ஓவியப் பக்கம் – பதினைந்து – பில் வயோலா – மனிதவாதையும் அதன் கலை வெளிப்பாடுகளும்

This entry is part [part not set] of 49 in the series 20050225_Issue

மோனிகா


For me the ideas about Social perfection to self-perfection was a big turning point. I took this idea, integrating it with performance art and body art and went with it.

– Bill viola

பில் வயோலாவின் கலை கவித்துவமான வீடியோ கலையாகும். 1970களிலிருந்து வீடியோ மற்றும் நிர்மாணக்கலை வடிவங்களில் தனது கலையை வெளிப்படுத்தி வருகிறார் வயோலா. அவரே அவரது கலையைப் பற்றிக் கூறுகையில் அது சுய அடையாளங்களையும் ஆன்மிக முக்கியத்துவத்தையும் (மீமெய்யுணர்வு) முன் நிறுத்தும் ஒரு காட்சிக் கவிதை என்று கூறுகிறார். மீமெய்யுணர்வு நூல்களிலிருந்து (குரான், பெளத்த மற்றும் சூஃபி நூல்கள்) பெறப்பட்ட தாக்கத்தின் மூலம் ஒளி மற்றும் வடிவத்தை மையமாகக் கொண்டு அவர் அமைத்த இந்த பெரிய திரை-வீடியோ காட்சிப்படங்கள் உலகெங்கிலும் பிரசித்தி பெற்று வருகின்றன.

1992ம் ஆண்டு வயோலா தனது “மெதுவாக திரும்பும் கதையாடல்(slowly turning narrative) என்னும் வீடியோ படத்தில் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி நம் முன் சுழலுவதுபோல ஒரு காட்சியை படமாக்கியிருக்கிறார். இந்த காட்சியின் மூலம் தொடந்து தனது சிந்தனையை பல பக்கங்களிலும் ஓட விடும் ஒரு மனித மனம் தன்னையே மையப்படுத்தி சுழல்கிறதென்பதை உணர்த்துகிறார். அவருடைய படைப்புகள் உலகளாவிய மனித இனத்தின் அனுபவத் தளத்தில் ஊடுருவி அக மனத்தை ஆக்கிரமிக்கும் பிறப்பு, இறப்பு மற்றும் சுய விழிப்புணர்வு நிலைகளை ஆராய்கின்றன. இவற்றுனுடைய பின்புலமாக கீழை மற்றும் மேற்கத்திய கலாச்சாரம் அமைகிறது.

1973ம் ஆண்டு அமெரிக்காவின் சிராக்யூஸ் பல்கலைக் கழகத்தில் இளந்ிலை பட்டம் பெற்ற வயோலா கிட்டத்தட்ட 150 படைப்புக்களை உருவாக்கியுள்ளார். 1997ல் நியூயார்க்கின் விட்னி கலைக்காட்சியகம் அவரது கலை வாழ்க்கையின் 25ம் ஆண்டு விழாவை உலகெங்கும் பயணிக்கும் கண்காட்சியாக கொண்டாடியது.

வயோலாவின் படைப்புகள் எப்பொழுதுமே ஒரு கடினத் தன்மையையும் இறுக்கத்தையும் உட்கொண்டவை. அவற்றில் மெதுவாக நகரும் மக்களின் பிம்பங்கள் இருக்கின்றன என்பதைவிடவும், அதில் நகர்கின்ற மக்கள் மிகவும் சுய உணர்வுடன் உணர்ச்சிகளை அபரிமிதமான நிதானத்துடன் வெளிப்படுத்துபவர்களாய் இருக்கிறார்கள் எனலாம். அவருடைய “அமைதியான சிகரம்(silent mountain)” என்னும் படைப்பில் இரண்டு கைகளை நோக்கி நகரும் மற்ற இரண்டு கைகள் துயரத்துடனேயே முன் நகர்கின்றன. துயரம் பொருந்திய இந்த இரு உருவங்களை நிஜமான ஒரு கால கட்டத்தில் நம்மால் பார்க்க இயலுமா என்பது ஐயம்தான். அமைதியான தன்னுடைய அறையினுள் வேலைகளைச் செய்து கொண்டிருக்கும் காதரினின் உருவம் அவ்வப்போது நமக்கு மறுமலர்ச்சி காலத்தை சார்ந்த ஓவியர் ஃப்ரா ஏஞ்ஜலிகோவை நினைவுக்குக் கொண்டுவருகிறது. மனிதார்த்த நிதர்சனங்களையும் அதன் புனைவுகளையும் வெளிப்படுத்த முயலும் போது அவ்வப்போது நீருக்குள்ளிருக்கும் பிம்பம் நிலத்தை எட்டிப்பார்ப்பது போல் இவரது படைப்புகள் புனைவுகளுக்கு உள்ளேயும் வெளியேயும் ஊடாடி ஒரு வித்தியாசமான உணர்விற்குள் இட்டுச் செல்கின்றன. பிம்பத்தை உள்வாங்கி அதை இயக்கத்தின் தாக்கத்துடன் இழைத்துவிடுவதால் அதன் இருப்பின் வலிமையை அதன் அசைவு புறக்கணிக்கிறது. இது வழமைக்கு மாறான சுவாரசியமான நிகழ்வாகும்.

