தண்டவாளங்கள்

This entry is part [part not set] of 54 in the series 20040527_Issue

காஞ்சனா தாமோதரன்


என் தற்போதைய வாழ்க்கைமுறையில் ரயில் பயணத்துக்கு அதிக இடமில்லை. ரயில் பயணங்கள் அருமையாய் உயர்வாய்த் தெரிகின்றன.

பஸிஃபிக் பெருங்கடல் ஒரு புறமும் அமெரிக்க மேற்குக்கரையோரத்தின் இயற்கையழகு இன்னொரு புறமுமாய்ச் சில நாட்கள் ரயிலில் பயணித்த சமீபகால அனுபவம்; பல்கலைக்கழகம் தந்த சொற்ப உதவிப்பணத்தில் மிச்சம் பிடித்து, ‘யூரயில் பாஸி ‘ல் ஐரோப்பாவின் குட்டி நாடுகள் பலவற்றைச் சுற்றிப் பார்த்த ஏழை மாணவப்பருவ அனுபவம்; ஜப்பானின் அதிவேக அதிநவீன ரயில்களில் பறந்த அனுபவம்; எல்லாமுமே நினைவில் பதிந்தவை. இவை எல்லாவற்றையும் விட அழுத்தமாய் மனதில் பதிந்திருப்பவை என் தாயகத்து ரயில் பயண நினைவுகளே.

‘ஜன்னல்கிட்டே உட்காராதே. கண்ணிலே கரி விழும். ‘ கடந்த காலத்தில் எச்சரிக்கும் அம்மாவின் குரல். கரி விழுந்தாலும் பரவாயில்லை என்கிறது என் சிறுமி மனம். ரயில் நெளிந்து வளையும் போது முகப்பிலுள்ள நீராவி எஞ்சினைப் பார்க்கும் ஆசை. ஜன்னல் கம்பிகளின் மேல் முகத்தை அழுந்தப் பதித்துக் கொள்ளுகிறேன். தண்டவாளங்கள் வளையவும் சீர்குலையும் பெட்டித்தொடருக்கு அப்பால் தெரிகிறது எஞ்சின். எஞ்சின் கறுப்பு மேல் மாலை வெயில் தவிடு தெளிக்கிறது. காற்றில் பின்னால் அலையும் குதிரைவால் கொண்டையாய் நீளும் கரும்புகை. சக்கரங்களை இணைக்கும் இரும்புக் கரங்கள் முன்னும் பின்னும் மேலும் கீழுமாய் அடித்துக் கடுமையாய் உழைக்கின்றன. அழுத்தத்திலிருந்து தப்பும் நீராவி கூ…கூ…வுகிறது. அதிசயமாயிருக்கிறது. எட்டாம் வகுப்பில் நீராவி எஞ்சின் பற்றிப் படித்துப் படம் போட்டுப் புரிந்து கொண்ட பின்னும் தொடர்ந்த அதிசயம்.

நீராவி எஞ்சினின் கூவலில் ராகம்; சக்கரவரிசையின் வேகத்தில் தாளகதி; உச்சியிலும் அடியிலுமாய்ப் பொங்கும் புகையில் உயிர்மூச்சு. பழைய தமிழ்த் திரைப்பாடல்களில் நீராவி எஞ்சின் ரயிலுக்கு முக்கிய இடமிருப்பது இயல்பாய்த் தெரிகிறது:

‘சித்திரை மாதம் பெளர்ணமி நேரம்

முத்து ரதங்கள் ஊர்வலம் போகும்

ம்….ம்….ம்….

தேரில் வந்த ராஜராஜன் என் பக்கம்

தேனுலாவும் தேனிலாவும் உன் பக்கம்

சொர்க்கமோ நானும் நீயும் சேருமிடம்…. ‘ என்று கறுப்பு-வெள்ளையில் அவள் உருகுவதாய்க் அவன் கனவு காண வசதி செய்து தந்த நீராவி எஞ்சின் ரயில்.

