பூரணம்

This entry is part [part not set] of 46 in the series 20041014_Issue

ரா.கோபிநாதன்


பல வருடங்களுக்கு முன், பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில், ஒரு தமிழ்ப் பத்திரிகையில், ஒரு சமஸ்கிருத சுலோகமும் அதற்கான விளக்கமும் கண்டேன். சுலோகம் மறந்துவிட்டது. ஆனால் அதன் விளக்கம் மட்டும் நினைவில் உள்ளது – ‘தோற்றதுக்கு வராமலிருப்பது பூரணம். தோற்றதுக்கு வந்திருப்பதும் பூரணமே. பூரணத்திலிருந்து பூரணம் வந்த பின்னும் பூரணம் பூரணமாகவேயிருக்கிறது. ‘

பள்ளியில் இயற்பியலில் ‘Energy can neither be created nor destroyed, but can be transformed from one form to another ‘, என்று படித்தபோது, இந்த விதிக்கும் மேற்கண்ட சமஸ்கிருத சுலோகத்துக்கும் உள்ள ஒற்றுமையை எண்ணி வியந்தேன்.

சில வருடங்களுக்கு முன்னர் சென்னை திருவொற்றியூரில் உள்ள வடிவுடையம்மன் கோவிலில், படம்பக்க நாதர் என்றும் புற்றிடம் கொண்டார் என்றும் அழைக்கப்படும் சிவன் குடிகொண்டுள்ள சன்னிதிக்கு வெளிப்புறம் உள்ள தக்ஷிணாமூர்த்திக்கு அருகில் கீழ்க்கண்ட பாடலைக் கண்டேன்.

கல்ஆலின் புடைஅமர்ந்து நான்மறையாரங்க முதற்கற்ற

கேள்விவல்லார்கள் நால்வருக்கும் வாக்கிரந்தபூரணமாய் மறைக்கப்பாலாய்

எல்லாமாய் அல்லதுமாய் இருந்தனை இருந்தபடி இருந்துகாட்டிச்

சொல்லாமல் சொன்னவரை நினையாமல்நினைந்து பவத்தொட்கை வெல்வாம்

[இதைப் படித்துப் பல வருடங்கள் ஆகிவிட்டபடியால், மேற்கண்ட வரிகளில் பிழைகளிருக்க வாய்ப்புள்ளது. மன்னிக்கவேண்டும்.]

இதில் ‘பூரணமாய் மறைக்கப்பாலாய் எல்லாமாய் அல்லதுமாய் இருந்தனை ‘ என்ற வார்த்தைகளைக் கவனிக்கவும். வேதங்கள் இறைவனைப் பற்றி விளக்க முற்படுகின்றன. சரி, பரம்பொருள் எல்லையற்றவன், எங்கும் நிறைந்தவன். அவனை நமக்குப் புரியும்படியாக, நமக்குப் பழக்கப்பட்ட மொழியில் விளக்க முற்படும்போது, எல்லையற்ற அந்த பரம்பொருளை ஒரு எல்லைக்குள் கொண்டுவந்து விடுகிறோமே ? நமக்குத் தெரிந்த விஷயங்களை உவமையாகக் கொண்டு ‘ இறைவன் இப்படி, இறைவன் அப்படி ‘ என்றெல்லாம் சொல்வோமானால், ‘நம்மால் சொல்லப்படாமல் இருக்கும் அந்த மற்ற விஷயங்கள் எல்லாம் இறைவன் இல்லையா ? ‘ என்ற கேள்வி வரும். எனவேதான் அவன் அந்த வேதங்களுக்கும் அப்பாற்பட்டவன் என்பதை உணர்த்த ‘மறைக்கப்பாலாய் ‘ என்று பாடி வைத்திருக்கிறார்கள். நாம் காண்கின்ற பொருள்களெல்லாம் அவனே என்பதை உணர்த்த ‘எல்லாமாய் ‘ என்று சொன்னார்கள். அப்படியானால் ‘நாம் காணும் இவை தவிற மற்றவை இறைவன் இல்லையா ? ‘ என்ற சந்தேகம் வருமே என்பதால் அவன் அந்தப்பொருள்களுக்கும் அப்பாற்பட்டவன், இவையல்லாமலிருக்கும் மற்றவையும் அவனே என்பதையுணர்த்த ‘அல்லதுமாய் இருந்தனை ‘ என்றார்கள்.

வேறொரு சமஸ்கிருத சுலோகம்

‘ஜலே விஷ்ணு ஸ்தலே விஷ்ணு விஷ்ணுராகாச முச்யதே

ஸ்தாவரம் ஜங்கமம் விஷ்ணு சர்வம் விஷ்ணு மயம் ஜகத் ‘

என்கிறது. அதாவது நீரும், நிலமும், ஆகாயமும், தாவரங்களும், உயிர்களும் எல்லாமே விஷ்ணு மயம்தான் என்பது பொருள். விஷ்ணு என்ற சொல்லுக்கே எங்கும் நிறைந்தவர் என்பது பொருள்.

இனி அபிராமிப் பட்டர் பாடிய அபிராமி அந்தாதியிலிருந்து ஒரு பாடலைப் பார்ப்போம்.

கிளியே! கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும்

ஒளியே! ஒளிரும் ஒளிக்கு இஇடமே! எண்ணில் ஒன்றுமில்லா

வெளியே! வெளிமுதல் பூதங்களாகி விரிந்த அம்மே!

அளியேன் அறிவளவிற்கு அளவானது அதிசயமே!

