அறியப்படாத பக்கங்கள் -கட்டுரை(சுயசரிதம்)

This entry is part [part not set] of 41 in the series 20040729_Issue

விக்ரமாதித்யன்


‘வடிவோடு படமெழுதும் ஓவியனைப் போர்க்களத்தில் உருட்டிவிட்டால் என்னாகும். ‘

1969 ஆம் வருஷம். பி.யூ.சி. முடித்தாயிற்று. மேலே படிக்க வழியில்லை. நாங்கள் இருந்த வாசுதேவநல்லூர் பக்கம் மூன்று ஆண்டுகளாக வானம் பொய்த்திருந்தது. மழையே இல்லை. அப்பா, தலைவன்கோட்டை ஜமீனில் செக்ரட்டரி. ஜமீன் முழுக்க முழுக்க காடுகரை விவசாயத்தை நம்பித்தான். அரண்மனையில் செழிப்பில்லை. ஆதலினால், எங்களுக்கும் பிரச்னை. அப்பா அங்கே இங்கே அலைந்து பார்த்தார்கள். ஒன்றும் வாய்க்கவில்லை. எங்கேயாவது வேலைக்கும் போகலாமென்றால், எஸ்.எஸ்.எல்.சி. சர்டிபிகேட் புக் வேண்டும். சான்றிதழை வாங்க வசதியில்லை. அறுநூறு ரூபாய் போலக் கட்டவேண்டியது இருந்தது. ஹாஸ்டல் பாக்கி, தேர்வுக் கட்டணமே கல்லூரியிலிருந்துதான் கட்டினார்கள்.

ஊரிலேயே இருந்தேன்.அப்பொழுதுதான் சங்கரன் கோயில் தபசுப் பட்டிமன்றத்துக்குக் குன்றக்குடி அடிகளார் வந்திருந்தார். வள்ளுவர் செந்தமிழ்க் கல்லூரி என்று தொடங்கப்பெற்ற அந்தக் கல்லூரியை அடிகளாரிடமே கொடுத்துவிட்டார்கள்.

அன்றைக்கு இருந்த மனநிலையில் மடத்தில் சேர்ந்துவிடலாம் என்று தோன்றியது. தமிழறிவு இருந்தது. பேசத்தெரியும். எழுதமுடியும். தொடர்ந்து படிக்கவேண்டும். அப்பாவிடம் சொன்னான். வேண்டாம் என்றுதானே சொல்வார்கள். என்னுடையப் பிடிவாதத்தைக் கண்டு யோசித்தார்கள். அம்மாவுக்காகத் தயங்கினார்கள். அம்மாவிடம் சொல்லிக் கொள்கிறேன் என்று கூறிவிட்டேன். அடிகளாரைப் பார்ப்பது என்று முடிவாயிற்று.

அடிகளார், பயணியர் விடுதியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். நிகழ்ச்சி இரவுதான். சாயங்காலம் குளித்துவிட்டுப் பார்வையாளர்களைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தார். போயிருந்தோம். நெடுஞ்சாண்கிடையாக அடிகளார் காலில் விழுந்தேன். சிறுவட்ட வெள்ளி டப்பாவில் இருந்து விபூதி எடுத்துக் கொடுத்தார். விஷயத்தைச் சொன்னேன். அப்பாவைப் பார்த்து, கேட்டு, விசாரித்தார். நான் உறுதியாக இருந்ததை நினைத்தோ என்னவோ குன்றக்குடி வந்து சேருவதற்கு உதவியாளரிடம் சொல்லி, பணம் கொடுத்து அனுப்பிவைத்தார்.

வீட்டுக்கு வந்து அம்மாவிடம் பூடகமாகத்தான் சொன்னேன். ஆனால், அவள் யூகித்துக் கொண்டாள். அப்பாவைப் பிலுபிலுவென்று பிடித்துக் கொண்டாள்;

‘அவன என்ன செய்யப் போறீங்க. கறிவேப்பிலைக் கன்று மாதிரி வளத்தேம்யா. சாமியாராகவா பெத்தேன். அவன் ஒன்றும் படிக்கவேண்டாம். இங்கியே இருக்கட்டும். ‘

அழ ஆரம்பித்துவிட்டாள்.

