நேற்று வாழ்ந்தவரின் கனவு – பாவண்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது

This entry is part [part not set] of 35 in the series 20050304_Issue

எச்.பீர்முஹம்மது


கனவின் எல்லை விரிவும் ஆழமும் மிக்கது. தனக்கான அலைதுடிப்புகளையும், தேடலையும் கொண்டது.

விரிவான அர்த்தங்களின் தேடலே படைப்பின் உயிர்ப்புக்கு அடிப்படையாகிறது. கனவு வெளியில், அதன் எல்லையில் வறுமையை, தவிப்பை, அந்நியமாதலை பிரதிபலித்த உலகமானது பாவண்ணனுக்குரியது. ‘வேர்கள் தொலைவில் இருக்கின்றன ‘ என்ற சிறுகதை தொகுப்பின் மூலம் பாவண்ணனின் எழுத்துலகம் தொடங்குகிறது.

இந்த ஆண்டின் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான சாகித்ய அகாடமி விருது பாவண்ணனுக்கு கிடைத்திருக்கிறது. அரசு சார்ந்த அமைப்பின் விருதுகள் இந்தியசூழலில் வழக்கமாக சார்பு நிலையையே எடுத்து வைக்கின்றன. இச்சூழலில் நடப்பு அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது. நோபல் பரிசுகள் கூட அரசியல் விளையாட்டின் வெளிப்பாடாகி விட்ட இக்காலத்தில் சாகித்ய அகாடமி விருது என்பது சாதாரணத்தனமே.

படைப்பாளி பாராட்டுகளையோ, புகழ்மொழிகளையோ எதிர்பார்த்து இயங்குவது படைப்பின் இயங்கு தளத்தை சிதைக்கும் முயற்சியாகும். ஒரு வகையில் சுய-ஏமாற்றம் கூட. மேற்கண்டவற்றையும் மீறி படைப்பாளி சில நேரங்களில் இயங்க வேண்டியதிருக்கிறது. எந்த வகையான, எப்படிப்பட்ட படைப்புகளுக்கு விருது வழங்குவது என்ற வரையறை இல்லாமல் கருப்பு மை காகித குவியல்களுக்கு கூட தமிழில் விருது வழங்கும் சாகித்ய அகாடமி மொழிபெயர்ப்பு விஷயங்களில் சில நேரங்களில் சரியாகவே செய்கிறது எனலாம். தமிழில் அது வழங்கும் விருது பெரும்பாலும் பிரச்சாரங்களுக்கே போய் சேர்கிறது. அதன் தேர்வுகுழுவில் இடம் பெற்றுள்ள கழக அபிமானிகளும் ஒரு காரணம்.(சிவப்பு ஜோல்னாக்களும் உண்டு)

கோணங்கி, சுப்ரபாரதிமணியன் வரிசையில் எண்பதுகளில் எழுத வந்தவர் பாவண்ணன். அவருடைய சிறுகதை தொகுதிகளில் என் மனப்பதிவுக்குள்ளானது ‘ நேற்று வாழ்ந்தவர்கள் ‘ அகோன்னத வெளியில் சில மனிதர்களின் அந்நியப்பாடு, மன இடைவெளியை குறிக்கும் தொகுதி அது. வடிவமைப்பில் எதார்த்த வகைக்குட்பட்டிருந்தாலும் மரபான எதார்த்த வகையிலிருந்து இதனை வித்தியாசப்படுத்தி பார்க்கமுடிகிறது. அது வெளிப்படுத்தும் கதைவெளி அகலமானது. கதையின் வழி பயணிக்கும் போது மனித வாழ்வின் சிக்கல்கள்

புரிகிறது. மனிதனின் சுரண்டல், மனநெருக்கடிகள் எதார்த்தமாக பிரதிபலிக்கிறது. நான் இந்தியாவிலிருந்து புறப்படும் முன்னர் கடைசியாக வாசித்த தொகுப்பு ‘ஏவாளின் இரண்டாம் முடிவு ‘ ஆதாம்- ஏவாள் தொன்மம் பற்றிய குறிப்பீடு அது. ஆண்-பெண் என்ற எதிரிணையில் இன உற்பத்திக்கான தூண்டலே சாத்தான். ஒரு விதத்தில் இதை phallic desire எனலாம்.

பாவண்ணனின் கட்டுரைதொகுதிகள் கூட குறிப்பிடதகுந்தவை. காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட ‘எனக்கு பிடித்த கதைகள் ‘(இது திண்ணை.காமில் தொடராக வெளிவந்தது). இந்திய மொழிகளிலான கதைகளை பற்றிய ஒட்டுமொத்த மதிப்பீடு அது. இந்திய மொழி கதைகளின் நனவோட்டம் அதில் வெளிப்படுகிறது. தமிழில் இந்திய மொழி கதைகளை வாசிப்பவர்கள் மிகக்குறைவு. தமிழ்தாண்டி அவர்கள் நேரடியாக லத்தீன் அமெரிக்காவிற்கு சென்று விடுகிறார்கள். இந்திய மொழி சிறுகதை படைப்பாளிகளின் ரசனை, உணர்வுகள் குறித்த விரிவான விவரணம் அது.

