மெய்மையின் மயக்கம்-16

This entry is part [part not set] of 41 in the series 20040909_Issue

சோதிப் பிரகாசம்


(சுரேஷின் மடலுக்கு ஜெய மோகனின் பதில் [26-02-2004] குறித்து…)

கோவை ஞானியின் பெருந் தன்மை

கோவை ஞானியின் நல் எண்ணத்திற்கு மட்டும் இன்றி அவரது பெருந் தன்மைக்கும் ஓர் அளவு இல்லை போலும்! ஞானியிசத்திற்கே உரிய—-

பொன்றாமை (இன்ஃபினிட்) மற்றும் நிலைவு (எற்றெர்னிட்டி) ஆன—-ஒரு பெருந்தன்மை இது! இந்தப் பெருந் தன்மையின் பெருமையினைச் சற்று நாம் அலசிப் பார்ப்போம்.

இயற்கைக்குள் தானும் தனக்குள் இயற்கையும் என மனிதன் வாழ்கிறானாம்! இவன்தான் கார்ல் மார்க்ஸ் கண்ட மனிதனாம்! இலக்கியத்தில் இந்த

மனிதனைத்தான் கோவை ஞானி தேடிக் கொண்டு வருகிறாராம்!

மனிதர்களை உற்பத்தி செய்து கொண்டு வருபவர்கள் கலைஞர்கள்தாமாம்! வறுமை, நோய்-நொடிகள், முதலிய நாசங்களுக்கு மனிதர்கள் உள்ளாகிறார்களாம்! அருத்தம் உள்ள ஒரு வாழ்க்கையைத் திரும்பவும் இவர்களுக்கு மீட்டுத் தந்திட வேண்டுமாம்!

கோவை ஞானியின் இந்தப் பெருந் தன்மையினைக் கண்டு வியக்காமலும்

மகிழாமலும் நம்மில் யாரேனும் இருந்திட முடியுமா ?

கவிஞர் இன்குலாப்பைக் கேட்டால், அவரோ கவிதையைத் தேடிக் கொண்டு இருக்கிறேன் என்கிறார்; கோவை ஞானியோ மனிதனைத் தேடிக் கொண்டு

வருகிறேன் என்கிறார்!

ஆனால், கவிதைக்கும் மனிதனுக்கும் இடையே உள்ள வேறுபாடு அல்ல, கவிஞர் இன்குலாப்புக்கும் கோவை ஞானிக்கும் இடையே உள்ள வேறுபாடு! ஏனென்றால், கிடைத்திட வில்லையே என்னும் கவலையில் கவிதையை இன்னும் தேடிக்

கொண்டு கவிஞர் இன்குலாப் வருகிறார் என்றால், கோவை ஞானியோ

மனிதனைத் தேடிக் கண்டு பிடித்து விட்டார், அதுவும், கார்ல் மார்க்ஸ் கண்ட

மனிதனை!

சரி! அந்த மனிதன் யார் ? எப்படிப் பட்டவன் அவன் ? எப்படி அவனை இவர் கண்டு பிடித்தார் ? என்று எல்லாம் கேள்விகளை நாம் எழுப்பிடத் தேவை இல்லை. ஏனென்றால், மிகவும் தெளிவாக அவனைப் பற்றி கோவை ஞானி கூறுகிறார்—-இயற்கையுள் தானும் தனக்குள் இயற்கையும் என வாழ்கின்ற மனிதன் அவன் என்று!

இந்த 21-ஆம் நூற்றாண்டில் கூட, இப்படி எல்லாம் எழுதி விட்டுத் தலையை

நிமிர்த்திக் கொள்கின்ற எழுத்தாளர்கள் தமிழ்ச் சூழலில் இருக்கிறார்கள் என்பது பெருமைப் பட்டுக் கொள்ளக் கூடிய ஒரு சிறிய விசயமா ? அல்லது வெட்கப் பட்டுக் கொள்ளக் கூடிய ஒரு பெரிய விசயமா ? என்பதுதான் நமக்குத் தெரிய

வில்லை.

மனிதனைத் தேடினேன்; அவனைக் கண்டு பிடித்து விட்டேன்; அவனது வாழ்வை

மீட்டுத் தருவேன்; என்பன போன்ற பான்மைகளைக் கார்ல் மார்க்சிடம் அணுவளவும் நாம் கண்டு விட முடியாது; இத் தகு சிறு பிள்ளைத் தனமான பான்மைக்கு அவரது சிந்தனையில் இடமும் கிடையாது! ஆனால், சிறு பிள்ளைத் தனமான தமது பெருந் தன்மையினை நமக்குக் கடை விரித்துக் காட்டி கோவை ஞானியோ பெருமிதம் அடைந்து கொள்கிறார்.