‘சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே கலக்குது பாரடி ஸ்டையிலே… ‘ என்று பாட்டுப் பாடின காலத்தில், நீராவி எஞ்சின் போய் டாஸல் எஞ்சினும் கூடப் போய் மின்சார எஞ்சின் வந்தாயிற்று. மின்சார எஞ்சினில் இல்லாத அந்தச் ‘சிக்குபுக்கு ‘ இன்னும் பாடலுக்குத் தேவைப்பட்டது போலும். இனி கண்ணில் கரித்துகள் விழாது. ரயிலடியில் இறங்குகையில் உடலிலும் உடையிலும் கண்மை போல் மெல்லிதாய்க் கருமை தீற்றியிராது. புது எஞ்சின்களில் நீராவி எஞ்சினின் இனம்புரியாத அந்த மாயம் இல்லைதான். ஆனாலும், ரயில் என்ற குறியீட்டுப் படிமத்தின் வலிமை இன்னும் குறையவில்லை. இந்திய/தமிழ்த் திரைப்படத்திலும் இலக்கியத்திலும் இப்படிமம் அழுத்தமாய் விழுந்திருக்கிறது: உறவின் கனவும், பிரிவின் வலியும், பிரிவினையின் குருதியும், காத்திருத்தலின் சோகசுகமும், நிரந்தரமாய்த் தெரியும் தற்காலிகமும், வேரற்ற தேடலுமாய் வாழ்வுப்பரப்பை ஊடுருவிச் செல்லுகிறது.

ரயில்வண்டி நிற்கும் நிலையமும் ஒரு தனி உலகம்.

ரயில் நிலையத்தின் மறுபக்கம் போவதற்கான மேம்பாலக் கம்பிக்கிராதிகளைப் பிடித்துக் கொண்டு, கீழே விரியும் முழு நிலையத்தையும் நோட்டமிடுவது இந்தச் சிற்றூர்ச் சிறுமிக்குப் பிரமிப்பூட்டும் அனுபவமாயிருந்தது அன்று. தலைசரித்து வழியனுப்பும் உயர்ந்த கைகாட்டி மரங்கள். போவதற்குத்தான் எத்தனை திசைகள்! அகன்று விரியும் வெளியில் குறுக்கும் நெடுக்குமாய் முடிவற்று நீளும் தண்டவாளங்கள் மேல், சிறுமி மனம் எதையோ தேடி ஏக்கத்துடன் ஓடும்.

நிலக்கரியும் நீரும் நிரப்பிக் கொண்டு வெவ்வேறு திசைகளில் செல்லத் தயாராகிப் பெருமூச்சு விடும் ரயில்களினூடே, தேசத்தின் பன்முகமும் பன்மொழியும் அயல்நாட்டுக் குரல்களுடன் உரசி உலவும். வட இந்தியப் பெண்கள் புடவையணியும் விதம் வினோதமாய்ப் படும். புத்தகக்கடைகளில் வித்தியாசமான பத்திரிகைகளும் புத்தகங்களும் தென்படும். சில குடும்பங்கள் தம் முழு வீட்டையும் மூட்டை கட்டி வந்திருப்பது போல் தெரியும். பெட்டிகள், படுக்கைகள், மண்ணெண்ணெய் அடுப்புகள், டிரங்க் பெட்டி நிறையப் பாத்திரங்கள், தட்டுகள், குவளைகள் இத்தியாதி. டிரங்க் பெட்டிகள் வசதியானவை–இருக்கையாய், மேசையாய், பாதுகாப்பாய், வெளியுலகத்தை வெளியே நிறுத்தும் தடுப்புத் திரையாய்.

இங்கேயும் சில பிரிவினைகள் உண்டு. முதல் வகுப்பினர். இரண்டாம் வகுப்பினர். (முன்பு மூன்றாம் வகுப்பினரும் உண்டு.) எந்த வகுப்பிலும் இடமற்ற ஆனால் இருப்புள்ள, ‘பயணச்சீட்டில்லாத பயணம் ஒரு சமூகக் கேடு ‘ என்னும் பலகை உபந்நியாசத்தைச் சட்டை செய்ய இயலாதோர். ஒடிந்து விழும் உடலின் மேலுள்ள சிறிய தலையில் ஐந்தாறு பெட்டிகளைச் சுமக்கும் ரயில்நிலையத் தொழிலாளரும், அவர் பின்னால் பெருமுதலாளி போல் கைவீசி நடந்து தோரணை காட்டும் பெட்டிச் சொந்தக்கார மத்திய வர்க்கத்தாரும். முதல்வகுப்பின் அருகே தம் காரை நிறுத்தி, நிலையத்தைத் தீண்டாமல் நேரே ரயில்பெட்டிக்குள் புகும் மேல்வர்க்கத்தார். பொட்டலங்களைப் பிரித்து அவசர அவசரமாய்ச் சாப்பிடுவோர். விழுங்குவோரைப் பார்த்து ஏங்குவோர். இலவச ரயில்பயண வசதியை நன்றியாய்ப் பெற்று ஓரத்தில் ஒதுங்கும் சுதந்திரப் போராட்டத் தியாகிகள்.

