கீதை,வர்ணம் : விளக்கங்கள், வியாக்கியானங்கள், விமர்சனங்கள் – ஒரு குறிப்பு

This entry is part [part not set] of 46 in the series 20041014_Issue

K.ரவி ஸ்ரீநிவாஸ்


1

பகவத்கீதையைப் பற்றிய சர்ச்சை எழுந்தாலும் எழுந்தது, ஜெயமோகனும், அரவிந்தன் நீலகண்டனும் இது இன்னொரு வாய்ப்பு என்று புதிதாக விஷமப் பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டனர்.இவர்கள் இருவரும் கீதையின் அந்த சர்ச்சைக்குரிய பகுதிக்கு இவர்கள் கூறும், மேற்கோள் காட்டும் ஒரே விளக்கம்தான் உள்ளது போல் எழுதுகின்றனர். கீதையை விமர்சிப்போர் தங்கள் மனம் போன போக்கில் அதை விளக்குகிறார்களா அல்லது எந்த உரையின் அல்லது உரைகளின் அடிப்படையில் அவ்வாறு கூறுகிறார்களா என்பதைப் பற்றி ஏன் எழுதவில்லை. ஜெயமோகன், அரவிந்தன் நீலகண்டன் அந்தப்பகுதிக்கு பல விளக்கங்கள் உள்ளன, அவற்றில் உள்ள கருத்து வேறுபாடுகள் எவை, ஏன் இத்தகைய முரண்படும் விளக்கங்கள் தரப்படுகின்றன என்பதினை விளக்கி எழுதியிருந்தால் உண்மை வெளியாகியிருக்கும். அதைச் செய்துவிட்டால் அப்புறம் திண்ணையில் ‘கீதை மகா ஞான யாகம் ‘ நடத்தி, விற்பனர்களாக காட்டிக்கொள்ள முடியாதே. பெரியாரைத் திட்ட முடியாதே, இதுதான் இவர்களின் அறிவார்ந்த நேர்மையின் தரம். கீதையை விமர்சிப்பவர்கள் மேற்கோள் காட்டும் உரை அல்லது உரைகள் என்ன, அவை யாரால் எப்போது முன்வைக்கப்பட்டது என்பதை எழுதியிருக்கலாமே. இல்லை கீதையை விமர்சிப்பவர்கள் எந்த உரையையும் படிக்காமல் தாங்களாக பொருள் கூறுகிறார்கள் என்றாவது எழுதியிருக்கலாமே.

ஜெயமோகன் சில உரைகளை நிராகரிப்பார். அது அவர் கருத்து. ஆனால் பல விளக்கங்கள் உள்ள நிலையில் ஒருவர் கீதை வருணாசிர தர்மத்தை, பிறப்பின் அடிப்பினடையினாலான பாகுபாட்டை நியாயப்படுத்தும் விளக்கம் உள்ளது என்று அந்த விளக்கத்தின் அடிப்படையில் கீதையை நிராகரித்தால்

அவருடைய புரிதலை முற்றிலும் தவறு என்று கொள்ள முடியாது. கீதை குறித்து காஞ்சிப் பெரியவர் என்ற காஞ்சி சங்கராச்சாரியார் மிக நீண்ட விளக்கம் தந்துள்ளார். அதில் அவர் பிறப்பின் அடிப்படையில் என்றே பொருள் கொள்கிறார். மேலும் இதனையும் ஜாதி அமைப்பினையும் தொடர்புபடுத்திப் பேசுகிறார். நவீன விமர்சகர்களின் கருத்தினை தான் ஏற்க முடியாது என்பதை விளக்குகிறார். இதன் அடிப்படையில் கீதை வருணாசிரமத்தை, பிறப்பின் அடிப்படையிலான ஜாதிப்பிரிவினை நியாயப்படுத்தும் நூல். அப்படியானால் பிரச்சினை கீதையை விமர்சிப்போர் கூறுவதில் இல்லை, ஏனெனில் அவர்கள் கீதைக்குத் தரப்பட்டுள்ள விளக்கத்தின் அடிப்படையில் அதைக் கூறலாம். அவர்களாக கீதையை உரை எழுதி இதைக் கூற வேண்டிய

தேவையில்லை. எனவே ெ ?யமோகனும், அரவிந்தன் நீலகண்டனும் விமர்சிக்க வேண்டியது காஞ்சி சங்காரச்சாரியார் கருத்தினை. அது போன்ற விளக்கங்களை. எந்தக் காலத்திலோ சொல்லப்பட்டவை இவை

என்று பதில் சொல்லி நழுவ முடியாது. ஏனெனில் இதற்கான ஆதாரம் இன்று காஞ்சி மடத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் உள்ளது. www.kamakoti.org

