யாழன் ஆதி கவிதைகள் – கண்ணீரும் தனிமையும்

This entry is part [part not set] of 59 in the series 20050318_Issue

நாகூர் ரூமி


செவிப்பறை. கவிதைகள். யாழன் ஆதி. புத்தா வெளியீட்டகம். கோயம்புத்தூர். முதல் பதிப்பு, டிச.2004. விலை ரூ 30/-

என் சொற்களில் தேடாதீர்கள்

போதை தரும் எதையும் (மிச்சம்)

இதுதான் இந்த தொகுதியிலுள்ள முதல் கவிதையின் முதல் வாக்கியம். இந்த தொகுதியில் எதை எதிர்பார்க்கலாம் என்பதை, எதை எதிர்பார்க்கக் கூடாது என்பதைச் சொல்லி தொடங்குகிறார். அப்படியானால் இவை எதைப்பற்றிய கவிதைகள் ? அதற்கும் முதல் கவிதையின் முடிவில் பதில் இருக்கிறது:

என் முன்னோர்களுக்குக் குடிக்க

கொடுக்கப்பட்ட சாணிப்பாலைத்தான்

கக்கிக் கொண்டிருக்கிறேன்

கவிதையென (மிச்சம்)

இந்த உக்கிரமான கோபம் தொகுதி முழுவதும் காணக்கிடைக்கிறது. ஒரு கோபம் கவிதையாகி இருக்கிறது. ஆனால் கவிதை கிடைத்திருக்கிறதே என்று நாம் சந்தோஷப்பட முடியாது. காரணம், கவிதைகளின் உக்கிரத்தின் பின்னால் இருப்பது காலங்காலமாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் வக்கிரம். முடிந்துபோன ஒரு வரலாறாக இருந்தால்கூட இவ்வளவு கோபம் சாத்தியமில்லை. ஆனால் இது இன்னும் தொடர்ந்து கொண்டிருப்பதுதான் இதன் சோகமே.

‘இன்னும் ‘ என்றதன் பின்னால், கல்வியறிவு, விஞ்ஞான, தொழில் நுட்ப சாதனைகள், ஜனநாயகம், சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், சாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு, விழிப்புணர்வு, மனித உரிமைகள் என பல்வேறு நிலைகளின் நாம் முன்னேறி வந்ததற்கான ஆதாரக் கூறுகள் அனேகம் உண்டு. அத்தனையையும் மீறி, இன்னும், இந்த அட்டூழியங்கள் தொடர்ந்து கொண்டுள்ளன. பல சமயங்களில் அரசியல் ரீதியாக அவை நியாயப்படுத்தப்படுகின்றன.

அப்படிப்பட்ட வன்முறைகள் அவிழ்த்துவிடப் படும்போது பாதிக்கப்படும் தலித்துகள் என்ன செய்வார்கள் ? எதிர்ப்பார்களா ? எதிர்த்தால் என்னாகும் ?

எதிர்த்துப் பேசவியலாத

உன் வீங்கிய உதடுகளும்

என்கிறது ‘நீயும் நானும் ‘ என்ற கவிதை. அவர்கள் எதிர்த்துப் பேசமுடியாதததற்குக் காரணம் உள்ளது. பேசினால் உதடுகள் வீங்கிவிடும். இதுதான் நிதர்சனம். காலங்காலமாக ஒரு மிருகத்தைப் போல வேட்டையாடப்படுகிறார்கள் தலித்துகள்.

பின்னிரவில்

வீட்டுக்குத் திரும்பும்போதெல்லாம்

தெருவில் குறுக்காக வந்து

சாக்கடைக்குள் மறையும் பெருச்சாளிக்கு

ஞாபகமிருக்குமா என்னை

என்று கேட்கிறது ‘எலிகளின் உலகம் ‘ கவிதை. ஒரு பெருச்சாளி எப்படி ஒரு மனிதனை ஞாபகம் வைத்துக்கொள்ளும் ? அப்படியே வைத்துக்கொள்வதானாலும் அது இன்னொரு பெருச்சாளியாக இருப்பதுதானே பொருத்தம்! ஆமாம். அந்த பாவப்பட்டவர்களின் உலகம் எலிகளின் உலகத்தைப் போன்றதுதான். அங்கு எலிகளின் வீடுகளில் மனிதர்கள் வாழ்கிறார்கள். ஒரு சர்-ரியலிஸ கனவைப்போல வரும் இந்த கவிதை வரிகள் உணர்த்துவது அதுதான்.

