கெளரி ராம்நாராயணின் ‘கருப்புக் குதிரை ‘

This entry is part [part not set] of 57 in the series 20041209_Issue

இரா முருகன்


அருண் கொலட்கர் – கொலாட்கர். இவரைப் பற்றிய கெளரி ராம்நாராயணின் ‘கருப்புக் குதிரை ‘ நாடகம் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்து ஒரு மாதம் தள்ளிப் போட்டுக் கொண்டு போனது. இப்போது அது குறித்து –

கொலட்கர் படைப்புகளுக்கே உரித்தான, முரண்களை லாவகமாக அணி சேர்த்து நிறுத்திய சூழலோடு தீபாவளி கழிந்த இரண்டாம் நாள் சாயந்திரம். அவ்வை சண்முகம் சாலைக்கு அருகே மற்ற எல்லாச் சென்னைக் குறுக்குத் தெருக்களையும் போல இன்னொரு சாதுவான குறுக்குத் தெரு.

மிச்சம் மீதியான பட்டாசுகள் தூறலுக்கு இடையே செதில் செதிலாகப் பழைய செய்தித்தாள் சட்டை உரித்து உற்சாகமான சத்தத்தோடு உயிர் துறக்கின்றன. தெருவில் பெரிய மாளிகை ஒன்று. வெளியே இருந்து பார்த்தபோது மற்றக் கட்டிடங்களுக்கும் இதற்கும் அதிக வித்தியாசம் தென்படவில்லை. உள்ளே நுழைந்தால், மேட்டுக்குடி வாசனையும் ஃபில்டர் காப்பி வாடையும் மண்டபங்களும் வெளியே அணிவகுத்த கார்களுமாக ஒரு மாபெரும் காப்பிக்கடை. ஆங்கிலம் தவிற வேறே எந்த மொழியிலும் சுவாசித்து அறியாத தோரணைகளோடு எல்லா வயதுக்காரர்களும் அங்கங்கே கூடியிருந்து தணிந்த, உயர்த்திய குரல்களில் உரையாடியபடி கொறித்துக் கொண்டிருக்கிறார்கள். காப்பி அருந்திக் கொண்டிருக்கிறார்கள்.

காப்பிக்கடையின் மேல் தளத்தில் கொலட்கர் பற்றிய நாடகம் நடப்பதாக அறிந்து மேலே போகிறேன். கீழே இருக்கும் இந்தோ ஆங்கில மணத்துக்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாமல், கிட்டத்தட்ட இருட்டான அரங்கு. உத்தேசம் நூறு பார்வையாளர்கள் அமரலாம். நாற்காலிகளை எடுத்து மடக்கி வெளியே வைத்தால் இன்னும் ஐம்பது பேர் இடித்துப் பிடித்துக்கொண்டு தரையில் அமரலாம். நாற்காலியில் அமர்ந்தவர்கள் அமர்ந்தபடி இருக்க, பக்கவாட்டில், கதவுப் பக்கம் என்று இருபது சராசரி ஆகிருதி நபர்கள் கொஞ்சம் கஷ்டப்பட்டு நாராய் நாராய் செங்கால் நாராய் என்று ஒரு காலில் நிற்கலாம். நிற்பதா இருப்பதா இல்லை இதுவும் கடந்து போவதா என்ற இருத்தலியல் வினாவுக்கு விடைகாண இன்னும் நேரம் இருக்கிறது.

பளீரென்று பக்கத்திலிருந்த விளக்கிலிருந்து ஒளிமழை சிதறி , இருளில் அடுத்த வினாடி கரைகிறது. மேடை ஒளியமைப்பைச் சரிபார்த்தபடி காவி வேட்டியும் பெரிய மீசையுமாக கூத்துப்பட்டறை நடேஷ்.

ஓரமாக இன்னொரு சிறிய மேடை. ஒலிபெருக்கியில் தன் குரலை மென்மையான கர்நாடக ராகமாக இழைய விட்டுச் சோதித்துக் கொண்டிருக்கிறார் சவிதா நரசிம்மன். கொலட்கர் என்ற மராத்திக் கவிஞர் பற்றிய ஆங்கில நாடகத்தில் தென்னிந்திய இசைக்கு என்ன வேலை என்று தெரியாமல் வெளியே வந்தபோது திரைப்பட வரலாற்றாளார் தியோடர் பாஸ்கரன். மூச்சு வாங்காமல் மாடிப்படி ஏறி வந்த அவரோடு இலக்கியம், சினிமா என்று ஐந்து நிமிடம் அவசர உரையாடல்.

