Bonjour le Canada

This entry is part [part not set] of 61 in the series 20040805_Issue

நரேந்திரன்


பஃபல்லோ வழியாக கனடாவிற்குச் செல்ல ‘ரெயின்போ பிரிட்ஜை ‘க் கடக்கையில் எனக்கு இடதுபுறம் நயாகரா நுரைத்துப் பொங்கி, ததும்பி வழிந்து கொண்டிருந்தது. மாலை மணி ஐந்து என்றது கார் கடிகாரம். அந்திச் சூரியன் தலைகாட்டுவதும் மறைவதுமாக கண்ணாமூச்சி காட்டிக் கொண்டிருந்தான். ஓசையுடன் விழுந்து தெறிக்கும் நயாகராவின் மேற்புறம் நிஜமாகவே ஒரு வானவில் தெரிந்தது.

பின்னிருக்கையிலிருந்து நீர்வீழ்ச்சியை எட்டிப் பார்த்த தமிழறியா (அல்லது தமிழ் பேச பிடிவாதமாக மறுக்கும்) என் மகள், ‘It looks like a giant bath tub Dad…!!! ‘ என்றாள். சமயங்களில் குழந்தைகளின் கற்பனைத் திறன் நம்மையும் மிஞ்சி விடுகிறது.

கனேடிய கஸ்டம்ஸில் வரிசையாக கார்கள் நின்றிருந்தன. நான் போனது ஒரு வியாழக்கிழமையாதலால் கூட்டம் அதிகமில்லை. முன்பே கேள்விப்பட்டிருந்தது போல, கனடாவிற்குள் போகும் கார்களை இரண்டொரு கேள்வி கேட்டு உடனுக்குடன் அனுப்பிக் கொண்டிருந்தார்கள். திரும்பி வருகையில்தான் சிரமங்கள் அதிகம். நான் நின்றிருந்த வரிசைக்குப் பொறுப்பான கஸ்டம்ஸ் இளைஞனுக்கு முப்பது வயதிற்குள்தான் இருக்க வேண்டும். எங்களின் பாஸ்போர்ட் சமாச்சாரங்களை ஒரு பார்வை பார்த்து விட்டு, கோலிக் குண்டு போலிருந்த தன்னுடைய நீல நிறக் கண்களால் என்னைத் துளைத்து விடுவது போலப் பார்த்தான்.

‘எந்த நாட்டுக் குடிமக்கள் நீங்கள் ? எதற்காக கனடாவிற்குப் போகிறீர்கள் ? ‘ என்றான் சடாரென்று. இது ஒரு தேவையற்ற கேள்வி என்ற எரிச்சல் ஏற்பட்டாலும் பொறுமையாக பதிலளித்தேன். அவன் முன் இருக்கும் எங்களது பாஸ்போர்ட்டை ஒரு பார்வை பார்த்தாலே போதும், நாங்கள் எந்த நாட்டுக் குடிமக்கள் என்று தெரிந்து கொள்ள…

எங்கு சென்றாலும் பொதுவாக இந்தியர்களுக்கு பிரச்சினைகள் அதிகம் இருப்பதில்லை. இருப்பினும் 911-க்குப் பிறகு கனடாவின் ‘open border ‘ பாலிசியின் மீதான அமெரிக்க நிர்பந்தம் அதிகமாக இருப்பது கண்கூடு. கனேடிய அதிகாரி அவரின் கடமையைச் செய்கிறார். அவ்வளவுதான்.

ஏழெட்டுக் கேள்விகளால் என்னைத் துளைத்த பிறகு, ஒரு சிறு தலையசைப்பில் நாங்கள் கனடாவிற்குள் நுழைய அனுமதி அளிக்கப்பட்டது. பாலத்தைக் கடக்கையில் ஆறு அல்லது ஏழு வருடங்களுக்கு முன்பு நண்பர் ஒருவருடன் முதன் முதலாக நயாகரா பார்க்க வந்து பட்ட அவஸ்தை நினைவிற்கு வர, என்னையறியாமல் சிரிப்பு வந்தது.

