மக்கள் தெய்வங்களின் கதைகள் 16. ஆந்திரமுடையார் கதை

This entry is part [part not set] of 57 in the series 20050106_Issue

அ கா பெருமாள்


16. ஆந்திரமுடையார் கதை

களைக்காட்டூர் என்ற ஊரில் மாடன் நாயர் என்பவர் வாழ்ந்து வந்தார். அந்த ஊரில் எருக்கலை, புல்புதர்களை வெட்டி சீர்திருத்திப் பயிர் செய்து செல்வந்தனாக வாழ்ந்தார் அவர். அவரது மனைவி பொன்னிலங்கி என்பவள். அவ்விருவருக்கும் பிறந்தவர் ஆந்திரமுடையார். அவர் குழந்தையாய் இருந்தபோதே எல்லோரையும் கவர்ந்தார். சிறந்த கல்வியும் ஆயுதப்பயிற்சியும்பெற்று அழகும் வீரமும் அறிவும் கொண்டவராக விளங்கினார்.

ஆந்திரமுடையாரின் வீரத்தையும் அழகையும் கேள்விபட்ட களைக்காட்டூர் மணியக்காரர் பல்லக்கைக் கொடுத்தனுப்பி ஆந்திரமுடையாரை வரவழைத்தார். அவரைக் கம்பிளி போர்வையின் மேல் அமரச் சொன்னார். அவருக்குத் தலைப்பாகையும் பட்டும் கொடுத்தார். காதுக்குக் கடுக்கனும் கைக்குக் கைவளையும் போட்டார். விலைமதிப்பற்ற துப்பட்டியும் கொடுத்தார்.

மணியக்காரர் ஆந்திரமுடையாரை தனக்கு துணையாக இருக்கும்படிக் கோரி களைக்காட்டுப் பகுதியில் சில இடங்களை ஆந்திரமுடையாருக்குப் பதித்துக் கொடுத்தார். இந்தப்பகுதியில் நீர் அரசாளலாம், ராணுவம் வைத்துக்கொள்ளலாம் , பவனி வரலாம் என்றார். ஆந்திரமுடையாரும் அவரை வணங்கிவிட்டு பல்லக்கிலே பவனி வந்தார். அப்போது அவரைப் பார்த்த இளம்பெண்கள் அவர்மீது ஆசைப்பட்டனர்.

ஆந்திரமுடையார் பெற்ற பேற்றை அறிந்து களைக்காட்டூர் ஒன்பதுகுறிச்சி ஜனங்கள் அவருக்கு மரியாதை செய்தனர். முப்பது பொன் காணிக்கை கொடுத்தனர்.

ஆந்திரமுடையார் தன் ஆளுகைக்கு உட்பட்ட ஒன்பது குறிச்சி பகுதிகளில் குதிரைமேல் பவனி வந்தார். அப்போதெல்லாம் அப்பகுதியில் பெண்கள் அவரை ஆசையோடு பார்த்தனர். அன்னம் தண்ணீர் குடியாமல் மோகித்து நின்றனர். ஆந்திரமுடையாரோ அவர்களை ஆசையோடு பார்ப்பது தவறு என்ற வைராக்கியத்தில் இருந்தார்.

தனக்குத் திருமணம் ஆகாமல் இருப்பதால் அல்லவா இப்படி எல்லோரும் ஆசைப்படுகிறார்கள். திருமணம் செய்துகொண்டால் இப்பெண்களின் பார்வையிலிருந்து தப்பிவிடலாம் என்று நினைத்தார். தன் தாயிடம் சென்றுஇ ‘ அம்மா எனக்குத் திருமணம் செய்யவேண்டும் ‘ என்றார். பொன்னிலங்கித் தாயாரோ ‘ ‘அப்பா உனக்குப் பெண் தர போட்டி போட்டுக்கொண்டு ஆட்கள் காத்திருக்கிறார்கள். என் அண்ணன் கரிகாலன் மகளை நீ கட்டிக்கொள்ளவேண்டும் ‘ ‘ என்றாள்.

ஆந்திரமுடையார் அதற்கு முதலில் கொஞ்சம் தயங்கினாலும் பிறகு இணஙகினார். பெரியோர்கள் திருமண நாளை நிச்சயித்தனர். பாக்கும் வெற்றிலையும் பரிமாறினர். ஆந்திரமுடையாருக்குக் கலியாணம் என அறிந்த அரண்மனையார் சரப்பளிமாலை கொடுத்தனுப்பினார். சுமங்கலிப்பெண்கள் குரவை முழங்கத் திருமணம் இனிதே நடந்தது.

திருமணம் முடிந்து சில நாட்கள் கழிந்தன. ஆந்திரமுடையார் களைக்காட்டு மலைக்கு வேட்டைக்குப் போனார். பலவகை ஆயுதங்கள் தாங்கிய வீரர்கள் அவருடன் சென்றார்.ஆந்திரமுடையார் வேட்டையாடிவிட்டு வீடு திரும்பியபொழுது அவரது மனைவி தோழிகளுடன் பகடை ஆடிக்கொண்டிருந்தாள். அந்தப் பாவிக்கு முடிவுகாலமோ என்னமோ ? கணவனைக் கவனிக்காமல் பகடை ஆடிக்கொண்டிருந்தாள். ஆந்திரமுடையார் அதைக்கண்டு மிகவும் கோபமுற்றார். தன்னைக் கவனியாமல் ஆணவத்துடன் உட்கார்ந்திருந்தாள் எனத் தவறாக நினைத்துவிட்டார். கடுமையான கோபம் கொண்டு அவளுக்குத் தண்டனை கொடுக்க நினைத்தவராக தன் கனத்த மர மிதியடியை எடுத்து அவள் மீது வேகமாக எறிந்தார். அவள் தலையி அடிபட்டு உடனே மயங்கி விழுந்தாள். துடிதுடித்து இறந்தாள்.

சுற்றியுள்ள பெண்கள் ‘ ‘சண்டாளா பெண்பாவம் உன்னைப் பிடிக்காமல் விடாது ‘ ‘ என்றார்கள். ஆந்திரமுடையாரோ ‘ ‘உங்களுக்கும் மிதியடிச்சாவு வேண்டுமா ? ஓடிவிடுங்கள் ‘ ‘ என்றார். அவர்கள் அவரைத் திட்டிக்கொண்டே ஓடினார்கள்.

மனைவியைக்கொன்ற பாவம் ஆந்திரமுடையாரைப் பிடித்தது. அவரது செல்வம் வந்தது போலவே போக ஆரம்பித்தது. அரண்மனையில் கூட இடம் கொடுப்பாரில்லை. ஊரிலே வாங்கிய கடனுக்கு அளவில்லை. மறைந்து வாழவேண்டிய நிலைக்கு ஆந்திரமுடையார் ஆளாயினார்.

களைக்காட்டூரில் இருந்தால் தனக்கு அவமானம் ஆகும் என்று நினைத்து வள்ளியூரில் குடியேற விரும்பினார். தன் பரிவாரங்கள் புடைசூழ வள்ளியூருக்கு வந்தார். அங்கு ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்துக் குடியமர்ந்தார்.

ஒருநாள் ஆந்திரமுடையார் வள்ளியூரில் உள்ள மடத்தின் வழி சென்றார். களைப்பாக இருந்ததால் அந்த மடத்தில் இளைப்பாற விரும்பினார். மடத்தின் பண்டாரம் அவரின் தோற்றத்தைக் கண்டு பெரும் மரியாதை செலுத்தினான். ஆந்திரமுடையார் மடத்துத் திண்ணையில் அமர்ந்தார். மடத்துப் பண்டாரத்திடம் குடிக்கத் தண்ணீர் கேட்டார். பண்டாரம் மடத்தின் உள்ளே சென்று மகள் சின்னம்மாளிடம் ‘ ‘ முக்கிய விருந்தாளி வந்திருக்கிறார். ஒரு தட்டில் வங்காளச் சீனியும், செம்பு நிறைய தண்ணீரும் எடுத்து வா ‘ ‘ என்றார்.

அவளுக்கு அந்நிய ஆடவர் முன் வர தயக்கமாக இருந்தது. என்றாலும் தந்தையின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு தண்ணீர் கொண்டுவந்தாள். ஆந்திரமுடையார் பண்டாரத்தின் மகளைப் பார்த்தார். இவனுக்கு இப்படி ஒரு அழகிய மகளா எனத் திகைத்தான். தண்ணீரை எடுத்துக் குடித்தார். சுருட்டு பிடிக்கக் கனல் வேண்டுமே எனக் கேட்டார். சின்னம்மாளும் சீக்கிரமாக நெருப்பை எடுத்துக் கொடுத்தாள். அந்தப் பெண்ணைப் பார்த்து ‘ ‘ஒரு சிரட்டையில் நெருப்பு கொண்டு வா பெண்ணே ‘ ‘ என்றார். அவளும் முனங்கிக்கொண்டே நெருப்பு கொண்டு வந்தாள். ஆந்திரமுடையார் மீண்டும் ஒருமுறை அவளைப் பார்த்தார். அவருக்கு அவள்மீது ஆசை பிறந்தது.

பண்டாரம் ஆந்திரமுடையாரிடம் பேச்சுவாக்கில் தன் மகளைத் திருமணம் செய்துகொடுக்க முடியாத நிலையில் தான் இருப்பதைச் சொன்னான். ஆந்திரமுடையார் அவனுக்கு ஆறுதல் சொன்னான். ‘ ‘இந்த ஊரில் ஒரு மாப்பிள்ளை இருக்கிறான். அவனுக்கு ஏற்கனவே திருமணமாகி உள்ளது. ஆனால் மனைவி இறந்துவிட்டாள். அவள் நகை 300 பவுன் உள்ளது. அந்த மாப்பிள்ளை அழகானவன், வீரன் ‘ ‘ என்றான்.

பண்டாரம ஆந்திரமுடையார் சொன்னமாப்பிள்ளை தனக்கு மருமகனாக வந்தால் நல்லது என்றான். திருமணப் பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்றார் ஆந்திரமுடையார். அடுத்தநாள் பல்லக்கில் புடைசூழ வந்தார். அந்த மடத்தின் அருகே வநததும் பண்டாரம் ஓடி வந்தான். பல்லக்கில் அமர்ந்திருந்த ஆந்திரமுடையாரைப் பார்த்து ‘ ‘மாப்பிள்ளை எங்கே ? ‘ ‘ என்று கேட்டான். ஆந்திரமுடையார் ‘ ‘நானேதான் மாப்பிள்ளை ‘ ‘ என்றார். அதை எதிர்பாராத பண்டாரம் திகைத்தான்.

பண்டாரத்தின் வீட்டில் இருந்த கிழவி ஆந்திரமுடையாரைப் பழித்தாள் ‘உனக்கு இந்த ஊரில் என்ன உரிமை இருக்கிறது ? இங்கிருந்து ஓடிப்போ ‘ என்றாள். கூடி இருந்த ஊர் மக்கள் வள்ளியூரில் வெளியூர்க்காரன் வந்து அதிகாரம் பண்ணலாமோ என்று கேட்டு கலகம் செய்தார்கள். சில மொட்டையர்கள் ‘ அன்னியன் தந்த பணத்துக்காக நீ இப்படி செய்துவிட்டாயே ! ‘ ‘ என்று கூறி பண்டாரத்தை திட்டினார்கள். அடிக்க ஆரம்பித்தார்கள்.

ஆந்திரமுடையார் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு இருந்தார். தன் வீரர்களை அழைத்தார். கலகம் செய்பவரை அடித்து உதையுங்கள் என்றார். அந்த வீரர்கள் ஆந்திரமுடையாரைப் பழித்தவர்களை ஆயுதங்களால் தாக்கினார்கள். கலகக்காரர்கள் ‘ ‘எங்களை விட்டுவிடுங்கள். பண்டாரத்தின் மகளை நாங்களே மணமுடித்து வைக்கிறோம் ‘ ‘ என்றார்கள். அவர்கள் சொன்னபடி பண்டாரம் மகளை ஆந்திரமுடையாருக்கு கைபிடித்துக் கொடுத்தார்.

மாப்பிள்ளையும் பெண்ணும் மனையறையில் புகுந்தனர். இந்த நேரத்தில் வடதமிழ் நாட்டு திருடர்கள் வள்ளியூருக்கு வந்தனர். வள்ளியூர் வீதிகளில் ஆதாளி செய்தனர். பாத்திரஙகள், அணிகலன்கள், பட்டுகள் என்று பொருள்களை அள்ளிக்கொண்டு ஓடினார்கள். ஊர் மாடுகளைப் புறத்தே விரட்டிச் சென்றார்கள். அந்தவேளையில் உறக்கத்திலிருந்து விழித்தெழுந்த ஆந்திரமுடையார் திருடர்களின் ஆதாளியைக் கேட்டார்.