உள்ளே வரலாம் என்று யாரோ வந்து சொல்கிறார்கள்.

ஒன்றும் இரண்டுமாக உள்ளே வருகிறவர்கள் தமிழ் இலக்கியத்துக்கும் தமிழ் தொடர்பான நிகழ்கலை எதற்கும் தொடர்பு இல்லாதவர்கள் என்று ஏனோ படுகிறது. மியூசியம் தியேட்டரில் எப்போதாவது நடக்கும் சென்னை பிளேயர்ஸின் ஆங்கில நாடகங்களோடும், சம்பிரதாயமான மேற்கத்திய இசையோடும், பழைய ஆங்கிலப் படங்களோடும் இவர்களின் உலகம் சுருங்கிவிடக் கூடும். எல்லா உலகமும் அதனதன் அளவில் சுருங்கியதுதானே.

அவை நிறைந்து கொண்டிருக்கிறது. கவிஞர் வைதீஸ்வரன், விமரிசகர் பிரசன்னா ராமசாமி என்று தெரிந்த முகங்கள் அங்கங்கே. அமர நாற்காலி இனி இல்லை என்றானபோது, ஒரு சிக்கல் தீர்ந்த நிம்மதி. நண்பர்கள் திருப்பூர் கிருஷ்ணன், வெங்கடேஷ் முதலியவர்களோடு நானும் ஓர் ஓரமாக நிற்கிறேன். கூடவே பி.பி.சி அண்ணாமலை. இன்னொரு மூலையில் ஒரு வினாடி எழுத்தாளர் திலீப்குமார் தலை தட்டுப்பட்டுக் கூட்டத்தில் அமிழ்ந்து போகிறது. அவரைக் கொலட்கராகத் தமிழில் மேடையேற்ற நினைத்திருந்தேன். நண்பர் ஞாநி ஒரு தடவை சொன்னார் – ஜெயகாந்தனின் ‘ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம் ‘ மேடை நாடகமானால், ஹென்றியாக நடிக்க திலீப்குமார் தான் சரியான ஆள். ஹென்றிக்கும் நோ, கொலட்கருக்கும் நோ என்கிற திலீப்புக்கு மேடை பயமாம்.

கெளரி மெல்ல நடந்து வந்து ஓர் ஓரமாக உட்கார்கிறார். உடல் நலமில்லை என்று தெரிகிறது. நாடகத்தைத் தமிழாக்குவது பற்றி அப்புறம் பேசிக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன். அண்ணாமலையும் அதேதான் நினைத்திருக்க வேண்டும்.

மொபைல் தொலைபேசிகளை அணைக்கச் சொல்லி ஒருவர் வேண்டுகோள் விடுக்கிறார். வெளியே பட்டாசு சத்தம் அவ்வப்போது கேட்டுக் கொண்டிருக்க, அந்தத் தாளத்தோடு இசைந்து சவிதா நரசிம்மன் குரலில் மராத்தி அபங்க் ஒன்று இனிமையாக அவையில் பரவுகிறது.

நாடகம் தொடங்குகிறது.

****

‘அவரிடம் தொலைபேசி இணைப்பு கிடையாது. கடிதம் எழுதினால் பதில் வராது. பத்திரிகை, பேட்டி என்றால் விலகி ஓடிப் போய்விடுவார். சிறு பத்திரிகைகளில் தான் அவர் எழுதிய கவிதைகள் பிரசுரமாகும். சின்னச் சின்ன அச்சகங்களில் தான் அவருடைய கவிதைத் தொகுதிகள் மராத்தியிலும் ஆங்கிலத்திலும் அச்சாகி வெளிவரும். அவற்றையும் அவரேதான் வடிவமைப்பார். ‘

கொலட்கரைச் சந்திக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவிக்கிற பத்திரிகையாளராக பாகீரதி நாராயணன். அவரிடம் தெரிவிக்கப்படும் சிக்கல்களை எல்லாம் கடந்து பத்திரிகையாளர் கவிஞரைச் சந்திக்கிறார்.

