ஓவியப் பக்கம் எட்டு – இஸாமு நகூச்சி – வெளியை உணர்த்தும் ச்ிற்ப உடல் (பகுதி – 2)

This entry is part [part not set] of 50 in the series 20041202_Issue

மோனிகா


இஸாமு நகூச்சியின் சிற்பங்கள் ஒரு விளையாட்டு பொருளினைப்போல் எளிமையானதும் ஒரு தத்துவக் குறியீட்டைப்போல் செறிவுடையதுமாகும். எளிமையும் நவீனமும் ஒருங்கிணைந்த இந்த சிற்பங்களின் பின்னுள்ள வரலாறு மிகவும் சுவாரச்ியமானது. சிற்பக்கலையில் எளிமையையும் தியானத்தையும் நாடிய இஸாமுவின் சிற்பங்களை நான்கு வகையாகப் பிரித்துவிடலாம். 1. போரின் பாதிப்பினால் அவர் உருவாக்கிய சிற்பங்கள் 2. பின்னிப்பிணையும் சிற்பங்கள் 3. வானத்து நட்சத்திரக்கூட்டங்களை மனதில் கொண்டு அவர் வடித்த ஒளி மைய சிற்பங்கள் (அகாரி விளக்குகளும் இவற்றில் அடக்கம்) 4. கற்களின் தன்மையை மையமாகக் கொண்ட சிற்பங்கள்.

போரின் பாதிப்பினால் அவர் உருவாக்கிய சிற்பங்கள்:

1941ம் ஆண்டு டிசம்பர் ஏழாம் தேதி ஜப்பானியர்கள் பெர்ல் ஹார்பரின் மீது குண்டு வீசியபோது இஸாமு கலிபோர்னியாவில் வாழ்ந்து கொண்டிருந்தார். ஜனவரி 1942ம் ஆண்டு இரண்டாம் உலகப்போரின்போது அமெரிக்க அரசாங்கம் இலட்சத்து இருபதினாயிரம் ஜப்பானியர்களை சிறைப்படுத்தி பாதுகாப்பு முகாம்களுக்கு அனுப்பியது. நியூயார்க்கின் சட்ட பூட்வமான குடிமகன் என்ற அந்தஸ்தின் பேரில் இஸாமு அதிலிருந்து தப்பித்துக் கொண்டார். இந்நிலையில் அதிகாரிகளுடன் நடந்த பேச்சு வார்த்தையைத் தொடர வாஷிங்டனுக்கு சென்ற இஸாமு தோல்வியுடன் வீடு திரும்பினார். இதன் பிறகு தேசியம், அடையாளம், பாதுகாப்பு, மனிதார்த்தம் எல்லா மதிப்பீடுகளுமே அவருக்கு கேள்விக்குரியாய் போகவே அவரது சிற்பங்களை அவை குறித்த கேள்விகள் ஆக்கிரமிக்க தொடங்கின.

தானாகவே முகாமிற்கு சென்று சேர்வது என்று முடிவெடுத்த அவர் அரிஸோனாவில் இருந்த போஸ்டனுக்கருகில் உள்ள கொலராடோ ஆற்று குடிபெயர்வு முகாமுக்கு (Colorodo River Relocation Camp) சென்றார். அங்கு ஒரு சில இட ஒழுங்கமைவு திட்டங்களை செய்வதன் மூலம் முகாம் வாசிகளுக்கு நன்மைகள் செய்து தரவிழைந்து அது பயன் தராமல் போகவே ஆறு மாதத்திற்குப் பிறகு மனம் உடைந்தவராக அங்கிருந்து திரும்பிய இஸாமு நியூயார்க்கில் உள்ள மெக்டூகல் அல்லேவில் ஒரு ஓவியக்கூடம் அமைத்து அங்கு பணியிலாழ்ந்தார்.

ஒரு எட்டு வருட காலத்துக்கு தன்னுடைய மனவருத்தத்தையும் போரென்னும் பயங்கர மிருகத்தின் பசிக்கிறையான மனிதர்கள், நிலப்பரப்புகள் போன்றவற்றையும் சிற்பமாக வடித்து தனது கருத்தை வெளியிட்டார் இஸாமு.

