வெங்கடேஷின் ‘நேசமுடன் ‘- அறிவுப்பூர்வமான தளம்: அக்கறையான தேடல்.

This entry is part [part not set] of 50 in the series 20040715_Issue

ரமா


ஒவ்வொரு படைப்பாளியிடமும் ‘Creativity DNA ‘ உண்டு. இங்கு நான் குறிப்பிடுவது படைப்பாளிக்குள் பிறப்பிலேயே அமைந்துள்ள ஆக்கப்பூர்வமான இயல்பு; இலக்கிய உணர்வு. ‘சொற்கள் ‘ என்னும் கூறுகளாக இதை நான் வெங்கடேஷிடம் காண்கிறேன். வெங்கடேஷின் ‘நேசமுடன் ‘ மடல்இதழைப் படித்து வருகிறேன். தமிழில் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும் இதழ் இது ஒன்றுதான்.

மின்னஞ்சலைத் திறந்தவுடன் குபுகுபுவெனப் பாயும் சொற்கள். குழந்தையை விட்டுவிட்டு அம்மா ஊருக்குச் சென்றுவிட்டால் நாம் கேட்டிருப்போம். ‘நான் அம்மாவோட போவேன். ‘ ‘அம்மா இப்பவே வேணும். ‘ – நேரடியாக, அழுத்தந்திருத்தமாக குழந்தை பேசும். தன் இஷ்டத்திற்குப் பேசும். ‘எனக்கு மட்டுமே இந்த சொற்கள் சொந்தம்; என்னுடைய சொற்கள் ‘ என்று சுதந்திரமாக, ஒரு பிடிப்போடு பேசும். சில சமயங்களில் இதமாக சொற்கள் வந்து விழும். அதேபோலத்தான் ‘நேசமுடன் ‘ இதழில் வந்து விழுகின்றன வெங்கடேஷின் சொற்கள்.

அதே குழந்தை பள்ளியில் சேர்ந்த பின் ஆசிரியர் கட்டுரை எழுதச் சொன்னால் சொற்களை அது பயந்து பயந்து கட்டுப்பாடாக, மதிப்பெண் பெறும் நோக்கத்தை மட்டுமே எண்ணிக்கொண்டு எழுதுகிறது. சொற்கள் அப்போது அச்சுறுத்துகின்றன. வெங்கடேஷின் சொற்கள் புதிய தளமாக

மடல்இதழைத் தேர்ந்தெடுத்திருப்பதால் இதைத் தவிர்க்க முடிகிறது. வெங்கடேஷ் மடல்இதழைத் தேர்ந்தெடுத்திருப்பது என்பது ஒரு பைஜாமா அணிவது போல. தனக்கு செளகர்யமாக எப்படி வேண்டுமோ அப்படி அணிவது. தான் எதை சொல்ல நினத்தாலும் அதைச் சொல்ல முடிகிறது. சிந்தனை தரும் படிவமாக மடல்இதழை மாற்றியிருக்கும் அவரது நேர்மையும் அதற்கு உதவி செய்கிறது.