இந்தியர்கள் தேவையற்ற இடத்தில், தேவையே இல்லாமல் அநாவசியமாக ரிஸ்க் எடுப்பதில் சூரர்கள். அது முட்டாள்தனமா அல்லது அசட்டுத் துணிச்சலா என்பது கிடைக்கும் பலாபலன்களைப் பொறுத்துதான் தீர்மானிக்க முடியும். அதிலும் சில பிரகஸ்பதிகள் செய்யும் கோமாளித்தனங்கள் இருக்கிறதே…அடடா! வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை அவை…

உதாரணமாக நீங்களும், உங்கள் நண்பரும் இதுவரை போயறியாத ஒரு புதிய இடத்திற்குப் போயிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். போன இடத்தில் உங்கள் நண்பர் அவரின் குடும்பத்தோடு திடாரென காணாமல் போய்விட்டால் எப்படி இருக்கும் ? சாதாரணமாக விட்டுப் பிரிந்திருந்தால் பிரச்சினை எதுவுமில்லை. எப்படியும் திரும்பி வந்து விடுவார் என்று சும்மா இருக்கலாம். நீங்களோ அந்த ஊருக்குப் புதியவர். உங்கள் நண்பரும் அப்படியே. அந்தச் சூழ்நிலையில், உங்களின் கூடவே நடந்து வந்த ஒரு ஆசாமி, சரியான கும்மிருட்டில், குடும்பத்துடன் பத்து மணி நேரத்திற்கும் மேலாக மாயமாய் மறைந்து போனாரென்றால் உங்கள் மனநிலை பற்றி விளக்கவே வேண்டியதில்லை.

அப்படித்தான் நடந்தது அன்றைக்கு.

‘இரவு நேரங்களில் கனேடிய பக்கமிருந்து நடக்கும் வாண வேடிக்கைகள் மிக அழகாக இருக்கும். நீர்வீழ்ச்சிக்கு அருகிலிருக்கும் (அமெரிக்கப் பகுதியில்) ஒரு பார்க்கில் அமர்ந்து பார்க்கலாம் வா ‘ என்று என்னை அழைத்துக் கொண்டு போன என் நண்பர் திடுமென காணாமல் போய்விட்டார். கையில் எனது நான்கு மாதக் குழந்தையுடன் நயாகரா நகரத்தில் நான் அவரைத் தேடாத இடமில்லை. ஹோட்டலில் இருப்பாரோ என்று போனால் அங்கும் அவரைக் காணாமல் ஒரு விதமான நடுக்கத்துடன் இரவு முழுக்க நயாகராவில் அவரைத் தேடி அலைந்து கொண்டிருந்தேன்.

நண்பர் ஆந்திர மாநிலத்தவர். குடும்பஸ்தர். அவரின் ஒரு வயதுடைய மகள், மனைவியையும் அழைத்துக் கொண்டு, எங்களை நட்ட நடு நயாகராவில் தவிக்க விட்டு ‘ஜீ பூம்பா ‘ என்று காணாமல் போனார். நான் புதிதாக அமெரிக்கா வந்த சமயம் அது. எனவே, போலிஸ் ஸ்டேசனுக்குப் போய் புகார் செய்வதற்குத் துணிச்சல் வராமல் பித்துப் பிடித்தவனைப் போல குறுக்கும் நெடுக்குமாக இருளடைந்த நயாகராவின் பகுதிகளில் காரில் அலைந்து கொண்டிருந்தேன்.

அதிலும், அமெரிக்கப் பகுதியிலிருக்கும் நயாகரா நகரத்தின் சில பகுதிகள் நமது பழைய வண்ணாரப்பேட்டை ஏரியாக்களை நினைவு படுத்தக் கூடியவை. பள பளப்பு, கோலாகலம், கொண்டாட்டமெல்லாம் எல்லைக்கு அந்தப் பக்கம் கனேடியப் பகுதியில் மட்டும்தான். அமெரிக்கப் பகுதியில் அத்தனை விஷேஷமில்லை.

காரணம், நயாகரா நீர்வீழ்ச்சியின் அமைப்பு அப்படிப்பட்டது. அமெரிக்கப் பகுதியில் இருந்து பார்த்தால் நீர்வீழ்ச்சியின் பக்கவாட்டுப் பகுதி மட்டுமே தெரியும். கனேடியப் பகுதியில் இருந்து மட்டுமே அதன் அழகை முழுமையாக ரசிக்க முடியும் என்பதால் பெரும்பாலோர் கனேடியப்பகுதிக்குச் செல்வதையே விரும்புவார்கள். எனவே அமெரிக்கப் பகுதி இரவு பத்துமணிக்கெல்லாம் இருளில் மூழ்கிவிடும். அமெரிக்கர்களுக்கும், கிரீன் கார்ட் என்ற நிரந்தரக் குடியுரிமை உள்ளவர்களுக்கும் எல்லை கடந்து அப்புறம் செல்ல எந்தத் தடங்கலும் இல்லை. என் போன்ற வொர்க் விசா ஆசாமிகள் கண்டிப்பாக கனேடிய விசா பெற்றாக வேண்டும் என்பது நியதி.

