மெய்மையின் மயக்கம்-25

This entry is part [part not set] of 55 in the series 20041111_Issue

சோதிப் பிரகாசம்


(சுரேஷின் மடலுக்கு ஜெய மோகனின் பதில் (26-02-2004) குறித்து…)

கலைகளின் கோலாகலம்

புனைவு இலக்கியங்களின் சுவனிப்பினால் மனிதர்களுக்கு ஏற்பட்டு வந்து இருக்கக் கூடிய ஒரு மகிழ்ச்சியினை—-ஒரு மன நிறைவினை—-யாரும் மறுத்து விட முடியாது.

எனினும், கதை-கவிதைகளின் வாசிப்பினால் எந்தப் பயனும் இல்லை என்று யாரோ கூறி விட்டதாகக் கற்பனை செய்து கொள்கிறார் நண்பர் ஜெய மோகன்; இந்தக் கற்பனையான கூற்றினை அடித்து வீழ்த்தி விட வேண்டும் என்கின்ற ஒரு துடிப்பில் தமது வாதங்களையும் முன் வைத்துக் கொண்டு அவர் வருகிறார். தமக்கு வசதியான எதிர் வாதங்களைத் தாமே தேர்வு செய்து கொண்டு தமக்கு ஆதரவான வாதங்களை நிலை நிறுத்திக் காட்டி விடுகின்ற ஓர் உத்தி போலும் இது!

கலைகளைக் கொண்டாடாதவர்கள் உலகத்தில் யாரேனும் உண்டா ? என்றால், யாரும் இல்லை. இதனால்தான், கலைகளுடன் எப் பொழுதும் மதங்கள் கை கோர்த்துக் கொண்டும் வந்து இருக்கின்றன. மனிதர்களைப் பற்றிய கதைகள் மட்டுமா, கடவுளர்தம் கதைகள் கூட புனைவு இலக்கியங்கள்தாமே!

எனவே, கதை-கவிதைகளினால் மனிதர்களுக்குப் பயன் எதுவும் உண்டா ? என்பது அல்ல கேள்வி; மாறாக, அந்தப் பயனின் தன்மை என்ன ? என்பதுதான் கேள்வி!

போதைப் பயன்

ஒரு போதைப் பொருளாக மதத்தினை வரையறுத்து இருந்தவர்கள் கார்ல் மார்க்சுக்கும் முன்னரே இருந்து இருக்கிறார்கள். ஒரு போதைப் பயன் என்பதைத் தவிரப் பக்தியின் பயன் என்று வேறு எதுவும் இல்லை என்பதுதான் இதற்குப் பொருளும் ஆகும்.

ஆனால், ஒரு போதைப் பயன்தான் என்று சுவனப் பயன் என்பதை இது வரை யாரேனும் வரையறுத்து இருக்கிறார்களா ? என்பது தெரிய வில்லை. கலைஞர்களை வினயமாக யாரும் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று சாக்ரட்டாஸ் கூறி இருந்தது கூட, புல்லாங் குழல் கலைஞர்களை ஓர் எடுத்துக் காட்டாகக் கொண்டுதான்!

எனவே, புனைவு இலக்கியங்களின் போதைப் பயன் பற்றிய எனது கருத்துகளின் வளர்ச்சியினை ஆர்வலர்களுடன் பகிர்ந்து கொள்வது எனது கடமை ஆகிறது. தத் தம் கலை அனுபவங்கள் குறித்த வெவ் வேறான கதைகள் ஒவ் ஒருவரிடமும் இல்லாமல் இருந்திட முடியாது என்பது போல, எனது கலை அனுபவம் குறித்த ஒரு கதை இது!

எங்கள் ஊர்

எங்கள் ஊரின் பெயர் சொக்கன் குடியிருப்பு; தூத்துக் குடி மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய ஊர் இது! முதன் முதலாக இந்த இடத்தில் வந்து குடியேறி இருந்த சொக்கர் என்பவரை அடியொற்றி உருவாகி இருந்த ஒரு பெயர்தான் இந்தப் பெயர்!

‘சொக்கன் தலை இழந்தான் ‘ என்று காயா மொழியிலும் ‘சொக்கன் பதி இழந்தான் ‘ என்று சொக்கர் குடும்பத்தினர் இடையேயும் இரு வேறு கருத்துகள் பாடப் படுகின்ற அளவுக்கு முரணமான ஒரு வரலாற்றுக்கு உரியவனாக இருந்தவன் சொக்கன்!

ஒரு காலத்தில் ‘மா நாடு ‘ என்னும் வட்டாரத்திலும், எனது சிறு வயதில் சொக்கன் குடியிருப்பிலும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டு வந்து இருந்தவர்கள் சொக்கர்கள்! சுமார் 50 குடும்பங்கள் கொண்ட இந்தப் பெருங் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு முன்னணிக் குடும்பத்தில்தான் நான் பிறந்தேன். மொத்தம் சுமார் 400 குடும்பங்கள் வரை இந்த ஊரில் இருந்தனர்; இன்று அதிகம் இருக்கும்.

தச்சுத் தொழில், இரும்புத் தொழில், தங்கத் தொழில், மாட்டுத் தொழில், வெளுப்புத் தொழில், தலை முடித் தொழில், ஆகிய வற்றில் ஈடு பட்டுக் கொண்டு வந்து இருந்த 7-8 குடும்பங்களைத் தவிர, மீதம் உள்ள அனைவரும் ஒரே சாதிக் காரச் சூத்திரர்கள்; தோமாக் கிறிஸ்தவர்களாக இருந்து பின்னர் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களாக மாறி இருந்தவர்களும் கூட!

சொக்கன் குடியிருப்பில் ஏழைகள் இருந்தனர்; ஆனால், பணக்காரர்கள் என்று சொல்லிடக் கூடியவர்கள் யாரும் இல்லை. சராசரியான எங்கள் ஊரில் சராசரியான ஒரு குடும்பம்தான் எங்கள் குடும்பம்.

எங்கள் ஊரில் படித்தவர்கள் அதிகம்; எனவே ஆசிரியர்களும் அதிகம்! கொஞ்சம் வணிகர்களும் பனைத் தொழில் காரர்களும் ஊரில் இருந்தனர். மீதம் உள்ளவர்கள் கூலி உழைப்பாளர்கள்!