“வதைக்கப்பட்ட பூமி” (This tortured earth) என்கிற கீழ்க்கண்ட சிற்பம் படைக்கக் காரணமாயிருந்தது குண்டு வீச்சுக்குட்பட்ட ஒரு ஆப்பிரிக்கப் பாலைவனத்தின் மேலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படமாகும். இது இவரது உயிர்புறத்தோற்ற (bio-morphic) சிற்பங்களுள் ஒன்றாகும்.

This tortured earth, 1943, Bronze

அதைத் தொடர்ந்து அவர் பல்வேறு பொருட்களையும் வடிவங்களையும் பின்பற்றி செதுக்கிய சிற்பங்களில் ஒன்றுதான் போர் வீரன் எனப்படும் சிற்பம். இச்சிற்பங்களில் எலும்புகளையும் தோலையும் பயன்படுத்தி ஒரு உயிர்ப்பொருளின் இழப்பை தெரிவித்தார் அவர். பின்னிப்பிணையும் சிற்பங்களைப்போலவே இவை ஒரு கயிற்றால் இணைக்கப்பட்ட பகுதிகளால் ஆனவை.

Monument to Heroes, 1943, wood, paper, bone

War, 1952, terracotta

1945 லிருந்து 47க்குள் இஸாமு கிட்டத்தட்ட பதினைந்து பின்னிப்பிணையும் (interlocking) சிற்பங்களை உருவாக்கினார். கல், இரும்பு, அலுமினியம் என பல பொருட்களால் இவை உருவாக்கப்பட்டன. துண்டுத் துண்டாக ஓவியங்களாகவும் சிற்பங்களாகவும் உருவான இவை இரண்டாம் உலகப்போர் விட்டுச் சென்ற அவநம்பிக்கையையும் பாதுகாப்பின்மையையும் குறிப்பனவாகும். இதை அவர் தனது வார்த்தைகளால் கூறும்போது “ஆக்கிரமிக்கும் வெறுமை (encroaching void)” என்று குறிப்பிடுகிறார். இதே வார்த்தைகள் எட்வர்ட் முன்ச் போன்ற உருவிலி வெளிப்பாட்டு ஓவியர்கள்(abstractexpressionist) தங்களது பண்டைய(primordial) மற்றும் கற்பனை(mythical) உருவங்களை வெளிப்படுத்த முயன்ற போதும் பயன்படுத்தப்பட்டன. உருவிலித் தன்மை என்பது தற்கால மனிதனுக்கும் பிரபஞ்சத்தின் அதீத பழமைக்குமான ஒரு நெருக்கமான தொடர்பை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. எழுத்து வடிவம் (calligraphy) எனப்படும் கீழ்கண்ட சிற்பம் எழுத்துருவின் முப்பரிமாணப் பிரதியாகவும் அதே சமயம் ஒரு பண்டைய நினைவுச் சின்னம் போலவும் தோற்றமளிக்கிறது.

பின்னிப்பிணையும் சிற்பங்கள் (interlocking sculptures)

உலகப்போருக்கு முன்னர் தனது 26ம் வயதில் (1930) சைனாவுக்கு சென்ற இஸாமு அங்கிருந்து ஜப்பான் செல்ல விரும்பினார். ஆனால் “நகூச்சி” என்ற பெயருடன் இங்கு வருவதாக இருந்தால் வராதே!” என்று அவரது தந்தையார் யோனஜிரொ நகூச்சி கூறவே அவர் பெய்ஜிங்கிலேயே சிறிது காலம் தங்க நேர்ந்தது. அப்பாவின் கட்டளைக்குப் பிறகும் அதற்கு மறு ஆண்டு ஜப்பான் சென்ற நகூச்சிக்கு அவரிடம் பெரும் வரவேற்பு இருக்கவில்லை. க்யோட்டோவில் அவர் தங்கிய ஆறு மாத காலத்தில் ஜப்பானிய பழங்குடி ஹனிவா உருவங்களையும் ஸென்(zen) கோயிற் தோட்டங்களையும் காண நேர்ந்தது. பிற்காலத்தில் இவையே அவரது சிற்பங்களில் பெரும் பாதிப்பை உருவாக்கின. 1931ல் அமெரிக்கா திரும்பிய நகூச்சி அதன் பிறகு 19 ஆண்டுகளுக்கு ஜப்பானுக்கு செல்லவே இல்லை. தந்தையின் நிர்தாட்சணியம் அவரை மிகவும் வருத்தத்துக்குள்ளாக்கியது. அதன் விளைவாக 1914ம் ஆண்டு ப்ரான்ஸ் காப்காவால் எழுதப்பட்ட “உருமாற்றம் (Metamorphasis)” என்ற நாவலில் வருகிற க்ரிகோர் சம்ஸாவுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு இந்த க்ரிகோர் என்கிற சிற்பத்தை வடித்தார். ஒரு நாள் காலையில் தான் எழும்போது க்ரிகோர் தன் உருவம் ஒரு பெரிய பூச்சியாக மாறிவிட்டதாக உணர்கிறான். அப்படி உருமாறிய அவனை அவனது தந்தை ஒரு ஆப்பிள் பழத்தாலேயே அடித்து துரத்துகிறார். இச்சம்பவத்தை தன்னுடைய சொந்தக்கதையுடன் சேர்த்து கற்பனை செய்து கொள்கிறார் இஸாமு.