அப்பா சமாதானப்படுத்தினார்கள்.

கடைசியில், போவதில்லை என்றாகியது.

சிறிது காலம் அப்படியே கழிந்தது. படிக்கவும் முடியவில்லை. வேலைக்குப் போகவும் தோதில்லை. அப்பாமீது கோபம் கோபமாய் வந்தது. இது பூசலாகி, சண்டையாகி வீட்டைவிட்டு வந்துவிட்டேன்.

மதுரையில் மேலக் கோபுரவாசலில் ஓட்டல் வேலைக்கு எடுக்க ‘புரோக்கர்கள் ‘ உண்டு. அப்படித்தான் மேலூர் வந்து சர்வராக இருந்தது. அடிகளாருக்கு கடிதம் எழுதியிருந்தேன். வந்து பார்க்கச் சொல்லப்பட்டிருந்தது.

* * *

குன்றக்குடியில் வேலை போட்டுக் கொடுத்தார்கள். அதிக வேலை ஒன்றும் இல்லை. எப்பொழுதாவது ஏதாவது நகல் செய்யவேண்டியிருக்கும். அடிகளார் மூலம் சேர்ந்தவன் என்று வேலை சொல்லமாட்டார்கள்.

கொஞ்சநாள் மடத்திலேயே சாப்பாடு. பிறகு சாப்பாடு சரியில்லை என்று ஐயர் ஒருவர் வீட்டில்.

குன்றக்குடி ஓர் அழகிய ஊர்.

ஆதீனத்துக்கு எதிரே வடபுறத்தில் ஓர் அருமையான குளம்.

காலையில் நல்ல குளியல்.

நூலகர் மரு.பரமகுரு பழக்கத்தில் படிக்க புஸ்தகங்கள்.

அம்மா வந்தாள், காயாவனம், வேரும்விழுதும் நாவல்கள்.

* * *

அடிகளார் ஊரில் இருக்கிற நாள்களில்தாம் ஆதீனமும் தேவஸ்தானமும் ஜெ ஜெ என்றிருக்கும். ஆனால், மாதத்தில் பத்துப்பதினைந்து நாள் அவர் ஊரில் இருந்தாலே அதிகம். மற்ற சமயம் பூரா முகாம்தான். அடிகளார் கார் ஊர் எல்லையைக் கடந்ததுமே எல்லாம் மாறிப்போய்விடும். கல்யாணமானவர்கள் வீட்டுக்கும், பக்கத்து ஊர்க்காரர்கள் அவர்கள் ஊருக்கும் பிரம்மச்சாரி இளைஞர்கள் சினிமாவுக்கோ கள்குடிக்கவோ புறப்பட்டுவிடுவார்கள்.

என் கதையைத் தெரிந்து கொண்டவர்களில் சிலர், ‘என்னய்யா இது அநியாயமா இருக்கு. இந்த வயசில ஏன்யா சாமியாராகணும். எங்க போயும் பிழைச்சிக்கலாமே ‘ என்று கேட்டார்கள்.

அன்றைக்கு அவர்கள் குழு தோப்புக்குக் கிளம்பியது. என்னையும் கூட்டிக்கொண்டு போனார்கள். அங்கேதான் முதன்முதலாகக் கள்குடித்ததே. நான் குடிப்பதைப் பார்த்த நண்பர் ஒருவர் இது புதிது என்று நம்பவில்லை. பொய் சொல்வதாகக் கூறினார்.

* * *

மானேஜர் மூலம் எனக்குக் தெரிவிக்கப்பட்டிருந்தது. தினமும் மலை மேல் உள்ள முருகனைக் கும்பிட்டுவிட்டு வரவேண்டும். அதிகம் யாரிடமும் பழக வேண்டாம். இப்படி இப்படி. ஆனால் நான் அப்படியெல்லாம் இல்லை.