இயற்கையின் ஓர் அங்கம்தான் மனிதன் என்பதையோ வறுமையிலும்

நோய்-நொடிகளிலும் அவன் வாடிக் கொண்டு இருக்கிறான் என்பதையோ கண்டு பிடித்து இருப்பவர்கள் இன்று வரை உலகில் யாராவது இருந்து இருக்கிறார்களா ? என்றால், நிச்சயமாக இல்லை—-கோவை ஞானி ஒருவரைத் தவிர! என்று நாம் கருதிட வேண்டும் என்று ஒரு வேளை இவர் எதிர் பார்க்கிறாரோ ?

ஆனால், இப்படி எல்லாம் எழுதுவதற்கு வெட்கமாக இருக்காதா ? என்று கேட்பதற்குதான் நமக்குத் தோன்றுகிறது. எனினும், வெட்கத்தை விட்டுக் கோவை ஞானி எழுதுகிறார்—-அருத்தமுள்ள வாழ்வை இவர்களுக்கு மீட்டுத் தந்திட வேண்டும் என்று!

சரி! மற்றவர்களின் வாழ்க்கையை அவர்களுக்கு எப்படி இவர் மீட்டுத் தந்திட முடியும் ? தங்கள் வாழ்க்கையை மீட்டுக் கொள்வதற்கு அவர்களுக்குத் தெரியாதா ? அவர்கள் என்ன, முட்டாள்களா ?

பிறக்கின்ற ஒவ்வொரு மனிதனும் வளர்கிறான்; கல்வி கற்கிறான்; உழைக்கிறான்; பொருள் ஈட்டுகிறான்; கலியாணம்-காட்சி என்று ஒரு குடும்பத்தை அமைத்துக் கொள்கிறான்; இறுதியில், ஒரு நாள் மடிந்தும் போகிறான்.

இந்த வாழ்க்கை நிகழ்ப்பாட்டில், இடையில் புகுந்து அப்படி என்னத்தை இவனுக்குக் கோவை ஞானி மீட்டுத் தந்திடப் போகிறார் ? மார்க்சியச்

சிந்தனைக்கும் சிறு பிள்ளைத் தனமான இந்தப் பெருந் தன்மைக்கும் இடையே அப்படி என்னதான் ஒரு தொடர்பு ?

இப்படி எல்லாம் கேட்டு நமது புத்திசாலித் தனத்தைக் கொஞ்சம் நாம் காட்டிக் கொள்ளலாம் என்றால், நம்மை முட்டாள் ஆக்கி விடுகிறார் கோவை ஞானி!

ஏனென்றால், மனிதனைக் கோவை ஞானி தேடிக் கொண்டு இருப்பது வாழ்க்கையில் அல்ல; கதை-கவிதைகள் பற்றிய அவரது புரிதலில்! அருத்தம் உள்ள ஒரு

வாழ்க்கையை மனிதனுக்கு மீட்டுத் தருவதற்கு அவர் முற்படுவது மெய்மையில் அல்ல, கதை-கவிதைகளின் சுவனத்தில்!

ஏனென்றால், மனிதனை உற்பத்தி செய்து கொண்டு வருபவர் கடவுள் அல்லர்;

மாறாக, கலைஞர்கள்!

இதுதான் ஞானியிசத்தின் பெருந் தன்மை! ஆனால், இதுவோ வெட்கம் கெட்ட ஒரு பெருந் தன்மையாக நமக்குப் படுகிறது.

வெட்கக் கேடு

வெட்கக் கேடு என்பது நமது பண்பாட்டின் ஒரு பகுதியாகக் காலம் காலமாகத் தொடர்ந்து கொண்டு வந்து இருக்கிறது என்பதை யாரும் மறுப்பதற்கு இல்லை. இந்த வெட்கக் கேடு இல்லாத துறை என்று எதுவும் நாட்டில் இல்லை என்று கூட நாம் சொல்லி விடலாம்.

அறிஞர்-பேரறிஞர், புரட்சித் தலைவர்-புரட்சித் தலைவி, தலைவர்-பெருந் தலைவர், கவிஞர்-கவியரசு, கலைஞர்-பெருங் கலைஞர், என்று எல்லாம் எல்லாப் பட்டங்களையும் ஆசையாக நம்மவர்கள் சூட்டிக் கொள்கிறார்கள்.