மேடையில் மொத்தம் நான்கு கதாபாத்திரங்கள். தொடர்ந்து தன் குரலால் கூடவே நடந்து, ஓடி, குதித்துச்சாடி உற்சாகமாக வரும் சவிதா நரசிம்மனையும் சேர்த்தால் ஐந்து பேர். ஒன்றரை மணி நேரத்தில் வங்க நடிகர் திர்த்திமன் சட்டர்ஜி கொலட்கராக உருமாறுகிறார். அதாவது கெளரி ராம்நாராயண் என்ற பத்திரிகையாளர் ஆறு வருடம் முன்னால் மும்பை ஜஹாங்கீர் ஓவியக் காட்சிக்கூடத்துக்குப் பக்கம் கருப்புக் குதிரை போக்குவரத்து சந்திப்பில் ஒரு சிறிய உணவு விடுதியில் சந்தித்த கொலட்கர். திர்த்திமன் சட்டர்ஜிக்குக் கொலட்கராக வயதை ஏற்றிக் கொள்ளவோ, பாகீரதிக்குக் கெளரியாக வயதைக் குறைத்துக் கொள்ளவோ ஒரு சிரமமும் இல்லை.

உணவு விடுதியில் ஒற்றைப் படுத்தப்பட்ட ஒரு மேசை. மேசைக்கு இரு வசமும் இருந்து பத்திரிகையாளரும் கவிஞரும் உரையாடுகிறார்கள்.

‘உங்கள் கவிதைகளில் மனிதர்களும் இடங்களும் ஆச்சரியப்படும் வகையில் சித்தரிக்கப்படுகிறார்கள். கூடவே அவர்கள், அவை பற்றிய எள்ளலும் இழையோடுகிறது. உங்களுக்கு எப்படி இது சாத்தியமாகிறது ? ‘

பத்திரிகையாளர் ஆர்வத்தோடு கவிஞரைக் கேட்கிறார்.

‘வேறு யாரிடமாவது இந்தக் கேள்விக்கான உடனடியான பதில் கையிலிருக்கலாம். என்னிடம் கிடையாது. ‘

ஊசி மிளகாயைக் கடித்த பார்வை பத்திரிகையாளரிடம். கவிஞரின் முகத்தில் விரியும் சிரிப்பு அதை உடனே சகஜ பாவமாக மாற்றுகிறது. அந்த மனிதர் இதை எந்தக் கர்வத்தோடும் சொல்லவில்லை, சுபாவமாகச் சொல்கிற வார்த்தைகள் தான் இவை என்பது அவருக்கும் பார்வையாளர்களான நமக்கும் புரிய வெகு நேரமாகவில்லை.

கொலட்கரின் கவிதைகள் நிகழ்ச்சி ரூபத்தில் இருப்பது குறித்துக் கேட்கிறார் பத்திரிகையாளர்.

‘இருக்கலாம். ஆனால், அவை கோணல் புத்தியோடு தணுத்துக் கிடப்பவை என்று சிலர் சொல்கிறார்கள். நான் தனிப்பட்ட எதிர்வினைகளோடு எப்பொழுதும் முழுக்க ஒத்துப் போவதோ, மறுதலிப்பதோ இல்லை. ‘

கண்டிப்பான குரல் இல்லை. மன்னிப்புக் கேட்கிற தொனி. என்றாலும் தன் கருத்தை எந்தவித ஒளிவும் மறைவுமின்றி வெளிப்படுத்தும் தன்மை. கொலட்கரின் கவிதைகள் போலவே அவர் பேச்சும் இருண்மை இல்லாதது.

‘ ‘ஜெஜூரி கவிதைத் தொகுதி ஜெஜூரி என்ற புண்ணியத் தலத்துக்குப் போகும் பஸ் பயணத்தோடு தொடங்குகிறது. அந்தப் பயணத்தில். ‘

பாகீரதி நாராயணன் குரல் நிற்கிறது. அதற்கு ஒத்திசைத்து கர்னாடக, இந்துஸ்தானி ராகச் சிதறல்களாக ஒலிக்கும் சவிதா நரசிம்மனின் இசையும்.

மேடையில் இளைஞர் ஒருவரும் இளம் வயதுப் பெண்ணும் ஜெஜூரிக்குப் பஸ் யாத்திரை கவிதையைப் படிக்கத் தொடங்குகிறார்கள். அவர்கள் கெளரியின் மகன் அபினவ் மற்றும் அனுஷ்கா ரவிசங்கர்.

ஜெஜூரிக்கு மலையேறிப்

போகிற வழிமுழுக்க

மாநிலப் போக்குவரத்து பஸ்ஸில்

ஜன்னலெல்லாம் பொத்தான் இட்டு

இறுக்க மூடிய தார்ச்சீலைத் திரைகள்.

ஒரு வயசனின் மூக்குக் கண்ணாடியில்

பிளவுபட்டுப் பிரதிபலிக்கும்

உங்கள் முகம் தவிரப்

பார்க்க எதுவும் இல்லை.