‘நேசமுடன் ‘ இதழை எப்படித் தொடங்க வேண்டும் என்னும் எண்ணம் வந்தது என்று நான் வெங்கடேஷிடம் கேட்டேன். அதைத் தான் பெரிய கனவுகளுடன் தொடங்கவில்லை. ஆனால் சில அடிப்படைகளுடன் தொடங்கியிருப்பதாகக் கூறினார். அது மின்னஞ்சலில் புதிய வடிவத்தை எழுத்தாளர் தேடுவதற்கு விதிகளை வகுக்கிறதோ என்னவோ, ஆனால் படிப்பவர்களுக்கு எந்த பாதிப்பையும் அது ஏற்படுத்தவில்லை. மாறாக, மடல் இதழ் புது கண்ணோட்டத்தை வாசகர்களிடம் புகுத்தியிருக்கிறது. மடலாடற்குழுக்களும் வலைப்பதிவுகளும் இன்று பெருகிவிட்டன. வெங்கடேஷூம் தொடர்ந்து இவைகளில் சுறுசுறுப்பாக பங்காற்றிக் கொண்டிருக்கிறார். அப்படியிருக்க அவர் ஏன் வலைப்பதிவில் சிக்கவில்லை ? ஒரு வலைப்பதிவைத் தொடங்கியிருக்கலாமே! என்று தோன்றியது. இதைவிட இன்னும் எளிது. ஒரு மடலாடற்குழுவைத் தொடங்கியிருக்கலாம் என்றும் நினைத்தேன். ‘மடலாற்குழுக்கள் என்பவை ஒரு கட்டத்தில் மிகவும் Impersonal ஆகத் தொடங்கிவிட்டது. நாம் பேச வேண்டிய விஷயங்கள், படிக்க வேண்டிய விஷயங்கள் என்று நினைப்பவை அங்கே கிடைக்காமல் போகத் தொடங்கிவிட்டது. ‘ என்றுத் தான் ஒரு மடலாடற்குழுவைத் தொடங்காததற்கு காரணம் கூறினார் வெங்கடேஷ்.

ஆனால் ஏன் வலைப்பதிவைத் தொடங்கவில்லை ? தொடங்கிய ஒரு வலைப்பதிவும் அந்தரத்தில் தொங்குவதேன் ? ‘வலைப்பதிவுகளின் வடிவமே (form) அந்நியத்தன்மையோடு இருக்கிறது. ஒரு வலைத்தளத்தின் வடிவம் அது. இன்றைய தேதியில் வலைதளம் என்பது முற்றிலும் வேறு வகை எண்ணங்களைத் தரத் தொடங்கிவிட்டது. தனக்கானது என்று இணையும் தன்மை அதில் குறைந்துகொண்டே வருகிறது ‘ என்று அதற்குக் காரணம் கூறுகிறார் அவர். இது பலரும் இன்று பேசி வரும் கருத்து கூட. வலைப்பதிவுகள் பற்றி அதிருப்தியான சூழல் தற்போது தலைதூக்கி வருகிறது. வலைப்பதிவில் என்ன பதிவு செய்யப்பட வேண்டும் என்பது பற்றி வெவ்வேறான கருத்துகள் நிலவி வருகின்றன. ‘Personal touch ‘ இல்லாமல் இருப்பதால் அதன் தன்மையை இழந்து வருகிறது என்னும் வருத்தமும் எழுந்துள்ளது. சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. மினி செய்தித்தாளாகவும், கவிதைகள், கதைகள், கட்டுரைகள் தொகுப்பாகவும், சொந்த விருப்பு, வெறுப்புகளைக் காட்டும் கண்ணாடியாகவும் வலைப்பதிவுகள் பெரும்பாலும் மாறிவிட்டன. ‘தொனி ‘ என்பது வலைப்பதிவின் உயிர்நாடி என்பதை பலரும் இன்று மறந்துவிட்டனர்.

