விடுபட்டவைகள் -1

This entry is part [part not set] of 52 in the series 20041216_Issue

மதியழகன் சுப்பையா


நுண்மதி

—-

முதல் வினா எதுவாக இருந்திருக்கும் ? யார் யாரிடம் கேட்டிருப்பார்கள் ? எது குறித்த வினா அது ? விடை கிடைத்திருக்குமா ? இப்படி கடந்தவைகள் குறித்து பல வினாக்கள் கேட்டு விடலாம் ஆனால் பதில் கிடைக்காது. அபிப்ராயங்கள் வேண்டுமானால் சொல்லக் கூடும், ஆனால் அறுதியிட்டுக் கூற இயலாது. நாகரீகம் வளரத் துவங்கியது வினாக்களால்தான். வினாக்களே புரட்சிகள் வெடிக்கக் காரணியாக இருந்தது.

எங்கு துவங்கியது இவ்வினாக்கள் ? ஏன் துவங்கியது என்று கூட கேட்கலாம். தாயாகப் போகிற பெண்ணுக்கு ஆயிரம் வினாகள் உண்டு ஆனால் அவள் கருவறையில் குழந்தையின் மூளைக்குள் கேள்விகள் இருக்குமா ? இது குறித்து ஆய்வுகள் இன்னும் துவக்கப் பட வில்லை. ஆனால் கருவில் வளரும் குழந்தை வினாக்குறியாக சுருண்டு இருப்பதை காண முடிகிறது. வினாக்களே என் சேவகர்கள் என்று அறிவியல் மேதை ஒருவர் குறிப்பிட்டு உள்ளாரே, அப்படியானால் வினாக்கள் வினை புரிகின்றனவா ? தொன்னூறு விழுக்காடு வினாக்களால் ஆனதுதானே உரையாடல்.

வினாக்கள் பல வகையாக இருந்தாலும் விடை எதிர்பார்த்தே வினவப் படுகிறது. எல்லா வினாக்களுக்கும் விடை கிடைத்து விடுகிறதா ? கிடைத்த விடைகள் ஏற்புடையதாய் இருக்கிறதா ? சொல்லப் பட்ட விடைகள் மேலும் வினாக்கள் வினவ வழி செய்கிறதே ஏன் ?

தொன்றுதொட்டு மனிதனின் அறிவை அளக்க வினாக்களே அளவுகோலாக பயன்படுத்தப் பட்டு வந்துள்ளது. வினாக்கள் இல்லாத தேர்வுகள் எங்கு நடைபெறுகின்றன. உணர்ச்சிகளை வெளிப் படுத்த உலகம் முழுவதும் வினாக்களே பயன் படுத்தப் படுகிறது. பெரிய கட்டிடத்தை, ‘ ‘யய்யா! எவ்வளவு பெரிய கட்டிடம் ! ‘ ‘ என்றுதானே வியக்கிறோம். மதிநுட்பமும் முட்டாள்த்தனமும் கேட்கின்ற வினாக்களில் வெளிப்பட்டு விடுகிறதே.

கேட்கக் கூடாத, கேட்கப் படாத வினாக்கள் இருக்கிறதா ? இருக்க முடியுமா ? இருக்கலாம். யாரிடமாவது கேட்க நினைத்து முடியாமல் போய் இன்னும் மன உறைக்குள் இருக்கும் வினாக்களை சேகரிக்கலாம் என்று தோன்றும். மரண படுக்கையில் இருக்கும் கணவன் தன் மனைவியைப் பார்த்து ‘ என்னோடு நீ மகிழ்ச்சியாய் வாழ்ந்தாயா ? என்று கேட்டு விடை பெற்றிருப்பான ? வாழும் காலத்தில் கேட்க முடியாது போன பல வினாக்களை இறுதி நிலையில் மனைவி கேட்டிருப்பாளா ?

