ஓவியப்பக்கம் பதினான்கு – வில்லியம் கெண்ட்ரிட்ஜ் – நவீன் ஊடகத்தில் உயிர்த்தெழும் கோட்டோவியங்கள்

This entry is part [part not set] of 47 in the series 20050120_Issue

மோனிகா


‘One of the fascinating things about William Kentridge ‘s films is how they let the process show. Because he draws, shoots, erases and shoots again to create his imagery – rather than painting animation cells or digitally developing scenes – I am conscious of his means, even his touch. It was Kentridge ‘s genius to show how the directness of drawing could survive the indirectness of a camera-based art. ‘

– from ‘William Kentridge ‘ by Janet Koplos, Art in America, December, 2000

நவீன ஊடகம் காட்சிக் கலையின்(visual arts) மிக முக்கியமான அங்கமாக உருவெடுத்து வருகிறது. காட்சி நிர்மாணங்களும் (இன்ஸ்டலேஷன்) வீடியோ படங்களும் ஓவியம் மற்றும் செவ்வியல் முயற்சிகளின் மாற்றுகளாகி வருகின்றன. ஏற்கனவே, நளினி மலானியின் இவ்விதமான முயற்சிகளைக் குறித்து ஓவியப்பக்கத்தில் பார்த்திருக்கிறோம். இனி வரப்போகும் எனது கட்டுரைகள் நவீன ஊடகத்தின் வாயிலாக தமது கலையை வெளிப்படுத்தும் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதி ஓவியர்களைப் பற்றியதாகும். அவர்களில் வில்லியம் கெண்ட்ரிஜ் மாறுபட்டவரும் முக்கியமானவருமாவார். காரணம் இவர் தன்னுடைய கோட்டோவியங்களையே வீடியோ படங்களாக தொகுக்கும் பாணியில் ஈடுபட்டிருக்கிறார். இவரது நிர்மாணப் படங்கள் ஓவியத்திற்கான உயிரோட்டமும் அதே சமயம் அச்சுறுத்தாத எளிதான தொழில் நுட்பத்தையும் கொண்டு உருவாக்கப்படுபவை.

“ஸெனோவின் எழுத்துக்கள்(Zeno Writing)” என்ற வில்லியம் கெண்ட்ரிட்ஜினுடைய பல்- ஊடகக் (Multi media) காட்சி சமீபத்தில் மரியன் குட்மேன் கண்காட்சியகத்தில் நடந்தது. இது 1923ல் இத்தாலிய எழுத்தாளரான இடாலோ ஸ்லாவோ என்பவரால் எழுதப்பட்ட “ஸெனோவின் வாக்குமூலங்கள் (Confessions of Zeno)” என்னும் நூலினால் உந்தப்பட்டு வரையப்பட்டது. இந்த நாவல் கடந்த நூற்றாண்டின் ஐரோப்பிய தொழில் முன்னேற்றம் போர்ச் சூழல் ஆகியவற்றிற்கு நடுவே இச் சமூக மாற்றத்தில் சிக்கிய ஒரு தனி மனிதனின் உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. (மிகவும் முக்கியமான எழுத்தாளரான ஸ்லாவா ஜேம்ஸ் ஜாய்சிடம் ஆங்கிலம் பயின்றதுடன் ஜேம்ஸ் ஜாய்ஸ் அவரை ஆங்கிலத்திலும், பிரெஞ்சு மொழியிலும் மொழி பெயர்த்ததனாலேயே அவர் உலகத்தாரால் அறியப்பட்டார்.) தன்னுடைய முயற்சிகளில் தொடர்ந்து அவஸ்தைக்குள்ளாகி வந்த ஸெனோவின் ஆசைகளும், குழப்பங்களும், துன்பங்களுக்கு ஈடு கொடுக்க முடியாத ஒரு பலவீனமான சுயமும் அவனை ஆட்டிப் படைக்கின்றன. அதனிடமிருந்து தன்னை விடுவித்து புற உலகிற்கும் தனக்குமான உலகத்தை சமன் செய்து கொள்வதற்கான உத்தியாக அர்த்தமில்லாத காரியங்களில் ஈடுபடுகிறான் ஸெனோ.

Man and Woman

தொழில் நுட்ப ரீதியாக மிகவும் எளிமையான வடிவத்தை கையாளும் கெண்ட்ரிட்ஜுடைய படங்கள் ஆழ்ந்த நோக்கும் அர்த்தமும் உள்ளவை. ஒரு தாளை வைத்துக் கொண்டு வரையத் தொடங்கும் அவர் அழுத்தம் திருத்தமாக வரைந்த பின்னர் அதனை அழிப்பதிலும் திரும்பி வரைவதிலும் ஈடுபடுகிறார். ஒவ்வொரு முறை அந்த ஓவியத்தை மற்றியமைக்கும்போதும் அதனை படம் பிடித்துக் கொள்கிறார். ஒரு கோணத்தில் அசையாத மனித உருவம்போல் காணப்படும் அவரது உருவங்கள் மறு கோணத்தில் ஒரு இயந்திரம்போல் காட்சியளிக்கின்றன. இவ்வாறு அழித்தலும் வரைதலுமாகக் கொண்ட படங்களின் தொகுப்பாக ஒரு வீடியோ படம் தயாரிக்கப்படுகிறது. நினைவுகளும் மறதியுமான இருவேறு தளங்களில் நமது சிந்தனை இயங்குவதால் அந்த பாணியிலேயே தான் கதை சொல்லுவதாகக் கருதுகிறார் அவர். இதற்கான பின்னனி இசை மிகவும் வலி கொண்ட ஒரு கதறலாகத் தொடங்கி நம்மை ஒரு மயான வெளிக்கு இட்டுச்சென்று பின்னர் “ஸெனோ… ஸெனோ” எனக் கதறி முடிகிறது. பின் அது உச்சஸ்தாயியில் தொடங்கி (ஒரு பாரம்பரிய இசையைப்போல) நிழல் உருவங்களை முன்னுக்கு கொண்டுவந்து பின் தள்ளுகிறது. ஒரு புத்தகத்தில் எழுத்துக்களும், எண்களும் கோபமாக கீழே தள்ளப்பட்டு மடிந்து போகின்றன. சிகரெட்டு புகை போலவும் விமானத்தின் புகைபோலவுமான ஒரு மாயையில் இவை புதைந்து போகின்றன. இப்படியாக ஸெனோவின் நினைவிலி மனத்திற்கு காட்சி வடிவம் கொடுக்கிறார் கெண்ட்ரிஜ்.