ஆந்திரமுடையார் ஆயுதங்களைக்கூட எடுக்க நேரமின்றி வள்ளியூர் வீதிகளில் பாய்ந்து போனார். திருடர்களைத் தனியாகவே எதிர்த்தார். ஈட்டியால் குத்தினார். வல்லயத்தால் அடித்தார். திருடர்கள் பலர் மாண்டனர். எஞ்சியவர்கள் திருடிய பொருட்களை போட்டுவிட்டு ஓடினார்கள். இந்த நேரத்தில் வள்ளியூர் மக்கள் திருடர்களைப் பிடிக்கக் கூடினார்கள். அங்கு ஆந்திரமுடையார் நிற்பதைக் கண்டு திருடரை வென்றவர் அவரே என்பதை அறிந்தார். அவரை வாயாரப் புகழ்ந்தனர். பரிசுகள் கொடுத்தனர். ஆந்திரமுடையார் நீண்டநாள் வாழ்ந்து மறைந்தார்.அவரை மக்கள் தங்கள் காவல்தெய்வமாக நிறுவி வழிபட்டனர்.

Series Navigation

முனைவர் அ.கா.பெருமாள்

முனைவர் அ.கா.பெருமாள்

மக்கள் தெய்வங்களின் கதைகள் – 15. வன்னியன் கதை

This entry is part [part not set] of 44 in the series 20041230_Issue

அ கா பெருமாள்


வன்னிக்களந்தை என்னும் ஊரில் மறவர் சாதியினர் நிறையபேர் இருந்தனர். அவர்களில் பணக்கார ஜமீன் குடும்பத்தைச் சார்ந்த அம்மையடி என்ற பெண் இருந்தாள். அவளுக்கு திருமணமாகி பல நாட்கள் குழந்தையில்லாமல் இருந்தது. மலடி என்ற பழி ஏற்பட்டதனால் மனம் நொந்த அவள் கோவில்கள் பல சென்று நேர்ந்தாள். குழந்தைக்காக தவமிருந்தாள். கடைசியில் சங்கரநயினார் கோவிலுக்குச் சென்று வேண்டித் தவம் இருந்தாள். அக்கோவிலிலேயே படுத்துக்கொண்டாள்.

அம்மையடி மறத்தி உறங்கிக்கொண்டிருந்தபோது ஒரு கனவு கண்டாள். கனவில் தென்கரை சாஸ்தாவின் துணைச்சாமியான தளவாய் மாடன் கோடங்கி அடிப்பவராக வேடம் தாங்கி வந்தார். அவர் அம்மையிடம் ‘ ‘ பெண்ணே நம்பி ஆற்றங்கரையில் ஒரு சாஸ்தான் கோவில் இருக்கிறது. அங்கே வந்து தவமிருப்பாய். உனக்கு எட்டுக் குழந்தைகள் பிறக்க சாஸ்தா வரம் கொடுப்பார். அந்தப் பிள்ளைகளை உரிய காலத்தில் சாஸ்தாவின் கோவிலுக்குக் காவு கொடுக்கவேண்டும் ‘ ‘ என்றார்

மறத்தி கனவில் கண்ட நிகழ்ச்சியை எண்ணி வியபப்டைந்தாள். தளவாய் சொன்னபடி தென்கரைக்கு வந்தாள். நாட்கள் 41 ஆனதும் அவள் சாஸ்தாவிடம் மேலும் கெஞ்சி வேண்டினாள். அப்போது அவளுடன் இருந்த அவளது கணவன் ‘ ‘பெண்ணே என் நிலபுலன்களைக் கவனிக்கவேண்டும். பயிராக்கவேண்டிய காலம் வந்துவிட்டது . இப்படியே எத்தனைநாள் தவ்மிருப்பது ? நான் ஊருக்குப் போகிறேன் ‘ ‘ என்று கூறி அவளிடம் விடை பெற்றுக்கொண்டு தன் ஊருக்குச் சென்றான். அவள் தொடர்ந்து தவம் செய்து வந்தாள்.

நாஞ்சில் நாட்டில் 12 பிடாகைகளில் வடவீதியில் உள்ள கடுக்கரைப் பிடாகையைச் சார்ந்த ஒரு கிராமத்துக் காரணவருக்கும் அவரது மருமகனுக்கும் மனஸ்தாபம் வந்தது. மருமகன் மாமாவிடம் கோபம் கொண்டு ஊரைவிட்டுக் கிளம்பி கடுக்கரை மலையைத் தாண்டி வள்ளியூர் வழி கால்போன போக்கில் நடந்து தென்கரையை அடைந்தான். அங்கிரந்த சாஸ்தாவின் கோவிலில் தங்கினான். கோவிலைச் சுற்றி ஓடிய நம்பியாறும் கோவிலும் அவனுக்கு அமைதியைக் கொடுத்தது. அதனால் அங்கே தங்கிவிட்டான்.

தென்கரை சாஸ்தா கோவிலில் தவமிருந்த அம்மையடி மறத்தி, நாஞ்சில் நாட்டைவிட்டு வந்த வேளாரிடம் பொதுவான விவரங்கள் பற்றிப் பேசினாள். அவர் அங்கே வந்த காரணத்தையும் அறிந்துகொண்டாள். அவருக்கு வேளாவேளைக்கு சுவையான உணவும் கொடுத்தாள். இருவருக்கும் இடையே இனம் புரியாத அன்பு வளர்ந்தது. அவர்கள் கணவன் மனைவியாக வாழத் தொடங்கினர். இந்த நேரத்தில் அம்மையடி மறத்தியின் முதல் கணவன் வந்தான். தன் மனைவி இன்னொருத்தனுடன் சுகமாய் வாழ்வதைக் கண்டான். இவர்கள் இப்படியே வாழட்டும் என்று சொல்லி வாழ்த்திவிட்டு தன் சொந்த ஊருக்குப் போய்விட்டான்.

அம்மையடி மறத்தியும் நாஞ்சில் நாட்டு வேளாளரும் தென்கரையில் ஒரு இடத்தை வெட்டிச் சீர்திருத்தி வீடுகட்டி வாழ்ந்தனர். அவர்களுக்கு அடுக்கடுக்காக ஏழு ஆண்குழந்தைகளும் ஒரு பெண்ணும் பிறந்தனர். ஆண்மக்களுக்கு சின்னத்தம்பி வன்னியன், சிதம்பர வன்னியன், முத்துமாலை வன்னியன், ஆண்டுகொண்ட வன்னின். அழகு விலங்காடி வன்னியன், தென்கரை வன்னியன், வடகரை வன்னியன் எனப் பெயரிட்டாள். பெண்மகள் வன்னிச்சி எனப் பெயர் பெற்றாள்.

அம்மையடி மறத்தித் தன் குழந்தைகளை தன் மறக்குல வழக்கப்படி வளர்த்தாள். அவர்களும் நல்ல உடல்வாகு கொண்டவர்களாய் விளங்கினர். வேல்கம்பு, சிலம்பு போன்ற பயிற்சிகள் பெற்றனர். அவர்களுக்குத் திருமணப் பருவம் வந்தது. அம்மையடி தன் மக்களுக்குத் திருமணம் செய்ய விரும்பினாள். தன் குலத்தில் பிறந்த ஒன்றுவிட்ட சகோதரர்களிடம் பெண் கேட்டாள். அவர்களின் மாமன்மார்கள் ‘ ‘நம் குல வழக்கப்படி இந்த ஏழு பேரும் திருட்டுத் தொழிலில் திறம் காட்டிச் சாதனை செய்தால் பெண்ணைத் தருகிறோம் ‘ ‘ என வாக்களித்தனர்.

அம்மையடியாள் தன் மக்களிடம் மாமன்மார்களின் வேண்டுகோளைத் தெரிவித்தாள். வன்னியர்கள் குலவழக்கப்படி களவுத்தொழில் செய்யத் தயாராயினர். திருச்செந்தூர் கோவில் கருவறையில் அளவு கடந்த பொற்குவியல் இருப்பதைக் கேள்விப்பட்டனர். ஆனால் அங்கே கடுங்காவல் இருப்பதை அறிந்து அங்கே செல்லவேண்டாம் என முடிவு கட்டினர். இப்படி இருக்கும்போது மூத்த வன்னியனின் கனவில் தளவாய் சுவாமி சோதிடர் உருவில் வந்தார். தென்கரை அருகே வெங்கலராசன் கோட்டை ஒன்று உள்ளது. அங்கே சென்று திருடுங்கள் என்றார்.

மூத்த வன்னியன் தம்பிகளிடம் தான் கண்ட கனவைப் பற்றிக் கூறினான். அவர்களும் வெங்கலராசன் கோட்டைக்குச் செல்வோம் என்றனர். அடுத்தநாள் மாலை நேரத்தில் தென்கரைக்கு வந்தனர் சகோதரர்கள். அவர்களில் ஒருவன் ‘ ‘ இப்போது நல்ல வெளிச்சம் இருக்கிறது. இப்போதே நாம் வெங்கலராசன் கோட்டைக்குச் செல்லவேண்டாம். அதுவரை இங்கே கிளியாந்தட்டு விளையாடுவோம் ‘ ‘ என்றான்.

அவர்கள் நம்பியாற்று மணல்வெளியில் கிளியாந்தட்டு விளையாட ஆரம்பித்தபோது மாடு மேய்க்கும் சிறுவனைப்போல் வேடமிட்டு தளவாய்சாமி வந்தார். அவர் வன்னியர்களிடம் ‘ ‘மணலில் விளையாடினால் சரியாக இருக்காது. நம்பியாற்றின் நடுவே ஒரு பாறை இருக்கிறது. அந்தப் பெரிய பாறை மீது விளையாடுவோம் ‘ ‘ என்றார்.

வன்னியர்கள் தளவாய் சுவாமியாக வேடமிட்டிருந்த மாடுமேய்க்கும் சிறுவன் சொன்னபடி நம்பிப்பாறைக்குச் சென்றனர். அங்கே அவர்கள விளையாட ஆரம்பித்தனர். நேரம் போவது தெரியாமல் விளையாடினர். வானத்து நட்சத்திரங்களின் போக்கை பார்த்த மூத்த அண்ணன் ‘ ‘நேரம் கடந்துவிட்டது. இனி வெங்கலராசன் கோட்டைக்குப் போனால் நேரம் விடிந்துவிடும். என்ன செய்வது ? ‘ ‘ எனக் கேட்டான்.

உடனே மாடு மேய்க்கும் சிறுவன் ‘ ‘ நீங்கள் சாமர்த்தியமான சிறுவர்களாகத் தோன்றவில்லையே. தென்கரை மகாராசன் கோவிலிலேயே திருடலாமே. அங்கே அளவு கடந்த பொன் இருக்கிறது. இதற்கு வெகுநேரம் நடக்கவும் வேண்டாம் ‘ ‘ என்றான்.

சகோதரர்களும் தென்கரை சாஸ்தா கோவிலில் திருட முடிவு செய்தனர். மாட்டுக்கார சிறுவன் கோவிலின் கருவறை இருக்கும் இடத்தை அடையாளம் சொன்னான். அவர்களிடம் ‘ ‘ மேலைவாசல் வழியாகச் செல்லுங்கள் அதுவே நல்ல வழி ! ‘ ‘ என்றும் கூறினான். பின்னர் ‘ ‘ நான் என் வழி செல்லுகிறேன். நீங்கள் உங்கள் தொழிலைச் செய்யுங்கள் ‘ ‘ என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டான்.

ஏழு சகோதரர்களும் தென்கரை சாஸ்தா கோவிலின் மேற்குபக்கம் வந்து சுவரில் ஏறினர். மேல் சுவரின் ஒரு பகுதியை இடித்தனர். இந்த நேரத்தில் தயவாய் சாமி ஒரு சாதாரண மனிதனாக அந்த ஊர் அரசனிடம் சென்றார். ‘ ‘ தென்கரை சாஸ்தா கோவிலில் 7 பேர்கள் திருடிக்கொண்டிருக்கின்றனர். என்னுடன் கொஞ்சம் குதிரை வீரர்களை அனுப்புங்கள். அவர்களைப் பிடித்துவிடலாம் ‘ ‘ என்றார்.

ராஜா அந்த மனிதருடன் குதிரை வீரர்களை அனுப்பினார். தளவாய்சாமி தென்கரைக்கு வரும்போது வன்னியர்கள் கோவிலில் திருடிவிட்டு வெளியே வந்துகொண்டிருந்தனர். தூரத்தில் குதிரை வீரர்கள் வருவதைக் கண்டு கையிலுள்ள திருட்டுப் பொருட்களைக் கோவிலின் பக்கத்திலிந்த கிணற்றில் போட்டுவிட்டனர். ஆனால் அதற்குள் குதிரைவீரர்கள் அவர்கள் அருகே வந்துவிட்டனர். வன்னியர்கள் ஓட்டமாய் ஓடினர். தளவாய்சாமி அவர்களைக் குருடராகும்படிச் செய்தார். அவர்களும் குருடராயினர்.

