மெய்மையின் மயக்கம்-14

This entry is part [part not set] of 53 in the series 20040827_Issue

சோதிப் பிரகாசம்


(சுரேஷின் மடலுக்கு ஜெய மோகனின் பதில் [26-02-2004] குறித்து…)

தமிழ்ச் சூழல்

தமிழகத்தின் சிந்தனை வரலாற்றில், அல்லது ஜெய மோகன் குறிப்பிடுவது மாதிரி, தமிழ்ச் சூழலில், கோவை ஞானிக்கு முக்கியமான ஓர் இடம் உண்டு. இவருக்குக் குருவாக இருப்பவர் எஸ். என். நாகராஜன் என்றால், இவரோ பலருக்கும் குருவாக இருந்தவர்; இருந்து கொண்டும் வருபவர்! ரிஷி என்னும் ஒரு மார்க்சியக் கதை மாந்தராக ஜெய மோகனின் ‘பின் தொடரும் நிழலின் குரலில் ‘ வருபவரும் இவர்தாமாம்! எனவே, குறிப்பிட்டது ஒரு பான்மையினைச் சிறப்பாகச் சித்தரிக்கின்ற வகையில், ஞானியிசம் என்று ஒரு வகைப்பாட்டினை நாம் வகுத்துக் கொள்வதில் தவறு எதுவும் இல்லை.

1960களின் நடுவில் தொடங்கி 1970களின் நடுப் பகுதி வரை இந்தியத் துணைக் கண்டத்தில் நக்சல்பாரி இயக்கம் அடைந்து கொண்டு வந்து இருந்த எழுச்சிக்கு வரலாற்றில் முக்கியமான ஓர் இடம் உண்டு என்பதை யாரும் மறுத்து விட முடியாது.

(கதை-கவிதைகளின் உலகத்திற்குத் தொடர்பு இல்லாத வேறு ஓர் உலகத்தின் கதை போல நக்சல்பாரிக் கதை நமக்குத் தோன்றிடலாம் என்ற போதிலும், கதை-கவிதைகளின் உலகத்திற்கு உயிர்ப்பும் துடிப்புமாக அவ் அப்போது இருந்து கொண்டு வந்து இருக்கின்ற கதை இந்தக் கதைதான் என்பதால், இந்தக் கதைக்கு என்று கொஞ்சம் நேரத்தை நாம் ஒதுக்கி வைப்பதில் வீண்மை எதுவும் இல்லை. ஏனென்றால், தப்பும் தவறுமாகத்தான் என்ற போதிலும், மக்களின் கனவுகளைச் சுமந்து கொண்டு வருவதற்கு முனைந்து கொண்டு வந்து இருக்கின்ற ஓர் உலகத்தின் கதை இது!)

பண்ணையக் கிழார்களும் மடங்களும் உடைமை கொண்டு இருந்த நிலங்களை பறித்து எடுத்து, நிலம் இல்லாத வேளாண் மக்களுக்கு அவற்றைப் பகிர்ந்து அளித்திட வேண்டும் என்பதும் சீனாவின் பாணியில் ஒரு புதிய பொது நாயக (ந்யு டெமாக்ரட்டிக்) ஆட்சியினை அமைத்திட வேண்டும் என்பதும் இவற்றினைச் சாதித்துக் கொள்கின்ற வகையில் புரட்சிப் படை ஒன்றினை உருவாக்கிட வேண்டும் என்பதும் இன்ன பிறவும்தாம் நக்சல்பாரி இயக்கத்தின் நோக்கங்கள்; மார்சிய-லெனினியக் கட்சியினர் வழி நடத்திக் கொண்டு வந்து இருந்த ஓர் இயக்கம் இது!

இந்தக் காலக் கட்டத்தில்தான், அமெரிக்காவின் கைக் கூலிகள் என்று முத்திரை குத்தப் பட்டு, இடது சாரிக் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து ஏ.எம். கோதண்ட ராமன் மற்றும் குசேலர் போன்றவர்கள் வெளியேற்றப் பட்டு இருந்தனர். இவர்களது தலைமையில், போர்க் குணம் கொண்ட ஒரு தொழிற்சங்க இயக்கம் சென்னையிலும் கோவையிலும் வளர்ந்திடவும் தொடங்கி இருந்தது.