ரயில்நிலையங்களில் விலங்குகள் சுதந்திரமாய்த் திரியும். மனிதர்கள் அவற்றைத் ‘தம் வெளி ‘யிலிருந்து விரட்டுவதில்லை. இது எனக்கு மிகவும் அருமையானதாய், போற்ற வேண்டியதாய்த் தெரியும்/ தெரிகிறது. வெளியே அலையும் குரங்குக்குச் சன்னல் கம்பியினூடே வாழைப்பழம் கொடுத்து, ஒரு குழந்தையின் அப்பாவித்தனத்துடன் மகிழும் பயணிகளுக்கும், பின்னங்கால்களில் நின்று கைநீட்டிப் பழம் வாங்கும் குரங்குக்கும் இடையேயுள்ள நம்பிக்கை எத்தகையது! வெறிச்சோடிய ஒற்றையறை நிலையத்தை வேகரயில் அலட்சியமாய்க் கடந்து போகையில், தேவையற்ற பச்சைக்கொடி ஆட்டும் அந்த ஸ்டேஷன்மாஸ்டரின் ஒரே நண்பர் ? அடுக்கி வைத்த சாக்குமூட்டைகள் மேல் மோனத்தில் ஆழ்ந்திருக்கும் ஆட்டுக்குட்டி அல்லது நாய்க்குட்டி.

ரயில் நிலையத்திலேயே படுக்கை விரித்து நிம்மதியாய்த் தூங்குபவர்களைப் பார்த்துச் சிறுமியாய் ஆச்சரியப்பட்டிருக்கிறேன். லண்டனிலும் ஃப்ராங்க்ஃபர்ட்டிலும் மாஸ்கோவிலும் ஸூரிக்கிலும் லாஸ் ஆஞ்சலிஸிலும் டாய்ப்பேயிலும் நியூயார்க்கிலும் கைரோவிலுமாய், விமானநிலையக் கம்பளவிரிப்பு மூலையில் கைப்பை மேல் தலைவைத்துச் சுருண்டு தூங்குவோரைப் பார்க்கையில் இன்று ஆச்சரியமே இல்லை. பயணத்தின் களைப்புப் புரிகிறது இப்போது. அங்கோ இங்கோ அல்லாத ஓரிடத்தில் இளைப்பாறுவதன் ஆசுவாசமும்.

தாயகத்தில் இது வரை போன தண்டவாளத் திசைகள் பல.

மணப்பாறை முறுக்கும், மதுரை மல்லிகையும், பின்னிரவில் தடதடத்துக் கடக்கும் காவேரிக் கொள்ளிடமும், திருச்சிக் கதம்பமுமாய், நெல்லை-மதுரை-திருச்சி-சென்னைப் பயணம். முடைந்த ஓலைப்பெட்டி மணத்துடன் வாயில் கரையும் மணல்பிட்டுப் பிரசாத ருசி தோய்ந்த நெல்லை-திருச்செந்தூர்ப் பயணம். மேற்குத்தொடர்ச்சி மலையைக் குடையும் குகைப்பாதை கடந்ததும் பச்சைப்பூமியாய் மலர்ந்து, என் தமிழ்நாடு rain shadow region-தான் என்பதைப் புரிய வைக்கும் நெல்லை-கொல்லம் பயணம். ரேணிகுண்டாவின் காரவடையும் ஆந்திரப் பிரியாணியுமாய் தட்சிணவெளியைக் கடக்கும் சென்னை-டெல்லி பயணம். நெளிந்து வளைந்து மலையேறும் டெல்லி-சிம்லா பயணம். பல நூற்றாண்டுகளையும் மதங்களையும் அடுக்கி விசிறும் டெல்லி-ஆக்ரா-வாரணாசி-கயா-கொல்கொத்தா பயணம். சண்டிகர் பாறைத்தோட்டத்தின் ரோஜாப்பூ நினைவும் ஸ்ரீகண்ட் தயிரின் குல்கந்து இனிமையுமாய் டெல்லி-சண்டிகர்-அஹமதாபாத் பயணம். இன்றைய பன்னாட்டு வர்த்தகம் முதல் அன்றைய போர்த்துக்கீசியக் கலாச்சாரம் வரை நீளும் மும்பை-கோவா பயணம்.