எங்கள் ஊரின் மக்கள் மிகவும் அன்பானவர்கள்; படிப்பையும் படித்தவர்களையும் மதிப்பவர்கள்! ஆண்களுக்கு என்று எட்டாம் வகுப்பு வரையும் பெண்களுக்கு என்று ஐந்தாம் வகுப்பு வரையும் இரண்டு பள்ளிக் கூடங்கள் எங்கள் ஊரில் இருந்தன. சுற்று வட்டாரத்துப் பிள்ளைகள் எல்லாம் இங்கு வந்து படித்துச் செல்வது உண்டு.

சொக்கர் குடும்பம் x ஊரார் குடும்பங்கள் என்று இவ் ஊரில் எப் பொழுதும் உள்ளார்ந்த பகைமை ஒன்று இருந்து கொண்டே வந்து இருக்கிறது; அதன் வளர்ச்சிக்கு இடையூறாகவும் அது இருந்து கொண்டு வந்து இருக்கிறது. ஓர் ஊரில் ஒரு குடும்பத்தின் ஆதிக்கம் என்பது எத்தனை காலம்தான் நீடித்துக் கொண்டு வந்திடவும் முடியும் ?

இதனால்தானோ என்னவோ, ஒரு கலை ஊராக எங்கள் ஊர் திகழ்ந்து கொண்டு வந்து இருந்தது என்றால் அது மிகை ஆகாது.

கலை ஊர்

நாடக ஆசிரியர்கள், பாடகர்கள், நடிகர்கள், பல் வேறு இசைக் கருவிகளையும் இசைத்திடக் கூடிய இசைக் கலைஞர்கள், எனப் பலரும் எங்கள் ஊரில் இருந்தனர்.

ஆண்கள் பள்ளியில் இரண்டு, பெண்கள் பள்ளியில் இரண்டு, பழைய மாணவர்கள் ஒன்று, எப் பொழுதாவது பிற வாலிபர்களின் ஒன்று அல்லது இரண்டு, என ஒவ்வொரு ஆண்டும் பல நாடகங்கள் எங்கள் ஊரில் நடை பெறும்; மூன்று நாட்கள் தொடர்ந்து நடை பெறுகின்ற இசை நாடகமும் ஒவ்வோர் ஆண்டும் நடை பெறுவது உண்டு. எட்டாம் வகுப்பில் படித்துக் கொண்டு இருந்த பொழுது ஒரு நாடகத்தை நான் கூட நடத்தி இருந்தேன்.

ஓர் ஊரில் நடை பெறுகின்ற நாடகத்தைப் பக்கத்து ஊர்களில் இருந்து வந்து பலரும் பார்த்துச் செல்வது கிராமங்களில் வழக்கம்தான் என்ற போதிலும், எங்கள் ஊரைச் சேர்ந்த முன்னனிக் கலைஞர்கள் பிற ஊர்களின் நாடகங்களைத் திறனாய்வு செய்வது வழக்கம்!

பக்கத்து ஊர்களின் நாடகங்களை விட சிறப்பான முறையில் தங்கள் நாடகங்கள் அமைந்திட வேண்டும் என்று எங்கள் ஊர் வாலிபர்கள் முயற்சி செய்வார்கள். நாடகங்களைப் பற்றிய அவர்களது விவாதங்களை உன்னிப்பாக நான் கவனிப்பேன்.

சிவாஜி கணேசன், எம். ஜி. இராமச் சந்திரன், எம். ஆர். இராதா, தியாக ராஜ பாகவதர், :டி. ஆர். மகாலிங்கம், மு. க. ஆகியோரைப் பற்றி எல்லாம் மிகவும் பெருமையாக அவர்கள் பேசிக் கொள்வார்கள். ஏதேனும் ஒரு வடிவத்தில் எப்படியாவது மு. க. வின் ஏதேனும் ஒரு வசனம் ஒவ்வொரு நாடகத்திலும் இடம் பெற்று விடும்.

மு.க.

டாக்டர் கலைஞர் என்று இன்று அழைக்கப் பட்டு வருகின்ற கருணா நிதியாரை முன்பு எல்லாம் மு.க. என்றுதான் பலரும் அழைத்துக் கொண்டு வந்து இருந்தனர். பரா சக்தி, மனோகரா, ஆகிய அவரது கதை-வசனங்கள் அனைவரையும் கவர்ந்திடத் தவற வில்லை.

விடுதியில் தங்கி இருந்து, மணப்பாடு, புனித வளன் உயர் நிலைப் பள்ளியில் நான் படிக்கத் தொடங்கி இருந்த புதிதில், பணம் கட்ட முடியாததால் படிப்பைத் தொடர்ந்திட முடியாமல் ஊருக்கு நான் திரும்பினேன். கடவுள் என்று ஒருவர் இருந்திட முடியுமா ? என்னும் ஐயங்கள் அப் பொழுதுதான் என்னுள் எழவும் தொடங்கி இருந்தன.

பாடப் புத்தகங்களுக்கு அப்பால் முதன் முதலாக அப் பொழுதுதான் பாரதி தாசன் கவிதைகள் எனக்குப் படிப்பதற்குக் கிடைத்தன. படித்துப் பார்த்தேன்; புரிந்தது என்றோ, பிடித்து இருந்தது என்றோ அவை பற்றி எதையும் இப் பொழுது நான் கூறுவதற்கு இல்லை. ஆனால், மு. க. வின் பரா சக்தியும் மனோகராவும் மிகவும் எனக்குப் பிடித்து இருந்தன.

இலங்கையில் இருந்து வந்து இருந்த எங்கள் பக்கத்து வீட்டு அண்ணன் தேவ சகாயம் அவற்றை அப் பொழுதான் வாங்கிக் கொண்டு வந்து இருந்தார். திருவாரூர் தங்கராசு எழுதி இருந்த கள்ளத் தோணி என்னும் ஒரு நாடக நூலும் அவரிடம் இருந்தது. மூன்றையும் நான் படித்தேன்; பரா சக்தியிலும் மனோகராவிலும் வருகின்ற நீண்ட வசனங்களைப் பல முறை நான் படித்தேன்.

மு. கருணா நிதியார்தம் நடையின் தாக்கம் எனது எழுத்துகளில் காணப் படுவதற்கு இதுதான் காரணம் போலும்! குறிப்பாக, ‘என்ற வகையில் ‘ என்று அவர் எழுதுகின்ற சொல்லாட்சியினை அப்படியே அவரிடம் இருந்துதான் பின்னர் நான் எடுத்துக் கொண்டு இருந்தேன்—-மிகவும் வசதியான ஒரு சொல்லாட்சி அது என்பதால்!

