அழகும் அதிகாரமும் (காதல் தேவதை-மொழிபெயர்ப்பு நாவல் அறிமுகம்)

This entry is part [part not set] of 54 in the series 20040722_Issue

பாவண்ணன்


மலரினும் மென்மை மிகுந்த காதல் உணர்வுகள் அரும்பத் தொடங்கியதும் மனம் அடையும் மாற்றங்களும் விசித்திரங்களும் கணக்கிட முடியாதவை. சங்கக்கவிஞர்கள் முதல் தற்காலப் படைப்பாளிகள்வரை பலரும் மனத்தின் அவ்விசித்திரக் கோலங்களைக் காவியமாக்கியிருக்கிறார்கள். பிரிந்தால் வெம்மையாகவும் சேர்ந்திருந்தால் குளிர்ச்சியாகவும் உணரவைக்கிற மன அவஸ்தைகளை ஆயிரமாயிரம் பக்கங்களுக்கு எழுதியபிறகும் சொல்வதற்கு இன்னும் பல விஷயங்கள் எஞ்சியிருக்கின்றன. பிரெஞ்சு எழுத்தாளரான மாஸோ எழுதிய ‘காதல் தேவதை ‘ நாவல் அவஸ்தை கலந்த அந்த இன்பத்தை முற்றிலும் ஒரு புதிய கோணத்திலிருந்து முன்வைக்கிறது.

காதலின்பத்துக்காக தன்னைத்தானே வருத்திக்கொள்வது புதிய விஷயமல்ல. மடலுார்தல் முதல் ஒருதலைக்காமமாக முன்மொழியப்பட்ட வரிகள் வரை இதற்குச் சான்றாக பல உள்ளன. அவையனைத்தும் காதலை யாசிப்பவை. தன்னை ஏற்றுக்கொள்ளுமாறு கோரிக்கையை முன்வைப்பவை. நாவலாசிரியரான மாஸோ படைத்துக்காட்டும் காதல் மனமோ முற்றிலும் விசித்திரமானது. காதலியால் வதைபடுவதை பேரின்பமாகக் கருதும் மனம் அது.

காதல் ஒரு புதிரான சக்தி. காதல் வசப்பட்டவர்கள் அச்சக்தியால் இயக்கப்படும் பொம்மைகளாகிவிடுகிறார்கள். அது இழுக்கும் திசையில் அலைகிறார்கள். அது புன்னகைக்கத் துாண்டும்போது புன்னகைக்கிறார்கள். ரத்தம் சிந்தவைக்கும்போது மகிழ்ச்சியுடன் ரத்தம் சிந்துகிறார்கள். காதலுக்கு நன்மை, தீமை என்கிற பேதமோ மகிழ்ச்சி, துக்கம் என்கிற மாறுபாடோ ஒருபோதும் தெரிவதில்லை. அது என் றென்றும் பெருகிக்கொண்டே இருக்கும் ஊற்று. ஆனந்தத்தையும் அனுபவிக்கும். வேதனையையும் அனுபவிக்கும். அனுபவிப்பதுமட்டுமே அதன் விதி. வசப்பட்டு விழுந்துகிடப்பதோ காதலிப்பவர்களின் இயல்பு. காதல் காரணங்களாலும் தர்க்கங்களாலும் வரையறுக்க இயலாத உணர்வு. ராவணனுக்குச் சீதைமீது ஏற்பட்ட ஈடுபாட்டையும் கோவலனுக்கு மாதவியின்மீது ஏற்பட்ட ஈடுபாட்டையும் எந்தக் காரணத்தைக்கொண்டு மதிப்பிட முடியும் ?

இந்த நாவலின் கதைப்போக்கில் செவாலியே லேக்கா என்னும் பிரெஞ்சுப் புராணப்பாத்திரத்தின் சித்தரிப்பு ஓரிடத்தில் இடம்பெறுகிறது. லேக்காவுக்கு ஒருத்தியின்மீது உயிருக்குயிரான காதல் . ஆனால் அவளுக்கோ இன்னொருவன்மீது காதல். தண்டனைக்காளாகி தண்டனைக்கட்டையில் அவன் கட்டப் படுகிறான். அடுத்த கணம் அவன் மரணம் நிச்சயம் என்கிற நிலையிலும் அடுத்தவனுடன் கைகோர்த்து நிற்கிற அந்த நங்கையின் மீதுள்ள அவனுடைய காதல் தீவிரமாகிறதே தவிர குறைவதில்லை. நடுக்கமின்றி அதை எடுத்துச்சொல்லவும் அவன் தயங்கவில்லை. காதல் தேவதை நாவலின் நாயகனான செவரின் என்னும் இளைஞனுக்கு வான்டா என்னும் அழகிய பெண்ணின் மீது உருவாகும் காதலும் இத்தகையதாகவே உள்ளது. லேக்காவின் காலமும் செவரினுடைய காலமும் வேறுவேறாக இருக்கலாம். ஆனால் காலம் மாறினாலும் காதலர்கள் மாறினாலும் ஊர் மாறினாலும் ஒரேவித காதல் உணர்வே மாறாத தன்மையுடன் உள்ளது என்பதை உணரவைக்கிற விதமாக படைப்பு அமைந்திருக்கிறது.