உழைத்து, உற்பத்தித்து நமக்கு உணவையும் உடையையும் உறைவிடத்தையும் தந்து கொண்டு இருக்கின்ற புண்ணிய வான்களை விட உயர்ந்தவர்களாகக்

கதை-கவிஞர்கள் தம்மைக் காட்டிக் கொள்ள முற்படுகிறார்கள். இந்த

வகையினருள் உச்சமானவர்களோ நடிகர்கள்! அவர்கள் இடையேயும்

திலகங்கள்-திலகவதிகள் என்று பட்டங்கள்! உச்சம் என்றும் நீச்சம் என்றும் தர

நிலைகள்!

இவை போன்ற தற்பெருமைகளும் பெருமிதங்களும் பெருந் தன்மைகளும் எத்தனை நாளைக்குதான் இவர்களைக் காப்பாற்றிக் கொண்டு வந்திட முடியும் என்றால், அதற்கும் உத்தர வாதம் எதுவும் இல்லை. நிலைவான இடம் என்று எதுவும்

வரலாற்றின் நிகழ்ப்பாட்டில் இருப்பதாக நமக்குத் தெரியவும் இல்லை.

பிறந்த பொழுதே உயர்வாகவும் தாழ்வாகவும் மனிதர்கள் பிறந்து வருவதாக இன்றும் கருதிக் கொண்டு வருகின்ற ஒரு பண்பாடு, வெட்கக் கேடான ஒரு பண்பாடுதானே! காதல்-கலியாணம், கல்வி-வேலை, என்று எல்லா வற்றிலும்

உரிமை மீறல்களை—-மனித மாண்பின் குலைவுகளை—-ஒவ்வொரு நாளும் நாம் கண்டு கொண்டு வருகிறோம்; அவற்றைக் ஏற்றுக் கொண்டும் இருக்கிறோம்.

அடுத்தவர் உரிமையை நாம் மீறுகின்ற பொழுது, நமது உரிமையை நாமே மீறிக் கொள்கிறோம் என்று—-மற்றவர்களை இழிவு படுத்துகின்ற பொழுது, நம்மை நாமே இழிவுப் படுத்திக் கொள்கிறோம் என்று—-நமக்குத் தெரிவதே இல்லை.

பொய், ஏமாற்று, ஊழல், என்பன வெல்லாம் இல்லாத இடம் எதுவும் உலகில் இல்லைதான் என்ற போதிலும், நம் நாட்டில் இவற்றிற்கு விரிவு அதிகம்; வீச்சும் அதிகம்!

ஆனால், ஒரு மார்க்சிய வாதியாகத் தம்மைப் பிரகடனப் படுத்திக் கொண்டு

வருகின்ற கோவை ஞானிக்குள் கூட இப்படி ஒரு பண்பாடு வளர்ந்து கொண்டு வந்து இருக்கிறதே, எப்படி ?

‘மார்க்சிய அழகியல் ‘ என்று பெயர் சூட்டப் பட்டு இருக்கின்ற இவரது நூலில்

மார்க்சியமும் இல்லை; அழகியலும் இல்லை! அழகு என்பதைப் புரிந்து

கொள்வதற்கு உரிய ஒரு சிறிய முயற்சி கூட இந்த நூலில் காணப் படவும் இல்லை! 80 ரூபாய் கொடுத்து இந்த நூலை வாங்கிப் படிக்கின்ற ஒரு

வாசகனுக்கு இதனால் கிடைத்திடக் கூடிய பயன் என்ன ? என்னும் கேள்வியினைக் கொஞ்சம் இவர் கேட்டுப் பார்த்துக் கொள்வது நமக்கு நல்லது.

மேற்கோள் பொறுக்குபவர்கள்

வாழ்க்கையின் கேள்விகள்: அணிந்துரையில் ‘மேற்கோள் பொறுக்குபவர் ‘களைப் பற்றி ஜெய மோகன் குறிப்பிடுகிறார். ஒருவரின் நூலைப் படிக்காமலே அவரது நூலைப் படித்து விட்டதாகக் காட்டிக் கொள்வதற்காக, ஆங்காங்கே சிதறிக்

கிடக்கின்ற அவரது கருத்துகளைப் பொறுக்கி எடுத்துக் கொண்டு, தங்கள் எழுத்துகளிலும் பேச்சுகளிலும் அவற்றை எடுத்து ஆண்டு வருகின்ற மனிதர்கள்தாம் இவர்கள் என்பதில் ஐயம் இல்லை.

அதே நேரத்தில், மற்றவர்களின் நூல்களில் காணக் கிடக்கின்ற ஒரு சில

சொற்களை எடுத்துக் கொண்டு—-அவற்றின் கருத்தாக்கங்களைப் புரிந்து

கொள்ளாமலே—-அவற்றைப் பயன் படுத்திக் கொண்டு வருபவர்களும் உண்டு; பெயர்களை குறிப்பிடுவதற்கு மட்டும்தான் அவர்கள் மறந்து விடுவார்கள்!

