பிரம்மராஜன் மொழிபெயர்ப்பில் கால்வினோ கதைகள்

This entry is part [part not set] of 47 in the series 20050120_Issue

மாலதி


United writers Dec 2003 பதிப்பு

[நூலில் உள்ள 18 கதைகளுக்குள் 15 கதைகள் பற்றிய என் குறிப்புகள்

கீழே. புதிய கோடாங்கியில் ஏற்கனவே வெளியாகியது-மாலதி சதாரா]

சமூக தனித்துவக் கட்டமைப்புகளில் விஷமேறிப் புரையோடிப்போன மனக்காயங்களின் செங்கனிவுகளாக போர்ஹேயும் பொருக்குகளாக கால்வினோவும் எனக்கு அர்த்தப்படுகிறார்கள்.போர்ஹேயின் பல நவீனயுக்திகளையும் மீறி ஈரம் அவர் கதைகளில் சுரந்து கசியும்.கால்வினோவில் உலர்தலின் தோலுரிவு நடக்கிறது.வெதுவெதுப்பு களைந்து வெந்து சுடும் நிலக்கரிச்சூடு அவரின் வரிகள்.

மிக அருமையானவற்றையும் மிக அபத்தமானவற்றையும் நாம் அணூகுகிற ஒற்றை வழியை, நாம் பூண்டொழுகுகிற அடிமைத்தனமுள்ள கூட்ட மனப்பான்மையை மெலிதாகக் கிண்டல் செய்கிற கதை ‘தெரஸா என்று கத்திய மனிதன் ‘.இதாலிய மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு Tin parks மொழிபெயர்த்திருக்கிறார்.கதையின் கூடுதல் சிறப்பு அதன் குறுக்கத்தில். யாரோஒருவர்கத்துவதற்காகநின்றிருக்கவேண்டும்.மிகப்படிவாதமான யாரோ ஒருவர்…என்ற கடைசி வரியில் எடுப்பான எகத்தாளம் காணக் கிடைக்கிறது.ஆண்டவனைக்கூப்பிடும் அதே குரலில் ஒரு தகுதியற்ற தலைவனை ,ஒரு தரங்கெட்ட கூத்தாடிக்கலைஞனை,உருகி உருகிக் கூப்பிடுவோமே,ஒருவர் சொன்னதைக்கேட்டுச்சிலர்,பின் பலர், ‘ஏதொன்றும் வகையில்லை ‘ என்று முடிந்த முடிவானபின்னும் ஓரிருவர் என்று மந்தையில் மிதப்போமே அந்த

மனப்பான்மையைத்தான் ‘தெரஸா ‘என்று கத்தி கால்வினோ தெரியப்படுத்துகிறார்.

‘வீட்டின் சேய்மையிலிருந்து காதல் ‘கதை கால்வினோவின் ஆண்நிலைப்பாட்டுவக்கிர மனோபாவமாகப் புரிந்துகொள்ளப்படும் ஆபத்துகள் நிறைந்தது.இந்த நீர்கீழ் நிழலை அவருடைய மனுடத்துவ மீன்கள் குறுக்கும் நெடுக்குமாய் அலைந்து அலைந்து கலைத்துப் போகின்றன.இருப்பின் செறிவை அர்த்தப்படுத்துவது அதன் வெறுமையா சோகமா மாற்றங்களா என்று புரியாமலே எப்போதும் பயணிக மனப்பான்மையுடனிருக்கும் மனுடத்துவத்தின் உண்மை விழுக்காடுகள் கதையில் வரும் பதிவுகள் என்ற காரணத்தால் நம் பார்வை மிதப்பட வாய்ப்பிருக்கிறது.

தன் பெண்ணுறவுப்பிரதாபங்களை அளக்கும் ஒரு மூன்றாம்தர கப்பல் மாலுமியை ஒத்த தன்மையை மேம்போக்காகக் கதைசொல்லி கொண்டிருப்பினும் ஏதோ ஒருவகையில் மொத்த விவரங்களிலிருந்தும் விலகி கெளரவப்பட்டு சம்பந்தப்பட்ட பெண்களுக்கு மிகப்பெரிய கண்ணியங்களைப்பூசிவைத்து வித்யாசப்படுவதில் கோகுல கிருஷ்ணன் போலவோ ஜெகதலப்பிரதாபன் போலவோ அன்றியும் கூட ரிஷி சிரேஷ்டர் போல அடையாளப்படுவது

காஸனோவாவில் மிகவும் விசித்திரமான விஷயம்.

