எண்(ணங்)கள்: பாலாஜி : விரிகுடா தமிழ் மன்ற நாடக விழா -ஒரு தப்புக்கணக்கு

This entry is part [part not set] of 59 in the series 20041223_Issue

ரமேஷ்


விரிகுடா தமிழ் மன்றத்தின் நாடகவிழாவில் ஹாப்ட்மெனின் ஆங்கில நாடகமான ‘PARTITION ‘

( http://www.ams.org/notices/200311/rev-ribet.pdf ) நாடகத்தின் தமிழ் வடிவம் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது.

தமிழ்ப்படுத்தி இயக்கியிருந்தது பாலாஜி சீனிவாசன்.

தொழில் முறை கலைஞர்கள் போன்று திறைமை கொண்ட உள்ளூர் ஆர்வலர்கள் நடிப்பில் அசத்தியிருந்தனர்.

—-

கதைக்கு கிழக்கும் மேற்கும் சந்திக்கும் கரு மையப்புள்ளி.

ஆனால், ஒரு மேற்கத்தியரின் பார்வையில் வந்த ஆங்கில நாடகம் மேற்கத்திய பார்வையிலேயே தமிழாக்கம் பண்ணப்பட்டிருந்தது.

தனது கணித விடைகள், நாமகிரி அம்மன் தனது நாக்கில் அருள்பாவித்ததால் வந்தது என்று இராமனுஜர் முழுதாக நம்ப, ஹார்டியோ இது என்ன பிதற்றல் எனும் எண்ணமுடன் விடைகளுக்கான அணுகுமுறை பற்றிய விவாதங்களையே இராமனுஜனிடம் வைக்கிறார்.

இராமானுஜனிடம், ஃபெர்மா வின் தீர்க்கப்படாத கணித கோட்பாடுகளை தீர்க்கச் சொல்லுகிறார்.

இராமனுஜனும், நாமகிரி அம்மனிடம் வேண்ட, அவரோ தன்னிடம் அதற்கான விடையில்லை என்று சொல்லி, இராமனுஜனின் விடாத, தனை வருத்தி முயலும் துன்பம் கண்டு தாங்காமல், ஃபெர்மாவிடம் சென்று , தனக்குதவ வேண்டுகிறார்.

அது, தானே அறியாத புதிர் என்று விளக்கி, நாமகிரி அம்மனுடன் வந்து இராமனுஜத்திடம் சொல்கிறார், ஃபெர்மா-வும்.

அப்போது, நாமகிரி அம்மனிடம், ‘ஹாய் நீ ரொம்ப அழகா இருக்கே… ‘ என்று மையல் கொண்டு சில கமெண்ட் வேறு அடிக்கிறார் ஃபெர்மா.

இப்படியாக மேற்கத்திய கோணத்தில் போகிறது இராமானுஜன் கதை.

பாருங்கள், மேற்கத்தியர்கள் தான் கதையின் பார்வை முறையை, இப்படியான கோணத்தில் வைத்திருக்கிறார்கள் என்றால், இந்திய தமிழக மனிதரான ‘எண்ணங்கள் ‘ தமிழ் வடிவ இயக்குனர் அதை ஏன் தமிழ் பார்வையாளருக்கு மேற்கத்திய கோணத்தை அப்படியே எடுத்து வந்தாரோ தெரியவில்லை.

-ஏன், மேற்கத்திய சிந்தனாவாதிகள், இராமானுஜன் தனக்கு அனைத்தும் இறைவன் அருளியது எனக் கொண்டிருந்த நம்பிக்கையை திரித்து, அவரது கணித விடைகளுக்கு காரணமான அம்மன், ஃபெர்மாவிடம் போய் கை ஏந்தியது போல் காட்சியமைத்தனர்… ?

-ஏலே இந்தியரே, உன் இராமனுஜனுக்கு நாமகிரி அம்மன் விடை கொடுத்திருக்கலாம். ஆனால், அவர் ஃபெர்மா விடம் கை ஏந்தியவர் தான். அது போல் தான் இராமனுஜனின் மற்ற விடைகளுக்கு செத்து போன எந்த எந்த கணித மேதைகளிடம் அம்மன் கை ஏந்தினாரோ யாருக்கு தெரியும் என்று சொல்லாமல் சொல்கிறார்களோ தெரியவில்லை.

– ஃபெர்மா காட்சிகளில் அரங்கம் சிரிக்கிறது.. ஆனால், அது இராமானுஜன் எனும் தேர்ந்த ஒரு அறிவாளியின் ஞாபகங்களைக் காயப்படுத்திக் கொண்டு.

– அதிலும், ஃபெர்மா, ‘ஹாய் நீ ரொம்ப அழகா இருக்கே… ‘ என்று மையல் கொண்டு கமெண்ட் அடிக்கும் காட்சியில், இந்தியர்களின் இறை நம்பிக்கையை கேலி செய்து , ‘அம்மன் ‘ ஏதோ ‘சிம்ரன் ‘ என்பது போன்ற குறியீடு ஏன்… ?

– அதிலும் தூசியிலும், துரும்பிலும் இருப்பார் என்று நம்பப்படும் இறைவன், இராமனுஜனிடம், மெட்ராஸில் குண்டு போட்டு விட்ட படியால் அந்த மக்களைக் காக்க சென்னை செல்ல வேண்டியிருப்பதால் இராமனுஜனுடன் லண்டனில் இருக்க முடியாது என்று சொல்வது என்ன சிந்தனையோ… ?

எஸ்.வி.சேகர் காமெடி போல் இருந்தது இக்காட்சி.

