அணுவினைச் சதகூறிட்ட கோணினும் உளன்

This entry is part [part not set] of 55 in the series 20041104_Issue

ரா.கோபிநாதன்


ஸ்ரீவைகுண்டத்தின் துவாரபாலகர்களாக இருப்பவர்கள் ஜயன், விஜயன் என்பவர்கள். ஒருமுறை பிரம்மபுத்திரர்களான சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் என்ற நால்வரும் மஹாவிஷ்ணுவைக் காணவந்தனர். அப்போது மஹாவிஷ்ணு மஹாலக்ஷ்மியுடன் பேசிக்கொண்டிருந்ததால், பிரம்மபுத்திரர்களை உள்ளேவிட மறுத்துவிட்டனர் ஜய விஜயர்கள். அதனால் அவர்களிருவரையும் பூமியில் பிறக்கும்படி ரிஷிகள் சபித்துவிட்டனர். ஜய விஜயர்கள் ரிஷிகளிடம் தங்களை மன்னிக்கும்படி வேண்டினர். அப்போது அங்கு வந்த திருமாலிடம் ஜய விஜயர்கள் தம்மை இந்த சாபத்தினின்றும் காக்கவேண்டினர். இறைவன் தம்மால் அதை முழுமையாக மாற்றமுடியாது என்றும், அதைச் சிறிது திருத்தலாம் என்றும் சொன்னார். ஏழு பிறவிகளில் தம் பக்தர்களாகப் பிறந்து அதன்பின் ஸ்ரீவைகுண்டம் வந்து சேர விருப்பமா, அல்லது, மூன்று பிறவிகளில் தம் இஎதிரியாகப் பிறந்து, தன்னால் வதைக்கப்பட்டு, பின் ஸ்ரீவைகுண்டம் வந்து சேர விருப்பமா என்று வினவினார். தம்மால் ஏழு பிறவிகள் வரை பரம்பொருளைப் பிரிந்திருக்கமுடியாது என்றும், விரைவில் அவரை வந்தடைய வேண்டுமென்றும், அதனால், அவரது எதிரியாகவே பிறக்கவேண்டுமென்றும் ஜய விஜயர்கள் வேண்டினர்.

அதன்படி முதற்பிறவியில் இருவரும், காஸ்யப முனிவருக்கும் அவரது மனைவி திதிக்கும் மக்களாகப் பிறந்தனர். மூத்தவன் பெயர் ஹிரண்யகசிபு, இளையவன் பெயர் ஹிரண்யாக்ஷன். இதில் ஹிரண்யாக்ஷன் நாராயணனின் வராக அவதாரத்தின்போது வதைக்கப்பட்டான். இதனால் சினங்கொண்ட ஹிரண்யகசிபு, நாராயணனைத் தன் எதிரியாகப் பார்க்கத்தொடங்கினான். அவரைக் கொல்லப்போவதாகப் பிதற்றத்தொடங்கினான். ஆனால் அசுர குரு அவனைத் தடுத்து, முதலில் பிரம்மாவை நோக்கித் தவமிருந்து சாகாவரத்தைப் பெறச்சொன்னார். அப்போது அவன் மனைவி லீலாவதி கர்ப்பமுற்றிருந்தாள். அவள் தடுத்தும் கேளாமல் அவன் பிரம்மாவை நோக்கித் தவமிருக்கச் சென்றுவிட்டான்.

அவனது தவத்தைக் கலைக்க முயன்ற இந்திரன், தன் முயற்சிகள் பலிக்காமல் போகவே, ஒரு நாள் லீலாவதியைச் சிறையெடுத்துச் சென்றான். ஆனால் நாரத முனிவர் அவனைத் தடுத்து லீலாவதியைத் தன் ஆஸ்ரமத்திற்கு அழைத்துச் சென்றார். தினமும் இரவு உணவு உண்டபின் அவர் நாரயணனைப்பற்றிய கதைகளை லீலாவதிக்குச் சொல்லலானார். லீலாவதி உறங்கியபின்னும் ஒரு குரல் ‘ம்…ம்… ‘ என்று சொல்லி நாரதர் சொன்னதைக் கேட்டுக்கொண்டிருந்தது. அது கருவிலிருந்த அவளது குழந்தையின் குரல். இப்படிக் கருவிலேயே நாராயணனின் பெருமைகளைக்கேட்டு, அவரது பரமபக்தனானது அக்குழந்தை.

சிறிதுகாலம் சென்றபின் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றாள் லீலாவதி. ஹிரண்யகசிபு அப்போதும் திரும்பாததால், நாரதரே அவனுக்குப் பிரஹலாதன் எனப் பெயரிட்டார்.

