ஆழ்வார் பாசுரங்களில் பக்தி ரஸம் – 3

This entry is part [part not set] of 31 in the series 20080828_Issue

‘என்றென்றும் அன்புடன்’ பாலா


By
******************************
திருப்பாணாழ்வார், பிறவாது பிறந்த தெய்வக் குழந்தையாய், உறையூரில் அவதரித்தவர். குழந்தைப் பேறு இல்லாத பாணர் குலத்தவர் ஒருவரால் அன்போடு பேணி வளர்க்கப் பட்டவர். அவர் புகுந்த குலத்தில் பிரசத்தி பெற்ற யாழ் இசையில் சிறு வயதிலேயே மிகுந்த தேர்ச்சி பெற்றதனால், ‘பாணர்’ என்றே அழைக்கப்பட்டார்.

ஒரு சமயம், அரங்கனைப் பற்றிப் பாடி, திருத்தொண்டு செய்ய விழைந்து, தான் தாழ்த்தப்பட்ட குலத்தவர் என்பதால், திருவரங்கத்திற்குள் நுழையத் துணியாமல், காவிரியின் தென்கரையில் நின்றபடி, அரங்கநாதரே பேருவகை கொள்ளும் வண்ணம், அற்புதமாக பல நாட்கள் பாடிக் கொண்டு இருந்தார்.
அங்கு வந்த குலப்பித்து மிக்க மாந்தர் அவரை எட்டிச் செல்லுமாறு பலமுறை பணிக்க, அரங்கனின் பக்தியில் திளைத்து, மோன நிலையில் நின்ற ஆழ்வார் அதைப் பொருட்படுத்தவில்லை.சினமுற்ற அவர்கள், பாணர் மீது கல்லெறிந்தும், பக்திப் பரவசத்தில் இருந்த அவர், அவ்விடத்திலிருந்த அகலாமல் நின்றதைக் கண்டு அஞ்சி அகன்றனர்.

இச்செய்கையால், திருவுள்ளம் கலங்கிய, கோயிலில் எழிந்தருளிய ஸ்ரீரங்கப் பெருமானின் திருமேனியில் குருதி பெருக்குற்றது. பாணர் திருவரங்க நகரில் அடியெடுத்து வைக்க மறுத்ததால், அரங்கனே, அந்தணர் குலத் தலைவரான ஸோகஸாரங்க முனிவரை அழைத்து, பாணரை தோளில் சுமந்து தன் முன் அழைத்து வருமாறு பணித்தார்!

அவ்வாறே, மிகுந்த நிர்பந்தத்தின் முடிவில், ஸாரங்கனின் தோளில் ஏறி, திருமாமணி மண்டபத்தில் வீற்றிருந்த அரங்கநாதப் பெருமான் முன் வந்திறங்கிய திருப்பாணாழ்வார், அரங்கனை தரிசித்த திவ்ய அனுபவம் தந்த பேருவகையில், திருவாய் மலர்ந்தருளிய ‘அமலனாதி பிரான்’ பாசுரங்களுக்கு ஈடு இணை கிடையாது!!!

அப்பாடல்கள் சிலவற்றைக் காணலாம்!

அமலன் ஆதிபிரான் * அடியார்க்கு என்னை ஆட்படுத்த-
விமலன், *விண்ணவர் கோன் *விரையார் பொழில் வேங்கடவன்,*
நிமலன் நின்மலன் நீதி வானவன், *நீள்மதிள் அரங்கத்து அம்மான், *திருக்
கமல பாதம் வந்து* என்கண்ணினுள்ளன ஒக்கின்றதே.

துண்ட வெண்பிறையான்* துயர் தீர்த்தவன்* அஞ்சிறைய-
வண்டுவாழ் பொழில்சூழ்* அரங்கநகர் மேய அப்பன்*
அண்டர் அண்ட பகிரண்டத்து* ஒரு மாநிலம் எழுமால்வரை, *முற்றும்-
உண்ட கண்டம் கண்டீர் *அடியேனை உய்யக்கொண்டதே.

