சமூக விரோதியாகிய கார்

This entry is part [part not set] of 45 in the series 20040916_Issue

என் எஸ் நடேசன்


அவுஸ்திரேலியாவுக்கு வந்து இருவருடங்களில் ‘ஹொண்டா ‘ ரகத்தில் ஒரு பழைய காரை வாங்கினேன். அந்தக் காருக்கு ‘சுப்பர் ரக ‘ பெட்ரோல் தான் விடவேண்டும் எனக் கூறப்பட்டது. பெற்றோல் நிலையங்களில் ‘சுப்பரின் ‘ விலை குறைவாகவும் unleaded பெற்றோலின் விலை அதிகமாகவும் இருந்தது. இந்த பெற்றோல்களின் சூக்குமத்தை தெரிந்து கொள்ள விரும்பவில்லை. நமக்குத் தெரியாத விடயங்களில் அறிவை விருத்தி செய்யும் ஆசையும் இல்லை.

ஒருநாள் எனது ஹொண்டா காரின். வானொலியூடாக வந்த தகவல் நெருஞ்சி முள்ளுப் போல் தைத்தது.

‘ ‘பாரிய நகரங்களில் காற்றில் உள்ள ஈயம் சுவாசத்தின் மூலம் இரத்தத்தில் கலக்கிறது. இந்த ஈயம் சிறுகுழந்தைகளின் மூளைவிருத்தியைப் பாதிக்கின்றது. காற்றில் உள்ள ஈயத்தின் பெரும்பகுதி பெற்றோலியத்தை எரிபொருளாக பாவிக்கும் வாகனங்களில் இருந்து உற்பத்தியாகிறது. வெகுவிரைவில் சுப்பர் பெற்றோலை பாவிக்கும் மோட்டார் கார்கள் இல்லாதொழிக்கப்படும். ‘ ‘

எனது ஹொண்டாக் கார் சமூகவிரோதியாக பிரகடனப்படுத்தப்பட்ட போதும்., அதனைப் பலகாலம் பிரிய முடியாமல் இருந்தது, கார் வாங்கிய சிலமாதங்களில் மிருகவைத்தியராக போட் பெயரி (Port Pirie) என்ற சிறு பட்டணத்தில் வேலை கிடைத்தது, இது எனது முதல் வேலை என்றபடியால் குடும்பத்தைப் பிரிந்து ஆயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் எனது காரில் சென்றேன். அடிலயிட்டுக்கு இருநூறு கிலோமீட்டர் வடக்கே உள்ள இந்த நகரத்துக்கு செல்லும் வழி வெறுமையானது. சனத்தொகை மிகக் குறைந்த பிரதேசம். இப்படியே சில நூறு கிலோமீட்டர் சென்றால் அவுஸ்திரேலிய ‘சிம்சன் ‘ பாலைவனம் வரும்.

வாகனத்தில் செல்லும்போது பாரிய வெளிகளும் ஒருசில மரங்களும் தென்படும். வெயில் காலத்தில் பசுமை அற்று தீ இட்டு எரிக்கப்பட்ட இடம் போல் கண்ணுக்கு எரிச்சல் ஊட்டும் நில அமைப்பைக் கொண்டது.

‘ ‘போட் பெயரி ‘யில் பல்இன மக்களைக் கொண்ட சிறு நகரம். இங்குதான் உலகத்திலேயே பாரிய ஈயம் உருக்கும் தொழிற்சாலை உள்ளது. நகரத்தின் பொருளாதாரம் இந்த தொழிற்சாலையை நம்பித்தான் உள்ளது.

இங்கிலாந்தில் இருந்து வந்த ரோபட்டின் மிருக வைத்திய சாலையில் உதவி வைத்தியராக நியமனம் கிடைத்தது. பகலில் உதவியாளராக இருப்பது இலகுவானது. ரோபட்டின் மேற்பார்வையில் வேலைசெய்வது, இரவு நேரங்களில் ஒன்றுவிட்ட ஒருநாள் (on call) வேலை செய்வதுதான் கடினமான காரியம்.

பசுக்கள் கன்றுபோட திணறுவதும், குதிரைகளுக்கு வயிற்று வலி வருவதும் எனது on call நேரத்தில் தான். போட்பெயரியின் பாரிய பிரதேசங்களில் பண்ணை வீடுகளைத் தேடுவதில் இரவுகள் கழிந்துவிடும். அமைதியான இரவு நேரங்களுக்காக ஏங்கித் தவிப்பேன்.

ஒருநாள் இரவு ஒருநாய்க்கு வலிப்பு வந்துவிட்டது. என் தொலைபேசி தகவல் வரவும் கிளினிக்குக்குச் சென்ேறுன். நான் போய் சேரவும், ஒரு பெண்மணி தனது நாயை கொண்டு வரவும் சரியாக இருந்தது,

சிறிய கூடையில் நாய் கிடத்தப்பட்டு இருந்தது, அவுஸ்திரேலியன் ரெரியர் இனத்தைச் சேர்ந்த நாய், கால்களையும் தலையையும் வேகமாக அசைத்துக் கொண்டு இருந்தது, காக்கா வலிப்பை நினைவுபடுத்தியது.