நிலமை இப்படி இருப்பதால், நண்பர் கனடாவுக்குள் போயிருப்பார் என்ற எண்ணமே எனக்கு மண்டைக்குள் உதிக்கவில்லை. ஏதோ மிக மோசமான காரியம் நடந்து போய்விட்டது என்ற பயத்துடனே அவரைத் தேடிக் கொண்டிருந்தேன்.

பல இடங்களில் திரிந்தும் அவரைக் காணாமல் அலுத்துக் களைத்து இரவு பனிரெண்டு மணி போல ஹோட்டலுக்குப் போனேன். வந்திருப்பாரோ என்ற நப்பாசையுடன். ம்ஹூம்….சுவேடே இல்லை. அவரின் அறை பூட்டியது பூட்டியபடியே….

அடுத்து என்ன செய்வது ? என்ற திகைப்புடன் படுக்கையில் சாய்ந்து என்னையறியாமல் உறங்கிப் போனேன். விடியற்காலை மூன்று மணிக்கு தொலைபேசி மணியடிக்க, தூக்கி வாரிப்போட்டு எழுந்தால், எதிர் முனையில் வாய் நிறைய எதையோ மொச்சு மொச்சு என்று மென்றபடி நமது அண்ணன் அளகேசனார்.

‘என்னய்யா ஆச்சு உனக்கு ? எங்கே போய்த் தொலைஞ்சே நீ ? ‘ என்றேன் எரிச்சலுடன். கண் முன் கிடைத்திருந்தால் எம்.என். நம்பியார் பாணியில் ‘ஷுட்டுப் பொஷுக்கி ‘ இருப்பேன் அவரை. நல்லவேளை தப்பித்தார்.

‘ஹி..ஹி..கனடாவுக்குப் போயிருந்தம்பா…. ‘ என சாவகாசமாக பதில் வந்தது.

‘விளையாடுகிறாயா என்ன ? விசா இல்லாமல் யாரய்யா உன்னை கனடாவுக்குள் அனுமதிப்பார்கள் ? ‘

‘யூ ஸீ…நான் கார்ல போய்க்கினே இருந்தனா…ஒரு பாலம் வந்திச்சா….நான் ரைட்ல திரும்புனனா….அப்டியே கனடாவுக்குள்ற பூட்டம்பா… ‘ என்றது கெக்கே பிக்கே.

இதை விட ஒரு அண்டப் புளுகை நீங்கள் கேட்டிருக்கவே முடியாது. ரெயின்போ பாலத்தைத் தாண்டினால் கனடா வரும் என்று கோபாலபுரத்து கோண்டுவுக்குக் கூடத் தெரியும். ஆசாமி திட்டமிட்டே கனடாவிற்குள் போயிருக்கிறார். அதை என்னிடம் முன்னரே சொன்னால் நான் தடுத்துவிடுவேன் என்று நினைத்து இப்படி தலையில் மண்ணை அள்ளிப் போட்டிருக்கிறார். வீணாக நான் அலைந்ததுதான் மிச்சம்.

தமிழ்நாட்டுக்காரனுக்கு வந்த சோதனையைப் பாருங்கள் சோதரன்மாரே!

எனக்கு வந்த ஆத்திரத்தில் அவரைப் பிடித்து காது ஜவ்வு கிழிய செவுட்டில் நாலு அறை வைக்க வேணும் போல இருந்தது. அடக்கிக் கொண்டேன். என்ன செய்வது ? அமெரிக்காவில் அதுபோல நடப்பது நினைத்துக் கூட பார்க்க முடியாத விஷயம்…

‘மிஸ்டர் சோணாச்சலம், குற்றவாளி உங்களை அறைந்ததில் உங்களின் இரண்டு காதுகளும் செவிடாகி விட்டன என்பது உண்மையா ? ‘

‘ஆங்…நான் கொஞ்சம்போல கோதுமை அல்வாதான் சாப்பிட்டேன் யுவர் ஹானர்….!!! ‘

கலாஸ். அம்பேல். அதற்கப்புறம் சொத்து முழுவதையும் எழுதிக் கொடுத்துவிட்டு ஆயுசு முழுக்க ஜெயிலில் ‘ஒண்ணேய், ரெண்டேய், மூணேய்… ‘ என்று எண்ணிக் கொண்டே உட்கார்ந்திருக்க வேண்டியதுதான்.

