ஓவியப் பக்கம் – பதினாறு – டிம் ஹாக்கின்ஸன் (Tim Hawkinson) – வாழ்வின் இசையை வடிக்கும் கலை

This entry is part [part not set] of 35 in the series 20050304_Issue

மோனிகா


எனது ஓவ்வொரு கட்டுரையிலும் ஓவியர்களின் பின்னனியையும் அவர்களின் வரலாற்று கால கட்டத்தையும் பற்றி விளக்குவதில் சிறிது அதிகமாகவே கவனம் செலுத்தி வந்தேன் (குறிப்பாக நான் செப்டம்பர் 11க்கு பிறகு அமைந்த என்னுடைய இந்த நியூயார்க் வாச கால கட்டத்தில் அமெரிக்காவின் தொடர் அட்டகாசங்களின் காரணமாக போரின் பாதிப்பை மையமாகக் கொண்ட படைப்புகள்). ஆனால் இந்த முறை நான் நியூயார்க்கின் விட்னி மியூசியத்தினுள் நுழைந்த போது அங்கிருந்த டிம் ஹாக்கின்ஸனின் கண்காட்சி என்னை ஓவியம் வரலாறு என்றெல்லாம் அழைக்கின்ற புற உலகினின்று ஏதோ ஒரு விந்தை உலகிற்குள் தள்ளிச் சென்றுவிட்டது என்பதே உண்மை. இவரது படைப்புகள், இசை, தாள வாத்தியங்கள், இயற்கை, மனித உடலின் பிம்பத்தை மையப்படுத்திய விளையாட்டுக்கள் என பல்வேறு சுவாரஸியமான அனுபவங்களை நோக்கி நம்மை இட்டுச் செல்கின்றன. நுழைந்த உடனேயே ஒரு மிகப்பெரிய மரம். அந்த மரத்தின் ஒவ்வொரு கிளையிலும் ஒரு மனிதன் நின்று கொண்டிருக்கிறான் இந்த மனிதனின் உடல் பல மர அடுக்குகளால் கட்டப்பட்டது.

இந்த ஒவ்வொரு மனிதனின் உடலிலும் வாய், காது, மூக்கு, தாடை போன்ற ஏதோ ஒரு உறுப்பு தனியாக இணைக்கப்பட்டிருக்கிறது. இணைக்கப்பட்ட இந்த பகுதி ஒரு குச்சியைப் போன்று செயல் பட்டு அவன் உடலிலுள்ள ஒரு தகர டப்பாவின் மேல் அடிக்கிறது. அப்பொழுது எழும் (ஒரு ஆப்பிரிக்க தாள வத்தியத்தைப் போன்ற) ஒலியை தொடர்ந்து அடுத்தடுத்த மனிதர்களிடம் அவ்வாறான ஒலிகள் வருகின்றன. இது நவீன கலைக்கூடத்தின் ஒளியில் நினைந்து கொண்டிருக்கும் நம்மை சூழல் ரீதியாக ஒரு ஆப்பிரிக்க காட்டிற்குள் கொண்டு சென்று விடுகிறது.

இத்தனைக்கும் அந்த மரம் பசுமையான இலைகள் உள்ள மரம் அல்ல. பழுப்பு நிற குழாய்களாலான மரம்! இது மனிதர்களுக்கு இயல்பாகவே உள்ள ஒரு சங்கேத உத்தியை இசை/வடிவம் ஆகியவற்றின் மூலமாக வெளிப்படுத்துவதுபோன்றதொரு தோற்றத்தை கொடுக்கிறது. இவையெல்லாம் என்னுடைய அனுமானங்கள். படைப்பாளரின் மனத்தில் இருந்தது என்னவென்று பார்ப்போமானால்.. அவர் இம்மரத்தை “வாழ்வின் மரம் (Tree of life)” என்று கூறுகிறார். “பெந்தகோஸ்த்” என்று இதற்கு பெயரிட்டு ஏசு நாதரின் பத்து கட்டளைகளை சுமந்து சென்ற யூத தூதர்கள் அதனை உலகிற்குணர்துவதாக கூறுகிறார். இந்த மனித உருவங்கள் படைப்பாளியின் உடல் அளவுகளை ஒத்து உருவாக்கப்பட்டதனால் படைப்பாளி தன் சுயத்தை இதனுடன் கலந்து தனது அனுபவமாக இந்நிகழ்வை உணர்கிறார்.

