மெய்மையின் மயக்கம்: தொடர்ச்சி 5

This entry is part [part not set] of 47 in the series 20040624_Issue

சோதிப் பிரகாசம்


ஆசிரியரின் கேள்வி

எட்டாம் வகுப்பில் ஜெய மோகன் படித்துக் கொண்டு இருந்த பொழுது அவரிடம் ஒரு கேள்வியை அவரது அறிவியல் ஆசிரியர் கேட்டாராம்; தமிழில் இப் பொழுது மிகவும் பரவலாக எழுப்பப் பட்டு வருகின்ற கேள்விகளில் இதுவும் ஒன்றாம்; மிகவும் ‘புத்தி சாலித் தனமான ‘ ஒரு கேள்வியாக இக் கேள்வியினைக் கருதிக் கொண்டு, இதன் மூலம், புனைவு இலக்கியக் காரர்களை மட்டம் தட்டி விட்டதாகக் கருதிக் கொள்பவர்கள் பலர் நாட்டில் இருக்கிறார்களாம்; இவர்களுள், அறிவியலாளர்கள், அரசியல் கோட்பாட்டாளர்கள், சமுதாயப் பணியாளர்கள் மட்டும் இன்றி, வயிற்று வாதிகளும் அடங்குவராம்!

‘வயிற்று வாதிகள் ‘ என்று ஜெய மோகன் ‘மட்டம் ‘ தட்டுகின்ற அளவுக்கு அப்படி என்னதான் ஒரு மட்டமான கேள்வியினை இவர்கள் கேட்டு விட்டு இருக்கிறார்கள் என்று பார்த்தால், ‘உச்சம் ‘ என்றோ ‘மட்டம் ‘ என்றோ இல்லாமல் ‘பயன் ‘ வாதத் தனமான ஒரு பொறுப்பான கேள்வியாகத்தான் நமக்கு அது தெரிகிறது. கேள்வி இதுதான்:

கதை-கவிதைகளைப் படிப்பதனால் மனிதர்களுக்கு ஏற்படுகின்ற பயன்கள் என்ன ?

இந்தக் கேள்வியின் விடைகளுக்குள் நுழைவதற்கு முன்னர், ஜெய மோகனின் சொல்லாட்சிகளை உட்கவர்ந்து கொள்வதற்கு நாம் முயல்வோம்.

படைப்பு இலக்கியம்

கதைகளைக் கதைகள் என்றும் கவிதைகளைக் கவிதைகள் என்றும் குறிப்பிடுவதற்கு ஜெய மோகன் ஏனோ கொஞ்சம் வெட்கப் படுவது போல் தெரிகிறது. வெறுமனே கதை என்று யாரும் குறிப்பிட்டு விட முடியாத அளவுக்குத் தரத்தில் தமது கதைகள் உயர்ந்து இருப்பதாக ஜெய மோகன் நினைத்துக் கொண்டு இருக்கலாம்; உண்மையாகவும் அது இருக்கலாம். அதற்காக, ஒரு கதை என்று இல்லாமல் வேறு எப்படி எந்த ஒரு கதையையும் யாரும் புரிந்து கொள்ள முடியும் ?

எனவேதான், பொதுப்படையாக இலக்கியங்கள் என்றும் குறிப்பாகப் படைப்புகள் என்றும் கதை-கவிதைகளை அவர் குறிப்பிட்டுக் கொண்டு அவர் வருகிறார். ஆனால், இத் தகு சொல்லாட்சிகளில் முக்கியமான ஒரு பங்கினை ஆற்றிக் கொண்டு வந்து இருப்பவர்கள் இந்தியக் கம்யூனிஸ்ட்டுகள் என்பதுதான் இதில் வேடிக்கை!

கதை-கவிதை இலக்கியங்களைக் ‘கலை-இலக்கியங்கள் ‘ என்று குறிப்பிட்டுக் கொண்டு வந்து இருக்கின்ற இந்தியக் கம்யூனிஸ்டுகளுக்கு என்ன ஒரு ஞானோதயம் ஏற்பட்டதோ தெரிய வில்லை, திடும் என்று அவற்றைப் ‘படைப்புகள் ‘ என்றும் ‘படைப்பு இலக்கியங்கள் ‘ என்றும் அவர்கள் புகழ்ந்து பாராட்டி வந்திடத் தொடங்கினார்கள்; அவற்றை எழுதுபவர்களுக்குப் ‘படைப்பாளிகள் ‘ என்று பட்டம் கட்டியும் விட்டு விட்டார்கள்.

இதன் உட்பொருளைப் புரிந்து கொள்ள முடியாத கதை-கவிஞர்களுக்கோ இதனால் இடைவிடாத கொண்டாட்டம்! கனவில் பாதி, நனவில் பாதி, என எப் பொழுதும் அவர்களுக்குள் ஒரு பெருமிதம்—-தாங்கள் படைப்பாளிகள் என்று; தாங்கள் எழுதுவது எல்லாம் படைப்பு என்று; சமுதாயத்தின் தலை மக்கள் தாங்கள்தாம் என்று!

எழுதப் படிக்கத் தெரியாத பெரும்பான்மையான மக்களுக்கு மத்தியில் எழுத்தாளர்களாகச் சிலர் திகழ்வது என்பது மிகவும் பெரியது ஒரு விசயம்தானே!

இது மட்டுமா, தமிழகத்தின் ஒரே கலைஞராக ஆள்-அம்பு-மலர் முடிகளுடன் தம்மைக் கருணா நிதியார் வரித்துக் கொண்டு இருந்த ஒரு சூழ் நிலையில், உச்சமான ஒரு பட்டமான படைப்பாளிகள் பட்டம் எழுத்தாளர்களுக்குக் கிடைப்பது என்பது சாமானியமா, என்ன! பட்டம் கட்டி விட்டால் மட்டும் போதாது என்று படைப்பாளிகளைச் சண்டை போடவும் வைத்து விட்டார்கள் நமது பட்டங் கட்டிகள்—-ஸ்தாலினிசத்தின் பக்கம் நிற்பவர்கள் எல்லோரும் ‘முற்போக்கு எழுத்தாளர்கள் ‘ என்று; மற்றவர்கள் எல்லோரும் ‘பிற்போக்கு எழுத்தாளர்கள் ‘ என்று!

பட்டம் கட்டி விடுகின்ற இந்தச் சமுதாய நிகழ்ப்பாட்டில், தமக்குக் கிடைத்து இருப்பது முற்போக்குப் பட்டமா ? அல்லது பிற்போக்குப் பட்டமா ? என்னும் குழப்பம் பற் பல ஆண்டுகளாகக் கருணா நிதியாருக்குள் குடி இருந்து கொண்டு வந்து இருக்க வேண்டும். எனவேதான், ‘புரட்சி எல்லாம் மனப் புரட்சி—-எழுத்தில், ஏட்டில்! ‘ என்று அன்று கவிதை பாடிக் கொண்டு வந்து இருந்த கருணா நிதியார், மாக்சிம் :கார்க்கியின் ‘தாய் ‘ கதையை இன்று கவிதை யாக்கிட முனைந்து கொண்டு இருக்கிறார் எனலாம்.

ஆனால், முக்கியமான விசயம் இது வல்ல! ஸ்தாலினிஸ்ட்டுகளான ருஷ்யக் கம்யூனிஸ்ட்டுகளும் இந்தியக் கம்யூனிஸ்ட்டுகளும், கதைகளையும் கவிதைகளையும் உச்சாணிக் கொம்பில் உயர்த்தி வைத்துக் கொண்டு வருவதற்கும் வந்து இருப்பதற்கும் உட்பொதிவான ஒரு காரணம் இருக்கிறது. வேடிக்கையாகச் சிலருக்குத் தோன்றிடலாம் என்ற போதிலும், மார்க்சியத்தை ஒழித்துக் கட்டி விட வேண்டும் என்கின்ற நோக்கம்தான் அது!