‘கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும் ஒளி ‘யாக இருப்பவள் அபிராமி. சரி, அப்படியானால் அந்த ஒளி பிரகாசிக்கும் இடம் அந்த அபிராமிக்கு அன்னியமானதா என்று கேட்டால், இல்லை, அவளேதான் அந்த ஒளிக்கு இடமாகவுமிருக்கிறாள். அனைத்தும் தோன்றும்முன் வெறும் வெளியாக [space] இருந்த அவளே பின் [பூதங்களாகி விரிந்த – பஞ்சபூதங்களகி விரிந்த] யாவுமானாள் என்ற மேற்கண்ட பாடலின் கருத்துக்கும், எப்படி பிரபஞ்சம் தோன்றியது என்பது பற்றி விஞ்ஞானிகள் சொல்லும் கருத்துக்கும் உள்ள ஒற்றுமை நமக்கு வியப்பைத் தருகிறது.

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்

மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்

கருவாய் உயிராய் கதியாய் விதியாய்

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

என்ற கந்தரனுபூதிப்பாடலில் வரும் ‘உருவாய் அருவாய் உளதாய் இலதாய் ‘ என்ற வரி உணர்த்துவதும் இதுவே.

இப்போது மேலே சொல்லப்பட்ட விஷயங்கள் எப்படி ஒன்றோடு ஒன்று தொடர்புள்ளவையாகவுள்ளன என்பது நமக்குத் தெளிவாகிறது. எங்கும் நிறைந்த அந்த இறைவன் என்ற பேராற்றல்தான் இங்கே நாம் காணும் யாவுமாக வந்திருக்கிறான். இவை, இவையாக தோற்றம் பெறும் முன் எவையாக இருந்தனவோ அவையாகவும் அவனே இருந்தான். இப்போது இவையாக இருப்பதும் அவனே. இனி இவை இத்தோற்றத்தினின்றும் நீங்கி வேறு தோற்றம் பெறினும் அப்போதும் அவையாக இருக்கப்போவதும் அவனே. அவனிடமிருந்து வந்தோம். நாம் மட்டுமல்ல, நாம் காணும் அனைத்துத் தாவரங்களும், விலங்குகளும், சகலமும் அவனிடமிருந்தே வந்தன. இன்னும் சொல்லப் போனால், எல்லாம் அவனிடமே இருக்கின்றன, அவனுக்குள்ளேயே இருக்கின்றன. அவனிடமிருந்து இவையெல்லாம் வந்தபின்னும் இவை அவனாகவே, அதாவது, அவனின் ஒரு பகுதியாகவே இருக்கின்றன. எனவே அவனிடமிருந்து இவையெல்லாம் வந்தபின்னும், அவனுக்குக் குறைவெதுவுமில்லை. இதையே ‘தோற்றதுக்கு வராமலிருப்பது பூரணம். தோற்றதுக்கு வந்திருப்பதும் பூரணமே. பூரணத்திலிருந்து பூரணம் வந்த பின்னும் பூரணம் பூரணமாகவே இருக்கிறது. ‘ என்பதும் விளக்குகிறது.

—-

gopinathan_rs@yahoo.com

Series Navigation

ரா.கோபிநாதன்

ரா.கோபிநாதன்

பூரணம்

This entry is part [part not set] of 50 in the series 20040226_Issue

நட்சத்ரன்


நாற்காலியில்
எதிரெதிரே அமர்ந்து
பேசிக்கொண்டிருக்கிறோம்
உன் இதழ்வரிகளை நானும்
என் இதழ்வரிகளை
நீயுமாய்ப் படித்தபடி

பின்
உன் புருவ நேர்த்தியை
நானும்
என்னதை நீயுமாய்
கண்களால் சிலாகித்திருக்கிறோம்

எங்கெங்கோ போய்த்திரும்புகிறது
நம் பேச்சு
அவசியமற்று

கடந்துகொண்டேயிருக்குது
காலம்

நமக்கும் விழத்தான் செய்கிறது
நரை

என்றபோதும்
நாம்
பூரணமாய் வாழ்ந்துவிட்டதாய்
பூரித்திருக்கிறோம்
நம் இமைகளின் அசைவை
எண்ணியபடிக்கு.
நிலாப் பசி

-நட்சத்ரன்

பாயில்
வானம்பார்த்துப் படுத்திருக்கிறேன்

சதா நகர்ந்தபடியிருக்கின்றன
மேகக்கூட்டங்கள்

அவற்றுள்
ஒளிந்து ஒளிந்து
விலகிக்கொண்டிருக்குது
நிலவு

புளியமரக் கிளைகளில்
கும்பலாய் மொய்த்தபடியிருக்கின்றன
மின்மினிப் பூச்சிகள்

சமையற் கட்டில்
அடுப்பூதிக்கொண்டிருக்கிறாள்
அம்மா

கடைத்தெருபோன
அப்பா
இன்னும் திரும்பவில்லை

நல்லா வாய்பிளந்து
தூங்கிக் கிடக்கிறான்
தம்பி:
அவன் முகத்தில் வழிகிறது
பால்நிலா

வீட்டினுள்ளிருந்து
சூடாய் வெளியேறுது
அடுப்புப் புகையும்
அம்மா வைக்கும்
புளிக்குழம்பு வாசமும்

எனக்கு
பசி வயிற்றைக் கிள்ளுது

கடைத்தெருவிலிருந்து
திரும்பிவருகிறார் அப்பா
லேசாய் இருமியபடி

அவர் கையில் ஒரு
பிரிட்டானியா பாக்கெட்

உனக்குப்பாதி
தம்பிக்குப் பாதி என்று
என்னிடம் நீட்டுகிறார்

இல்லப்பா காலையில்
தம்பியோடயே தின்னுக்கிறேன்
என்கிறேன்
பாக்கெட்டைக் கையில் அணைத்தபடி

இப்போது எனக்குப்
பசிக்கவேயில்லை.

—-
natchatran@yahoo.com

Series Navigation

நட்சத்ரன்

நட்சத்ரன்