– புறவழி சிந்தனா முறைகளில் மேற்கத்தியர்களின் பல கண்டுபிடிப்புகள், அகநிலை ஆழ்நிலை தியானம் மூலம் நம்மவர்கள் செய்ததை மேற்கத்தியர் நையாண்டி செய்ததை பாலாஜி ஏன் வெகு சாதாரண விஷயமாக எடுத்துக் கொண்டார்… ?

அக்கறையுள்ள நாடகம் என்பது, கதைக் கருவில் மட்டுமல்ல, அது சொல்லப்படும் விதம், கோணத்திலும் இருக்கிறது.

பல இடங்களில் இது சீரிய சிந்தனா நாடகமா.. ? இல்லை அது மாதிரி பாவனை கொண்ட தோற்றமுடைய ஒன்றா எனும் சந்தேகம் வருகிறது.

தாங்கள் என்ன சொல்ல வந்தோம் என்பதை சற்றும் பிசிறில்லாமல் ஹாப்ட்மேன் சொல்லி விட்டார். அதனாலேயே, தமிழ் படுத்தியவுடன் அது சரியாகி விடாது.

நமது கலாச்சாரத்தை நையாண்டி செய்ததை அப்படியே தமிழாக்கம் செய்தது ஜீரணிக்க முடியாத ஒன்று.

கூத்துப்பட்டறை, பரிக்ஷா பொன்றவர்கள் நமது கலாச்சார ஆதார உயிரிப்புகளை சிந்தித்து சிந்தித்து செயல்வடிவம் கொடுத்து உயிரி கொடுத்த போது, பாலாஜி எந்த சமுக அக்கறையின்றி தனக்கு புகழ் கிடைக்கும் எனும் நம்பிக்கையுடன் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ள நாடகம்.

ஒரு வேளை, இராமனுஜன் பற்றி தரமான நாடக வடிவிற்கு இவர்கள் ஏங்கியிருந்தால், இந்திய கோணத்திலேயே பண்ணியிருக்கலாம்.

எண்களில் விளையாடும் இராமனுஜனின் அக்னி உக்கிரம் எப்படி கலாச்சாரா சிந்தனா முறைகளில் நீர்த்துப் போனது எனக் காட்டியிருக்கலாம்.

இந்த மாதிரி சிரிப்பு கலக்கி ஒரு மேதையின் சரித்திரத்திற்கு நாடகம் தேவை தானா என்ற கேள்வி எழுகிறது.

கிரேஸி மோகன் போன்றோர்களின் நாடகங்களில் வயிறு எரியும் பிரச்சனைகளை, சிரிக்க சொல்லி, வயிறு வலிக்க சிரிக்க செய்வார்கள்.

ஆனால், இந்த நாடகமோ சிரிப்பு மூட்டி சீரிய சிந்தனையை மழுங்கடித்து விட்டது.

நாடகம் முடியும் போது, நமக்கு இராமனுஜனின் கணித மேதைத்தனமோ, இல்லை மேற்கு கிழக்கு சிந்தானா உரசல்களோ ஞாபகம் வரவில்ல.

ஃபெர்மாவின் அதிர் வேட்டு சிரிப்பும், தன்னைக் கைபிடித்து இழுத்துச் செல்லும் அம்மனை, ‘ஹாய் நீ ரொம்ப அழகா இருக்கே… ‘ என்று ஃபெர்மா சொன்னது தான் மனதில் நிற்கிறது.

நல்ல நாடகங்கள் தர பாலாஜி போன்றவர்கள் ஆசைப்பட்டால், கொஞ்சம் சமூக அக்கறையுடன் நமது முன்னோர்கள் நிகழ்வுகளையோ இல்லை கலாச்சார பிரச்சனைகளையோ நமது கண்கள் கொண்டு அணுகுங்கள்.

சின்ன வயதில் கோட் சூட் போட்டு ஃபோட்டோ எடுத்து என் பையன் துரை போல் இருக்கான் என் நாமே நம்மை நினைப்பது போல், நமது வாழ்க்கையை நமது கண்கள் மூலம் மேற்கத்தியர்களின் கோண்த்தில் பார்க்கும் பார்வை, ‘ராஜ பார்வை ‘ என நினைப்பது விடுங்கள்.

எப்படி கிழக்கு இந்திய கம்பெனியின் ஆங்கிலக் கட்டளைகளை , நமது மொழியில் மொழி பெயர்த்து நம்மிடம் புரியவைத்து நாம் ஆங்கிலேயர்களுக்கு அடிமையாக காரணமாக சிலர் இருந்தார்களோ, அது போலவே,

இந் நாடக மொழி பெயர்ப்பாளர்கள், மேற்கத்தியர்களின் நம்மீதான கலாச்சார துஷ்பிரயோக சிந்தனா ஊடுறுவலுக்கு காரணமாகிறார்கள்

வெறும் மொழியாக்கம் செய்து வரும் இது போன்ற மேற்கத்தியர்களின் கண்ணோட்டப் படைப்புகள், நமது இனத்திற்கு தீங்கு செய்யும் காட்டிக் கொடுக்கும் குணம் போல் தான் ஆகிறது.

ஒரு நல்ல நாடகத்தைத் தருவதற்கு ஆர்வமும் திறைமையும் இருந்தால் மட்டும் போதாது. அதற்கு மேலாக, சமூக அக்கறையும், நம் இனம், மொழி, வரலாறு , கலாச்சாரம் மேல் பற்றும் மரியாதையும் இருத்தல் சீரிய கலைப்படைப்பிற்கு அவசியம்.

—-

Series Navigation

ரமேஷ்

ரமேஷ்