எழுத்தாளர்களாகவும் வாசகர்களாகவும் இருக்கின்ற முற்போக்காளர்கள், மார்க்சின் நூல்களைப் படித்திடத் தொடங்கி, கூடவே, லெனின், த்ரோத்ஸ்கி, ஸ்தாலின், மாவோ, முதலானவர்களின் கருத்துகளையும் செயற்பாடுகளையும் சீர்தூக்கிப் பார்த்து, வரலாற்றின் நிகழ்ப்பாட்டினையும் முதலாண்மையின் தோற்றம், நிலைநிற்பு, வளர்ச்சி, அழிவு, ஆகிய நிகழ்வுகளையும் அலசி ஆராய்ந்து, தீவிரமான விவாதங்களைக் கட்சிக்குள் நிகழ்த்திடத் தொடங்கி விட்டால்—-

கம்யூனிசக் கட்சித் தலைவர்களின் கதி என்ன வாகும் ?

உயிர்ப்பும் உயிர்மையும் இடைவிடாத செயல் துடிப்பும் நிறைந்த ஒரு கட்சியாகக் கம்யூனிஸ்ட் கட்சி மாறிடாதா ?

அரியணைக் கனவுகளுடன் அரசு முதலாண்மைக்கு ஆதரவு தெரிவித்துக் கொண்டு வருகின்ற—-வந்து இருக்கின்ற—-கட்சித் தலைவர்களைக் குற்ற வாளிக் கூண்டில் ஏற்றி வைத்து விட மாட்டார்களா, புரட்சியாளர்கள் ?

சாதி பார்த்து, மதம் பார்த்து, பணத்தின் பலமும் பார்த்துத் தேர்தல்களைச் சந்தித்துக் கொண்டும் பதவிகளில் அமர்ந்து கொண்டும் வந்து இருக்கின்ற கட்சித் தலைவர்களுக்கு எதிராகக் கட்சிக் காரர்கள் பொங்கி எழுந்து, சாதி இழிவுகளை ஒழித்துக் கட்டித் தனி மனித உரிமைகளை நிலை நிறுத்துவதுதான் மார்க்சிய வாதிகளின் முதல் கடமை என்று பறை சாற்றி, தேர்தல் போட்டிகளை எல்லாம் கொஞ்சம் காலம் ஒத்தி வைத்து விட்டுச் சமுதாயப் பணிகளில் மட்டுதான் கட்சி ஈடு பட்டிட வேண்டும் என்று முடிவு செய்து விட்டால், அய்யகோ என்னும் ஒரு கதியாகத் தலைவர்களின் கதி மாறிடாதா ?

இவை மட்டுமா, தண்ணீர் ஆவியாகின்ற கதைகளைச் சொல்லி மார்க்சியத்தைப் போதித்துக் கொண்டு வந்து இருக்கின்ற ஆசான்களின் கதியும்தான் என்ன வாகும் ?

வெறுமனே ஒரு வயிற்று வாதமாகவும் வயிற்று எரிச்சல் வாதமாகவும் மார்க்சியத்தைப் புரிந்து வைத்துக் கொண்டு வந்து இருக்கின்ற பொதுமை வாதிகள், ஒரு விடுதலை வாதமாக அதனைப் புரிந்து கொண்டு விட்டால், ஆசான்களின் அதிகாரப் பீடங்கள் எல்லாம் ஆட்டம் கண்டு விடாவா ?

எனவேதான்—-முற்போக்காளர்கள் யாரும் மார்க்சியத்தைத் தெரிந்து கொண்டு விடக் கூடாது என்கின்ற நல் எண்ணத்தில்தான்—-மார்க்சின் நூல்களைத் திறந்து கூட அவர்கள் பார்த்து விடக் கூடாத வகையில்தான்—-படைப்புகள் என்று கதை-கவிதைகளை ஸ்தாலினிஸ்ட்டுகள் உயர்த்திக் காட்டிக் கொண்டு வந்து இருக்கிறார்கள்; வெற்றிகளையும் குவித்துக் கொண்டு வந்து இருக்கிறார்கள்.

மூளையை நோகச் செய்கின்ற மார்க்சின் நூல்களைத் தூசு படிய விட்டு விட்டு, வெறுமனே புரட்சிக் கதைகளையும் கவிதைகளையும் படித்தாலே போதும், சமுதாய மாற்றம் பற்றிய மார்க்சின் கருத்துகளை நாம் புரிந்து கொண்டு விட முடியும் என்று, நாம் நம்புகின்ற தலைவர்களே நம்மிடம் கூறினால் நமக்கு இனிக்காமல் போய் விடுமா, என்ன ?

இப்படித்தான், மாக்சிம் :கார்க்கியின் ‘தாய் ‘ கதையைப் படித்து முடித்து விட்ட போதை மயக்கமே புரட்சியை நமக்குப் போதிப்பது ஆகி விட்டது! தமிழ் நாட்டுச் சிந்தனைகளையும் புனைவுகளையும் விட ருஷ்யாவின் சிந்தனைகளும் கதைகளுமே நிறைவினை நமக்கு அளிப்பனவாக மாறி விட்டு இருந்தன! கட்சித் தலைவர்களின் தலை(மை)களும் தப்பித்துக் கொண்டன!

விளைவாக, கதை-கவிதைகள் செழித்து வளர்ந்தன; படைப்பாளிகளுக்குக் கதைகள் மட்டும்தான் தெரியும் என்றால், தலைவர்களுக்கோ தத்துவமும் தெரியும் என்னும் ஓர் இரட்டை நிலை வளர்த்து விடப் பட்டது; தலைவர்களின் புகழ் பாடிகளாகக் கதை-கவிஞர்கள் மாறிடத் தொடங்கினர்; அடிமைப் படுத்தப் பட்டும் வந்தனர்; அடிமைப் பட மறுத்தவர்கள் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளப் பட்டு வந்த நிகழ்ச்சிகளுக்கோ நாட்டில் என்றும் பஞ்சம் இருந்தது இல்லை.

ஆனால், இவை எல்லாம் கூட இங்கே நமக்கு முக்கியம் அல்ல. மாறாக, படைப்புகள் என்று கதை-கவிதைகளைச் சித்தரித்துக் காட்டுவதில் ஸ்தாலினிஸ்ட்டுகளுக்கு ஜெய மோகன் ஒன்றும் சளைத்தவர் அல்லர் என்பதுதான் முக்கியம்.

மார்க்சியத்திற்கும் ஸ்தாலினிசத்திற்கும் இடையே உள்ள நேர் எதிரான வேறுபாடுகளை ஜெயமோகன் அன்று புரிந்து கொண்டு இருக்க வில்லை என்ற போதிலும், இந்தியக் கம்யூனிஸ்ட்டுகளைப் பொறுத்த வரை, ஸ்தாலினிசத்திற்கு எதிராகத் தீவிரமான வாதங்களை நிகழ்த்தி அவர் எழுதி இருக்கின்ற ஒரு கதைதான் பின் தொடரும் ‘நிழலின் குரல் ‘!

இந்தக் கதையினை அவர் எழுதியதற்காக, வசை பாடுவதில் வல்லவர்களான ஸ்தாலினிஸ்ட்டுகளிடம் இருந்து அவர் வாங்கிக் கட்டிக் கொண்டு இருக்கின்ற வசைகளுக்கும் ஒரு கணக்கு இல்லை.

எனினும், படைப்புகள் என்று கதை-கவிதைகளைச் சித்தரித்துக் காட்டுவதில்தான் இவர்களுக்குள் எவ்வளவு ஒற்றுமை! அதே நேரத்தில், புனைவு தருகின்ற போதைதான் இந்த ஒற்றுமைக்குக் காரணம் என்பதுதான் இதில் வேடிக்கையும் கூட!

புனைவு இலக்கியம்

இலக்கியம் என்றால் என்ன ? கதைகளும் கவிதைகளும் மட்டும்தாம் இலக்கியம் என்றால், அறிவியல் இலக்கியம், தத்துவ இலக்கியம், சமய இலக்கியம், மார்க்சிய இலக்கியம், என்று இருக்கின்ற இலக்கியங்கள் எல்லாம் இலக்கியங்கள் இல்லையா ? என்று எல்லாம் எந்தக் கேள்வியையும் ஜெய மோகனிடம் நாம் கேட்டிட வேண்டிய கடினங்கள் எவற்றையும் நமக்கு அவர் விட்டு வைத்திட வில்லை.