பல மாநிலங்களைக் கடக்கும் நீண்ட ரயில் பயணத்தில், நிலப்பரப்பும் முகங்களும் மொழிகளும் உடைகளும் உணவுகளும் மாறும் விதம் சுவையானது. ஐரோப்பியக் கண்டத்தைச் சுற்றும் ‘யூரயில் ‘ பயணத்தைச் சிறிது ஒத்த அனுபவமோ இது ? இரவில் ஒரு குட்டித் தேசத்தில் ரயிலேறித் தூங்கி விழித்தால் வந்து சேர்ந்திருப்பது அண்டைக் குட்டித் தேசம்! ஐரோப்பியக் கண்டத்தை விட, தாயகமே பன்முகச் சுவை வாய்ந்த நிலப்பரப்பென்று இப்போது தோன்றுகிறது. கோயில் கலசக்கோபுரங்களும் இஸ்லாமிய மினாரெட்டுகளும் தேவாலயச் சிலுவைக்கோபுரங்களும் புத்தரின் புன்சிரிப்பும் ஜைன அஹிம்ஸாவாதமும் ஸோரோஸ்ட்ரியத் தீப்பிழம்பும் யூத ஸினகாகும் ஒரு சேர உயர்ந்து முட்டும் வானின் கீழுள்ள நிலப்பரப்பு. திராவிடக் குடும்ப மொழிகளும் இந்தோ-ஐரோப்பியக் குடும்ப மொழிகளும் கலகலக்கும் நிலப்பரப்பு. தத்தம் கலாச்சார உடைகளை அன்றாடம் அணிவது இன்றும் இங்கு தொடர்கிறது. இந்த நிலப்பரப்பில், கடந்த காலத்தின் பகுதிகளும் நிகழ்காலமும் அருகருகே உயிரோடிருக்கின்றன. (அவ்வப்போது உரசி அதிர்கின்றன.) இந்திய ரயில்கள் கால இயந்திரங்களும் கூட.

இரண்டாம் வகுப்பு ரயில் பயணங்கள் உண்மையிலேயே சுவையானவை. சகபயணிகளின் உணவைப் பகிர்ந்து கொள்ளும் சுவை. பிறரது ‘டிஃபின் காரியர் ‘ என்னும் மாபெரும் அடுக்குகளில் என்னென்ன உணவுகள் எட்டிப்பார்க்கும் ? வெங்காயமும் இஞ்சியும் பூண்டும் கொத்துமல்லியும் அரைத்துக் கொட்டின கறியுடன் மெல்லிய வட்டமான ‘ஃபுல்க்கா ‘. ‘கமல் கக்கிடி ‘ தாமரைத்தண்டு ஊறுகாயுடன் உருளைக்கிழங்கு திணித்த பராத்தா. ஆட்டுக்கறிக் கொஃப்தாவுடன் கிராம்பும் இலவங்கமும் தெளித்த புலாவ் சாதம். இன்னும் பல. அப்போதைய தென்தமிழ்நாட்டில் எனக்குத் தெரிந்திராத பல்சுவைகள்.

நகரும் ரயிலில், இருப்பதைப் பரப்பிப் பகிர்ந்து, பரஸ்பர உபசரிப்புடன் சேர்ந்து சாப்பிடுவதில் ஒரு மகிழ்வு: எல்லாருமே விருந்தாளிகள், எல்லாருமே விருந்தோம்புவோர்.

சேர்ந்து சாப்பிட்ட பின் பெட்டியினுள் எஞ்சியிருந்த கொஞ்சநஞ்ச இறுக்கமும் நெகிழ்ந்து போகிறது. அரசியலை அலசி, அரசாங்கம் பற்றி நீண்ட குற்ற ஓலை வாசித்து, அரசை விடப் பலமுள்ளவர்களாய் உணர்ந்து — கண நேரமேயானாலும் — மகிழ முடிகிறது. சுருதியும் மொழியும் சேராவிட்டாலும் எல்லாரும் சேர்ந்து பாட முடிகிறது. குடும்பக் கதைகளையும் கவலைகளையும் பகிர்ந்து கொள்ள முடிகிறது. சீட்டு விளையாட முடிகிறது. ஒரு பெட்டிக் குடும்பத்தினராய்ச் சேர்ந்து உறங்க முடிகிறது. தற்காலிகம் நிரந்தரமாய்த் தெரிவதில் ஒரு நிம்மதி இருக்கிறது.