கையினார் *சுரி சங்கனல் ஆழியர்,* நீள்வரை போல்-
மெய்யனார் *துளப விரையார் கமழ் நீள் முடியெம்
ஐயனார்,* அணியரங்கனார் *அரவின் அணைமிசை மேய
மாயனார்,*செய்ய வாய் ஐயோ.* என்னைச் சிந்தை கவர்ந்ததுவே.
*************************************************
சேரநாட்டில், கோழிக்கோடு ஸ்தலத்தில், அரச வம்சத்தில் பிறந்த குலசேகரன், பகவான் ஸ்ரீராமபிரான் பேரில் தீவிர பக்தி கொண்டவர். ராமாயண கதாகாலட்சேபம் நடந்த சமயங்களில் கூறப்பட்டவற்றை, ராமர் மேல் அவருக்கிருந்த அன்பினால், வெகு காலத்திற்கு முன் நடந்தேறிய ராம வரலாற்றை அன்று தான் நடப்பதாக எண்ணிக் கொள்ளும் வழக்கம் உடையவர் இந்த ஆழ்வார்!

இதனால், அவரிடம் ராமகதையை விவரிப்பவர்கள், ராமருக்கு துன்பம் நேர்ந்த பாகங்களை சுருக்கியும், ராமரின் கீர்த்தியையும், வீரத்தையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தும் பாகங்களை விரிவாகவும் உரைத்து வந்தனர்! பெருமாளுடைய (ஸ்ரீராமர்) இன்ப துன்பங்களை தனது சுகதுக்கங்களாக கருதியதால் குலசேகரருக்கு ‘பெருமாள்’ என்ற திருநாமமும் உண்டு.

இவர் இயற்றிய பெருமாள் திருமொழியில், ராமனை குழந்தையாக பாவித்து தாலாட்டு பாடுவது போல் அமைந்த மிக அழகிய பாசுரங்கள், ராமன் மேல் அவருக்கிருந்த பேரன்பில் விளைந்தவை!

அவற்றில் சில:

மன்னுபுகழ் கௌசலைதன்* மணிவயிறு வாய்த்தவனே*
தென்னிலங்கை கோன்முடிகள்* சிந்துவித்தாய் செம்பொன்சேர்*
கன்னி நன்மாமதிள் புடைசூழ்* கணபுரத்தென் கருமணியே*
என்னுடைய இன்னமுதே* இராகவனே தாலேலோ
மலையதனால் அணைகட்டி* மதிளிலங்கை அழித்தவனே*
அலைகடலைக் கடைந்து* அமரர்க்கு அமுதருளிச் செய்தவனே*
கலைவலவர் தாம்வாழும்* கணபுரத்தென் கருமணியே*
சிலைவலவா சேவகனே* சீராம தாலேலோ

தளையவிழும் நறுங்குஞ்சித்* தயரதன்தன் குலமதலாய்*
வளைய ஒரு சிலையதனால்* மதிளிலங்கை அழித்தவனே*
களைகழுநீர் மருங்கலரும்* கணபுரத்தென் கருமணியே*
இளையவர்கட்கு அருளுடையாய்* இராகவனே தாலேலோ
தேவரையும் அசுரரையும்* திசைகளையும் படைத்தவனே*
யாவரும் வந்து அடிவணங்க* அரங்கநகர்த் துயின்றவனே*
காவிரிநல் நதிபாயும்* கணபுரத்தென் கருமணியே*
ஏவரிவெஞ் சிலைவலவா* இராகவனே தாலேலோ

அடுத்து வரும் இரு பாசுரங்கள், அவரது பேரன்பு விளைத்த சொல்லாட்சியை பறை சாற்றுகின்றன!
பொய்சிலைக் குரலேற்று ஒருத்தமிறுத்து* போரர வீர்த்தகோன்*
செய்சிலைச்சுடர் சூழொளித்* திண்ணமாமதிள் தென்னரங்கனாம்*
மெய்சிலைக் கரு மேகமொன்று* தம் நெஞ்சில் நின்று திகழப்போய்*
மெய்சிலிர்ப்பவர் தம்மையே நினைந்து* என்மனம் மெய் சிலிர்க்குமே!