கவிதை முடிவடையும்போது கொலட்கரை கெளரி கேட்கிறார் – ‘இந்த முதல் கவிதை, கூட்டமான பஸ் பயணம் ஏற்படுத்தும் குமட்டலைச் சொல்கிறதில்லையா ‘

கொலட்கர் குறுக்கிடுகிறார்.

‘உங்களுக்கு அது குமட்டலாக அர்த்தமாகிறதா ? அது நெரிசல் அனுபவப்படுத்தும் சங்கடம் கலந்த பயம் இல்லையோ. நீங்கள் எப்போதாவது பேருந்தில் நீண்ட தூரம் பயணம் போய் குமட்டல் ஏற்பட்டதை இந்தக் கவிதை உங்களுக்கு நினைவு படுத்துகிறதா அல்லது இந்தக் கவிதையே குமட்டுகிறதா ? ‘

தேநீர்க் கோப்பையிலிருந்து முகமுயர்த்திச் சிரித்தபடி கேட்கும் திர்த்திமன் சாட்டர்ஜி. பாகீரதி நாராயணனும் சங்கடத்தோடு சிரித்தபடி தேநீரைக் குடிக்க ஆரம்பிக்கிறார்.

‘இல்லை.. அந்தக் கவிதை .. முன் நோக்கிய இயக்கம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஆனாலும் பயணப்பட வேண்டிய தூரம் இன்னும் குறையவில்லை என்பது போல .. ‘

கவிஞர் இன்னொரு சிரிப்போடு பத்திரிகையாளரின் நிரம்ப யோசித்துத் தயங்கித் தயங்கி வெளிவரும் பதிலைக் கைகாட்டி மறுபடி நிறுத்துகிறார்.

‘என் கவிதையில் அப்படி எல்லாம் மறைபொருள் இருக்கிறதா என்ன ? அவை எளிமையானவை. மறைந்து நிற்க, விளங்கிக்கொள்ளக் கடினமாக அவற்றில் எதுவும் கிடையாது. ‘

உரையாடல் சுவாரசியமாக நீண்டு கொண்டே போகிறது.

ஜெஜூரி என்ற புண்ணியத் தலத்தின் புனிதம் அவரை ஈர்க்கவில்லை. அங்கே ஒரு பெண்நாய் ஈனும் தாய்மையில் தான் புனிதத்தைத் தரிசிப்பதாகச் சொல்கிறார் கொலட்கர்.

‘என் கவிதை சொல்ல வருவது இதைத்தான் ‘.

சொறிநாய் ஒன்று

தனக்கும் குட்டிகளுக்கும்

இடிபாடுகள் இடையே

இடம் பிடித்திருக்கிறது.

அதற்குக் கோவில்

அப்படி இருந்தால்தான் பிடிக்கும் போல.

உடைந்த ஓடுகள் சிதறிய

வாசலுக்கு அப்புறம் இருந்து

நாய் உங்களை ஜாக்கிரதையாகப்

பார்க்கிறது. நாய்க் குட்டிகள்

தாய்மேல் உருண்டு விளையாடுகின்றன.

அவற்றுக்குக் கோவில்

அப்படி இருந்தால்தான் பிடிக்கும் போல.

திர்த்திமனின் குரலில் முதிர்ச்சி, தயக்கம், உற்சாகம், பரிவுணர்ச்சி என்று எல்லாமே புலப்படுகிறது. கொலட்கரே இந்தக் கவிதையை உரக்க வாசித்திருந்தால் அது இப்படித்தான் இருக்கும்.

ஜெஜூரி தொகுப்பிலிருந்து யஷ்வந்த்ராவ், மாருதி கோவில் கவிதைகள் அவ்வப்போது முழுமையாக, பகுதியாக வந்து போகின்றன. வாசிக்கப்படுகிற, நிகழ்த்தப்படுகிற கவிதைத் தலைப்பை ஒரு அட்டையில் எழுதிப் பிடித்தபடி மேடையின் ஓரத்தில் நடிகர்களில் யாராவது நிற்கிறார்கள்.

ஜெஜூரி கவிதைகளை இங்கிலாந்திலும் இந்தியாவிலும் பாடப்புத்தகத்தில் சேர்த்ததை (இரண்டுமே தவறு என்கிறார் கவிஞர் – ‘நான் எந்தக் கவிதையையும் பாடமாகப் படித்ததில்லை ‘), காலாகோடா கவிதைகளை, சர்ப்ப யாகத்தை எல்லாம் சுற்றிச் சுழன்று உரையாடல் விரிய, கவிதைகள் வாசிக்கப்படுகின்றன. கர்னாடக இசையில், இந்துஸ்தானியில் ஒரு குமிழ் சிரிப்போடு சவிதா ஆங்கிலக் கவிதையைப் பாட, பாகீரதியும், திர்த்திமனும் ரசித்துச் சிரிக்கிறார்கள். கூடவே மொத்த அவையும்.