இந்த உண்மையை ஏற்றால் கீதையை குறுக்கியது, குறுக்குவது திராவிட இயக்கம் என்று கூற முடியாது. ஏனெனில் கீதையின் அப்பகுதிக்கு முரண்படும் விளக்கங்கள் உள்ளன.சில ஜாதிய அமைப்பினையும், வருணாசிரம தர்மத்தினையும் நியாயப்படுத்துகின்றன. அதன் அடிப்படையில் கீதையின் விமர்சகர்கள் விமர்சித்தால் அவர்களை குற்றம் சொல்ல முடியுமா. ஜெயமோகனும், அரவிந்தன் நீலகண்டனும் எப்படி எழுதியிருக்க வேண்டும் – இத்தகைய விளக்கங்கள் தவறு, இவை கீதைக்கும், இந்து மதத்திற்கும், இந்து மத சிந்தனைக்கும் அவப்பெயரினை ஏற்படுத்துகின்றன. இதன் அடிப்படையில் கீதையை கடுமையாக விமர்சிக்கவும், நிராகரிக்கவும் உதவுகின்றன. எனவே கீதையை விமர்சிப்பவர்களை விட இவர்கள் கருத்தே

கடும் கண்டனத்திற்குரியது. இப்படிப்பட்ட கருத்தினை வெளியிட்டிருந்தால் நான் அவர்களின் அறிவார்ந்த நேர்மையை பாராட்டியிருப்பேன். அவர்கள் நோக்கம் இவ்விவாதத்தில் பல தரப்புக் கருத்துக்களை, அதாவது கீதையின் அப்பகுதிக்கு தரப்பட்டுள்ள பல வியாக்கியானங்களை முன்வைப்பதல்லவே. திராவிட இயக்கம் மீது வசைபாடுவதே அவர்கள் நோக்கம். கீதைக்கு இப்படி விளக்கமளித்த சங்காராச்சாரியார் மீது இது குறித்து ஆர்.எஸ்.எஸ். எப்போதாவது விமர்சனம் முன்வைத்ததுண்டா இல்லை இந்த விளக்கம் கண்டனத்துக்குரியது என்றாவாது சொன்னதுண்டா, அரவிந்தன் நீலகண்டன் இது குறித்து விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்க்கலாமா.

சங்கராச்சாரியார் விளக்கம் கொடுத்தது யார் என்ற பெயர் குறிப்பிடாமல் கீதையின் இப்பகுதிக்கான ‘நவீன ‘ விளக்கங்களை காரணங்கள் குறிபிட்டே நிராகரிக்கிறார். மிக நீண்ட விளக்கத்தினை முன் வைக்கிறார். எனவே ஜெயமோகனோ, அரவிந்தன் நீலகண்டனோ அதை எளிதில் ஒதுக்கிவிட முடியாது.

முடிந்தால் ஆதி சங்கரர் தந்த விளக்கத்திலிருந்து இவர் முரண்படுகிறார் என்று நிரூபிக்கட்டுமே.

கீதாப் பிரஸ் , கோரக்பூர் வெளியிட்டுள்ள உரை மிக பிரபலமானது, பல மொழிகளில் கிடைப்பது. பல ஆண்டுகளாக அது அச்சில் உள்ளது. அதன் கருத்துடன் ஒருவர் முரண்படலாம். அதே சமயம் கீதை வருணாசிரம தர்மத்தினை நியாயப்படுத்தும் நூல் என்ற கண்ணோட்டம் ஒரே ஒரு உரையின் அடிப்படையில்

உருவானது என்று கருத முடியாது. மேலும் அந்நூலில் இத்தகைய கண்ணோட்டம்த்தினை முன்னிறுத்த வேறு சான்றுகள் உண்டா என்று பார்க்க வேண்டும்.

கீதை ஒரு உரையாடல் என்று சொல்வதை விட ஒரு உபதேச நூல் என்று சொல்வதே பொருந்தும். கிருஷ்ணர் நான் சொல்கிறேன், நீ கேள் என்ற தொனியில்தான் பல இடங்களில் கூறுகிறார். மேலும் இங்கு

அர்ஜுனன் ஒரு நண்பனாக, ஒரு தோழனாகப் பேசுவதைவிட பல தருணங்களில் குழப்பதில்லுள்ள, தெளிவைத் தேடும் அல்லது வேண்டும் ஒரு சீட மனோபாவத்தில் பேசுவதை நாம் அவதானிக்க முடியும். அவர்

வெளிப்படுத்தும் அச்சங்கள், சந்தேகங்கள் பல. கிரு ?ணருக்கு கீதாச்சார்யன் என்ற பெயருமுண்டு. வைணவர்கள் இதை அடிக்கடிப் பயன்படுத்துவர். எனவே கீதையில் கண்னன் உரையாடவில்லை, உபதேசிக்கிறான் என்று சொல்வதே சரி. உரையாடல்கள் கூட உபதேசத்தினை நோக்கியே நகர்கின்றன. கீதையில்

வாதம் உள்ளது, அது சம நிலையில் இருவருக்குமிடையே உள்ள வாதமல்ல.