ஆதி அந்தம் அனந்த அற்புதமான* வானவர் தம்பிரான்*
பாதமாமலர் சூடும் பத்தியிலாத* பாவிகள் உய்ந்திட*
தீதில் நன்னெறி காட்டி* எங்கும் திரிந்து அரங்கன் எம்மானுக்கே*
காதல் செய்தொண்டர்க்கு எப்பிறப்பிலும்* காதல்செய்யும் என் நெஞ்சமே!

இவ்வாழ்வார் எழுதிய கீழுள்ள பாடலினால், விஷ்ணு ஆலயங்களின் உள்வாயிற்படி, “குலசேகரன் படி” என்றே இன்றும் அழைக்கப்படுகிறது!
செடியாய வல்வினைகள் தீர்க்கும்* திருமாலே*
நெடியானே வேங்கடவா* நின்கோயிலின் வாசல்*
அடியாரும் வானவரும்* அரம்பையரும் கிடந்தியங்கும்*
படியாய்க் கிடந்து* உன் பவளவாய் காண்பேனே

என்றென்றும் அன்புடன்
பாலா


balaji_ammu@yahoo.com

Series Navigation

பாலா

பாலா

ஆழ்வார் பாசுரங்களில் பக்தி ரஸம் – 2

This entry is part [part not set] of 26 in the series 20050722_Issue

பாலா


திருமங்கையாழ்வார், திருவாலி திருநகரி என்கிற வைணவ திவ்யதேசத்தின் அருகில், திருக்குறையலூரில், கள்ளர் குடியில்

அவதரித்தவர். இவருக்கு நீலன், பரகாலன், கலியன் என்ற திருநாமங்களும் உண்டு. இவரது வீர தீர பராக்கிரமத்தை அறிந்த

சோழராஜன் இவரை தனது தளபதியாக்கி, பின்னர் திருமங்கை நாட்டுக்கு அரசராக முடிசூட்டினான்.

பின்னாளில், பேரழகும் நற்குணமும் கொண்ட குமுதவல்லியின் மேல் மையல் கொண்டு அவளையே திருமணம் செய்யும் பொருட்டு

வைணவராகி, அடியார்க்கும், வைகுந்தனுக்கும் தொண்டு செய்து, அவளது அன்புக்கு உகந்தவராகி அவளை மணமுடித்தார். ஒரு

சமயம் அனைத்தும் இழந்து ஏழையான அவர், அடியார்க்கு தொடர்ந்து தொண்டு செய்ய வேண்டி, வழிப்பறி செய்து வந்தார்.

ஒரு முறை, திருநறையூரில் எழுந்தருளியிருக்கும் பெருமானே, பல வகை அணிகலன்களுடன் மாறுவேடம் பூண்டு ஆழ்வாரின் பாதையில் குறுக்கிட்டார். ஆழ்வாரோ பெருமானிடமே களவு செய்து, கைப்பற்றியதை ஒரு மூட்டையாகக் கட்டி தூக்க முற்பட்டபோது அது மலையளவு கனக்கவே, ‘நீர் யார் ? என்ன மாயமந்திரம் செய்தீர் ? ‘ என்று பெருமானையே அச்சுறுத்தினார்.

பெருமான் அவர்க்கு தன் சுயரூபம் காட்டி, அவரை ஆட்கொள்ளவே, அன்றிலிருந்து திருமங்கையாழ்வார் உலக பந்தத்தை விட்டொழிந்தார். அதன் பின், வைகுண்டநாதன் மேல் அவருக்கிருந்த அதி தீவிர அன்பின்/பக்தியின் வெளிப்பாடாக, பல தெய்வீகப் பாசுரங்களை இயற்றியது நாம் அறிந்ததே!

அவரது பெரிய திருமொழியிலிருந்து இரு அழகிய எளிய பாசுரங்கள் அவர் உலகப்பற்றை விட்டொழித்ததை கூறுகின்றன.

பொறுத்தேன் புன்சொல் நெஞ்சில் பொருளின்பமென விரண்டும்

இறுத்தேன் * ஐம்புலன்கட் கடனாயின வாயிலொட்டி

யறுத்தேன் * ஆர்வச் செற்றமவை தன்னை மனத்தகற்றி

வெறுத்தேன் * நின்னடைந்தேன் திருவிண்ணகர் மேயவனே!

