எத்தனை நூற்றாண்டு வந்தாலும்

This entry is part [part not set] of 50 in the series 20040715_Issue

மாலதி


—- வீட்டில் கத்திக்கொண்டே இருந்தால் தான் என் இருப்பு புலப்படும் என்று யாரும் சொல்லிக்கொடுக்கவில்லைதான். எப்படியேனும் நேரம் ‘அட்ஜஸ்ட் ‘ செய்து அட்டெண்ட் செய்கிற மெடிட்டேஷன், கீதை, பெர்சனாலிட்டி இத்யாதி க்ளாஸ்களில் கற்றுக் கொடுத்ததெல்லாம் கோபம் விடுதல் தான். எனக்குக் கோபம் வர்ற போது பார்க்கவேண்டும்.அப்போது அப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பம். என் அப்பா பால்கனியில் நின்றுகொண்டு யாருக்கோ ஆணைகள் தந்து கொண்டிருந்தார்.

‘முதல்லே காலைப்பிடி, இந்தப்பக்கம், விடு விடு, இங்க அடி படுது ‘ பேஸ் மேக்கர் வைத்துக்கொண்டு இயங்குபவர் இப்படியா டென்ஷன் ஆவது ? யாரோ எங்கேயோ சாமான் இறக்க இவர் ஏன் இப்படி அலை பாய்கிறார் ? கோபாவேசத்தோடு வெளியே வந்தபோது பர்த்தேன் பக்கத்து வீட்டுக்கு வரப்போகிற மகானுபாவனை. சுருள் சுருளாய் ‘பெர்ம் ‘ செய்யப்பட்ட முடியோடு இளைஞன். அடுத்து சில மணிநேரங்களில் அவன் பெயர் ‘மாவின் குருவெ ‘ என்று ஆரம்பித்து பக்கத்து வீட்டு பயோடேட்டாவே கொண்டுவரப்பட்டது.நம் வீட்டு வாண்டுப்பட்டாளம் பின் எதற்கிருப்பது ?

முதல் வாரத்திலேயே வந்தாளே பார்க்கலாம், அவன் வீட்டுச் சமையல் காரி!அவளுக்கு முன்னாலேயே பல்லி கத்தியது. அதுதான் எங்கள் வீட்டு காலிங் பெல்லின் ஸ்பெஷல் எfபெக்ட்.பல்லி கத்துவது போலவே இருக்கும்.காலங்காலையில் நான் கடுப்புடன் பால்கனியில் மழைச்சகதியில் விட்டெறியப்பட்ட பேப்பரை என் கோபக்கனலின் சக்தியால் உலர்த்தமுடியுமா என்று பார்த்துக் கொண்டிருந்தபோது வந்து சேர்ந்தாள் மல்லவ்வா. மல்லவ்வா தெரிவித்த விவரமாவது. எங்கள் வீட்டில் நாலு அலாரம் டைம்பீஸ் இருக்கிறது. இருக்கட்டும்.[நாலுமே இந்தக்கால நாசூக்கு எலெக்ட்ரானிக் சமாச்சாரமில்லை. பழையகால உலோக வகை] அவை காலை நான்கு மணிக்கு அடுத்தடுத்து விடாமல் அடிக்கின்றன. அடிக்கட்டும்.நான்கரைக்குத்திரும்பவும் அடிக்கின்றன. நிமிட இடைவெளியில்லாமல் இரண்டாவது ரவுண்டு.போகட்டும்.ஐந்தாவது மணிக்கு மூன்றாவது ரவுண்ட் எல்லா கடிகாரமும் அடிக்கிறபோது பக்கத்து வீட்டில் எல்லாருமே எழுந்து உட்கார்ந்து விடுகிறார்களாம்.

அதற்கு நான் என்ன செய்ய ?முதல் அலாரம் எனக்கு. ரெண்டாவது எஸ்.எஸ்.எல்.ஸி யில் நுழைந்திருக்கும் என் பிள்ளைக்கு. மூன்றாவது என் புருஷனுக்கு. பெரிய எலிக்கு பெரிய ஓட்டையும் சின்ன எலிக்கு சின்ன ஓட்டையும் பண்டகசாலையில் தெனாலிராமன் பண்ணி வைத்தாற்போல ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு அலாரமா என்று எல்லாரும் கேட்கலாம்.