கார்ல் மார்க்ஸ் கூறி இருப்பதாகக் கோவை ஞானி சுட்டிக் காட்டி இருக்கின்ற இரண்டு மேற்கோள்களையும் பற்றி 31-7-2004 அன்று ஜெய மோகனிடம் நான் கேட்டேன்—-எங்கு இருந்து அவருக்கு இவை கிடைத்து இருக்கலாம் என்று!

ஏனென்றால், அந்த வாசகங்கள் வருகின்ற நூல்களைக் கோவை ஞானி படித்தது இல்லை என்பது நிச்சயம்; எந்தக் கடவுள் மேலும் ஆணை இட்டு உறுதியாக இதனை யாரும் கூறிக் கொள்ளவும் முடியும்.

எனது கேள்வியைக் கேட்டு ஜெய மோகன் சிரித்தார்—-இது கூட தெரியாதா ? என்று!

கலை-இலக்கியம் பற்றிய கார்ல் மார்க்சின் மேற்கோள்களைப் பொறுக்கி எடுத்து, மஞ்சள் நிற அட்டையுடன் கூடிய ஒரு நூலை மாஸ்கோ காரர்கள் வெளியிட்டு இருந்தார்கள்; அதைத் தேடிப் பிடித்துப் படித்துப் பாருங்கள்; அந்த மேற்கோள்

கிடைக்கும்; என்று கூறி எனக்கு உதவுவதற்கு ஜெய மோகன் முன் வந்தார். எனது நண்பர் சொ.கண்ணனுடன் எனக்கு ஏற்பட்டு இருந்த ஓர் அனுபவம்தான் உடனே என் நினைவுக்கு வந்தது.

திடிர் என்று ஒரு நாள் என்னைக் கண்ணன் கேட்டார்—-கார்ட்டாசிய அறிதல் முறை என்றால் என்ன ? என்று!

எனக்குத் தெரிய வில்லையே, என்றேன்.

காரண-காரிய அறிதல் முறையைத்தான் அப்படிக் கூறுகிறார்கள் என்று எனக்கு

விளக்கம் அளித்தார் கண்ணன்!

பூதவியல் பற்றி டி கார்ட்டே எழுதி இருப்பதாக கார்ல் மார்க்ஸ் கூறி இருந்தது போல ஒரு ஞாபகம்; ப்ளக்கானோவ் நூலையும் புரட்டிப் பார்க்கலாம்; டி

கார்ட்டேயின் சிந்தனைதான் கார்ட்டிசிய சிந்தனையாக அறியப் படுகிறது என்றும் தோன்றுகிறது. பேசாமல் டி கார்ட்டேயைத் தேடிப் பிடித்துப் படித்து விடுங்கள்; என்று கண்ணனிடம் நான் கூறினேன்.

கண்ணன் சிரித்தார்! மெய்ப் பொருண்மை பற்றிய ஏதாவது ஓர் அகராதியில் தேடினால் மிகவும் எளிதாக அதனைத் தெரிந்து கொள்ளலாம்; என்று கூறி,

தன்னிடம் இருந்த அகராதி காணாமல் போய் விட்டது என்றும் கவலைப் பட்டார்.

என்ன கண்ணன், இது! இதைச் சொல்வதற்கு நீங்கள் வெட்கப் பட வேண்டாமா ? என்று அவரை நான் கடிந்து கொண்டேன்.

மிகவும் சத்தமாகக் கண்ணன் சிரித்தார்! கண்களில் ஒரு கிண்டல் பார்வை!

என்ன பிரகாசம், எந்தக் காலத்தில் இருக்கிறீர்கள் ? எல்லோரும் இப்படித்தான் தெரிந்து கொள்கிறார்களா ? நீட்சேயைப் பற்றியும் ஃபூக்கோவைப் பற்றியும் பேசுபவர்கள் எல்லாம் அவர்களைப் படித்து விட்டுதான் பேசுகிறார்களா ? என்று கேட்டு விவாதத்திற்கு ஒரு முற்றுப் புள்ளியை அவர் வைத்தார்.

இப்படித்தான் கோவை ஞானியும் இந்த மேற்கோள்களை எங்கு இருந்தோ

பொறுக்கி எடுத்து இருக்கிறார். எனினும், இது பற்றிச் சற்றுப் பின்னர் நாம்

பார்க்கலாம்.