எழுவரும் கண் தெரியாமல் தட்டுத்தடுமாறித் தவித்தனர். குதிரை வீரர்கள் அவர்கள் ஏழு பேரையும் பிடித்துக் கயிற்றால் கட்டினர். கோயிலருகே இருந்த புளியமரத்தில் கட்டி வைத்தனர்.

திருடர்களின் கழுத்தில் ஊமத்தை பூமாலை போட்டனர். வில்லன்புதூர், கண்ணன்புதூர் என்னும் ஊர்களிலிருந்து வந்த வீரர்கள் வன்னியர்களை வாளால் வெட்டினர். இந்தச் சமயத்தில் வன்னியர்களின் சகோதரி வன்னிச்சி அண்ணன்மார்கள் கேட்டுக்கொண்டபடி பலவகைக் கறிகளுடன் அடுக்குப் பானைகளில் சாதம் கொண்டுவந்தாள். அண்ணன்மார்கள் அவளைத் தென்கரை நம்பியாற்றங்கரையில் கோழி கூவும்போது காத்திருக்கச் சொல்லியிருந்தார்கள். அதன்படி அவள் அங்கே வந்தாள். அவள் வரும்போது தீய சகுனங்களைக் கண்டு திடுக்கிட்டாள். நடக்கக்கூடாதது நடந்துவிட்டது என்பதை உணர்ந்தாள்.

தென்கரை நம்பியாற்றங்கரையில் அண்ணன்மார்கள் வெட்டப்பட்டுக் கிடப்பதைக் கண்டாள். தரையில் விழுந்து அழுதாள். அரற்றினாள். தலைகளை அதனதன் உடலில் பொருத்தினாள். அவர்களின் வாயில் அரிசியைப் போட்டாள். தன் நாக்கைப் பிடுங்கி அவர்களின் முன்னே போட்டாள். ‘ ‘இந்தப் பெரிய ஊர் சிற்றூர் ஆகட்டும். இங்கு ஏழு வீடுகளுக்கு மேல் இருக்கக்கூடாது. இங்கே கோழி கூவக்கூடாது. நாய் குரைக்கக்கூடாது ‘ ‘ என்று சாபம் இட்டாள். அவளும் இறந்துபோனாள்.

ஏழு மக்களும் வெட்டுப்பட்டு இறந்த செய்தியை அம்மையடி மறத்தி கேள்விப்பட்டாள். ஓடோடி வந்தாள். எல்லா மக்களும் செத்துக் கிடக்கும் காட்சியைக் கண்டாள். அப்போது அவளுக்குப் பழைய நினைவு வந்தது. தென்கரை மகராஜனுக்குக் காவலாக ஏழு பேரும் இருப்பார்கள் என்று கனவில் தான் கண்டதை நினைத்தாள். அவளும் நாக்கைப் பிடுங்கி உயிர் விட்டாள்.

இறந்துபோன ஒன்பது பேரும் சாந்தி அடையாமல் கைலாயம் சென்றனர். அவர்களுக்குச் சிவன் வரம் கொடுத்தார். வன்னியர்களில் கடைசித் தம்பியான வன்னிராசன் தெய்வமாகத் தென்கரையில் நிலைபெறட்டும் என ஆசி வழங்கினார். எல்லோரும் தென்கரையில் சாஸ்தா கோவிலில் நிலைபெற்றனர்.

—-

Series Navigation

முனைவர் அ.கா.பெருமாள்

முனைவர் அ.கா.பெருமாள்

மக்கள் தெய்வங்களின் கதைகள் – 14. வன்னிராசன் கதை

This entry is part [part not set] of 52 in the series 20041216_Issue

அ கா பெருமாள்


14. வன்னிராசன் கதை

ஊத்துமலையில் ராமசாமித் தேவர் என்பவர் இருந்தார். அவர் தேச காவல் தொழிலைச் செய்து வந்தார். அவரது மனைவி தேவர்குளம் என்னும் ஊரைச் சார்ந்த வன்னிச்சி . அவர்களுக்குத் திருமணம் ஆகி ஆண்டுகள் பலவாகியும் குழந்தை பிறக்கவில்லை. அதனால் மனம் நொந்த வன்னிச்சி புனிதத் தலங்களுக்கும் கோவில்களுக்கும் யாத்திரை சென்றாள். கடுந்தவம் இருந்தாள். ஆனால் எந்தப் பலனும் கிடைக்கவில்லை.

கடைசியில் அவள் பலரும் சொல்லி வழிகேட்டு சங்கரநயினார் கோவிலுக்குச் சென்றாள். அங்கு 40 நாட்கள் தவம் இருந்தாள்.

வன்னிச்சியின் தவத்தைக் கண்டு இரங்கிய சங்கரலிங்கனார் ஒரு கிழப்பிராமணனாக உருவெடுத்து வந்தார். அவளிடம் உன் குறை என்ன என்று கேட்டார். வன்னிச்சி தன் பிள்ளைக்கலியைப்பற்றிச் சொன்னாள். அவர் உனக்கு ஆண் மகன் பிறப்பான். உன் ஊருக்குத் திரும்பிச் செல்வாய் என்றார்.

வன்னிச்சியும் அதைக் கேட்டு மகிழ்ந்தாள். தன் ஊரான ஊத்துமலைக்குச் சென்றாள். சங்கரனார் வரம் கொடுத்தபடி பத்தாம் மாதத்தில்ரவள் ஓர் ஆண் குழந்தை பெற்றாள். அக்குழந்தைக்கு வன்னிராசன் எனப் பெயரிட்டாள். அவனுக்குப் போர்க்கலைகளைக் கற்பித்தாள்.

வன்னிராசனுக்கு வயது 17 ஆனது. மகனுக்கு மணமுடித்து வைக்க எண்ணினாள் தாய். தன் அண்ணனிடம் பெண் கேட்டாள். அவன் ‘ ‘ நம் குல வழக்கம் உனக்குத் தெரியாதா ? உன் மகன் நம் வழக்கப்படி களவுத் தொழிலைச் செய்து வீரத்தை காட்டி மீண்டு வரட்டும். அப்போது என் மகளைக் கொடுக்கிறேன் ‘ ‘ என்றான். வன்னிச்சி பதில் பேசமுடியாமல் திரும்பினாள்.

மாமனின் நிபந்தனையை அறிந்த வன்னிராசன் ‘ ‘ அம்மா நான் குலப்படி களவு செய்து வெற்றியுடன் வந்து மாமன் மகளை மணப்பேன் ‘ ‘ என்றான். திருட்டுத் தொழிலுக்குரிய ஆயுதங்களுடன் புறப்பட்டான். எதிர்பட்ட சகுனத்தடைகளை அவன் பொருட்படுத்தவில்லை.

வன்னியன் ஊத்துமலையிலிருந்து திருநெல்வேலி வந்தான். அங்கே சின்னக்கண்ணு என்னும் தாசி வீட்டில் தங்கினான். அப்போது ஆனி மாதம் நெல்லையப்பர் கோவிலில் ஆனித் திருவிழா நடந்துகொண்டிருந்தது. கோவில் திருவிழா ஆதலால் விலை உயர்ந்த பொன் ஆபரணங்களை அம்மனுக்கும் சுவாமிக்கும் அணிவித்தனர். வன்னிராசன் கோவிலில் களவு செய்ய முடிவு செய்தான். சரியான நேரத்திற்குக் காத்திருந்தான். இரவில் கிளம்பி கோவிலினுள் கன்னம் வைத்துச் சென்றான். சுவாமியின் நகைகளைத் திருடிக்கொண்டு தப்பினான்

வன்னியன் கோவிலில் திருடிய தங்க ஆபரணங்களைச் சின்னக்கண்ணாளின் வீட்டில் மறைத்து வைத்தான். அடுத்தநாள் கோவிலைத் திறந்த அர்ச்சகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பொன் ஆபரணங்கள் கொள்ளை போனதை அறிந்தனர். கோவில் காவலர் கோவிலைச் சுற்றிய வீடுகளில் சோதனை செய்தனர். சின்னக்கண்ணாளின் வீட்டில் கோவில் ஆபரணங்கள் இருப்பதைக் கண்டனர். அங்கேதான் வன்னிராசனும் இருந்தான். காவலர்கள் அவனைப் பிடித்துக்கொண்டனர்.

அப்போது வடமலையப்பப்பிள்ளை என்பவர் நெல்லைச்சீமை பெரிய அதிகாரியாக இருந்தார். அவர் வன்னிராசனின் குற்றத்தைக் கேட்டறிந்தார். ஊர் புறத்தே அவனை வெட்டிக்கொல்ல ஆணையிட்டார். காவலர்கள் அவனை கைகால்கள் கட்டி கொண்டு சென்று கருகக்குளம் என்னும் இடத்தில் அவனை வெட்டிக் கொன்றனர்.

அவன் இறந்த செய்தியை வன்னியனின் நாய் வன்னிச்சிக்கு உணர்த்தியது. அவள் மகன் இறந்துபட்ட இடத்துக்கு ஓடி வந்தாள். தன் நாக்கைப் பிடுங்கி உயிரை விட்டாள்.

வன்னிராசன் செத்துப்போன எட்டாம் நாளில் கரிசல்குளத்திற்கு பேயாகவந்து ஆதாளி செய்தான். பலரரை அடித்தான். ஊர்க்காரர்கள் இது வன்னிராசனின் ஆவியின் வேலை என்பதைச் சோதிடர் மூலம் அறிந்து அவனை சாந்துசெய்யும்பொருட்டு அவனுக்கக் கோவில் எடுத்தனர். அங்கே வருடம்தோறும் பலி கொடுத்தனர். வன்னிராசனும் பலியை ஏற்று அவர்களுக்கு அருள்செய்தான். அவனை தெய்வமாகக் கொண்டாடினர்.

**

Series Navigation

முனைவர் அ.கா.பெருமாள்

முனைவர் அ.கா.பெருமாள்

மக்கள் தெய்வங்களின் கதைகள் 12 : முத்துப்பட்டன் கதை

This entry is part [part not set] of 57 in the series 20041209_Issue

அ. கா. பெருமாள்


முத்துப்பட்டன் கதை

கேரளத்தில் நெடுமங்காடு அருகே உள்ள ஆரியநாடு செழிப்புடைய நாடு. அந்த நாட்டில் பிராமணச் சாதியைச் சார்ந்த ஏழு சகோதரர்கள் இருந்தார்கள். அவர்களில் கடைசியாகப் பிறந்தவன் முத்துப்பட்டன். அவன் நல்ல உடல் வலிமை உடையவன். போர்க்கலைகளைப் படித்தவன். வாள் யுத்தத்தில் வல்லவன்.

ஒருமுறை முத்துப்பட்டனுக்கும் அவனது சகோதரர்களுக்கம் இடையே மாறுபாடு வந்தது. அதனால் முத்துப்பட்டன் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டே புறப்பட்டுவிட்டான். காடு மலைகள் எல்லாம் அலைந்தான். கொட்டாரக்கரை என்ற ஊருக்கு வந்தான். கொட்டாரக்கரையில் அப்போது அரசனாயிருந்தவன் பெயர் ராமராசன். அந்த அரசன் முத்துப்பட்டனைத் தன் பாதுகாப்பு படைவீரனாக வைத்துக்கொண்டான். பல சிறப்புகள் அவனுக்குச் செய்தான்.

முத்துப்பட்டன் அண்ணன்மார்கள் தம்பியைத் தேடி ஒவ்வொரு ஊராக வந்தார்கள். கொட்டாரக்கரைக்கும் வந்தனர். அங்கு பவிசோடு இருந்த தம்பியைக் கண்டனர். ‘ ‘தம்பி! எங்கள் தவறுகளை மன்னித்துவிடு. சேஷையர் மகளை உனக்குப் பேசி முடித்திருக்கிறோம். நீ சொல்லாமல் கொள்ளாமல் வந்துவிட்டாயே, எங்களுடன் வீட்டுக்கு வா ‘ ‘ என்றனர். முத்துப்பட்டனோ ‘ ‘நான் இப்போது ராமராசனின் சேவகன். அவரிடம் உத்தரவு கேளுங்கள். வருகிறேன் ‘ ‘ என்றான். அண்ணன்மார்கள் ராமராசரிடம் தம்பியை அழைத்துச் செல்ல அனுமதி கேட்டனர். ராமராசனும் மகிழ்ந்து அனுமதியும் கொடுத்தார். முத்துப்பட்டனுக்கும் பரிசுகளும் கொடுத்தனர்.

முத்துப்பட்டன் அண்ணன்மார்களுடன் ஆரியங்காவு காட்டு வழியே தன் ஊருக்குச் சென்றான். வழியில் அரசடித்துறை என்ற இடத்தில் தங்கினார்கள். முத்துப்பட்டன் ‘ ‘நான் இங்கு கொஞ்ச நேரம் இருந்து வருகிறேன், நீங்கள் வேண்டுமானால் செல்லுங்கள் ‘ ‘ என்றான். அண்ணன்மார்கள் அவனது பொருளுக்கு ஆசைப்பட்டு அவனை அங்கேயே விட்டுவிட்டு சுமையுடன் நடந்தார்கள்.