கதையை முதலில் இருந்தபடியே எடுத்துக்கொள்வோம்.ஏனெனில் படிமம் பொருத்துவ்தே நம்மில் வியாதியாகிவிட்டிருக்கிறது.ஒருகாலத்தில் நாம் ‘போர் ‘அடிக்கிறது என்று சொல்லிவந்தது போல இப்போது எதை எடுத்தாலும் ‘ஸிம்பாலிக் ‘என்பதாகச் சொல்லிவருகிறோமோ என்பதே கூட பயப்படுத்தும் ஒரு விஷயம். ஆண்பெண் உறவுகளில் பல் வியூகங்கள் சாத்தியம் என்பதனை மேற்கத்தியக் கதைகள் நிறையவே பறை சாற்றியுள்ளன.ஒரு நிறுவனத்தில் பணி செய்வது போல ஒரு பெண்ணுடன் வாழ்ந்து பின் மறுதேடல் கொள்வது மேற்கத்திய சாமான்யனுக்கே சுலபம்.ஒரு பெண்ணுக்கு மேற்பட்ட பெண்களுடன் உறவு என்பது நிச்சயம் புதிய விஷயமல்ல. ‘காஸனோவாவின் நினைவுக்குறிப்பு ‘களில் ஒரு ஆண் சில பெண்களுடனான தன் பரிச்சயங்களைப்பற்றி ஆராய்ச்சி பூர்வமான தகவல்களை ஒரு புனைகதைக்கான எல்லா சாகஸ செளகர்யங்களோடும் சொல்லியிருக்கிறான்.ஐந்து அங்கங்களை உடைய காஸனோவாவின்

நினைவுக்குறிப்புகளில் ஒருஅங்கத்துப்பாத்திரங்கள் இன்னொரு அங்கத்தில் இணைபடாமலும் ஒரே அங்கத்துக்குள்ளும் ஒருவரையொருவர் சந்திக்காமலும் காஸனோவாவுடன் மட்டுமே உறவுள்ளவர்களாயிருப்பவர்களாகவும் காட்டப்பட்டிருப்பதிலிருந்து கால்வினோவின் நோக்கம்

புரிகிறது.காஸனோவின் படிமத்தை உபயோகப்படுத்தி தம் படிமப்பெண்களை விவரப்படுத்தியிருப்பாரோ என்பதாக.பாருங்கள்,நானும் பழைய படிம வியாதிக்குத் தள்ளப்பட்டுவிட்டேன்!அது ஒரு புறமிருக்கட்டும்.

இந்தியத்தன்மையில் முதல்தாரம் இரன்டாவது தாரம் பற்றிய விவரங்களின் இடைவெளியில் குரூரமான உடலொப்புமைகள் கிழிபடும்.ஏனெனில் நம் கலாச்சார முறையில் தான் ‘பெண்புரிதல் ‘ என்கிற சடங்கே கிடையாதே!பெண்ணை வெறும் நிறமாகவும் உடலாகவும்

பார்க்கக்கற்றவர்களாயிற்றே நாம்!பெண்ணின் ஆளுமைகளை மதித்துக் கவனிக்கத்தெரிந்த வெள்ளைக்காரனின் நுட்ப விளக்கங்கள் நமக்கு அரிய செய்தி தான்.

திறந்தமனதுடன் இரு பெண்களை முன்பதிவுகள் இல்லாத உறுதியுடன் தெரிவு செய்யும்போது எவ்வளவு புதுமையும் புதிர்த்தன்மையும் ஒவ்வொரு விநாடியிலும் நீட்டுகிறது என்பதைச் சொல்கின்றன இல்டா கேட் பற்றிய குறிப்புகள்.

இரு வேறு பெண்களைக்குறித்து நம் கலாச்சாரம் முன்பதிவுகளை வழங்கி விடுகிறது.சகோதரி செய்வதை மனைவி செய்யமுடியாது.முதல்மனைவி செய்ய முடியாததை இரண்டாவது மனைவி செய்துவிட முடியும். அப்படியாகப்பட்ட பெண்ணிடமிருந்து பெண் இடைவெளிகளைத்துறக்க நிறைய சமன்பட்ட மனநிலை வேண்டும்.அழகான பெண் செய்வதை சராசரிப்பெண் செய்துவிடமுடியாது.தப்பு.அழகாகக் கற்பிதப்பட்ட பெண்களுக்குச் சிலவற்றை சில அசைவுகளைச் சுளுவாகச் செய்ய முடிகிறது.அப்படிக் கற்பிதப்படாத சாமான்யள் வேறு சிலவற்றைச் செய்தாக வேண்டியிருக்கிறது.இப்படி இருவேறு பெண்களிடம்

வேறு வேறு எதிர்பார்க்கும் ஆடவன் ஒரே பெண்நிலைக்குள் அவள் ரூபத்துக்கேற்ற அசைவுகளைச் செயல்களை எதிர்பார்க்கிறான்.