அரசியல் காரர்களை அரசியல் வாதிகள் என்று பிழையாகவும் பிழையின் பழக்கத்தின் காரணமாகவும் குறிப்பிட்டுக் கொண்டு நாம் வருவது போல, கலை-இலக்கியக் காரர்களை இலக்கிய வாதிகள் என்று ஜெய மோகன் குறிப்பிட்டுக் கொண்டு வருகிறார் என்பது உண்மைதான்.

அதே நேரத்தில், ‘புனைவு இலக்கியம் ‘ என்றும் கதை-கவிதைகளை குறித்துக் கொண்டு அவர் வருவதால், அவருடன் நமக்கு உள்ள முரணங்களைக் கொஞ்சம் நாம் குறைத்துக் கொள்ளுகின்ற வகையில், இலக்கியம் என்னும் சொல்லை அவர் பயன் படுத்துகின்ற இடங்களில் எல்லாம் புனைவு இலக்கியம் என்று அதனை நாம் பொருட்படுத்திக் கொள்ளலாம்.

இனி, தமது ஆசிரியரின் கேள்விக்கு ஜெய மோகன் அளித்து இருந்த பதிலுக்குள் நாம் நுழைவோம்.

14-06-2004

(தொடரும்)

(ஜெயமோகனின் கடிதம் பற்றிய ஒரு விமர்சனத் தொடர்)

Series Navigation

சோதிப் பிரகாசம்

சோதிப் பிரகாசம்

மெய்மையின் மயக்கம்: தொடர்ச்சி 4

This entry is part [part not set] of 52 in the series 20040617_Issue

சோதிப் பிரகாசம்


கலை மனோ லயம்

ஏப்ரல், 2004 புதிய கோடாங்கியில் குடியரசு எழுதிய கட்டுரை ஒன்று வெளி வந்து இருந்தது—- ‘பலியர்களுடன் உரையாடல் ‘ என்னும் தலைப்பில்!

‘பலியர் ‘ என்னும் மலை வாசி மக்கள் இடையே சமுதாயப் பணி ஆற்றுவதற்காக—-தங்கள் வாழ்க்கையில் பலியர்கள் முன்னேறிடத் தக்க வழி-வகைகளை அவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காக—-சென்று இருந்த தலித் தலைவர்களின் அனுபவங்களைப் படம் பிடித்துக் காட்டுகின்ற ஒரு கட்டுரை அது.

அதே நேரத்தில், சமுதாயப் பணி புரிவதற்காக மக்களைத் தேடி மலைகளுக்குச் செல்கின்ற தலைவர்களின் கருத்துகளுக்கும் தங்கள் வாழ்க்கையினைப் பற்றி அம் மலை வாசி மக்கள் கொண்டு இருக்கின்ற கருத்துகளுக்கும் இடையே உள்ள முரண்பாடுகளையும் வெளிக் கொணர்ந்து இருக்கின்ற ஒரு கட்டுரை என்கின்ற வகையில், மிகச் சிறந்தது ஒரு கட்டுரையாகவும் அது விளங்குகிறது.

தலித் மக்களின் ‘தனி மனித விடுதலை ‘யாகவும் ‘மனித மாண்பின் ‘ வீறு கொண்ட எழுச்சியாகவும் ‘தலித்தியம் ‘ என்பதைப் புரிந்து வைத்து இருக்கின்ற எழுத்தாளர்களான சிவகாமி, ப்ரதிபா ஜெயச்சந்திரன்(பெண் அல்லர்; ஆண்தான்!), நிகழ் அய்க்கன், குடியரசு முதலானவர்கள், கொடைக் கானல் மலைக்குச் சென்று பலியர்களைச் சந்திக்கிறார்கள்.

எத் தகையது ஓர் உறவினைப் பலியர்களுடன் ஏற்படுத்திக் கொள்வதற்காக அவர்களைத் தேடித் தலித் தலைவர்கள் சென்றார்கள் என்பது நமக்குத் தெரிய வில்லை; இவர்களது ‘கலை மனோ லயம் ‘ என்பதைத் தவிர வேறு காரணம் எதுவும் இதற்கு இருந்திட முடியுமா ? என்பதும் நமக்குப் புரிய வில்லை.

குடியரசுவின் அனுபவம்

மனைவியைக் குறிப்பதற்குப் ‘பெண்சாதி ‘ என்னும் சொல்லைக் குடியரசு பயன் படுத்த, குடியரசுவின் பின்னோக்கிய பார்வையைச் சுட்டிக் காட்டுகின்ற வகையில் ‘மனைவி ‘ என்னும் சொல்லைக் கந்தசாமி என்னும் பலியர் ஒருவர் பயன் படுத்த, ஒரு மோதலுடன் குடியரசுவின் உரையாடல் தொடங்குகிறது.

‘பண்ணையார் ‘களாகவும் ‘செட்டியார் ‘களாகவும் ‘சமுசாரி ‘களாகவும், அதாவது, ‘ஆதிக்கச் சாதிக் காரர் ‘களாகவும் சிவகாமியுடன் சென்று இருந்தவர்களைத் தாங்கள் மதிப்பதாகக் கந்தசாமி பலியர் கூறுகிறார்.

எம். ஜி. ஆர்., சிவாஜி கணேசன், ஜெயலலிதா, ஆகியோர் அழகானவர்கள் என்றும் அவர்களைக் காண்பதற்காக அவர்கள் வருகை புரிகின்ற இடங்களுக்கு எல்லாம் சென்று வருவது மலை வாசி மக்களின் வழக்கம் என்றும், ஆனால், சிவகாமியும் பிறரும் அவர்களைத் தேடி மலைக்கு வந்து இருப்பதாகவும் கந்த சாமி பலியர் குத்திக் காட்டி அவர்களைக் கொஞ்சம் கிண்டல் அடிக்கவும் செய்கிறார்.

ஒரு ‘கலெக்டர் ‘ என்பதாகவும் அந்தக் கலெக்டரைத் தொட்டுப் பார்த்து விட்டதே பெரும் பேறு என்பதாகவும் கருதித்தான் சிவகாமிக்கு மலை வாசிப் பெண்கள் மதிப்பு அளித்து இருக்கிறார்கள் என்பதும் கூட பலியர்களுடன் குடியரசு நடத்திய உரையாடலில் இருந்து நமக்குத் தெரிய வருகிறது.

தங்களின் ஆடல்-பாடல்களைப் பார்த்து சிவகாமி அடைந்த மகிழ்ச்சிக்காகத் தாங்களும் மகிழ்ந்து கொண்டு இருந்த மலை வாசிப் பெண்கள் இடையே சிவகாமி பேசினாராம்—-தங்கள் பாடல்களை மலை வாசி மக்கள் மறந்து விடக் கூடாது என்று; காடுகள்தாம் அவர்களின் தெய்வம் என்று!

வானொலியின் மூலம்தான் தங்களுடன் சிவகாமி முதலியனர் தொடர்பு கொள்ள வேண்டும் என்று கந்த சாமி பலியர் கூறி இருந்த

போதிலும்—-2,000 பேர் அடங்கிய பலியர்களில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் எத்தனை பேர் என்பது தெரியாத நிலையிலும்—-அவர்களுக்குப் பத்தரிகை ஒன்று தேவை என்று குடியரசு நினைக்க, அந்த நேரம் பார்த்து, பலியர்களின் பத்தரிகைக்கு 1,000 ரூபாய் நன்கொடை வழங்குவதாக சிவகாமி அறிவிக்க, சரியான தலைமையின் கீழ்தான் தாம் இயங்கிக் கொண்டு வருவதாகக் குடியரசு பூரித்துப் போக, ஒரு தலைவர்-தொண்டர் நாடகமே கொடைக் கானல் குளிர்ச்சியில் நடந்து முடிந்து இருக்கிறது.