சமயங்களில் இந்த கோபம் கவிதையை விட்டு வெளியே வந்துவிடுகிறது. அக்கிரமக்காரர்களை நோக்கி பல கேள்விகளை வீசுகிறது.

எமக்கு தின்னத் திணித்த

பீ நாறும்

உங்கள் கைகள் (ஆயுதம்)

மலங்கழிக்கவோ

ஒன்றுக்கிருக்கவோ

மலங்கரைத்து ஊற்றவோ

இடமற்ற நாடு

எங்கள் முகங்களிலின்றி வேறெங்கு முடியும் ? (அறுவடை)

ஆறுதல் சொல்வதற்கு

அழைத்து வருவாய் அரசாங்கத்தை

கைகளில் லத்தியோடும் கால்களில் பூட்சுகளோடும்…

வியர்வைகள் விதைக்கப்பட்டிருக்கும்

எங்கள் நிலங்களில் தீப்பாய்ச்சும் உன் சுயம்

புரியும் நாளொன்றில்

எம் இமை மயிர்கள் ஈட்டிகளாகும்

மாயவினோதம் அறிவாய் நீ (பக்.43)

மலமள்ளும்

எங்கள் கைகளிலிருந்து

வழிகின்ற நீர்

உன் ‘கமண்டல ‘த்தில்

தீர்த்தமாகுமா ?

உழைத்துக் கறுத்த

எங்கள் கோவணத் துண்டு

உன் ‘தண்ட ‘த்தில்

கொடியாகுமா ?

வியர்வை பிசுபிசுத்த

எம் கைகள் உரச

உன் கைகளுக்குச் சம்மதமா ?

தூசு தும்பு நிறைந்த

எம் தெருக்களில் நடக்க

உன் பாதக் ‘குறடு ‘கள் வருமா ?

சாதி வெறியின் நீட்சியாய்

நிகழும் மடத் தலைவனே

எதுவாகும் உன்னால்

எங்களுக்காக

இந்து மதச் சாக்கடையில்

எம்மைப் புதைப்பதைத் தவிர (பக்.54)

இங்கே வெளிப்படுத்தப் பட்டிருக்கும் கோபம் மட்டும் வெளிப்படையானதல்ல. அது யாரை நோக்கியதென்பதும் மிகமிக வெளிப்படையானதே. வாசகனின் கற்பனைக்கு இவை வேலை கொடுப்பதில்லை. எனினும், ஆறுதல் சொல்வதற்கு லத்தியோடும், பூட்சுகளோடும் அரசாங்கம் வருவதில் உள்ள அங்கதம், வியர்வை விதைக்கப்பட்டிருக்கும் நிலம், நீர்ப்பாய்ச்சுவதைப் போல ‘தீப்பாய்ச்சும் ‘ சுயம், ‘மடத்தலைவனே ‘ என்பதில் உள்ள இரட்டை அர்த்தம் — போன்றவை சாதாரண செய்தியில் கிடைக்காத ஒரு உணர்ச்சியை வழங்குவதில் வெற்றி பெறுகின்றன.

‘தாத்தாவின் வெட்டரிவாளும் கிடா மீசையும் ‘ என்றொரு கவிதை. எதிர்த்து நின்ற ஒரு காலகட்டத்தை நினைவுகூர்கிறது. அப்படிப்பட்ட துணிச்சலான ஆதரவுகள் இப்போது இல்லாததைச் சுட்டுகிறது. இப்போது கிடைக்கும் ஆதரவெல்லாம் கனவில்தான் என்பதாக முடிகிறது கவிதை :

காத்தமுத்து தங்கச்சிய

கற்பழிச்ச மேல்சாதிக்காரன

என்ன சாதின்னு சொன்னா இப்பவும் எங்க ஊட்டு

குடிசைங்க எரிஞ்சிடும்

மாரியம்மா கோயில் மறப்புல

குறி அறுத்துப் போட்டாராம் சின்னச்சாமி

தாத்தா

வாழறத்துக்கும்

சாகறத்துக்கும்

எடங்கேட்டு எடங்கேட்டு

நடையா நடக்கிற

எங்கனாவில்

தாத்தா வருவார்

கிடா மீசையோடும்

வெட்டரிவாளோடும்.