இப்படியாகப்பட்ட எதிர்பார்ப்புகளில் தன் ஆளுமையை நடமாடவிட்டு எல்லாப்பெண்களின் எல்லாச்செயல்களையும் தன் சுயபுனைவுகளாலேயே புரிந்து கொள்கிறான். மொத்தத்தில் எல்லாப்பெண்களையும் உணர்வால் இழக்கிறான்.

காஸனோவா ஒருபெண்விரும்பி.பெண்போகி.பெண்ணறிவாளராகக் குறியீடாக்கப்பட்டவர்.அவரின் நினைவுக்குறிப்புகள் என்று கட்டியம் கூறப்பட்ட குறிப்பிட்ட கதையில் பெண் மீதான மதிப்பீடு அதீதமாக இருப்பதையும் அவரவரின் நேர்மையான விளக்கச் சித்திரங்கள் தரப்பட்டிருப்பதையும் காணமுடிகிறது.ஒவ்வொரு பெண்ணும் அவள் அளவில் தனி உலகமாக,வானமாக இருப்பதையும் ஒவ்வொருத்தியின் பூகோள வான சாஸ்திர அனுபவக்குறிப்புகள் இன்னொருத்தியின் உலகம் வானத்துக்குப் பயன்படாமல் போவதையும் சொல்கிறார் கால்வினோ.

ஒருவனின் சுயவிருப்பு மறுப்பு மாறுமளவுக்குப் பெண்களின் ஆளுமை இருக்கும் என்கிறார்.ஒருத்தியிடம் சொன்ன விவரத்தை இன்னொருத்தியிடம் வேறு விதமாகச் சொல்வதிலும் ஒரே விவரத்திலிருந்து இரு வேறு கதை எடுத்து இருவருக்கும் தனித்தனியே சொல்வதிலும் கதைசொல்லி இரு பெண்களின் ஆளுமைகளிடையே நடக்கும் போரின் நேரடி சாட்சியாகிறார்.

மாறிமாறி இருந்துபோகும் இல்டா,கேட் போல அன்றி டர்ஸியும் இர்மாவும் ஒருவர்பின் ஒருவராக ஆண் மீது தடம் பதிக்கிறார்கள்.இல்லாதவளாகிப்போன டர்ஸியை இருப்பவளான இர்மா தனித்துவத்தால் மிஞ்சி பழைய டர்ஸியின் சாயல்களை அலட்சியத்துக்குள்ளாக்கி அப்படியும் எஞ்சி விழுகிற டர்ஸியின் நிழலின் தடங்கலுக்கு நாய்ப்புணர்ச்சியில் மூன்றாவது நாயை விரட்டும் ஆண்நாயின் ஆக்ரோஷப்புறக்கணிப்பை ஒத்த ஆவேச விரட்டலைத்

தருகிறாள்.இர்மாவும் இல்லாதவளாகப்போக நேரலாம் எனினும் அவள் என்றுமே இல்லாதவளாகிவிட முடியாத வலிமையைக் கொண்டிருக்கிறாள். டுல்லியாவோ எனில் இரண்டாக அவளே பிரிந்து வந்தாள் அந்த ஆணிடம்.அவனும் தன்னைத் தானே இரண்டாக வகிண்டு கொண்டான்.பழைய டுல்லியாவும் அவளுடைய ஆணும் எப்போதோ ஒருவரை ஒருவர் இழந்தவர்களாயினர் ,மீண்டும் எப்போதுமே சந்திக்க முடியாதபடி.புதிய முதிர் அழகு கூடிய டுல்லியா ரம்யமானாள்.புதிய சந்திப்பு பழையதை அழித்து விடுவதாக இருந்தது.புதியதன் ரம்யம் புதிய டுல்லியாவின் முதிர்ச்சியில் மட்டுமில்லை.அவளின் வளர்ந்த புதிய ஆணின் பக்குவத்தையும் பொறுத்திருந்தது.புதிய டுல்லியா இணை பழைய இணைக்குத்

துளியும் சம்பந்தமில்லாதது என்பது பெறப்படுகிறது.