முத்துப்பட்டன் அந்தப் பாறையில் கண் அயர்ந்த நேரம் மெல்லிய குரலில் யாரோ பாடுவதைக் கேட்டான். திரும்பிப் பார்த்தான். இரண்டு பெண்கள் ஒரு நாயுடன் வருவதைக் கண்டான். அழகான பெண்களின் அருகே சென்றான்.

அப்பெண்களிடம் ‘ ‘இனிய குரல் வளமும் அழகிய அழகும் பொருந்திய பெண்களே! உங்கள் அழகு என்னை மயக்குகிறது. என் தாபத்தைத் தீருங்கள் ‘ ‘ என்றான்.

அந்தப் பெண்களோ ‘ ‘என்ன அநியாயம் இது. நாங்கள் சக்கிலியப் பெண்கள். நீரோ பிராமணச் சாதியினர். இதை நீர் கேட்கவே கூடாது ‘ ‘ என்றனர்.

முத்துப்பட்டன் அவர்களிடம் ‘ ‘நீங்கள் இல்லாமல் என்னால் வாழமுடியாது. உங்களுக்காக நான் எல்லா உறவுகளையும் விட்டிவிட்டு இங்கேயே தங்கத் தயாராக இருக்கிறேன் . என்னை அணைத்துக்கொள்ளுங்கள் ‘ ‘ என்றான். அவர்கள் அஞ்சி ஓடினர். முத்துப்பட்டன் அவர்களைத் துரத்தினான். அவர்கள் காட்டுமரங்களுக்குள் நுழைந்து ஓடினர். பட்டன் விடவில்லை. அப்பெண்களோ குறுக்கு வழியே போய் தந்தையை அடைந்தனர். காட்டில் ஓடமுடியாத பட்டன் நின்றுவிட்டான்

தந்தையிடம் ‘ ‘தந்தையே எங்களை ஒரு பட்டன் துரத்தி வருகிறான் ‘ ‘ என்றனர். தந்தையான பகடை ‘ ‘இப்போதே அப்பாதகனைக் கொன்று வருகிறேன் ‘ ‘ என்று கூறி வல்லயத்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டான்.

பகடை காட்டுவழியே வரும்போது பட்டன் காட்டுச் செடிகளுக்கிடையே கிடந்தான். பகடை அழகொளிரக் கிடக்கும் பட்டனைப் பார்த்து ‘ ‘ஐயோ இத்தனை அழகான இளைஞன் யாரோ ? இவன் தந்தை யாரோ என எண்ணினான். சிறிய கல்லை அவன் மேல் விட்டெறிந்தான். பட்டன் விழித்தான். சக்கிலியனைப் பார்த்தான். ‘ ‘ நீர் யார் ? ‘ ‘ எனக் கேட்டான்.

சக்கிலியன் ‘ ‘என் பேர் பகடை. என் புதல்விகள் பொம்மக்காவும் திம்மக்காவும் இந்தக் காட்டுவழியே வரும்போது ஒரு பட்டன் அவர்களை மோசம் செய்ய வந்திருக்கிறான். அவனைக் கண்டதுண்டமாக வெட்டி காட்டு நரிகளுக்குப் போட வந்தேன் ‘ ‘ என்றான்.

அதைக் கேட்ட பட்டன் புலம்ப ஆரம்பித்தான். ‘ ‘ ஐயோ மாமனாரே, உன் மக்களுக்காக ஆசைப்பட்டது நான்தான். உன் பெண்களுக்காக உடன் பிறந்தவர்களை வெறுத்து நிற்கிறேன். நாலுபேர் அறிய உன் பெண்களை மணம் செய்துகொள்ளுகிறேன் ‘ ‘ என்றான்.

பகடையோ ‘ ‘ஐயோ நான் சக்கிலியன். நாய் சாதி. என்னை நீங்கள் தீண்டமுடியுமா ? நாங்கள் செத்த மாட்டைத் தின்பாம். சேரியில் வாழ்வோம். தோலை அழுகு வைப்போம். மாடு அறுப்போம். சாராயம் குடிப்போம். இது வேண்டாம் அந்தணரே ‘ ‘ என்றான்.

பட்டனோ ‘ ‘மாமனே சொல்வதைக் கேள், புண்ணியம் உண்டு. உன் மக்களை எனக்கு மணம் செய்து வை. உன் ஜாதியில் நான் இணைந்துவிடுகிறேன் ‘ ‘ என்றான்.

பகடை ‘ ‘எங்களைப்போல் நீயும் தோல் செருப்பு அணிந்து பூ நூல் அறுத்து குடுமி இல்லாமல் இருந்தால் என் மக்களை உனக்குத் தருகிறேன். நீ உன் தமயன்மார்களிடம் இதைச் சொல்லி வரவேண்டும் ‘ ‘ என்றான்.

முத்துப்பட்டன் சக்கிலியன் பேச்சுக்குச் சம்மதித்தான். தன் அண்ணன்மார்களைத் தேடிச் சென்றான். அவர்கள் விக்கிரமசிங்கபுரம் அக்கிரகாரத்தில் இருப்பதை அறிந்து அங்கு சென்றான். தான் ஒரு சக்கிலியனின் புதல்விகளை மணம் செய்யப் போவதைச் சொல்லி அனுமதி கேட்டான். அண்ணன்மார்கள் ‘ ‘உனக்கு என்ன பைத்தியம் பிடித்திருக்கிறதா ? ‘ ‘ என்று கேட்டு பொங்கி எழுந்தனர். பலவாறாக நயந்தும் பயந்தும் சொல்லிப்பேர்த்தனர். பட்டன் கேட்கவில்லை. பட்டனைப் பெரிய அறையில் அடைத்து வைத்தனர்.

முத்துப்பட்டனோ நில அறைக்கல்லைத் தூக்கி எறிந்துவிட்டு வெளியே வந்தான். விக்கிரமபுரச் சந்தையில் தோல் செருப்பு தைத்துக்கொண்டான். பூநூலை அறுத்தான். குடுமியைக் களைந்தான். பகடையின் வீட்டிற்கு வந்தான்.

பகடை வேறுவழியில்லாமல் திருமணத்திற்குரிய ஏற்பாடுகளைச் செய்தான். தன் ஜாதிச் சனங்களை வரவழைத்தான். பெரிய பந்தலிட்டான். வாழைக்குலை நாட்டினான். பெரிய மணவறை செய்தான். பட்டனுக்குத் தன் மகளைக் கொடுத்தான். திருமணம் இனிதே நடந்தது. பொம்மக்காளும் திம்மக்காளும் சாதி முறைப்படி பட்டனுக்கு சாப்பாடு கொண்டு வைத்தனர். தன் பங்கு மாடுகன்றுகளுடன் முத்துப்பட்டன் சக்கிலிய குடியில் வாழவந்தான்.

திருமணம் முடிந்ததும் சக்கிலியப் பெண்கள் கும்மி அடித்தனர். அவர்களுடன் சேர்ந்து முத்துப்பட்டனும் கும்மியை ரசித்தான். கும்மி முடிந்ததும் பட்டன் பொம்மக்கா மடியில் தலையையும் திம்மக்கா மடியில் காலையும் வைத்து உறஙகினான். உறஙகும்போது தன் கையில் கட்டிய காப்பு நூலைக் கரையான் அரிக்கவும், உடம்பு கெட்டுப்படவும், கோழிக்கூட்டிலிருந்து வரவும் கனவு கண்டான்.

அந்த வேளையில் ஒரு தொப்பி ஆள் வந்தான். ‘ ‘அண்ணே முத்துப்பட்டா உங்கள் கிடை மாடுகளை வன்னியர் கொண்டு போகிறார்கள் ‘ ‘ என்றான். பட்டன் சினத்தோடு எழுந்தான். ‘ என் மாடுகளைத் திருடிய ‘வன்னியரையும் உப்பளங்கோட்டை மறவர்களையும் இப்பொழுதே அழிக்கிறேன் ‘ ‘ எனக் கூறிப் புறப்பட்டான்.

முத்துப்பட்டனை அவன் மனைவிகள் ஏதோ சூழ்ச்சி இருக்கிறது என்று சொல்லி தடுத்தனர். பட்டனோ அவர்களை வகை வைக்கவில்லை. மனைவிகள் வளர்த்த பூச்சி நாயை துணைக்கு அழைத்துக்கொண்டு வன்னியர்களை எதிர்க்கச் சென்றான். அவர்களுடன் போரிட்டு எல்லோரையும் வெட்டி வீழ்த்தி மாடுகளை மீட்டான். பின்னர் உடம்பில் பட்ட குருதியை ஒரு சுனையில் கழுவச் சென்றான்.

அப்போது ஏற்கனவே ஏற்பாடுசெய்திருந்தபடி சப்பாணி ஒருவன் பின்னாலிருந்து பட்டனைக் குத்திக் கொன்றுவிட்டான். பட்டன் இறந்ததைப் பார்த்து பூச்சி நாய் சக்கிலியனின் வீட்டிற்கு ஓடி பொம்மக்கா திம்மக்காவை பிடித்து இழுத்தது. பொம்மக்காவும் திம்மக்காவும் பட்டனுக்கு ஏதோ ஆகிவிட்டது என்பதை உணர்ந்து சாதமும் கறியும் எடுத்துக்கொண்டு நாயின் பின்னால் சென்றனர்.

பட்டன் இறந்துகிடந்த இடத்திற்கு அவர்கள் வந்தனர். இறந்த கணவனைப் பார்த்ததும் அலறிப் புலம்பி சட்டியை எறிந்துவிட்டு அவன் மேலே விழுந்து அழுதனர். பட்டனை எடுத்தத் தோள் மேல் போட்டுக்கொண்டு சிங்கம்பட்டி அரண்மனைக்குச் சென்றனர். அரசனிடம் தங்கள் வரலாற்றைக் கூறி தாங்கள் பட்டனுடன் தீயிலே இறக்க அனுமதி கேட்டனர். பழிபாவம் ஏற்படும் என்று மன்னன் மறுத்துப் பார்த்தான். பெண்கள் ஒரேயடியாய் கெஞ்சினர்.

அவர்கள் கற்பின் உறுதியைக் கண்ட மன்னன் பெரும் தீ வளர்க்க உதவினான். அத்தீயில் இருவரும் பாய்ந்து உயிரை விட்டனர். அவர்கல் கதையை கேட்ட ஊரார் அவர்கள் தெய்வங்களாகி விட்டதை அறிந்தனர். மன்னன் அவர்களுக்கு கோயில் எடுப்பித்து பலியும் பூசனையும் செய்வித்தான். அவர்கள் தெய்வங்களாகி அருள் புரிந்தனர்.

—-

Series Navigation

முனைவர் அ.கா.பெருமாள்

முனைவர் அ.கா.பெருமாள்

மக்கள் தெய்வங்களின் கதைகள் 11 கட்டிலவதானம் கதை

This entry is part [part not set] of 53 in the series 20041125_Issue

அ கா பெருமாள்


கட்டிலவதானம் கதை

திருவிதாங்கூரின் தலைநகரமாக இருந்த பத்மநாபபுரத்தை அடுத்த ஊர்களில் குறுப்புகள் என்னும் சாதியினர் வாழ்ந்து வந்தார்கள். [இவர்கள் வேளிமலையை ஒட்டிய பகுதிகளில் வாழ்ந்த இடையர் சாதியினராக இருந்திருக்கலாம். கிருஷ்ணன்வகையினர் என்று இவர்களுக்குப் பெயர் உண்டு. கேரளத்த்தில் ஆயுதப்பயிற்சிகாரணமாகக் நாயர்களுக்கு வழங்கப்படும் குலப்பட்டமாகிய குறுப்பு ‘க்கும் இதற்கும் தொடர்பு இல்லை]

இவர்களின் தலைவர் பெரி பண்டாரம் என்பவருக்குச் சொந்தமாக நிதிராணிமலையில் பெரிய தோட்டம் இருந்தது. அந்தத் தோட்டத்தில் குறுப்புமார்கள் வேலை செய்து வந்தனர். ஒருமுறை அந்தத் தோட்டத்தில் வாழைப்பயிர் செய்ய தீர்மானித்தார்கள். அதற்காக வேலையை ஆரம்பிக்க நல்ல நாளைத் தெரிவு செய்ய பத்மநாபபுரத்திலிருந்த இல்லத்துப் போற்றியை அணுகினர். அவர் சொன்ன நேரத்தில் வாழைக்கன்றை நட்டனர்.

வாழைகள் செழிப்பாய் வளர்ந்தன. நன்றாய்க் காய்த்தன. அப்போது பத்மநாபபுரத்தை அடுத்த மேலாங்கோடு என்ற ஊரிலிருந்த இயக்கியம்மை அந்தத் தோட்டத்திற்கு வந்தாள். பச்சை பச்சையாய் காய்த்துக் கிடந்த காய்களைப் பார்த்தாள். உடனே பெரிய கிளியாக உருமாறினாள். மொந்தன் குலை ஒன்றைக் கொத்தி அறுத்தாள். நிதிராணிமலை குகை ஒன்றில் அதை மறைத்து வைத்தாள்.