இறுகிப் போன சொற்கள்

ஜெய மோகனின் பின் தொடரும் ‘நிழலின் குரலில் ‘ ராமசாமி என்று ஒரு கதை மாந்தர் வருவார்; ‘பாறையாக இறுகிப் போய் விட்ட சொற்களை ‘ப் பற்றியும் அவர் பேசுவார். அப் பொழுது எனக்குச் சிரிப்பு வந்தது! ஆனால், கோவை ஞானியைக் கிண்டல் செய்வதற்குதான் இப்படி ஒரு கருத்தினை ஜெய மோகன் வெளிப் படுத்தி இருக்கக் கூடுமோ, என்று இப் பொழுது எனக்குத் தோன்றுகிறது.

‘சம தர்மம் ‘ என்பது ‘சமுகாண்மை ‘ (சோஷலிசம்) அல்ல! ஆனால், ‘சமதர்மம் ‘ என்றுதான் ‘சமுகாண்மை ‘யைக் கோவை ஞானி குறிப்பிடுகிறார்.

குடிப்பது அரை-வயிற்றுக் கஞ்சிதான் என்ற போதிலும், எல்லோருக்கும் ஒரே அளவாகக் கிடைக்கின்ற அரை-வயிற்றுக் கஞ்சி என்பது மாதிரியான ஒரு

சமுகாண்மைக் கருத்தாக்கத்திற்கு மார்க்சியத்தில் இடம் இல்லை. ஏனென்றால்,

‘விடுதலையான தனி மனிதர்களின் விடுதலையான உறவு ‘களாகத் திகழ்ந்திடத் தக்க ஒரு சமுதாயம்தான் ‘சமுகாண்மைச் சமுதாயம் ‘, அல்லது ‘பொதுமைச் சமுதாயம் ‘ ஆகும்.

‘பிரிவு ‘ என்றும் ‘பிளவு ‘ என்றும், ‘அயன்மைப்பாடு ‘, அதாவது, ‘அந்நியமாதல் ‘ என்றும் கோவை ஞானி அள்ளித் தெளித்து இருக்கின்ற கருத்தாக்கங்கள்

ஈரோப்பில் கார்ல் மார்க்சுக்கும் முந்தியவை; நம் நாட்டிலோ அதற்கும் முந்தியவை!

‘பிரிவுபாடு ‘ என்பது இறுகிப் போய் விட்ட ஒரு வார்த்தை அல்ல; மாறாக, ஒரு கருத்தமைவு! வருக்கங்களாக மனிதர்கள் பிரிவு பட நேர்ந்ததையும் அவர்கள் இடையே இயங்கிக் கொண்டு வந்து இருந்த—-வருகின்ற—-முரண்பாடுகளையும் வருக்கப் போராட்டங்களையும் குறிக்கின்ற ஒரு கருத்தமைவு!

இது போல, ‘பிளவுபாடு ‘ என்பது நுண்மை என்றும் திண்மை என்றும் தனக்கு உள்ளே மனிதன் பிளவு பட்டுப் போய் இருப்பதைக் குறிப்பது! வருக்கங்களாலும் கலைகளாலும் குணவரைப் படுத்தப் பட்டு இருப்பது மனிதனின் திண்மை

(கான்க்ரீட்) நிலை என்றால், இறைமையாலும் ஆன்மிகத்தாலும் மதங்களாலும் குணவரைப் படுத்தப் பட்டு இருப்பது மனிதனின் நுண்மை (அ:ப்ஸ்ட்ராக்ட்) நிலை எனலாம்.

‘வாழ்க்கையின் கேள்விகளி ‘லும் ‘மனத்தின் விடுதலை ‘யிலும் யாரும் இவற்றைத் தெரிந்து கொள்ளவும் முடியும்.

இனி, கோவை ஞானி குறிப்பிடுகின்ற ஆதிப் பொதுமைச் சமுதாயத்திற்கு நாம் வருவோம்.

ஆதிப் பொதுமைச் சமுதாயம்

ஆதிப் பொதுமைச் சமுதாயம் என்னும் ஒரு புனைவினைக் கட்டி விட்டவர்கள்

யார் ? என்பது நமக்குத் தெரிய வில்லை. அதே நேரத்தில், இது போன்ற ஒரு கற்பனை கார்ல் மார்க்சின் சிந்தனையில் படிந்து இருப்பதற்கும் வாய்ப்பு எதுவும் இல்லை. ஆனால், கோவை ஞானியோ ஆதிப் பொதுமைச் சமுதாயத்தை கார்ல் மார்க்சின் தலையில் கட்டி வைத்து விடுவதற்கு முற்படுகிறார்.