சமுதாய அக்கறையும் போர்க் குணமும் கொண்ட படித்த இளைஞர்களைக் கவர்ந்து இழுப்பதற்கு நக்சல்பாரி இயக்கம் தவற வில்லை. நாட்டுப் புறங்களுக்குச் சென்று இவர்கள் பணி ஆற்றிடத் தொடங்கினர். பார்ப்பனர்கள், சூத்திரர்கள், எனச் சாதி வேறுபாடு கருதாமல் எல்லாச் சாதிகளில் இருந்தும் சென்று சேரிகளில் இளைஞர்கள் தஞ்சம் புகுந்து இருந்த ஒரு காலம் அது! தவித்த வாய்க்குத் தண்ணீர் தருகின்ற மக்கள் ஆவரே, சேரி மக்கள்! பல் வேறு சாதிக் காரப் புரட்சியாளர்களுடனும் பழகுகின்ற வாய்ப்பும் அவர்களுக்குக் கிடைத்தது.

சமுதாயத்தில் ஏதேனும் ஒரு மாற்றம் ஏற்பட்டிட வேண்டும் என்று எல்லாத் தரப்பு மக்களும் விரும்பிடத் தொடங்கினர். ஆங்கு ஆங்கே ஒரு சில பண்ணையார்களின் தலைகள் வெட்டி வீசப் பட்டு வந்த நிகழ்ச்சிகளைப் பொது மக்கள் யாரும் பெரிதாக எடுத்துக் கொண்டதாகத் தெரிய வில்லை. கொடுமைகளைப் பற்றியும் கொடுமைக் காரர்களைப் பற்றியும் கேள்விப் பட நேர்ந்த பொழுதுகளில் எல்லாம், ‘இந்த மாதிரி ஆட்களுக்கு எல்லாம் நக்சல்பாரிகள்தாம் சரி! ‘ என்று பேசிடவும் மக்கள் முன் வந்து இருந்தனர்.

அவ்வளவு ஏன், ‘புரட்சி எலாம் மனப் புரட்சி; எழுத்தில், ஏட்டில்! ‘ என்று தமது பங்கிற்குக் கருணா நிதியார் கூட கவிதை பாடிடவும் நேர்ந்து இருந்தது. கதை-கவிதை எழுத்தாளர்களோ, முற்போக்கு எழுத்தாளன் யார் ? பிற்போக்கு எழுத்தாளன் யார் ? என்று தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டு வந்தனர். முற்போக்கு அணியைச் சேர்ந்த எழுத்தாளர்களின் கூக்குரல்தான் வலிமையாக ஒலித்துக் கொண்டும் வந்து இருந்தது.

இவற்றை எல்லாம் பொறுத்துக் கொண்டு இருந்திட முடியுமா, அரசு எந்திரத்தால் ? நக்சல்பாரி இளைஞர்கள் வேட்டையாடப் பட்டு வந்தனர்; சட்டத்தின் நடைமுறைகளையும் (ப்ரொசிஜர்) மீறி சுட்டுத் தள்ளப் பட்டும் வந்தனர். ஒடுக்கு முறைகளால் நக்சல்பாரி இயக்கம் தளர்ச்சி அடைந்து வரத் தொடங்கியது.

இந்தத் தளர்ச்சியில் இருந்து எழுந்து வந்து இருந்ததுதான் ஜெ. பி. நாராயணனின்

பொது நாயக (டெமாக்ரட்டிக்) இயக்கம் என்பதையும் அதன் மறு வினையாக அறிவிக்கப் பட்டு இருந்ததுதான் அன்னை இந்திராவின் அவசர நிலைப் பிரகடனம் (1975) என்பதையும் 1977-இல் ஜனதாக் கட்சி அரியணை ஏறியது வரை அவரது அடக்கு முறைகள் தொடர்ந்து கொண்டு வந்து இருந்தன என்பதனையும் ஈண்டு விளக்கிடத் தேவை இல்லை. எனினும், தனியார் முதலாண்மையின் எழுச்சிக்கு எதிரான அரசு முதலாண்மையின் அடக்கு முறைதான் அவசர நிலைப் பிரகடனம் ஆகும்.

ஆனால், இவை எல்லாம் இங்கே நமக்கு முக்கியம் அல்ல; மாறாக, 1975 முதல் தமிழகத்தில் ஏற்பட்டுக் கொண்டு வந்து இருந்த அறிவாண்மைச் சூழல்தான் முக்கியம்!