ஸோஃபியாவைப்பற்றிக் கதைசொல்லி சொல்வது பூமியைத் தொடுகிற ஒரு இயல்புத்தன்மையுடைய பெண்ணைப்பற்றியதாவது.அவள் வெளிப்படையாக இருந்துவைத்தே மறைபட்டுப்போகிற விநோதப்பிறவி.நிறைய நூல்களையும் வலைகளையும் எறிந்துவிட்டு மறுமுனைகளைப் பிடித்துக்கொள்ளவும் சிக்கிக்கொள்ளவும் தூண்டுகிறாள்.ஆயின் அவை வெறும் நூலாகவும் வலையாகவும் மாறி அவளாக மாறிவிடாமல் விர்கின்றன.கதைசொல்லிக்குக் சிக்கினமாதிரியும் சிக்காத மாதிரியும் மீண்ட மாதிரியும்

மீளாதமாதிரியும் தோன்றுகிறது.இப்படிப்பட்ட உறவு மிகவும் அபூர்வமும் அடித்துப்போடுவதுமாகிறது.

ஃபுல்வியாவுடனான உறவு லோகாயதமான அசல் ஆண்பெண் உறவைஒத்திருக்கிறது

என்று படுகிறது.முதல் ஆணான விதத்தில் பந்தப்பட்டவனாகவும் ஒற்றை நேர வாடிக்கையாளனான விதத்தில் பந்தமில்லாதவனாகவும் ஆகிற முரண்தன்மையில் உலக உறவுகளின் தொன்மைத்தனம் புலப்படுகிறது.அதாவது கூட வாழும் பெண்ணின் உடலுக்குச் சொந்தக்காரனாகவும் உள்ளத்துக்கு மிக அன்னியனுமாகிறமுரண்பாட்டில்.முதல் சந்திப்பின் உறவிலேயே தாழ்வுணர்ச்சி,அது சார்ந்த புனைவுக்குழப்பங்கள்,பின் உயர்வுமனப்பான்மை,அது சார்ந்த கற்பனை தாபங்கள்,கடைசியில் பெண் மீதான வெறுப்பு,கோபம்,அவற்றின்

வெளிப்பாடு,அதற்கு அவள் சமநிலை,அறிவுரை,அதன் பிற்பாடான மண்டியிடல்,கண்ணீர் இவை எல்லாமே ஒரு இயல்பான கன்னித்தன்மையுடன் கதைசொல்லியைக் கையாள்வது ந்ர்ர்த்தி.ஆண்பெண் உறவு போன்ற அனைத்து ஈரிருப்புகளுக்கும்[ஆண்டான் அடிமை,உயர்ந்தவன் தாழ்ந்தவன் கெட்டவன் நல்லவன் பலவான் பலவீனன் இதர பல]இலக்கணம் விரிக்கிறது கதை.

கேட்,இல்டா பெயர்களில் இரு வெவேறு திசைகளும்,டர்ஸி,இர்மா பெயர்களில் ஒன்றன்மீது ஒன்று படிந்து போகிற குருர இம்சையின் இயல்பாக்கமும் டுல்லியாவில் ஒன்றே இரண்டாகி வெவ்வேறாகிப்போகிற யதார்த்தமும் ஸோஃபியாவில் மிக abstract ஆன,கலைந்து கலைந்து போகிற,மிகச் சில செய்திகளாலான வாழ்க்கை போல,பொருட்களை மட்டும் நினைவூட்டுகிற

பெண் போல ஒரு மர்மமும்,ஃபுல்வியாவில் மிகச் சரியான பெண் சார்ந்த ஆண்பாதிப்பை அந்த பலவீன அகங்காரத்தை ஆணவத்தை வெளிப்பாடாக்கும் நுட்பவழியும் பெறப்படுகின்றன.