வாசிப்பு

விடுதிக்கு எப்படியோ பணம் கட்டப் பட்டு மீண்டும் எனது படிப்பு மணப்பாட்டில் தொடர்ந்தது. ஏற்கனவே ஒரு சராசரியான மாணவன்தான் நான்! படிப்பின் தொடர்ச்சி வேறு அறு பட்டுப் போய் இருந்தது.

பள்ளிக்கு நான் சென்று இருந்த முதல் நாளே ஆங்கிலப் பாடத்தில் நிறைய கேள்விகளை என்னிடம் ஆசிரியர் கேட்கத் தொடங்கினார்; கணக்குப் பாடத்திற்கும் அவர்தாம் ஆசிரியர்! எந்தக் கேள்விக்கும் பதில் சொல்ல முடியாமல் ஒவ்வொரு முறையும் நான் விழிக்க, மாணவர்கள் அனைவரும் விழுந்து விழுந்து சிரிக்க, மிகவும் அவமானமாக எனக்கு அது இருந்தது; என் மேல் எனக்குக் கோவமும் வந்தது.

மணப்பாட்டு மாணவர் விடுதி, மணல் மேடுகள் சூழ்ந்த ஒரு பரந்த விடுதி! சற்று ஒதுக்குப் புறமாக இருந்த ஒரு மணல் மேட்டில் நின்று கொண்டு இருந்த வேப்ப மரத்தின் அடியில் அன்று மாலையே நான் அமர்ந்து விட்டேன்—-பாடப் புத்தகமும் ஓர் அகராதியும் கையுமாக! அன்றைய பாடத்தைப் புரிந்து கொள்ளாமல் விடுதிக்குள் நான் நுழைவது இல்லை என்று எனக்குள் நான் முடிவு செய்தும் கொண்டேன். இராஜேந்திர பிரசாத் பற்றிய ஒரு பாடம் அது!

அருத்தம் தெரியாத சொற்களின் பொருள்களை அகராதியில் தேடித் தேடி அந்தந்தச் சொற்களின் மேல் அவற்றை நான் எழுதிக் கொண்டே வந்தேன்; பொருள் புரியப் புரிய மனத்தில் ஒரு மகிழ்ச்சி ஏற்பட்டது; ஒரு தெம்பும் பிறந்தது! பல முறை அந்தப் பாடத்தை நான் படித்தேன்; ஆங்கிலமும் புரியத் தொடங்கியது.

மறு நாள், ஆசிரியர் வியந்து போனார்; மாணவர்கள் அதிர்ந்து போனார்கள்; என்னிடமா உங்கள் கிண்டல் ? ஆசிரியரின் அனைத்துக் கேள்விகளுக்கும் நான்தான் விடை கூறினேன். அன்று முதல், ஆங்கிலத்தில் நான்தான் கொம்பன் எனல் வேண்டும். எனினும், ஒரு சராசரி மாணவன் என்பதற்கும் அதிகமாக ஆவதற்கு நான் ஆசைப் பட வில்லை. ஏனென்றால், மிகவும் அதிகமாக அப் பொழுது என்னைக் கடவுள்தான் ஆட்கொண்டு விட்டு இருந்தார்.

கடவுள்

கடவுள் மேல் நான் கொண்டு இருந்த நம்பிக்கை முழுமை ஆனது, அல்லது, மூடத் தனமானது! எனினும், என் போன்ற சிறுவர்களைப் போல எல்லாவற்றையும் கடவுளிடம் கேட்பதற்கு நான் விரும்ப வில்லை; ஓர் இழுக்காகவும் எனக்கு அது தெரிந்தது. எனவே, நன்றாகப் படிக்க வேண்டும்; நல்லவனாக இருக்க வேண்டும்; என்னும் இரண்டு கோரிக்கைகளை மட்டும்தான் அவரிடம் நான் எழுப்பிக் கொண்டு வந்து இருந்தேன்.

எனினும், எனது படிப்பிற்குக் கூட கடவுளால் உதவிட முடியாமல் போய் விட்டது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. நான் மட்டுமா, என் போன்ற மாணவர்கள் பலரும் ஒவ்வோர் ஊரிலும் இருந்தனர்.

பாடங்களைப் படி! என்று ஒரு நாள் கூட என்னிடம் எனது தந்தையார் கூறியது இல்லை. எனது படிப்பைப் பற்றி யாராவது என் தந்தையாரிடம் கேட்டு விட்டால் போதும், அவன் படிப்பை அவன் பார்த்துக் கொள்வான்; உன் வேலையை நீ பார்! என்றுதான் எப் பொழுதும் அவர்களின் பதில் இருக்கும். எனது படிப்பிற்கு நான்தான் பொறுப்பு என்பதை நேரலடியாக எனக்கு உணர்த்துகின்ற ஓர் உத்திதான் அது என்பது அப் பொழுது எனக்குத் தெரியாது.

ஆனால், எப் பொழுதாவது எனது தாயார் என்னைப் படிக்கச் சொல்வார்கள். உடனே எனது பைக் கட்டை எடுத்து என் முன்னால் நான் வைத்துக் கொள்வேன்; செபப் புத்தகத்தை எடுப்பேன்; நற் படிப்புக்காக தேவ மாதாவை நோக்கி ஜெபம் என்னும் பகுதியைக் கொஞ்சம் சத்தமாகப் படிப்பேன்; தேவ மாதாவே, என் புத்தகத்தில் உள்ள பாடம் எல்லாம் என் மூளைக்கு வந்து விட வேண்டும் என்று வேண்டுவேன்; அப்படியே எழுந்து ஓடி விடுவேன்.

என் தாயார் மகிழ்ந்து போவார்கள்! தந்தையோ முகத்தைத் திருப்பிக் கொள்வார்கள்; அவனுக்குத் தேவை என்றால் அவன் படித்துக் கொள்வான் என்று எனது தாயாரிடம் கூறுவார்கள்; ஏமாற்றுத் தனமாக நான் நடந்து கொண்டதை அவர்கள் விரும்ப வில்லை எனலாம். வள்ளலாரின் மேல் பற்றுக் கொண்டு இருந்தவர்கள் அவர்கள்; கடவுளைத் தேடிக் கோயிலுக்கு யாரும் செல்ல வேண்டியது இல்லை என்னும் கருத்தும் கொண்டு இருந்தவர்கள்!

