நேசகுமார்களுக்கு நேசமுடன்

This entry is part [part not set] of 39 in the series 20041028_Issue

நாகூர் ரூமி


முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறுதித் தூதர் என்பது முஸ்லிம்கள் அடிப்படையான நம்பிக்கை. அப்படி ஒரு விஷயமே திருக்குர்ஆனில் இல்லை என்றும், ‘இந்த வாசகம் திருக்குர்ஆனில் எந்தவொரு இடத்திலும் இடம் பெறவில்லை என்பதை வசதியாக (நாகூர் ரூமி) மறைத்து விடுகிறார் ‘ என்றும் திரு.நேசகுமார் எனது நூலின் மீதான அவரது ‘பார்வை ‘யில் கூறுகிறார்!

அல் அஹ்ஸாப் என்ற திருக்குர்ஆனின் 33வது அத்தியாயத்தின் 40வது வசனத்தில் முஹம்மது நபியைப் பற்றிச் சொல்லும்போது, ‘வ லா கின் ரஸூலல்லாஹி வ ஹாத்தமன் நபிய்யீன் ‘ என்று அல்லாஹ் கூறுகிறான். ‘அவர் இறைவனின் தூதரும், நபிமார்களில் இறுதியானவரும் ஆவார் ‘ என்று அதற்கு அர்த்தம். ‘ஹாத்தமன் நபி ‘ அல்லது ‘காத்தமன் நபி ‘ என்று தமிழில் எழுதுவார்கள். முஸ்லிம் சிறுவர்களுக்குக்கூட இந்த ‘காத்தமன் நபி ‘ விஷயம் தெரியும்.

தான் இறுதி நபி, தனக்குப் பிறகு நபி யாரும் கிடையாது என்று நபிகள் நாயகமே அறிவிக்கின்ற ஹதீதுகள் ஆதாரப் பூர்வமான தொகுப்புகளான புகாரி, முஸ்லிம், திர்மிதி போன்றவற்றில் உள்ளன.

இருப்பது இல்லாததாகவும், இல்லாதது இருப்பதாகவும் திரு. நேசகுமாரின் பார்வையில் பட்டிருப்பது ஏன் ?

திரு நேசகுமார் ஏற்கனவே மரத்தடியில் திருக்குர்ஆனின் வசனங்களுக்கு அவருடைய சொந்த வியாக்கினாங்கள் கொடுத்திருந்தார். நண்பர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதியதற்குப் பிறகு அவ்விளக்கங்கள் நின்று போயின.

திருக்குர்ஆனைப் பொறுத்தவரை, மூல மொழியில் இருப்பதுதான் குர்ஆனாகும். மொழிபெயர்ப்புகளை முஸ்லிம்கள் குர்ஆன் என்று ஒத்துக்கொள்வதில்லை.

அரபி பண்டிதர்களே அர்த்தம் குறித்து வாதிட்டுக் கொண்டிருக்கிறார்கள்! இந்த நிலையில் அரபி மொழியில் ‘அலிஃப், பே ‘ (அகரம்) கூட தெரியாமல் குர்ஆனின் வசனங்களுக்கு அர்த்தம் இப்படித்தான், அப்படித்தான் என்று வாதிடுவதைப் போல ஒரு நேசகுமார்த்தனமான செயல் வேறெதுவும் இருக்க முடியாது!

திருக்குர்ஆனின் அர்த்தங்களில் சந்தேகம் கொள்பவர்கள் யாராக இருந்தாலும், தெரிந்தவர்களிடம் இப்படித்தானா என்று கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டும். அதுதான் முறை. அதைவிட்டுவிட்டு, இப்படித்தான் அப்படித்தான் என்று வாதிடுவதற்குக் காரணம் அறியாமையாக இருக்க வேண்டும் அல்லது திரு. நேசகுமாருக்கு வேறு ஏதாவது நோக்கமிருக்க வேண்டும். ‘ஆன்லைன் ‘ மொழிபெயர்ப்பு மத்ரஸாக்கள் மூலமாக (!) இஸ்லாத்தைப் பயில்வதில் இதுபோன்ற அபாயங்கள் நிறையவே உண்டு.

இறுதி நபி பற்றி திருக்குர்ஆனில் சொல்லவே இல்லை என்று அவர் தவறாகப் புரிந்துகொண்ட மாதிரியானதுதான் அவரது முழு கட்டுரையும். அவரின் ஒவ்வொரு வாதமும் தவறு என்று என்னால் நீருபிக்க முடியும். ஆனால் அதை நான் செய்வதைவிட, என் நூலைப் படித்துப் பாராட்டிய அறிஞர்களும் நண்பர்களும், மேலும் இஸ்லாத்தை சரியாகப் புரிந்து கொண்ட அனைவருமே செய்ய முடியும் என்றும், செய்வார்கள் என்றும் நம்புகிறேன்.

இந்த உலகின் எந்த மூலையில் யார் அட்டூழியம் செய்தாலும், கொலை, கொள்ளை, கற்பழிப்பு, குண்டு வைப்பு என்று எந்தவிதமான வன்முறையில் ஈடுபட்டாலும் அது குற்றமே. ஆனால் முஸ்லிம்கள் என்ற பெயரில் சில அயோக்கியர்கள் அதைச் செய்யும்போது அதற்கு அல்லாஹ்வையும் திருக்குர்ஆனையும் நபிகள் நாயகத்தையும், இஸ்லாமிய வரலாற்றையும் காரணம் காட்டவேண்டாம். ஏனெனில் அவற்றில் அப்படி ஏதும் இல்லை என்பதைத் தெளிவு படுத்துவதுதான் என் புத்தகத்தின் நோக்கம். நானாக எதையும் கற்பனையாகக் கூறவில்லை. எல்லாமே வரலாற்றின் ஒளியில் நடந்த சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்டது.

எனது நூலைப் படித்துப் பாருங்கள். நிச்சயம் நான் சொல்வது உண்மை என்று புரியும்.

அன்புடன்

நாகூர் ரூமி

ruminagore@gmail.com

http://www.tamiloviam.com/rumi

http://abedheen.tripod.com/nagorerumi.html

Series Navigation

நாகூர் ரூமி

நாகூர் ரூமி