தமிழுக்குப் பெருமை

This entry is part [part not set] of 52 in the series 20040617_Issue

அக்னிப்புத்திரன், சிங்கப்பூர்


இந்திய நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரு. அப்துல்காலம் அவர்கள் தன் உரையின் துவக்கத்தில் தமிழில் கவிதை பாடியுள்ளார். இதைப்பார்த்த எனக்கு உண்மையில் என்னையும் அறியாமல் என் உள்ளத்தில் பெருமித உணர்வு பொங்கியது. அந்த மாமன்றத்தில் டாக்டர் கலாம் அவர்கள் நேரடியாகவே அக்கவிதையை ஆங்கிலத்தில் கூறியிருக்கலாம். மானுடம் போற்றும் மகத்தான இலக்கண இலக்கியங்கள் கொண்ட உன்னதமான தமிழ்மொழியின் அருமை பெருமையை நூறு கோடி இந்திய மக்களின் பிரதிநிதிகளாக விளங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நன்கு உணர வேண்டும் என்ற நோக்கத்திலேயே அப்பெருமகனார் முதலில் அக்கவிதையைத் தமிழில் கூறியுள்ளார். அவரின் தாய்மொழிப்பற்றுக்குத் தலை வணங்குவோம்.

தமிழ்மொழி, செம்மொழியாகும் என்ற தேனினும் இனிய அறிவிப்பை குடியரசுத் தலைவர் வெளியிட்டுள்ளார். தமிழ்மொழி செம்மொழியாகும் என்ற இந்த இனிய அறிவிப்பு, உலகம் முழுவதும் பரவி பல்வேறு நாடுகளில் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களைத் தலைநிமிர்ந்து வாழச்செய்யும் என்பதில் சற்றும் ஐயமில்லை. திரு.கலாம் அவர்களுக்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கும் உலகம் முழுவதும் வாழும் எட்டுக்கோடி தமிழ்நெஞ்சங்களின் சார்பாக வாழ்த்துகளும் பாராட்டுக்களும் உரித்தாகுக. தமிழ்மொழி பெருமையும் சிறப்பும் பெற்ற செவ்வியமொழி என்பதை உணர்ந்த மையஅரசு தமிழ்மொழியைச் செம்மொழியாக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்காக முயற்சி செய்துவரும் அத்தனை நல்உள்ளங்களுக்கும் குறிப்பாக மூத்த தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களுக்கும் இதயங்கனிந்த நல்வாழ்த்துகள். நாளைய தமிழுலகம் உங்கள் அனைவரையும் நினைவுகூர்ந்து கண்டிப்பாகப் பாராட்டும் என்பது உறுதி.

இந்தச் சூழ்நிலையில் தமிழர்கள், தமிழினத்துரோகிகளையும் அடையாளம் கண்டுகொள்ளவேண்டும். தமிழ் செம்மொழி என்ற தகவலால் உலகம் முழுவதும் வாழும் அனைத்து தமிழ் நெஞ்சங்களிலும் மகிழ்ச்சி ஊற்று பெருக்கெடுத்து ஓடும் இச்சூழலில் ஒருசில இனத்துரோகிகளுக்கு உள்மனதில் எரிச்சல், கோபம், பொறாமை..நஞ்சைக் கக்குகின்றனர். இம்மாதிரியான இனத்துரோகிகளுக்கு இடையில்தான் நம் செந்தமிழ் சீரிய நடைபோட்டு பல்லாயிரக்கணக்கான ஆண்டாக பவனி வருகின்றது. சூரியனை நோக்கிக் குரைக்கும் இவைகளைத் தமிழர்கள் இச்சமயத்திலாவது உணர்ந்து கொள்ள வேண்டும். பிரபல தமிழ் நாளிதழ்(தினமலர்) ஒன்றில் அந்துமணி என்ற அயோக்கிய மணியின் கேள்வி-பதிலைப் பாருங்கள்.

கேள்வி: தமிழ்மொழியைச் செம்மொழியாக்க சட்டம் கொண்டு வந்தால் என்னனென்ன பயன் ?

பதில்: காவேரி ஆற்றில் தண்ணீர் பெருக்கடுத்து ஓடும். ஏழை நெசவாளர் வீட்டுத்தறி நிற்காமல் இயங்கும். ஒரு வேளை கஞ்சிக்கே வழி இல்லாதவருக்கு மூன்று வேளையும் மட்டன் பிரயாணி கிடைக்கும்…

இப்படிப் போகின்றது பதில். என்ன கிண்டல்.. எத்தனை கேலி.. யார் மீது உனக்குப் பொறாமை ? தமிழ் மீதா அல்லது யார் மீது ?