அறிவாண்மைச் சூழல்

நக்சல்பாரி இயக்கத்தின் வீழ்ச்சியினைத் தொடர்ந்து, கதை-கவிஞர்களின் முற்போக்குக் கூட்டணி வீழ்ச்சி அடைந்து வரத் தொடங்கியது. புரட்சிகரமான கனவுகளுடன் தங்கள் கற்பனைகளை வளப் படுத்திக் கொண்டு வந்து இருந்த அறிவாளர்கள் பலர் கலை-இலக்கியத்திற்குள் தஞ்சம் புகுந்தனர்; திரைப் படங்களைத் தேடி ஓடினர்; தெரு முனை நாடகங்களுடன் மக்களைச் சந்திப்பதற்கு முனைந்து கொண்டு வந்து இருந்தவர்களும் உண்டு.

சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து நக்சல்பாரி இயக்கத்தினரோ சிதறுண்டு போயினர். ஸ்தாலினிசத்திற்கே உரிய வசை மொழிப் பாடல்களும் குழுச் சண்டைகளும் தலைமைப் போட்டிகளும் எனச் சீர் அழிந்து கொண்டு வந்து இருந்த அவர்களுக்குத் தங்கள் கொள்கைகளைச் சீர் தூக்கிப் பார்த்திட வேண்டும் என்று தோன்றாமல் இருந்ததுதான் மிகப் பெரிய புதிர்! நான்கு பேர் கொண்ட ஓர் அமைப்பாக இருந்தாலும் அதற்குத் தலைவர் யார் ? என்பதுதான் மிகப் பெரிய கேள்வியாகவும் அவர்களுக்குத் தெரிந்தது.

எனினும், சிறு சிறு பத்தரிகைகளைத் தொடங்கித் தங்கள் வீர முழக்கங்களை அவ்வப் போது வெளிப் படுத்திக் கொண்டு வருவதற்கு அவர்கள் தவற வில்லை. எடுத்துக் காட்டாக, கோவை ஈஸ்வரன் நடத்திக் கொண்டு வந்த ‘மனிதன் ‘, நீண்ட பயணம் சுந்தரம் நடத்திக் கொண்டு வந்த ‘நீண்ட பயணம் ‘ முதலிய பத்தரிகைகளைக் குறிப்பிடலாம். ஒரு வேளை, சிறு பத்தரிகைகளின் பரவலான தொடக்கத்திற்கு வித்திட்டவர்கள் இவர்களாகத்தாம் இருந்து இருக்கவும் கூடும்.

யார் ? எவர் ? என்று எல்லாம் எந்த வேறுபாடும் கருதாமல் இவர்களுக்கு எல்லாம் பாது காப்பாக அன்று இருந்து கொண்டு வந்து இருந்தவர் ஒருவர் உண்டு என்றால், அவர்தாம் முன்னாள் மேயர் ‘எஸ். கிருஷ்ண மூர்த்தி ‘ அவர்கள் ஆவார்! ‘வரலாற்றின் முரண் இயக்கம் ‘: இரண்டு பாகங்களிலும் இவர் நினைவு கூரப் பட்டும் இருக்கிறார்.

தற் பெருமை, தலைக் கனம், வீணான பெருந்தன்மை, கவைக்கு உதவிட முடியாத நல் எண்ணம், என்று எந்தச் சிறுமையும் இல்லாமல், குடிசைப் பகுதி மக்களுடனும் தொழிற் சங்கங்களுடனும் பணி ஆற்றிக் கொண்டு வந்து இருந்த இவர், மனித உரிமைகளுக்காகப் போரிடுவதிலும் முன் அணியில் நின்று கொண்டு இருந்தவர்! ஒரு முற்போக்காளர்! ஒரு பொது நாயக வாதி!

நக்சல்பாரி இயக்கத்தினை விட்டு ஒதுங்கி இவருடன் சேர்ந்து குடிசைப் பகுதிகளில் நான் பணியாற்றிக் கொண்டு வந்தேன்; ஒரு சில தொழிற் சங்கங்களின் தலைவராகவும் இருந்து கொண்டு வந்து இருந்தேன். சமுதாய மாற்றங்கள் பற்றிய கனவுகளுக்கும் கற்பனைகளுக்கும் எப் பொழுதும் என்னிடம் எந்தப் பஞ்சமும் இருந்தது இல்லை. கனவுக்கு என்ன, காசா ? பணமா ?