தாயே தந்தையென்றும் தாரமே கிளைமக்கள் என்றும்

நோயே பட்டொழிந்தேன் நுன்னைக் காண்பதோர் ஆசையினால்

வேயேய் பூம்பொழில் சூழ் விரையார் திருவேங்கடவா!

நாயேன் வந்தடைந்தேன் நல்கி ஆள் என்னை கொண்டருளே.

அடுத்து வரும் பாசுரத்தில் பெருமாள் மேல் அவருக்கிருந்த, பிரவாகமாய் பொங்கியெழும் அன்பை/பக்தியை உணரலாம்!

திருவுக்கும் திருவாகிய செல்வா!

தெய்வத்துக்கரசரே! செய்யகண்ணா!

உருவச் செஞ்சுடராழி வல்லானே!

உலகுண்ட வொருவா திருமார்பா!

ஒருவற் காற்றியுய்யும் வகையன்றால்

உடனின்னறவ ரென்னுள் புகுந்து* ஒழியா

தருவித் தின்றிடவஞ்சி நின்னடைந்தேன்

அழுந்தூர் மேல்திசை நின்ற வெம்மானே!

****

ஆழ்வார்களில் தலையானவர் எனக் கருதப்படுவதால் ‘நம் ஆழ்வார் ‘ எனப் பெயர் பெற்ற இவர் வேளாள வம்சத்தில் அவதரித்த வைணவ வித்து! இவரது பாசுரங்களில் பக்திப் பேருவகையும் (ecstasy through devotion) ஸ்ரீவைகுண்டநாதன் மேல் நம்மாழ்வருக்கு இருந்த கடலை ஒத்த பேரன்பும் காணப்படுகின்றன.

ஒரு சமயம், மகாவிஷ்ணு அலைமகள் சமேதராய், கருடவாஹன ரூபராய்

நம்மாழ்வாரை அருள் பாலிக்க எதிர் வந்து நிற்க, ‘கருமுகில் தாமரைக்காடு பூத்து நீடிரு சுடரிரு புறத்தேந்தி ஏடவீழ் திருவொடும்

பொலிய ஓர் செம்பொற்குன்றின் மேல் வருவ போல் கலுழன் மேல் வந்து தோன்றிய ‘ பெருமாளின் திருவடி பணிந்து ஆனந்த வெள்ளத்தில் ஆழ்ந்தார்.

அதோடு நில்லாமல், பாற்கடல் வாழ் அரங்கன், 108 வைணவத் திருப்பதிகளில் கொண்ட திருக்கோலங்களோடு காட்சியளித்தது

நம்மாழ்வார் ஒருவருக்கே!!! நம்மாழ்வார் நான்கு வேதங்களின் சாரங்களையும் முறையே, திவ்யப் பிரபந்தத்தில் வரும் திருவிருத்தம், திருவாசிரியம், திருவாய்மொழி மற்றும் பெரிய திருவந்தாதி ஆகியவற்றில் அமைந்த திவ்யப் பாசுரங்கள் வாயிலாக வெளியிட்டுள்ளார்.

அவரது பாசுரங்கள் சிலவற்றை காணலாம்.

ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி

வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்

தெழிகுரல் அருவித் திருவேங்கடத்து

எழில்கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே.

பதவுரை:

உலகில் வாழ்கின்ற காலம் முழுதும் எம்பெருமான் அவனருகில் இருந்து, குறைவிலாத தொண்டு நாம் செய்ய வேண்டும்! இனிய ஒலியுடன் விழும் அருவிகள் நிறைந்த திருவேங்கடமலையில் வீற்றிருக்கும், அழகிய தீபத்தை ஒத்த எம்பெருமானே என் தந்தையாவான்!

குன்றம் ஏந்தி குளிர்மழை காத்தவன்

அன்று ஞாலம் அளந்த பிரான் பரன்

சென்று சேர் திருவேங்கட மாமலை

ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே!