அட அயோக்கிய சிகாமணிகளே..ஏன் உங்கள் உள்மனங்களில் இத்தனை வஞ்சம் ? தமிழிலேயே பத்திரிக்கையை நடத்திக் கொண்டு தமிழையே அவமதிக்கிறீர்களே ? தமிழர்கள் எதையும் தாங்கும் இதயம் படைத்தவர்கள் என்பதாலா ? நம் தாய்மொழியாம் தமிழுக்குப் பெருமை சேரும்போது இப்படி நஞ்சைக் கக்கி மக்களைத் திசைத்திருப்பி விடுவதேன் ?

எப்போதாவது யாராவது உன்னிடம் மட்டும் சென்னார்களா..தமிழ் செம்மொழியனால் காவேரியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் என்று.. அட கயமையின் பிறப்பிடமே.. ஆனால் ஒன்றுமட்டும் உறுதி உன்போன்றவர்களின் மனதில் எரிச்சல், கோபம், பொறாமை, ஆற்றாமை போன்றவை பெருக்கெடுத்து ஓடும் என்பது மட்டும் உறுதி.

அதே பத்திரிக்கை வெளியிட்டுள்ள இன்னொரு கருத்தையும் பாருங்கள். டாக்கடை பெஞ்சு என்ற ஒரு பகுதி..அதில் ஒரு பகுதி:

ஒருவன்: தமிழ்மொழி செம்மொழி ஆகுதே..நமக்கு ஏதாவது துட்டு கெடைக்குமாவே..(கர்மம்! பயன்படுத்தப்படும் தமிழைப் பாருங்கள்)

மற்றொருவன்: கட்சிக்காரங்க மாதிரி எதுல துட்டு கெடைக்குமுன்னு தேட ஆரம்பிச்சுட்டாரே ஓய்.. தமிழ்மொழி செம்மொழி ஆயிட்ட உமக்கு துட்டு கெடைக்காது.. ஆனா..அதுக்காக போராடுற தலைவருங்களுக்கு துட்டு கெடைக்கும்..

எப்படி துட்டு கெடைக்குமாம் ?

அட கர்மமே.. (பன்றிக்கூட சேர்ந்த பசு போல நமக்கும் அதுகள் பயன்படுத்தும் மொழியின் தாக்கம் வந்துவிட்டது..மன்னிக்கவும்)

எப்படி பணம் கிடைக்கும் என்றால் உலகம் முழுவதும் தமிழ்நூல்கள் விற்பனையாகுமாம். நிறைய ராயல்டி தொகை கிடைக்குமாம். அந்த இலாபத்திற்காகத்தான் தமிழறிஞர்கள் தமிழ்மொழியைச் செம்மொழியாக்கப் போராடுகிறார்களாம். ஆகா..என்னே மாபெரும் கண்டுபிடிப்பு ? இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் தமிழர்கள் இளிச்சவாயர்களாக வாழப்போகின்றார்களே தெரியவில்லை. இவர்கள் இஷ்டத்திற்கு மனம் போன போக்கில் இப்படி எழுதுவதற்கு ? தமிழர்களே.. தமிழுக்குப் பெருமைசேரும் இத்தருணத்திலாவது துரோகிகளை அடையாளம் கண்டுகொண்டு முற்றிலுமாக அவர்களைப் புறக்கணியுங்கள்.

இன்று அதிகமான அளவில் தமிழர்கள் இந்திய மைய அரசில் உயர்பதவியில் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் இணைந்து செய்யக்கூடிய மிக முக்கியமான செயல் ஒன்றுள்ளது. ஆம்.. வெகுவிரைவில் தமிழ்மொழியை இந்திய அரசின் ஆட்சிமொழியாக்க வேண்டும். தற்போது இந்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமே ஆட்சிமொழியாக உள்ளன. உடனடியாக தமிழையும் இணைத்து இந்தி, தமிழ், ஆங்கிலம் மூன்றையும் ஆட்சிமொழிகளாக மத்திய அரசு அறிவிக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். அதற்கான காரணகாரியங்களை உரியவர்களிடம் தக்கமுறையில் எடுத்துரைக்க வேண்டும். வட இந்தியாவைப் பிரதிநிதிக்கும் வகையில் இந்தியையும் தென்னிந்தியாவைப் பிரதிநிதிக்கும் வகையில் திராவிட மொழிக்குடும்பத்தின் தாயான தமிழ்மொழியையும் ஆட்சி மொழிகளாக அங்கீரிப்பதே சிறப்புடையதாகும்.