எனினும், என்னைப் பொறுத்த வரை, எனது பாடங்களை எனது மூளையில் கடவுள்தான் பதிய வைத்துக் கொண்டு வந்து இருந்தார்! இப்படிப் பட்ட கடவுள் திடும் என்று ஒரு நாள் என்னைக் கை விட்டு விட்டாரே, ஏன் ?

எங்கள் விடுதியில் ஏழை மாணவர் பிரிவு என்றும் பணக் கார மாணவர் பிரிவு என்றும் இரண்டு பிரிவுகள் உண்டு. ‘அவன் இன்றி அணுவும் அசையாது ‘ என்று குருவானவர் கூறுகிறாரே, அப்படி என்றால், இதற்கும் கடவுள்தாம் காரணமா ?

உயர் நிலைப் பள்ளியின் இரண்டாம் ஆண்டில் கொஞ்சம் துணிச்சல் காரனாக நான் மாறி விட்டு இருந்தேன். ஏனென்றால், கதைகள், கவிதைகள், நடிப்பு, பேச்சு, என்று மாணவர்கள் இடையே கொஞ்சம் நான் பெயர் வாங்கி இருந்தேன்.

‘என் விசுவாசம் ‘ என்று ஒரு நூலை ஒவ்வொரு நாளும் காலையில் வேதக் கார, அதாவது, கிறிஸ்தவ மாணவர்களுக்கு என்று எங்கள் பள்ளியில் நடத்துவார்கள். காரணம் இல்லாமல் காரியம் இல்லை; எனவே, கடவுள் இல்லாமல் உலகம் இல்லை; என்று அதில் ஒரு கூற்று வரும். கூடவே, கடவுள் இல்லை என்று கூறுகின்ற பொதுவுடைமைக் காரர்களை யாரும் பொருட் படுத்திடக் கூடாது என்னும் ஒரு கருத்தும் வரும்.

பெரிய சாமியார், சின்னச் சாமியார், என்று இருந்த இருவரில் சின்னச் சாமியாராக இருந்தவர்தாம் அந்தப் பாடத்தை நடத்திக் கொண்டு வந்து இருந்தார்.

அவன் இல்லாமல் அணுவும் அசையாது என்றால், நாட்டில் நடக்கின்ற குற்றங்களுக்கும் கடவுள்தாம் காரணமா ? என்று அவரிடம் ஒரு நாள் ஒரு கேள்வியை நான் எழுப்பினேன். கடவுள் நமக்கு அறிவைக் கொடுத்து இருக்கிறார்; குற்றங்களுக்கு நாம்தாம் பொறுப்பு என்று அவர் விளக்கம் அளித்தார். அப்படி என்றால், அவன் இல்லாமலும் அணு அசையும் என்று நான் வாதிட்டேன். எனக்காகச் சாமியார் பெரிதும் வருந்தினார்; மற்ற மாணவர்களோ வியப்பும் விழிப்பும் அடைந்தனர்.

கடவுள் இல்லை என்று கூறுகின்ற பொதுவுடைமைக் காரர்கள் மிகவும் நல்லவர்களாக இருந்திட வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. கட்சி, அரசியல், என்று எனக்கு எதுவும் தெரியாது என்ற போதிலும், பொதுவுடைமை என்னும் கருத்து என்னைக் கவர்ந்திடத் தவற வில்லை. சமமான வாய்ப்புகளுக்குப் பொது உடைமை என்பதுதான் அடிப்படையாக இருந்திட வேண்டும் என்று எனது மேதாவித் தனத்தினைக் கொஞ்சம் நான் விரிவு படுத்திக் கொண்டும் இருந்தேன்.

எல். ரெங்கன்

எங்கள் ஆசிரியராக அப் பொழுது இருந்தவர் எல். ரெங்கன்! மிகச் சிறந்த பண்பாளர்; மிகச் சிறந்த ஆசிரியர்! எல்லா மாணவர்களையும் அவர் நேசித்தார்; எல்லா மாணவர்களும் நன்றாகப் படித்திட வேண்டும் என்று அவர் விரும்பினார்! ஒரு நண்பனைப் போல மாணவர்களிடம் அவர் பழகுவார்!

ஆங்கில மொழியின் இலக்கணத்தை எல்லா மாணவர்களும் நன்றாகக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர் விரும்பினார். 15 மாணவர்களைத் தேர்ந்து எடுத்து அவர்களுக்கு ஆசிரியராக என்னை அவர் நியமித்தார். இதனால், பள்ளிக் கூட நேரம் முடிந்ததும் ஆசிரியராக நான் மாறி விடுவேன்.

வாரத்திற்கு ஒரு முறை நல் ஒழுக்கப் பாடங்களை அவர் நடத்துவார்; வாரத்தில் ஒரு நாளாவது தனியாக அமர்ந்து முந்திய வாரத்தின் நமது நடத்தைகளை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும் என்று எடுத்து உரைப்பார். நாணயம், நேர்மை, உழைப்பு, ஆகியவற்றை உறுதியாக அவர் வலியுறுத்துவார்!

ஒரு நாள் நூலகத்தின் பொறுப்பு அவரிடம் வந்து சேர்ந்தது. எல்லா மாணவர்களுக்கும் பள்ளி நூலகத்தை அவர் திறந்து விட்டார். பாடப் புத்தகங்களுக்கு அப்பால் வேறு நூல்களையும் படிக்கின்ற வாய்ப்பு அப் பொழுதுதான் மாணவர்களுக்குக் கிடைத்தது.

கல்கியின் பொன்னியின் செல்வன்

அப் பொழுது எனக்கு 15 வயது இருக்கும். எங்கள் பள்ளி நூலகத்தில் இருந்து எடுத்து வந்து நான் படித்த ஒரே நூல் ‘பொன்னியின் செல்வன் ‘தான்!

கதையின் வரலாற்றுப் பின்னணி எனக்குப் பிடித்து இருந்தது. சிவ மதக் காரர்களுக்கும் விண்ணவ மதக் காரர்களுக்கும் இடையே ஏற்பட்டுக் கொண்டு வந்து இருந்த கருத்து மோதல்களும் எனக்குப் பிடித்து இருந்தன.

