மெய்மையின் மயக்கம்-23

This entry is part [part not set] of 39 in the series 20041028_Issue

சோதிப் பிரகாசம்


(சுரேஷின் மடலுக்கு ஜெய மோகனின் பதில் (26-02-2004) குறித்து…)

ஒரு சில கதைகள்

எவ் வளவோ அருமையாகத் தமிழில் எத்தனையோ கதைகள் எழுதப் பட்டு வந்து இருக்கலாம்; சிறந்த கதைஞர்களாக எத்தனையோ பேர்கள் உருவாகிக் கொண்டும் வந்து இருக்கலாம்.

ஆனால், நான் படித்து இருக்கின்ற கதைகளோ எண்ணிக்கையில் மிகவும் குறைவு ஆனவை; எனினும், அவற்றைப் பற்றிதான் நான் பேசிடவும் முடியும். எனவே, எந்தக் கதையையும் கதைஞரையும் புறக்கணிக்கின்ற நோக்கம் எதுவும் எனக்கு இல்லை என்பதை முதலில் நான் தெளிவு படுத்திக் கொள்ள விரும்புகிறேன்—-அவரவர் சுவனத் தரத்திற்கு ஏற்புடைய வகையில் ஒவ்வொரு மாதிரியான போதைப் பயனை ஒவ்வொரு கதைஞரும் வழங்கிக் கொண்டுதான் வருகிறார்கள் என்பதால்!

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஜெய மோகனின் பின் தொடரும் ‘நிழலின் குரலி ‘னை நான் படித்திட நேர்ந்தது—-மார்க்சியத்தை அதில் ஜெய மோகன் வசை பாடி இருக்கிறார் என்று நான் கேள்விப் பட்டதால் மட்டும் அல்ல, அவர் மீது பொழியப் பட்டு வந்து இருந்த ஸ்தாலினிச வசைகள் மார்க்சிய வாதிகளுக்கு ஏற்பு உடையன அல்ல என்பதாலும் கூட!

அதன் பின்னர், சிவகாமியின் ‘பழையன கழிதலும் ‘ கதையையும் நான் படித்திட நேர்ந்தது—-எனக்குத் தெரிந்தவர் அவர் என்பதால்! அதன் பின்னர்தான் ஜெய மோகனின் ‘விஷ்ணு புரத் ‘திற்குள் நான் நுழைந்தேன்.

முதலில், சிவகாமியின் ‘பழையன கழிதலும் ‘ கதையினைச் சற்று நாம் பார்ப்போம்.

பழையன கழிதலும்

தொல் காப்பியத்தில் இருந்து எடுக்கப் பட்டு இருக்கின்ற இதன் தலைப்பு மட்டும் அல்ல, இது கூறுகின்ற கதையும் சிறப்பு ஆனது; ‘பழையன கழிந்து புதியன புகுந்திட ‘ வேண்டும் என்னும் நோக்கில் எழுதப் பட்டு இருப்பது!

இது எழுதப் பட்ட காலத்தை மிகவும் சரியாகச் சித்தரிப்பதற்கு இதன் ஆசிரியர் இதில் முயன்று இருக்கிறார் என்பதுதான் இந்தக் கதையின் சிறப்பு எனல் வேண்டும். மற்ற படி, இதன் மொழிபின் சிறப்பு என்று எதையும் குறிப்பிட்டு நாம் கூறி விட முடியாது. ஏறக் குறைய இதே மாதிரியான ஒரு கதைதான் இவரது ‘ஆனந்தாயி ‘யும் ஆகும்.

ஏனென்றால், தமது சொந்த வாழ்க்கையை மையமாக வைத்து சிவகாமி புனைந்து இருக்கின்ற கதைகள்தாம் இவை என்பதில் ஐயம் இல்லை. படிப்பவர் அனைவருக்கும் தெற்றென இது தெரிந்து விடுகிறது என்பதிலும் ஐயம் இல்லை.

சரி, ‘பழையன கழிதலும் ‘ கதைக்கு நாம் வருவோம்.

கதையின் உயிர் ஓட்டம்

காத்த முத்து என்பவர்தாம் இந்தக் கதையின் நாயகர்; இவரது மகள் கவுரிதான் இதன் நாயகி!

பழைமையைக் குணவரைப் படுத்துகின்ற ஓர் ஆதித் திரவிடராகக் காத்த முத்துவும் புதுமையைக் குணவரைப் படுத்துகின்ற ஒரு விடுதலை வாதியாகக் கவுரியும் இதில் சித்தரிக்கப் பட்டு இருக்கிறார்கள்.

ஆதித் திரவிடர்கள் வாழ்கின்ற பகுதிகள், சேரிகள் என்றும் சூத்திரர்கள் வாழ்கின்ற பகுதிகள், குடியானவர் தெருக்கள் என்றும் இந்தக் கதையில் குறிப்பிடப் பட்டு இருக்கின்றன.

மிகவும் துடிப்பான—-சுறு சுறுப்பான—-ஓர் இளைஞராக வாழ்ந்து கொண்டு வந்து இருந்தவர் காத்த முத்து; ஒரு வீரரும் கூட!

குடியானவர் தெருக்களுக்குள்—-காலில் செருப்புப் போட்டுக் கொண்டு இவர் நடக்கிறார்; மிதி வண்டியில் ஏறிச் செல்கிறார்; சேரி மக்களுக்கு என்று விதிக்கப் பட்டு இருந்த தடைகளை எல்லாம் துணிச்சலுடன் இவர் உடைத்து எறிகிறார். இப்படியாக, சுற்று வட்டாரத்துச் சேரி மக்களின் தலைவராக இவர் மாறுகிறார். சாதிப் பெயரைச் சொல்லி இவரை இழிவு படுத்துபவர்களை இவரும் இழிவு படுத்துகிறார்.

சேரி மக்களிடம் சுத்தம் இல்லை என்று சங்கர ஆச்சாரியராகக் கருதப் பட்டு வருகின்ற ஒருவர் கூறியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அவரது பல்லின் சுத்தத்தை எழுத்தாளர்கள் சிலர் சுட்டிக் காட்டிக் கொண்டு வந்து இருந்தது அனைவருக்கும் நினைவு இருக்கலாம். இம் மாதிரியான எதிர்ப்புகளை அப் பொழுதே தெரிவித்துக் கொண்டு வந்து இருந்தவர் காத்த முத்து!

காத்த முத்துவிற்கு மூன்று மனைவியர்கள்; தங்கள் வயிற்றின் வழியாகவும்

உடு-துணிகள் வழியாகவும் தங்கள் வாழ்க்கையைப் பார்ப்பவர்கள் இவர்கள்!