கவியோகி வேதம் எழுதியுள்ள கடிதம் இன்னும் வேடிக்கை. அவருக்கு கீதையின் இப்பகுதிக்கு பல விளக்கங்கள் உள்ளன, அதுதான் இந்த சர்ச்சைக்கு மூலம் என்பது கூட தெரியாதா. தெய்வத்தின் குரலை ‘புரிந்து கொள்ளாமல் ‘ தெய்வத்தினை வணங்கினால், தெய்வத்தினைப் பற்றி நூல் எழுதினால் இப்படித்தானாகும். நான் சொல்வது அவருக்குப் புரிகிறதோ இல்லையோ பலருக்குப் புரியும் என்று நினைக்கிறேன்.

2

மூல நூல்களின் தேவை குறித்து ஜெயமோகன் எழுதியுள்ளதற்கும், மத அடிப்படைவாதிகள் கூறுவதற்கும் வேறுபாடு அதிகமில்லை. Truth is a pathless land என்று கூறி அமைப்பினை கலைத்தவர் அவர் பார்வையில் முட்டாளாக இருக்கலாம். சுருக்கமாகச் சொன்னால் அவருடைய கண்ணோட்டத்தில் பெரும்பான்மையோரால் செயல்கள் குறித்து சிந்தித்து தாங்களாக அதற்கு பொறுப்பேற்றுக் கொள்ளவோ இயலாது. அதற்காக மூலநூல்கள் வேண்டும். சரி அந்த மூல நூல்களுக்கு முரண்படும் வியாக்கியானங்கள், விளக்கங்கள் உள்ளனவே. அப்போது என்ன செய்வது. யோசிக்காமல் நீ சார்ந்துள்ள அமைப்பு என்ன சொல்கிறதோ அதைச் செய் என்பாரா. திருச்சபை கருக்கலைப்பு கூடாது, விவிலியத்தின் படி அது பாவம். இதை ஏற்கிறாரா ஜெயமோகன், இல்லை அது பாபமில்லை என்று இன்னொரு விளக்கம் இருக்கிறது என்று சிலர் சொன்னால், இரண்டில் எதை ஏற்பார். இன்றும் ஹோமோசெக்சுவல்கள் மீதான வெறுப்பினை நியாயப்படுத்த

மூல நூல்களின் வாசகங்கள்தான் பெருமளவுக்கு பயன்படுத்தப்படுகின்றன. அப்படியானால் இது சரி என்கிறாரா. அவருடைய பார்வையில் மேட்டிமைத்தனமும், மக்களில் பெரும்பான்மையோரால் சிந்திக்க முடியாது என்ற கருத்தும் தெளிவாக உள்ளது. இப்படி எழுதுபவர் நாளை இந்தியாவில் அனைவருக்கும் வாக்குரிமை கொடுத்தது தவறு என்றும் எழுதக்கூடும். அவர் முன்வைத்துள்ள தர்க்கத்திற்கு அது ஒத்து வரும். இதை நான் சுட்டிக்காட்டினால் சிலருக்கு கோபம் வரலாம். வெப் உலகம்

தளத்தில் இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் குறித்து ஒரு விமர்சனம் உள்ளது.#1 அது குறித்து ஜெயமோகன் ஏதாவது எழுதியுள்ளாரா.

என்னைக் கேட்டால் ஜெயமோகன் இப்படி தத்துவம், மெய்ஞானம் என்றெல்லாம் எழுதாமல் ‘மூல நூல்களை ‘ ‘மூடர்களுக்கு ‘ விளக்க ‘பாபிகளுக்கு கொதிக்கும் எண்ணைக் கொப்பரைகள், புண்ணியாத்மாக்களுக்கு தேவலோக சுந்தரிகளின் ‘ நடனங்கள் திரைப்படங்கள் எடுத்து எது நல்லது, எது கெட்டது என்று விளக்கலாம்.

மற்றப்படி இந்த இரு கட்டுரைகள் மீது எனக்கு இன்னும் விமர்சனங்கள் உண்டு. விரிவஞ்சி இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

#1 www.webulagam.com/literature/longstories/0406/22/1040622003_1.htm

Series Navigation