இதற்கிடையில், ஹிரண்யகசிபுவின் தவம் மிகவும் உக்கிரமானது. இறுதியில் அவன் முன் தோன்றிய பிரம்மா அவன் வேண்டும் வரம் யாதென வினவ, அவரை வணங்கிய ஹிரண்யகசிபு, தனக்கு மரணமில்லா வாழ்வு வேண்டுமெனக் கேட்டான். ஆனால் பிரம்மதேவனோ அப்படியொரு வரமளிக்க இயலாதெனச் சொல்லிவிட்டார். ஹிரண்யகசிபு தன் சாதுர்யத்தால் மறைமுகமாகத் தன் எண்ணத்தை ஈடேற்றும் விதமாகத் தனக்குத் தேவர்களாலோ, மனிதர்களாலோ, விலங்குகளாலோ, பகலிலோ, இரவிலோ, தனது மாளிகையிலோ, வெளியிலோ, எந்தவொரு ஆயுதத்தாலோ மரணம் ஏற்படக்கூடாதென வேண்டினான். பிரம்மனும் அவ்வாறே வரமளித்து மறைந்தார். பின் ஹிரண்யகசிபு தன் மாளிகைக்குத் திரும்பினான்.

நடந்தவற்றை நாரதரிடமிருந்து அறிந்த ஹிரண்யகசிபு தேவலோகம் சென்று இந்திரனையும், மற்ற தேவர்களையும் சிறையெடுத்து வந்தான். இந்திரலோகத்தையும் உலகனைத்தையும் வென்ற ஹிரண்யகசிபுவுக்கு எல்லையில்லா அகங்காரம் உண்டானது. தானே கடவுளென்றும், தன்னை எல்லாரும் வணங்கவேண்டும் என்றும் உளரத்தொடங்கினான். பிரம்மனிடமிருந்து அவன் பெற்ற வரம் அவனைப் பூவுலகிலோ தேவலோகத்திலோ எவராலும் வெல்லமுடியாதவனாக ஆக்கியிருந்த காரணத்தால், அவனை எதிர்த்துப்பேச ஆளில்லாமல் போனது. அவன் சொன்னதே சாஸ்திரமானது. எல்லோரும் அவனையே கடவுளாக வணங்கும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

பிரஹலாதன் வளர்ந்ததும் அவனுக்குக் கல்வி கற்பிக்க ஏற்பாடு செய்தான் ஹிரண்யகசிபு. அவனது குருவும் ஹிரண்யகசிபுவே கடவுள் என்று சொல்லிக்கொடுத்தான். ஆனால், கருவிலேயே நாராயணனை வணங்கக் கற்றிருந்த பிரஹலாதன், குரு சொன்னதை மறுத்து நாராயணனே கடவுள் என்றும் அவரை மட்டும்தான் தன்னால் வணங்கமுடியுமென்றும் சொன்னான். தன்னுடைய சகமாணவர்களையும் நாராயணனை வணங்குமாறு சொன்னான். பிரஹலாதனால் அந்தக் குருகுலமே ‘ஓம் நமோ நாராயணாய ‘ என்ற உன்னத மந்திரத்தால் நிறையலாயிற்று. தன் உயிருக்கு உத்தரவாதமில்லாத சூழல் உருவாவதை உணர்ந்த குரு, ஹிரண்யகசிபுவிடம் விஷயத்தை எடுத்துச்சென்றார். கடுங்கோபமுற்ற ஹிரண்யகசிபு, முதலில் சற்று நிதானித்து, பிரஹலாதனிடம் தானே கடவுளென்றும், விஷ்ணு கடவுளல்ல என்றும் சொன்னான். எல்லா லோகங்களிலும் உள்ளவர்கள் தன்னைக்கண்டு நடுங்குவதால் தானே வணங்கத்தக்கவன், பிரஹலாதன் தன்னையே வணங்கவேண்டும் என்றும் அறிவுரை சொன்னான். ஆனால் பிரஹலாதன் அவனிடமே நாராயணனே வணங்கத்தக்கவரென்றும், தன் தந்தையைக் கடவுளாக வணங்கமுடியாதென்றும் உறுதியாகச் சொல்லிவிட்டான். அளவற்ற சினங்கொண்ட ஹிரண்யகசிபு அவனைப் பலவாறாகச் சித்ரவதை செய்து கொல்லும்படித் தன் காவலர்களுக்குக் கட்டளையிட்டான். மிதிக்க வந்த யானையும் பரம்பொருளின் கருணையால் பின்வாங்கியது; தீயும் அவனுக்குக் குளிர்ந்தது; கடலில் வீசப்பட்டபோதும் கடுகளவும் துன்பமின்றி வெளிவந்தான் பிரஹலாதன். யாவுமாய் தானே ஆன அந்தப் பரந்தாமனின் கருணைக்குப் பாத்திரமான அந்தக் குழந்தைக்கு எதுவுமே துன்பமிழைக்கவில்லை. இத்தனைக்குமிடையிலும் இடையறாது நாராயணனையே அவன் மனதில் தியானித்தான் என்னும்போது அவன் நாராயணனன்மீது கொண்ட பக்தியை என்னென்று சொல்வது! குறையிலா நம்பிக்கையே பக்தி. அத்தகைய உண்மையான பக்திக்கு அந்த இறைவனே ஓடிவருவான் என்பதை விளக்கும் முகமாகவே இறைவன் இத்தகைய திருவிளையாடலை நடத்தினான் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ ?