வாழ்க்கை என்பது ஓர் உறவு! உறவுகள் இல்லாமல் மனிதனுக்கு வாழ்க்கை என்பது இல்லை! இந்த உறவுகளின் தொகுப்புதான் சமுதாயம்!

எனவே, உறவுகளின் விதத்தில் அல்லாமல், வேறு எந்த வகையிலும் எந்த ஒரு சமுதாயத்தையும் நாம் குணவரைப் படுத்திட முடியாது என்பது தெளிவு.

ஆனால், கோவை ஞானிக்கோ உடைமைகள்தாம் முக்கியம்! எனினும், உடைமை என்பது கூட உறவுகளின் ஒரு விதம்தான் என்பது இவருக்குத் தெரிய வில்லை. ஆனாலும் நம்மை இவர் கிண்டல் அடிக்கிறார்—- ‘நமது ஆன்மாவின் குரலைக் கூட நாம் கேட்பது இல்லை ‘ என்று!

கோவை ஞானி நினைத்துக் கொண்டு இருப்பது போல, ஆதிப் பொதுமைச்

சமுதாயம் என்பது உடைமை எண்ணங்கள் எழுந்திட முடியாத—-உடைமைகளுக்கு அவசியமே இல்லாத—-ஒரு சமுதாயம் அல்ல; மாறாக, ஒரு குழு உடைமைச் சமுதாயம்; அடிமைப்பாடுகள் கருக் கொண்டு இருந்த ஒரு சமுதாயம்! இந்தச் சமுதாயத்தின் வயிற்றில் இருந்துதான் ஆண்டான்-அடிமைச் சமுதாயம் பிறந்தும் வந்து இருந்தது.

எதை வேண்டும் என்றாலும் புசித்துக் கொள்ளுங்கள்; ஆனால், ஒரே ஒரு மரத்தின் கனியை மட்டும் விட்டு விடுங்கள்; என்று ஆதம் இடமும் அவ்வை இடமும் கூறித் தமது கஞ்சத் தனத்தினை விவிலியக் கடவுள் வெளிப் படுத்திக் கொண்டு

இருந்தாராமே, அப்படிப் பட்ட ஒரு குடும்பத் தலைவன்தான் ஆதிச் சமுதாயத்தின் தலைவன்!

ஒரு பழத்தை, அதுவும், ஒரு பகுத்தறிவுப் பழத்தை உண்டு விட்டதற்காக ஆதமையும் அவ்வையையும் கடவுள் அடித்துத் துரத்தினாராமே, அப்படிப் பட்ட ஒரு வல்லதிகாரத் தலைவன்தான் ஆதிச் சமுதாயத்தின் தலைவன்!

தந்தை-தாய்-பிள்ளைகள் என்று இன்று வாழ்ந்து கொண்டு வருகின்ற ஒரு குடும்பத்தை எடுத்துக் கொண்டாலே போதும், ஆதிச் சமுதாயம் எப்படி இருந்து இருக்கக் கூடும் என்பதை எளிதில் நாம் புரிந்து கொண்டு விட முடியும்.

எனவே, ஆதியில் ஒரு பொதுமைச் சமுதாயம் இருந்தது என்று கூறி நம்மைக் கோவை ஞானி மிரட்டிட முயல்வதில் பொருள் எதுவும் இல்லை.

ஹே:கலும் கார்ல் மார்க்சும்

மனிதன் என்னும் கருத்தமைவின் மீதான ஒரு பங்கம், அல்லது, மீறல்தான் ‘அடிமை ‘ என்று ஹே:கல் கூறினாராம்—-அவரது சொற் பொழிவுகளைத்

தொகுத்து இருக்கின்ற ஒரு மாணவர் கூறுகிறார். இதனால்தான், அடிமைச்

சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டு வந்து இருந்த அரிஸ்ட்டாட்டிலால், ‘மனிதன் ‘ என்னும் ஒரு கருத்தமைவினை உருவாக்கிட முடிய வில்லை என்பது ஹே:கலின் கருத்து.

இதனை உட்கவர்ந்து கொண்டு இருந்த கார்ல் மார்க்சோ, உழைப்பாளர் வருக்கத்தினுள் தன்னை மனிதன் இழந்து விட்டான் என்று கூறுகிறார். மனிதன் என்னும் ஒரு கருத்தமைவினை உருவாக்கிடக் கூடிய வாய்ப்புகள் அடிமைச்

சமுதாயத்தில் இல்லாத காரணத்தினால்தான், பொதுப் படையான மனித உழைப்பு என்னும் கருத்தமைவினையும், எனவே, மதிப்பு என்னும் கருத்தமைவினையும்

அரிஸ்ட்டாட்டிலால் உருவாக்கிட முடியாமல் போயிற்று என்றும் அவர் கூறுகிறார்.