Calligraphy (Terracota)

Gregory (Effigy), 1945 (cast in Bronze 1969)

1946ல் உருவாக்கப்பட்ட இந்த சிற்பத்தின் அமைந்த ஒரு பரந்த முன் நோக்கிய உடல் ஒரு கற்பனைத் தளமாக பல புனைவுகளாய் உட்செருகல்களைத் தாங்கி நிற்கிறது. இந்த உருவத்தைத் தாங்கிப் பிடிப்பதற்காக அதன் மூன்று கால்கள் அடித்தளத்தில் குத்தப்பட்டுள்ளன. ஒரு கண்போன்ற அமைப்பு மேலிருந்து நடுப்பகுதியை துளைத்துக் கொண்டு நிற்கிறது. இத்தகைய உயிர்ப்புறத்தோற்ற புனைவுகள் பிகாஸோவின் எலும்பு உருவங்களையும் 1920 நிலவிய மிகை-யதார்த்தத் (surrealistic) தரவுகளான ஜான் மிரோ, யூவ்ஸ் டாங்கை போன்றவர்களது தீற்றோவியங்களிலிருந்தும் (paintings) எடுத்தாளப்பட்டிருக்கிறது. எனினும் இஸாமுவின் தனித்தன்மை அவரது பொருத்திப் பார்க்கும் புதிரைப்போன்று (zig zag puzzle) கவனமாகப் பூட்டப்பெற்ற பின்னும் தற்காலிகத் தோற்றம் கொண்ட சிற்பங்களாகும்.

ஒளி மைய சிற்பங்கள்

1947க்குப் பிறகு விண்வெளி, அதைச் சார்ந்த நட்சத்திரக் கூட்டங்கள், நிலவு, சூரியன், விண்மீன்கள், விண்கற்கள் போன்றவை இஸாமுவை ஒளி சார்ந்த சிற்பங்கள் நிர்மாணிப்பதில் ஈடுபடுத்தின. இந்தகைய சிற்பங்களை அவர் காகிதம், கற்குடைவு, ஓளி ஊடுருவும் ஒரு வகை தோல் போன்றவற்றைக் கொண்டு செய்தார். இச்சிற்பங்கள் வைக்கப்பட்டிருக்கும் அறைக்குள் நாம் செல்லும் போது விண்வெளிக்குள் பயணிப்பதுபோன்றதொரு உணர்வு ஏற்படுகிறது.

Lunar Voyage,1948

Lunar Infant, 1944

இந்த காலகட்டத்தில் அவருக்கு பிடித்தமான பொழுதுபோக்காக இருந்தது அகாரி விளக்குகளை உருவாக்குவது. தன்னுடைய ஜப்பான் பயணத்தினாலும் ஒளி மைய சிற்பங்களினாலும் தூண்டப்பட்டு அவர் இந்த அகாரி விளக்குகளைத் தயாரித்தார். அகாரி என்று அவர் இதனை அழைக்கக் காரணம் ஜப்பானிய மொழியில் அகாரி என்பதற்கு ஓளிர்வு என்றும் கனமில்லாதது (lightness) என்றும் பொருள். “கனமில்லாதது என்பதை எளிமை என்றும் சாரம் எனவும் கொள்ளலாம். ஒளியை அறிவுக்கு இணையாகக் கொள்ளலாம். இதனுடைய உவமை கவித்துவமும், கருத்தாழமும் மிக்கது. இந்த விளக்குகளின் இருப்பு வெளியை விரிவுபடுத்தி மிதக்கச் செய்யுமே தவிர இடத்தை அடைத்துக் கொள்வதில்லை. இறகுகளைப் போல மென்மையான அவற்றை ஒரு காகித உறையினுள் மடித்து வைத்துவிடலாம்” என்று தனது இப்படைப்பைப் பற்றி அவர் கூறுகிறார்.