குறுப்புகள் வாழைக்குலையை அறுத்துச் சென்ற ராட்சதக் கிளியைப் பார்த்து அதிசயித்தனர். பெரிய குறுப்பு எசமானிடம் அந்தச் செய்தியைச் சொன்னார்கள். பெரிய குறுப்பு கிளியைக் கொல்ல குகையின் வாசலில் தீ வைத்து மூட்டம் போடச் சொன்னான். தோட்டத்து வேலைக்காரர்களான குறுப்புகளும் அப்படியே செய்தனர். இதனால் கோபம் கொண்ட இயக்கியம்மை மந்திரமூர்த்தி வாதைகளை அழைத்துக்கொண்டு குறுப்புகள் வாழ்ந்த ஊர்களுக்குச் சென்றாள். அங்கு ஆண்களையும் பெண்களையும் அடித்தாள். வீட்டின் மேல் கல்லை எறிந்தாள். நடுநிசியில் ஆரவாரம் செய்தாள்.

ஊரில் நடந்த ஆதாளிக்குக் காரணத்தை அறிய மந்திரம் அறிந்த போத்தி ஒருவரை வரவழைத்தார் பெரிய குறுப்பு. போத்தியும் மந்திரம் போட்டுப் பார்த்து காரணம் கண்டுபிடித்தார். போத்தி ஊருக்குச் சாந்தி செய்ய பெரிய சடங்குகள் செய்தார். ஊரைச் சுற்றி மந்தற்றமேற்றிய முளையடித்து வாதைகளை விரட்டினார். ஊர்க்காரர்கள் போத்தியைக் கொண்டாடி உமக்கு என்ன பரிசு வேண்டும் எனக் கேட்டனர். போத்தி மரத்தால் ஆன பெரிய கட்டில் வேண்டும் எனக் கேட்டார். பெரிய குறுப்பும் மலையிலிருந்து காஞ்சிரமரம் வெட்டிக் கொண்டுவந்து ஒரு பெரிய கட்டிலைச் செய்து கொடுத்தார்.

காட்டில் வாழ்ந்துவந்த மலையிசக்கியம்மை அந்த மரத்தில்தான் வாசம் செய்தாள். அவள் அக்கட்டிலிலேயே ஊருக்கு வந்துசேர்ந்தாள். போத்தி கட்டிலைத் தன் வீட்டிற்குக் கொண்டு சென்றார். உறவினர்கள் எல்லோரும் கட்டிலை அதிசயத்துடன் பார்த்தனர். அன்று இரவு போத்தி கட்டிலில் படுத்த கொஞ்ச நேரத்தில் அவருக்கு மார்பை அடைதத்தது. அவரைச்சுற்றி இயக்கி ஆதாளி செய்தபடி வந்தாள். போத்தியை அடித்தாள். உறவினர்கள் பார்த்துக்கொண்டிருந்தபோதே அவர் மூச்சுத்திணறி துடித்து கட்டிலில் கிடந்துஇறந்தார். அவர் கட்டிலில் குடிகொண்டிருந்த இயக்கியம்மையால் தான் இறந்தார் என்பதை அறியாத உறவினர்கள் சிலர் போத்திக்கு உரிமையான அக்கட்டிலில் உரிமை கொண்டாட ஆரம்பித்தனர். கட்டிலை அவர்கள் ஒவ்வொருவராக தங்கள் வீடுகளுக்குக் கொண்டுசென்றனர். அதில் படுத்த ஒவ்வொருவராக உயிர்விட்டனர். இயக்கி அவர்களையும் கொன்றாள்.

போத்தியின் உறவினர்கள் தங்களின் குடும்பத்துக்கு யமனாக இருக்கும் கட்டிலை விற்றுவிட முடிவு செய்தனர். இரணியல் சந்தையில் யாருக்கும் தெரியாமல் கட்டிலைக் கொண்டு சென்றனர். அங்கு ஒரு நாடார் வியாபாரியின் மூலம் கட்டிலை விற்க ஏற்பாடு செய்தனர். அப்போது புத்தளத்தைச் சார்ந்த முத்துவேலன் என்பவர் அச்சந்தைக்கு வந்திருந்தார். அவர் கட்டிலின் அழகைப் பார்த்து ஆசைப்பட்டார். நல்ல விலை கொடுத்து வாங்கிச் சென்றார்.

முத்துவேலன் கட்டிலை வீட்டிற்கு கொண்டு சென்று பாதுகாப்பான அறையில் வைத்தான். அன்று இரவு அவர் அதில் படுத்ததுமே மூச்சுத்திணறி துடித்தார். அவரை சூழ்ந்து இசக்கியும் பேய்களும் ஆதாளியிட்டன. அவர் இறந்துபோனார். அவரது உறவினர்கள் புத்தளத்திலிருந்த சோதிகிரி என்ற மந்திரவாதியை அழைத்து கட்டிலில் மை போட்டுப் பார்த்தனர். சோதிரி அக்கட்டிலில் இசக்கி அம்மை உறைந்திருப்பதைக் கூறினான். உடனே வேலவனின் மக்கள் கட்டிலை ஊர்ச் சுடுகாட்டுக்குக் கொண்டுசென்று குழியில் வைத்து எரித்துவிட்டனர். உறவினர்களும் சுடுகாட்டிலிருந்து வீடு திரும்பினர்.

சுடுகாட்டுக் குழியிலிருந்து எரிந்த கட்டிலின் கால் ஒன்று தீயின் வேகத்தால் தெறித்து விழுந்தது. அது ஒரு வேலிச்செடியின் மீது விழுந்து தொங்கியது. மறுநாள் சுடுகாட்டுப் பக்கம் வந்த நாடாத்தி ஒருத்தி, வேலியில் கிடந்த கட்டில் காலை விறகு என்று எடுத்துச் சென்றாள். அவள் அதை வீட்டிற்குக் கொண்டு சென்று வீட்டில் வைத்ததும் இயக்கி அந்த நாடாத்தியைக் கொன்றாள்.

அவளது உறவினர்கள், நாடாத்தியின் இறப்பிற்குக் காரணம் தெரியாமல் இருந்தபோது ஊர்கோவில் சாமியாடி ‘ ‘ காட்டு இயக்கி கட்டில் கால் வழியே இங்கு வந்துவிட்டாள். அவளுக்குக் கோவில் எடுத்து வழிபடுங்கள் ‘ ‘ என்றார். ஊர்க்காரர்களும் உண்மையை உணர்ந்து அம்மையை இறக்கி கோயில் கட்டி வழிபட ஆரம்பித்தனர். அவள் அங்கே உறைந்து அவர்களுக்கு அருள்பாலித்தாள்.

Series Navigation

முனைவர் அ.கா.பெருமாள்

முனைவர் அ.கா.பெருமாள்

மக்கள் தெய்வங்களின் கதைகள்- 9

This entry is part [part not set] of 55 in the series 20041111_Issue

அ. கா. பெருமாள்


சிதம்பர நாடார் கதை

பள்ளத்தூர் என்ற ஊர் ஐந்துமுடி நாடார்கள் ஆண்ட பெருமை உடையது. அந்த ஊரில் செல்லையா நாடார் என்பவர் வேளாண்மை செய்து சிறப்பாக வாழ்ந்து வந்தார். அவர் 12 வயதான நாடாச்சியம்மாவைத் திருமணம் செய்துகொண்டார். கணவனும் மனைவியும் மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தினர். திருமணம் ஆகி பல நாட்கள் ஆன பின்னும் அவர்களுக்குக் குழந்தை பிறக்கவில்லை. நாடாச்சி அம்மா குழந்தை இல்லாத ஏக்கத்தால் மனம் மிக வருந்தினாள்.

பல நோன்புகளும் அவர்கள் நோற்றனர். பல கடவுள்களை வணங்கினர். ஆயினும் அவள் வயிறு திறக்கவில்லை. நாடாசியம்மாவுக்கு 32 வயது ஆனது. 20 ஆண்டுகளாகக் குழந்தையில்லாத ஏக்கத்தால் வருந்திய நாடாச்சி கணவனிடம் ‘ ‘ இனிமேலும் மலடியாக உயிர்வாழ்வதில் பொருளில்லை. நான் ஊர் ஊராகப் போய் தவம் செய்யப் போகிறேன். என்னை அனுப்பிவையுங்கள் ‘ ‘ என்றாள்.

செல்லையாநாடார் ‘நம் குலம் ஐந்துமுடிநாடார்குலம். பெருமைவாய்ந்த மரபு நமக்கு உண்டு. நாம் அப்படி போவது குலத்துக்கு அழகல்ல ‘ ‘ என்றார்.

நாடாச்சி கணவன் பேச்சைக் கேட்கவில்லை. ‘ ‘ என்னால் இனி பொறுக்க முடியாது, நான் தவம் செய்யப் போவேன் ‘ ‘என்று அடம் பிடித்தாள்

கணவந் ‘ உன் துயரம் எனக்குப் புரிகிறது. அப்படியானால் உன் பிள்ளைக்கலியைத்தீர்க்க ஒரு குழந்தையைத் தத்து எடுத்துக்கொள் ‘ ‘என்றான்.

நாடாச்சியம்மாள் ‘ ‘தத்துப்பிள்ளை சொந்தப் பிள்ளை ஆகுமா ? அது உங்களுக்கும் நம் முன்னோருக்கும் நீர்க்கடன் செய்யுமா- வேண்டாம் அது ‘ ‘ என்றாள்.

வேறுவழியில்லாமல் செல்லையா நாடார் ஒப்புக் கொண்டார். நாடாச்சி அம்மா ஏழு தோழிகளை அழைத்துக்கொண்டு தவம் செய்யப் புறப்பட்டாள்.

முதலில் அவர்கள் இருக்கந்துறை அய்யன் கோவிலுக்குச் சென்றார்கள். ‘ ‘அய்யனே எனக்குக் குழந்தை பிறந்தால் ஒரு யானை தருகிறேன் ‘ ‘ என நேர்ந்தாள். பின் அங்கிருந்து கன்னியாகுமரி பகவதி கோவிலுக்குச் சென்றாள். ‘ ‘அம்மா எனக்கு குழந்தை வரம் தந்தால் மாசி மாதம் உனக்கு திருவிழா நடத்துவேன் மாதந்தோறும் நான் உன் கோவிலுக்கு வருவேன் ‘ ‘ என்றாள். பின் அங்கிருந்து புறப்பட்டு வழுக்கம்பாறை வந்தாள். அங்கு மூங்கிலடியிச்சி அம்மை கோயிலுக்குச் சென்றாள். அக்கோவிலில் 30 நாட்கள் தவம் இருந்தாள்.

எந்தக்கோவிலிலும் பலன் கிடைக்கவில்லை. பின் சுசீந்திரம் தாணுமாலயன் கோவிலுக்குச் சென்று முறையிட்டாள். ‘ ‘தேவனே என் குறையைத் தீர்த்தால் ஆண்டுக்கு இரண்டு திருவிழா நடத்துகிறேன். உன் பேரை விடுகிறேன் ‘ ‘ என்றாள். அங்கு அவளுக்கு எந்த அடையாளமும் கிடைக்கவில்லை. பின் சுசீந்திரம் ஊரைவிட்டு ஆஸ்ராமம் வந்தாள். அங்கு பதினெட்டாம்படி இசக்கியைக் கண்டு வணங்கினாள். பின் நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவிலுக்கு வந்து தவம் இருந்தாள். அங்கும் பலன் கிடைக்கவில்லை.

ஒரு இடத்திலும் பலன் கிடைக்காத நாடாச்சி பத்மநாபபுரம் வந்தாள். அங்கு பெருமாள் கோவிலில் இறைவனை சேவித்து, ‘ ‘எனக்கு ஒரு பாலகனைத் தந்தால் பொன்னால் பல்லக்கு செய்து வைப்பேன் ‘ ‘ என்றாள். பின் திருவனந்தபுரம் வந்தாள் பலன் ஏதும் கிடைக்கவில்லை.

அதன்பிறகு நாடாச்சியம்மாள் விரக்தியடைந்து தோழிகளிடம் ‘ ‘ இனி வேண்டாத தெய்வம் இல்லை. எந்த தெய்வமும் நமக்கு அருளவில்லை. நம் ஊருக்குச் சென்று உயிரை மாய்த்துக்கொள்ளுவோம் ‘ ‘ என்றாள்.

இவ்வாறு துயரம் கொண்டு நாடாச்சி ஊருக்குத் திரும்பும் வழியில் நெய்யாற்றங்கரைக்கு வந்தாள். அங்கு ஒரு குறத்தியைக் கண்டாள். குறத்தி இவளின் கையைப் பிடித்து ‘ ‘ உன் முன்னோர்கள் ஆண்ட இடத்தில் திருமதில் இடிந்து கிடக்கிறது. தேர் உடைந்து கிடக்கிறது. நீ அதை எல்லாம் சரிசெய்து பூசை செய்தால் நினைத்தது நடக்கும். உனக்குப் பிறக்கும் குழந்தைக்கு சிதம்பரம் என்று பெயர் வைப்பாய். அவன் தனது இருபத்தி எட்டாம் வயதில் ஒரு பிராமணப் பெண் காரணமாக இறப்பான் ‘ ‘ என்று கூறினாள்.