அப்படி என்றால், மனிதன் என்றால் என்ன ? மனிதன் என்னும் கருத்தமைவின் உள்ளடக்கம் என்ன ? என்னும் கேள்விகள் எழுகின்றன. ஒரு கேள்வியாகக் கூட இந்தக் கருத்தமைவினை எழுப்பிடக் கூடிய வாய்ப்புகள் முதலாண்மைச்

சமுதாயத்தில்தான் உருவாகியும் இருக்கின்றன.

இத் தகு சிந்தனைகள் எவற்றிற்கு உள்ளும் உற்றுக் கூட பார்த்திடாமல், ஆதிக் காலத்தில் ஒரு பொதுமைச் சமுதாயம் இருந்தது என்று கோவை ஞானி கூறிட முற்படுவது அவரது எளிமையைத்தான் நமக்குக் காட்டுகிறது. விரிக்கில் பெருகும் என்பதால் இதற்கும் ‘மனத்தின் விடுதலை ‘யைத்தான் நாம் அணுகி ஆக வேண்டும்.

குறிப்பாக, மார்க்சின் நூல்களைப் படித்துப் பார்த்து இருப்பவர்கள் ‘மரபு

மார்க்சியர்கள் ‘ என்றால்—-மார்க்சைப் படிக்காமலே கோவை ஞானியைப் போல மார்க்சியம் பேசுபவர்கள் ‘வேறு மார்க்சியர்கள் ‘ என்றால்—-மரபு

மார்க்சியத்தில்தான் இவற்றிற்கு எல்லாம் நமக்கு விடைகள் கிடைத்திடவும் முடியும்.

ஆனால், மரபு மார்க்சியமோ முதலாண்மைச் சமுதாயத்தில் இருந்து தனது

ஆய்வினைத் தொடங்கி முன்னோக்கியும் பின்னோக்கியும் நகர்ந்து கொண்டு வந்து இருக்கிறதே ஒழிய, கோவை ஞானியைப் போல் ஆதியில் இருந்து அல்ல; அது முடிவதும் அல்ல!

சமுதாயங்களின் விளர்ச்சி

முந்திய கருத்துகளின் உள் இருந்துதான் பிந்திய கருத்துகள் தோன்றிட முடியும் என்பது போல, முந்திய சமுதாயங்களுக்குள் கருக் கொண்டு வளர்ந்து வந்ததன்

பின்னர்தான் பிந்திய சமுதாயங்கள் தோன்றுகின்றன. இதனால்தான், எதிரிடையான கருத்துகளுக்கு இடையே இறுக்கமான பகைமை எதுவும் இல்லை என்று ஹே:கல் கூறிடவும் நேர்ந்து இருந்தது.

இங்கே, முதலாண்மைச் சமுதாயத்தின் தோற்றத்தினை நாம் எடுத்துக்

கொள்வோம்.

‘என்றைக்கு இரண்டு மனிதர்கள் தங்கள் உற்பத்திப் பொருள்களைச் சரக்குகளாகக் கைமாற்றிக் கொள்ளத் தலைப் பட்டார்களோ, அன்றைக்கே அடிக்கல் நாட்டப் பட்டு விட்ட ஒரு சமுதாயம், முதலாண்மைச் சமுதாயம்!

சரக்குகளின் கைமாற்று, பணத்தின் தோற்றம், வணிகத்தின் வளர்ச்சி, ஆகிய

வற்றின் ஊடே கொஞ்சம் கொஞ்சமாகச் சமுதாய நிலவரங்களைப் பக்குவப் படுத்தி, இறுதியில், உழைப்பு ஆற்றலினையும் ஒரு சரக்காக மனிதர்கள்

கைமாற்றிக் கொள்ளத் தொடங்கிய புதியது ஓர் உற்பத்தி உறவின் மூலம், தன்னைப் பிறப்பித்துக் கொண்ட ஒரு சமுதாய அமைப்பு, இந்த முதலாண்மை அமைப்பு!

பண்ணையச் சமுதாயத்தின் வயிற்றில் கருவாகி, யாரும் புரிந்து கொள்ளாத வகையில் உருவும் ஆகி, பின்னர், எந்தப் பண்ணையச் சமுதாயத்தின் வயிற்றில் அது கருவானதோ, அந்தப் பண்ணையச் சமுதாயத்திற்கே ஒரு சூளாக அது வளர்ந்து நின்ற அதன் வாலைப் பருவத்தில்தான், பண்ணையக் கிழார்களும் மதக் குருமார்களும் மன்னர்களும், ஏன், முதலாளர்களும் கூட அதனை அடையாளம் கண்டனர்.