இந்தச் சூழலில்தான், புதிய கருத்துகளைத் தமது தலையில் சுமந்து கொண்டு டெல்லியில் இருந்து புறப் பட்டுச் சென்னை வந்து சேர்ந்தார் ஆர். கீதா! இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடக்கக் காலத் தலைவர்களுள் ஒருவரும் அறிவாண்மையான எழுத்தாளரும் ஆன எஸ். இராமக் கிருஷ்ணன் அவர்களின் மகள் இவர்! அமெரிக்காவின் கைக் கூலி என்று ஸ்தாலினிஸ்ட்டுகளால் முத்திரை குத்தப் படுகின்ற அளவுக்கு இவரிடம் புதிய சிந்தனைகள் நிரம்பிக் கிடந்தன.

கீதாவுக்கு மார்க்ஸியம் தெரிந்து இருந்தது—-இந்தியாவின் கம்யூனிஸ்ட் கட்சிகள் அனைத்தும் ஸ்தாலினிசக் கட்சிகள்தாமே ஒழிய மார்க்ஸியக் கட்சிகள் அல்ல என்பதைச் சுட்டிக் காட்டுகின்ற அளவுக்காவது! கம்யூனிஸ்ட் கட்சிகளின் பெருந் தலைவர்களுக்கு எல்லாம் இவரைத் தெரிந்தும் இருந்தது—-எஸ். இராம கிருஷ்ணன் அவர்களின் மகள் என்பதால்!

இறுகிப் போய் விட்ட ஸ்தாலினிஸ்ட்டுகளின் மூளைகளில் சிறிய கீறல்களையாவது இவர் ஏற்படுத்தி விடக் கூடுமோ என்று அஞ்சிய ஸ்தாலினிஸ்ட்டுகள் இவர் மீது வசை மாரிகளைப் பொழிந்து கொண்டு வந்தனர்.

த்ராத்ஸ்கி என்று ஒரு புரட்சிக் காரர் ருஷ்யாவில் வாழ்ந்து கொண்டு வந்து இருந்தார் என்பதும் ஸ்தாலினால் அவர் நாடு கடத்தப் பட்டு இருந்தார் என்பதும், பின்னர், ஸ்தாலினிஸ்ட்டுகளின் கோடரிக்குப் பலியாகி அவர் மடிந்து போய் விட நேர்ந்து இருந்தது என்பதும், இவருடன் நான் நடத்திய விவாதங்களில் இருந்து எனக்குத் தெரிய வந்தன.

சுருக்கமாகச் சொல்வது என்றால், மார்க்ஸியத்தைப் பொறுத்த வரை நான் ஒரு முட்டாள் என்பதை நான் புரிந்து கொள்வதற்கு இவர் காரணமாக இருந்தார். இதனாலேயே எனது குருவாகவும் இவர் மாறினார்.

மார்க்ஸின் நூல்களை முதல் முறையாக நான் புரட்டிப் பார்க்கத் தொடங்கினேன். கூட்டாக அமர்ந்து மார்க்ஸின் ‘முதலை ‘ சொ.கண்ணனும் நானும் படித்து வரத் தொடங்கினோம். இந்தியா முழுவதும் குறைந்தது ஒரு நூறு பேராவது மார்க்ஸின் நூல்களை அப் பொழுது ஆய்ந்திடத் தொடங்கி இருந்தனர் எனலாம்.

அவசர நிலைக் காலத்தில் கீதாவுடன் சென்று மும்பையில் நான் கலந்து கொண்டு இருந்த கூட்டங்கள் என்னை வியக்க வைத்தன. குறிப்பாக, ஜெய்ரஸ் :பனாஜி என்பவரது வாதங்களைச் சொல்லலாம்.

மார்க்ஸியத்தின் ஆழங்களை இவரது வாதங்களில் என்னால் காண முடிந்தது. என். ராமின் ‘ஃப்ரண்ட் லைன் ‘ பத்தரிகையில் இன்று எழுதிக் கொண்டு வருகின்ற ப்ரஃபுல் :பித்வாயின் வாதங்கள் அன்று மிகவும் சுவையாக இருக்கும்.

இப்படி, நக்ஸல்பாரி இயக்கத்தினது தாக்கத்தின் விளைவாகப் பின் வரும் போக்குகளை நாம் குறிப்பிடலாம்.

ஒன்று: கலை-இலக்கியங்களுக்குள் தஞ்சம் புகுந்திடத் தொடங்கி இருந்த ஸ்தாலினிஸ்ட்டுகள்!