முற்போக்குத் தனமான விழிப்பு

பலியர்களை வாழ வைப்பதற்கு என்று வெளி நாடுகளில் இருந்து நிதிகளைப் பெற்றுக் கொண்டு இருந்த—பெற்றுக் கொண்டு வருகின்ற—தன்னார்வக் குழுவினர் அனைவரும் பெரும் பாலும் அவர்களை ஏமாற்றிக் கொண்டுதான் வந்து இருந்தனர்—-வருகின்றனர்—என்று பலியர்கள் ஏன் கருதிக் கொண்டு இருந்தனர் என்பது முக்கியமான ஒரு விசயம்தான் என்ற போதிலும், இங்கே நமக்கு அது வேறு ஒரு விசயம்!

ஆனால், தாங்கள் உழைத்துச் சம்பாதித்த தங்களின் சொந்தப் பணத்தினைச் செலவு செய்து, கதைஞர் சிவகாமி, கவிஞர் ப்ரதிபா ஜெயச் சந்திரன், செய்தித் தொகுப்பாளர் நிகழ் அய்க்கன், எழுத்தாளர் குடியரசு, முதலியனர் பலியர்களைச் சென்று சந்தித்து, காடுகள்தாம் அவர்களின் தெய்வம் என்பன போன்ற பழைமையான—- ‘பிற்போக்குத் தனமான ‘—-வாதங்களை நிகழ்த்தி, ‘முற்போக்குத் தனமான ‘ ஒரு விழிப்பினை அவர்கள் இடையே ஏற்படுத்துவதற்கு முயன்று இருக்கிறார்கள் என்றால், அதற்குக் காரணம் என்ன என்பதுதான் யாரும் புரிந்து கொள்ள முடியாத ஒரு புதிர்!

‘தலித்துகள் ‘ என்னும் அடையாளத்துடனும் தங்கள் விடுதலை முயற்சிகளில் பழங் குடி மக்களின் முன்னேற்ற முயற்சிகளையும் இணைத்துக் கொள்ளலாம் என்னும் உத்தியுடனும், பலியர்களைத் தேடி இவர்கள் சென்று இருந்தார்கள் என்றால்—-இத் தகையது ஓர் உத்தியாகத்தான், தலித் இளைஞர்களின் வழி காட்டியாக நின்று அவர்களை அங்கே சிவகாமி அழைத்துக் கொண்டு சென்று இருந்தார் என்றால்—அதற்காகச் சாதி-ஒழிப்பாளர்கள் மகிழ்ந்து கொள்ளலாம்.

ஒரு தன்னார்வக் குழுவாகவோ அல்லது கூலிக்கு மாரடிப்பதற்காகவோ மலைகளைத் தேடி இவர்கள் சென்று இருந்தால் கூட, நமக்குத் தேவை இல்லாத வேறு ஒரு விசயம் போலும் அது! என்று நாம் ஒதுங்கிக் கொள்ளலாம்!

ஆனால், இவர்களோ மலை வாசி மக்களின் பழைய வாழ்க்கை முறைகளையும் அவர்களின் ஆடல்-பாடல்களையும் சுவனித்துப் பார்த்து விடுகின்ற ‘கலை மனோ லயத்தில் ‘ மலைக்குச் சென்று இருக்கிறார்கள்—ஜெய மோகனின் ‘காடு ‘ கதையை நமக்கு நினைவு ஊட்டுகின்ற வகையில்!

எனினும், ஈகின்ற வள்ளலாக ஒருவன் இருந்திட வேண்டும் என்றால், ஏற்கின்ற இரவலர்களாகப் பலரும் இருந்திட வேண்டும் என்பது போல, மலை வாழ் மக்களின் கட்டற்ற வாழ்க்கையினையும் கலை-களிப்புகளையும் எப்பொழுதாவது சென்று இவர்கள் கண்டு களித்திட வேண்டும் என்பதற்காக, இருண்டு போன பழைமையிலேயே மலை வாசி மக்கள் என்றும் இருந்திட வேண்டுமா, என்ன!

வரலாற்றின் இயக்கம் பற்றியோ பொருளாதார வளர்ச்சியின் விதிகள் பற்றியோ தெரிந்து கொள்வதற்குக் கொஞ்சமும் முயலாமல், கதைகளையும் கவிதைகளையும் எழுதுவதற்குத் தெரிந்து வைத்து இருந்தாலே போதும், அனைத்தும் தமக்குத் தெரிந்ததாகி விடும் என்று கருதிக் கொள்கின்ற ‘கலை மனோ லயத்தின் ‘ செயல் முறையான வெளிப்பாடு இது!

இதில், நமது ஜெய மோகனின் சித்தரிப்புதான் கொஞ்சம் வேற்றுமை ஆனது. ஃப்ரான்ஸ் நாட்டின் வண்ணக் கலவையுடன் கீழ்-மேல் நாடுகளின் ஒரு தத்துவச் சிதறலாகத் தமது ‘கலை மனோ லயத்தினை ‘ அவர் சித்தரித்து விடுவார். தத்துவம் என்னும் சொல்லைத் தவறாகப் பயன் படுத்துபவர்களை ஹே:கல் விட்டு வைத்திட மாட்டார் என்பது இங்கே வேறு விசயம்!

ஜெய மோகனின் ‘பின் தொடரும் நிழலின் குரல் ‘ கதையில் ஒரு காட்சி:

தமது ‘விஷ்ணு புரம் ‘ கதையை வெளியிடுகின்ற வாய்ப்பிற்காக ஜெய மோகன் காத்துக் கொண்டு இருந்த நேரம் அது. ரிஷி என்னும் ஒரு ‘மார்க்சிய ‘ அறிஞரைச் சந்தித்து அவர் உரையாடிக் கொண்டு இருக்கிறார். மேலை நாட்டுத் தத்துவங்களின் நுனிப் புல்களைக் கொஞ்சம் அவர்கள் மேய்ந்து பார்க்கிறார்கள்.

பெருங் கதையாடல், சிறுங் கதையாடல், என்று எல்லாம் தொடர்கின்ற அவர்களது உரையாடலின் இறுதியில் ஜெய மோகன்

கூறுகிறார்—- ‘பொதுக் கனவுகள் ‘ தேவை இல்லை; மக்களின் ‘தனிக் கனவுகளில் ‘ யாரும் தலையிடாமல் அவற்றின் போக்கில் அவற்றை விட்டு விடுவதுதான் நல்லது என்று!

விட்டு விடாமல் என்னத்தைதான் இவர் செய்து விடுவார் ? என்பது ஒரு புறம் இருக்க, ‘பொதுக் கனவு ‘ என்பதனை எப்படி இவர் புரிந்து கொள்கிறார் ? அதையும் ‘கனவு ‘ என்று இவர் ஏன் குறிப்பிடுகிறார் ? என்பதுதான் முக்கியமான கேள்வி. எனினும், ஜெய மோகனின் ‘கலை மனோ லயத்தின் ‘ எல்லையை விட்டு நீங்கி மண்ணுக்கு இறங்கி வந்து இந்தக் கேள்வியினைச் சற்றே நாம் அலசிப் பார்ப்போம்.

அதே நேரத்தில், நெருக்கமான தொடர்புகளுடன் கூடிய மனிதர்களின் சமுதாய வாழ்க்கையினைப் ‘பொதுக் கனவு ‘ என்றும் மலை வாசி மக்களைப் போலச் சற்றுத் தொலைவில் ஒதுங்கிப் போய் மனிதர்கள் நடத்துகின்ற வாழ்க்கையினைத் ‘தனிக் கனவு ‘ என்றும், கலைத் தனமாகக் குறிப்பிடுவதற்கு ஜெய மோகன் விரும்புகிறார் என்பதையும் ஈண்டு நினைவில் நாம் கொள்வோம்.