Early promotional photograph of Akari, 1950s.

கற்களின் தன்மையை மையமாகக் கொண்ட சிற்பங்கள்

தன்னுடைய கடைசி இருபது வருடம் இஸாமு ஜப்பானில் மஸடோஷி இசூமி என்ற கல்தச்சருடன் சேர்ந்து கொண்டு ஓவியக் கூடமமைத்து சிற்ப வேலை செய்து வந்தார். பல இடங்களில் சிற்பத்தோட்டங்களும், கட்டிட நிர்மாணங்களும் செய்து உலகப் புகழ் பெற்ற இஸாமுவின் மனது கிழக்கு தேசங்களின் தத்துவங்களுக்குள் ஈர்க்கப்பட்டது. ஜப்பானிய ஷிண்டோ மதத்தின் பேரில் பற்று கொண்ட அவர் அதன் கோட்பாடுகளைச் சிற்பங்களில் கையாண்டார். ஷிண்டோ கலைஞனை கடவுளாகவும் மந்திரவாதியாகவும் வர்ணிக்கிறது. கலைஞன் செதுக்குவதாலும் குடைவதாலும் கற்களை கொல்லுகிறான் என்றும் பிறகு அதனை மெருகூட்டுவதால் (polish) அதற்கு உயிர் கொடுக்கிறான் என்றும் கூறி சிற்பக்கலை நுட்பங்களை அழித்தலிலிருந்து ஆக்கலுக்கு நகர்த்தும் ஒரு நம்பிக்கையான பணியாக வர்ணிக்கிறது. இதனடிப்படையில் கற்களின் இயல்பைக் கொண்டே அவற்றை முற்றிலும் சிதைக்காமல் சில சிற்ப முயற்சிகளை செய்ய முயன்றார் இஸாமு. இத்தாலியிலும் ஜப்பானிலும் கிடைக்கக் கூடிய பல விதமான கற்கள் இந்த முயற்சிக்கு உகந்ததாகத் தோன்றவே அவ்விரு இடங்களிலும் அவர் தனது பணியைத் தொடர்ந்தார்.

Core (Cored Sculpture)

Narrow Gate, The StoneWithin, Odalisque, Sculpture Finding

1988ம் ஆண்டு டிம்பர் முப்பதாம் நாள் நியூயார்க்கில் மரணமடைந்தார்.

அமெரிக்கத் தபால்தலை நிறுவனம் இஸாமுவின் சிற்பங்களை தபால் தலைகளாக வெளியிட்டுள்ளது. இவற்றை 37 செண்டு அட்டைகளாக தபால் நிலையங்களில் கேட்டுப் பெறலாம். அவற்றை கடிதங்களில் ஒட்டி அனுப்ப மனம் வராமல் நீங்கள் உடனிருத்திக் கொண்டால் அதில் ஆச்சரியமே இல்லை. 1985ம் ஆண்டு இவரது சிற்பக்கலைக்கூடம் நியூயார்க்கில் திறக்கப்பட்டது. இங்கு 250 சிற்பங்கள் வரை உள்ளன. நியூயார்க்கின் லாங் ஐலேண்டில் உள்ள இஸாமு நகூச்சி கலைக்கூடத்திற்கு நவீனக் கலை அருங்காட்சியகத்தின் (Musuem of modern art) நுழைவுச்சீட்டுடன் இலவச அனுமதி கிடைக்கும். வலைப்பதிவு www.Moma.org . நியூயார்க்கின் விட்னி அருங்காட்சியகத்தில் அவரது சிற்பங்கள் ஜனவரி மாதம் வரை காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும். வெள்ளி மாலை 6லிருந்து 8 மணிவரை இங்கு நுழைவுக்கட்டணம் கிடையாது. www.whitneymuseum.org (இது எனது சிபாரிசு!). இவ்விடங்களுக்கு தொலைவில் உள்ளவர்கள் www.noguchi.org என்ற வலைப்பதிவிற்குப் போய் இவரைப்பற்றி இன்னும் நிறைய தெரிந்து கொள்ளலாம்.

Series Navigation

மோனிகா

மோனிகா