பதவுரை:

ஒரு முறை குன்றை குடையாக ஏந்தி, ஆயர்குலத்தவரை பெருமழை, காற்றிலிருந்து காத்தவனும், வாமனனாக தன் திருவடிகளால் உலகை அளந்தவனுமான திருவேங்கடம் வாழ் பெம்மானை அடைந்து இடைவிடாது வேண்டினால், நம் அல்லல்களும் பாவங்களும் நம்மை விட்டு ஒழிந்திடுமே!

ஓயும் மூப்புப் பிறப்பு இறப்புப் பிணி

வீயுமாறு செய்வான் திருவேங்கடத்து

ஆயன் நாள் மலராம் அடித்தாமரை

வாயுள்ளும் மனத்துள்ளும் வைப்பார்கட்கே!

பதவுரை:

திருவேங்கடம் வாழ் பெருமான் தனது தாமரை மலரை ஒத்த திருவடிகளை ஒவ்வொரு நாளும் வாயால் போற்றியும் மனத்தினால் துதிக்கவும் செய்யும் அடியார்களை, முதுமை, பிறப்பு, இறப்பு ஆகிவற்றிலிருந்து நிரந்தர விடுதலை அளித்து தன்னோடு ஏற்றுக் கொள்வான்!

உலகம் உண்ட பெருவாயா! உலப்பு இல் கீர்த்தி அம்மானே!

நிலவும் சுடர் சூழ் ஒளிமூர்த்தி! நெடியாய்! அடியேன் ஆருயிரே!

திலதம் உலகுக்கு ஆய் நின்ற திருவேங்கடத்து எம்பெருமானே!

குலதொல் அடியேன் உன் பாதம் கூடும் ஆறு கூறாயே!

பதவுரை:

ஒரு சமயம் ஆயர்பாடிக் கண்ணனாய், உலகங்களை உன் திருவாயில் அடக்கியவனே! ஒப்பிலா புகழ் கொண்ட பெருமானே! சோதியால் சூழப்பட்டது போல் ஒளி மிகுந்த திருமேனி கொண்டவனே! உயர்ந்தவனே! என் உயிருக்கு ஒப்பானவனே! இவ்வுலகை காத்து நிற்கும் திருவேங்கடமுடையானே! அடியேன் உன் திருப்பாதங்களை வந்தடையும் வழிமுறையைக் கூறுவாயாக!

என்றென்றும் அன்புடன்

பாலா

balaji_ammu@yahoo.com

ஆழ்வார் பாசுரங்களில் பக்தி ரஸம் – 1

Series Navigation

பாலா

பாலா

ஆழ்வார் பாசுரங்களில் பக்தி ரஸம்

This entry is part [part not set] of 59 in the series 20041223_Issue

பாலா


திராவிட வேதம் என்று அழைக்கப்படுகிற திவ்யப்ரபந்தத்தில் வரும் பல பாடல்களில் காணப்படும் பக்தி ரஸமும் வைகுந்தன் மேல் ஒருவித அதிதீவிர அன்பும் பூரண சரணாகதி தத்துவமும் தமிழில் வெறெந்த பக்தி இலக்கியத்திலும் இவ்வளவு அழகாகவும், எளிமையாகவும் சொல்லப்படவில்லை என்று தோன்றுகிறது.

கீழுள்ள ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரங்களில் ‘நாராயணனே யாதுமாய் நிற்கிறான், அவனே எனக்கு சகலமும்! ‘ என்ற கருத்து எவ்வளவு அருமையாகக் கூறப்பட்டுள்ளது என்று பாருங்கள்!

கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்*

அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க் குலத்து உன்தன்னைப்*

பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்*

குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா* உன்தன்னோடு-

உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது*

அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னை*

சிறு பேர் அழைத்தனவும் சீறி அருளாதே*

இறைவா நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்

பதவுரை:

‘பசுக்களை மேய்த்தபடி, காடு சென்று, அங்கு ஒன்று கூடி உண்ணும், சொற்ப அறிவு படைத்த நாங்கள், ஆயர்குலத்தினில் பிறந்த உன்னை எங்கள் குலத்தவனாக பெற்றடைய பெரும் புண்ணியத்தை செய்துள்ளோம். யாதொரு குறையும் இல்லாத, ‘கோவிந்தன் ‘ என்னும் பெயரினைக் கொண்ட கண்ணனே! உன்னுடன் எங்களுக்கு ஏற்பட்ட உறவை, யாராலும் அழிக்க முடியாது. அற்ப அறிவுடைய சிறுமியரான நாங்கள், உன்னிடம் கொண்டுள்ள மிகுந்த அன்பினால் உன்னை (நாராயணன், மாயன், மாதவன் போன்ற) சிறிய பெயர்களினால் ஒருமையில் அழைத்தமைக்கு கோபித்துக் கொள்ளாமல், நாங்கள் வேண்டி வந்த பொருட்களைத் தந்து அருள வேண்டுகிறோம். ‘

சிற்றம் சிறு காலே வந்து உன்னை சேவித்து* உன்-

பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்*

பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து *நீ-

குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது*

இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா*

எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் *உன் தன்னோடு-

உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்*

மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்

பதவுரை:

‘விடியற்காலையில் உன்னை வழிபட்டு, உனது தாமரை மலர் போன்ற மென்மையான திருவடிகளைப் போற்றும் காரணத்தை உன்னிடம் சொல்ல விழைகிறோம். பசுக்களை மேய்த்து, ஜீவனம் செய்யும் ஆயர்குலத்தில் எங்களைப் போன்றே அவதரித்த நீ, எங்களிடமிருந்து சிறு சேவையாவது பெற்றுக் கொள்ளாமல் செல்லுதல் கூடாது. உன்னிடமிருந்து, பறை வாத்தியம் போன்ற பொருள்களைப் பெற்றுக் கொண்டவுடன், உன்னை விட்டு அகல நாங்கள் இங்கு வரவில்லை. காலம் உள்ளவரை, மீண்டும் மீண்டும் பிறவியெடுப்பினும், உன்னுடைய உறவினர்களாகவே இருப்போம். உனக்கே நாங்கள் பணி செய்து கிடப்போம். உன் மீது அளவிலா பற்று கொண்டுள்ள எங்களுக்கு, மற்ற பொருள்களின் மீது ஏற்படும் ஆசையை தவிர்த்தருள வேண்டும். ‘

****

அடுத்து திருப்பாணாழ்வாரின் (நாலாயிரத்தில் அவர் அருளியது பத்து, அத்தனையும் நல்முத்து!) அமலனாதிபிரானில் வரும் 3 அற்புதமான பாசுரங்களைத் தந்திருக்கிறேன். அரங்கனின் பேரெழில் அவர் உள்ளத்தை நிறைத்ததையும், அரங்கன் அவருள் புகுந்து அவரை ஆட்கொண்டதையும், அமுதை ஒத்த அரங்கனைக் கண்டபின் வேறெதையும் காணும் ஆசை அவரை விட்டு அகன்று விட்டதையும் ஆனந்தப் பெருக்கோடு சொல்லியிருக்கிறார்!

பாரமாய* பழவினை பற்றறுத்து,* என்னைத்தன்-

வாரமாக்கி வைத்தான்* வைத்ததன்றி என்னுள் புகுந்தான்,*

கோர மாதவம் செய்தனன் கொல் அறியேன்* அரங்கத்து அம்மான்,*திரு-

வார மார்பதன்றோ* அடியேனை ஆட்கொண்டதே.

பதவுரை:

என்னுடைய முற்பிறவியின் பந்தங்களை நீக்கி, என்னை ஏற்றுக்கொண்டதோடு, என்னையும் ஆட்கொண்டவனும் ஆகிய திருவரங்கத்தில் வாழும் எம்பெருமானே! உன் திருமார்பில் அடியவனை சேர்த்துக் கொண்டதற்கு, என்ன பெருந்தவம் செய்தேன் என்று நான் அறியேன்!

ஆலமா மரத்தின் இலைமேல்* ஒரு பாலகனாய்,*

ஞாலம் ஏழும் உண்டான்* அரங்கத்து அரவின் அணையான்,*

கோல மாமணி ஆரமும்* முத்துத் தாமமும் முடிவில்ல தோரெழில்*

நீல மேனி ஐயோ. * நிறை கொண்டது என் நெஞ்சினையே.