****

பொதுக் கனவு

பொருளாதார நலன்களின் நிலவரங்களுக்கு ஏற்பத்தான் மனிதர்களின் கருத்துகளும் கொள்கைகளும் உள்ளப் போக்குகளும் இங்கே நிலவிட முடிகிறது என்றால், சிவகாமியோ, ஜெய மோகனோ, அல்லது அவர்களைப் போன்ற பிற கதை-கவிஞர்களோ அதனைச் சிந்தித்துப் பார்ப்பதற்குக் கூட முன் வந்திட மாட்டார்கள் என்பது அன்றாடம் நாம் கண்டு வருகின்ற ஒரு மெய்மை!

மேம் போக்கான ஓர் அறிவுத் தேட்டத்தில் நிறைவு அடைந்து விடுபவர்கள் என்றோ, மூளையை நோக வைக்கின்ற முயற்சிகளில் ஆர்வம் இல்லாதவர்கள் என்றோ, தங்கள் பிறவி ஞானத்திற்கு அப்பால் வேறு ஞானம் எதுவும் தேவைப் படாத பிறவிகள் என்றோ இதற்குப் பல் வேறு காரணங்கள் இருக்கலாம்.

ஆனால், முழுமையான வாழ்க்கையினையும் மொத்தமாக நாம் பார்த்திட வேண்டும் என்றால், மனிதர்களின் பொருளாதார நலன்களில் இருந்து தொடங்கித்தான் நமது பார்வையினை நாம் செலுத்திட வேண்டும் என்பது ‘இராம கி-யின் பாடம் ‘ (திண்ணை, 20-05-2004) அல்ல என்ற போதிலும் ஒரு பாலப் பாடம்!

தங்களுக்கு வேண்டிய பொருள்கள் அனைத்தையும் தாங்களே உற்பத்தி செய்து நுகர்ந்து கொள்ளுகின்ற ஒரு குடும்பத்தினர் அல்லது ஒரு குழுவினரின் பொருளாதாரம், ‘இயற்கைப் பொருளாதாரம் ‘ என்றும் தங்கள் உற்பத்திகளை எல்லாம் சரக்குகளாகச் சந்தையில் விற்றும் தங்கள் தேவைகளை எல்லாம் சரக்குகளாகச் சந்தையில் இருந்து வாங்கியும் மனிதர்கள் வாழ்க்கை நடத்திக் கொண்டு வருகின்ற ஒரு பொருளாதாரம், ‘சரக்குப் பொருளாதாரம் ‘ என்றும் வகைப் படுத்தப் பட்டு இருக்கின்றன என்பது நமக்குத் தெரியும்.

உற்பத்தி, நுகர்ச்சி, ஆகிய இரண்டு நிகழ்ப்பாடுகளிலும், சரக்குகளது கைமாற்றின் மூலமாகத்தான் மனித உறவுகள் நிலை நிறுத்தப் பட்டு வருகின்றன என்பதாலும் சரக்குகளின் கடவுளாக நின்று கைமாற்றினை ஒழுங்கு படுத்திக் கொண்டு வருவது பணம்தான் என்பதாலும், பணத்தின் சுற்றோட்டம்தான்

மனித உறவுகளின் ஆழ-அகலங்களைச் சுட்டிக் காட்டுகின்ற ஓர் அளவு கோலாக விளங்குகிறது. எப்படியும், சமுதாயம் என்பது இன்று ஒரு சந்தைதானே!

இப்படி, வட்டாரச் சந்தை முதல் உலகச் சந்தை வரை தொடர்பு கொண்டு இருப்பவர்கள், சமுதாயத் தன்மை மிகுந்தவர்களாகவும் தங்கள் வட்டாரத்தின் எல்லைக்குள் மட்டும் தங்கள் சந்தைத் தொடர்புகளைக் குறுக்கிக் கொண்டு இருப்பவர்கள், சமுதாயத் தன்மை குறைந்தவர்களாகவும் நிலவிக் கொண்டு வருகிறார்கள்.

அதாவது, சமுதாயத் தன்மை மிகுந்தவர்கள், பொதுத் தன்மை மிகுந்தவர்களாகவும் சமுதாயத் தன்மை குறைந்தவர்கள், தனித் தன்மை மிகுந்தவர்களாகவும் நிலவுகிறார்கள்.

இந்தப் பொதுத் தன்மையினைத்தான் ‘பொதுக் கனவு ‘ என்றும் தனித் தன்மையினைத்தான் ‘தனிக் கனவு ‘ என்றும் ஜெய மோகன் குறிப்பிடுகிறார்.

மலை வாசி மக்கள் இடையே இன்றும் காணப் படுகின்ற இந்தத் தனித் தன்மையின் ‘கலை வடிவ ‘ வெளிப் பாட்டினைத்தான் அவர்களின் ஆடல்-பாடல்களில் சிவகாமியும் காண்கிறார்; அவை பாது காக்கப் பட வேண்டும் என்றும் கருதுகிறார்.

ஆனால், பழங் கலைகளை எல்லாம் கடந்து வந்து இருக்கின்ற இன்றைய கலைகள் எல்லாம், பழங் கலைகளின் வளர்ச்சிகள்தாம் என்கின்ற பொழுது, பழங் கலைகளைப் பாது காத்திட வேண்டும் என்று சிவகாமி ஆசைப் படுவதில் என்ன ஒரு வரலாற்று ஞாயம் இருந்திட முடியும்—-அவ் வப்போது அவர்களைப் போய்ச் சந்தித்து அவர்கள் நடுவே ஒரு ‘பெரியவாளாக ‘ (பெரிய + ஆள்)த் தம்மைக் காட்டிக் கொள்வதற்கு அவர் ஆசைப் படுகிறார் என்பதைத் தவிர ?

யாரும் போய்த் தலையிடாமல் அவர்களை அப்படியே விட்டு விட வேண்டும் என்று—-ஒரு பெரியவாள் என்கின்ற முறையில்—-கருத்துக் கூறுவதற்கு ஜெய மோகனும் முன் வரலாம்.

ஆனால், வணிகர்கள் விடுவார்களா ? பாதாளம் வரை பாய்ந்து சென்றிடுகின்ற ஆற்றல் படைத்த பணம் விடுமா ?

பலியர்களைப் பொறுத்த வரை, அவர்களோ ‘கூலி உழைப்பாளர்கள் ‘; வட்டாரம், தேசம், உலகம், என எல்லாச் சந்தைகளையும் கொஞ்சமேனும் சார்ந்து இருப்பவர்கள்!

உழைப்பாளர் வருக்கம் என்கின்ற முறையில் தங்களை அவர்கள் அணி திரட்டிக் கொள்வதில்தான் அவர்களது எதிர் காலம் வளப் பட்டிட முடியுமே ஒழிய, சிவகாமி போன்றவர்களின் கலைத் தனமான வள்ளல் தனத்தில் அல்ல! தங்களுக்குத் தேவையான கலை வடிவங்களைத் தாங்களாகவே உருவாக்கிக் கொள்வதற்கு அவர்களால் முடியாதா,என்ன!

மதுரை சண்முக சுந்தரம்

கதை-கவிதைகளைப் பற்றி அதிகம் பேசுகின்ற ஒரு நாட்டில் அறிவு வளர்ச்சி ஏற்படுகின்ற வாய்ப்பு மிகவும் குறைவு என்று நான் எழுதி இருந்ததைப் படித்து விட்டு, மதுரை நண்பர் சண்முக சுந்தரம் என்னுடன் பேசினார். நண்பர் ஜெய மோகனின் கதைகளில் அதிகமான ஈடுபாடு கொண்டு இருப்பவர் அவர்!

கதைகளைப் படிப்பதனால் அறிவு வளர்ச்சி ஏற்படுவது இல்லை என்று நான் கருதுவது தவறு என்று வாதிட்டு, மாவிலைத் தோரணங்களைக் கூட காசு கொடுத்துக் கடைகளில் வாங்கிட வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருக்கின்ற மாற்றத்தைப் புதுமைப் பித்தனின் ஏதோ ஒரு கதையைப் படித்துதான் தாம் தெரிந்து கொண்டதாகவும் என்னிடம் அவர் கூறினார்.