இரண்டு: கிராமத்து வாழ்க்கையை முன்னிறுத்தி, கொடுமைக் காரர்களாகவும் மூடர்களாகவும் பண்ணையார்களைச் சித்தரித்துக் காட்டிக் கொண்டு வந்து இருந்த திரைப் படங்கள்!

மூன்று: சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து தங்களுக்குள் நக்ஸல்பாரி இயக்கத்தினர் நடத்திக் கொண்டு வந்து இருந்த ஸ்தாலினிச-மாவோயிசப் பாணி விவாதங்கள்; வீர முழக்கங்கள்!

நான்கு: மார்க்ஸியத்தின் மூல நூல்களில் ஒரு சிலருக்கேனும் ஏற்பட்டு இருந்த ஆர்வம்!

ஐந்து: ஞானியிசம்!

இந்த ஞானியிசம்தாம் இங்கே நமக்கு முக்கியம்.

ஞானியிசம்

கோவை ஞானியைப் போல, நக்ஸல்பாரி இயக்கத்தின் ஆதரவாளர்களாகத் தங்களை முன் நிறுத்திக் கொண்டு வந்து இருந்தவர்கள் பலர் இருந்தனர். நக்ஸல்பாரி இயக்கத்தின் வீழ்ச்சி இவர்களை அதிர்ச்சி அடையச் செய்து இருந்தது. இந்திய மதங்களும் மார்க்ஸியமும் இரண்டறக் கலந்து விட்டால், இந்தியாவில் புரட்சி நடந்து முடிந்து விடும் என்று கோவை ஞானி கருதினார். ‘இந்திய வாழ்க்கையும் மார்க்ஸியமும் ‘ என்னும் தலைப்பில் ஒரு நூலையும் எழுதி அவர் வெளியிட்டார்.

மார்க்ஸியத்திற்குள் நுழைந்து பார்த்திட வேண்டும் என்று இவர் போன்றவர்களுக்குக் கொஞ்சம் கூட தோன்றிட வில்லை. மாவோவின் கதைகளும் கவிதைகளும் மட்டும் இவர்களுக்குப் போதும் ஆனவையாகவும் இருந்தன. இவர்களுள், எஸ். என். நாகராஜன், எஸ். வி. இராஜதுரை போன்றவர்கள் குறிப்பிடத் தக்கவர்கள்! மார்க்ஸியத்தைப் புரிந்து கொள்வதற்கு இவர்கள் முயன்று பார்த்ததே இல்லை என்பதுதான் இவர்களது தனிச் சிறப்பு ஆகும்.

இவர்களுக்குள் ஏறக் குறைய சில வேறுபாடுகள் இருந்திடலாம் என்ற போதிலும், பின் வருமாறு ஞானியிசத்தை நாம் வரையறுக்கலாம்.

(1) அளவு இல்லாத, அதே நேரத்தில், யாருக்கும் எந்தப் பயனும் இல்லாத மனித நேயம்!

(2) சமுதாயத்தின் அனைத்து இயக்கமும் தங்கள் மண்டைகளுக்குள் அடை பட்டுக் கிடப்பது போன்ற ஒரு தற் பெருமிதம்!

(3) பிறந்த பொழுதே ஒரு ஞானியாகப் பிறந்து விட்ட காரணத்தால் எல்லா அறிவும் இயல்பாகத் தங்களுக்குள் அடங்கி விடுவது போன்ற ஒரு மாய்மை!

(4) பழைய சிந்தனைகளை ஆய்ந்து பார்த்திட முடியாத ஒரு மூளைச் சோம்பல்!

(5) காலத்தால் பிந்திக் கிடக்கின்ற முந்தைச் சிந்தனைகளின் ஒய்யாரம்!

(6) தாங்கள் கற்றுக் கொள்வதற்கு உலகில் எதுவும் இல்லை என்றும் மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்கு என்றே பிறந்து வந்து இருக்கின்ற தனிப் பிறவிகள்தாம் தாங்கள் என்றும் (மனத்தின் விடுதலை: அணிந்துரையில் சொ. கண்ணன்) கருதிக் கொள்கின்ற ஒரு பந்தத் தனம், அல்லது பந்தா!

(7) எங்கும் எப் பொழுதும் ஒரு நுனிப் புல் மேய்ச்சல்; அதே நேரத்தில், மேய்ந்த இடங்களை மூடி மறைத்து விடுகின்ற காய்ச்சல்!