எட்டாவது அட்டவணையில் குறிப்பிட்டுள்ள மற்ற முக்கிய இந்திய மொழிகளையும் ஆட்சி மொழியாக்க வேண்டும். முன்னோட்டமாக முதல்முயற்சியாக தமிழ்மொழியை உடனடியாக இந்திய ஆட்சிமொழியாக அறிவிக்க முயற்சி மேற்கொள்ள கட்சி பேதமின்றி அனைத்து தமிழர்களும் ஒன்றுகூடி இணைந்து முழுமுயற்சி எடுக்கவேண்டும். தமிழ்மொழியின் அருமை பெருமைகளை மற்ற மொழி பேசும் இந்தியர்களுக்கு பக்குவமாக எடுத்துக் கூறி அம்மொழி எத்தகைய ஆற்றல் மிக்க அரிய மானுட மொழி என்பதை உணர வைக்க வேண்டும். இதற்கான உன்னத முயற்சிகள் காலதாமதமின்றி உடனடியாக தொடங்கப்பட வேண்டும். இந்திய மொழிகளில், இந்தியாவைத் தவிர வேறு பல நாடுகளில் இன்று அங்கீகாரம் பெற்ற மொழியாகவும் அதிகாரத்துவ மொழியாகவும் ஆட்சிமொழியாகவும் விளங்கும் ஒரே இந்திய மொழி தமிழ்மொழிதான் என்பதை எடுத்துக்காட்டி விளக்கம் தர வேண்டும். பேச்சுவழக்கிலும் எழுத்துவழக்கிலும் மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து பயன்பாட்டில் சிறப்புடன் விளங்கும் ஒரே தொன்மையான மொழி என்ற உண்மையை அனைவருக்கும் ஆதாரத்துடன் உணர்த்த வேண்டும்.

கணிணிக்கு( computer) ஏற்ற சிறப்பான மொழி தமிழ்மொழியாகும். இன்று இந்திய மொழிகளில் தமிழுக்குத்தான் அதிகமான இணையப்பக்கங்கள் (internet webpages) உள்ளன என்று ஆய்வுகள் காட்டுகின்றன. கணினி வல்லுநர்கள் ஒன்றுகூடி மனமாச்சரியங்களுக்கு இடந்தராமல் தமிழ்த்தாய்க்குத் தொண்டு செய்ய முன்வரவேண்டும். அவைரும் இணைந்து குழு ஒன்று அமைத்து அனைத்து தமிழ்ச்சொற்களையும் தொகுத்து ஒரு தரவு தளத்தை(data base) உருவாக்க வேண்டும். அனைவரின் ஒத்துழைப்பினால் மட்டுமே இச்சீரிய பணி சிறப்பாக நடைபெற முடியும். மேலும் ஆங்கில இணையப்பக்கங்கள் போலவே நமது தமிழ் இணையப் பக்கங்களுக்குச் செல்லும்போது எவ்வித இடையூறுமின்றி விரைவில் அப்பக்கங்களுக்குச் சென்று பயன்படும்வகையில் தமிழ் இணையத்தளங்கள் வடிவமைக்கப்பட வேண்டும். கணினி மென்பொருள் பிரச்சனை வராமல் பார்த்துக்கொள்ளவேண்டும். நமது இளையர்களிடம் தமிழ்ப்பக்கங்களுக்குச் செல்லும் ஆர்வத்தை அதிகப்படுத்த வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் கல்விக்குப் பயன்படும் வகையில் தமிழ் இணையத்தளங்கள் உருவாக்கப்பட வேண்டும். திண்ணை இணையத்தளம் மிகச்சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்டு அதிகளவில் பயன்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி அனைவரின் ஒத்துழைப்பினாலும் ஆதரவினாலும் இணையத்தில் தமிழ்க்கொடி இன்னும் சிறப்பாகப் பட்டொளி வீசிப்பறக்க வேண்டும். தமிழின் பெருமை உலகம் முழுவதும் வலம் வர வேண்டும்! அதற்கு இணையத்தின் பயன்பாடு மிக இன்றியமையாத ஒன்றாகும். மற்ற மொழிகளைவிட தமிழ்மொழி எப்படியெல்லாம் சிறந்த மொழி என்பதை உலகறியச் செய்ய இணையம் மிகச்சிறந்த வழியாகும்.

இணையத்தைப் பயன்படுத்தி உலக தமிழ் இதயங்களை இணைத்து நம் அருந்தமிழ்மொழியின் பெருமையை அகிலத்திற்கு உணர்த்த அனைவரும் அரும்பாடுபட வேண்டும் என்ற உறுதியை மனதில் கொண்டு செயல்படுவோம். மிகப்பழமையான ஆதிகாலம் தொட்டு இன்று வரை நீடித்து நிலைத்து சிறப்புடன் விளங்கும் செம்மொழி நம் தமிழ்மொழி. உலகிற்கே ஒரு காலத்தில் தாய்மொழியாக விளங்கிய தமிழ்மொழியை நாம் தாய்மொழியாகப் பெற்று இப்பூவுலகில் பிறந்தது நம் தவப்பயனே. தமிழன் என்று சொல்வோம்! தலைநிமிர்ந்து நிற்போம்!!

Agniputhiran@yahoo.com

Series Navigation

அக்னிப்புத்திரன்

அக்னிப்புத்திரன்