வினாக்கள் எழுப்புகின்ற மாணவர்களை எத்தனை ஆசிரியருக்கு பிடிக்கும். எல்லா மாணவர்களும் வினாக்கள் கேட்கின்றனரா ? இல்லையெனில் ஏன் ? அன்பை , காதலை வெளிப் படுத்தும் வினாக்கள் எத்தனை சுகமானது. ‘என்னை பிடிச்சிருக்கா ? ‘ ‘பிடிக்காமலா பழகுறேன் ? ‘ ‘ அப்படின்னா வாழ்க்கை முழுவதும் என்னுடன் இருப்பியா ? ‘ ‘ ‘ ‘ அதிலென்ன சந்தேகம் ? ‘ ‘ இப்படி தினம் யாராவது வினாவாடுவதை கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம்.

இளம் குழந்தை ஒன்று தனது எதிர் பாலரின் பிறப்புறுப்பைக் கண்டு குழப்பத்தில் இது என்னவென்று கேட்ட வினாவிற்கு அதே பருவத்தில் இருக்கும் குழந்தை அந்த வினாவையே விடையாக கொடுத்து இருக்கக் கூடும்.

வினாக்கள் மனிதனுக்கு மட்டும் தான் சொந்தமா ? மற்ற உயிர்கள் குறித்து எனக்கு விபரம் கிடையாது. ஆனால் புறப் பொருட்கள் அனைத்திடமும் வினாக்கள் கேட்பது மனிதனின் இயல்பாகி விட்டது. நாள் , வார மாத ஏடுகளை புரட்டுங்கள் வினாக்களுக்கு என்றே பக்கங்கள் ஒதுக்கப் பட்டிருக்கும். என்றாவது தீர்ந்து போகுமா வினாக்கள் ? அப்படி தீர்ந்து விட்டால் உலகம் இயங்குமா ? உலகை இயக்குவது வினாக்கள் என்று எப்பொழுது ஒத்துக் கொள்ளப் போகிறோம் ?. வினாக்கள் தவிர்த்து வாழ்க்கை சாத்தியமா ?

வினாக்கள் ஆயுதங்களைப் போல் ஆக்கல் அழித்தல் இரண்டுக்கும் பயன்படும். நுண்கருவிகள், மின் விணைப் பொருட்கள் என அனைத்தின் அணுக்கள் ஒவ்வொன்றிலும் விதவிதமாய் காண முடிகிறது வினாக்களை. கண்டுபிடிப்புகள் எத்தனை வியக்கத்தக்கதாயும் பெரிதாயும் இருக்கிறதோ அவ்வளவு வீர்யமிக்க வினாக்கள் எழுந்து இருக்கும் என்பதை உணரலாம்.

வினாக்களை நிறுத்த என்ன வழி ? வினாக்கள் வரும் வழியை அடைக்கலாமா ? வழி எது ? வினாக்கள் கேட்பது மூளையின் வேலை தானே ? அதை வடி கட்டுவோமா ? இல்லை மூளைக்கு மட்டுமல்லாது உயிருக்கே ஆதாரமாக இருக்கும் சுக்கிலத்தையும் சுரோணிதத்தையும் வடிகட்டுவோமா ? எதாவது செய்தாக வேண்டும் . வினாக்கள் அதிகம் துன்பம் தருகின்றன. என்னை சுறுசுறுப்பாக்குகின்றன. பசியின் கொடுமை , மாறா வறுமை, சுரண்டல், ஊழல் , தேச பக்தி என அதிமுக்கிய விஷயங்களை எழுத விடாமல் தடுக்கின்றன. இனி வினாக்களை நான் அனுமதிக்க மாட்டேன். எனக்கு தேவையானது கேட்காமலேயே எனக்கு கிடைக்கட்டும் . கிடைக்குமா ? ? ? ?

( தேடுவோம் )

மதியழகன் சுப்பையா

மும்பை

Series Navigation

மதியழகன் சுப்பையா

மதியழகன் சுப்பையா