காலாகோடா கவிதைகளிலிருந்து ‘காலைச் சாப்பாட்டு நேரம் ‘ இட்லி வாடையோடு ஐந்து நிமிடம் வந்து போகிறது. தெருநாய் பற்றி, எலிப் பாஷாணம் விற்பவன் பற்றி, தொழுநோயாளர்களின் இசைக்குழு பற்றி, தெருக்கூட்டும் பெண்ணின் தென்னோலைத் துடைப்பம் பற்றி எல்லாம் தொடரும் கவிதை வரிகள். திர்த்திமன், பாகீரதி, அபினவ், சவிதா எல்லாரும் கொலட்கர் கவிதை வரிகளாகிறார்கள். அவற்றில் வந்து போகும் மனிதர்கள் ஆகிறார்கள். சாதாரண மனிதர்களின் சாதாரணமான வாழ்க்கையைக் கொண்டாடும் அந்தத் தொகுப்பின் பல கவிதைப் பகுதிகளும் மிக இயல்பாக வாசிக்கவும் நிகழ்த்தவும் படுகின்றன.

தொடர்ந்து, மேடையின் ஒளி குறையத் தொடங்க, பாகீரதி ‘சர்ப்ப சத்ர ‘ கவிதை நூலிலிருந்து சில பகுதிகளை உணர்ச்சிகரமாக வாசிக்கிறார். கூட்ட நெரிசலை, வெளியில் யாரோ விட்ட பூவாணம் வானத்திலிருந்து வண்ணமாகச் சிதறி வெடிப்பதை , கீழ்த்தளத்தில் மேசை இழுபடும் ஒலியை, யாரோ சன்னமாக இருமுவதை எல்லாம் கடந்து அந்தக் கவிதையும், இனப் படுகொலைகள் எல்லாவற்றையும் குறித்து கொலட்கர் சத்தமாக உயர்த்தும் எதிர்க்குரலும் கேட்பவருக்குள் மெல்லப் படிந்து ஆழமாக இறங்குகிறது.

அமைதியான இடத்தில் தனித்திருந்து கவிதை வாசித்து அனுபவிப்பதைப் போல் இன்னொரு மேன்மையான அனுபவம் இது.

‘உணவு விடுதியை அடைக்கிற நேரமாகி விட்டது. கிளம்பலாம் ‘

கொலட்கரும் பத்திரிகையாளரும் எழுந்திருக்கிறார்கள். நாடகம் பற்றி யோசித்தபடியே பார்வையாளர்களும்.

மேடையில் நிறைவு பெறாத அந்த நாடகம் அவர்கள் எல்லார் மனதிலும் தொடர்ந்தபடியே இருக்கிறது.

கொலட்கரின் குரலும் –

நான் முத்தமிட வாய்க்காத

இத்தனை அழகான பெண்கள் நிறைந்த

உலகத்தை விட்டுப் போகிறேன்.

மாலதி, நிலோஃபர், அஞ்சலி, சாந்தா,

அல்பனா, கல்பனா, ஷிரின், சரின், சில்வியா, மரியா,

ஹர்லின், யாஸ்மின், நைனா, கமலா, மோனா, லோபா;

உங்கள் எல்லாரையும் நேசிக்கிறேன்,

நீள முத்தமிட்டு உங்கள் ஒவ்வொருவருக்கும்

பிரியாவிடை சொல்ல முடிந்தால்

எவ்வளவு நன்றாக இருக்கும்.

****

கெளரி ராம்நாராயண் என்ற இசைத் தேர்ச்சியும், நாடகத் துறை பற்றிய புரிதலும் உள்ள இலக்கிய ரசிகர் பத்திரிகையாளரானபோது, அவர் கண்டு எழுதும் செவ்விகள், எழுதி இயக்கும் நாடகங்கள் எல்லாம் அவருடைய மொத்த ரசனையையும் அனுபவத்தையும் குழைத்துக் கலந்து திடமாக முன் நிறுத்துவதில் வியப்பொன்றுமில்லைதான்.

கவிதை வாசிப்பு, சோதனை முயற்சியாக அமையும் ஓரங்க நாடகம், பாட்டு இடையிட்ட உரையுடைச் செய்யுள் – கெளரியின் இந்த முயற்சியை எப்படி வேண்டுமானாலும் அல்லது எல்லாப் பரிமாணமும் கொண்ட ஒரு படைப்பாகவும் உருவகப்படுத்திக் கொள்ளலாம். எழுத்திலக்கியத்தை ஆதாரமாக்கி எழுந்த ஒரு நிகழ்கலை வடிவம் இது என்பது சுருக்கமான விளக்கமாக இருக்கும்.