அலாரம் என்பது கடிகார மணி சப்தத்தில் மட்டுமில்லை. எழுந்துகொள்ள வேண்டியவர்களின் உடம்பு ஸிஸ்டத்திலும் ‘இன்பில்ட் ‘ ஆக இருக்கிறது. உதாரணமாக முதலிரண்டு அலாரங்கள் என் கணவருக்குத் தாலாட்டு போல இருக்கும். இன்னும் செளகர்யமாகத் தூங்குவார்.

அலாரம் டைம் பீஸ்களை பகிஷ்காரம் பண்ணி விடச்சொல்லி பலத்த சிபாரிசும் ‘மாவின் குருவெ ‘யின் கண்டனத்தோடு கூடிய கண்டிஷனும் விட்டு அகன்றாள் மல்லவ்வா.எனக்கா ஷாக் தாங்கவில்லை.தினந்தோறும் ஒயிட்பீfல்டுக்கு லொங்குலொங்கென்று.. அப்படிச்சொல்லக்கூடாது தடக் தடக் தடக்கென்று ரயிலில் போய் உத்தியோகம் பார்த்து வரும் என் புருஷனுக்கு எண்ணி ஏழு சப்பாத்தி [மூன்று பிரேக்பfஸ்ட் ,நாலு லஞ்ச்] பண்ணி முடிக்க எனக்கு நாலு மணிக்கு எழுந்தால் போதுவதில்லை.

இதில் பக்கத்து வீட்டுக்கு என்ன போச்சு ?எரிச்சலான எரிச்சல். அந்தக் காமெண்ட்டுக்குப் பிறகு தான் கவனிக்க ஆரம்பித்தேன். என் அப்பா குறட்டை, என் பிள்ளைகள் குரல்வளம், என் வேலைக்காரிபாட்டு[மைசூரு மல்லிகெ பாடல்களைத் துணி தோய்த்த படியே பிச்சு உதறுவாள் கன்னடக்குயில்] எல்லாமே சவுண்ட் பொல்யூஷன் தான் என்பதை. சத்தம் பற்றிய புதிய அவேர்னஸ் வந்து விட்டது பக்கத்து வீட்டு உபயத்தில்.

நான் பக்கத்து வீட்டைக் கவனிப்பதும் அதிகமாகிவிட்டது. மாவின் குருவெ இருக்கிறானே அவன் முக்கால் வஸ்தாது. வேலை வெட்டி கிடையாது. வித விதமாய் உடையணிந்து ஊர் சுற்றுவதே பொழுதுபோக்கு. அவனைச்சுற்றி ஒரு கூட்டம் உண்டு. வெவ்வேறு கார்கள் வீதியடைத்து நிற்கும்,சமயங்களில். ஏதோ அரசியல் கட்சிச்சார்பு வேறு. அப்படியாகப்பட்டவன் இந்தத்தெருவில் ஏன் குடி வந்தான் என்பதே புதிர்.

அவனுடைய தாயார் நல்ல செயலாக அதிகாரத்துடன் வளைய வந்தாள். அவர்களுக்குச் சொந்தமான[நார்த் கேனரா வீச்சமுள்ள] நெல்லை அவர்களின் கிராமத்திலிருந்து பெங்களூருக்கு நெடுக்காக ஒரு லேயரும், பாக்கை [அடுக்கெ-கொட்டைப்பாக்கு] குறுக்குவாட்டில் கர்னாடகம் முழுக்கவும் ஒரு லேயருமாகப் பரப்ப முடியுமாம். அவ்வளவு சொத்து என்று சொல்லிக்கொண்டார்கள்.

ஒரு பூச்சி போல வளைய வந்த சோகை வெளுப்பான மெல்லிய யுவதி வீட்டிலிருந்தாள். மிஸஸ் மாவின் குருவெயாம். அதில் ஆச்ச ரியம், எஜுகேஷன் டிபார்ட்மெண்ட்டில் வேலையில் இருந்தாள். பிரமோஷனுக்குப் படிக்கவோ என்னவோ எப்போதும் புத்தகமும் கையுமாய் இருந்தாள்.வீட்டில் இரண்டு பெண் குழந்தைகள், ஏழு வயதில் ஒன்று.நாலு வயதில் ஒன்று.