காவலர்களது முயற்சிகளெல்லாம் தோற்றதையுணர்ந்த ஹிரண்யகசிபு, இறுதியில் தானே பிரஹலாதனைக் கொல்லப்போவதாக உறுமினான். இந்நிலையில் ஹிரண்யகசிபுவுக்கும் பிரஹலாதனுக்குமிடையே நிகழ்ந்த உரையாடலில், நாராயணனின் தன்மை எத்தகையது என்பதைப் பற்றிப் பிரஹலாதன் சொல்கிறான். இறைவன் எங்கும் உள்ளான் என்று அவன் சொல்லவும், ‘இந்தத் தூணில் இருக்கிறானா ‘ எனக் கேட்கிறான் ஹிரண்யகசிபு. அதற்கு பிரஹலாதன் பின்வருமாறு பதில்சொன்னதாகக் கவிச்சக்ரவர்த்தி கம்பர் பாடுகிறார்.

சாணினும் உளன்; ஓர்தன்மை அணுவினைச் சதகூறிட்ட

கோணினும் உளன்; மாமேருக் குன்றினுமுளன்; இந்நின்ற

தூணினும் உளன்; நீசொன்ன சொல்லினும் உளன்;

இத்தன்மை காணுதி விரைவின்

விஷ்ணு கடவுளேயல்ல என்று தன் மகனைச் சொல்லவைக்கும் முயற்சியிலிருந்த ஹிரண்யகசிபு பிரஹலாதனின் இந்தப் பேச்சால் கோபத்தின் உச்சிக்கே சென்று, ‘அப்படியா, அந்த நாராயணன் இந்தத் தூணிலிருக்கிறானா ? ‘வெனக் கேட்டபடி அருகிலிருந்த தூணில் ஓங்கித் தன் கதாயுதத்தால் அடித்தான். அதனுள்ளிருந்து அண்ட சராசரங்களும் பயந்து நடுங்கும் வண்ணமாக, மனித உடலும் சிங்கத்தின் தலையும் கொண்ட நரஸிம்மமூர்த்தியாக, மஹா உக்ரத்துடன் தோன்றினார் மஹாவிஷ்ணு. கூற்றுவனையும் பயம்கொள்ளச்செய்யும் மஹாவிஷ்ணுவின் அந்த மஹா உக்ர ரூபத்தைக் கண்ட அசுரக்கூட்டம் அலறியோடியது. ஆனால் பிரஹலாதனோ, தன் தலைவனைப் பார்த்தப் பரவசத்தில் நாராயண நாமத்தை உச்சரித்து அவரை வணங்கினான்.

பகலும் இரவுமல்லாத அந்த அந்திவேளையில், ஹிரண்யனைத் தூக்கிச்சென்ற நரஸிம்மன், நிலைப்படியில் அமர்ந்து, ஹிரண்யகசிபுவைத் தன் மடியிலிட்டுத், தன் கூரிய நகங்களாலேயே கிழித்து வதம் செய்தார். இவ்வாறாக ஹிரண்யனின் முடிவு அவன் வேண்டியபடியே, பகலும் இரவுமல்லாத வேளையில், அவன் மாளிகைக்கு உள்ளும் அல்லாமல், வெளியிலும் அல்லாமல், ஆயுதங்கள் எதுவுமின்றியே நிகழ்ந்தது.