காஸனோவாவின் நினைவுக்குறிப்புகள் அந்த தலைப்பின் முழுப்பொருளை ஒட்டி பலதார உறவை நாடும் ஆணாதிக்க மனப்பான்மையின் கைச்சாட்சி என்றாலும் விவரங்களின் மாயச்சூழலில் நம்மை இழக்காமல் அறிவு வழிப்பயணித்தால் மிகப்பெரிய நுண்காட்சி புலப்படலாம்.இதையே நிலையெதிர் மாற்றம் செய்து ஒரு பதிவு செய்யப்பட முடியுமா அந்த அளவுக்கு ஆண்தன்மைகளில் ஆழத்தையும் வித்யாசத்தையும் கண்டுவிடமுடியுமா அப்படி ஒரு விவரத்தை அதன் நேர்மையையும் மீறிப் புனைவாகக்கூட ஏற்கக்கூடிய மனநிலையை ஆணாதிக்க மனப்பான்மையும் பெண்பாசாங்குகளும் கொண்ட நிகழ் தாங்குமா என்பது மனசில் ஓடும் மிகப்பெரிய சர்ச்சை.

போர்களும் கலகங்களும் ஒற்றர்களையும் அகதிகளையும் பிச்சைக்காரர்களையும்

நிறைத்திருக்கும் இந்தச்சூழலில் இதமும் வெதுவெதுப்பும் கொண்ட படுக்கைக்கான

அருமைத்தன்மையை விவரிக்கும் ‘நாய்களைப்போலத் தூங்குதல் ‘மிகவும்

தொடர்பான செறிவு.படுக்கையைப் பொறுத்தது நல்ல தூக்கம்,நல்ல

தூக்கத்தைப்பொறுத்தது நல்ல எண்ணம்,குணம்,பேச்சு,செயல் என்ற விதத்தில்

பயணத்திடைத்தூக்கம் கூட எவ்வளவோ முக்கியம் மிக அதிர்வூட்டும் விதத்தில்

சொல்லப்படுகிறது.

தனிமை விரித்துப்போகும் மனவக்கிரங்களைக் குரூரங்களை விவரிக்கும் மனவியல் ரீதியான பதிவாக ‘தேன்கூடுகள் நிறைந்த வீடு ‘அமைகிறது.

‘மனச்சாட்சி ‘என்ற கதை தனிமனித நோக்கம் புனிதமல்லாதது என்பதைச்சொல்வது.அப்படியே ஒட்டுமொத்தமாகச் சேர்ந்த சுயநலங்களே போர்க்காரணங்களாகின்றன என்பதையும் சொல்லாமல் சொல்லுவது.

‘வாத்துக்களின் பறத்தல்போல ‘ கதையில் விஷயம் புதிதல்ல.சொல்முறை அற்புதமாக இருந்தபோதிலும்.கைதியின் புத்திமாறாட்டத்தைச் சோதிக்க அடிப்படைத்தேவைகளில் அவன் முனைப்பைக்கண்டறிவது பலகாலமாக நடைமுறையில் இருப்பது.இதே கதையை ஒரு படமாக்கத்தில் கூடப் பார்த்த நினைவு.1999 உலகத்திரைப்படவிழாவில் பார்த்ததாக ஞாபகம்.

‘எழுத்தரின் சாகஸம் ‘ கதையிலும் கூட வழக்கமான கால்வினோ பதிவு.பெண்ணுறவின் நினைவுகள் ஆணின் அன்றாட நிகழ்வுகளில் ஏற்படுத்தும் விடலைத்தனமான பாதிப்புகளைச்சொல்வது.ஆழக்குறைவு இதன் அழகியல் அம்சம்.

‘ஒரு திருடனின் சாகஸம் ‘யதார்த்தமுள்ள விநோத உறவின் பகிர்தல் சொல்லும் கதை.

‘நிலைக்கண்ணாடிஇலக்கு ‘என்கிறபூடகக்கதைமிகஅழகாகச்சொல்லப்படும் ஒரு மானுடபுத்திப்பயணம்.லட்சியமும் வாழ்வியலும் உருவகப்பட்டு ஒட்டில்லா,கொரின்னா என்ற பெயர்களில் பெண்மை பூண்டு ஃபுல்கன்ஸியோவை அலைக்கழிக்கின்றன என்று யூகிக்கிறேன்.

ஒரே ஒரு சிறுகதை நூறாயிரம் ஒத்த கதைகளை நினைவுறுத்தும் அதிசயத்தை அனுபவித்ததுண்டா ? ‘செய்யவைத்தல் ‘ கதையைப் படித்துப்பாருங்க்ள்.புரிந்துவிடும்.

