் கலையை சமூக வெளியிலும் சமூகத்தை கலை இலக்கிய வெளியிலுமாய் பொருத்திக் காட்டுவதன் மூலம் ‘தற்கால சமூகச் சூழல்” குறித்த சிறந்த ஆய்வலசல்களாகவும் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன.

குஜராத்தின் ‘கர்பா” நடனம் பற்றிய கட்டுரையில் பின்வரும் வரிகள் இடம் பெறுகின்றன :

உண்மையில் கர்பா நடனம் என்பது பெண்ணுடைய சுதந்திரத்தின் அடையாளமாக இருக்கிறது. ‘கர்பா” என்பதே கர்ப்பப்பையிலிருந்து உருவானது. கர்பா நடனம் பெண் தெய்வமான சக்திக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. இடைக்காலங்களில் பல கவிஞர்கள் இந்த நடனங்களுக்கு சமூகப் பரிமாணம் வழங்கி புதிய அர்த்தங்களை கொடுத்திருக்கின்றனர்.

இந்த நடனத்தில் பெண்ணுக்குக் கிடைக்கக் கூடிய சுதந்திர உணர்வு என்பது இந்த நடனத்துடன் முடிவடைவதில்லை. அது வாழ்க்கையின் பல மட்டங்களிலும் ஊடுருவிச் செல்கிறது. நவராத்திரி இரவுகளின் போது நடனங்களைப் பார்த்துவிட்டு இரவு 2 மணிக்கு ஸ்கூட்டரில் திரும்பும் போது பல பெண்கள் இரு சக்கர வாகனங்களில் தனியாகப் போய்க் கொண்டிருப்தைப் பார்க்க முடிகிறது.

– மேற்கண்ட இரண்டு பத்திகளில் ‘கர்பா” நடனத்தின் வரலாற்றுப் பின்னணி சாராம்சம் காலப்போக்கிலான அதன் வளர்ச்சிக்கட்டங்கள் அந்த நடனத்தின் ‘பிராந்தியம் சார்” ‘பிரத்யேகத் தன்மை” அதன் சமூகப் பிரதிபலிப்பு அந்தக் கலை வடிவம் முன்வைக்கும் சமூகரீதியான தாக்கங்கள் சாத்தியப்பாடுகள் என எல்லாம் பேசப்படுகின்றன. இந்தக் கட்டமைப்பை நூலிலுள்ள எல்லாக் கட்டுரைகளிலும் காண முடிவது சிறப்பம்சம்.

‘அறிவு சார்ந்த இயக்க உணர்வுகளுடன் தன்னை இணைத்துக் கொண்டு ஒரு கலாச்சாரக் குரலை தாங்கி நிற்கும் நிலையில் நாடகம் என்பது என்றைக்கும் உத்வேகம் கொண்டதாக இருக்க முடியும். அதனுடனை உறவில் வாழ்க்கை உணர்வுகள் பல்கிக் பெருகுவதற்கான எல்லா சாத்தியங்களும் உண்டு” என்று ‘மறுவாசிப்பில் பிரமினின் நட்சத்திரவாசி நாடகம்” என்ற கட்டுரையில் நாடகத்தின் சமூகப் பங்காற்றலைத் தெளிவாக முன்வைக்கிறார் வெளி ரெங்கராஜன்.

கட்டுரைகள் ‘in யடட ளநசழைரளநெளள’ விஷயங்களை அணுகியிருக்கும் பேசியிருக்கும் பாங்கும் மிகவும் குறிப்பிடத்தக்கது. வஞ்சப் புகழ்ச்சியோ அவதூறோ அறவேயில்லை. சுருக்கமாக எழுதப்பட்டிருக்கும் அதேசமயம் இக்கட்டுரைகள் எடுத்துக் கொண்ட விஷயங்களை மேம்போக்காகவோ மழுப்பலாகவோ பேசுவதில்லை. சம கால அரசியல் கலாச்சார நிகழ்வுகளை மிக நேரிடையாகப் பேசும் கட்டுரைகளில் கருத்தோட்டங்களை சுற்றி வளைக்காமல் வாய்ஜாலம் செய்யாமல் முன்வைக்கும் கட்டுரையாசிரியரின் துணிவு விஷயங்களை நடுநிலைமையாக அணுகி முழுமனதோடு முனையும் ஆர்வத்திலிருந்தும் அந்தரங்க சுத்தியிலிருந்தும் கைகூடியிருப்பதாகத் தோன்றுகிறது. ‘சில நிகழ்வுகள் சில பார்வைகள்” ‘தமிழ் ஊடகங்களில் செய்திகள்” ‘தமிழ் போதனா முறை” ‘விளையாட்டின் ‘உலகங்கள்” ‘தாமிரபரணி சம்பவங்கள்” ‘தமிழ் சினிமாவின் பாலியல் பண்பாடு” ‘ஒரு பத்திரிகை நிருபரின் தற்கொலை” என பல கட்டுரைகள் உதாரணங் காட்டலாம். அதே போல் ‘ஜானகிராமன் நாடகங்களில் பெண் குறித்த கற்பிதங்கள்” என்ற கட்டுரையில் தான் முதலில் மறுத்த அம்பையின் கருத்துக்களை மறுவாசிப்பில் நியாயமாகத் தோன்றுவதாக ஒப்புக் கொண்டிருக்கும் விதமும் ‘நகுலனை நோக்கிய பயணம்” என்ற கட்டுரையில் கவிஞர் இன்குலாப் மாறுபட்ட கருத்தைக் கொண்டிருந்தாலும் நகுலனுக்கு ‘விளக்கு பரிசு” அளிப்பதை ஏற்றுக் கொண்ட பாங்கை மறவாமல் நினைவு கூர்ந்திருக்கும் விதமும் இடிபாடுகளுக்கிடையில் நம்பிக்கையோடு வாழ்க்கையைத் தேடும் தேடுவது கிடைக்கும் என்று நம்பும் ‘வெளி ரெங்கராஜன்” என்ற படைப்பாளுமை கூடிய மனிதனை நமக்கு இனங்காட்டுகின்றன.

கட்டுரை என்றால் வறண்ட நடையில் எழுதப்படுவது என்பதாக பார்வையை மாற்றத்தக்க மிகவும் உயிர்ப்புக் கூடிய நடையில் எழுதப்பட்டிருக்கும் இக்கட்டுரைகள் நிறைவான வாசிப்பனுபவத்தை சாத்தியமாக்குகின்றன.

– லதா ராமகிருஷ்ணன்

Series Navigation

லதா ராமகிருஷ்ணன்

லதா ராமகிருஷ்ணன்