ஏதோ ஒரு நிகழ்ச்சிக்காக ஒரு நல்ல தாவணியாகக் கட்டிக் கொள்ள வேண்டும் என்று ஆசைப் பட்டு, தனது தோழியின் தாவணியைக் கட்டிக் கொள்கின்ற நோக்கத்தில் ஒரு பாத்திரக் கடைக் காரரின் மகளுடன் அவளது வீட்டிற்குள் கவுரி நுழைய, அவளைத் தடுத்து நிறுத்தி அந்த வீட்டில் உள்ளவர்கள் அவளை அவமானப் படுத்த, கொஞ்சமும் கிளர்ச்சி இல்லாமல் அதனை அப்படியே தாங்கிக் கொள்கிறாள் கவுரி!

இதைக் கேள்விப் படுகின்ற காத்த முத்துவுக்கோ அவமானம் ஏற்படுகிறது. மனைவியின் கம்மலை அடகு வைத்து உடனடியாக அவளுக்கு ஒரு தாவணியை அவர் வாங்கிக் கொடுக்கிறார்.

அவராக இருந்து இருந்தால் யாரிடம் சென்றும் அவர் கெஞ்சி இருந்து இருக்க மாட்டார். மிரட்டி வேண்டும் என்றால் பணம் பறித்துக் கொண்டு இருந்து இருப்பார்!

கவுரிக்குக் காத்த முத்துவைப் பிடிக்க வில்லை. அவருக்கு மூன்று மனைவியர்கள் என்பது முதல் காரணம்; அடாவடித் தனமானவர் என்பது இரண்டாவது காரணம்!

ஆனால், அவளுக்கும் அவளது உடன் பிறந்தோருக்கும் பாது காப்பாக இருந்து கொண்டு வந்து இருந்தது அவரது துணிச்சல்தான் என்பது அவளுக்குப் புரிய வில்லை; புரிந்து கொள்வதற்கு அவள் முயலவும் இல்லை.

வீட்டிற்கு உள்ளேயும் நண்பர்களுக்கு இடையேயும் உயர்வுப் பான்மையும் வீட்டிற்கு வெளியேயும் நண்பர்களாக இல்லாதவர்கள் இடையேயும் தாழ்வுப் பான்மையும் கொண்டவளாகக் கவுரி வளர்ந்து கொண்டு வருகிறாள்; படித்துப் பட்டமும் பெறுகிறாள்.

ஒரு தலைவராகத் தம்மை நிலை நிறுத்திக் கொண்டு இருக்கின்ற காத்த முத்துவுக்குச் சாதி ஒழிப்பில் ஆர்வம் இல்லை. தமது சாதி மக்களை மட்டம் தட்டி, அவர்கள் இடையே தம்மை உயர்த்திக் கொள்ளுகின்ற பான்மை மட்டும்தான் அதிகமாக அவரிடம் காணப் படுகிறது.

சேரிப் பகுதி ஆலை உழைப்பாளர்களும் குடியானவர் பகுதி ஆலை உழைப்பாளர்களும் நட்புடன் பழகுவதை அவர் வெறுக்கிறார்; தங்கள் சாதி அடையாளத்தைச் சேரிப் பையன்கள் விட்டுக் கொடுத்து விடக் கூடாது என்பதிலும் கண்ணும் கருத்துமாக அவர் இருக்கிறார். ஏனென்றால், ஒரு சாதித் தலைவர் அவர்!

எனினும், சேரிப் பிள்ளைகள் குடியானவர் வீடுகளிலும் குடியானவர் பிள்ளைகள் சேரி வீடுகளிலும் பிறந்து வளர்ந்து கொண்டு வந்து இருப்பது அவருக்குத் தெரியும்.

இனி, கவுரிக்கு நாம் வருவோம்.

காத்த முத்துவுக்கு நேர் மாறானவள் கவுரி!

பழைய வழக்கங்கள் ஒழிந்திட வேண்டும் என்று அவள் நினைக்கிறாள்; பறை என்பதுதான் பறையர்களின் அடையாளம் என்பதையும் அவள் மறுக்கிறாள்.

வளர்ந்து கொண்டு வருகின்ற புதிய பண்பாட்டிற்குள் தயங்காமல் சேரி மக்கள் கால் எடுத்து வைத்திட வேண்டும் என்பது அவளது விருப்பம்! ஆலை உழைப்பாளர்கள் இடையே சாதி ஒதுக்கங்கள் குறைந்து கொண்டு வருவதைக் கண்டு அவள் மகிழ்ச்சி அடைகிறாள்.

சுருக்கமாக, சாதி ஒழிந்திட வேண்டும் என்று அவள் விரும்புகிறாள்.

பழையன கழிதலும் கதையின் மையக் கருத்து இதுதான்! ஒரு கதையாக இல்லாமல் இது இருந்து இருந்தால், இதற்கு ஒன்று-இரண்டு பக்கங்கள்தாம் தேவைப் பட்டு இருந்து இருக்கும் என்பது வேறு விசயம்!

சிவகாமியின் பார்வை

இந்தக் கதையில் வருகின்ற கவுரியின் பார்வைதான் சிவகாமியின் பார்வை என்று நாம் எடுத்துக் கொள்வதில் தவறு எதுவும் இல்லை. அதே நேரத்தில், காத்த முத்துவின் பான்மையாக இதில் சித்தரிக்கப் பட்டு இருப்பது இன்றைய தலித் தலைவர்களின் பான்மைதான் என்று நாம் எடுத்துக் கொள்வதிலும் தவறு இல்லை.

சாதி ஒழிப்புப் பணியில் அடங்கிக் கிடக்கின்ற சிக்கல்களை மிகவும் துல்லியமாக இந்தக் கதையில் சிவகாமி கணித்து இருக்கிறார் என்பதுதான் அவரது சிறப்பு எனல் வேண்டும்.

நக்சல்பாரி இயக்கம் எழுச்சி உற்றுக் கொண்டு வந்து இருந்த 1960களில் ஒரு முக்கியமான பிரச்சனையை அவர்கள் மையப் படுத்திக் கொண்டு வந்து இருந்தார்கள்.

தொழிற் சங்கப் போராட்டமா ? புரட்சிப் போராட்டமா ? என்பதுதான் அந்தப் பிரச்சனை!

கூலிப் போராட்டத்தினைத்தான் தொழிற் சங்க இயக்கங்கள் வளர்த்து விட்டுக் கொண்டு வந்து இருக்கின்றன; ஆனால், புரட்சிப் போராட்டம்தான் தற்போதைய தேவை; என்பதுதான் பிரச்சனையின் உள்ளடக்கம்!