கொலட்கரின் கவிதைகளோடு பல ஆண்டு பரிச்சயமுள்ள கெளரி, கொலட்கரோடு நிகழ்த்திய இரண்டு மணி நேரச் சந்திப்பு ‘கருப்புக் குதிரை ‘ நாடகத்துக்குத் தூண்டுகோலாக அமைந்தது மட்டுமின்றி, அந்த நாடகமே ஆறு ஆண்டுகளுக்கு முந்தைய அந்தச் சந்திப்பை மையமாகக் கொண்டுதான் கட்டி நிறுத்தப்பட்டுள்ளது. எல்லா நிகழ்வும் அந்த இரண்டு மணி நேர உரையாடலிலிருந்து கிளை பிரிந்து விரிந்து அதற்குள் மீண்டும் கரைந்து மறைய அதன் சுவட்டில் மற்றொரு காட்சி மேடை வெளியில். கவிதானுபவமாகத் தான் அறிந்த கொலட்கரின் படைப்புத் திறனை, பத்திரிகை செவ்விக்காக தான் அவரோடு கண்ட நேர்காணலோடு ஒத்திசைத்து படைப்பாளியைப் புரிந்து கொள்ள யத்தனிக்கும் முயற்சி இது. ரசனையின் பாற்பட்ட நினைவும், கற்பிதமும், பார்வையும், குரல்களும், சூழலும் சேர்ந்து எழுப்பிய மாயக் கலவை.

கெளரியின் திறமையை, படைப்பு நேர்மையை இது காட்டுகிறதென்றால், எழுபத்திரெண்டு வயது உயிர் வாழ்ந்த கொலட்கரின் வாழ்க்கையில் இரண்டு மணி நேரத்தை மட்டும் முன்வைத்து அவரை அறிய முற்படுவதின் வரையறைகள் நாடக அனுபவத்தின் பரப்பைக் குறுக்குவதும் மறுக்கவியலாதது.

படைப்பு மட்டும், அவசரமாக நிகழ்கிற ஒரு சந்திப்பு மட்டும், படைப்பாளியைப் பரிச்சயப்படுத்திக் கொள்ளப் போதுமானதில்லை. அது வாழ்ந்த, வாழும் ஒருவனின், ஒருத்தியின் ஆசைகளை, கனவை, கற்பனைகளை, ஆக்க நேர்த்தியை எல்லாம் கொஞ்சம் போல சொல்லக் கூடும் தான். ஆனாலும் எழுத்தை விலையிறுத்த எழுத்தாளனின் வாழ்க்கையும் ஒரு காரணியாகிறது.

உருவாக்க ஊக்கம் தரும் சமூக, தனிமனித வாழ்வுச் சூழல் மூலம் வாழ்க்கை ஒரு படைப்பாளியை உன்னதங்களைத் தேடச் செய்யலாம். மாறாக, சுதந்திரமான சிந்தனையை, இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் தளைகளைத் தொடர்ந்து விதித்து அது எழுத்தாளனின் எதிர்க்குரலைக் கூர்மைப் படுத்தி, அதற்குப் படைப்பாகத் திடவடிவம் கொடுக்க ஒரு கிரியா ஊக்கியாக இயங்கலாம். மாற்றங்களின் தொடர் சங்கிலியில் அந்தப் படைப்பு முதல் கண்ணியாகவும் வாய்ப்பு உண்டு. வாழ்க்கை பற்றிய புரிதல்கள் படைப்பு பற்றிய கூடுதலதிகம் பரிமாணங்களைக் காட்டித்தரக் கூடும்.

கொலட்கர் தன் அந்தரங்க வெளியை மிகுந்த கவனமுடன் காத்து வந்தார் என்றும் அதில் எந்த அத்துமீறலையும் அனுமதிக்கவில்லை என்றும், தன் எழுத்தை ஒரு சிற்பமாகச் செதுக்கிச் செதுக்கி நேர்த்தியாக, மிகச் சரியாக வடிவமைக்க அவர் இப்படியான தனிமையை, ஒதுங்கி இருப்பதைத் தேர்ந்தெடுத்தார் என்றும் சொல்லப்படுகிறது.

