காணாமல் போன கடிதங்கள்

This entry is part [part not set] of 51 in the series 20041118_Issue

என் எஸ் நடேசன்


‘ ‘தம்பி, மற்றவர் கடிதங்களை பார்த்தல் கூடாது என உங்கம்மா உனக்கு சொல்லித்தரவில்லையா ‘ ‘ ?

இப்படி ஒருவர் என்னோட, என் அம்மாவையம் குற்றவாளிக் கூண்டில் ஏற்றினார். அப்பொழுது எனக்கு ஏழு அல்லது எட்டு வயது இருக்கும். எழுத்துக் கூட்டித்தான் பத்திரிகையோ, பத்தகமோ வாசிப்பேன். கடிதத்தின் எழுத்துக்கள் புரியாதகாலம்.

எங்கள் வீட்டில்தான் தபால் கந்தோர். எனது அம்மா நான் போஸ்ட் மாஸ்டர். (பெண்ணென்றால் போஸ் மிஸ்ரஸ் என்பார்கள்) கேட்டவர் என்னை சீண்டத்தான் கேட்டார் ஆனால் அவரது முகமும் கேள்வியின் தாக்கமும் இன்னும் என்னால் மறக்க முடியவில்லை.

எங்கள் ஊருக்கு தபால்கள் அடங்கிய பொதி காலை பத்துமணிக்கு மோட்டார் வள்ளத்தில் தபால்காரருடன் வந்து சேரும். தபால் பொதிகளை பிரித்து அவர் வீடுவீடாக விநியோகிப்பார். மீண்டும் மாலை இரண்டு மணி மோட்டார் வள்ளத்தில் தபால் பொதியுடன் ஊர்காவற்றுறை என்ற பெரிய ஊருக்கு போய்விடுவார்.

இவரது இரத்தத்தில் செங்கலங்கள், வெண்கலங்கள் மற்றும் குளுக்கோசு இருப்பதுபோல் சாரயமும் அல்ககோல் வடிவில் எக்காலத்திலும் இருக்கும். சக்கரை வியாதி வந்தவர்களுக்கு இரத்தத்தில் குளுக்கோசு கூடி குறைவது போல் அல்ககோலின் அளவு கூடி குறையும்.

சாதாரணமாக அல்ககோல் இருக்கும் நாட்களில் தபால்பொதியுடன் இவர் வருவார். விநியோகம் வீடுவீடாக நடக்கும். அல்ககோல் கூடிய நாட்களில் இவர் வந்து கடிதங்களை பிரித்து ஊரில் உள்ள இரண்டு பாடசாலைகளில் உள்ள மாணவர்களிடம் கொடுத்துவிட்டு இளைப்பாறுவார். பிள்ளைகள் பாடசாலை முடிந்து போகும்போது கடிதங்களை வீட்டுக்கு எடுத்து செல்வார்கள். பிள்ளைகள் இல்லாத குடும்பங்களுக்கு குறைந்தபட்சம் பக்கத்து வீட்டிலாவது பிள்ளைகள் பாடசாலைக்கு போவார்கள். இரத்தத்தில் அல்ககோல் மிகவும் கூடிய நாட்களில் மோட்டார் வள்ளத்தில் தபால் பொதிகள் மட்டுமே வந்து சேரும். அம்மா பொதிகளை பிரித்து தபால்களை என்னிடம் கொடுத்து விநியோகிக்க செய்த நாட்களும் உண்டு.

குடிகார தபால்காரரையிட்டு அம்மாவும் ஊர்மக்களும் புறுபுறுத்தது உண்டு. பிள்ளை குட்டிக்காரன் என்ற காரணத்தால் நேரடி நடவடிக்கையில் ஈடுபடவில்லை. தபால்விநியோகம் மட்டுமல்ல நான் செய்தது. எழுததெரியாதவர்களுக்கு கடிதம் எழுதுவது, படிக்க தெரியாதவர்களுக்கு கடிதங்கள் வாசிப்பதும் அடங்கும்.

கடிதங்களை வாசிக்கும் போது கேட்பவரது சந்தோசம், துக்கம், ஏமாற்றம் என்பவற்றில் மனதார பங்கு பெறுவேன். கடிதங்களை கிழிக்கும் அவசரத்தில் கைகளை வெட்டிக்கொள்பவர்களையும், உள்ளே உள்ள கடிதத்தையே கிழித்தவர்களையும் கண்டிருக்கிறேன். வயதானவர்கள் பிள்ளைகளின் கடிதத்தைப் படித்துவிட்டு அருகே நின்ற என்னை வாரிமுத்தமிடுவார்கள். புகையிலை, சுருட்டு, வெத்திலை மணங்கள் என்னை ஆக்கிரமிக்கும்.

இப்படி கடிதங்களுடன் வளர்ந்த எனக்கு அவுஸ்திரேலியா வந்தவுடன் இலங்கை இந்தியாவில் இருந்து நண்பர்களிடம் இருந்து கடிதங்கள் வந்தது. படித்துவிட்டு பாதுகாத்து வைப்பேன். அது அந்தக்காலம். இக்காலத்தில் கடிதங்கள் என்ற பெயரில் வருவது காஸ், ரெலிபோன் போன்றவற்றின் ‘பில் ‘கள்.

தற்போது தொலைபேசியிலோ, இமெயிலிலோ தொடர்பு கொள்வது வழமையாக போய்விட்டது. தொலைபேசியில் பேசியவை காற்றோடு கலந்துவிடும். இமெயில் சிறிது காலத்தில் அழிக்கப்பட்டுவிடுகிறது.

கடிதங்கள் காவியங்களாக்கப்பட்டு புகழ்பெற்றது அக்காலத்தில்.

நெப்போலிியன், கவிஞர் கீட்ஸன் காதல் கடிதங்களை பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். இந்திரா காந்திக்கு, ஜவகா;லால் நேரு சிறையில் இருந்து எழுதிய கடிதங்கள், டிஸ்கவரி ஒவ் இன்டியா என்ற ஒரு வரலாற்று நூலாகியது. பல வருடங்களுக்கு முன்பு படித்தேன்.

வருங்காலத்தில் கடிதங்களுக்கு எதிர்காலம் எங்கே ? மியூசியம் போன்ற இடங்களா ? காகிதத்தில் எழுதிய கடிதங்களுக்கும், பனையோலையில் எழுதிய ஏட்டு சுவடிகளின் கதிதானா ?

தனிப்பட்ட முறையில் நான் வருந்துவது, இலங்கையைவிட்டு வெளியேறும்போது, என் மனைவி காதலியாக இருந்தகாலத்தில் எழுதிய நூற்று ஐம்பதுக்கு மேற்பட்ட கடிதங்களும், அம்மாவுக்கு அப்பு எழுதிய ஒரு கடிதமும் என்னால் கிழித்தெறியப்பட்டது. பிறப்பு அத்தாட்சிப் பத்திரமும் கல்விசான்று இதழும் மட்டுமே எனது பெட்டியில் வைக்கப்பட்டது. போட்டோ அல்பங்கள் கூட பிற்காலத்தில் எடுக்கப்பட்டது. இன்று அந்த கிழித்தெறிந்த கடிதங்களுக்கே வருந்துகிறேன்.

—-

uthayam@ihug.com.au

Series Navigation

என். எஸ். நடேசன்

என். எஸ். நடேசன்