அதாவது, முதலாண்மையை அழித்து ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டவை அல்ல கூலிப் போராட்டங்கள்; வெறும் தொழிற் சங்கப் போராட்டங்கள்தாம் அவை! ஆனால், ருஷ்யாவுக்கு அரசியல் போராட்டங்கள்தாம் தேவை; ஒரு புரட்சியினை நோக்கமாகக் கொண்ட போராட்டங்களாக இவைதாம் இருந்திடவும் முடியும்; என்கின்ற வாதத்தை முதலில் கிளப்பி விட்டு இருந்தவர் லெனின்தாம் எனலாம்.

இது குறித்து, ‘செய்ய வேண்டியது என்ன ? ‘ என்னும் தமது நூலில் மிகவும் கடுமையான வாதங்களை லெனின் நிகழ்த்தி இருக்கிறார். ஒரு முதலாண்மைப் புரட்சியினை நோக்கமாகக் கொண்டு அவர் நிகழ்த்தி இருந்த வாதங்கள்தாம் இவை என்பது வேறு விசயம்!

இந்திய ஒன்றியத்திற்குள் இதனைப் பொருத்திப் பார்த்துக் கொண்டு வந்து இருந்த நக்சல்பாரித் தலைவர்கள், லெனினது வாதங்களை வளப் படுத்திக் கொண்டு வந்து இருந்தார்கள் என்பதுதான் இங்கே முக்கியம்.

கூலிப் போராட்டங்கள் பிற்போக்குத் தனம் ஆனவை; ஏனென்றால், முதலாண்மைக்குள் அடங்கி ஒடுங்கி விடுகின்ற நோக்கத்தினை உள்ளடக்கமாகக் கொண்டவை! ஆனால், புரட்சிப் போராட்டங்களோ முதலாண்மைச் சமுதாயத்தை ஒழித்துக் கட்டுவதை நோக்கமாகக் கொண்டவை!

எனவே, தொழிற் சங்கங்களைப் புறக்கணிப்போம்; நாட்டுப் புறங்களுக்குச் சென்று உழவர்களைத் தட்டி எழுப்புவோம்; என்கின்ற செயல் திட்டமாக இங்கே இது உருவெடுத்தது. நாட்டுப் புறங்களை நோக்கித் தொழிற் சங்கத் தலைவர்களும் முன்னணி வீரர்களும் ஓடிக் கொண்டும் வந்து இருந்தனர்.

ஒரு துறவுப் பான்மை என்றுதான் இந்தப் பான்மையினை யாரும் சித்தரித்திட முடியும் என்பதில் ஐயம் இல்லை. ஏனென்றால், இன்றைய வாழ்க்கையைத் துறந்து விட்டதன் பின்னர்தான், எதிர் கால வாழ்க்கையை நாம் உருவாக்கிட வேண்டும் என்னும் ஒரு பான்மை இது!

காத்த முத்துவும் கவுரியும்

தொழிற் சங்கம் x புரட்சி என்னும் இந்தக் கருத்தமைவினைக் காத்த முத்துவுக்கும் கவுரிக்கும் நாம் பொருத்திப் பார்ப்பதில் தவறு எதுவும் இல்லை.

ஏனென்றால், சாதி அடையாளங்களைத் தாழ்த்தப் பட்ட மக்கள் இழந்து விடக் கூடாது என்று கருதுகின்ற ஒரு பிற்போக்காளராகப் ‘பழையன கழிதலும் ‘ கதையில் காத்த முத்து சித்தரிக்கப் பட்டு இருக்கிறார்.

அப்படி என்றால், துறவுப் பான்மை கொண்ட ஒரு புரட்சி வாதியாக அல்லது தீவிர வாதியாகக் கவுரி சித்தரிக்கப் பட்டு இருக்கிறாள் என்று பொருள் அல்ல; மாறாக, வாழ்க்கையை நேசிக்கின்ற—-பழைய வாழ்க்கையின் முரண்களுக்கு இடையே இருந்து புதிய வாழ்க்கையைப் படைத்துக் கொள்கின்ற—-ஒரு செயற் பாட்டு வாதியாகக் கவுரி சித்தரிக்கப் பட்டு இருக்கிறாள்.

வாழ்க்கையின் ஒவ்வொரு சாயையிலும் தாழ்த்தப் பட்ட மக்கள் முன்னேறிட வேண்டும்; இந்த முயற்சிகளின் இடையே, பழைய அடையாளங்களைக் களைந்து விட்டு—-கழித்துப் போட்டு விட்டு—-புதிய அடையாளங்களுடன்—-தனி மனித உரிமையும் மாண்பும் உடையவர்களாக—-ஒரு புதிய வாழ்க்கையினைத் தங்களுக்கு என்று அவர்கள் படைத்திடவும் வேண்டும் என்று அவள் எண்ணுகிறாள்.

ஆக, நிகழ் கால வாழ்க்கையின் முன்னேற்றம்; அதே நேரத்தில், புதியது ஒரு வாழ்க்கையினை எதிர் காலத்தில் படைத்துக் கொள்கின்ற தீவிரம்; என்பனதாம் ‘பழையன கழிதலும் ‘ கதையின் மூலமாக நமக்குச் சிவகாமி உணர்த்துகின்ற செய்திகள் என்பது தெளிவு.

சிவகாமியின் பான்மை

சாதித் தலைவர்களின் மெய்மையான பான்மையினைக் காத்த முத்துவின் மூலமாகச் சிவகாமி சித்தரித்து இருக்கிறார் என்பதில் நமக்கு ஐயம் எதுவும் இல்லை.

ஏனென்றால், தங்கள் சாதி அடையாளங்களைப் பயன் படுத்திக் கொண்டு, அதே நேரத்தில், சாதி ஒழிப்புப் பணிகளைப் புறக்கணித்துக் கொண்டு, கூடவே, ஆட்சிப் பதவிகளிலும் அமர்ந்து கொண்டு, இறுதிக் காலத்தில், முத்தியினை—-பரி நிர்வாண நிலையினை—-மதங்களுக்குள் தேடிக் கொண்டு வந்து இருக்கின்ற—-வருகின்ற—-தலைவர்களாகத்தாம் பெரும் பான்மையான தலித் தலைவர்கள் இருந்து கொண்டு வந்து இருக்கிறார்கள்—இருந்து கொண்டும் வருகிறார்கள்!