வேறு வேலைக்கு மாற்றினார்கள். ஆதீன கேஷியர். அடிகளாரை நாளும் பார்க்கும்படி அமையும்.

நெளிவு சுழிவு தெரிந்தவர்கள் மட்டுமே அதில் இருக்கமுடியும்.

எதற்கு முதலில் கொடுக்கவேண்டும், யாருக்கு முன்னுரிமை தரவேண்டும், பணம் இல்லாத சமயம் எப்படி சமாளிக்க வேண்டும் என்றெல்லாம் தெரிந்திருக்கவேண்டும். இல்லை என்று சொல்லக்கூடாது. தவிரவும், பணத்தைப் புழங்கியோ கொடுத்து வாங்கியோ எனக்குப் பழக்கமும் இல்லை.

இந்த வேலை நமக்குப் பொருத்தமில்லை என்று மட்டும் தெரிந்திருந்தது.

அடிகளாரைப் போய்ப் பார்த்தேன்.

இந்த வேலைதான் இருக்கிறது என்று சொன்னதும் ஊருக்குப் போகிறேன் என்று வந்துவிட்டேன்.

* * *

கல்யாணத்துக்குப் பிறகு வேலையில்லாமல் இருந்த சமயம்.

வேலை கேட்டு எழுதியிருந்தேன்.

வரச் சொல்லிப் பதில் வந்தது.

ஒரு அதிகாலையில் புறப்பட்டுப் போனேன்.

‘மக்கள் சிந்தனை ‘ மாதப் பத்திரிகைப்பொறுப்பு.

ப்ரூஃப் பார்ப்பது, பத்திரிகைகளை அனுப்பிவைப்பது,

சந்தாதாரர்களுக்கு நினைவூட்டுமடல் எழுதுவது, அடிகளாரிடம்

‘மேட்டர் ‘ கேட்டு வாங்குவதும்தாம் வேலைகள்.

ஒருமுறை விமலாதித்த மாமல்லன் வந்து பார்த்தார். 83ஆம் ஆண்டு என்று ஞாபகம். இலங்கைத் தமிழர் பிரச்னை ஏற்பட்டிருந்த காலம். மதுரையில், ‘இலக்கிய வெளிவட்டம் ‘ சார்பில் ஒரு கருத்தரங்கு நடத்தினார்கள்.

மாமல்லன் கூட பழ.நெடுமாறன் போராட்டத்தில் கலந்து கொள்ளவே வந்திருந்தார்.

‘ஆகாசம்/நீலநிறம் ‘ முதல் தொகுப்பு தந்த கிளர்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்த நாள்கள் அவை. இரண்டொரு முறை தென்காசி வந்து போனேன். சமயவேல் கோயில்பட்டிக்கு மாற்றல் வாங்கி வந்திருந்தார். அவரையும் தேவதச்சன், அப்பாஸ், கெளரிஷங்கரையும் பார்த்துவிட்டு வந்தேன். எல்லாம் சரியாகப் போய்க்கொண்டிருந்தது. இப்படியே ‘செட்டிலா ‘கி விடலாம் போல இருக்கிறதே என்று சந்தோஷப்பட்டுக் கொண்டேன்.

ஸ்ரீசண்முகநாதன் அச்சகம் என்று ஆதீன பிரஸில்தான் பத்திரிகை வேலை. எனக்கும் அங்கேதான் மேஜை, நாற்காலி, இருப்பு.

அந்த ஆண்டிலிருந்து மூன்றாண்டுக்கு அச்சகம் குத்தகைக்கு விடப்பட்டது. அச்சகத்தில் நிர்வாகப் பொறுப்பில் இருந்தவரே எடுத்திருந்தார். பத்திரிகையையும் அவரே பார்த்துக் கொள்வதாக ஏற்பாடு. நூலக உதவியாளராக என்னை மாற்றியிருந்தார்கள். நல்லவேலை என்று நினைத்துக் கொண்டேன்.