இதிலெல்லாம் உண்மை இல்லாமல் இல்லை. ஆனால் அந்த உண்மைக்கு இன்னொரு பக்கமும் உண்டு. கொலட்கர் என்ற அன்பும், பரிவும், சக மனிதர்கள் மேல் நட்பும் மிகுந்த மனிதர் என்பது அது.

இருளும் ஒளியும் கலந்து உடைந்த கண்ணாடிச் சில்லுகளில் பிரதிபலிப்பது போன்ற அவர் வாழ்க்கை நிமிடங்கள் சில நமக்குக் கிடைக்கின்றன.

கொலட்கரின் இரு சகோதரிகளும் அவர் சிறு வயதில் இனிமையாகத் தங்களோடு சேர்ந்து பஜனைப் பாடல்களைப் பாடியதை இன்னும் மறக்கவில்லை.

புண்ணியத் தலமான ஜெஜூரியின் வழக்கமாகச் சொல்லப்படும் புனிதத்தை நிராகரித்து அதற்குத் தன் கவிதை நோக்கில் தனித்துவம் அளித்தும், ‘சிரிமிரி ‘ மராத்தித் தொகுப்பில் விலைமாதர் குழுவொன்று மற்றொரு புண்ணியத் தலமான பண்டரிபுரத்துக்குச் செல்வதை விவரித்து அவர்களைக் கண்ணனைச் சுற்றியாடும் கோபிகைகளாக்கியதும் அதே கொலட்கர்தான்.

இந்தியாவின் முதன்மை விளம்பர நிறுவனமான லிண்டாஸில் விளம்பரத்துறை இயக்குனராகப் பணியாற்றியவர் அவர். அந்தத் துறையில் தேசிய அளவில் பல பரிசுகள் பெற்றவர்.

விளம்பரத் துறையில் மேதமை இருந்தும், எழுத்தா, ஓவியமா, விளம்பரத் தொழிலா என்று முடிவுக்கு வரமுடியாமல் குழம்பி, இருந்த வேலையையும் இழந்திருக்கிறார்.

ஏர் இந்தியாவில் ஒரு சராசரி உத்தியோகத்துக்கு அவரும் நேர்முகத் தேர்வுக்குப் போயிருக்கிறார். அந்தப் பணிக்கு அவருடைய மிகு ஆற்றல் தேவையில்லை என்றோ என்னமோ, நிராகரிக்கப்பட்டிருக்கிறார்.

வாழ்க்கையின் கணிசமான பகுதியைக் குடியில் இழந்திருக்கிறார். குடிபோதையில், கையில் காசு இல்லாமல் நண்பனின் அலுவலகப் படி ஏறி சாப்பாடு வாங்கித் தா என்று யாசித்திருக்கிறார். அந்த நண்பர் அவருக்குச் சாப்பாடும், அதே நிறுவனத்தில் வேலையும் வாங்கிக் கொடுத்திருக்கிறார்.

விளம்பரத் துறையில் நிபுணத்துவமும், கார்ட்டூன் வரைவதில் அபாரத் திறமையும் கொண்ட கொலட்கர் தான் வேலை பார்த்த நிறுவனத்தின் விளம்பர அறிவிப்பை ஒரே இரவில் உருவாக்கியிருக்கிறார். விளம்பர அறிவிப்பை எப்படி உருவாக்குவது என்பது பற்றித் தொடர் கார்ட்டூன்கள் மூலம் சொல்லிய அந்த அறிவிப்பு எழுபதுகளில் இந்தியாவின் வர்த்தக, விளம்பரத் தலைநகரில் மிகுந்த கவனத்தைப் பெற்றது.

கவிஞர் அலன் கின்ஸ்பெர்க் இந்தியா விஜயம் செய்தபோது மும்பையில் கொலட்கரின் விருந்தினராகத்தான் தங்கியிருந்தார். கொலட்கர் அவருடைய அழைப்பின் பேரில் அமெரிக்கா சென்று நியூயார்க்கில் கவிதை வாசிப்பு நிகழ்ச்சியில் பங்கு பெற்றிருக்கிறார்.

ஆனால், இந்தியப் பிரதமராக இருந்த இந்திரா காந்தியைச் சந்திக்க சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுச் சென்ற குழுவில் பங்கு பெற்றிருந்த கொலட்கர் அந்தச் சந்திப்பில் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை.

காலாகோடா கவிதைகளில் ஒரே ஒரு இடத்தில் பேசப்படுகிற பாபா சாகேப் அம்பேத்கார் தவிர சமகால அரசியல், சமுதாயம் என்றால் நினைவுக்கு வரும் யாரும் கொலட்கரின் படைப்புலகிற்குள் கால் பதிக்கவில்லை.