நாடாச்சிக்கு குறிகாரி பேரில் நம்பிக்கை வரவில்லை. அதனால் அவள் வரும்வழியில் மண்டைக்காடு கோவிலுக்குச் சென்றாள். அங்கு தன் குறைகளைக் கூறி புலம்பினாள். பின்பு கண்ணீர் விட்ட்படி தன் வீட்டிற்கு வந்தாள்.

செல்லையா நாடார் கோவில் கோவிலாகச் சென்று தவம் இருந்தது வந்த மனைவியைப் பார்த்தார். ‘ ‘பெண்ணே கோவிலுக்குச் சென்ற பலனைக் கூறு ‘ ‘ எனக் கேட்டார். மனைவி ‘ ‘குறத்தி ஒருத்தியைக் கண்டேன். குடும்ப தெய்வத்தை மறந்துவிட்டோமே என்று சுட்டிக்காட்டினாள். நாம் உடனே. அந்தக் கோவிலைச் சரிசெய்துவிடவேண்டும். இது என் ஆசை ‘ ‘ என்றாள்.

செல்லையா நாடார் பெரிய தச்சர்களையும் கொத்தர்களையும் அழைத்தார். சிதைந்த கோவிலைச் சரிசெய்யச் சொன்னார். அவர்களும் கோவிலைப் புதிய கோவிலாக மாற்றினர். நாடாச்சி கோவிலை வணங்கி தானம் பல செய்தாள்.

அந்நாளில் நாடாச்சி ஒரு கனவு கண்டாள். கனவில் அவள் கருவுற்ற்துபோலவும் அழகியா ஆண்குழந்தை பிறந்தது போலவும் கண்டாள். .அந்தக்கனவைக் குறித்து கணவனிடம் கூறினாள் அவரும் மிகவும் ககிழ்ச்சி அடைந்தார்.

கனவும் பலித்தது. சிலநாளில் நாடாச்சி கருவுற்றாள். ஒவ்வொரு மாதமாகக் கரு வளர்ந்தது. பத்து மாதம் ஆனது. மகப்பேறு காலம் வந்தது. செல்லையா நாடார் மனைவிக்கு மகப்பேறு பார்க்க செம்பொன்கரையில் உள்ள காலகன்னி என்ற மருத்துவச்சியை அழைத்து வருமாறு ஒட்டனை அனுப்பினார். ஒட்டனும் மருத்துவச்சிக்கு நிறைய பொன் தருவதாகக் கூறி அழைத்து வந்தான். காலகன்னி மகப்பேறு பார்த்தாள்.

நாடாச்சியம்மைக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

குழந்தைக்கு குறத்தி குறி சொன்னபடி சிதம்பரம் எனப் பெயர் சூட்டினாள். சிதம்பரத்திற்கு ஏழு வயதானதும் திண்ணைப் பள்ளி ஆசிரியர் வந்தார். அவனுக்கு மொழியைக் கற்பித்தார். அவனுக்கு வயது 15 ஆனது. செல்லையா நாடார் மகனுக்கு யானை ஏற்றம் குதிரை ஏற்றம் போன்றவற்றையும் வாள் வித்தை ஈட்டி எறிதல் போன்றவற்றையும் கற்பித்தார்.

சிதம்பர நாடாரின் வீரமும் அழகும் அந்தப் பகுதியில் பரவியது. வஞ்சிநாட்டு அரசன் சிதம்பர நாடாரைப் பறக்கை வரை உள்ள பகுதிகளைக் கவனிக்கும் அதிகாரியாக நியமித்தான். சிதம்பர நாடாரும் குதிரை மேல் ஏறி புங்கடி மடம் வரை சென்று ஆட்சி செய்தார். அவருக்குத் துணையாக ஒரு செறுக்கனும் வருவான். அவருக்கு இருபத்தெட்டு வயதானது.

இப்படி இருக்கும் நாளில் பறக்கை ஊரில் ஒரு பிராமணப்பெண் இறந்துபோனாள். அவள் கொடிய பாம்பு கடித்து இறந்தாள். பாப்பாத்தி என்ற அந்த 18 வயதுப்பெண்ணின் உறவினர்கள் சுடுகாட்டுக்குக் கொண்டு வந்து சிதையில் ஏற்றினர். சிதைக்கு நெருப்பு வைத்துவிட்டுச் சென்றனர். அந்த வேளையில் சிதம்பர நாடார் அங்கே வந்தார்.

பாப்பாத்தி மிக மிக அழகாக இருந்தாள். இளம்வயதான அவள் மரணத்தைக் கண்டு அவள் பெற்றோர் கதறிஅ ழுதது மனதை உருக்குவதாக இருந்தது . அவள் உடலைக் கண்ட சிதம்பர நாடாருக்கு ஒரு யோசனை வந்தது. அவருக்குச் சித்துவேலையும் தெரியும். மந்திரம் தெரியும். அவர் அந்தப் பெண்ணைக் கடித்த பாம்பை வரவழைத்தார். அவளின் உடலில் உள்ள விஷத்தை உறிஞ்சச் செய்தார். பாப்பாத்தியின் உடலிலிருந்து இறங்கிய பாம்பு உயிர் நீத்தது. பிராமணப் பெண் உயிர் பெற்றாள்.

உயிர் பெற்ற பாப்பாத்தி சிதம்பர நாடாரைப் பார்த்தாள். அந்தச் சுடுகாட்டுக்குத் தான் வந்த காரணம் தெரியாமல் திகைத்தாள். சிதம்பர நாடாரே அவளுக்கு நடந்த கதையைக் கூறினார். அவள் நன்றிப் பெருக்குடன் நாடாரைப் பார்த்தாள். ‘ ‘இனி நான் என் சொந்த ஊர் செல்லமாட்டேன். நீரே எனக்கு எல்லாம். என்னை அழைத்துச் செல்லும் ‘ ‘ என்றாள். சிதம்பர நாடாரும் அவளைத் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அவரது தாய் பாப்பாத்தியை அன்போடு வரவேற்றாள்.

பாப்பாத்தியும் சிதம்பர நாடாரும் கணவன் மனைவியாக வாழ்ந்தனர். சிலமாதங்களில் அவள் கர்ப்பமடைந்தாள். மாதம் ஏழு ஆனது. பாப்பாத்தி ‘ ‘ என் பெற்றோரைக் காண ஆசையாக இருக்கிறது . என்னை அழைத்துச்செல்லுங்கள் ‘ ‘ என்றாள். சிதம்பர நாடார் அவளை அழைத்துக்கொண்டு பறக்கைக்கு வந்தார். கூடவே அவரது உதவியாள் செருக்கணும் சென்றான். மூன்று பேரும் பறக்கை பிராமணத் தெருவுக்குக் குதிரையில் சென்றனர்.

பிராமணப் பெண்ணின் பெற்றோர் சிதம்பர நாடாரை மகிழ்வோடு வரவேற்றனர். அவளைப் பிழைப்பித்த வரலாற்றைச் சிதம்பர நாடார் கூறினார். பிராமணப் பெண்ணின் பெற்றோர்கள் இருவரையும் தங்கள் வீட்டிலே இருக்கச் சம்மதித்தனர். இந்தச் செய்தி பிராமணர் தெருவுக்குத் தெரிந்தது. பறக்கை வேளாளர்களும் அறிந்தனர். ஊரார்கள் ஒன்றாய் கூடினர். நாடார் சாதியினன் ஒருவன் பிராமணப் பெண்ணை மணம் செய்துகொண்டதும் காணாதென்று ஊரிலே வந்து தங்குகின்றானே அவனை அப்படி விடக்கூடாது, கொல்லவேண்டும் என்றனர்.

ஊரார்கள் கோயிலில் கூடி சிதம்பர நாடாரைக் கொல்லவேண்டும் என முடிவு செய்தனர். இந்தச் செய்தியை வஞ்சிகுல மன்னனுக்குத் தெரிவிக்கவேண்டும். அவரிடம் சிதம்பர நாடாரைக் கொல்ல அனுமதி பெறவேண்டும் என எண்ணினர். அப்படியே செய்ய முடிவு செய்து ஒரு தூதுவனைத் திருவிதாங்கோட்டுக்கு அனுப்பினர். இந்த விஷயத்தை அறிந்த சிதம்பர நாடார் பிராமணப் பெண்ணைத் தான் காப்பாற்றிய நிகழ்ச்சியையும் அதனால் அவளுக்கும் தனக்கும் தொடர்பு ஏற்பட்டதையும் விரிவாக எழுதி தன் பேரில் தவறில்லை என்றும் தெரிவித்து ஓலை எழுதி செறுக்கனிடம் கொடுத்து வஞ்சி மன்னனுக்கு அனுப்பினர்.

இரண்டு தூதர்களும் திருவிதாங்கோட்டுக்கு ஒன்றாகவே குதிரையில் சென்றனர். மன்னர் இரண்டு பேர் எழுதிய ஓலையையும் கண்டார். படித்தார். நாடார் பேரில் தவறில்லை. அவரைக் கொல்லக்கூடாது என மன்னர் ஓலை எழுதினார். செறுக்கனின் கையில் ஓலையைக் கொடுத்து முதலில் நீ போ என்றார். இரண்டு தூதர்களும் ஒன்றாகவே திரும்பினர்.

இருவரும் வில்லுக்குறி ஊரின் அருகே உள்ள தோட்டியம்பலத்தில் ஓய்வெடுத்தனர். செறுக்கன் களைப்பினால் அயர்ந்து உறங்கினான். வேதியரின் தூதன் உறங்காமல் இருந்தான். செறுக்கன் அயர்ந்து உறங்கியதும் வேதியரின் தூதன் புறப்பட்டு செறுக்கனை எழுப்பாமலே வந்தான்.

இந்த நேரத்தில் பறக்கை வேதியர்களும் வேளாளர்களும் சிதம்பர நாடாரைப் பிடித்து கயிற்றால் கட்டினர். ஊரின் தெற்குப் பகுதியில் இருந்த புங்கடிக்குக் கொண்டு வந்தனர். தூதனின் வருகைக்கு எதிர்பார்த்து நின்றனர். சிதம்பர நாடாரோ கடவுள் சித்தப்படி நடக்கட்டும் என பேசாமல் அமைதியாக இருந்தார்.

பார்ப்பனரின் தூதுவன் குதிரையில் வந்தான். பண்டாரவிளையின் அருகே வந்தபோது ‘ ‘நாடரைக் கொல்லவேண்டாம் ‘ ‘ எனக்கூறிக் கையைக் காட்டினான். வேதியரோ அவன் கொல்லுதற்கு ஓலை கொண்டுவந்தான் எனக்கூறி வெட்டுமாறு ஆணையிட்டனர். கொலைகாரனும் சிதம்பர நாடாரை வெட்டினான்.

சிதம்பர நாடான் இறந்ததைக் கேள்விப்பட்ட பாப்பாத்தி நாக்கைப் பிடுங்கி உயிரை விட்டாள். இரு சாதியினரும் சேர்ந்து செருக்கனையும் கொன்றனர்.