அதை விடுங்கள். எதனால் மேற்படி நண்பர் திரும்பி வர இத்தனை நேரமானது என்று சொல்லி விடுகிறேன். அன்னாரை கனேடிய இமிக்ரேசன் அதிகாரிகள் எதுவும் கேட்காமல் உள்ளே அனுமதித்திருக்கிறார்கள். திரும்பி யு.எஸ். வரும் போதுதான் சிக்கலே. எப்படியோ அவர்களிடன் கெஞ்சி, கதறி மீண்டும் யு.எஸ். உள்ளே வருவதற்குதான் இத்தனை நேரமாகி இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டேன். அவர் சொல்லாவிட்டாலும்.

நல்லவேளை, மேற்படி சம்பவம் 911க்கு முன்னால் நடந்தது. இன்றைய சூழ்நிலையில் இப்படிக் கேணத்தனம் செய்துவிட்டுத் திரும்பவும் அமெரிக்கப் பகுதியில் நுழைவது தலைகீழாக நின்று நயாகரா நீர் முழுவதையும் குடித்தால் கூட நடக்காது. கனடாவிலேயே உட்கார்ந்து கொண்டு சுண்டல் விற்க வேண்டியதுதான்.

கனேடியப் பகுதியில் ஆசியர்கள் அதிகம் தென்பட்டார்கள். இந்தியர், இலங்கையர், அரபு நாட்டவர்கள், சீனர்கள்… என்று மிகக் கலவையான கூட்டம் நயாகராவைச் சுற்றி மொய்க்கிறது. இரவு நேரத்தில் வண்ண விளக்குகளில் அந்தப்பகுதி முழுவதும் ஜொலித்துக் கொண்டிருந்தது. ஏராளமான சூதாட்ட விடுதிகள் நீர்வீழ்ச்சியைச் சுற்றி. அமெரிக்கர்கள் சாரி சாரியாக ரெயின்போ பாலத்தின் மீது நடந்து வந்து கொண்டிருந்தார்கள். சூதாட்டப் பிரியர்களான அமெரிக்கர்கள் எங்கு போவார்கள், என்ன செய்வார்கள் என்பது பற்றி எனக்குச் சந்தேகமில்லை.

மற்றபடி அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் அதிக வித்தியாசமில்லை. சாலையின் நீளம் கிலோ மீட்டரில் இருப்பதுவும், பெட்ரோல் லிட்டர் கணக்கில் விற்கப்படுகிறது என்பதையும் தவிர. பச்சை வர்ண டாலர் நோட்டுக்களை மட்டுமே பார்த்துப் பழகிய கண்களுக்கு கனேடிய டாலரின் (டொலர் ?) பல வண்ணம் குளிர்ச்சியாக இருக்கிறது. அமெரிக்க டாலரை விட மதிப்பில் குறைந்திருந்தாலும், கனடாவில் விலைவாசி ஒன்றும் அப்படிக் குறைச்சல் இல்லை. வாங்கும் பொருளுக்கான வரி விதிப்பும் கனடாவில் மிக அதிகம். P.S.T, G.S.T என்று போட்டு வரி வரியாகத் தீட்டி விடுகிறார்கள்.

இரவு நயாகராவில் தங்கி இருந்து விட்டு, மறுநாள் டொரோண்டோ (இலங்கைத் தமிழில் ரொறேன்ரோ!) போவதாகத் திட்டம். நயாகராப் பகுதி தங்கும் விடுதிகளில் ஒரு நாள் இரவு தங்குவதற்கு வாடகையாகத் தலையையும், காலையும் விலையாகக் கேட்டதால் அங்கிருந்து கொஞ்சம் தள்ளி இருக்கும் செயிண்ட் கேத்தரின் என்ற ஊருக்குப் போனேன். நான் நினைத்தது போல செ. கேத்தரினிலும் அறை வாடகை குறைந்தது இல்லை. ஏதோவொரு அடையாளமற்ற மோட்டலில் 85 ‘கெனேடியன் டொலர் ‘ கொடுத்துத் தங்கி விட்டு மறுநாள் காலைப் பயணம் ரொறேன்ரோவை நோக்கி…