ஏறக் குறைய இந்தச் சமயத்தில்தான் ஒரு நாள் எங்கள் வரலாற்று ஆசிரியர் எங்கள் வகுப்பு மாணவர்களை வெளியே அழைத்துக் கொண்டு வந்து எங்கள் விடுதியின் முன்னால் நிறுத்தினார். அதிக இடம் விட்டு இரண்டு வரிசைகளில் நாங்கள் நின்று கொண்டு இருந்தோம்.

இரண்டு வரிசைகளிலும் முதலில் நின்று கொண்டு இருந்த இரண்டு மாணவர்களை மட்டும் தனியாக அழைத்து அவர்களிடம் எதையோ அவர் கூறினார். அடுத்து நின்று கொண்டு இருந்த ஒவ்வொரு மாணவனிடமும் அதனை அவர்கள் ஒவ்வொருவரும் கூற, கடைசியாக நின்று கொண்டு இருந்த இரண்டு மாணவர்களும் இறுதியில் எங்கள் முன் நிறுத்தப் பட்டனர்.

என்ன நடந்தது என்று ஒருவனிடம் எங்கள் ஆசிரியர் கேட்டார்.

திருவனந்த புரத்திற்கு விமானத்தில் ஜவஹர் லால் நேரு சென்று கொண்டு இருந்தாராம்; விமானம் பறந்து கொண்டு இருந்த பொழுது எந்திரத்தில் பழுது ஏற்பட்டு அது கீழே விழுந்து விட்டதாம்; விமான ஓட்டியின் திறமையினால் நேரு தப்பித்துக் கொண்டாராம்; என்று அவன் பதில் கூறினான்.

இல்லை, இல்லை! என்று அதனை மற்றவன் மறுத்தான்.

சரி, என்ன நடந்தது என்று நீ சொல் என்று அவனைக் கேட்டார் ஆசிரியர்!

திருவனந்த புரத்திற்கு ஒரு கப்பலில் நேரு சென்று கொண்டு இருந்தாராம்; கப்பல் எந்திரம் பழுது அடைந்து விட்டதாம்; ஆனாலும், மாலுமியின் திறமையினால் பத்திரமாகத் திருவனந்த புரத்திற்கு நேரு சென்று விட்டாராம்; என்று அவன் கூறினான்.

‘இதுதான் வரலாறு ‘ என்று கூறிய எங்கள் ஆசிரியர் மேலும் கூறினார்:

விமானத்தில் திருவனந்த புரத்திற்கு நேரு சென்று கொண்டு இருந்த பொழுது எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இருந்தாலும், திறமையாக விமானத்தைச் செலுத்திப் பத்திரமாக நேருவைத் திருவனந்த புரத்தில் தரை இறக்கினார் விமானி!

‘இதுதான் வரலாறு! ‘ என்று மீண்டும் ஒரு முறை கூறி விட்டு வகுப்பிற்கு எங்களை அழைத்துச் சென்றார் எங்கள் ஆசிரியர்!

ரஃபேல் வாய்ஸ்

எங்களுக்குக் கணக்கு ஆசிரியராக இருந்த ரஃபேல் வாய்ஸ்தாம் எங்கள் தலைமை ஆசிரியரும் ஆவார்.

பள்ளியின் இறுதி ஆண்டில், புதிதாக வந்து இருந்த ஒரு சின்னச் சாமியார் எங்களுக்கு பாடம் நடத்திக் கொண்டு வந்து இருந்தார்.

நமக்காகத் தம்மைத் தாமே பலியாகச் சிலுவையில் ஏசு ஒப்புக் கொடுத்தார் என்று அவர் கூறிக் கொண்டு இருந்த பொழுது நான் எழுந்தேன்; ஏசு தற்கொலை செய்து கொண்டாரா ? என்று கேட்டேன்.

உட்கார்! என்றார் சாமியார்.

உடனே எனது நண்பர்கள் இருவர் எழுந்தார்கள்; எங்களுக்கும் விடை வேண்டும் என்று கேட்டார்கள்.

சாமியாருக்கு எங்களை நன்றாகத் தெரியும்; பிரம்பை எடுத்தார்; அடி-அடி என்று எங்களை அடித்தார்.

எங்கள் வகுப்பிற்குப் பக்கத்து அறைதான் எங்கள் தலைமை ஆசிரியரின் அறை! அன்றைக்குப் பார்த்துச் சற்று முன்னதாக வந்து விட்ட அவர் எங்கள் வகுப்பினுள் நடந்ததைப் பார்த்து விட்டார்; வகுப்பு முடிந்ததும் எங்களை அழைத்து விசாரித்தார்.

திரு திருவென்று நாங்கள் விழித்துக் கொண்டு இருந்தோம். என்னை அவருக்கு மிகவும் பிடிக்கும்; கறும் பலகையில் கணக்கை அவர் எழுதிப் போட்டு முடித்த உடன் விடையுடன் நான் எழுந்து நிற்பேன், அதனால்!

என்ன நடந்தது என்று என்னைப் பார்த்து அவர் கேட்டார். அவர் சுண்டி அடித்தால் சுள்ளென்று வலிக்கும். எனினும், நடந்ததை அப்படியே அவரிடம் நான் கூறினேன். சிரிப்பை அடக்கிக் கொண்டு ‘ஓடுங்கல! ‘ என்றார்.

அதன் பின்னர் எங்கள் வகுப்பிற்குச் சின்னச் சாமியார் வந்தது இல்லை; எங்களைச் சாமியார் அடித்தது அவருக்குப் பிடிக்கவும் இல்லை.

அவர் எதிர் பார்த்தது போல இறுதிப் பரிட்சையில் நான் பெற்று இருந்த மதிப்பு எண்கள் இல்லாமல் இருந்தது அவருக்கு ஏமாற்றமாக இருந்தது என்பதைப் பின்னர் நான் அறிந்திட நேர்ந்தது. ஒரு வேளை, நூற்றுக்கு நுறு மதிப்பு எண்களைப் பெறுவதற்கு நான் முயன்றிட வேண்டும் என்று என்னிடம் யாராவது கூறி இருந்தால், ஆங்கிலத்திலும் கணக்கிலுமாவது அவர்களது விருப்பத்தை நான் நிறைவேற்றி இருந்து இருக்கக் கூடும்.