இப்படி, எதிரிக்குத் தெரியாமல் எதிரியின் வயிற்றில் தோன்றி வளர்ந்து வந்த இந்தப் புதிய அமைப்பு, இறுதியில் அந்த எதிரியை அழித்து ஒழித்து வெற்றி கண்ட ஒரு நிகழ்ச்சியைத்தான் முதலாண்மைப் புரட்சி என்று நாம்

அழைக்கிறோம். ‘ (வரலாற்றின் முரண் இயக்கம்: பாகம் இரண்டு; பக்.85-86.)

இப்படித்தான், முதலாண்மைச் சமுதாயத்தின் கருவில் இருந்து பொதுமைச்

சமுதாயமும் உருவாகி வருகிறது.

அதாவது, ‘விடுதலையான தனி மனிதர்களாக மனிதர்களை முதலாண்மை உயர்த்தி இருக்கின்ற வளர்ச்சி நிலையினை ஒழித்து விட்டு, பழைமையில் இருந்து முற்றிலும் தன்னைத் துண்டித்துக் கொண்டு வந்திடப் போவது அல்ல; மனித விடுதலை!

மாறாக, இந்த வளர்ச்சியின் தொடர்ச்சியாக, தனிப் பட்ட முறையில் மட்டும் இன்றிச் சமுதாய உறவுகளிலும், விடுதலை ஆனவனாக மனிதனை உயர்த்திடப் போவதுதான் பொதுமைச் சமுதாயம்! ‘ (வாழ்க்கையின் கேள்விகள், பக்.241.)

ஆக, தமது ஆதிச் சமுதாயத்தில் இருந்து இனியேனும் கோவை ஞானி

வெளியேறி வருவாராக!

மூடனின் மகிமை

தமது பிறவி ஞானத்தில் மட்டும் பெருமை கண்டு கொண்டு வந்து இருக்கின்ற கோவை ஞானிக்கு, ‘மூடன் ‘ பட்டத்தின் மகிமையைத் தெரிந்து கொள்வதற்கு

உரிய வாய்ப்பு எதுவும் இது வரை கிடைத்தது இல்லை போலும்! ஆனால், இந்த மூடன் பட்டத்தை ஏற்றுக் கொள்ளாத யாரும், அறிவியலின் வாயிலில் கூட நுழைந்திட முடியாது என்பதுதான் உண்மை!

அதாவது, ‘அறிவின் ஒவ்வொரு கட்டத்தையும் கடந்து நாம் சென்று கொண்டு இருக்கின்ற பொழுது, ‘அறிஞன் ‘ என்று கொட்டை எழுத்துகளில் எழுதி நமது

நெற்றியில் நாம் ஒட்டி வைத்துக் கொள்ள வேண்டும் என்று நமக்குத்

தோன்றிடலாம் என்ற போதிலும், அறிவின் அடுத்த கட்டத்திற்குள் நுழைந்திட நாம் முற்படுகின்ற பொழுது நம்மை வரவேற்பது, ‘மூடனே, வருக! ‘ என்னும் குரல்தான்!

நாமாக எழுதி ஒட்டிக் கொண்டு இருந்த அறிஞன் பட்டத்தைக் கிழித்து எறிந்து விட்டு, நம்மை வரவேற்று நிற்கின்ற மூடன் பட்டத்தை நமது நெற்றியில் நாம் ஒட்டிக் கொள்ளாமல், அறிவின் அடுத்த கட்டத்தைக் கடந்து சென்றிட நம்மால் முடிவது இல்லை. மூடன் பட்டத்தை இப்படி ஒட்டிக் கொள்ள மறுப்பவர்கள்,

அறிஞன் பட்டத்துடன் அறிவின் முந்திய கட்டத்திற்கு வேண்டும் என்றால் திரும்பிச் சென்று விடலாமே ஒழிய, அறிவின் அடுத்தடுத்த கட்டங்களைக் கடந்து சென்றிட முடியாது. ‘ (வரலாற்றின் முரண் இயக்கம்: பாகம் இரண்டு, பக்.229.)

இனி, ஜெய மோகனை மீண்டும் நாம் சந்திப்பதற்கு முன்னர், கார்ல் மார்க்சை வம்புக்கு இழுத்துக் கோவை ஞானி நடத்திக் காட்டி இருக்கின்ற நாடகக் காட்சிகளைக் கண்டு களிப்பதற்கு நாம் முயல்வோம்.

05-08-2004

தொடரும்

Series Navigation

சோதிப் பிரகாசம்

சோதிப் பிரகாசம்