‘பெட்ரோல் நிலயம் ‘ஒரு வித்யாசமான கதை.எதிலெனில் வெளிப்படவே ஆரம்பிக்கிற கதை பின் எப்படியோ பெண் சார்ந்த பூடகத்தில் முடிகிறது.Absatract அம்சங்கள் குறைவான கதை என்று சொல்லவைக்கிறது.அதுவே ஏதோ ஒரு சொல்லப்படாத abstract தன்மைக்கு

இழுத்துச்செல்வதாகவும் கூட.

‘ஒருநகரத்தின் காற்று ‘ என்ற கதை மிக வலிமையுள்ள,ஒரு கடலையே மடுத்துச் சுருட்டி அடைத்துக்கொண்டிருக்கிற பதிவு.டிராம்களில் மாறிமாறி அடாஇடாவுடன் [Ada ida]கதைசொல்லி பேசிக்கொண்டு போவது நம் நிஜ வாழ்வின் நிறையசம்பாஷணைச்சங்கிலிகளைஞாபகப்படுத்துகிறது.அலுவலகங்களில் நாம் தினம் பார்க்கும் ஆண்பெண்களோடு,ஏதோ ஒரு வகையில் பழைய பேச்சுக்களுக்கும் இன்றைய வெளிப்பாட்டுக்கும் தொடர்பு வைத்தும்,சிலசமயம் தொடர்பின்றியும்,கோர்த்துப்போகிற இணைப்புச் சங்கிலிகளை வெகுவாக நினைவூட்டுகிறது.பெண்களின் இயல்பு பற்றி,பெண்களே அறியாத, ஒருவருக்கொருவர் கவனிக்கப்படவோ,சொல்லிக்கொள்ளப்படவோ மாட்டாத

குறிப்புகள் ஆச்சர்யப்படுத்துகின்றன.சம்பாஷணைக்காதலில் [அதாவது பேசிக்கொள்வதை மட்டும் காதலித்துப்போகிற] சுயம் இழந்து மூழ்கிப்போவதைக் கடைசிப்பகுதி கிண்டலடிக்கிறது.இந்தவிதமான கால்வினோவின் கூர்ப்புள்ள கவனித்தலை எந்த விசேஷ வகையில்சேர்ப்பது ?என்ன பெயரில் அழைப்பது என்றே புரியவில்லை. ‘ஒரு நகரத்தில் காற்று ‘கதையின் மொழி என்னைக் கவர்ந்திழுத்து வசப்படுத்திக் கொள்கிறது.அதிர்வுத்

தன்மையோ அழகியலோ அங்கங்கே தென்படாமல் பாலில் பாலடைக்கட்டி போல

உள் உறைந்து நம் மனசின் எலுமிச்சை ரசாயனத்தால் மட்டுமே பிரிந்து உருவப்படுவதாக அமையும்போது ,நம் பிரயத்தினம் வெகுவாகத் தேவைப்படும்போது மலைப்பாக இருக்கிறது.

கடந்த பத்தாண்டுகளில் வந்த நிறைய தமிழ்ச்சிறுகதைகளுக்கு நெருக்கமாக இருக்கிற ஒரே கதை ‘ஒரு திருமணமான தம்பதியரின் சாகஸம் ‘.வேலைக்குப்போகிற தம்பதியின் நேசக்குறைவையும் அதன் விளைவான உணர்வு மழுங்கலையும் எண்ணச்சோர்வையும் பேசுவது.ஆனால் நம் சமகாலச் சிந்தனை அரிவாளெடுத்துப்பிளப்பதை கால்வினோ மென்மையாகச் சிறு வத்திக்குச்சிப் பின்புறத்தால் கீறி வெண்ணைச்சிற்பம் போலக்கொண்டு வந்திருக்கிறார்.வடிவை மிக நேர்த்தியாக வார்த்திருக்கிறார்.

‘காண்ட்டானில் பார்த்தது ‘ இன்னொரு அற்புதமான கதை.கதை சொல்லியின் நிழற்படம் அருமை.புரிதலின்மை என்கிற மொண்ணைத்தன்மையின் நோய்பீடிப்பு மிகப்பெரிய சோகம்.நிலையெதிராக நாகரிகத்தின் உச்சம் நிறுத்தப்பட்டு வித்யாசம் சிலாகிக்கப்படுகிறது.

பின்நவீன எழுத்தின் அறிமுகத்துக்கு கால்வினோ பெரிய வழிகாட்டி ஆகிறார்.