Egg and the Bird

ஹாக்கின்ஸனின் எல்லா படைப்புகளுமே சாதாரண பொருள்களிலிருந்து அதீத கற்பனையின்மூலம் கட்டப்பட்டவை. அவருடைய முட்டை, பறவை என்ற மேற்கண்ட இரண்டு படைப்புகளில் ஹாக்கின்ஸன் தனது முடி, கை நகங்கள் போன்றவற்றை இணைத்து இவற்றை உருவாக்குகிறார். இதன் மூலம் தனது சுய உருப்புகள் தங்களது அடையாளத்தை இழந்து வேறொன்றாக பரிணமிக்கின்றன என்பது அவரது கருத்து. மனிதனாக பிறந்த எல்லோருமே ஏதோவொரு கால கட்டத்தில் தனதாகக் கொண்டுள்ள அடையாளங்களையும் கருத்துக்களையும் வேறொரு கருத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கவும் ஒன்றுபடுத்தி அல்லது வேறுபடுத்திக் கொள்வது இயல்பு. ஆனால் இந்த ஒப்பீடுகள் ஒரு ஆக்க பூர்வமான தளத்தை நோக்கி கருத்தாக்கங்களை செலுத்தினால் மட்டுமே நல்லதென்பது இப்படைப்பின் கருத்து.

Wall Chart of World History from Earliest Times to the Present, 1997 (detail) Ink and colored pencil on paper 51 x 420

ஹாக்கின்ஸனின் உலக வரலாற்றின் வரைபடம் எனப்படுகின்ற மேற்கண்ட படைப்பில் அவர் தனது தோலின் பகுதிகளில் லேடக்ஸ் ரப்பரை ஊற்றி அதன் மேடுபள்ளங்களை ஒத்த ஒரு அச்சினை உருவாக்கி மேற்கண்ட படைப்பினை உருவாக்குகிறார். வரலாறு என்பது மனித உயிர்கள் வாழ்ந்த தடம் என்பதைப் போல இந்த சதையும் தசையுமான தடங்கள் தொடர்கின்றன. மேலும் சாதாரண ஓவிய, சிற்ப வேலைப்பாடுகளைப் போலல்லாமல் இந்த காகிதம் உத்திரத்திலிருந்து தொங்குவதை பார்க்கையில் யதார்த்தமான உயிரின் பிரதியாக ஒரு பிம்பத்தை அது நமது மனதில் ஏற்படுத்துகிறது.

Finger

ஒரு கட்டைவிரலை தனியே வெட்டி வைத்தார்போல் உள்ள ஹாக்கின்ஸனின் இந்தப் படைப்பின் பருண்மையை பென்சில்களைக் கொண்டு தயார் செய்திருக்கிறார் அவர். ஒரு வகையில் விரல்களின் குரல் எழுதுகோல்களில் இருக்கின்றன என்பதும் உண்மைதான். அதுவும் கட்டை விரல் என்பது உழைப்பின் அடையாளம் என்பதால் இது அந்த விரலுக்கும் பொருந்தும்.

நாற்பத்தி ஐந்து வயதேயான ஹாக்கின்ஸன் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சார்ந்தவர்.

ஹாக்கின்ஸனின் கட்டமைப்புகளும் கருத்தாக்கங்களும் மற்ற முந்தைய படைப்புகள் எவற்றையும் தழுவாதவை. சில்லென்ற மழையின் மண்வாசம் போல் மிகவும் உயிர்ப்புள்ளவை. அவரது கற்பனைகளும் அவர் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் ஊடகமும் மிகவும் புதுமையானதும் நெருக்கமானதுமானவை. இவரது படைப்புகள் நியூயார்க் விட்னி மியூசியத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இக்கண்காட்சி மே மாதம் 21ம் தேதிவரை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது.

—-

monikhaa@yahoo.com

Series Navigation

மோனிகா

மோனிகா