‘பழையன கழிதலும் ‘ பாணியில் சிவகாமியின் பான்மையினை வகுத்துக் கொண்டு வந்து இருப்பவர்களோ மிக மிகக் குறைவு ஆனவர்கள்தாம் ஆவர்.

ஆனால், ‘பழையன கழிதலும் ‘ கதையின் சிவகாமி வேறு; ‘புதிய கோடாங்கி ‘ப் பத்தரிகையின் சிவகாமி வேறு; என்று எண்ணுவதற்குதான் நமக்குத் தோன்றுகிறது. எனினும், இதற்கு என்ன காரணம் ? என்பதைத் தேடிக் கொண்டு இருப்பது நமது வேலை அல்ல. ஏனென்றால், அவரது சொந்த விசயம் அது!

ஆனால், சாதி ஒழிப்பு என்பது அவரது சொந்த விசயம் அல்ல; சமுதாயத்தின் அவமானங்களைத் துடைத்து எறிந்திட வேண்டும் என்கின்ற முனைப்புப் பற்றிய விசயம்; தனி மனித மாண்பு பற்றிய ஒரு பொது நாயக விசயம்!

வருக்கப் போராட்டத்தினைப் போல, சாதி ஒழிப்புப் போராட்டம் என்பது பகிரங்கமான ஒரு போராட்டம்! எனவே, கண்ணீருக்கும் கம்பலைக்கும் இதில் இடம் இல்லை. ஏனென்றால், அவமானப் படுத்தப் பட்டு அழுந்திக் கிடந்து கொண்டு வந்து இருக்கின்ற மனிதர்களின் தன் மானப் போராட்டம் இது—-தன் மானப் புரட்சியின் போராட்டம் இது!

ஆனால் சிவகாமியோ, காத்த முத்துவைப் போல தமது எழுத்துகளில் தந்திரங்களைக் கையாளுகிறார்; மூடு மந்திரப் பான்மைகளைப் படர விடுகிறார்; சமுதாய வாழ்க்கையின் வளர் இயக்கத்தினைப் புரிந்து கொள்ள முடியாத ஆவேசத்தில், செயல் படுத்தப் பட முடியாத திட்டங்களை ஞானியிசப் பாணியில் பெருந் தன்மையுடன் தீட்டி அளித்துக் கொண்டு வருகிறார்.

ஆனால், அவமானங்கள் கற்பனை ஆனவை அல்ல; போர்க் களங்களும் கரசியம் ஆனவை அல்ல!

சிவகாமியும் ஜெய மோகனும்

வெற்றி வாகைகளைத் தமது கழுத்தில் சூடிக் கொள்வதற்கு ஒருவர் ஆசைப் படுகிறார் என்றால், அவரது விருப்பத்தின் பாற்பட்ட அவரது சொந்த விசயம் அது! இதில் தலையிடுவதற்கு யாருக்கும் எந்த உரிமையும் இல்லை.

ஆனால், அந்த வெற்றியினை இந்த உலகமே கொண்டாடிட வேண்டும் என்று அவர் ஆசைப் படுவார் என்றால்—-உலகின் மூலை-முடுக்குகளில் இருந்து எல்லாம் வந்து குவிந்து, அவரது தோள்களைப் புகழ் மாலைகள் நிரப்பிட வேண்டும் என்று காரணங்களுடனும் காரிய முனைப்புகளுடனும் அவர் எதி பார்ப்பார் என்றால்—-களங்கள் பலவற்றை அவர் கண்டாக வேண்டும்; எதிரிகளின் தலைகளைப் பந்தாடி ஆக வேண்டும்; விழுப் புண்களை ஏற்றுக் கொண்டும் ஆக வேண்டும்.

‘இழப்பே இருப்பு ‘ என்றும் ‘இருப்பே இழப்பு ‘ என்றும் மாறி-மாறிக் கவிதைகளைப் பாடிப் போதையில் மயங்கிக் கொள்கின்ற வித்தை மட்டும் தெரிந்து இருந்தால் போதாது!

நண்பர் சிவகாமிக்கு இவை எல்லாம் தெரியாதா ? என்றால், தெரியும்! அவரைப் பொறுத்த வரை, யார் பெயரில், எந்த அடையாளத்தில், எத் தகைய பின்னணியில், நிகழ்கின்ற வெற்றி இது ? என்கின்ற கேள்விகள் எல்லாம் யாருக்கும் தேவை இல்லாத விசயங்கள்!

எனவே, களத்தில் அவர் இறங்குகிறார்! அதே நேரத்தில், எதிர்ப்பதற்கு யாரும் இல்லாத ஒரு களமாக அது இருந்திட வேண்டும் என்பதில் மிகவும் எச்சரிக்கையாக அவர் இருக்கிறார்; எதிரியாக யாரையும் வரித்துக் கொண்டு விடக் கூடாது என்பதிலும் தமது முழுக் கவனத்தையும் அவர் செலுத்துகிறார்!

இப் பொழுது—-வெற்றி நிச்சயம் ஆகி விடுகிறது; ஏனென்றால், எதிர்த் தரப்பில் யாரும் இல்லை! வியப்பில் விழிகள் விரிவதும் கனவில் தெரிந்து விடுகிறது; ஏனென்றால், தெரு வெங்கும் கலை மனோ லயம் நிரம்பிக் கிடக்கிறது! எனவே, வெற்றி வாகைகளைச் சூடிக் கொள்ளவும் அவரால் முடிந்து விடுகிறது!

மூளை நோகாத ஞானம் என்பது போல உடல் நோகாத ஒரு வெற்றி இது; வீரமே தேவைப் படாத ஒரு வீராங்கனையின் வெற்றி இது! ஒரு வேளை, மொழியின், அதாவது, உடல் மொழியின் வெற்றிதான் போலும் இது!

ஆனால், யாரும் காணாத—-கண்டிடவும் முடியாத—-இந்தப் போர்க் களத்தைக் கனவில் கண்டு புகழ் மாலைகளை இவருக்குப் ‘புதிய கோடங்கி ‘யின் வாசகர்கள் சூட்டி விட்டு விடுவார்கள் என்று இவர் கற்பனை செய்து கொண்டு விடுவதுதான் வேடிக்கை! ஏனென்றால், புதிய கோடாங்கி வாசகர்கள் மட்டும் அல்லர், அந்த அளவுக்கு இளித்த வாயர்களாக எந்த வாசகரும் இன்று இருப்பதற்கு வாய்ப்புகள் இல்லை.