ஏனென்றால், படிக்காமல் பரிட்சையில் தேர்ச்சி அடைவது யார் ? என்பதுதான் என்னுடன் படித்துக் கொண்டு வந்து இருந்த இரட்சிய அந்தோணிக்கும் எனக்கும் இடையே இருந்து கொண்டு வந்து இருந்த போட்டியாகும். அவனை விட அதிகமான மதிப்பு எண்களை எனது நண்பன் ஃபெலிக்ஸ் பி. ராயனை நான் வாங்க வைப்பேன் என்று அவனிடம் நான் சூளுரைத்தும் இருந்தேன்.

சென்னை

படிப்பை முடித்ததும் மலேரியா ஒழிப்புத் திட்டத்தில் எனக்கு வேலை கிடைத்தது. வீடு, வீடாகச் சென்று மலேரியா நோயின் அறி குறிகளைக் கண்டு அறிக்கை தர வேண்டும். வேலை நல்ல வேலைதான்; ஆனால், ஏதேனும் ஒரு காரணத்தைச் சொல்லி சம்பளத்தை வெட்டி விடுவார்கள்; கொடுமைக் காரர்கள்! இந்தப் பணியில் நான் இருந்த பொழுது எனக்கு ஏற்பட்டு இருந்த ஒரு சாதிய அனுபவம் வேடிக்கை ஆனதுதான் என்ற போதிலும் இங்கே அது தேவை இல்லாத ஒரு விசயம்!

யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் ஒரு நாள் புறப் பட்டுச் சென்னைக்கு வந்து நான் சேர்ந்தேன். அன்று குடியரசு தினம்—-26-01-1963! எங்கள் சித்தியின் வீட்டில் நான் தங்கி இருந்தேன். எனது சித்தப்பா வேலை செய்து கொண்டு இருந்த ஒரு தொழிற் சாலையில் எனக்கு வேலை கிடைத்தது.

பணம் கொடுத்து முதன் முதலாக நான் வாங்கிய நூல் பாரதியார் கவிதைகள்! எனக்குப் பாரதியாரின் கவிதைகள் பிடித்து இருந்தன. அதன் பின்னர் பாரதி தாசன், நாமக்கல் இராமலிங்கம் (பிள்ளை), என எனது வாசிப்புத் தொடர்ந்தது. நள வெண்பா, சிலப்பதிகாரம், மணி மேகலை, ஆகியவற்றையும் கொஞ்சம் நான் படித்துப் பார்த்தேன். யாப்பரும் கலக் காரிகை, யாப்பதிகாரம், முதலிய சில நூல்களையும் நான் படித்தேன்.

என்னுடன் பணி ஆற்றிக் கொண்டு இருந்த அ. மு. சீனிவாசன், லோக நாதன், க. தாமோதரன், ஆகியோருடன் அடிக் கடி நான் வாதம் புரிவேன். எங்கு எங்கோ சுற்றி வந்து இறுதியில் கடவுள், பொதுவுடைமை என்று எங்கள் வாதங்கள் முடிவு அடையும்.

மு. வரதராசனாரின் எழுத்துகள் என்னைக் கவர்ந்தன. அப்படியே மாணிக்க வாசகனார், திரு. வி. க., அ. மு. பரசிவானந்தம், மறை மலை அடிகள், தேவ நேயனார், பெருஞ் சித்திரனார், என்று எனது வாசிப்புத் தொடர்ந்தது. கிருபானந்த வாரியாரின் எழுத்துகளில் நம் நாட்டுச் சிந்தனைகள் எனக்கு அறிமுகம் ஆயின.

அடையாறு மா நகராட்சி நூல் நிலையத்தில் ப்ளேட்டோவின் நூல்கள் எனக்கு ஆங்கிலத்தில் கிடைத்தன. ‘ஏதென்ஸ் நகரத்தின் எழில் மிக்க இளைஞர்களே! ‘ என்னும் கருணா நிதியாரின் வசனத்தைப் ப்ளேட்டோவில் நான் காண முடியாதது எனக்கு ஏமாற்றமாக இருந்தது.

நல்ல முதலாளி

எங்கள் முதலாளி மிகவும் நல்லவர்; கோதண்ட ராமன் என்று பெயர்!

ஆண்டுக்கு இரண்டு முறையாவது 1-2 மாதங்கள் எங்கள் பிரிவில் வேலை இருக்காது. எனவே, படிப்பதற்கு எனக்கு நிறைய நேரம் கிடைக்கும். வேலை இல்லாத காலங்களில் பணியில் இருந்து எங்களை ஒதுக்கி வைத்து விட்டால் எங்களுக்குப் பாதிக் கூலி கொடுத்தால் போதும்! கூலிச் செலவும் மிச்சம் ஆகும்; நாங்கள் சுமார் 20 பேர்!

ஆனால், எவ்வளவுதான் ஆலோசனை கூறப் பட்ட போதிலும் எங்கள் முதலாளி அதற்கு இசைந்தது இல்லை. முழுக் கூலியே குறைவு; அரைக் கூலியில் எப்படி அவர்கள் பிழைப்பு நடத்த முடியும் என்று அவர் கேட்பாராம்! கார்ல் மார்க்சின் முதலைப் பின்னாளில் நான் படித்துக் கொண்டு இருந்த பொழுது அவரைத்தாம் அடிக்கடி நான் நினைத்துக் கொண்டேன்; கொஞ்சம் அவர் நொடிந்து போய் விட்டு இருந்தார்!

நானாகப் போய்க் கேட்டுத் தாமாக எனக்கு வேலை தந்து இருந்த மேலாளர், சாமிநாதன்! பணியில் இருந்து அவர் ஓய்வு பெற்று இருந்த பொழுது—-1964 வாக்கில்—அவரை அனுப்பி வைக்கும் கூட்டத்தில் நான் பேசினேன். அந்தத் தொழிற் சாலையிலேயே மிகவும் சிறியவர்களாக இருந்த 2-3 பேரில் நானும் ஒருவன்!

புறப் படுவதற்கு முன்னர் பொறியாளர்களிடம் முதலாளி கூறினாராம்—-அந்தப் பையன் நன்றாகப் பேசினான்; அவனைக் கவனித்துக் கொள்ளுங்கள் என்று; என்னிடம் அவரது ஓட்டுநர் கூறினார்.