ஒரு நாள் நான் ஆபீஸ் விட்டு வரும்போது என்னை மாவின் குருவெ எதிர்கொண்டான். எனக்குத் தெரிந்தவர்கள் மூலமாக அவனுடைய எம்.பி. கனெக்ஷன் போfனை விரைவில் வாங்கிக் கொடுக்கும்படி வீதியிலேயே கேட்டுக் கொண்டான். விவரங்களைக்குறித்துக் கொண்டு நான் ஆவன செய்வதாகச் சொன்னேன்.

ஒரு வாரம் பொறுத்து எங்கள் வீட்டு அலாரங்களோடு ஏரியாவில் இன்னொரு பெரிய சப்தம் கேட்க ஆரம்பித்தது. கடமுடவென்று அதர்வண வேதம் போல், பல்லுடைக்கும் சமிஸ்கிருதத்தில் பெரிய குரல் மந்திரங்கள். யார் வீட்டில் பில்லி சூனியம் வைக்கிறார்கள் என்று பயத்துடன் கவனித்தேன்.

முருங்கைக்காய் விலை பேச பால்கனிக்கு வந்தபோது பக்கத்துவீட்டு மாவடு [மாவின் குருவெ என்றால் அது தானெ தமிழில் ?]நாய்க்கு பிரேக் பாfஸ்ட் செய்வித்துக்கொண்டிருந்தான்.அவன் தலையில் மொட்டைக்கு நடுவில் சின்னக்குடுமி ஆடிக் கொண்டிருந்தது.சாஸ்திரோக்தமான சிகை அது என்று புரிந்து கொண்டேன்.

பயங்கர மந்திரம் எதற்கு ? அரசியலில் உயரவா புதையல் எடுக்கவா என்று ஊசலாடினேன். பதில் பகலிலே கிடைத்தது.

ஆபீஸ் சாவியை வீட்டில் விட்டுப் போனதை எடுத்துக் கொள்ள மதியம் வந்து நிற்கிறேன்,கூடவே மாவின் குருவேயும்.

இன்னும் போfன் கனெக்ஷன் கிடைக்கவில்லையாம். அவன் சுருக்கமான புத்ரகாமேஷ்டி பண்ணுகிறானாம் ஒற்றை ஆளாய். விலாவரியாய் சாஸ்திரம் சொன்னான். அவன் குருவின் பெயரைச் சொன்னான்.அவன் பெண்டாட்டிக்கு மூன்று முறை அபார்ஷன் ஆகிவிட்டதாம். இப்ப உண்டாகியிருக்கிறாளாம். பிள்ளை தங்கவேண்டுமே யென்று முழு ரெஸ்ட்டாம். இந்த சமயத்தில் அவசரத்துக்கு டாக்டரைக் கூப்பிடக் கொள்ள போfன் உடனடித் தேவையாம். உள்ளூர் ஷிப்fடுக்கு அதிலும் எம்.பி. ஆசீர்வாதமுள்ள கனெக்ஷனுக்கு இவ்வளவு தாமதமா என்று வெடித்தான்.

‘குத்தடுக்கு செட் போல ரெண்டு பெண் குழந்தைகள் இருக்கே, புத்திர காமேஷ்டி எதுக்கு ? ‘ என்றேன் நான் சும்மா கிடக்காமல். அதற்கு அவன் ‘ஆண் வாரிசு வேண்டாமா ? ‘ என்றான் சாணக்கிய சிகை அசைய.

மாமியார் மருமகளை நடக்கக் கூட விடுவதில்லை என்று தெருவே மெச்சியது.ஆசார உபசாரம் பண்ணியும் அந்த ஒடிசல் பெண் தேறவில்லை. திரும்பவும் அபார்ஷன் என்று சேதி வந்தது.

அம்மா போய் பார்த்து வந்தாள். ராணூவ ரகசியம் போல் என்னிடம் சொன்னாள்.