The Two Big Typewriters

தட்டச்சு இயந்திரத்தின் வரி முடிகின்ற ஓசையைக்கேட்டதுமே அதன் அச்சுக் கரங்கள் மற்றதொரு வரியின் தொடக்கத்தை நோக்கி நகர்கின்றன. தட்டச்சின் வரிகளைப்போலவே நிலப்பகுதியும் நீளவாட்டில் தொடர்ந்து ஒரு மின்சார வேலியை முட்டித் திரும்புகிறது. அமைதியான நிச்சலமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த ஸெனோவின் கனவிற்குள் இயந்திரங்களின் உச்சாடனங்களும் போர்முழக்கங்களுமான நிஜம் வந்து இடிப்பதை இதைவிட சிறப்பாக எப்படி கூறமுடியும் ?

I promise my wife…, charcoal on paper, 22 x 30 inches

இந்த முன்னும் பின்னுமான, முடிவும் முரணுமான வார்த்தைகள் என்ன சொல்லுகின்றன ? அவர் சிகரெட்டு குடிப்பதை இரண்டு மணியோடு நிறுத்திவிட்டார் என்றா ? அல்லது இரண்டு மணிக்கு சத்தியம் செய்யப்போகிறார் என்றா ? நவீன உலகத்தின் பிரச்சினையின் ஒரு சாயலாகவே இது சொல்லப்படுகிறது.

Mine,1991

“கண்ணோடு கண்ணாக(Eye to eye)” என்னும் தனது படத்தின் ஓவியத்திற்கு கெண்ட்ரிஜ் சிகாகோ கலைக்கூடத்தின் வாயிலிலிருந்த விளம்பரப்பலகையை உபயோகப்படுத்திக் கொண்டார். அந்த ஓவியத்தில் “நந்தி” என்னும் பெண்ணுடன் அவர் கண்ணோடு கண் பார்ப்பதாக வரைந்துள்ளார். அதைப்பற்றி ஒரு முறை கேட்ட போது சால் பெல்லோவின் ‘ராவல்ஸ்டைன்” என்னும் படைப்பில் சோஃபாக்லஸ் அரிஸ்டோபேனஸ் சொல்வதாக “காதல், காமம் என்ற நிலைகள் தன்னில் தொலைந்துவிட்ட பாதியை நோக்கி பிணைவதிலேயெ இருக்கின்றது” என்று சொல்வதாகவும் அதைத்தான் தான் கூறியிருப்பதாகவும் கூறுகிறார். தன்னுடைய உருவத்தை கண்ணாடியில் பார்க்கும்போது தன்னுடைய காதலி தன்னில் பாதியாக அங்கு பிரதிபலிப்பதாகக் கூறும் அவர் அவள் யாரென தனக்கு இன்னும் தெரியாது என்றும் கூறுகிறார்.

History of the main complaint

அரசியல் மற்றும் ஆப்பிரிக்க பழங்குடி ஆய்வில் இளங்கலைப் பட்டம் பெற்ற வில்லியம் கெண்ட்ரிட்ஜ் தெற்கு ஆப்பிரிக்காவின் ஜோஹனஸ்பர்க் நகரத்தைச் சார்ந்தவர். பாரிஸில் கேலிக் குரல் வித்தைகளும், நாடகமும் கற்றுத் தேர்ந்த அவர் 1982ல் ஒரு நாடகக் கம்பெனியைத் தொடங்கினார். தன்னுடைய கதையாடல்கள் மூலமாகவும் ஓவியங்கள் மூலமும் தெற்கு ஆப்ப்ிரிக்காவின் தொழிற்சாலைகளின் சுரண்டலையும் நாச வேலைகளையும் அரசு ஒடுக்குமுறையையும் நில-அமைப்பு மற்றும் மக்களைப்பற்றியும் உலகுக்குக்குத் தெரிவிக்கிறார் இவர். இவரது அழித்தலும் ஆக்கலும் காதல்- வெறுப்பு, ஒடுக்குமுறை-வன்முறை, இறப்பு மற்றும் மறுபிறப்பை நோக்கி இயங்குவனவாகும்.

Untitled

அவரது “6 Soho Eckstein” என்னும் படக்காட்சியை கீழ்கண்ட வலைத்தளத்தில் காணலாம்.

Series Navigation

மோனிகா

மோனிகா