தற்காலிக ஓவியர்களையும் கலைஞர்களையும் போலவே வயோலாவும் மதம் மாச்சர்யங்களை அறிவியல் தொழில்நுட்பத்துடன் இணைத்து பார்க்கத் தவறவில்லை. அவரது மில்லேனியத்திற்கான ஐந்து தேவதைகள் (Five angels for the milliennium) என்ற படைப்பு அற்புதங்களை வர்ணிப்பதாய் இருக்கிறது. இதில் உருவங்கள் திடாரென்று நீரிலிருந்து வெளிப்பட்டு சொர்க்கத்தை நோக்கி நகரத்தொடங்குகின்றன. ஆனால் அற்புதங்களோ நமக்குப் புலப்படாதவை. எனவே நீண்ட நேரக் காத்திருப்பிற்குப் பிறகு (எதற்கென்பதையே நாம் மறந்துவிடுகிறோம்) நாம் உணர்வதற்கு முன்னதாகவே அவை நடந்து முடிந்து கொண்டிருக்கின்றன. நம்மைச் சூழ்ந்த ஐந்து இருள்மய சட்டகங்களில் வெளியாகும் இந்த உருவங்கள் எல்லையற்று சுழல்வனவாகவும் நமக்குப் பிடிபடாதவையாகவும் தோற்றமளிக்கின்றன.

கீழ்கண்ட பத்திக்கான படைப்பை கீழ்கண்ட வலைத் தளத்தில் காணலாம்:

http://www.cnca.gob.mx/viola/

தாண்டுதல்(crossing) எனப்படும் வயோலாவின் படைப்பில் நீர், நிலம், நெருப்பு, ஆகாயம், காற்று எனப்படும் இயற்கையின் சக்திகளில் இரண்டை உதாரணாமாக எடுத்துக் கொண்டு, இயற்கையை கடப்பதால் மனித இனத்திற்கு ஏற்படும் அழிவை சித்திகரிக்கிறது. நெருப்பும், நீரும் ஒரு திரையின் இருபுறமும் காட்டப்படுகின்றன. ஒரு புறம் பின்னாலிருந்து மெதுவாக நெருப்பை நோக்கி நகர்கின்ற ஒரு மனித உருவம் அதன் அருகாமையில் வந்த உடனேயே நின்றுவிடுகிறது. மெதுவாக நெருப்பு அதன் உடலெங்கும் பரவி அதனை அழிக்கிறது. அது போலவே நீரின் பக்கமும் நடக்கிறது. கடைசியில் சிறு நெருப்புத் துண்டங்களுடன் புகைந்து கொண்டிருக்கும் தரையும் சிறு சிறு துளிகளாய் விழுந்து கொண்டிருக்கும் நீருமே எஞ்ச மனித உருவம் காணாமற்போகிறது.

பில் வயோலா கோயாவின் ஒரு ஓவியத்தின் கருத்தை மையமாகக் கொண்டு “பகுத்தறிவின் உறக்கம்” என்னும் தலைப்பில் 1988ம் ஆண்டு தனது படைப்பை உருவாக்கினார். “பகுத்தறிவின் உறக்கம் பிசாசுகளை உற்பத்தி செய்கிறது” என்ற கோயாவின் ஓவியத்தை நீங்கள் பார்த்திருக்கக்கூடும். அது 1799ல் மாட்ரிட் நாட்குறிப்பு (Diario de Madrid) என்னும் ஸ்பானியப் பத்திரிக்கையின் மூலம் முதன் முதலில் பிரபலமாகியது. முதலில் தன் மகனுக்கு ஓய்வூதியம் தருவதற்காக அரசருக்கு இதன் முதல் பதிப்புகளை அன்பளிப்பாக அளித்தார் கோயா. அக்காலகட்டத்தில் ரூசோ அரசியல் மற்றும் மதத் தலைவர்களுக்கு மிகப்பெரிய தலைவலியாக இருந்தார். ரூசோவின் தத்துவம் (philosophie) என்னும் தலைப்பிலமைந்த படைப்புகளைப் போலவெ இவை இருப்பதால் இதன் மற்ற பிரதிகளை பூமிக்குள் புதைத்துவிட்டதாவும் தகவல். இனி வயோலாவின் ஓவியத்தைப் பற்றி பார்க்கலாம்.