தானே வடிவமைத்த டாஷர்ட், சாயம் போன ஜீன்ஸ், காலில் மலிவான கோலாபூரி செருப்புகள். நீண்ட தலைமுடி. தொங்குமீசை. தீட்சண்யமான விழிகள். லண்டனில் கவிதைக்கான காமன்வெல்த் பரிசு வாங்கப் போனபோதும் இதுதான் கொலட்கரின் தோற்றம்.

மனைவி இருக்கிறார். பிள்ளைகள் இருப்பதாகத் தெரியவில்லை. கொலாபா பக்தாவர் கட்டிடத்தில் பல ஆண்டு கட்டண விருந்தாளியாக இருந்து, அப்புறம் பிரபாதேவியில் ஒற்றை அறைக் குடியிருப்புக்கு இடம் மாறியிருக்கிறார்.

ஜஹாங்கீர் ஆர்ட் காலரிக்கு அருகே காலாகோடா போக்குவரத்துச் சந்திப்பில் ‘வே சைட் இன் ‘ சிற்றுண்டி விடுதியில் வியாழக்கிழமை சாயந்திரங்களில் தன் குறுகிய நண்பர் வட்டத்தைச் சந்தித்திருக்கிறார். காலாகோடா கவிதைகள் தொகுப்பில் அடிக்கடி இடம் பெரும் அந்த உணவு விடுதி காலக்கிரமத்தில் இடித்துக் கட்டப்பட்டு, நவீன மயமாக்கப்பட்டபோது அங்கிருந்து அருகில் ஒரு குறுக்குச் சந்தில் இரானியன் ரெஸ்ட்ராண்டுக்கு அவரும் நண்பர்களும் வியாழக்கிழமை சாயந்திரச் சந்திப்புகளுக்காக இடம் பெயர்ந்திருக்கிறார்கள்.

பத்திரிகையாளர்களைச் சந்திப்பதைத் தொடர்ந்து தவிர்த்திருக்கிறார். அப்படியும் விடாமல் துரத்தி, அவருக்குப் பிடித்த எழுத்தாளர்கள் யாரெல்லாம் என்று கேட்க, அவர் மூச்சு விடாமல அடுக்கிய நூற்றுக்கணக்கான பெயர்களில் குந்தர் கிராஸ், அகதா கிறிஸ்டி, ஏக்நாத், லாரல் ஹார்டி, கபீர், பாப் டைலன், நாம்தேவ், ஜான் லெனன் என்று சகலரும் உண்டு.

ஜார்ஜ் ஹாரிஸனின் ’33 1/3 ‘ (Thirty three and one third) இசைத்தட்டின் மேலுறையில் 3 என்ற எண்ணுக்குப் பதிலாக ‘ஓம் ‘ சின்னம் இருந்ததைப் பார்த்து ஓம்டி ஓம் ஏண்ட் ஒன் ஓம்த் (omty om and one omth) என்று சொல்லிச் சிரித்தவர் அவர்.

பிபிசியில் பேட்டிக்கு வந்து நின்றபோது கவிதை வேண்டுமானால் படிக்கிறேன்; பேட்டி எல்லாம் தரமுடியாது என்று மறுத்துவிட்டவர். தன் நண்பர் கவிஞர் – நாடக ஆசிரியர் திலீப் சித்ரே தூண்டுதலால் அவர் இயக்கிய ஆவணப் படத்தில் தோன்றிக் காமிராவைப் பார்க்காமல் கவிதை படித்தவர் (தகவலுக்காக நன்றி, நிர்மலாவுக்கு).

வரும் நாட்களில் ‘கொலட்கராச்ய கவிதா ‘, ‘சிரிமிரி ‘ என்று அவருடைய மராத்திக் கவிதையும் ஆங்கிலத்திலும் தமிழிலும் வரும்போது, திலீப் சித்ரே, ஓவியர் – கவிஞர் கீவ் படேல், அரவிந்த் கிருஷ்ண மெஹ்ரோட்ரா என்று அவருடைய நண்பர்கள் அவரை எழுத்தில் நினைவு கூறும்போது, கொலட்கர் இன்னும் நெருங்கி வருவார். அதுவரை, ஏற்கனவே அறிமுகமான அவர் கவிதைகளின் மூலம் அவரோடு பேசிக் கொண்டிருக்கலாம்.

****

திருதிமான் சட்டர்ஜி

பாகீரதி

அனுஷ்கா ரவிசங்கர் – சவிதா நரசிம்மன்

அபினவ் அனுஷ்கா

அபினவ்

Series Navigation

இரா.முருகன்

இரா.முருகன்