மடலாற்குழுக்கள், வலைப்பதிவுகள் ஆகியவற்றின் ஆரம்பம்- மூலவேர் மின்னஞ்சல்தான். எப்படி எழுத வேண்டும் ? என்னவெல்லாம் எழுத வேண்டும் என்னும் பயிற்சி முறைகூட ஒரு சாதாரண பயனீட்டாளருக்கு, வாசகருக்கு அங்குதான் தொடங்கியது என்று கூறலாம். விளம்பரங்களும், செய்திக்கடிதங்களும், சுகாதாரம், பயனீட்டாளர் செய்திகளும் மின்னஞ்சலில் இன்றும் மையம் கொண்டுள்ளன. ஆங்கிலத்தில் மின்னஞ்சல் இதழ்கள் (Email Magazines) காணப்படுகின்றன. தமிழில் ‘நேசமுடன் ‘ தவிர ஏதும் இல்லை. இவைகளுக்கு ஏன் ‘e-maizine ‘ என்று பெயர் வைக்கக்கூடாது என்று நான் நினைத்ததுண்டு. மின்னஞ்சலிலிருந்து மெள்ள மெள்ள உயிர்ப்பித்ததுதான் வலைதளமும் வலைப்பதிவும் என்பது வெங்கடேஷின் கருத்து. இவற்றிற்கெல்லாம் தாய் போன்றது மின்னஞ்சல் என்று அதன் மேல் பாசம் கொள்கிறார் அவர். மின்னஞ்சலில்தான் எல்லாமே தொடங்கியது. அதிலிருந்துதான் புது வடிவங்கள் பிறந்தன. எனவே மின்னஞ்சல்கள் தன்னை ஆக்கிரமித்துக்கொண்டன என்றும் அவர் கூறினார். இத்தகைய பிடிப்போடு மின்னஞ்சலின் வடிவத்திற்குள் இன்னும் புதையல் ஏதாவது கிடைக்கிறதா என்று தேடியிருக்கிறார் வெங்கடேஷ். அதில் பிறந்துதான் ‘நேசமுடன் ‘ மடல்இதழ்.

அரசியல், சமூகம், உறவுகள், இலக்கியம், மனிதர்கள், எண்ணங்கள் என பலவாறாகத் தன் கருத்துக்களை எழுதியிருக்கிறார். இத்தனை ஆண்டுகளும் தான் படித்தவை, கேட்டவை, பார்த்த மனிதர்கள், அபிப்பிராயங்கள், ரசனைகள் என இதுவரைத் தான் எழுதாமல் விட்ட, எங்கும் பகிர்ந்து கொள்ளாத, வாய்விட்டுப் பேசாத கருத்துக்களை எழுதுகிறார். ‘பொய்யைப் போர்வையாக்கிக் கொள்வதை மனம் ஏற்கவில்லை ‘ என்று பாசத்தின் உந்துதலில் தன் அப்பா தன் நலன் விரும்பி படிப்பதற்கு இடம் வாங்க சலுகைகளைத் தேடியதைச் சொல்லும்போது குறிப்பிடுகிறார் ( அப்பாவும் மகனும்- 7/7/2004). ‘நேசமுடன் ‘ இதழின் சிறப்பே அதுதான். உள்ளதை, உள்ளபடி, இயல்பாக, இயற்கையாகச் சொல்லியிருப்பதுதான். அவ்வப்போது வரும் கடிதங்களைப் பார்த்தாலும் தெரியும்- இதன் வாசகர்கள் பாசாங்கே தெரியாத ஒரு எழுத்தாளரின் மடல்இதழ்களை நேசிக்கத் தொடங்கியிருக்கிறார்கள் என்பது.

அப்பாவின் தொடுதலைப் பற்றி பேசிய கதை உண்டு என்பது மட்டுமில்லை. ம வெ சிவகுமார் என்ற எழுத்தாளரைக் கூட இப்போதுதான் தெரிந்தது. வண்ணநிலவனின் கம்பா நதி, ரெயினீஸ் ஐயர் தெரு நாவல்கள் ( 22/6/2004), பி ஏ கிருஷ்ணனின் புலிநகக் கொன்றை (வலுவுள்ள எழுத்து 30/6/2004) இன்னும் தோப்பில் முகமது மீரான், பாமா, ஜெயமோகன், காசியபன், கி.கஸ்தூரிரங்கள், பாரா, ராஜேஷ்குமார் என்று எழுத்தாளர்களையும் அவர்கள் நூல்களையும் சுருக்கமாக அவர்களின் எழுத்துக்களையும் பற்றிப் பேசுவதிலும் அக்கறைக் காட்டியிருக்கிறார் வெங்கடேஷ். மடல் இதழுக்குள் இவ்வளாவா ஒளிந்திருக்கிறது என்று ஆச்சரியப்பட வைக்கிறது. சுந்தர ராமசாமி கொண்டாடப்பட்டதை உற்சாகமாகக் கூறுகிறார், ஏன் நம் எழுத்தாளர்கள் திரைமறைவில் இருக்க வேண்டும் என்று ஆதங்கப்படுகிறார். ஒவ்வொரு வரியிலும் ஒரு ‘தொனி ‘ – சில சமயங்களில் ஒரே நாளில் எப்படி மழை, வெய்யில், குளிர்ச்சி, வியர்வை, காற்று என்று மாறி மாறி வருமோ அதுபோல ஒரே மடல்இதழில் வேறு வேறு தொனிகள். வேகம் நம்மை அசர வைக்கிறது. இதம் நமக்கு இனிமை தருகிறது. கடுமை நம்மை சிந்திக்க வைக்கிறது.