* * *

என்றும் மறக்கவியலாத சில ரயில் பயணங்கள் உண்டு.

ராஜஸ்தானுக்கும் உத்தரப் பிரதேசத்துக்கும் மத்தியப் பிரதேசத்துக்குமிடையே பரந்திருக்கும் சம்பல் பள்ளத்தாக்கு, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததென்றார்கள். பழமையான நாகரீகத்தின், அரசுகளின் மையம் என்றார்கள். செறிவான தொல்பொருளாய்வுகள் நடைபெறும் இடமென்றார்கள். பள்ளத்தாக்கினூடே வளையும் குளிர்ந்த ஆற்றுடன் கூடிய அழகானது என்றார்கள். எட்டிப் பார்க்க விடாமல் சன்னல்களையும் கதவுகளையும் இறுக்கி மூடச்சொன்னார்கள். கொள்ளைக்காரர்கள் என்று கிசுகிசுத்தார்கள். யார் முகத்திலும் பயமில்லை. நிலைமையின் நாடகீயத்தை எல்லாரும் ரசித்தது போலத்தான் தெரிந்தது. ஒன்றும் நிகழாமல் பள்ளத்தாக்கைக் கடந்து சன்னல்களைத் திறந்ததும் முகங்களில் தெரிந்தது ஏமாற்றமா ? ரயில் சன்னலை மூடிக் கதவைப் பூட்டுவதால் கொள்ளையைத் தடுக்க முடியுமா என்பது அன்றும் இன்றும் புரியவில்லை.

முதிரா இளமைக்கே உரிய கண்ணீரும் கோபமும் இயலாமையும் நிரம்பிய ஒரு டெல்லி-சென்னைப் பயணம். டெல்லியைத் தலைமையகமாய்க் கொண்டவொரு பெருநிறுவனத்தில், வேலைக்கான பலகட்ட நேர்காணலின் இறுதிக்கட்டம். சென்னை, அஹமதாபாத், டெல்லி, கல்கத்தா, மும்பை ஆகிய கிளைநிறுவனத் தலைவர்களுடன் தனிப்பட்ட உரையாடல். ஒரு பெண் பொறியாளரை வேலைக்குச் சேர்த்தால் நிறுவனத்துக்கு ஏற்படும் சங்கடங்கள் பற்றி எனக்குச் சொல்லித் தரப்பட்டது. ‘இது சட்டவிரோதம் ‘–நிமிர்ந்த தலையுடன் அவர்களிடம் சொல்ல முடிந்தது. கண்ணீரில்லாமல். வீட்டுக்கு ஓடிப் போக வேண்டுமென்றிருந்தது. ரயிலில் சென்னை போய்ச் சேர சில நாட்களாகும். வழக்கப்படி பதினாறு வயதில் கல்யாணம் செய்து வைக்கச் சொன்ன சில உறவினரை எதிர்த்து, என் வாதத்திலும் திறமையிலும் நம்பிக்கை வைத்துப் படிக்க அனுப்பிய அம்மா-அப்பாவிடம் இப்போது என்ன சொல்ல. டெல்லி ரயில்நிலையம் வேற்றுக்கிரகமாய்த் தெரிந்தது. நீரினுள் முங்கினது போல் சப்தங்கள் மங்கிப் போயின. என் பாலினம் தெரிந்தே சிறப்பான பொறியியல் படிப்புடன் அடித்தளம் போட்ட சூழல், இப்போது பாலினங்காட்டி வேலை மறுப்பது ஏன். சட்ட நடவடிக்கை எடுக்க முடியுமா. பெண்பிள்ளையைப் பெரிய படிப்பு படிக்க வைக்கக் கூடாது, முன்னமே சொன்னோமே–இனி வரப்போகும் உறவினர் குரல்கள். (ஆண்) உறவினரைச் சாராமல், சிபாரிசுகளை நாடாமல், என் பாலினம் பாராமல், என் தகுதியால் மட்டுமே வேலை கிடைக்காதோ. குழப்பம். நிச்சயமின்மை. நம்பிக்கையின்மை. இறுதியில், சென்னை ரயிலின் பெண்கள் பெட்டியில் விரித்த புத்தகத்து மறைவில் மெளனக்கண்ணீர். இன்று அமெரிக்க இதழ்களில் தாயகம் பற்றி வரும் கட்டுரைகளில், அங்கு உயர்பதவியிலிருக்கும் பல பெண் பொறியியலாளர் மற்றும் மேலாண்மை அதிகாரிகளின் படங்களைப் பார்க்கிறேன், தொழில்முறையில் சிலரைச் சந்திக்கவும் செய்கிறேன். காலம் கொணரும் மாற்றங்களில் சில வரவேற்கத்தக்கவை. நம்பிக்கையளிப்பவை.

