Spellbound (2003)

This entry is part [part not set] of 41 in the series 20040708_Issue

மாது


கனவுகளும் கற்பனைகளும் நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இன்றியமையாததாகி விட்டன. நாளை மற்றொரு நாளே என்பதை மறுத்து, இன்றைய தினத்தை விட நாளைய தினம் சிறப்பானதாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் ஒடிக் கொண்டிருக்கிறோம். அந்த ஓட்டத்தில் இன்றைய தினத்தின் அற்புதங்களை நழுவ விடுகிறோம். நம் கனவுகளில் சில நனவாகின்றன, நனவாகதவற்றை மற்றவர்கள் மேல் திணித்து, நம் கனவுகளை அவர்கள் காண வலியுறுத்துகிறோம். முக்கியமாக, நம் கனவுகளுக்கு நம் குழந்தைகளை பலியாக்குகிறோம்.

அமெரிக்காவில் வருடா வருடம் National Spelling Bee என்ற போட்டி நடைபெறுகிறது. கடினமான ஆங்கில வார்த்தைகளில் உள்ள எழுத்துக்களைப் பிரித்துக் கூறுவதுதான் போட்டி. அமெரிக்காவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் பதினாறு வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இதில் பங்கு கொள்கிறார்கள் (கிட்டத்தட்ட 90 லட்சம் பேர்). இதில் சுமார் 250 குழந்தைகள் இறுதிச் சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர். கடைசியில் ஒரு சிறுவனோ/சிறுமியோ வெற்றி பெறுகிறான்(ள்). National Spelling Bee போட்டியில் பங்குபெறும் எட்டு சிறுவர்களை தொடர்கிறது இந்த ஆவணப் படம். வெவ்வேறு வாழ்க்கைத் தரத்தில், வெவ்வேறு இடங்களில் உள்ளவர்கள் இந்த எட்டு பேர். மெக்ஸிகோ நாட்டிலிருந்து திருட்டுத் தனமாக அமெரிக்காவில் நுழைந்த, ஆங்கிலம் தெரியாத ஒரு மெக்ஸிகரின் மகள் ஒரு புறம். அமெரிக்க கனவில் திளைத்து நல்ல பண வசதியுடன் உள்ள இந்தியரின் மகன் மற்றொருபுறம். ( ‘ஆ இதுதானா கரு, இதில் என்ன இருக்கப் போகிறது ‘ என்ற தவறான முன் எண்ணத்துடன் இந்த படத்தை அணுக வேண்டாம்).

ஆங்கிலம் தெரியாத மெக்ஸிகர், தான் இவ்வளவு நாள் பட்ட கஷ்டமெல்லாம் (ஒரு பண்ணையில் மாடு மேய்த்துக் கொண்டிருக்கிறார்) தன் மகள் போட்டியில் வென்றால், ஒரு நொடியில் பறந்து விடும் என்றிருக்கிறார். ஒரு மது விடுதியில் பணிபுரியும் மற்றொருவர் தன் மகளின் வெற்றியே தன் வெற்றி என்று ஆவலுடன் இருக்கிறார் ( ‘என்னோட வாழ்க்கைல நிறைய வருஷம் ரோட்டுக்கு அந்தப் பக்கம் வேல பாத்துக்கிட்டு இருந்தேன், இப்போ ரோட்ட க்ராஸ் பண்ணி இங்க, இந்த பார்ல வேல பாத்துக்கிட்டு இருக்கேன். அவ்வளவுதான் என் வாழ்க்கேல முன்னேற்றம் ‘). சற்று பணம் படைத்த குடும்பத்தினர் இந்த போட்டிக்கு தயார் செய்வதற்காக நிறைய செலவு செய்கிறார்கள் (புத்தகங்கள், தனிக் கற்பிப்பு). ஏழையாக இருந்தாலும் பணக்காரர்களாக இருந்தாலும் குழந்தைகள் நிறைய உழைக்கிறார்கள். விளையாட்டு, கேளிக்கை எல்லாவற்றையும் தவிர்த்து வார்த்தைகளோடு மன்றாடிக் கொண்டிருக்கிறார்கள். தங்கள் குழந்தைப் பருவத்தையே விலையாக கொடுக்கிறார்கள். சக மாணவர்களால் ஒதுக்கி வைக்கப் படுகிறார்கள். (நம்மூர் IIT தேர்வுக்காக பயிற்சி செய்யும் மாணவர்களை நினைவுப் படுத்துகிறது). இதுவும் ஒருவித பலாத்காரமோ (child abuse) என்று ஒரு குழந்தையின் தாயார் விசனப் படுகிறார்.

இறுதிப் போட்டிக்கு எட்டு குழந்தைகளும் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள். நாமும் பெற்றோரோடு பெற்றோராய் ஆகி விடுகிறோம். மெக்ஸிக மாணவி கடின வார்த்தைகளுக்கு திணரும் போது நாமும் திணருகிறோம். ஆப்பிரிக்க அமெரிக்க குழந்தையின் கண்களில் நீர் அறும்பும் போது நம் கண்களிலும் நீர் துளிர்க்கிறது. அங்குள்ள பெற்றோரின் கை வேர்க்கும் போது நம் கையும் வேர்க்கிறது. கடினமான வார்த்தைகளை எளிதாக எழுத்துப் பிரித்து கூறிவிட்டு ‘Darjeeling ‘ என்ற வார்த்தைக்கு திணரும் இந்திய (அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த) மாணவனோடு சேர்ந்து நாமும் பதறுகிறோம். இந்த எட்டு சிறுவர்களில் ஒருவர் இறுதியில் வெற்றி பெறவேண்டும் என்று ஆவலாய் காத்திருக்கிறோம். ‘ஈன்ற பொழுதில் பெரிதுவத்தல் ‘ என்றால் என்ன என்று உணர்கிறோம்.

போட்டியில் தோற்கும் குழந்தைகள் பலர் வருத்தப் படாமல் ‘அப்பாடா ‘ என்று நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்கள். கடைசி வாய்ப்பில் (16 வயதிற்குள் அல்லது எட்டாவது முடித்திருக்கக் கூடாது) பங்கு பெறும் ஒரு சிறுமி ‘ஹையா….இதற்காக வாங்கிய புத்தகங்களை எல்லாம் தூக்கி எறிந்து விடலாம் ‘ என்று சந்தோஷப் படுகிறாள். சிறு பிள்ளை பேச்சு என்றாலும், அவர்களின் உண்மையான மன நிலையை உணர முடிகிறது.

உள்ளதை உள்ளவாறு கூறி, நம்மைச் சிந்திக்க வைப்பதில் வெற்றி பெற்றிருக்கிறது இந்த ஆவணப் படம். பெற்றோர்கள் இந்தப் படத்தைப் பார்த்தால் இரு விளைவுகள் சாத்தியம். தன் குழந்தையையும் இந்தப் போட்டிக்குத் தயார் செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஒரு சாத்தியம். அல்லது, எப்போட்டியும் வேண்டாம் அந்தந்த வயதிற்கான சேட்டைகளில் மகிழட்டும் குழந்தைகள் என்ற எண்ணம் மற்றொரு சாத்தியம்.

என்னால் படிக்க முடியாத படிப்பையும், வாங்க முடியாத பட்டங்களையும் வாங்குவதற்கு என் மகனை இப்போதிருந்தெ IQ Topper கொடுத்து பொதி மூட்டை சுமக்க வைக்கப் போகிறேனா ? தெரியவில்லை, யோசிக்க வேண்டும்.

—-

tamilmaadhoo@yahoo.com

Series Navigation

மாது

மாது