சரியான திட்டமிடல் இல்லாவிட்டால் சிக்கல்தான் என்பதற்கு எனது இந்தக் கனேடியப் பயணம் நல்ல உதாரணம். கனடாவில் எனக்கு ஒரு ஈக்குஞ்சைக் கூடத் தெரியாது. இருந்தாலும் சமாளித்துக் கொள்ளலாம் என்று துணிந்து கிளம்பிவிட்டேன். கோடையில் கனடாவைப் பார்த்தால்தான் உண்டு. இல்லாவிட்டால் இன்னும் ஒருவருடம் காத்திருக்க வேண்டும். குளிர் வாட்டி எடுக்கும் அங்கே.

டொரோண்டோவை நோக்கிச் செல்கின்ற, QEW என்றழைக்கப்படும் ‘குயீன் எலிஸபத் வேயில் ‘ டிராஃபிக் நெரிகிறது. 120 கி.மீ. வேகத்தில் கார்கள் வேகமெடுத்துப் பறக்கின்றன. முன்னால் செல்லும் காருக்கும், பின்னால் தொடரும் காருக்கும் அதிக பட்ச இடைவெளி 25 அடி கூட இருக்காது. ‘பம்பர் டு பம்பர் ‘ என்று சொல்வார்களே அது மாதிரி. அதிக பட்ச வேகம் 100 கீ.மி. என்ற சட்டத்தை யாரும் மதிப்பதில்லை போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன். அமெரிக்காவில் உபயோகத்திலிருக்கும் மைல் கணக்கில் காரோட்டிப் பழகிய என் போன்றவர்கள் கொஞ்சம் தடுமாறித்தான் போவார்கள். ஆச்சரியமான வகையில் விபத்துகள் எதுவும் என் கண்ணில் படவில்லை. அதுபோலவே போலிஸ் கார்களும். எப்படியோ தொலைந்து போங்கள் என்று விட்டு விட்டார்கள் போலிருக்கிறது!

கனடாவின் மிகப் பெரிய நகரம் டொரோண்டோ. விண்ணை முட்டும் கட்டிடங்களுக்கும், மேம்பாலங்களுக்கும், கேளிக்கைகளுக்கும் மற்ற மேற்கத்திய நகரங்களுக்கு எந்த விதத்திலும் சற்றும் குறையாதது. பார்ப்பதற்கு ஏராளமான இடங்கள் இருந்தாலும் முக்கியமாக நான் பார்க்க விரும்பியது நகரின் மத்தியப் பகுதியிலிருக்கும் CN டவரை. வட அமெரிக்காவிலிருக்கும் மிக உயரமான free standing structure என்பார்கள் அதனை. CN டவரின் மேலிருந்து பார்க்கையில் டொரோண்டோ இன்னும் அழகாக இருந்தது. மேக மூட்டமில்லாத நாட்களில், அங்கிருந்து 100 கி.மீ. தூரத்தில் இருக்கும் அமெரிக்க ரோச்சஸ்டர் நகரம் தெரியும் என்றார்கள். நான் சென்ற தினம் நயாகரா நீர்வீழ்ச்சியிலிருந்து எழும் நீராவியைப் பார்க்க முடிந்தது.

அமெரிக்காவின் உயரமான கட்டிடங்களான நியூயார்க்கின் வோர்ல்ட் டிரேட் செண்டர் (911 முன்பு) மற்றும் சிகாகோ நகரின் சியர்ஸ் டவர் இரண்டின் உச்சிக்கு சென்று பார்த்திருக்கிறேன். இன்னும் பாக்கி இருப்பது சியாட்டிலில் இருக்கும் space needle மட்டும்தான். அதையும் பார்த்துவிட்டால் வட அமெரிக்காவில் இருக்கும் எல்லா உயரமான கட்டிடங்களின் மீதும் ஏறிப் பார்த்து விட்டேன் என்று பீற்றிக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