பதவுரை:

ஆலிலைக் கண்ணனாய், சிறுவனாய், ஏழு உலகங்களையும் விழுங்கியவனும், சர்ப்பத்தில் பள்ளி கொண்டிருப்பவனும் பெரிய மணிகளால் ஆன ஆரமும், முத்து மாலையும் தன் நீலமேனியில் அணிந்தவனும் ஆகிய அரங்கநாதனின் ஒப்பற்ற/முடிவற்ற பேரழகு என் உள்ளத்தை முழுதும் வசப்படுத்தி விட்டதே!

கொண்டல் வண்ணனைக்* கோவலனாய் வெண்ணெய்-

உண்ட வாயன்* என்னுள்ளம் கவர்ந்தானை,*

அண்டர் கோன் அணி அரங்கன்* என் அமுதினைக்-

கண்ட கண்கள்,* மற்றொன்றினைக்* காணாவே.

பதவுரை:

கொண்டல் பூக்களின் நிறத்தை உடையவனும், ஆயர்பாடியில் வெண்ணெயை திருடி உண்டவனும், அண்டசராசரத்திற்கு அதிபதியும் ஆன அமுதத்தை ஒத்த அரங்கநாதனை தரிசித்த எனது கண்கள் வேறெதையும் காண விரும்பாதே!

****

அடுத்து திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழியிலிருந்து, திருவேங்கடமுடையான் தரிசனத்தால் உண்டான பேருவகையோடு எழுதப்பட்ட 2 எளிய பக்திப் பாடல்களைத் தந்திருக்கிறேன்.

தெரியேன் பாலகனாய்ப்* பலதீமைகள் செய்துமிட்டேன்*

பெரியேனாயினபின்* பிறர்க்கே உழைத்து ஏழையானேன்*

கரிசேர் பூம்பொழில்சூழ்* கனமாமலை வேங்கடவா.,*

அரியே. வந்தடைந்தேன்* அடியேனை ஆட்கொண்டருளே.

பதவுரை:

அறியாமல் சிறுவயதில் தவறுகள் பல செய்தேன், வளர்ந்தபின் ஏனையோர்க்கு பொருள் வழங்கி வறுமையில் உழன்றேன். பூஞ்சோலைகளால் சூழப்பட்ட பெருமலையில் வீற்றிருக்கும் வேங்கடமுடையானே! அரிநாமம் கொண்டவனே, உன்னிடம் சரணடைந்த என்னை ஏற்று ஆட்கொள்வாயாக!

வந்தாய் என்மனம் புகுந்தாய்* மன்னிநின்றாய்*

நந்தாத கொழுஞ்சுடரே* எங்கள் நம்பீ.*

சிந்தாமணியே* திருவேங்கடம்மேய எந்தாய்.*

இனியான் உன்னை* என்றும் விடேனே.

பதவுரை:

எனக்கு நம்பியாக விளங்கும் நீ, என் உள்ளத்தில் புகுந்ததோடு, என்னுள் முழுதும் வியாபித்தும் இருக்கிறாய்! அணையாப் பெருஞ்சுடர் போன்றவனும், சிந்தாமணி போல் பிரகாசம் கொண்டவனும் ஆகிய திருவேங்கடப் பெம்மானே, உனை விட்டு இனி என்றும் விலக மாட்டேன், ஐயனே!

****

அடுத்து ஸாம வேதத்தின் சாரம் என்றுணரப்படும் நம்மாழ்வாரின் திருவாய்மொழியிலிருந்து சில பக்திப் பரவசமான பாசுரங்களைக் காணலாம். மாறன் மற்றும் சடகோபன் என்றழைக்கப்பட்ட நம்மாழ்வார் வைகுண்டத்தின் தலைமைத் தளபதியாகக் கருதப்படும் விஸ்வக்ஷேனரின் அவதாரம் என்று கூறுவர். அவர் இப்பூமியில் 35 வருடங்களே வாழ்ந்தார்.