மற்றவர்களுக்குக் குறையாமல் அதே அளவு வேலையை நான் செய்து விடுவேன் என்ற போதிலும், திடிர்-திடிர் என்று காணாமல் நான் போய் விடுவேன்—-புத்தகமும் கையுமாக!

மேற்பார்வையாளர் என்னைத் தேடினால் எனது நண்பர்கள் யாராவது வந்து என்னிடம் சொல்லி விடுவார்கள். எங்கள் தொழிற்சாலையின் பின் பக்கம், கழிப்பறையின் பக்கத்தில் ஒரு புளிய மரம் உண்டு; அதன் நிழலில் அமர்ந்து எதையாவது நான் படித்துக் கொண்டு இருப்பேன்.

மேற்பார்வை யாளருக்குக் கொஞ்சமும் என்னைப் பிடிக்காது; அப் பொழுது மேலாளராக இருந்த இராமக் கிருஷ்ணனுக்குச் செய்தி எட்டி விட்டது போலும்! ஒரு நாள் வந்து என் பின்னால் அவர் நின்று கொண்டார்; நான் கவனிக்க வில்லை. சிறிது நேரம் கழித்து என் முதுகில் அவர் தட்டினார்; நான் எழுந்து நின்றேன். கையில் இருந்த புத்தகத்தை வாங்கினார்; ‘த ப்ரைமரி க்ளாசிக்கல் லாங்க்வஜ் ஆஃப் த வர்ல்ஃட்!

புத்தகத்தைத் திருப்பித் தந்தார்; தொழிற் கூடத்தை நோக்கி வேகமாக நான் திரும்பினேன்; வேண்டாம், படி! என்று என் தோளை அழுத்தி உட்காரச் சொல்லி விட்டு நடையைக் கட்டினார்!

புதுக் கல்லூரியில் மாலை நேர வகுப்பில் சேர்ந்து நான் படிப்பதற்கு வசதியாக எனது பணி நேரத்தில் மாறுதல்களைச் செய்து தந்து இருந்தவர் மேலாளர் கோபால் சாமி ஆவார்; ஒத்துழைத்தவரோ நண்பர் சிவ பூசணம்!

பொதுவுடைமை

ஏராளமான கவிதைகளை நான் எழுதி இருந்தேன்; ஒரு சில கதைகளும் உண்டு. 1965, இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்குப் பின்னர் தமிழில் கையொப்பம் இடுவதற்கு நான் தொடங்கினேன். ஒரு மறுப்பு வாதியான எனது பையில் ஈ. வெ. ரா. மற்றும் புத்தர் படங்கள் குடியேறின.

காங்கிரஸ் கட்சியில் ஆர்வம் கொண்டு இருந்த முன்னாள் அடையாறு வட்ட மா நகராட்சி உறுப்பினர், ஆதி மூலம் எனக்குக் காங்கிரஸ் பற்றி எடுத்துக் கூறினார்; அவர் தந்த தீபம் இதழ்கள் என்னைக் கவர வில்லை. தமிழ் மொழியின் மேல் ஏதோ ஒரு கோபம் இருந்தது போலும், அதன் எழுத்தாளர்களுக்கு!

ஒரு நாள் பெரியார் திடலுக்கு என்னை ஆதி மூலம் அழைத்துச் சென்றார்; ஈ. வெ. ரா. வுக்கு அவரை நன்றாகத் தெரிந்து இருந்தது. திரும்பி வந்து கொண்டு இருந்த பொழுது என்னிடம் அவர் கூறிய செய்தி எனக்கு அருவருப்பாகவும் இருந்தது—-திடலுக்குள் அவர் நுழைவதைப் பார்த்த உடன் ‘அய்யர் ‘ வருகிறார் என்று தி. க. ஊழியர்கள் அவரைக் கிண்டல் அடிப்பார்களாம்!

ஈ. வெ. ரா. வுக்கு மட்டும் இன்றிப் புத்தருக்கும் அதன் பின்னர் எனது பையில் இடம் இல்லாமல் போயிற்று!

1967-இல் தமிழகத்தின் ஆட்சியைத் தி.மு.க. கைப் பற்றிய பொழுது நான் மகிழ்ச்சி அடைந்தேன்; அண்ணா துரையாருக்குதான் எனது வாக்கினையும் நான் அளித்து இருந்தேன். ஆனால், ஓர் ஆண்டுக் காலம் கூட என்னிடம் அந்த மகிழ்ச்சி நீடித்திட முடிய வில்லை.

பொது உடைமை பற்றி விடாப் பிடியாக நான் பேசிக் கொண்டு இருந்ததைக் கவனித்த சிவ பூசணம் ஒரு நாள் என்னிடம் கூறினார்—-நான் ஒரு கம்யூனிஸ்ட் என்று! அதன் பின்னர்தான் குசேலருடன் எனக்குத் தொடர்பு ஏற்பட்டது.

தீக்கதிர், பீப்பிள்ஸ் டெமாக்ரசி, முதலிய பத்தரிகைகளை நான் படித்துக் கொண்டு வந்தேன். ஒரு நாள், கோகலே ஹாலில் நடந்த ஓர் இடது கம்யூனிஸ்ட் கூட்டத்தில் எனது கவிதை ஒன்றினை வாசிக்கின்ற வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது.

‘பாட்டாளி மக்கள் எங்கள் கூட்டாளி என்று சொல்லிக்

கோட்டை பிடித்தோர்தம் குறுக்கு வழி நாடறியும் ‘

என்றும்

உதிக்கின்ற சூரியன் போல் ஒளியூட்ட வந்ததுவாய் — இருள் மூட்டி

இருட்டினில் மறைந்திருந்து பணம் திரட்டும்

திருட்டு மதியோரை நாமறிவோம்; நாடறியும்!

என்றும்

நான் வாசிக்க, வாசிக்க, ஆரவாரங்களால் மண்டபமே அதிர்ந்து கொண்டு இருந்தது!

ஆனால், மேடையில் அமர்ந்து இருந்த தலைவர்களை எனது கவிதை கவர்ந்து இருந்ததாகத் தெரிய வில்லை. அதே நேரத்தில், எங்கள் வீட்டிற்கு வந்து என்னைப்

பி. ஆர். பரமேஸ்வரனும் என். ராமும் பல முறைச் சந்தித்துக் கொண்டு வந்து இருந்தார்கள் என்பது வேறு விசயம்!