‘நேசமுடன் ‘ காட்டும் எழுத்துக்களில் தூவப்பட்ட சொற்களில் நளினம் உண்டு; நலிவு கிடையாது. உரைப்பு உண்டு; உவர்ப்பு கிடையாது. மிளகுத் தூளை ஆங்காங்கு தூவியது போல. அது கண்ணுக்குத் தெரியாது. ஆனால் நாக்கில் உறைக்கும். அதுபோல சில சமயங்களில் தூவப்பட்ட சொற்கள். தயக்கமில்லாமல் பளிச்சென்று எதையும் விமர்சிக்கும் போக்கு. முதியவர்களின் துன்பங்களைச் சொல்லும்போது கசிந்துருகும் எழுத்துக்கள். அவர்களின் குறைகளைச் சுட்டிக்காட்டும்போது மிளகுத் தூள் போல கடிந்து உரைக்கும். ‘பக்தி என்ற பிடிமாணமோ, கோயில் என்ற நம்பிக்கையோ குறைந்து போன முதியவர்கள் இவர்கள் ‘ என்று விமர்சிக்கிறார் (ஓடி வரும் முதுமை-30/6/2004). முதல் தலைமுறை படிப்பாளிகள் அரசு வேலைகளையே வாழ்வின் குறிக்கோளாக எடுத்துக்கொண்டு படும் அவதிகளை அலசும்போதும் ( தவறு எங்கே ? 23/6/2004) தமிழ்க் கல்வி வேண்டுமா என்பது பற்றியத் தன் பார்வையை பதிக்கும்போதும் (கனவுச்சித்திரங்கள்- 23/6/2004) எழுத்துக்களில் சீரானபார்வை புலப்படுகிறது.

இதுவரை ‘நேசமுடன் ‘ மடல்இதழ்கள் 14 வந்துவிட்டன. மின்னஞ்சல் வடிவம் ஆசிரியருக்கு ஆளுமை சார்ந்த, அறிவுப்பூர்வமான தளத்தைத் தந்திருக்கிறது. புதிய வடிவத்தைக் காட்டியிருக்கிறதா ? இன்னும் இல்லை என்கிறார் வெங்கடேஷ். எந்த எழுத்தாளருமே தன் தேடலை முடித்துக்கொள்வதில்லை. வெங்கடேஷின் நேர்த்தியான சொற்களும், கச்சிதமான கருத்துக் குவியல்களும், அக்கறையான தேடலும் ஒரு தொடர்ச்சியான இயக்கவியலைத் தோற்றுவிக்கும். தமிழ் இலக்கியம் இன்னும் புது வடிவம் பெறவும், வாசகர்களின் சிந்தனைகளில் மாற்றங்களையும் புதுமைகளையும் உணரவும் இது போதாதா ?

( ‘நேசமுடன் ‘ மடல்இதழ்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ள வலைதள முகவரி (http://www.tamiloviam.com/nesamudan)

அடுத்து வரும் மடல்இதழ்களை பெற வாசகர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய (வெங்கடேஷ்) மின்னஞ்சல் முகவரி (suve75@sify.com)

Series Navigation

ரமா

ரமா