இறந்த மூன்று பேரும் அமைதி கொள்ளாமல் பறக்கை ஊரில் ஆவிகளாக அழிமதி செய்தனர். பலரைக் கொன்றனர். வேதியர்கள் இவ்வாறு ஊரில் மரணங்கள் ஏற்படுவதற்குக் காரணம் என்ன என்பதை சோதிடம் மூலம் அறிந்தனர். சிதம்பர நாடாருக்குப் பறக்கை புங்கடியில் கோவில் எடுத்து வழிபட்டனர். பலிகளூம் பூசைகளும் செய்து அவர்களை அமைதிப்படுத்தினர். ஐந்துமுடி நாடார்கள் மதுசூதனபுரம் ஊரில் சிதம்பர நாடாருக்குக் கோவில் எடுத்தனர். அங்கு அவர்கள் வழிபாடு செய்தனர். நாடார் அவர்களுக்கு அருள்புரியும் தெய்வமாக ஆனார்

—-

Series Navigation

முனைவர் அ.கா.பெருமாள்

முனைவர் அ.கா.பெருமாள்

மக்கள் தெய்வங்களின் கதைகள் 4. உச்சிமாகாளி கதை

This entry is part [part not set] of 51 in the series 20041007_Issue

அ.கா.பெருமாள்


முன்பொரு காலத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் பெரிய யுத்தம் நடந்தது. இரண்டு பக்கமும் பெரும் நாசம். நிறைய பேர் இறந்தனர். தேவர்கள் ஏரளமாக இறந்தபோது கவலைகொண்ட இந்திரன் விஷ்ணுவை அணுகி தாள் பணிந்து காப்பாற்றும்படிக் கோரினர். அப்போது விஷ்ணு சொன்னார். ‘ ‘பாற்கடலைக் கடைந்தால் அமுதம் கிடைக்கும். அதைக் குடித்தால் சாவே கிடையாது ‘ ‘

இந்த தகவல் அசுரர்களுக்கும் எட்டியது. தேவர்கள் மட்டும் பாற்கடலைக் கடைய முடியாது, அசுரர்களும் சேர்ந்துதான் அதைச் செய்யமுடியும். தேவர்கள் அசுரர்களின் உதவியை நாடினார்கள். அசுரர்கள் ஒப்புக்கொள்ளவே இரண்டு பக்கத்தாரும் ஒருநாள் பாற்கடலைக் கடைய சம்மதித்தார்கள். மந்தர மலையை மத்தாக்கி வாசுகிப்பாம்பை நாணாக்கி பாற்கடலை கடையவும் ஆரம்பித்தார்கள். அப்போது கடலிலிருந்து பலவகையான பொருட்கள் வெளிவந்தன. காமதேனு, வச்சிராயுதம், கற்பக விருட்சம் என்று பல தூய பொருட்கள் . கடைசியில் ஆலகால விஷம் வந்தது. அவ்விஷம் மூவுலகையும் எரிக்கும் தன்மை கொண்டது.ஆகவே விஷத்தைப் பார்த்து எல்லோரும் பயந்தார்கள். அது நிலத்தில் விழக்கூடாதுஎ ந்று தேவர்கள் பயந்தனர். அப்போது சிவன் உலக நன்மைக்காக அந்த விஷத்தைக் கையிலே எடுத்து வாயிலே போட்டு விழுங்கிவிட்டார். அதைக் கண்ட பார்வதி சிவனைத் தடுத்தாள். சிவன் பார்வதியின் செய்கையைப் பொருள்படுத்தவில்லை. பார்வதியோ கோபப்பட்டு சிவனின் உச்சியில் அடித்தாள். உடனே சிவன் தலையிலிருந்து உச்சினிமாகாளி பிறந்தாள்.

சிவன் தலையில் பிறந்த காளியை உச்சினி மாகாளி என அழைத்தனர். பார்வதி அவளைத் தன் மகளாகப் பாவித்தாள். அவளுக்கு வாந்திபேதி, பெரியம்மை, சின்னம்மை, வலிப்பு ஆகிய வியாதிகளை உண்டாக்கும் சக்தியைக் கொடுத்தாள். அவளுக்கு நிறைய வரமும் கொடுத்தாள். ‘ ‘உன்னை வணங்குபவர்களுக்கு இந்தமாதிரி வெப்ப நோய்கள் வராது. உன்னை நினைத்தால் நோய் குணமாகும் ‘ ‘ என வரங் கொடுத்தாள். உச்சினிக்குத் துணையாக பச்சைவேதாளம், கறுப்பன், மோகினி ஆகிய பிசாசுக்கூட்டங்களையும் படைத்தாள்.

உச்சினிமாகாளி பார்வதியிடம் வேறு சில வரங்களும் வாங்கினாள். பின் கயிலையை விட்டுப் புறப்பட்டு விக்கிரமாதித்தனின் நாட்டுக்கு வந்தாள். அங்குள்ள ஒரு பெரிய மலையின் உச்சியில் தங்கினாள். இப்படி இருக்கும்போது ஒருநாள் அந்த மலைக்கு விக்கிரமாதித்தனும் பட்டியும் வேட்டையாட வந்தார்கள். அவர்கள் அங்கு விலங்குகளை வேட்டையாடினர். விக்கிரமாதித்தியன் களைத்துப் போனான். ஒரு மரத்தடியில் அமர்ந்தான். மந்திரி பட்டியிடம் ‘ ‘தம்பி தாகமாயிருக்கிறது தண்ணீர் வேண்டும் எப்படியாவது கொண்டு வா ‘ ‘ என்றான். பட்டி காட்டுக்குள் சென்றான் பல இடங்களில் அலைந்தான். கடைசியில் ஒரு சுனையைக் கண்டான்.

பட்டி சுனையில் தண்ணீர் கோரியபோது அந்தப் பகுதியில் தெய்வீக மணம் கமழுவதைக் கண்டான். ஆனால் அவனுக்கு எதுவும் தெரியவில்லை. அந்தச் சுனையின் கரையில் உச்சினிமாகாளி வீற்றிருந்தது அவனுக்குத் தெரியவில்லை. பட்டி சுனையிலிருந்து தண்ணீரைக் கோரினான். விக்கிரமாதித்தனிடம் கொடுத்தான். அந்த நீரைக் குடித்ததும் விக்கிரமாதித்தியன் மயஙகினான். உடம்பு புத்துணர்ச்சி அடைந்தது அவனுக்கே தெரிந்தது. உலகத்தையே மறந்து உறஙகினான் அவன். அப்போது ஒரு கனவு கண்டான். கனவில் உச்சினிமாகாளி வந்தாள். அந்தச் சுனையின் அருகே தான் இருப்பதை உணர்த்தினாள். ‘ ‘எனக்கு இங்கு ஒரு கோவில் கட்டுவாய் ‘ ‘ என்றாள்.

விக்ரமாதித்ய மன்னன் விழித்தான். கனவு கலைந்தது. தான் கண்ட அற்புதக் கனவைப் பற்றி பாட்டியிடம் கூறினான். பட்டி ‘ ‘அரசே அந்தச் சுனையில்தான் தெய்வீக மணம் கமழுகிறது. அங்கேயே கோவில் கட்டுவோம் ‘ ‘ என்றான். மன்னனின் ஆசைப்படியே அந்த இடத்தில் பெரிய கோவிலைக் கட்டினான் பட்டி. உச்சினிமாகாளியை அங்கு பிரதிஷ்டை செய்தான். கோவிலுக்கு ஏராளமான பொருட்களைக் கொடுத்தான். தங்கக் கட்டிகளையும் ஆபரணங்களையும் அளித்தான். அவையெல்லாம் அக்கோவிலிலேயே பல இடங்களில் புதைத்து பாதுகாத்து வைக்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சிகள் நடந்து ஏராளமான வருஷங்கள் கழிந்தபோது உச்சினி மாகாளி கோவில் பாழடைந்து சிதைந்து கிடந்தது. அங்கு பூசை செய்ய ஆளில்லை. அப்போது ஒருநாள் அந்தக் கோவிலுக்கு அயோத்திப் பட்டிணத்திலிருந்து ஒரு பிராமணன் வந்தான். அவன் அயோத்திக் கோவிலில் பூசை செய்து வந்தவன். அயோத்தியில் பஞ்சம் ஏற்பட்டதால் அங்கிருந்து குடிபெயர விரும்பினான். அப்போது அவன் கனவில் உச்சினிமாகாளி வந்தாள். ‘என் கோவிலுக்கு வா ‘ என அழைத்தாள். அதனால் அவனும் இங்கு வந்தான்.

உச்சினி கோவிலின் தர்மகர்த்தாக்கள் அயோத்தி பிராமணனை அக்கோவிலின் பூசாரியாக நியமித்தனர். கோவிலையும் சரிசெய்தார்கள். அவனும் மூன்றுவேளைப் பூசையைப் பக்தியோடு செய்ய ஒப்புக்கொண்டான். அப்படியே அவன் பூசை செய்துவந்தான்.

அயோத்தி நம்பியானுக்கு ஏழு பெண் மக்கள் இருந்தனர். ஏழு பேருமே திருமணத்திற்குரிய வயதை எட்டியிருந்தனர். ஆனால் அவர்களுக்குக் கல்யாணம் செய்து வைக்க வசதியில்லை. அவனுடைய ஏழ்மை அவனை வதைத்தது. அவன் தினமும் பூசையின்போது உச்சினி தேவியிடம் ‘ ‘அம்மா என் பிள்ளைகளுக்குத் திருமணம் செய்ய உதவி செய் ‘ ‘ என உருகி வேண்டிக்கொள்ளுவான். ஒருநாள் காளி அவன் கனவில் தோன்றினாள். கோவிலின் ஒரு இடத்தில் தங்கக் கட்டி இருக்கிறது. எடுத்துக்கொள். உன் புதல்விகளுக்குத் திருமணம் செய்துகொள் ‘ ‘ என்றாள்.

நம்பியான் கனவில் கண்ட இடத்திற்குச் சென்றான். அந்த இடத்தில் மண்ணைத் தோண்டினான். தங்கக்கட்டி கிடைத்தது. அதை எடுத்துக்கொண்டு பக்கத்து நகரத்துக்குச் சென்றான். தங்கத்தை விற்று பணத்தை வீட்டிற்குக் கொண்டு செல்லவேண்டும். பின் மகளுக்கு திருமணம் நடத்தவேண்டும் என்பது நம்பியானின் ஆசை.

ஆனால் அவனுக்கு அவ்வளவு பொன்னை எங்கு எப்படி விற்பதென்று தெரியவில்லை. ஆகவே அவன் அந்த நகரத்து வீதியில் தங்கக் கட்டியை விற்பதற்கு அலைந்தான். அவ்வளவு பெரிய கட்டியை விலைகொடுத்து வாங்க அங்கே யாருமில்லை. அப்போது பிராமணன் நின்ற வீதிவழி வெள்ளைக்கார அதிகாரி ஒருவன் குதிரையில் வந்தான். அவன் பிராமணனைப் பார்த்து உன் பையைக் காட்டு என்றான். நம்பியானைச் சோதனை செய்தான். பிராமணனின் கையில் இருந்த பையில் நிறைய தங்கக் கட்டிகள் இருப்பதைப் பார்த்தான். அவன் திருடனோ என்ற ஐயம் அதிகாரிக்கு ஏற்பட்டது.

வெள்ளைக்கார அதிகாரி பிராமணனைத் தன் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றான். பிராமணனை அடித்துத் துன்புறுத்தி தங்கம் அவனுக்கு வந்த வரலாற்றைக் கேட்டான். நம்பியான் அழுதபடி நடந்ததைக் கூறினான் . வெள்ளைக்காரன் அதை சோதனை செய்ய நம்பியானை கோவிலுக்கு அழைத்துச் சென்றான் . அங்கே தோண்டத் தோண்ட ஏராளமான தங்கம் வந்தது

அங்கே இருந்த எல்லா தங்கத்தையும் எடுத்துக்கொள்ள வெள்ளைக்காரன் ஆசைப்பட்டான். தன் கீழே உள்ள வீரர்களை¢க கோவிலைத் தோண்டி சோதனை செய்யுமாறு ஆணை இட்டான். வீரர்கள் கோவிலை வளைத்தனர். அப்போது காளி பேய்ப்படைகளை வெள்ளைக்காரர்களின் மேல் ஏவினாள். பேய்ப்படைகள் பயங்கரத் தோற்றத்துடன் கூச்சலிட்டபடி வெள்ளை வீரர்களை வளைத்தன. அவை மாயமாய் நின்றுகொண்டு அவர்கள் மீது கற்களை வீசி எறிந்தன. வெள்ளை அதிகாரியும் படைகளும் அஞ்சி அலறி கோவிலை விட்டு ஓடினார்கள்

நம்பியான் காளியை வணங்கினான். அவன் குழந்தைகளுக்கு திருமணம் நடந்தது. கோவிலை புதுப்பித்து பூசை செய்தார்கள்

4. அனந்தாயி கதை

ஸ்ரீவைகுண்டத்தில் அறுபது பிராமணர்கள் ஒரு தெருவில் வாழ்ந்து வந்தார்கள். அந்தப் பிராமணர்களின் தலைவனைப்போல விளங்கிய அரிகிருஷ்ணன் என்பவன். அவன் அனந்தாயி என்பவளை மணந்து இன்பமுடன் வாழ்ந்து வந்தான். பல நாட்கள் அவனுக்கு குழந்தையில்லாமல் இருந்தது. அதனால் நொந்த அனந்தாயி மகாதேவனிடம் இரங்கி முறையிட்டாள். கோவிலில் தவம் இருந்தாள். இரங்கி வேண்டினாள்.

இறைவன் அனந்தாயிக்கு இரங்கினான். அவள் கர்ப்பமுற்றாள். மருத்துவச்சியை அழைத்து வாருங்கள் எனக் கணவனிடம சொன்னாள்.

தோழிகள் ‘ ‘வள்ளியூரில் மணிமாலை பிள்ளை என்பவள் இருக்கிறாள். அவள் எல்லா மருத்துவமும் கற்றவள். அவளை அழைத்து வாருங்கள் என்றனர்.

அரிகிருஷ்ணன் மருத்துவச்சியை அழைக்க அழகப்பன் என்ற ஒட்டனை அனுப்பினான். ஒட்டன் வள்ளீய்யுருக்குச் சென்று மருத்துவச்சியை அழைத்து வந்தான். மருத்துவச்சி அனந்தாயியைக் கண்டதும் ‘ ‘ நான் வரும்போது நல்ல சகுனங்களைக் கண்டேன். நீ அஞ்சாதே , உனக்கு நல்லது நடக்கும் ‘ ‘ என்றாள்.