கீழ் வெண் மணிப் படு கொலையினைக் கண்டித்துக் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒன்றும் கொதித்து எழுந்து விட வில்லை என்பது ஊர் அறிந்த விசயம். ஆனால், கூட்டணிக் காரர்கள் என்பதால் மிகவும் செல்லமாகத் தி. மு. க. வை அவர்கள் கடிந்து கொண்டு இருந்தார்கள்!

இந்தச் செல்லத்திற்குப் பின்னர்தான் நக்சல்பாரி இயக்கத்தின் பக்கம் எனது முழுக் கவனமும் திரும்பியது.

கம்யூனிஸ்ட் வாசிப்பு

பொன்னேரிக்கு அருகில் உள்ள அனுப்பம் பட்டுக் கிராமத்தில் ஒரு முறை கம்யூனிசப் பாசறை ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப் பட்டு இருந்தது; நிறைய மாணவர்கள் கலந்து கொண்டு இருந்த அந்தக் கூட்டத்தில் நானும் கலந்து கொண்டு இருந்தேன்.

லெனின் எழுதிய ‘அரசும் புரட்சியும் ‘ மற்றும் ‘செய்ய வேண்டியது என்ன ? ‘ ஆகிய நூல்களைப் பற்றி வி. பி. சிந்தன் பேசினார். கலை-இலக்கியங்கள் பற்றியும் பேசப் பட்டது.

அரசு என்பது ஓர் அடக்கு முறைக் கருவி என்பதற்கு மேல் ‘அரசும் புரட்சியும் ‘ நூலைப் புரிந்து கொள்வதற்கு எனக்குத் தோன்ற வில்லை. ‘செய்ய வேண்டியது என்ன ? ‘ என்பதின் தொடக்கமே எனக்கு விளங்க வில்லை. கார்ல் மார்க்சின் சில நூல்களைத் திறப்பதும் படிப்பதற்கு முயல்வதும் பின்னர் மூடி விடுவதுமாகப் பொழுது போய்க் கொண்டு இருந்தது. இவற்றின் மொழி பெயர்ப்புத் தமிழ் வேறு எரிச்சல் ஊட்டிக் கொண்டு வந்து இருந்தது.

எனவே, ஆங்கிலத்தில் மட்டும்தான் மார்க்சிய இலக்கியங்களைப் படிப்பது என்று நான் முடிவு செய்தேன். அதே நேரத்தில், மார்க்சியச் சிந்தனைகளின் ஆழமும் எனக்குப் பிடிபட வில்லை.

இறுதியில், கதைகளுக்குள் நான் தஞ்சம் புகுந்தேன். :கார்க்கியின் ‘தாய் ‘ கதையின் பாணியில் புரட்சியைப் புரிந்து கொள்வது மிகவும் எளிதாக எனக்குத் தெரிந்தது. ருஷ்யக் கதைகளோ தொடர்ந்து கிடைத்துக் கொண்டு வந்து இருந்தன.

மாவோவின் நீண்ட பயணத்தைப் போன்ற கற்பனைகள்! மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கையினை அனைத்து மனிதர்களும் அடைந்து விட்டது போன்ற கனவுகள்! எனச் சுகமானதாக இருந்தது கதைப் புரட்சி!

மார்க்சியம்

மார்க்சியத்தைப் புரிந்து கொள்ளாமல் ஓய்வது இல்லை என்று 1974-இல்—-எனது 29 வயதில்—-நான் முடிவு செய்தேன். மார்க்சியச் சிந்தனையின் ஆழங்கள் என்னை வியப்பில் ஆழ்த்தின; நம்மையும் நமது சமுதாயத்தையும் பற்றிய ஆழமான ஒரு சிந்தனைதான் மார்க்சியம் என்பது எனக்குப் புரிந்தது; நமது சிந்தனை மரபுகளின் நீட்சியாகவும் எனக்கு அது தெரிந்தது.

மூன்று ஆண்டுகளின் இடை விடாத படிப்புகளுக்குப் பின்னர் கொஞ்சம் நான் தெளிவு அடைந்து இருந்தேன். கூடவே, கதை-கவிதைகளின் வாசிப்பினால் எனக்கு ஏற்பட்டு இருந்த அறிவுப் பயன் எதுவும் இல்லை என்னும் தெளிவும் எனக்கு ஏற்பட்டு இருந்தது.

அப்படி என்றால், புரட்சிக் கதைகள் பற்றியும் புரட்சிக் கவிதைகள் பற்றியும் மிகவும் அதிகமாக இந்தியக் கம்யூனிஸ்டுகள் பேசிக் கொண்டு வந்து இருக்கிறார்களே, எதற்காக ? ஒரு பக்கம், புரட்சிகரத் தேற்றம் என்றும் புரட்சிகர உணர்மை என்றும் மற்றவர்களுக்கு அதனை ஊட்டி விடுவது புரட்சிக் காரர்களின் கடமை என்றும் பேசி விட்டு, மறு பக்கம், தேற்றங்களை விட கலைகளுக்கு—-எடுத்துக் காட்டாக, மார்க்சின் எழுத்துகளை விட :கார்க்கியின் எழுத்துகளுக்கு—-கம்யூனிஸ்ட் கட்சிகள் முக்கியம் அளித்துக் கொண்டு வந்து இருப்பது ஏன் ? என்னும் கேள்விகள் என்னுள் எழுந்தன.

ஏனென்றால், இவர்கள் ஸ்தாலினிஸ்டுகள்; அரசு முதலாண்மை வாதிகள்! இந்தச் சமுதாயத்தைப் புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் எதுவும் இவர்களுக்கு இல்லை! என்னும் தெளிவும் கூடவே பிறந்தது.

அதன் பின்னர்தான், கதை-கவிதைகளின் வாசிப்பிற்கும் முதலாண்மைச் சமுதாயம் பற்றிய மார்க்சிய அறிவிற்கும் இடையே எந்தத் தொடர்பும் இல்லை என்று வாதிட்டு வருவதற்கு நான் தொடங்கி இருந்தேன்; கதை-கவிதைகளின் போதைப் பயன் பற்றித் தீவிரமாகச் சிந்திப்பதற்கும் நான் முற்பட்டு இருந்தேன்.

இனி, புனைவு இலக்கியங்களின் போதைப் பயனுக்கு நாம் வருவோம்.

17-10-2004.

(தொடரும்)

Series Navigation

சோதிப் பிரகாசம்

சோதிப் பிரகாசம்