2003கடைசியில் வெளிவந்திருந்தும் இன்றும் புத்தகக்கண்காட்சியில் மிக முக்கியமான புத்தகமாக நண்பர் டைரக்டர் மணிஸ்ரீதர் குறிப்பிட எனக்கு இந்தக் கட்டுரையை மறு உபயோகம் செய்யத் தோன்றியது.

இன்னொரு கதைச்சுருக்கம் [15க்கு மட்டும்]கீழ் வருமாறு.

1.தெரசா என்று கத்திய மனிதன்

வீதியில் நின்றுகொண்டு ஒருவன் தெரசாவின் பேரைச்சொல்லி எதிரிலுள்ளஅடுக்கு மாடிக்கட்டிடம் நோக்கிக் கத்தி கூப்பிடுகிறான்.பார்த்தவர்கள் அவனோடு சேர்ந்து கத்துகிறார்கள்.ஒருகட்டத்தில் விசாரணைகளூடே தெரசா என்று யாருமில்லை என்று சொல்லி இடம்விட்டுக் கிளம்புகிறான்.அவன் போன பின்னும் சிலர் தெரசாவைக்கூப்பிட நின்றிருக்கிறார்கள்.

2.வீட்டின் சேய்மையிலிருந்து காதல்

பயணிகன் ஒருவன் எங்கோ ஒரு ஊரில் சந்திக்கும் மரியமரெல்லாவிடம் தன்

உணர்வுகளையும் சில பெண்சார்ந்த அனுபவங்களையும் பகிர்ந்து கொள்கிறான்.

3.காஸனோவாவின் நினைவுக்குறிப்புகள்

காஸனோவா என்கிற குறியீட்டுப் பெண்விரும்பி சில பெண்களைப்பற்றிய நினைவுகளை ஐந்து வெவ்வேறு பகுதிகளில் பதிவு செய்வதாக ஆன கதை.[விசேஷம் என்னவென்றால் எதிலும் பெண்ணின் தோற்றம்,அவயவம் பேசப்பட்டிருக்காது]

4.நாய்களைப்போலத் தூங்குதல்

ஒரு ரயில் நிலையத்தின் மூலையில் குளிரில் படுக்கையின்றி படுத்துத் தூங்க முயன்ற சில பயணிகளின் அனுபவம் தான் கதை.

5.தேனிக்கூடுகள் நிறைந்த வீடு

மனிதர்களை வெறுத்துத் தனியே வசிக்கும் ஒருவனின் சிந்தனைகள் வாக்குமூலங்கள் தாம் கதை

6.மனசாட்சி

ஆல்பர்ட்டோ என்பவனைக்கொல்லத் தூண்டின தனிமனித விரோதம் காரணமாக போர்ப்படையில் சேர்ந்த லூய்கி சுயகாரணம் எதுவுமின்றிப் பலபேரைப் போரில் கொன்று பதக்கங்களைக்குவித்துக் கொள்கிறான்.எதிரி சரணடைந்தபின் சமாதான காலத்தில் ஆல்பர்ட்டோவைக் கொன்று தூக்குத் தண்டனை பெறுகிறான்.

7.வாத்துக்களின் பறத்தலைப்போல

போர்,பிணைக்கைதி,விடுவிப்பு,தாக்குதல்.மீண்டும் போர்,மத்தியில் அரைசமாதானம் போன்ற சுழற்சிகளின் மயக்கநிலையில் பொறிகலங்கின மனிதம் படும் பாடு தான் கதை.நதாலே என்கிற கைதியின் தலைக்காயமும் அவன் உணர்கிற வாத்து பறத்தலின் படபடப்பும் தான் பெயர்க்காரணம்.

8.ஒரு எழுத்தரின் சாகஸம்

வழக்கமான கால்வினோவின் பாணியிலான கதை.ஒரு பிரும்மச்சாரி எழுத்தன் முன்னிரவில் கண்ட பெண்ணின்பத்தை அடுத்த பகலில் அசை போடுவதை விளக்குகிற கதை.மிக சாதாரண நாள் அது.எனினும் அவனின் ஒற்றை சுகானுபவம் எத்தனை பரிமாணங்களை அவனுக்கு மீட்டுத் தருகிறது!எந்த நாளும் அது தொடரப்போவதில்லை என்ற போதிலும் கூட!அவனது சிந்தனைகள் அவயவப்படாமல் கருத்துப்படாமல் கதைப்படாமல் வெறும் வெளிப்பாட்டுருவில்

வருவது கவனிக்கப்படத் தக்கது.