(8) கருத்துகளை அன்றி, வேண்டியவர்கள் என்றும் வேண்டாதவர்கள் என்றும் மனிதர்களைப் பாகு படுத்திப் பார்க்கின்ற ஒரு பகுத்தறிவு! மற்றும்

இவை போன்ற பிற போலித் தனங்கள்!

இத் தகு போலித் தனங்கள் இல்லாத துறை என்று எதையேனும் இன்று நாம் குறிப்பிட்டு விட முடியுமா ? என்றால், அப்படி எதுவும் இருப்பதாக நமக்குத் தெரிய வில்லை! எங்கும் எதிலும் இன்று ஞானியிசம்தான் கோல் ஓச்சிக் கொண்டும் வருகிறது.

சிந்தனைத் தரம்

கார்ல் மார்க்சின் காலத்தைக் கொஞ்சம் நாம் திரும்பிப் பார்ப்போம். அவர் படித்து இருக்கின்ற நூல்கள் எத்தனை! உழைத்து இருக்கின்ற உழைப்பு எத்துணை!

நூற்றுக் கணக்கான நூல்களை அவர் படித்து இருக்கிறார். அத்தனையும் ஆய்வுத் தரமான நூல்கள்—-வரலாறு, சமுக வியல், பொருளாதாரம், மாந்த வியல், மெய்ப் பொருண்மை, முதலான இயல் நூல்கள்!

ஆடம் ஸ்மித், ரிக்கார்டோ, என எத்தனையோ எழுத்தாளர்கள் எழுதி இருக்கக் கூடிய இத்துணை நூல்கள் எல்லாம் ஈரோப்பில் வெளியிடப் பட்டு வந்து இருக்கின்றன; அவற்றை வாங்கிப் படிப்பதற்கு வாசகர்களும் இருந்து இருக்கிறார்கள்.

பண்டை வரலாறு என்றாலும் சரி, பழங் காலத்து இலக்கியங்கள் என்றாலும் சரி, சமுதாயப் பிரச்சனைகள் என்றாலும் சரி, மொழி இயல் என்றாலும் சரி, அறிவியல் என்றாலும் சரி, ஏறக் குறைய எல்லாவற்றிலும் முத்திரை பதிப்பதற்கு அவர்கள் முயன்று கொண்டு வந்து இருக்கிறார்கள்.

ஆனால், நாமோ இன்னும் கதை-கவிதைகளைப் பற்றியே பேசிக் கொண்டு இருக்கிறோம்; 25 வயதில் கார்ல் மார்க்ஸ் எழுதி இருக்கக் கூடிய நூல்களைப் புரிந்து கொள்வதற்கு 35 வயதில் கூட திண்டாடிக் கொண்டும் இருக்கிறோம்!

இந்த இலட்சணத்தில், கால் காசு கூட பெற முடியாத தமது கருத்துகளைக் கோடி, கோடி என்று ஏலம் போட்டு விற்று விடலாம் என்று கோவை ஞானியோ கனவு கண்டு கொண்டு வருகிறார்; தமக்கு ஆதரவாகக் கார்ல் மார்க்சை வேறு துணைக்கு அவர் அழைத்தும் கொள்கிறார்!

செத்து விடுவோம் என்று பட்டுப் புழுவுக்குத் தெரிந்து இருந்ததாம்; இருந்தாலும், பட்டு நூற்பதை அது நிறுத்தி விட வில்லையாம்; இப்படித்தான் ‘உம்பரின் இழப்பினை ‘ (பாரடைஸ் லாஸ்ட்) வார்த்தைகளால் மில்ட்டன் வடித்துக் கொண்டு வந்து இருந்தாராம்! இதனைக் கூறியவரோ கார்ல் மார்க்சாம்!

வாசகர்களின் காதுகளில் பூச் சுற்றி விடுவதற்கும் ஓர் அளவு வேண்டாமா ? இவரது நூல்களை விரும்பிப் படிக்கிறார்கள் என்பதற்காக அவர்களை ஏமாற்றி விட இவர் நினைப்பது, எந்த வகையில் ஞாயம் ? என்ன வகையான நாணயம் ?

ஞானியின் ஞானத்திற்குள் இனி நாம் நுழைவோம்.

28-07-2004

(தொடரும்)

Series Navigation

சோதிப் பிரகாசம்

சோதிப் பிரகாசம்