இதனைத் தெரிந்து கொள்வதற்குக் கூட மதுரை சண்முக சுந்தரத்திற்கு ஒரு புதுமைப் பித்தன் தேவை பட்டு இருந்து இருக்கிறார் என்பது ஒரு புறம் இருக்க—-அனுபவ அறிவின் பரவலைப் பற்றித்தான் அவர் பேசிக் கொண்டு இருந்தார் என்பது மறு புறம் இருக்க—-சரக்குப் பொருளாதாரத்தின் விரிவினைக் குறித்துதான் அவர் வாதிட்டுக் கொண்டு இருந்தார் என்பது வெளிப்படை! எனினும், அதனைப் புரிந்து கொள்வதற்குதான் அவர் முயன்றிட வில்லை. ஆனால், கிராமத்து மக்களுக்கோ எளிதில் புரிந்து விடக் கூடிய ஒரு விசயம் இது!

அவரை நான் கேட்டேன்—-பணத்தின் ‘தன்மை ‘க்கும் ‘அளவு ‘க்கும் இடையே உள்ள வேறுபாட்டினை இதனால் நீங்கள் புரிந்து கொள்ள முடிந்ததா ? பணமோ, பணம்! என்று மனிதர்கள் அலைந்து திரிந்து கொண்டு வருகிறார்களே, அதற்கு இந்த வேறுபாடுதான் காரணம் என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள முடிந்ததா ? என்று!

சண்முக சுந்தரத்தின் முழு முயற்சியும் எனது கேள்விகளைத் தவிர்ப்பதிலேயே வீண் ஆகிக் கொண்டு இருந்தது. அனுபவ அறிவின் எல்லையினை விட்டு நீங்கிக் காரண அறிவின் எல்லைக்குள் நுழைவது என்பது நமது மூளையை நோக வைத்திடக் கூடிய ஒரு கடினமான வேலைதானே!

விற்கப் படுகின்ற எந்தப் பொருளையும் பணம் இருந்தால் வாங்கி விட முடியும்; பணத்தின் பரமான(யுனிவர்சல்)—-எல்லை இல்லாத—- ‘தன்மை ‘ இது; ஆனால், நம்மிடம் எவ்வளவு பணம் இருக்கிறதோ அவ்வளவுக்கு உரிய சரக்குகளைத்தாம் நாம் வாங்கிட முடியும்; பணத்தின் வரம்பான—-ஓர் எல்லைக்கு உட்பட்ட—- ‘அளவு ‘ இது! என்று அவருக்கு நான் விளக்கம் அளித்தேன்.

அவ்வளவு ஏன், பணத்தின் சுற்றோட்டம் பற்றிய விளக்கங்களை மிகவும் அருமையாகத் தந்து இருக்கின்ற இராம கி கூட, அந்தச் சுற்றோட்டத்திற்கு அடியில் அமைந்து கிடக்கின்ற உள்ளோட்டத்தினை வினயமாக எடுத்துக் கொண்டு இருப்பதாக நமக்குத் தெரிய வில்லையே!

குறிப்பிட்ட விகிதங்களில் கைமாற்றிக் கொள்ளப் படுகின்ற சரக்குகளுக்கு அடியில்—-கைமாற்றின் சமன்மையினை அளவிடுகின்ற வகையில்—- அமைந்து கிடப்பது எது ? என்பதனைக் கணக்கில் அவர் எடுத்துக் கொண்டு இருந்து இருக்க வேண்டாமா ?

அரிஸ்ட்டாட்டிலும் இராம கி-யும்

தாம் உற்பத்தித்த 5 கட்டில்களைக் கொடுத்து, அவற்றிற்குக் கைமாற்றாக ஒரு சிறிய வீட்டினைப் பெற்றுக் கொண்டு இருந்தாராம் ஒருவர். 5 கட்டில்களையும் 10,000 ரூபாய்க்கு விற்று விட்டு, அந்தப் பணத்தினை கொடுத்து ஒரு வீட்டினை ஒருவர் வாங்கிக் கொண்டு இருந்தார் என்றும் இதனை நாம் எடுத்துக் கொள்ளலாம்.

ஆனால், விசயம் அது வல்ல!

இந்தக் கைமாற்று நடவடிக்கையினைப் பார்த்துக் கொண்டு இருந்த அரிஸ்ட்டாட்டில் கூறினாராம்: இப்படி ஒரு கைமாற்று நடந்திடவே முடியாது என்று; ஏனென்றால், இந்த இரண்டு சரக்குகளுக்கும் இடையே சமன்மை எதுவும் இல்லை என்று; எனினும், இது நடக்கிறது, ஆனால், எப்படி என்றுதான் புரிய வில்லை என்று! கார்ல் மார்க்ஸ் கூறுகிறார்.

இரண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அரிஸ்ட்டாட்டிலுக்கு ஏற்பட்டு இருந்த ஐயப்பாட்டினைக் கூட தீர்த்து வைத்திட முயலாமல், பணத்தினப் பற்றி மேலோட்டமாக இராம கி இன்று எழுதிக் கொண்டு இருப்பது, கடந்த காலத்துச் சிந்தனை வளர்ச்சிகளை அவர் புறக்கணித்து விட்டு இருக்கின்ற ஒரு பொருட் குற்றம் ஆகிடாதா ? இதற்கு விளக்கம் அளித்திட வேண்டிய பொறுப்பு இராம கி-க்கு உண்டு; வரவேற்பதற்கு என் போன்ற வாசகர்களும் உண்டு.

குறிப்பிட்ட அளவுகளில் கைமாற்றிக் கொள்ளப் படுகின்ற சரக்குகளுக்கு இடையே ‘அளவு முறையான ஒரு சமன்மை ‘ இருந்திட வேண்டும் என்றால், அந்தச் சமன்மையின் ‘அளவை ‘ என்ன ? என்பதுதான் முக்கியமான கேள்வி.

சிவகாமியின் கலை மனோ லயம்

‘கலை மனோ லயம் ‘ என்னும் சொல்லாட்சியினைக் கம்பர் பயன் படுத்தி இருப்பதாகத் தமிழ் லெக்சி:கன் கூறுகிறது. ஆனால், அவருக்கு முன்னர் வேறு யாரேனும் இதனைப் பயன் படுத்தி இருந்து இருக்கக் கூடுமா ? என்பது நமக்குத் தெரிய வில்லை.

எனினும், சம்ஸ்க்ருதம் போல் தோன்றுகின்ற இந்தச் சொல்லாட்சி, ‘கலை ‘ + ‘மனம் ‘ + உல்லாயம்–உல்லாசம் என்னும் சொற்களுடன் தொடர்பு உடைய ‘உலயம் ‘ என்னும் தமிழ்ச் சொற்களின் ஒரு கூட்டாக்கம்தான் ஆகும்.

அக்டோபர், 2003 புதிய கோடாங்கியின் பின் அட்டையில் ஓர் ஓவியம் வெளி வந்து இருந்தது:

ஓர் ஆடு; அதன் வயிற்றிற்குள் ஓர் இலை!

இதில் வியப்பு என்ன வென்றால், அந்த இலையோ முழுமையாக

—-கொஞ்சமும் சிதையாமல்—-இருந்தது.

ஆடு-மாடுகளின் வளர்ப்பில் தொடர்பே இல்லாதவர்கள் இந்த ஓவியத்தை எப்படிப் புரிந்து கொள்வார்கள் என்பது நமக்குத் தெரியாது.

ஆனால், இந்த ஆடும் உருப்படாது; இதை வளர்ப்பவனும் உருப்பட மாட்டான்; என்றுதான் ஆடு வளர்ப்பவர்கள் இதனைப் புரிந்து கொள்வார்கள்.

இரை ஆகாத இலை; வயிறு நிரம்பாத ஆடு!

வேறு எப்படித்தான் இதனை யாரும் புரிந்து கொள்ளவும் முடியும் ?