முதன்முறையாக வெண்பனியைக் கண்டுணர்ந்த சிம்லா பயணம். ஹிமாலயத்தின் அடிவார மலைகளில் சுமார் 4300 அடி உயரத்தில் அமைந்த அழகிய நகர் சிம்லா. மலைகளினூடே சுமார் நூறு குகைப்பாதைகள் வழியே ரயில் போக வேண்டும். பொம்மை ரயில். இரண்டடியோ அதற்குக் குறைவான இடைவெளியோ உள்ள தண்டவாளங்கள். முன்னும் பின்னுமாய் இரண்டு எஞ்சின்கள். கூரான வளைவுகளில் ஏறும்போது, ரயில் முதலில் பின்வாங்கிப் பிறகே முன்னகரும். சில இடங்களில் பயணிகள் இறங்கி நிற்க அனுமதியுண்டு. அப்படி ஓரிடத்தில் இறங்கி நின்று சுற்றிலும் பார்த்துக் கொண்டிருந்தோம். சுமார் 3000 அடி உயரமாயிருக்கலாம். சுற்றிலும் ஓங்கி உயரும் கம்பீர மலைகளின் நடுவே தேங்கி நிற்கும் அமைதி. கீழே சில சரிவுகள் தாண்டி ஒரு பொம்மை ரயில் சப்தமின்றி ஊர்ந்து கொண்டிருந்தது. சில்லிடும் டிசெம்பர்க் குளிரில் மூச்சுக்காற்று புகையாகித் தெரிந்தது. கண்ணிமையோரத்தில் குளிர்ச்சியாய் ஏதோ தெறித்தது. மெல்லக் கரைந்து நீராயிற்று. கைமேல் இன்னொரு வெண்பனித் துளி. இதழ் மேல் பனிச்சுவை. வானத்தை நிமிர்ந்து பார்த்து வார்த்தையின்றிப் பாடத் தோன்றிற்று. இன்று இங்கு, சில்லிட்ட சன்னல் கண்ணாடியில் மூச்சுக்காற்றின் வெம்மை நீராவியாய்ப் படர, வெண்பனிமழை பார்க்கையில், சிம்லா மலைச்சரிவுகளில் கண்ணிமை மேல் உதிர்ந்து கரைந்த அந்தச் சிறு பனித்துகள் நினைவுக்கு வருகிறது; பக்கத்தில் மூச்சுத் திணறியபடி நிற்கும் பொம்மை ரயிலும்; சுற்றிலும் ஓங்கி உயரும் கம்பீர மலைகளின் நடுவே தேங்கி நிற்கும் அமைதியும்.

என் சிறுவயதில் நிகழ்ந்த கொடூரமான பாம்பன் பாலத்து ரயில் விபத்தும், நாளிதழ்களின் கொட்டையெழுத்துத் தலைப்புச்செய்திகளும் நினைவிருக்கின்றன. வருடத்துக்குச் சராசரி 300 ரயில் விபத்துகள். தாங்க முடியாத கூட்டம், அளவுக்கு மீறிய பயன்பாடு ஆகியவற்றால் விபத்துகள் நிகழ்வதாய்க் குற்றம் சாட்டப்படுகிறது. தினசரி சுமார் 11,000 சேவைகளில், 110 லட்சம் மக்களை, 1 லட்சம் கிலோமீட்டருக்கும் மேற்பட்ட தூரத்துக்குச் சுமந்து செல்லும் இந்திய ரயில்களில், இந்த விபத்து விகிதம் குறைவே என்கிறார்கள் சில அதிகாரிகள். வெவ்வேறு விசாரணைகளில் வெளிவந்த விபத்துக் காரணங்கள்: கைகாட்டி மற்றும் தண்டவாள மாற்ற இயக்குதலில் இயந்திரப் பழுதுகள்/ மனிதத் தவறுகள், தடம்புரளுதல், தகரும் பாலங்கள், சாலைச் சந்திப்புகளில் மோசமான பாதுகாப்பு ஏற்பாடுகள் முதலியன. புதிய தொழில்நுட்பத்துக்கு மாறுவதால் விபத்து விகிதத்தைக் குறைக்க முடியுமென நிபுணர்கள் நினைக்கிறார்கள். சில பாதைகளில் ஏற்கெனவே ஒளிநார் ( ‘ஆப்டிக்கல் ஃபைபர் ‘) மற்றும் டிஜிட்டல் தொடர்புத் தொழில்நுட்பங்கள் தற்போது பயன்படுத்தப்படுகின்றன. முழு மாற்றத்துக்கு நீண்ட காலமும் அதிக முதலீடும் தேவை.