எல்லாப் பெரு நகரங்களைப் போல்வே டொரோண்டோவின் மத்தியப் பகுதி மிகவும் நெரிசலாக இருக்க, டிராஃபிக் மூச்சு முட்டுகிறது. அங்குமிங்கும் ஓடும் ட்ராம் வண்டிகள், கார்கள், டூரிஸ்டுகள், உணவு விடுதிகள், அலுவலகங்கள் என்று மிகக் கோலாகலமாக இருக்கிறது down town. அங்கும் ஆசிய முகத்தவர்கள் அதிகம் தென்பட்டார்கள். நகரைச் சுற்றிலும் பார்க்க வேண்டிய ஏராளமான முக்கிய இடங்கள் இருக்கின்றன. பார்ப்பதற்கான நுழைவுக் கட்டணம் சிறிது அதிகம். ‘சிட்டி பாஸ் ‘ எனப்படும் மொத்த டிக்கெட் வாங்கிக் கொண்டால் ஏழெட்டு இடங்களை மிகவும் குறைந்த கட்டணத்திலேயே பார்த்து மகிழலாம். கார் பார்க்கிங் செய்வது இன்னொரு அவஸ்தை. பார்க்கிங் கட்டணங்களும் மிக அதிகம்.

யுனிவர்சிடி அவென்யூவில் இருக்கும் ராயல் கனேடியன் மியூசியமானது பெயருக்கேற்றபடி கொஞ்சம் அழுக்கடைந்து, மிகப் பழமையான ஒரு கட்டிடத்தில் ஜனத்திரளுடன் சத்தமாக இருக்கிறது. நான் சென்ற சமயம் மியூசிய விரிவாக்கப் பணிகள் நடந்து கொண்டிருந்தன என்பதைத் தவிர விஷேஷமாக ஒன்றுமில்லை. ஸ்கார்பரோவில் இருக்கும் டொரோண்டோ விலங்குக்காட்சி சாலை, காஸ-லோமா எனப்படும் அரண்மனை, டொரோண்டோ சயின்ஸ் சென்டர் என பார்க்க வேண்டிய பல இடங்கள் டொரோண்டோவைச் சுற்றி இருக்கின்றன.

அன்றைய இரவு தங்குவதற்கு ஒரு கையைக் கடிக்காத ஹோட்டலைத் தேடி அலைந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக டண்டாஸ் சாலை (Dundas Road) சாலைக்குப் போய்ச் சேர்ந்தேன். மேற்படி டண்டாஸ் சாலையில்தான் இந்திய, பாகிஸ்தானிய, இலங்கை, சீன, வியத்நாமிய, அரேபிய இன்னும் பல்வேறு ஆசிய மக்களின் வியாபாரத்தலங்கள் இருக்கும் இடம். இப்படி ஒரு இடம் இருப்பதை யாரும் எனக்குச் சொன்னதில்லை. சொல்லியிருந்தாலும் நம்பி இருக்க மாட்டேன். அந்த அளவிற்கு ஆசிய மக்களின் ஆக்கிரமிப்பு அங்கே.

முதல் இரண்டு ப்ளாக்கிற்கு அரேபியர்கள். அடுத்த இரண்டு ப்ளாக்கில் இந்திய, பாகிஸ்தானிகள். கொஞ்சம் தள்ளி இலங்கையர்கள். இன்னும் சிறிது தூரத்தில் ஒரு மிகப்பெரும் இடத்தில் அமைந்த சீன வியாபாரக் கட்டிடங்கள் என்று மிகவும் பரபரப்பாக இருந்தது. கடைகளின் பெயர்கள் அவரவர் தாய்மொழியிலியே எழுதி இருப்பதால் பார்த்தவுடனேயே இது எந்த நாட்டவரின் கடை என்பதை மிகவும் எளிதாகக் கண்டுபிடித்து விடலாம். இலங்கைத் தமிழர் கடைகளின் பெயர்ப்பலகைகளை தமிழில் எழுதி வைத்திருக்கிறார்கள். அந்தப் பகுதியில் நுழைந்தால் ஏதோ மயிலாப்பூர் லஸ் கார்னருக்கு வந்த உணர்வு.