அசுரவதம் முடிந்தபின்னும், உக்ரம் தணியாமலிருந்த அவரை யாராலும் சாந்தப்படுத்த முடியவில்லை. தேவர்களும் செய்வதறியாமல் திகைத்தபோது, பிரஹலாதன் பக்தியால் மனமுருகிப் பாட, சினம்தணிந்து சாந்தரூபியான நரஸிம்மமூர்த்தி, மஹாலக்ஷ்மியோடு, ஸ்ரீலக்ஷ்மிநரஸிம்மராகக் காட்சியளித்து, பிரஹலாதனுக்கு மட்டுமல்லாது, அதுவரை அவரைக் கண்டு நடுங்கிய அண்டசராசரங்களுக்கும் அருள் செய்தார். அரசனான ஹிரண்யன் அழிந்ததால், அவனுக்குப்பின் பிரஹலாதனே அரசனானான்.

மஹாவிஷ்ணுவின் அவதாரங்களிலேயே மிகவும் உக்ரமானது நரஸிம்ம அவதாரமே. அவரை வணங்கினால் தீய சக்திகளிடமிருந்து நாம் விடுபடலாம்.

இறுதியாக, ‘சாணினும் உளன் ‘ எனத்தொடங்கும் கம்பரின் பாடலில் சிறிது நாம் மூழ்குவோமானால் பல செய்திகள் அதில் மறைந்துகிடைப்பதைக் காணலாம்.

‘இத்தன்மை காணுதி விரைவின் ‘ என்று சொல்லும்போது, ஹிரண்யன் விரைவில் அந்த இறைவனைக் காணப்போகிறான் என்று பின்வரும் நிகழ்ச்சியை முன்னரே அறிவிக்கிறார் கம்பர்.

இறைவன் எங்கும் உளன் என்ற உயர்ந்த செய்தியை விளக்கக் கம்பர் கைக்கொண்ட உதாரணங்களைப் பாருங்கள். முதலாவதாக, பெரிய பொருள்கள் தொடங்கி, நம் கண்களுக்குப் புலப்படாத மிகச்சிறியதாகிய அணுவிலும், அதனினும் சிறிய கோணிலும்கூட இறைவன் இருக்கிறான். உருவமுள்ள பொருள்களான இஇவை தவிர, உருவமேயில்லாத சொல்லிலும்கூட அவன் உள்ளான் என்பதையும் சுட்டுகிறார்.

மேலும், சாணில் தொடங்கி அணுவினைச் சதகூறிட்ட கோணில் முடிக்கும்போதும், மாமேருக் குன்றில் தொடங்கி தூணில் முடிக்கும்போதும், அவர் ஒரு பெரிய பொருளிலிருந்து சிறிய பொருளுக்கு மெல்ல இறங்குவரிசையில் இறங்குவதைக் காண முடிகிறது. அதே வரிசையில் செல்லுங்கால், இஹிரண்யன் என்ற உருவமுள்ளவன், அவன் சொல் என்ற உருவமற்ற ஒன்று, என்ற வரிசையையும் சொல்லி, ஒரு மனிதன் தனக்குள்ளேயே மெல்ல இறங்கினால், தன்னையே மேலும் மேலும் பகுத்துப் பார்த்தால், ஸ்தூலமான இந்த உடம்புக்குப் பின் சூக்ஷ்மமாக இருக்கும் உருவமில்லா அந்த இறைவனின் நிலையை உணரமுடியும் என்பதையும் சொல்லி, அப்படித் தனக்குள்ளேயே இறைவனைக் காண விழைபவன், இறைவனை விரைவில் காண்பான் என்பதை ‘இத்தன்மை காணுதி விரைவின் ‘ என்று முடிக்கிறார்.

மேலும்,

இந்நின்ற தூணினும் உளன்; நீசொன்ன சொல்லினும் உளன்;

இத்தன்மை காணுதி விரைவின்

என்ற வரிகளைக் கவனிக்கும்போது, ‘இந்தத் தூணிலும் இருக்கிறான் என்று நீயே சொல்லிவிட்டாயே ? பிறகென்ன ? அதையும் உண்மையென்பதை விரைவில் நீயே காணப்போகிறாய். ‘ என்ற பொருளும் வருகிறது.

கம்பராமாயணத்தில் யுத்தகாண்டத்தில் உள்ள இரண்யன் வதைப்படலத்தில் வரும் இப்பாடலில் ஒரு விஞ்ஞானக் கருத்து புதைந்து கிடக்கிறது. அணு என்ற ஒன்று உண்டு என்பதும், அதைக் கூறிட்டுவிடமுடியும் என்பதுமே அச்செய்தி. சுமார் ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த கம்பர் இதைப் பாடியிருப்பது மிகுந்த வியப்புக்குரிய விஷயமன்றோ ?

gopinathan_rs@yahoo.com

Series Navigation

ரா.கோபிநாதன்

ரா.கோபிநாதன்