எதற்காக, யார் யார், என்னென்ன காரியங்களில் ஈடு படுகிறார்கள் ? என்னென்ன கொள்கைகளை எதற்காகப் பேசிக் கொண்டு இவர்கள் வருகிறார்கள் ? இவற்றின் பின்னணி என்ன ? என்பவை எல்லாம் எல்லோருக்கும் தெரிந்து இருக்கின்றன—-புதிய கோடாங்கி வாசகர்கள் உட்பட! சமுதாயச் சந்தையின் நிலவரங்கள் அப்படி!

‘கதை-கவிதைகள் பற்றி அதிகம் பேசுகின்ற ஒரு நாட்டில் அறிவு வளர்ச்சி ஏற்படுகின்ற வாய்ப்புகள் மிகவும் குறைவு ‘ என்று நான் எழுதினால், எனது கருத்திற்கு எதிராகப் போர்க் குரல் எழுப்புகின்ற நண்பர் ஜெய மோகனோ, அவரது கணைகளை சுரேஷின் நண்பரை நோக்கித் தொடுக்கிறார்.

என்ன தந்திரம் இது ? கொரில்லாப் போர் என்கிறார்களே, அப்படிப் பட்டது ஒரு மறை நிலைப் போர் முறையா ? எனினும், தாங்கிக் கொள்ள முடிய வில்லை போலும் அவரால் அவரது பான்மையினை! நண்பர் அல்லவா! எனவே, என்னிடம் அவர் கூறியும் விடுகிறார்—-எனது கருத்துகளுக்கு எதிரான எதிர்க் கருத்துகள்தாம் அவரது கருத்துகள் என்று!

நண்பர்களும் மோதல்களும்

‘ஆமாம் அய்யா ‘ போட்டுக் கொண்டு ஒருவருக்கு ஒருவர் நண்பர்களாகப் பலரும் இருந்து கொண்டு வருவது மிகவும் எளிது. ஆனால், ஒரு வகையான அடிமைத் தனம் என்றுதான் இதனை நாம் குறிப்பிட்டிட முடியுமே ஒழிய, நட்பு என்று குறிப்பிட்டு விட முடியாது. ஆனால், கருத்து வேறுபாடுகளைப் பகிரங்கமாக வெளிக் கொணர்ந்து போரிட்டுப் பார்த்துக் கொள்கின்ற நட்போ மிகவும் வலிமை ஆனது.

ஏனென்றால், நட்புக்காக உயிரைக் கொடுக்கலாம்; ஆனால், உள்ளத்தை, அதாவது, கொண்ட கொள்கையினை விட்டுக் கொடுத்திட முடியாது என்பதுதான் இந்த நட்பின் வலிமைக்குக் காரணம். அதே நேரத்தில், நோக்கத்திற்குள் ஓர் உள் நோக்கம்; குழுவிற்குள் ஓர் உள் குழு; கொள்கைக்குள் ஓர் உள் கொள்கை; காரணத்திற்குள் ஓர் உள் காரணம்; காரியத்திற்குள் ஓர் உள் காரியம்; என்று எல்லாம் எந்த நட்பும் இருந்திட முடியாது.

எனவே, பெயர்களைக் குறிப்பிட்டு நண்பர்கள் மோதிக் கொள்வதில் எந்தத் தவறும் இல்லை; தத்தம் கொள்கைகளை வலியுறுத்தி வாதங்களைப் புரிந்து கொள்வதிலும் தவறு இல்லை! ஏனென்றால், உண்மையைத் தேடுகின்ற ஒரு முனைப்பில், பெரியவர் யார் ? சிறியவர் யார் ? என்னும் கேள்விகளுக்கு அணுவளவும் இடம் இல்லை.

இவை எல்லாம் தெரியாதவர் அல்லர் நண்பர் சிவகாமி! ஆனாலும், எதிர்த் தரப்பாக என்னையும் வரித்துக் கொள்ளாமல் ‘திண்ணை ‘யையும் குறிப்பிடாமல், செப்ட்டம்பர் 2004, ‘புதிய கோடாங்கி ‘யில் பின் வருமாறு அவர் எழுதுகிறார்:

‘ஒரு ஆட்டின் வயிற்றுக்குள் செரிக்கப் படாத இலையும், சுற்றிலும் இலை தழை கொடிகள் படர்ந்திருப்பதுமான ஒரு ஓவியத்தை சாதரணமானது என்கிறார்கள். செரிக்கப் படாத இலை ஒன்று ஆட்டின் வயிற்றுக்குள் புகுந்ததன் மர்மம் என்ன என்று சற்றும் சிந்தித்துப் பார்க்காது அவர்களுக்கு அக உலகமே இல்லை என்கிறார்கள். இவை சில உதாரணங்களே. தொடர்ந்து சிற்றுலகங்களைப் புறக்கணிக்கும் அல்லது இந்துத்துவத்தோடு ஜீரணிக்கும் போக்கு இப்போதும் உள்ளபோது பன்மைத் தன்மைக்கு வழியில்லை. எனவே இல்லாத சந்தை நிலவரங்களை அனுசரிப்பது சாத்தியமில்லை. அடுத்து பன்மைத் தன்மையை ஆதரிக்காததும், அமெரிக்காவைப் போல் இங்கே பெரிய குற்றமாகக் கருதப் படாது. ஏனெனில் ஒருமைத் தன்மையிலான இந்துச் சந்தை காரணமாக தலித்துகளும் பழங்குடிகளும் இந்து மயமாக்கப்பட்டு வருகின்றனர். சிறு தெய்வ வழிபாட்டை இழிவுபடுத்தும் வகையில் தொடர்ந்து பத்திரிக்கைகள் செய்திகளைப் பிரசுரித்து இத்தகைய கலாச்சார வன்முறை சரிதான் என ஆதரித்து வருகின்றன. ‘

கருத்து மோதல்கள்

வெளியில் சொல்வதற்கு வெட்கப் படுகின்ற செயல்கள் என்று ஒவ்வொருவரிடமும் பலவும் இருக்கலாம். தத்தம் ஆழ் மனத்திற்குள் அவற்றைப் போட்டு எல்லோரும் அடைத்து வைத்துக் கொண்டும் வந்திடலாம்.

ஆனால், கருத்துப் போராட்டத்தில் இத் தகு கரசியங்கள் எவையும் இல்லை. சரி என்று தெரிந்தனவற்றை வலியுறுத்துவதற்கும் தவறு என்று தெரிவனவற்றைத் திருத்திக் கொள்வதற்கும் உரிய ஒரு வாய்ப்புதான் கருத்து மோதல் என்பதால், பிடிவாதங்களுக்கும் இதில் இடம் இல்லை.