9.ஒரு திருடனின் சாகஸம்

விலைமகளின் வீட்டில் ஒளிந்துகொள்ளும் திருடன் போலீஸ் கதை இது.விநோதமான உறவு உணர்வுப்பகிர்தல்களுடன்.நிறைய வசப்படாத காடுகளின் புரிதல் வீசும் மின்னல் கீற்றுகள் வைத்திருப்பது.

10.நிலைக்கண்ணாடி,இலக்கு

ஒரு விடலையின் கண்ணாடி முன் சேஷ்டை விளக்கும் படிமச் சிந்தனைகள் ஆரம்பம்,அவனின் முன்னெடுப்புகளும் முடிவுகளும் தாம் கதை.

11.செய்யவைத்தல்

எல்லாமே தடை செய்யப்பட்ட நகரத்தில் தள்ளுபூனை விளையாட்டு ஆட சுதந்திரமிருந்தது.அதை ஆடிக்கொண்டே ஜனங்கள் காலம் கழித்துப்பின் அதிலேயே வெறியாகிப்போனார்கள்.பின் ஆட்சி மாறி,சட்டங்கள் மாறி,எல்லாமும் செய்யப்பட உரிமைகள் தரப்பட்டன.ஆனால் ஜனங்கள் தள்ளுபூனை ஆட்டத்திலேயே திருப்தியோடு நிமிடம் இடையின்றி ஆடினார்கள்.அரசாங்கம் தள்ளுபூனை ஆட்டத்தைத் தடை செய்து விட ஜனங்கள் நிர்வாகத்தினரைக் கொன்று போட்டு மீண்டும் தள்ளுபூனை ஆட்டத்துக்குப் போய்விட்டார்கள்.அவ்வளவு தான் கதை.

12.பெட்ரோல் நிலையம்

இயற்கையின் வளங்கள் மனிதனுக்கு முடிந்து போய் அவன் தேவைகளைத் தேடி விரட்டப்படப் போகிற அபாயங்களைத் தெளிவாகச் சொல்லும் கதை.மீண்டும் கதை சொல்லியின் சிந்தனைகளாக சம்பவச்சார்பின்றி அமைந்த கால்வினோ பாணி.கடைசியில் தன்னைக் கவர்ந்த இளம்பெண்ணுக்காகச் சிறிதளவும் எரிபொருள் தரமுடியாமல் போகிற இளைஞனாகக் கதைசொல்லி பெட்ரோல் நிலையத்தில் நிற்கிறான்.

13.ஒரு நகரத்தில் காற்று

காற்று கழிப்பறை போன்ற சாதாரண விஷயங்களில் மிகத் தீவிரமான உருவகச் செய்திகளைச் சொல்லி அதிர்வித்து அடாஇடா என்கிற பெண்ணுடன் டிராம் பயணங்களில் நிகழ்த்தும் சம்பாஷணைகளையும் அதனூடே நிறைய பெண்சார்ந்த பதிவுகளையும் வைத்திருக்கிறார் கால்வினோ.படித்து மட்டுமே அனுபவிக்கமுடியும் இந்தக் கதையின் சிறப்பை.

14.ஒரு திருமணமான தம்பதியரின் சாகஸம்

வேலைக்குப்போகும் தம்பதிகளின் சிரமங்களைக் கூர்மையாகச் சொல்வது.அவர்களின் ஒரு நாள் கதைப்படுகிறது.அவன் வீடு வந்ததும் அவள் வெளிக்கிளம்ப அவள் வந்து சேர்ந்ததும் அவன் அலுவலுக்குக் கிளம்பும் நடைமுறை விநோதம்.

15.காண்ட்டானில் பார்த்தது

சம்பந்தமில்லாத இருவர்,ஒரு விதரணையில்லாத பெண்,பணக்கார விதவை போல தோற்றமளிப்பவள்,ஒரு கண்ணியமுள்ள பென்ஷனர்,இருவரும் ஒரே மேசையில் ஒரு காண்ட்டானில் உணவு உட்கொள்ளுவதையும் மரியாதை நிமித்தம் ஏதோ பேசுவதையும் விளக்கும் கதை.

2.2.2002ல் பிரம்மராஜனின் கைப்பிரதி படித்து எழுதியது.பின்னால் 3 கதைகள் சேர்க்கப்பட்டுள்ளன.

மாலதி[சதாரா]

malti74@yahoo.com

Series Navigation

மாலதி

மாலதி