அவசரமாக கிளினிக்கின் கதவைத்திறந்து விட்டு, ஸ்ரெதப் கோப்பை எடுக்க உள்ளே ஓடிய போது பயங்கரமான சத்தத்தில் செக்கியூரிட்டி அலாம் அடித்தது.

அவசரத்தில் அலாமை நிறுத்தவில்லை.

திரும்பி வந்து அலாமை நிறுத்தினேன்.

மனிதார்களுக்கு வருவது போல் நாய்களுக்கும் வலிப்பு வருவதுண்டு. அப்படி நினைத்துக் கொண்டு உடல் வெப்பத்தை அளந்தேன். 41c ஆக இருந்தது.

நாயின் உரிமையாளருடன் சேர்ந்து நாயை குளிர்ந்த நீரில் குளிப்பாட்டியபடி ‘ ‘இப்படி முன்பு நடந்ததா ? ‘ ‘ என வினவினேன்.

‘ ‘இல்லை. இதுதான் முதல் தடவை ‘ ‘.

எதற்கும் ரொபட்டின் அபிப்பிராயத்தை கேட்பதற்காக தொலைபேசியை எடுத்து இங்கு ஒருநாய் வலிப்புடன் காய்ச்சலாக இருக்கிறது. என்ன காரணம் என நினைக்கின்றீர்கள் ? ‘ ‘ என்றேன்.

“அந்த நாய் மண்ணைக் கிளறிக் கொண்டு நின்றதா ? என்று அந்தப் பெண்ணிடம் கேள் ‘ ‘. என்றான்.” ரோபட்

நாய் நிலத்தைக் கிளறுவது சாதாரணமான நிகழ்ச்சிதானே என மனதுக்குள் நினைத்தாலும் சம்பளம் தருபவன் சொல்லுக்கு மதிப்புக் கொடுத்து அந்தப் பெண்ணிடம் கேட்டேன்.

‘ ‘இன்று முழுநாளும் நிலத்தைக் கிளறியபடிதான் நின்றது ‘ ‘ – என்றாள்.

இதைத் தொலைபேசியில் கூறியதும் ‘ ‘இது ஈயத்தால் ஏற்பட்டது (Lead poisoning). நான் வருகிறேன் ‘ ‘ என்றார். ஐந்து நிமிடத்தில் ரொபேட் வந்துசேர்ந்ததும் நாய்க்கு மயக்க மருந்து கொடுத்து பின்பு ஈயத்தின் எதிர்ப்பு மருந்தும் கொடுத்தோம்.

பெண்மணி எங்கள் பொறுப்பில் நாயைவிட்டுவிட்டு சென்றுவிட்டாள்.

எப்படி ஈயம் தான் காரணம் என்று தெரியும் ? என்றேன்.

‘ ‘அது பெரிய கதை. அவுஸ்திரேலியாவில் புரோக்கின்கில் இல் (Broken Hill) எடுக்கப்படும் ஈயத்தின் மூலப்பொருள் போட் பெயரிக்கு இரயிலில் வந்து இங்கு உருக்கப்படுகிறது. இங்கிருந்தே ஈயம் உலகெங்கும் சென்று பின் துப்பாக்கிக் குண்டுகளாக மாறுகிறது. சில காலத்துக்கு முன்பு ஈயத்தைப் பிரித்து எடுத்த கழிவுப் பொருட்களை வெளியே கொட்டி மண்ணால் மூடிவிட்டார்கள். இந்த இடங்களில் தற்போது வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

இப்பகுதியில் வளர்க்கப்படும் நாய்கள் தங்களுக்கு உணவாகத் தரப்பட்ட எலும்புகளை நிலத்தில் புதைத்துவிட்டு மீண்டும் கிண்டி எடுக்கும் போது மண்ணில் இருந்து ஈயக்கழிவுகளையும் கடித்துத் தின்பதால் ஈயத்தின் நஞ்சுத்தன்மை நாய்களுக்கு வலிப்பை ஏற்படுத்துகிறது.

‘ ‘குிதிரை தொழுத்தில் உள்ள ஈயம் கலந்த பெயின்ரை குதிரைகள் நக்குவதால் வயிற்றுவலி பேதி ஏற்படும் எனப் படித்திருக்கிறேன் ‘ ‘.

‘ ‘நானும் இங்கிலாந்தில் அப்படியான குதிரைகளை பார்த்திருக்கிறேன். நாய்களில் நஞ்சுத்தன்மை ஏற்படுவது போட்பயரிக்கு பிரத்தியேகமானது. ‘ ‘ எனக் கூறி ரோபட் விடைபெற்றான்.

ஈயம் துப்பாக்கிக் குண்டாக மட்டும் தான் மனிதர்களையும் மிருகங்களையும் பாதிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை எனத் தெரிந்துகொண்டேன்.

—-

uthayam@ihug.com.au

Series Navigation

என். எஸ். நடேசன்

என். எஸ். நடேசன்