அடிகளாரின் நூலகம் மிகப்பெரியது.

சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்திலிருந்து வாசகர்வட்ட நூற்கள்வரை உள்ளது.நிறைய படிக்கலாம்.இப்படி ஆயிரத்தொரு கனவுகளோடு போனேன், மறுநாள் காலை.நூலகர் மரு. பரமகுரு நல்ல மனுஷன்.மரபு வழிப்பட்ட இலக்கியம் தேர்ந்தவர்.அவரோடு ஒத்துப்போகும்.ஒரு குழப்பமும் இராது.

* * *

அது முகூர்த்தமாதம். கையில் பன்னிரெண்டு கல்யாணப்பத்திரிகைகள் கொடுத்தார், நூலகர். வாழ்த்து எழுதவேண்டும், அவ்வளவுக்கும். அதுவும், கூடுவிட்டுக் கூடு பாய்ந்து. அதாவது, அடிகளார்க்குப் பதில் நான். காலையில் நாலு வாழ்த்துகள். மதியச் சாப்பாட்டுக்குப் பிறகு நாலு. சாயுங்காலம் காபி, சிகரெட் பிடித்துவிட்டு வந்து மிச்சம்.

அனேகமாக, எல்லாமே ரெடிமேட் வாசகங்கள்தாம். அடுத்தநாளும் இதே போலத்தான். மூன்றாவது நாளும் இப்படியே. யோசித்துப் பார்த்தேன். முடிவெடுத்தேன். இந்த வேலை நமக்குச் சரிப்படாது. இப்படியென்றால்தான் சர்வீஸ் கமிஷன் எழுதி வேலை வாங்கியிருக்கலாமே.

ஒரு திருமண வாழ்த்தை மனசுநோக எழுதப்படாது. ஆனால், தம்பதிகள் யார். தெரியாது. அவர்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம். கிடையாது. பிறகு எதுக்கு. இதுக்கு நான் ஆளில்லை. வாழ்த்துவது ஸ்ரீகுரு மகா சந்நிதானம். வாழ்த்துப்பெறுபவர்கள் அவருடைய அன்பர்கள்.

இடையில் நான் யார்.

என் வயிற்றுப்பாட்டுக்காக இப்படி ஒரு வேலையா.

விடிந்தது.

போனேன்.

பரமகுருவிடம் சொன்னேன்.

‘அவசரப்பட்டு முடிவெடுத்து விடாதீங்க ‘ என்றார்.

‘இல்ல. யோசிச்சுதான் செய்றேன். ‘

‘வேற என்ன பண்ணுவீங்க. ‘

‘பாத்துக்கலாம்.

சாமிமேல இருக்கா. ‘

கிடுகிடுவென மாடி ஏறிப்போனேன்.

அடிகளாரிடம் பேசினேன்.

அவர் ஒன்றும் சொல்லவில்லை.

உதவியாளரைக் கூப்பிட்டுவிட்டார்.

சம்பளப்பணம் கொடுத்தார்கள்.

உதகமண்டலம் மணிக்கண்ணனிடமிருந்து கடிதம் வந்திருந்தது. ஊட்டிக்குக் கூப்பிட்டுக் கொண்டிருந்தார்.

ட்டி.எம். நந்தலாலா அங்கேதான் டி.பார்ம் படித்துக் கொண்டிருந்தார். பிரம்ம ராஜன் இருந்தார். அடுத்த நாள் காலையில் உதகையில் இருந்தேன்.

* * *

பிறகு பிறகும் அடிகளாரோடு நல்ல உறவு இருந்தது.

அவர் என்னைப் புரிந்து கொண்டிருப்பாரா.

****

Series Navigation

விக்ரமாதித்யன்

விக்ரமாதித்யன்