ஆனால், மனிதர்கள் என்னவோ பல் வேறு வகையான உணவினை உண்டு கொண்டும் உண்ட உணவு செரித்திட வில்லை என்றால் அதற்காகக் கவலைப் பட்டுக் கொண்டும்தாம் வருகிறார்கள். ஆனால், இதற்கு சிவகாமி அளிக்கின்ற விளக்கம் என்ன தெரியுமா ?

இலைக்குச் சேதம் எதுவும் ஏற்படாமல் அதனை உண்டு ஆடு உயிர் வாழ்ந்து விடுகிறதாம்!

மேல் தட்டுச் சிற்றுடைமைச் சிந்தனையின் உச்சக் கட்டம் இது எனலாம்!

இத் தகு கற்பனைகளில் உள்ளம் உறைந்து போய் விடுகின்ற கதை-கவிஞர்கள் எல்லாம், பாமர மக்களின் மேல் தாங்கள் கொண்டு இருக்கின்ற அன்பினை வெளிப் படுத்திப் பெரியவாளாகத் தங்களை உயர்த்திக் கொள்வதற்காக, தங்கள் ‘கலை மனோ லயங்களை ‘ அவிழ்த்து விடத் தொடங்கி விடுவதுதான் இதில் வேடிக்கை!

வெறுங் கதைகளினாலும் ஆடல்-பாடல்களினாலும் ஆக்கப் பட்டு இருப்பது அல்லவே, வாழ்க்கை!

இனி, ஜெய மோகனின் ஆசிரியருக்கு நாம் வருவோம்.

(தொடரும்)

(ஜெயமோகனின் கடிதம் பற்றிய ஒரு விமர்சனத் தொடர்)

Series Navigation

சோதிப் பிரகாசம்

சோதிப் பிரகாசம்

மெய்மையின் மயக்கம்: தொடர்ச்சி – 3

This entry is part [part not set] of 48 in the series 20040610_Issue

சோதிப் பிரகாசம்


மேல் தட்டு மற்றும் கீழ்த் தட்டுச்

சிற்றுடைமை யாளர்கள்

உணவு, உடை, உறையுள், கல்வி, முதலிய எவற்றிற்கும் பஞ்சம் இல்லாதவர்கள் மேல் தட்டுச் சிற்றுடைமை யாளர்கள்!

தொடர்ச்சியான வருமானம்—-தரமான கல்வி—-பொழுது-போக்குகளில் ஆர்வம்—-என வசதியான ஒரு மேல் தட்டு வாழ்க்கையினை அமைத்துக் கொண்டு இருப்பவர்கள் இவர்கள்!

தங்களை விடவும் அதிகமான வாழ்க்கைத் தரத்தினையும் வசதிகளையும் அனுபவித்துக் கொண்டு வருபவர்களைக் கண்டால் எப் பொழுதும் இவர்களுக்கு ஒரு பொறாமை! அதே நேரத்தில், பொறாமைப் படுவது சில்லரைத் தனமான ஒரு பான்மை என்பதும் இவர்களுக்குத் தெரியும்.

எனவே, ஒரு பொதுமைச் சமுதாயம் மலர்வதிலும் ஒரு பொதுமை வாதியாக ஒருவன் இருப்பதிலும் எந்தத் தவறும் இல்லை என்று அவ்வப் போது வசனங்களை உதிர்த்துத் தள்ளிக் கொண்டு இவர்கள் வருவார்கள். எனினும், ஸ்தாலினிசத்திற்கு அப்பால் இவர்களது பொதுமை வாதம் மலர்வது இல்லை; அத் தகைய தேடல்களும் இவர்களிடம் இருப்பது இல்லை; மார்க்சியம் இவர்களுக்குத் தேவையும் இல்லை.

சமுதாயத்தின் அதிகாரப் பீடங்களில் எல்லாம் வேண்டியவர்கள் என்று ஒரு சிலரேனும் இவர்களுக்கு இல்லாமல் இருப்பது இல்லை.

இவர்களுள், அதிகாரிகளாக இருப்பவர்கள் தங்கள் தவறுகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கு எங்கும் எப் பொழுதும் மேல் மட்டங்களில் ஒரு கதவு திறந்தே இருக்கும்; எழுத்தாளர்களாக இருப்பவர்களுக்கு எல்லாப் பத்தரிகைகளிலும் எப் பொழுதும் ஓர் இடம் இருக்கும். அவரவர் வசதிகளுக்கு ஏற்ற பிற வாய்ப்புகளும் மற்றவர்களுக்குக் கிட்டாமல் இருப்பது இல்லை.

பொருளாதாரத்தில் ஏற்படுகின்ற திடிர் மாற்றங்களையோ ஏற்ற-இறக்கங்களையோ தாங்கிக் கொள்வதற்கு இவர்களால் முடியாது என்பதால், உலகச் சந்தைப் போட்டிகளை வெறுப்பவர்களாகவும் சமுகாண்மை என்பதை அரசு முதலாண்மையாகப் புரிந்து கொண்டு அதற்கு ஆதரவு அளித்துக் கொண்டு வருபவர்களாகவும் இவர்கள் இருப்பார்கள்.

ஆனால், கீழ்த் தட்டுச் சிற்றுடைமையாளர்களின் கதையோ முற்றிலும் வேறு ஆனது.

பஞ்சம் இல்லாமல் வாழ்க்கையை நடத்திக் கொண்டு வருபவர்கள் மேல் தட்டுச் சிற்றுடைமையாளர்கள் என்றால், எப் பொழுதும் பஞ்சத்தில் அடி பட்டுக் கொண்டே வருபவர்கள் கீழ்த் தட்டுச் சிற்றுடைமையாளர்கள்!

தமது சொந்த நிலங்களிலோ அல்லது கைத் தொழில்களிலோ தாங்களே உழைத்துப் பிழைத்துக் கொண்டு வருபவர்கள் இவர்கள்!

கூலிக்கு ஆட்களை அமர்த்தி வேலை வாங்குவதற்கு இவர்களால் முடியாது என்பதால், தங்களுக்குத் துணையாகத் தங்கள் மனைவி-மக்களை வேலைக்கு இவர்கள் அமர்த்திக் கொள்வார்கள்.

இவர்களின் மனைவிமார்களுக்கோ இதனால் இரட்டிப்பு வேலை! வீட்டிலும் வேலை; வெளியிலும் வேலை! இவர்களது குழந்தைகளின் உழைப்பும் இவர்களுக்குத் தேவைப் படுவதால், அவர்களின் கல்வியைப் பற்றி இவர்கள் கவலைப் படுவது இல்லை.

வாழ்க்கையில் நிறைவு என்பது எப் பொழுதும் இவர்களுக்கு ஏற்பட முடிவது இல்லை. ஏனென்றால், முதலாண்மையின் வளர்ச்சியில் கொஞ்சம் கொஞ்சமாகச் சீர் அழிந்து கொண்டு வருபவர்கள் இவர்கள்!

வாழ்க்கையில் எப் பொழுதும் இவர்களுக்கு ஒரு நெருக்கடி; பித்துப் பிடித்து விட்டது போன்ற ஒரு மன நிலை! மத வெறி, சாதி வெறி, போன்ற எல்லா வெறிகளுக்கும் விரைவில் இரையாகி விடுபவர்களும் இவர்கள்தாம்.

சரி, கதை எதற்கு ? விசயத்திற்கு நாம் வருவோம்.

(முதலாண்மையின் வளர்ச்சியில் சிற்றுடைமை யாளர்கள் இடையே ஏற்பட்டுக் கொண்டு வந்திடக் கூடிய மாற்றங்களைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு விரும்புபவர்கள், லெனின் நூல் திரட்டு, தொகுதி ஒன்று முதல் மூன்று வரை படித்துப் பார்த்துக் கொள்ளலாம்; முக்கியமாக, ‘ருஷ்யாவில் முதலாண்மையின் வளர்ச்சி ‘ என்னும் நூல் முழுவதுமாக அடங்கி உள்ள மூன்றாவது தொகுதி!)