ஏனென்றால், மூடி மறைத்து வைப்பதற்குக் கருத்து மோதல் ஒன்றும் ஊழலும் இல்லை; கூலிக்கு மாரடிக்கின்ற கூத்தும் இல்லை!

எனவே, வெளிப் படையாகப் பெயர்களைக் குறிப்பிட்டு எதிர்க் கருத்துகளைச் சாடுவதற்கு சிவகாமி முன் வந்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்வதைத் தவிர நமக்கு வேறு வழியும் இல்லை. ஏனென்றால், பதவிகளுக்காகச் சந்தித்தாக வேண்டிய தேர்தல் களம் அல்ல இது! எனினும், பெயர் குறிப்பிடாமல் எத்தனை பேரை எப்படி எல்லாம் இவர் வம்புக்கு இழுத்து இருக்கக் கூடும் என்பதோ வேறு விசயம்!

கலைத் தனமும் மதத் தனமும்

செரிக்கப் படாமல் ஆட்டின் வயிற்றுக்குள் அழகாக அமர்ந்து கொண்டு இருக்கின்ற இலைக்குத் தாம் அளித்து இருந்த கலைத் தனமான விளக்கத்தினை சிவகாமி மறுத்திட வில்லை என்பது அவரது நேர்மைக்கு ஓர் எடுத்துக் காட்டு என்றுதான் நாம் சொல்ல வேண்டும். அதே நேரத்தில், மதத் தனமான புதியது ஒரு விளக்கத்தினை அளித்து அந்த ஓவியத்திற்குப் புத்துயிர் ஊட்டுவதற்கு சிவகாமி முன் வந்து இருக்கிறார் என்பது அவரது சிந்தனையின் ஆழத்திற்கு ஓர் எடுத்துக் காட்டு என்று நாம் எடுத்துக் கொள்ளலாம்.

வரைந்த ஓவியத்தைக் கிழித்துப் போட்டு விடவா முடியும் ? எனவேதான், இந்தப் புதிய முயற்சி! ஏனென்றால், இயற்பான ஓர் ஓவியம் அல்ல அது; சிறப்பான ஓர் ஓவியம், அதுவும், ஜெர்மனி முதலிய பன்னாட்டுப் பயணங்களை மேற்கொண்டு முடித்து விட்டு உள் நாட்டிற்குத் திரும்பி வந்து இருக்கின்ற ஓர் ஓவியம்!

மெய்மையின் மயக்கம்: நான்காவது தொடரில் இந்த ஓவியம் விவாதிக்கப் பட்டு இருக்கிறது. எனினும், மீண்டும் ஒரு முறை இந்த ஓவியத்தை நமது நினைவுக்கு நாம் கொண்டு வருவதில் தவறு எதுவும் இல்லை.

அணுவளவும் சிதைவு உறாமல் ஓர் ஆட்டின் வயிற்றினை முழுவதுமாக நிரப்பிக் கொண்டு அமர்ந்து இருக்கின்ற ஓர் இலையின் ஓவியம்தான் அது!

உணவினைச் செரித்திட முடியாத இந்த ஆடும் உருப்படாது; இதை வளர்ப்பவனும் உருப்பட மாட்டான்; என்று இது பற்றி நான் குறிப்பிட்டு இருந்தேன். சிவகாமியின் ‘கலை மனோ லயத்தி ‘னையும் சுட்டிக் காட்டி, செயற்பாட்டு முறையான சமுதாயச் சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதற்கு இம் மாதிரியான கலைத் தனங்கள் உதவிட முடியாது என்றும் நான் குறிப்பிட்டு இருந்தேன். இதற்குதான் புதியது ஒரு விளக்கத்தினைச் சிவகாமி அளித்து இருக்கிறார்.

நம்மைப் பொறுத்த வரை, இங்கே நாம் புறக்கணித்து விட முடியாத ஓர் ஓவியம் இது! ஏனென்றால், இந்த ஆட்டின் வயிற்றுக்குள் நாம் புகுந்து விட்டால் போதும், ஜெய மோகனின் விஷ்ணு புரத்திற்குள் மிகவும் எளிதாக நாம் நுழைந்து விடலாம்; ஜெய மோகன் சித்தரித்து இருக்கின்ற கடும் வெயிலில், சூடான மணற் பரப்பில், நடந்து நடந்து நாம் புதையுண்டு போய் விடத் தேவை இல்லை.

சிவகாமியின் புதிய விளக்கம்

மேலை நாட்டுப் பயணம் என்பதும் மேலை நாட்டுச் சரக்கு என்பதும் எளிதில் யாரும் அனுபவத்திட முடியாத அருஞ் சாதனைகள் என்று கருதுபவர்களுக்கு வேண்டும் என்றால், அதருக்கம், பன்மைப்பாடு, சொல்லாடல், முதலான புதிய சரக்குகள், அறிவு முதிர்ச்சியின் புதிய கண்டு பிடிப்புகளாகத் தோன்றிடலாம். ஆனால், சமுதாயத்தின் முதிர்ச்சி என்பதற்கு அப்பால் அறிவு முதிர்ச்சி என்று தனியாக எதுவும் வானத்தில் இருந்து வந்து குதித்து விட முடியுமா ? அதே நேரத்தில், தமிழ்ச் சிந்தனை மரபிற்கு இவை ஒன்றும் புதியவையும் அல்ல!

எனினும், சிவகாமிக்கு இவை எல்லாம் புதியவை! ஜெய மோகன் கற்பனித்துக் கொண்டு வந்து இருப்பதைப் போல, பழையதாகிப் போய் விட்ட மார்க்சியத்திற்குள் மூளையை நுழைத்துக் களைப்புற்றுப் போவதை விட, மேம்போக்கான மேலைச் சரக்குகளை மலிவாக விற்று ஆதாயத்தை அதிகரித்துக் கொள்ளலாம் என்னும் நினைப்பில்தான் இவற்றை எல்லாம் அங்கு இருந்து அள்ளிக் கொண்டு இவர் வந்து இருப்பார் போலும்! ஆனால், உலகச் சந்தைப் போட்டி என்பது மூளை நோகாத ஞானமும் அல்ல; உடல் நோகாத உழைப்பும் அல்ல!

முதலில், ஆட்டு ஓவியத்திற்கு இவர் அளிக்கின்ற இவரது புதிய விளம்பரத்தைச் சற்று நாம் பார்ப்போம்.