‘அபார்ஷன் அதுவா ஆகலை. அவாளே பண்ணிட்டா. ஸ்கேன்ல தெரிஞ்சு போச்சாம் பிள்ளைக் குழந்தை இல்லைன்னு ‘

அட ராட்சசர்களா!

போய் வீதியை இழுத்து சண்டை போடுவோமா,மாவடுவைக்கூப்பிட்டுக் கெளன்ஸலிங் செய்வோமா, அல்லது ஓசைப்படாமல் பக்கத்து வீட்டுப் பெண்ணுக்குப் பிள்ளை உண்டாக ஆதித்ய ஹ்ருதயம் படிப்போமா என்று வந்தது எனக்கு. கொஞ்சம் நாளிலேயே வாஸ்துப்படி வீடு இல்லாததால் தான் புத்ரகாமேஷ்டி பலிக்கவில்லை என்று காலி செய்தார்கள் மாவடுக்காரர்கள்.

ஆறுமாதம் போயிருக்கும்.

பிள்ளையின் எஸ்.எஸ்.எல்.ஸி. மார்க் ஷீட்டுக்கு அப்ளை செய்ய எஜுகேஷன் டிபார்ட்மெண்ட் போயிருந்தேன். மல்லேஸ்வரம் சர்க்கிளில் குதிரைலாயம், பப்ளிக் டாய்லட் டுக்கு அடுத்த ஒரு சந்தில் கட்டிடம். கம்ப்யூட்டரை வெறித்துக் கொண்டிருந்த பெண் பக்கத்தில் நிறை மாசமாய் யாரோ என்னைப் பார்த்துச் சிரித்தாள்.அட! மாவின் குருவெ பெண்டாட்டி! மெடர்னிட்டி லீவில் தொடரவென்று ஒரு நாள் அலுவலகம் ஜாயின் பண்ணியிருந்தாளாம். ஸ்கேனில் பிள்ளைக்குழந்தை என்று படு ரகசியமாய்ச் சொல்லியிருக்கிறார்களாம்.நாளை முதல் லீவில் போகிறேன் என்றாள்.கம்ப்யூட்டர் பெண்ணிடம் ஆபீசர் பரீட்சைக்குப் புத்தகம் வாங்கிப்போகத்தான் வந்தாளாம்.

பிரசவத்தை விடப் பரீட்சையில் நிறைய மனசு வைத்திருந்தாள் என்று தோன்றியது.

அடுத்தமுறை ரேங்கிங் தெரிந்துகொள்ள போfன் செய்த போது திருமதி மாவின் குருவே நிரந்தர லீவில் போய் விட்டதைச் சொன்னார்கள். பலவீனமான உடம்பில் அருமையாகத் தரித்த பிள்ளையைப் பெற்றெடுக்கமுடியாமல் பிள்ளையும் வயிறுமாய்ப் போய்ச்சேர்ந்துவிட்டாள்.

மாவின் குருவெ கம்யூனிட்டியில் ஒரு மாப்பிள்ளை ரெடி. சொந்தபந்தம் அந்தப்பெண் பிள்ளைத்தாய்ச்சி நிலையில் பரீட்சைக்குப் படித்ததைக் காரணமாகச் சொல்லக்கூடும்.

இப்போதெல்லாம் ‘வாரிசு ‘ பிரச்னையை முன் வைத்து டாவி சீரியல்களைப் பார்க்கும்போது எனக்குக் கொலை வெறி வருகிறது.

படிப்பாவது வேலையாவது புண்ணாக்காவது, இந்தப் பெண்களுக்கு விழிப்புணர்ச்சி என்று ஒன்று வரும் வரையில் விடியல் உண்டா ?

அந்தப் பெண் பரீட்சைக்குப் படிக்கிற நேரத்தில் பிள்ளை பெற மாட்டேன் என்று போராடியிருக்கலாமோ ?

ஆனால் அவள் பரீட்சைக்குப் படித்துத் தான் மன நோயிலிருந்து சாவு வரை தன்னைக் காப்பாற்றிக் கொண்டாளோ என்னவோ ? யார் கண்டது ?

மாலதி

மங்கையர் மலர் டிசம்பர் 2000

malti74@yahoo.com ====

Series Navigation

மாலதி

மாலதி