டண்டாஸ் சாலையிலேயே ஒரு சுமாரான மோட்டலைப் பிடித்தேன் (80 கனேடியன் டாலர் ஒரு நாளைக்கு). பாத்ரூம் கதவைத் திறந்தால் மூட முடியாது; மூடினால் திறக்க இயலாது என்பதைத் தவிர அது பரவாயில்லாத ஹோட்டல்தான். நமது பக்கத்து ஆசாமிகள் இருக்கும் பகுதியில் தங்கி இருக்க வேண்டும் என்ற ஆவலினால் அதைப் பற்றி பெரிதாக ஒன்றும் எண்ணிக் கொள்ளவில்லை.

ஊர்சுற்றி களைப்பில் படுக்கையில் விழுந்து டெலிவிஷனைப் போட்டால், கண் முன்னே மளாரென்று முக்கல் முனகலுடன் XTSY சானல் ஓடிக் கொண்டிருந்தது. நல்லவேளையாக என் மகள் பாத்ரூமில் இருந்தாள். இல்லாவிட்டால் மிகவும் தர்ம சங்கடமாகப் போயிருக்கும். அவசரமாக ரிமோட் கன்ட்ரோலை அவள் கண்ணில் படாத இடத்தில் ஒளித்து வைத்தேன்.

‘காசை மிச்சம் பண்ணுகிறேன் பேர்வழி என்று எங்களை இந்த மாதிரியான பாடாவதி ஹோட்டலில் கொண்டுவந்து தள்ளி விட்டார்களே ‘ என்று என் மனைவி என்னைக் கொமட்டில் இடித்தாள். அவளை சமாதானம் செய்வதற்காக இலங்கைத் தமிழர் ஒருவரால் நடத்தப்படும் ஒரு நகைக் கடைக்கு அழைத்துப் போயிருந்தேன். கடை உரிமையாள அம்மாள் ஒரு யாழ்ப்பாணத் தமிழர். சிரித்த முகத்துடன் இனிமையாக யாழ்ப்பாணத் தமிழில் கதைத்தாலும் வியாபாரத்தில் படு கெட்டியானவர் ( ‘விலை குறைக்க ஏலாது. வேறு ஏதாவது கெட்டியான நகை வாங்குங்கோ. விலை கொறைச்சுத் தாரன் ‘).

நகை வாங்குவதில் இந்தியத் தமிழர்களுக்கு, இலங்கைத் தமிழர்கள் எந்தவிதத்திலும் குறைந்தவர்கள் இல்லை என்பது கடையில் வந்து குவியும் கூட்டத்தைப் பார்த்தாலே தெரிந்தது. ‘நல்லதுதானே ? இங்கு வந்தாவது அவர்கள் சுபிட்சமாக வாழ்ந்தால் சரிதான் ‘ என்று எண்ணிக் கொண்டேன். அடுத்த அரைமணி நேரத்தில் அந்த எண்ணத்தில் மண் விழுந்தது.

ஏதாவது இந்திய ரெஸ்டாரெண்ட்டில் இரவு உணவு சாப்பிடலாம் என்று நினைத்துப் போய்க் கொண்டிருந்த போது, ‘சிக்கன் பிரியாணி $1.99 ‘ என்ற போர்டைப் பார்த்து ஆச்சரியப்பட்டு உள்ளே நுழைந்தேன். அது ஒரு பாகிஸ்தானி ரெஸ்டாரெண்ட் (பசி வந்திட பாகிஸ்தானியாவது, பலூசிஸ்தானியாவது!) $1.99க்கு உள்ளங்கை அகல டப்பாவில் கிடைத்த சிக்கன் பிரியாணி குழந்தைகளுக்குக் கூடக் காணாது. கஸ்டமர்களை வரவழைக்கு அது ஒரு வியாபாரத் தந்திரம் என்று புரிய அதிக நேரமாகவில்லை. எனவே வேறு உணவு வகைகளுக்கு ஆர்டர் கொடுத்து விட்டுக் காத்திருக்கையில் உரிமையாளரிடம் மெதுவாகப் பேச்சுக் கொடுத்தேன்.

‘இந்திய, பாகிஸ்தானிய மக்கள் இந்தப் பகுதியில் நிறையப் பேர் இருக்கிறார்கள் போலிருக்கிறதே ? ‘

‘ஆமாம். அவர்கள் மட்டுமில்லை. எல்லா நாட்டுக்காரர்களும் இங்கு இருக்கிறார்கள். வரும்போது நீங்கள் பார்த்திருக்கக் கூடும் ‘

நியூயார்க்கின் ஜாக்ஸன் ஹைட்ஸ் பகுதியில் அருகருகே வசிக்கும் இந்திய, பாகிஸ்தானிகளுக்கிடையே அடிக்கடி நடக்கும் மோதல் நினைவுக்கு வந்தது. அதுபோல கனடாவிலும் நடக்கிறதா என்பதைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆவலுடன் அதைப் பற்றி அவரிடம் கேட்டேன்.