ஓவியத்தில் ஈடுபாடுடைய செவரின் என்னும் இளைஞனுக்கு அவன் வீட்டு மாடியில் குடிவரும் வாண்டா என்னும் அழகியின்மீது உருவாகும் நாட்டத்திலிருந்து தொடங்குகிறது கதை. அவன் மனம் அவளைக் காதல் தேவதையான வீனஸாகவே எண்ணுகிறது. அவள் காதலைப் பெறவேண்டும் என்று ஆவலில் துடிக்கிறது. அவன் மனம் இயல்பான வீனஸைவிட மேல்கோட்டு அணிந்த வீனஸ் மீது ஆழ்ந்த ஈடுபாடுடையதாக உள்ளது. அந்தத் தோற்றம் வசீகரம் மிகுந்ததாக அவனுக்குத் தோன்றுகிறது. அவளுடன் நெருக்கமாக இருக்க நேரும் தருணத்தில் அவளை மேல்கோட்டு அணியத் துாண் டி அக்கோலத்தில் அவளைக் கண்டு ரசிப்பதும் கைகளில் முத்தமிடுவதும் கட்டித் தழுவுவதுமான பல காட்சிகள் இடம்பெறுகின்றன. வாண்டாவுக்கு அவன் செய்கைகள் முதலில் வேடிக்கையாகத் தோற்றமளிக்கின்றன. பிறகு அவள் அதை ரசிக்கத் தொடங்குகிறாள். அதற்கப்புறம் ரசித்து ஆடும் ஒரு விளையாட்டுப்பொருளாக அவனை ஆட்டுவிக்கிறாள்.

மேல்கோட்டு இந்த நாவலில் முக்கியமான படிமம். அழகின் அடையாளமாகவும் அதிகாரத்தின் அடையாளமாகவும் ஒரே சமயத்தில் தோற்றம் தருகிறது அது. செவரினுக்கு அது தெரியாமலில்லை. அதிகாரத்தின் எல்லை எதுவரைக்கும் நீளும் என்று தெரியாமலேயே அவள் தன்மீது அதிகாரம் செலுத்த அவன் தாராளமாக இடம்கொடுக்கிறான். அவள் சிரிப்புப் பேச்சையும் கொஞ்சலையும் நம்பி அடிமைப்பத்திரம் எழுதிக்கொடுக்கிறான். ஒவ்வொரு நாளும் சாட்டையடி பட்டு வேதனையில் துடிக்கிறான். உடல்கொள்ளும் வேதனைகள்கூட அவனுக்கு இன்பமயமாகத் தோன்றுகின்றன. விளையாட்டு அதிகாரம் என்பது ருரமான அதிகாரமாக உருமாறுகிறது. கணத்துக்குக் கணம் அவமானப்படுத்துகிறாள், ரத்தம் சொட்டச்சொட்ட சாட்டையால் அடித்து வீழ்த்துகிறாள். ஈரத்தரையில் உறங்கவைக்கிறாள். வேளைக்கு உணவின்றி பசியில் துவளவைக்கிறாள். மூன்றாம் வகுப்புப் பெட்டியில் ஒரு அடிமையைப்போல அழைத்துச் செல்கிறாள். குற்றேவல்களைக் கணத்தில் நிறைவேற்றும் பணியாளனாக மாற்றுகிறாள். திட்டுகிறாள். தான் மட்டும் வாகனத்தில் அமர்ந்தபடி பின்னாலேயே அவனை ஓடிவரச் செய்கிறாள். எந்தத் தருணத்திலும் அவமானத்துக்குள்ளாக்கத் தயாராக இருக்கிறாள். ஆனால் இவை எதுவுமே அவனுக்குப் பொருட்படுத்தத்தக்க ஒன்றாக இல்லை. அவன் மனத்தில் அவள் மீதுள்ள காதலில் ஒரு விழுக்காடு அளவுகூட குறைவதில்லை. ரத்தம் பெருக்கெடுத்தோட அரைமயக்க நிலையில் விழுந்துகிடக்கும் போதுகூட, எழுந்து நின்று தன்னை முத்தமிடவும் தழுவவும் இன்பம் நுகரவும் அவள் அளிக்கும் அனுமதிகள் அவனுக்குச் சொர்க்கமாக உள்ளன.