தாயகத்தில் இன்னும் நான் போகாத ரயில் பயணம் ஒன்று இருக்கிறது — ‘பாலஸ் ஆன் வீல்ஸ் ‘ ( ‘நடமாடும் அரண்மனை ‘). பழங்காலத்து மகாராஜாக்கள் தமக்கென்று பிரத்தியேக ரயில்பெட்டிகளில் பிரத்தியேகப் பாதைகளில்தான் பயணம் செய்தார்களாம். அந்தச் சொகுசுப்பெட்டிகளால் ஆனதே இந்தப் ‘பாலஸ் ஆன் வீல்ஸ் ‘ ரயில். ஒரு நாளைக்குச் சுமார் நானூறு டாலர் வீதத்தில் ஏழு நாள் பயணம். டெல்லி-ஜெய்ப்பூர்-ஜெய்சால்மர்-ஜோத்பூர்-உதய்ப்பூர்-ஆக்ரா என்று பல அரண்மனைகள், கோட்டை கொத்தளங்களைச் சுற்றிப் பார்க்கலாம். அனுபவித்த எங்கள் அமெரிக்க நண்பர்கள் மிக உயர்வாகச் சொல்லி எங்களுக்கும் பரிந்துரைத்தார்கள். புன்னகை மட்டுமே என் பதில். டாலர் விலை கொடுத்து, காலாவதியான மகாராஜா சொகுசுப் பூச்சுடன் என் தாயகத்தை நான் பார்ப்பது எனக்குப் பிடித்தமானது அல்ல. (தாயகத்தின் அந்நியச் செலாவணிக்கு என் போன்றோர் பங்களிப்புச் செய்யப் பிற சட்டரீதியான வழிகளும் இருக்கின்றன.)

யதார்த்தத்தை வெளியே நிறுத்தும் கண்ணாடிச் சன்னல்களும் குளிர்பதனக் காற்றும் அற்ற இரண்டாம்/மூன்றாம் வகுப்பில், சகபயணிகளுடன் சேர்ந்து சாப்பிட்டு, விவாதமும் சிரிப்பும் ஆறுதலுமாய்ப் பேசி, விளையாடி, போகுமிடத்தில் மக்கள் திரளுடன் கலந்து கரைந்து, அந்தப் பன்முக நிலப்பரப்பை உணர்வது அறிவையும் மனதையும் விரிக்கும் ஒரு சிறந்த கல்வி அனுபவம். இந்திய ரயில்கள் பள்ளிகளும் கூட.

ஊருக்கு வெளியே தலைமறைவாய்ச் செல்லும் அமெரிக்க ரயில்கள் போலன்றி, தைரியமாய் ஊருக்குள் நுழைந்து புழக்கடைகளையும் கடைத்தெருக்களையும் எட்டிப்பார்த்து ஓடும் தாயக ரயில்கள் தந்திருக்கும் பாடங்களும் நினைவுகளும் பல. இத்தகைய நினைவுகளில் உயிர்த்திருக்கிறது என் வேர்.

(மே 1, 2004: ‘உயிர்மை ‘ மாத இதழில் வெளியான கட்டுரையின் முழு வடிவம். சில தகவல்களுக்கு நன்றி: சி.என்.என்.காம், பி.பி.ஸி.காம், இந்தியாஸ்டாட்.காம் இணையதளங்கள்.)

uyirmmai@yahoo.co.in

KanchanaThamo@aol.com

Series Navigation

காஞ்சனா தாமோதரன்

காஞ்சனா தாமோதரன்