‘அப்படியெல்லாம் எங்களுக்குள் எந்தப் பிரச்சினையும் இல்லை. பிரச்சினை செய்பவர்கள் இலங்கைக்காரர்கள் மட்டும்தான் ‘ என்றார்.

‘என்ன மாதிரியான பிரச்சினைகள் ? ‘

‘இலங்கையர்களுக்குள் இரண்டு குழுக்கள் இருக்கின்றன. ஒருவரோடொருவர் அடிக்கடி துப்பாக்கியால் சுட்டு சண்டை இட்டுக் கொள்வார்கள். ஒரு குழு இன்னொரு குழுவினரைக் கொலை செய்வது இந்தப் பகுதியில் சகஜம் ‘ என்றார்.

சொல்லொணாத் துன்பத்துடன், புலம் பெயர்ந்து இங்கு வந்தும் அவர்களுக்கு நிம்மதி இல்லை என்று நினைக்கையில் மிகவும் வருத்தமாக இருந்தது. அவர்களாகவே உணர்ந்தால்தான் உண்டு. நாமென்ன செய்ய முடியும் ?

இரண்டு மூன்று தமிழ் செய்தித்தாள்கள் கண்ணில் பட்டன. அத்தனையும் இலங்கைத் தமிழர்களால் நடத்தப்படுபவை. இந்திய செய்தித்தாள்களுக்கும் பஞ்சமில்லை. நான் சென்றிருந்த சமயம் ஒரு இந்தியர் கனடாவின் சுகாதார அமைச்சராகி இருந்தார். கனேடியப் பொருளாதாரத்தில் இமிக்ரண்ட்களின் பங்கு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போவது கண்கூடாக் தெரிந்தது.

கனேடியப் பெண்கள் உடை விஷயத்தில் மிகவும் தாராளமாக இருக்கிறார்கள். அவர்கள் உடைக்கு முன்னே அமெரிக்கப் பெண்களின் உடை மிகவும் கட்டுப் பெட்டியானது. ‘மினி ஸ்கர்ட் ‘ கேள்விப்பட்டிருக்கிறோம். ‘மைக்ரோ ஸ்கர்ட் ‘ பார்த்திருக்கிறீர்களோ ? கனடாவில் ஏராளமான பெண்கள் ‘மைக்ரோ ஸ்கர்ட்டு ‘களுடன் திரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை உங்களுக்குச் சொல்லியாக வேண்டும். அதையும் விட மோசமானது குட்டைப் பாவாடை அணிந்த கனேடியப் பெண்டிரைக் காண்பது. பிரிட்டனி ஸ்பியர்ஸ்சை விட காலங்குலம் கீழே, பெயருக்கேற்றபடி ‘படு ‘ குட்டையாக இருக்கும் உடையைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு B.P எகிறிப்போனது. எந்த நேரத்தில் அவிழ்ந்து கீழே விழப்போகிறதோ என்ற அச்சத்தில்தான் ஸ்வாமி! தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள்.

இலங்கை எழுத்தாளர்களில் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளரான திரு. முத்துலிங்கம் டொரோண்டோவில் வசிப்பவர். அவரைச் சந்திக்க முயற்சித்தும் முடியாமல் போய்விட்டது. நான் போன சமயத்தில் அவரின் விருந்தினர்கள் அவரைக் காண வருவதாக இருந்ததால் நானும் போய் அவரைத் தொல்லை செய்ய விரும்பவில்லை ( ‘இதேதடா நியூசென்ஸ் ‘ என்று நினைத்துக் கொண்டாரோ என்னவோ ?) இவ்வளவு தூரம் வந்த பிறகும் அவரைச் சந்திக்க முடியாமல் போனது எனக்கு ஒரு குறைதான். மற்றபடி எனது கனேடியப் பயணம் மிக இனிமையானது.

Oui Monsieur. Votre canada est beau….et vos femmes aussi…!!!

😉

—-

narenthiranps@yahoo.com

Series Navigation

நரேந்திரன்

நரேந்திரன்