இது என்ன காதல் என்று வசிப்பவர்களுக்குத் தோன்றும் வகையில் செவரின் ஒவ்வொரு கட்டத்திலும் நடத்தப்படுகிறான். ஆனால் எக்கணத்திலும் எக்காரணத்தை முன்னிட்டும் அவனுடைய காதல் குறைவதில்லை. ஒரு கட்டத்தில் வாண்டாவால் விரும்பப்படுகிற ஒரு கிரேக்க இளைஞனுடைய கையால் அவன் சாட்டையடிகளை ஏற்றுக்கொள்ளவேண்டிய சூழல் நேர்கிறது. தனக்குக் கிட்டிய அதிகாரத்தை அதுவரை அவன்மீது நேரிடையாக செலுத்தி வந்த அவள், இன்னொருவன் வழியாகவும் அந்த அதிகாரத்தைச் செலுத்த முற்படுகிறாள். அக்கணத்தில்தான் அவனுக்குள் அனைத்தும் தெளிவுக்கு வந்துவிடுகிறது. காலம்காலமாக பெண்கள்மீது வெறித்தனமாக உருவாகும் காதல், எல்லா ஆண்களையும் வழியற்ற காட்டில் அலைந்து திரியவைத்து துரோகங்களுக்கும் வறுமைக்கும் கீழ்மைக்கும் அவமானங்களுக்கும் ஆளாகவைத்து தவிக்கவிட்டதைப்போலவே தனக்குள் பிறந்த காதல் உணர்வும் தன்னைத் தவிக்கவைத்ததை அசைபோடுகிறான். பயங்கரமான ஒரு கனவிலிருந்து விழிப்புற்றதைப்போல இருக்கிறது அவனுக்கு. தீவிரமான ஒரு துாண்டுதலால் உந்தப்பட்டு அந்த வலையிலிருந்து தன்னைத்தானே விடுவித்துக்கொண்டு வெளியேறிவிடுகிறான்.

மனப்பூர்வமாக காதலிப்பதாகச் சொல்பவனை வதைக்கு ஆளாக்க விழையும் பெண்ணின் விருப்பமும் ஆசைப்பட்ட பெண்ணின் வதைகளை ஆனந்தமுடன் அனுபவித்தபடி அவள் காலடியில் விழுந்து கிடப்பதே இன்பமென்று கருதும் ஆண்களின் ஆசையும் கூர்ந்து கவனித்தக்க அம்சங்களாகும். மனஇயக்கத்தின் தடங்களைப் பின்பற்றிச் செல்ல விழையும் படைப்பாளியின் ஆர்வமே இப்படைப்பைச் சிறந்ததாக்குகிறது. காதல் உறவில் நிகழும் வேதனைகளையும் இன்பங்களையும் அசைபோடுவதன் வாயிலாக காதலைப்பற்றியும் ஆண் பெண் உறவைப்பற்றியும் இன்னொரு முறை மனத்துக்குள் மதிப்பிட்டுக்கொள்ள இந்த நாவல் வாசிப்பு உதவக்கூடும். மிகச்சிறப்பான முறையில் அழகான மொழியில் இந்தப் பிரெஞ்சு நாவலை ஆங்கிலத்தின் வழியாக தமிழில் மொழிபெயர்த்துள்ள செந்துாரம் ஜெகதீஷ் மிகவும் பாராட்டுக்குரியவர். அருமையாக வெளியிட்டுள்ள யுனைடெட் ரைட்டர்ஸ் வெளியீடும் பாராட்டுக்கு உரியது.

( காதல் தேவதை. பிரெஞ்சு நாவல். மூல ஆசிரியர்: லியோபோல்ட் வான் சாஸெ மாஸோ. தமிழில் : செந்துாரம் ஜெகதீஷ் யுனைடெட் ரைட்டர்ஸ் வெளியீடு, 130/2, அவ்வை சண்முகம் சாலை, கோபாலபுரம், சென்னை-86. விலை ரூ55)

paavannan@hotmail.com

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்