ஆட்டுச் சந்தையும் ஓவியச் சந்தையும்

உண்ட உணவினைச் செரித்திட முடியாத எந்த ஓர் ஆடும் ஆட்டுச் சந்தையில் விலை போய் விட முடியாது என்பது நமக்குத் தெரியும். ஏனென்றால், வளர்ப்பதற்கு மட்டும் அல்ல, வெட்டுவதற்கும் கூட அது பயன் படாது; வெட்டிக் கூறு போட்டு இதனை விற்பவருக்கு இதனால் ஆதாயம் எதுவும் கிடைத்திடவும் முடியாது.

எனினும், ஓர் ஓவியம் என்கின்ற வகையில், ஓவியச் சந்தையில் இந்த ஆடு விலை போகலாம். ஏனென்றால், ஒருவருக்கு ஒருவர் தீங்கு செய்திடாமல் மனிதர்கள் வாழ்ந்திட வேண்டும் என்று இதற்கு ஒரு விளக்கத்தினை அளித்து, இதில் ஊடாடி நிற்கின்ற ‘கலை மனோ லயத்தினை ‘ விளம்பரம் செய்தாவது இதன் விற்பனையை உறுதி செய்து விட முடியும்.

ஆனால், திணிக்கப் பட்ட இலையினை விழுங்கி விட்டு ஆடு திணறிக் கொண்டு இருக்கிறது என்று விளக்கம் கூறி, இந்த ஆட்டினை விற்று விட முடியும் போல் நமக்குத் தோன்றிட வில்லை.

மற்றவர்க்குத் தீங்கு செய்திடாமல் மனிதர்கள் வாழ்ந்திட வேண்டும் என்னும் கருத்தினை வலியுறுத்துவதற்கு, போயும் போயும் இந்த ஆடுதானா கிடைத்தது ? ஓவியர் சந்துருவைக் கேட்டு இருந்தால், இதற்கு என்று சிறந்தது ஓர் ஓவியத்தை அவர் தீட்டி அளித்து இருக்க மாட்டாரா ?

இந்து மதத்தின் பெருந் தெய்வங்களைப் பழங் குடி மக்கள் இடையேயும் ஆதித் திரவிடர்கள் இடையேயும் ஆதிக்கச் சாதிக் காரர்கள் திணித்து விடுகிறார்கள்; சிறு தெய்வங்களோ இதனால் புறக்கணிக்கப் பட்டு விடுகின்றன; என்னும் கருத்தை வலியுறுத்துவதற்குக் கூட, இந்த ஆட்டு ஓவியம் பயன் பட்டு விட முடியும் என்று நமக்குத் தோன்ற வில்லை. ஏனென்றால், இதை விடத் தெளிவாக இந்தக் கருத்தினை வேறு மாதிரியான ஓவியங்கள் மூலம் எந்த ஓவியரும் தீட்டி விட முடியும்.

உயிர்ப் பலி கேட்கின்ற சிறு தெய்வங்கள் x பணப் பலி கேட்கின்ற பெருந் தெய்வங்கள் என்னும் கருத்தினை சிவகாமி வலியுறுத்துவதாக இருந்தால், சிறு தெய்வங்களின் சிலைகள் முன்னால் ஆடுகளைக் கட்டி வைத்து அவற்றைப் பூசாரிகள் வெட்டுவது போன்ற ஓவியங்களைத் தீட்டிட வேண்டியது வரலாம். ஆனால், ஆட்டைப் பலி கொடுக்கின்ற மனிதர்கள் கூட இம் மாதிரியான ஓவியங்களை விரும்பிட மாட்டார்கள்; ஏனென்றால், ஆடுகளை நேசிப்பவர்கள் அவர்கள்; பாசமுடன் அவற்றை வளர்த்துக் கொண்டும் வருபவர்கள்!

சரி, சிங்கத்தையும் புலியையும் வளர்த்திட விரும்பாத மனிதர்கள், எதற்காக ஆடு-மாடுகளை மட்டும் வளர்த்துக் கொண்டு வருகிறார்கள் ? அவற்றை அவர்கள் நேசிக்கிறார்கள் என்பதனாலா ? அப்படி என்றால், பசுவின் புனிதத்துடன் ஆட்டின் புனிதத்தையும் நாம் சேர்த்துக் கொள்ளலாமா ? வெட்டப் படுகின்ற ஆடுகளைக் கேட்டுதான் விடைகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் போலும்!

சிறு தெய்வங்களும் பெருந் தெய்வங்களும்

வட்டார வழக்குகளில் இருந்துதான் பொது வழக்குகள் உருவாகுகின்றன என்பதும் வட்டார மொழிகளில் இருந்துதான் தேசிய மொழிகள் உருவாகுகின்றன என்பதும் எல்லோருக்கும் தெரியும். இப்படித்தான், பொது வழக்குகளுக்கு உள்ளும் பொது மொழிகளுக்கு உள்ளும் வட்டார வழக்குகளும் மொழிகளும் நிரந்து கலந்து கொண்டு வந்து இருக்கின்றன.

இந்த நிகழ்ப்பாட்டில், வட்டார வழக்குகள் என்பனதாம் பன்மைப்பாடு என்பது ஆகுமாம்; பொது வழக்குகள் என்பனதாம் அதிகார மையங்கள் ஆகுமாம்—-பின்-புதின வாதிகள் கூறுகிறார்களாம்! இப்படித்தான், பன்மைப்பாடு என்பதனை சிவகாமியும் புரிந்து கொண்டு இருக்கிறார். நுனிப் புல் மேய்ச்சல் காரர்களால் வேறு எப்படித்தான் இதனைப் புரிந்து கொள்ளவும் முடியும்!

சரி, எதை எதை, எப்படி எப்படி, யார் யார் எல்லாம் புரிந்து கொண்டு வந்து இருக்கிறார்கள் என்பதைக் கணக்கிடுவது நமது வேலை அல்ல; அவரவர் சரக்குகளை அவரவர்க்கு உரிய சந்தைகளில் அவரவர்கள் விற்றுக் கொள்கிறார்கள், அவ் வளவுதான்!

ஆனால், தெய்வம் என்று வந்து விட்டதன் பின்னர், சிறு தெய்வமா ? பெரும் தெய்வமா ? என்னும் கேள்விகள் எதற்கு ? பெரியவர் யார் ? சிறியவர் யார் ? என்று தங்களுக்குள் எழுத்தாளர்கள் அடித்துக் கொள்வதைப் போல் இது இல்லையா ? எனினும், அதிகமான ஆற்றல் வாய்ந்த தெய்வங்களாகச் சிறு தெய்வங்களைத்தாம் சிவமாமி காண்கிறார் போலும்! எண்ணிக்கை அதிகம் என்றால் ஆற்றலும் அதிகம்தானே!