சுவனத் தரங்கள்

பூசி மெழுகி அழகு படுத்தப் பட்ட சிந்தனைகள் எல்லாம் சிற்றுடைமைச் சிந்தனைகள்தாம் ஆகும், குறிப்பாக, மேல் தட்டுச் சிற்றுடைமைச் சிந்தனைகள்தாம் ஆகும். மாயமான சிந்தனை யாளர்களாக மட்டும் இன்றிப் பகட்டுக் காரச் சிந்தனை யாளர்களாக இருப்பவர்களும் இவர்கள்தாம் ஆவர்.

புதுமை வாதிகளாக இருக்கின்ற இவர்களுக்குப் பழைமை எண்ணங்கள் எப்பொழுதும் நெஞ்சத்தில் கனன்று கொண்டே இருக்கும்; பெண் விடுதலை பற்றிப் பேசுகின்ற இவர்களுக்கு மிகவும் நன்றாகவே தெரியும்—தங்கள் வீட்டுப் பெண்களுக்கு மட்டும் அது பொருந்தாது என்று!

முற்போக்கில் பிற்போக்கு; புரட்சியில் எதிர்ப் புரட்சி; நம்பிக்கையில் அவ நம்பிக்கை; என முரண் பட்ட போக்குகளின் மையமாக இருப்பவர்கள் இவர்கள்!

எனவே, வெற்றியில் முடிகின்ற கதைகளை விட—திரைப் படங்களை விட—-தோல்வியில் முடிகின்ற கதைகள்தாம்—-த்ிரைப் படங்கள்தாம்—-இவர்களுக்கு மிகவும் பிடிக்கும்; தத்துவங்களின் முழுமையினை விட அரை-குறைகள் மட்டும்தாம் இவர்களுக்குப் பிடிக்கும்; தெளிவினை விட மாயங்கள்தாம் பிடிக்கும்!

ஆனால், கீழ்த் தட்டுச் சிற்றுடைமை யாளர்களின் சுவனத் தரமோ இதற்கு நேர்-மாறானது; மூடத் தனமானது என்றாலும் மாயம் இல்லாதது; தெளிவு இல்லாதது என்றாலும் குழப்பம் இல்லாதது; சில சமயங்களில் இழிவும் ஆனது!

ஜெய மோகனின் தமிழ்ச் சூழல்

ஜெய மோகன் எதிர் பார்க்கின்ற தமிழ்ச் சூழல், மேல் தட்டுச் சிற்றுடைமைப் பான்மைகள் மேவி நிற்கின்ற ஒரு பான்மைச் சூழல்; அதே நேரத்தில் இதுவோ தமிழ் நாட்டில் இல்லாத ஒரு சூழல்!

மேல் தட்டுச் சிற்றுடைமையாளர்களிடம்—-

மத வெறி நிறைந்து இருக்கும்; ஆனால், வெளியில் அதனை அவர்கள் காட்டிக் கொள்ள மாட்டார்கள்; தக்க சமயங்களில் மறைவாக அதனை ஆதரித்து நிற்பதற்கும் அவர்கள் தயங்கிட மாட்டார்கள்!

இவர்களுள், கடவுள் மறுப்பாளர்களிடம் கூட சாதி வெறி நிறைந்து இருக்கும்; வெளியில் அதனை அவர்கள் காட்டிக் கொள்வது இல்லை என்ற போதிலும், தக்க நேரங்களில் அதற்காகத் தந்திரமாகக் குரல் கொடுப்பதற்கு அவர்கள் தயங்குவது இல்லை.

இம் மாதிரியான ஒரு சூழல் மலையாளத்தில் அல்லது வேறு பிற மொழிகளில் இருக்கலாம்; ஃப்ரான்ஸ் போன்ற பிற ஈரோப்பிய நாடுகளிலும் இருக்கலாம்; ஆனால், தமிழில் இல்லை!

ஏனென்றால், தமிழ்ச் சூழலோ கீழ்த் தட்டுச் சிற்றுடைமையாளர்கள் மேவி நிற்கின்ற ஒரு சூழல்!

மத வெறி, சாதி வெறி, என்று எந்த வெறியாக இருந்த போதிலும், வெட்கம் இல்லாமல் அதனை இவர்கள் வெளிக் காட்டிக் கொள்வார்கள்.

இவர்களுள், பார்ப்பனியத்தால் சூத்திரர்களாக வரையறுக்கப் பட்டு இருக்கின்ற சிலருக்குத் தலித் மக்கள் மீது எப் பொழுதும் ஒரு பொறாமை; வெறியும் கூட!

கற்பழிப்பு என்பது இழிவானது என்பதால் பெண்களைக் கேவலப் படுத்துவதற்கு அதனைத்தான் ஆயுதமாக இவர்கள் பயன்படுத்துவார்கள்; அதற்காகத் தங்களுக்குள் இவர்கள் பெருமைப் பட்டும் கொள்வார்கள்!

மலத்தை உண்பது இழிவானது என்பதால், தலித்துகளைக் கேவலப் படுத்துவதற்கு அவர்கள் வாயில் மலத்தைதான் இவர்கள் திணிப்பார்கள்; அதன் மூலம், மலத்தை விட இவர்கள் இழிந்தவர்கள் என்பதை வெட்கம் இல்லாமல் வெளிக் காட்டியும் கொள்வார்கள்!

தமிழ்ச் சூழலில்—-

ராணி, தேவி, முதலிய பத்தரிகைகளைப் படிப்பவர்கள் அதிகம்;

கருணா நிதியாரின் கதை-வசனங்களைச் சுவனிப்பவர்கள் அதிகம்;

ஏமாற்றுபவர்களை இவர்களுக்கு மிகவும் பிடிக்கும்—-உரிய வசனங்களுடன் ஏமாற்றுபவர்களாக அவர்கள் இருந்தால்!

ஊழல் காரர்களையும் இவர்களுக்குப் பிடிக்கும்; உல்லாசமாக வாழ்ந்து காட்டுபவர்களாக அவர்கள் இருந்தால்!

கூடவே, ஆலை உழைப்பாளர்களின் சமுதாயத் திறலும் தமிழகத்தில் சற்று அதிகம் என்பதால், மாய்மையான—-குழப்பமான—-அவ நம்பிக்கையான—-கதை-கவிதைகளுக்குத் தமிழகத்தில் அவ்வளவாக வரவேற்பு இருப்பது இல்லை.

‘அவன் சொல்கிறான்; இவன் செய்கிறான்; ‘ என்று மூட நம்பிக்கைகளை வளர்த்துக் கொண்டு வந்து இருக்கின்ற கதை-வசனங்களைச் சில காலம் பொறுத்துக் கொண்டு வந்து இருந்த திரைப் படச் சுவனர்கள், தனது வேலைக் காரனாக அவனை இவன் காட்டுவற்கு முற்பட்டு விட்ட உடன், இவனால் உருவான அனைத்து மூடங்களையும் இமய மலையின் உச்சிக்கே விரட்டி அடித்து விட வில்லையா ?

ஆக, ஜெய மோகன் விரும்புகின்ற ஒரு சூழலாகத் தமிழ் சூழல் என்றும் இருந்திட முடியாது என்பது தெளிவு. தமிழகத்து வீதிகளிலே புதியது ஒரு சூழலினை மேடையாக அமைத்து, தமது நாடகங்களை அதில் நடத்திக் காட்டுவதற்கு ஜெய மோகன் முயல்வார் என்றால், அவர் எதிர் பார்க்கின்ற விளைவுகளை எதிர் பார்க்கின்ற அளவுக்கு அவர் அடைந்து விட முடியாது என்பதும் நிச்சயம்!

இனி, ஜெய மோகனின் பிற வாதங்களுக்குள் நாம் நுழைவதற்கு முன்னர், ‘கலை மனோ லயம் ‘ என்பதனைச் சற்றே அனுபவித்து நாம் பார்த்து விடுவோம்.

22-5-2004

(தொடரும்)

sothipiragasam@lycos.com

Series Navigation

சோதிப் பிரகாசம்

சோதிப் பிரகாசம்