மொழிபெயர்ப்பு துறையில் பாவண்ணனின் பங்களிப்பு முன்னோக்கி நகர்தலாகும். குறிப்பாக கன்னட படைப்புகளை தமிழுக்கு கொண்டு வந்ததில் பாவண்ணனின் ஆளுமை அடையாளமிடப்படுகிறது. அவரின் முதல் கன்னட மொழிபெயர்ப்பு கன்னட கவிதைகள் குறித்தது. ‘ ‘நவீன கன்னட கவிதைகள் ‘ என்ற பெயரில் 1989 ஆம் ஆண்டு கனவு வெளியீடாக வெளிவந்தது. மேலும் கன்னடத்திலிருந்து அவர் மொழிபெயர்த்தவற்றில்

குறிப்பிடதகுந்தது பிரபல கன்னட நாடகாசிரியர் கிரிஷ்கர்னார்டின் ‘ நாகமண்டலம் ‘ நாடகமாகும். மேஜிக்கல் ரியலிச கதைவெளியில் திரையோடும் அது மிருகத்திலிருந்து-மனிதாக மாறும் பிம்பம் பற்றியது. நாகப்பாம்பு இதில் குறியீடாக காட்டப்படுகிறது. பாம்பு ஊர்ந்து ஒரு புராணிக வெளியை கட்டமைக்கிறது. தமிழ் நாட்டின் பல்வேறு இடங்களில் இந்நாடகம் அரங்கேற்றப்பட்டது. நான் கூட அரங்கேற்றத்தில் பார்வையாளனாக இருந்ததுண்டு.

கன்னட நாவல்களில் எம்.எஸ்.புத்தனாவின் ‘வினை விதைப்பவன் வினை அறுப்பான் ‘ குறிப்பிடதகுந்தது. மேலும் எஸ்.எல் பைரப்பாவின் பர்வா. இந்நாவல் பருவம் என்ற பெயரில் பாவண்ணனால் மொழிபெயர்க்கப்பட்டது. இதற்காகவே தற்போது சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டிருக்கிறது. கன்னட தலித் படைப்புகளை தமிழுக்கு கொண்டு வந்ததில்

பாவண்ணன் முக்கியமானவர். சித்தலிங்கையாவின் ‘ ‘ஊரும் சேரியும் ‘, அரவிந்த் மாளகத்தியின் ‘கவர்மெண்ட் பிராமணன் ‘ போன்ற சுயசரிதைகள் முக்கியமானவை. கன்னட தலித் கவிதைகள், சிறுகதைகள், படைப்பாளிகளின் நேர்முகங்கள் போன்றவை தொகுக்கப்பட்டு ‘புதைந்த காற்று ‘ என்ற பெயரில் வெளியிடப்பட்டது. மொழிபெயர்ப்பு துறையில் பாவண்ணன் தமிழுலகிற்கு குவியமாகிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு சொல்புதிதில் வெளிவந்த பாவண்ணனின் நேர்முகம் படைப்பாளியின் இயக்கநிலை, சுதந்திரம், படைப்பு மனம் இவற்றுக்கிடையேயான சிக்கலை வெளிப்படுத்துகிறது. ஒருவனின் சுய-வாழ்க்கைச் சூழல் அவனின் படைப்புகளில் ஏற்படுத்தும் பாதிப்பு முக்கியமானது. சில்வியாபிளாத்தையும், ஆன்செக்ஸ்டானையும் walking bus ஆக்கும் பலூன்களை தமிழில் நிறையவே பார்க்கிறோம். மீளமுடியாத சுய-நெருக்கடிகளிலிருந்து தப்பித்தலுக்கான போராட்டத்தின் வழி இயங்க வேண்டியதிருக்கிறது. அவரின் எழுத்துக்கள் வறுமை-வறுமை சார்ந்த புவியியல் படமாக இருக்கிறது. ஒரு வேளை மனித வாழ்வின் முடிவே வறுமையின் முடிவாக இருக்கலாம்.

தமிழில் தற்போது குறுங்குழுக்களே அதிகம் இயங்கி வருகின்றன. குரு-சீடர் என்ற கட்டமைப்பில் குருநாதரின் நிழல்படும் சீடரே முக்கிய படைப்பாளியாக வாசகர்களுக்கு அறிமுகமாகிறார். சிறுபத்திகைகளில் வெளிவரும் கட்டுரைகள் கூட இவர்களின் நிழல் தாண்டியே பிரதிபலிக்கிறது. வாசகன் மனதில் கட்டுரையின் சாராம்சத்தை விட படைப்பாளியின் முகமே முன்நிற்கிறது. அப்படிப்பட்ட கலாசாரத்தை வளர்த்தெடுப்பதற்காகவே சில பத்திரிகைகள் தமிழில் இயங்கி வருகின்றன. பாவண்ணனுக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த விருது சுதந்திரமான படைப்பாளியின் குவியமாதல் அல்லது எதிர்பார்ப்புகள் நீண்ட காலம் கழித்தே சாத்தியப்படும் என்பதை உணர்த்துகிறது. அவனின் மரணம் வெகு எளிதில் நிகழ்வதில்லை. நேற்று வாழ்ந்தவரின் கனவு புனைவு வெளியில் தற்போது பிரதிபலிக்கிறது. அந்த பிரதிபலிப்பு சைபர் தளத்தில் குவிகிறது.

peer8@rediffmail.com

Series Navigation

எச்.பீர்முஹம்மது

எச்.பீர்முஹம்மது