எப்படியும், தங்களுக்குள் அடித்துக் கொள்ளாமல் ஒரு கூட்டணியினைச் சிறு தெய்வங்கள் வகுத்துக் கொண்டால் சரி! அதே நேரத்தில், சமயச் சந்தையின் நிலவரங்களுக்கு ஏற்ப ‘அனுசரித்து ‘ச் சென்றிடாத தெய்வங்கள், பொதுச் சந்தையில் விற்பனை ஆகி விட முடியுமா ? என்பதும் கேள்வி!

இதனால்தான், அனைவரையும் முந்திக் கொண்டு ‘தனியார் வளங்களைப் பொதுவில் வை ‘ என்று முழக்கம் இடுவதற்குச் சிவகாமி தொடங்கி இருக்கிறார் போலும்! ஏனென்றால், சந்தை நிலவரங்களை எதிர் கொள்கின்ற நிலையில் அவர் இல்லை!

ஆனாலும், திரு வள்ளூவரின் ‘பயன் மரம் ‘ வாதம் போல் இது தோன்றிட வில்லையா ? அப்படி என்றால், எதிலும் யாரையும் அவர் முந்திக் கொள்ள முடியாதோ ?

எப்படியும், தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு அவசியம் என்று வாதிட்டுக் கொண்டு வருபவர்களை எல்லாம் முந்திக் கொண்டு, ‘தனியார் வளங்களைப் பொதுவில் வை ‘ என்று முழக்கமிடத் தொடங்கி இருக்கின்ற இவரது பெருந் தன்மையினைப் பொறுத்த வரை, எல்லோரையும் இவர் முந்தி விட்டார் என்று இவரை நாம் பாராட்டி விடுவதைத் தவிர நமக்கு வேறு வழி இல்லை.

சுந்தர ராம சாமியும் சிவகாமியும்

‘எதையாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் எழுத்தாளர்களை நாம் நாடுகிறோம். ஆனால், எதையோ சொல்ல வருவது போல பாவனை காட்டி, எதையும் சொல்லாமல் தப்பித்துக் கொள்கின்ற எழுத்துகளை எப்படி நாம் புரிந்து கொள்வது ? அல்லது எப்படித்தான் அவற்றை நாம் கடைப் பிடிப்பது ?

உலக மயமாக்கல் பற்றியும் தனித்த பண்புகள் பற்றியும் தீராநதி, ஜூன் 2003 இதழில் சு.ரா. அவர்கள் தெரிவித்து இருக்கின்ற கருத்துகளைத்தாம் நான் குறிப்பிடுகிறேன்.

உலக மயமாக்கலின் தாக்கத்தில் இருந்து நாம் தப்பித்துக் கொள்ள முடியாது என்று கூறுகின்ற சு.ரா., நமது தனித்த மரபுகளையும் பண்புகளையும் அடையாளங்களையும் நாம் பாதுகாத்திட வேண்டும் என்று கூறுகிறார். அப்படி என்றால், உலக மயமாக்கல் என்பது சந்தைகளின் உலக மயமாக்கலா ? அல்லது பண்பாடுகளின் உலக மயமாக்கலா ? என்னும் கேள்விகள் எழுகின்றன.

ஆனால், எந்தப் பண்பினையும் எந்த மரபினையும் நாம் பாதுகாத்துக் கொள்வது ? மரபு என்பதே பண்பாட்டு மரபுதான் என்றால், நமது பண்பாட்டு மரபு எது ?

போர்க் களத்தில் இறந்து போன பூதப் பாண்டியனின் மனைவி, உடன் கட்டை ஏறி இறந்ததாகப் புற நானூற்றுப் பாடல்கள்….கூறுகின்றன.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே சாதி இழிவுகள் இன்னமும் நாட்டில் தொடந்து கொண்டு இருக்கின்றன.

இவற்றுள், எந்த மரபினை நாம் பாதுகாத்திட வேண்டும் என்று சு. ரா. கருதுகிறார் ? ‘ (குமுதம் தீராநதி, ஜூலை 2003, பக்.4-5.)

என்று நான் எழுதினால், சிவகாமி மகிழ்ச்சி அடைகிறார், நல்லதுதான்! ஆனால், பழைமையைப் பாதுகாத்திடத் துடிக்கின்ற இவரது எழுத்துகளை சு.ரா. படித்திட நேருகின்ற பொழுது, கைக் கொட்டி அவர் சிரித்திட மாட்டாரா ?

அதே நேரத்தில், எந்த வித மாற்றமும் இல்லாமல் அப்படியே பழைமை நீடித்துக் கொண்டு வந்திட வேண்டும் என்று வாதிடுகின்ற இவருக்கும் என்றும் மாறாதது என்று ஹிந்துத்துவத்தை வரையறுத்துக் கொண்டு வந்து இருப்பவர்களுக்கும் இடையேதான் எவ்வளவு நெருக்கமான ஒற்றுமை!

விஷ்ணு புரத்திற்கு வழி

ஜெய மோகனின் ‘விஷ்ணு புரத் ‘தில் பெருந் தெய்வமாகச் சித்தரிக்கப் பட்டு இருப்பவர் விண்ணவர், அதாவது, விஷ்ணு! இந்த விண்ணவர் புரண்டு படுக்கின்ற பொழுது, சமுதாயத்தில் புரட்சி கரமான மாற்றங்கள் ஏற்பட்டு விடும் என்பது போன்ற ஓர் எதிர் பார்ப்பிற்கு இடையேதான் ‘விஷ்ணு புரம் ‘ நகர்கிறது.

அதே நேரத்தில், பெருந் தெய்வமான விண்ணவரை வெற்றி கொள்பவரோ, சிறு தெய்வமான ‘நீலி அம்மன் ‘தாம் ஆவர்! இந்த நீலி அம்மனோ பழங் குடி மக்களின் சிறு தெய்வம்!

சிவகாமிக்கும் ஜெய மோகனுக்கும் இடையேதான் எவ் வளவு பெரிய ஒற்றுமை! எனினும், ஒன்றாக இணைந்து இவர்கள் செயல் ஆற்றிட முடியாததற்கு, புனைவுச் சந்தையின் போட்டிகள்தாம் காரணம் போலும்!

ஆக, சிவகாமியின் ஆட்டினது வயிற்றின் வழியாக—-நீலி அம்மனின் துணியுடன்—- விஷ்ணு புரத்திற்குள் நாம் நுழைந்து இருக்கிறோம். அதன் பர-பரப்பினை இனி நாம் பார்ப்போம்.

11-09-2004

(தொடரும்)

Series Navigation

சோதிப் பிரகாசம்

சோதிப் பிரகாசம்