மருத்துவச்சி சாத்திரத்தில் படித்த வைத்தியத்தைச் செய்தாள். அனந்தாயியின் உடம்பில் எண்ணெய் தேய்த்தாள். அனந்தாயி ‘அடிவயிறு நோகுது ‘ என ஓங்காரமிட்டாள். சில நொடிகளில் பெண்மகவொன்றையும் பெற்றாள். அரிகிருஷ்ணன் மகிழ்ச்சியுடன் எல்லோருக்கும் சர்க்கரை வழங்கினான். மருத்துவத்துக்குப் பரிசுகள் பல கொடுத்தான்.

உறவுப் பெண்களும் பிறரும் குழந்தையைத் தொட்டிலில் இட்டுத் தாலாட்டினார்கள். குழந்தைக்குக் கிருஷ்ணத்தம்மை எனப் பெயரிட்டான். குழந்தைக்கு சாதகம் கணித்த சோதிடன் ‘ ‘குழந்தைக்கு சர்ப்பதோஷம் இருக்கிறது. இது லேசில் விடாது. இதைப் போக்க உபாயம் உண்டு. இந்தப்பிள்ளை வளரும் வீட்டில் ஒரு கீரிப்பிள்ளை வளர்த்தால் போதும் ‘ ‘ என்றான். அரிகிருஷ்ணனும் சோதிடன் கேட்டதைக் கொடுத்தான். கீரியைப் பிடிக்க நண்பர்களுடன் மலைக்குச் சென்றான்.

அனந்தாயி கணவன் பிடித்து வந்த கீரியைக் கவனமுடன் வளர்த்தாள். கீரி அவள் வீட்டில் ஒரு குழந்தையாகவே வளர்ந்தது. ஒருநாள் அனந்தாயி கீரிக்குக் கீரை பறிக்கக் காட்டுக்குச் சென்றாள். அந்த நேரத்தில் வீட்டில் கிருஷ்ணத்தம்மை மட்டும் தனியே விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது ஒரு நீண்ட சர்ப்பம் வீட்டினுள் நுழைந்தது. கீரி அதைப் பார்த்தது. பாம்பைக் கடித்தது. கண்டதுண்டமாக்கியது. கீரியின் முகமெல்லாம் ரத்தம். பாம்பைக் கொன்ற செய்தியைச் சொல்ல தோட்டத்துக்கு வந்தது கீரி.

கீரி அனந்தாயியைக் கண்டு வாட்டத்துடன் நின்றது. அதன் வாயில் வழியும் குருதியைக் கண்ட அனந்தாயி தன் புதல்வியைக் கீரி கொன்றுவிட்டது என்று எண்ணி கோபம் கொண்டு கீரியைத் தன் கையிலிருந்த கத்தியால் வெட்டினாள். வெறியுடன் காலால் மிதித்தாள். கண்டதுண்டம் ஆக்கினாள். பின் வீட்டிற்கு வந்தாள்.

அனந்தாயி வீட்டிற்கு வந்தபோது கண்ட காட்சி வேறு. அவளது குழந்தை தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்தது. அருகில் பாம்பு ஒன்று வெட்டுப்பட்டுக் கிடந்தது. அனந்தாயிக்கு நடந்தது புரிந்தது. ‘ ‘ பாவி நான் என்ன செய்துவிட்டேன் ! ‘ எனப் புலம்பினாள். அலைக்கழிந்தாள். மார்பில் அடித்துக்கொண்டு அழுதாள். தன் தவறைக் கணவனிடம் சொன்னாள்.

அனந்தாயி ‘ ‘அன்பரே நான் பெரும்பாவம் செய்துவிட்டேன். என் பாவம் தீர நான் தீர்த்தயாத்திரை செல்லவேண்டும் ‘ ‘ என்றாள். அதைக்கேட்ட அரிகிருஷ்ணப் பார்ப்பான் ‘ ‘பெண்ணே நீ யாத்திரை செல்லவேண்டாம் ‘ கணவன் உயிருடன் இருக்கும்போது மனைவி யாத்திரை செல்வது வழக்கமில்லையே. உனக்காக நானே யாத்திரை போகிறேன ‘ ‘ என்றான்.

அரிகிருஷ்ணப் பார்ப்பான் மனைவியிடம் கூறியபடி தீர்த்த யாத்திரைக்குச் சென்றான். அவனும் அவனது தோழர்கள் ஏழு பேரும் சென்றனர். நடந்தனர். நவரத்தினவிளை கடந்து மாமுனிவர்கள் வாழும் அருவிக்கரையை அடைந்தனர். பாவனாசத் தீர்த்தக்கரை வந்தனர். பரமனைத் தொழுதனர். பாவங்கள் தீரத் தீர்த்தமாடினர்.

‘ ‘தெரியாமல் செய்த குற்றத்தைத் தெய்வமே பொறுப்பீர். தேறியே தீர்த்தம் ஆடுகிறோம் ‘ ‘ என்று சொல்லி தீர்த்தம் ஆடினர். பின் மனம் தெளிந்து கரை ஏறினர். காட்டுவழி வீட்டிற்கு நடந்தனர். நேரமோ இருட்டிவிட்டது. அந்தணர்களைப் பார்த்து ‘ ‘இனி எப்படி வழி நடப்பது ? நடுக்காட்டில் இரவைக் கழித்துவிடுவோம் ‘ ‘ என்றான் அரிகிருஷ்ணன். அவர்கள் அதற்கு இசைந்தனர்.

பார்ப்பனர்கள் அந்த மடத்தில் மகிழ்வாய் உறங்கும்போது காலன் கரும்பாம்பாய் பறந்து வந்தான். பாழ்மடத்தில் படுத்துக் கிடந்தவர்களின் அருகே வந்தான். கரும்பாம்பு அரிகிருஷ்ணனைத் தீண்டியது. அவன் இறந்தான்.

மறுநாள் உதயநேரத்தில் நண்பர்கள காலைக்கடன்களை முடிக்க எழுந்தபோது அரிகிருஷ்ணன் அசையாமல் கிடந்தான். அவன் நல்லாவே உறங்குகிறான் என அவர்கள் சென்றனர். திரும்பி வந்தபோதும் அவன் எழுந்திருக்காமல் இருப்பதைக்கண்ட நண்பர்களுக்குச் சந்தேகம் வந்தது. அவனைத் தட்டினர். அவன் அசையவில்லை.

அரிகிருஷ்ணன் இறந்துவிட்டதை அப்போதுதான் உணர்ந்தனர். கலங்கினர். கதறினர். என்ன செய்வது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. அனந்தாயிக்கு இச்செய்தியை எப்படிச் சொல்வது என மனம் மருகினர். அந்த நடுக்காட்டிலிருந்து அவனை ஊருக்குக் கொண்டு செல்லவும் முடியாது. வேறு வழியில்லாமல் அந்த இடத்திலேயே அவன் உடலை எரித்தனர்.

நண்பர்கள் அங்கிருந்து வேகமாக ஸ்ரீவைகுண்டம் சென்றனர். அனந்தாயியைக் கண்டு நடந்த விஷயத்தைச் சொன்னார்கள். அவள் அதுகேட்டு உயிர் நடுங்கியவள்போல தரையில் விழுந்தாள். கல்லிலே முட்டினாள். மகளது முகத்தைப் பார்த்துக் கதறினாள். அரிகிருஷ்ணன் இறந்த செய்தியைக் கேட்டு அவளது உறவினர் ஒருவன் வந்தான். ‘ ‘ அரிகிருஷ்ணன் இறந்தபிறகு நீ இங்கே இருக்காதே. அவனது சொத்து சுகங்களில் உனக்கோ உன் மகளுக்கோ உரிமை கிடையாது. மாடு வயல் காடு எதுவும் உனக்குக் கிடையாது. நீ இந்த வீட்டைவிட்டுப் போய்விடு ‘ ‘ என்று அவளிடம் கூறினான்.

அதைக்கேட்ட அனந்தாயி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள மணியக்காரன் முத்தையனிடம் முறையிட்டாள். அந்த மணியக்காரன் அவளது வழக்கைக் கேட்டான். ‘ ‘ எனக்கு ஈஸ்வரன் பெண்மதலை கொடுத்திருக்கிறான். நான் பொய்யான நீதி சொல்லமாட்டேன். கள்ள வழக்கு உரைக்கமாட்டேன். வயல் கரையும் வலிய வீடும் மாடும் ஆடும் அம்பலமும் ஆள் அடிமையும் பரிகரியும் உனக்கே சொந்தமாகவேண்டும் ‘ ‘ என வழக்கைத் தீர்த்து வைத்தான்.

அன்று இரவு அனந்தாயியின் சொந்தக்காரன் மணியக்காரனின் வீட்டிற்குச் சென்றான். ஆயிரம் பணம் லஞ்சம் கொடுத்தான். எனக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்குங்கள் என்றான். மணியக்காரனின் மனம் மாறியது. அடுத்தநாள் காலையில் அனந்தாயியை அழைத்தான். அவளும் அவனது வீட்டிற்குச் சென்றாள். மணியக்காரன் அவளிடம் ‘ ‘ பெண்ணே நான் உன்னிடம் சொன்ன வழக்கு சரியானது அல்ல. உனக்குச் சொத்தில் உரிமை இல்லை. நீ வீட்டைவிட்டு வெளியே போகவேண்டும் ‘ ‘ என்றான்.

மணியக்காரன் முத்தையன் திடாரென வழக்கை மாற்றி அவளுக்குப் பாதகமாகச் சொன்னதும் அனந்தாயி பரிதவித்தாள். நெடுக அழுதாள். ‘ ‘ பாவி சண்டாளா கண்ணவிந்து போவாய் ‘ ‘ எனச் சாபம் இட்டாள். ‘ ‘மணியக்காரனே உன மகள் மணிமாலை என்னைப்போல் பரிதவிக்கவேண்டும். சுனை வெள்ளம் ஆறாப் பாய்ந்து உன் வீட்டை அழிக்கவேணும். உன சீமையில் வெள்ளை எருக்கு முளைக்கவேண்டும். சிறுநெருஞ்சிப் படரவேண்டும் ‘ ‘ எனச் சாபமிட்டாள்.

அனந்தாயி மனம் உடைந்தாள் இனி இந்த ஊரில் கூலிவேலை செய்து பிழைப்பதைவிட சாவதுமேல் எனத் தீர்மானித்தாள். காட்டுவழி நடந்தாள். ஈஸ்வரனே எனக்கு விடுதலை தா என வேண்டிக்கொண்டாள். ஒரு சுனை அருகே வந்து நின்றாள். கணவனை நினைந்து அழுதாள்.

இந்த நேரத்தில் ஸ்ரீவைகுண்டம் மணியக்காரன் முத்தையனின் மகளுக்குத் திருமணம் நடந்துகொண்டிருந்தது. அனந்தாயியின் ஏக்கம் கருமை கொண்டு மேலே எழுந்து கருமுகிலாகிப் பெருமழையாகிக் காட்டையே நனைத்தது. சுனையில் நீர் பெருகியது. உடனே அவள் ‘ ‘மகாதேவா என்னை அழைத்துக்கொள் ! ‘ ‘ என்று கூறி இடுப்பிலிருந்த பிள்ளையைச் சுனையில் விட்டெறிந்தாள். அவளும் சுனையில் சாடினாள்.

இருவரை பலிகொண்ட அந்தச் சுனை பொங்கிப் பெருக்கெடுத்து பெருவெள்ளமாகி ஓடியது. வெள்ளம் ஸ்ரீவைகுண்டத்துக்கு வந்தது. மணியக்காரன் முத்தையனின் வீட்டில் நுழைந்தது. அவன் மகள் மணிமாலையையும் மாப்பிள்ளையையும் இழுத்துக்கொண்டு ஓடியது. கலியாணப் பந்தலின் காலைப் பிடுங்கி எறிந்தது. ஊர்க்காரர்களையும் அலைக்கழித்தது. அந்த வெள்ளத்துடன் அனந்தாயியும் அவள் மகளும் மிதந்து வந்தனர். இருவரின் பிணமும் முத்தையன் வீட்டில் ஒதுங்கியது.

இறந்துபோன அனந்தாயிமுன் சிவன் தோன்றினார். ‘ ‘அனந்தாயி நீ வெள்ளத்தில் வந்ததால் ‘ ‘வெள்ளமாரி அம்மன் ‘ எனப் பெயர் பெற்றாய். ‘ ‘ என்றார். அவளுக்கு அருள் புரியவும் தண்டிக்கவும் வரங்களும் தந்தார். அவள் பூவுலகில் தெய்வமாக நிலைபெற்றாள். அவளை ஸ்ரீவில்லிப்புதூர்க்காரர்கள் தெய்வமாக்கி படையலிட்டு வணங்கினார்கள்

—-

Series Navigation

முனைவர் அ.கா.பெருமாள்

முனைவர் அ.கா.பெருமாள்