அவரைப் பற்றிய ஒரு சுவையான நிகழ்வு ஒன்று இதோ! நம்மாழ்வார் குருகூரில் வாழ்ந்த காலத்தில், வட இந்தியாவில் இருந்த புண்ணிய ஸ்தலங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த மதுரகவி, அயோத்தியின் தெற்கு வானத்தில் ஒரு அற்புதமான ஒளியைக் கண்டார். அவ்வொளியின் மூலத்தை அறியும் விருப்பத்தில் தெற்கு நோக்கி பயணப்பட்டார். திருவரங்கத்தை அடைந்து இன்னும் சற்றே தெற்கில் உள்ள குருகூரை சென்றடைந்தபோது அவ்வொளி ஒரு புளிய மரத்தடியில் தவமிருந்த நம்மாழ்வாரின் திருமேனியில் கலந்திருப்பது மதுரகவிக்கு புலப்பட்டது! அன்றிலிருந்து, மதுரகவி அங்கேயே தங்கி, நம்மாழ்வாரின் பிரதான சீடராகி நம்மாழ்வர் அருளிய பாடல்களை பதிவு செய்ததும், அவருக்கு தொண்டு புரிந்ததும், நாம் அறிந்ததே.

வைகுந்தா மணிவண்ணனே* என்பொல்லாத் திருக்குறளா என்னுள்மன்னி,*

வைகும் வைகல்தோறும்* அமுதாய வானேறே,*

செய்குந்தா வருந்தீமை உன்னடியார்க்குத் தீர்த்து* அசுரர்க்குத் தீமைகள்-

செய்குந்தா* உன்னைநான் பிடித்தேன் கொள் சிக்கெனவே.

பதவுரை:

வைகுந்தன், மணிவண்ணன் என்ற நாமங்களைக் கொண்ட, குறும்புகள் பல செய்த, கோள்கள் பல சொன்ன, பொல்லாதவனே! வான் அரசனே! என் வாழ்வின் ஒவ்வொரு நாளும் என்னுள் நிறையவும், உன்னை சரணடைந்தவர்களின் துயர் நீக்கவும், அரக்கர்களை அழிக்கவும் உனை வேண்டினேன். உன்னிடம் வந்தடைந்த என்னை அழுத்தமாகப் பற்றிக் கொள்வாயாக!

வந்தாய் போலே வாராதாய். வாரா தாய்போல் வருவானே,

செந்தா மரைக்கண் செங்கனிவாய் நால்தோ ளமுதே. எனதுயிரே,

சிந்தா மணிகள் பகரல்லைப் பகல்செய் திருவேங் கடத்தானே,

அந்தோ! அடியேன் உன்பாதம் அகல கில்லேன் இறையுமே.

பதவுரை:

வருவாய் என எண்ணும்போது வரமாட்டாய், வரமாட்டாய் என எண்ணும்போது வந்தருள்வாய்! தாமரை போன்ற கண்களும், சிவந்த இதழ்கள் கூடிய வாயும், அகண்ட தோள்களும் கொண்ட என் உயிருக்கு ஒப்பானவனே! இருள் போன்ற என் அல்லல்களையும், பாவங்களையும் துடைக்கும் ஒளியான வேங்கடேசனே! நான் உன் பாதங்களை விட்டுப் பிரியாமல் இருக்கும் நிலையை வேண்டினேன் ஐயனே!

அகல கில்லேன் இறையும் என் றலர்மேல் மங்கை யுறைமார்பா,

நிகரில் புகழாய். உலகமூன் றுடையாய். என்னை ஆள்வானே,

நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே,

புகலொன் றில்லா அடியேனுன் அடிக்கீழமர்ந்து புகுந்தேனே.

பதவுரை:

அலர்மேல் மங்கை எனும் இலக்குமி குடி கொண்டிருக்கும் திருமார்பனே! உன்னை விட்டு பிரியா நிலை வேண்டினேன். வானுலகம், பூமி, பாதாளம் ஆகிய மூன்று உலகங்களுக்கு அதிபதியே! என் அரசனே! தேவர்களும், பூதகணங்களும் நேசிக்கும் திருவேங்கடம் வாழ் பெருமானே! உன் திருவடியைத் தவிர வேறொரு புகலிடமும் இல்லாத நான், உன்னிடம் தஞ்சமடைந்தேனே!

என்றென்றும் அன்புடன்

பாலா

balaji_ammu@yahoo.com

Series Navigation

பாலா

பாலா