கீழ்கண்ட பத்திக்காண படைப்பை கீழ்கண்ட வலைத் தளத்தில் காணலாம்:

http://www.sfmoma.org/espace/viola/dhtml/content/viola_gallery_fp/BV03.html

இதனில் ஒரு கருப்பு வெள்ளை சிறுதிரையில் ஒரு மேசையின் மீது சாய்ந்து கொண்டு உறங்குகின்ற ஒரு மனிதனின் உருவம் காட்டப்படுகிறது. இடையிடையே அறையை இருள் நிரப்ப பல வண்ண உருவங்கள் நாம் நிற்கும் அறையின் மூன்று சுவர்களிலும் தோன்றி மறைகின்றன. உரத்த குரலில் வேதனையை ஏற்படுத்தக் கூடிய பல குரல்கள் அறையை நிரப்புகின்றன. நகரம் நெருப்பு பற்றி எரிகிறது. பயங்கரமான நாய்கள் காமிராவின் மேல் பாய்கின்றன. பலத்த அலைகள் கரையை மோதிச் செல்கின்றன. இதனால் தூண்டப்பட்டு எழும் ஒரு ஆந்தை நல்ல வெளிச்சத்துடன் பறந்து செல்கிறது. திடாரென இந்த பிம்பங்கள் மறைந்து அறை தன் பழைய நிலையை தக்க வைத்துக் கொள்கிறது. மீண்டும் மீண்டும் மனித வரலாற்றை ஆக்கிரமிக்கும் அழிவுகளுக்கான பொது குறியீடாக இப்படைப்பு தோன்றுகிறது.

கீழ்கண்ட பத்திக்காண படைப்பை கீழ்கண்ட வலைத் தளத்தில் காணலாம்:

http://www.sfmoma.org/espace/viola/dhtml/content/viola_gallery_fp/BV05v.html

1542-1591ல் வாழ்ந்த புனித யோவான் (St. John of the Cross) என்ற பாதிரியார் சாந்தா தெரசா என்னும் ஊரில் ஒரு மறுமலர்ச்சியாளராக பல சமூக மாற்றங்களைக் கொண்டுவர முனைந்தார். அவர் மத நிர்வாகங்களினால் நாடுகடத்தப்பட்டு டொலேடாவில் ஒரு சிறையிலடைக்கப்பட்டார். அங்கு ஒன்பது மாதங்கள் கதவுகளன்றி நிமிர்ந்து நிற்பதற்கான உயரம் கூட இல்லாத அறையில் குனிந்த வண்ணம் நின்று கொண்டிருந்த அவர் நாளுக்கு ஒரு முறை அறைக்கு வெளியே கொண்டுவரப்பட்டு கசையிலடிக்கப்பட்டார். இந்த காலகட்டத்தில் அவர் அன்பு, பேரின்பம், ஒரு இருள் சூழ்ந்த இரவைக் கடப்பது, நகரத்தின் சுற்றுச் சுவர்களின் மேலும் மலைகளின் மேலும் பரப்பது என்பவற்றையெல்லாம் கற்பனை செய்து பல அற்புதமான கவிதைகளைப் படைத்தார். பில் வயோலாவின் “புனித யோவானின் அறை” என்ற படைப்பு ஒரு இருண்ட அறையின் நடுவே அமைந்த ஒரு சதுர வடிவமான சிறிய அறையும் அதற்கு நடுவே ஒரு குடுவையில் தண்ணீர் ஒரு சிறிய மேசையின் மேல் வைக்கப்பட்டது போன்றதுமாகும். இதற்கு வெளியே பார்வையாளரின் அறையில் ஒரு மிகப்பெரிய திரையின் கருப்பு-வெள்ளை நிறத்தில் பனியிற் தோய்ந்த மலைமுகடுகளின் மேல் காமிரா நகரும்போது ஒரு பயங்கரமான ஒலி அறையை நிரப்பிச் செல்கிறது.

ஒரு புறம் அமைதியான அன்பிற் தோய்ந்த அந்த துறவியின் மனம் நம் கண் முன் தோன்றுகையில் இன்னொரு புறம் அவரது வேதனைகளையும் கற்பனைகளையும் ஒருங்கிணைத்து அரளச் செய்கிறது அதன் வெளிப்புற பிம்பம். இது ஒரு தனி மனித வேதனையை புற உலகின் அழகியலின் மேலிட்டு பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.

பில் வயோலாவைப் போலவே நவீன ஊடகங்களின் மூலம் தங்கள் உணர்வுகளைப் படைத்து வரும் தற்கால காட்சிக்கலைஞர்களை இனி வரும் பகுதிகளில் காணலாம்.

—-

monikhaa@yahoo.com

Series Navigation

மோனிகா

மோனிகா