குறிப்பிட்ட நிகழ்ச்சியை வைத்தும் சில கவிதைகள் எழுதப்பட்டுள்ளன. ‘பிரதமர் வாஜ்பேயி தொகுதி லக்னோவில், தேர்தல் விதிமுறைகளை மீறி இலவசமாக சேலை விநியோகம் செய்யப்பட்டதில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 22 பேர் சாகடிக்கப்பட்டனர். தன் தாயின் இறுதிச் சடங்கில் தங்கையைக் கையில் ஏந்தி கதறும் சிறுமி — நிகழ்வை முன் வைத்து ‘ என்ற குறிப்புடன் ஒரு கவிதை உள்ளது.

வீசியெறிந்த சேலையில்

மடிந்த அம்மாவின் மூச்சு

எதிர்காலத்தின் தறிகளில்

கண்ணீரை நெய்கிறது (பக். 56)

என்கிறது கவிதை. ஆனால் கண்ணீரால் நெய்த சேலைகளை உடுத்தவும் அரசியல் வாதிகள் தயாராகத்தான் இருப்பார்கள்.

பூப்பறித்து விற்று தன் குழந்தைகளை படிக்க வைத்த தாய்மார்களைப் பற்றிய ‘பூக்கொல்லி ‘ என்ற கவிதை ஒன்றும் உள்ளது.

பறித்துச் சேமித்த

மல்லிகைப் பூக்களில்

மடியின் வாசம் வீசும்

என்று தொடங்கும் அந்த கவிதையில் பூவாசம் பாசமாய் மாறும் வித்தை அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

தலித் பிரச்சனைகளை உரக்கப் பேசும் கவிதைகள் நிறைய இருந்தாலும், இன்னொரு பிரத்தியேக உலகத்தை அறிமுகப்படுத்தும் கவிதைகளும் இருக்கத்தான் செய்கின்றன. முன்னது கண்ணீர் என்றால் பின்னது தனிமை. அதில் ஒரு கவிமனம் இருப்பதை நாம் அறிந்துகொள்ள முடியும். யாழன் ஆதி எவ்வளவு ஆற்றல்மிக்க கவிதைகளைப் படைக்க வல்லவர் என்பது இந்த சில கவிதைகளிலிருந்து விளங்கும்.

யாருமற்ற உள்ளின் முடுக்குகளிலெல்லாம்

தேடித்துருவி முட்டி மோதி

பின் மீளமுடியாமல்

பச்சைத் தென்னங்குச்சி சுருக்கில்

சிக்கிய ஓணானென அலைந்து விழும்

பிணங்கள் குவிந்த ஞாபக அறையில் (நினைவு)

இது காதலாக இருக்கலாம். தொலைந்துபோன ரகசிய அன்பாக இருக்கலாம். ஆனால் மனசின் பிணவறைக்குள் வெறும் நினைவுகளின் பிணங்களாக மட்டுமே எஞ்சியிருக்கும் அவை சொல்லும் தனிமை மிகவும் ஆழமானது. என்ன நடந்திருக்கும் என்பதை கழுத்து சுருக்கப்படும் ஓணான் படிமம் யோசிக்க வைக்கிறது.

தேநீர் கோப்பைகளுடன்

என்றாவது நீங்கள் பேசியதுண்டா ?…

என்ற கேள்வியுடன் தொடங்குகிறது ‘உயிர் நீர் ‘ கவிதை. எனக்கு மிகவும் பிடித்த கவிதை இது. தேநீர் எனக்கு மிகவும் பிடித்ததனாலோ என்னவோ இந்த கவிதையையும் பிடித்துள்ளது! தேநீரைப் பற்றி நான் என் சில சிறுகதைகளில் சிலாகித்துள்ளேன். ஆனால் தமிழில் தேநீரைப் பாடிய முதல் கவிதை இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

கொஞ்சம் கொஞ்சமாய் மாறிக்கொண்டிருக்கிறது என் வாய்

ஒரு தேநீர்க் கோப்பையாய்

தேயிலைக் கறைகளுடன்

என்று முடியும் கவிதை நம் மனதில் ஒட்டிக்கொள்கிறது தேநீரைப்போல.

வேதனைக் குரல்களும் கொஞ்சம் இசையும் செவிப்பறைகளில் மோதும் ஒரு தொகுதி இது.


Series Navigation

நாகூர் ரூமி

நாகூர் ரூமி