ஞானப்பல்லக்கு

This entry is part [part not set] of 52 in the series 20040513_Issue

எஸ் ஷங்கர நாராயணன்


The Golden Light/Sri Aurobindo

Thy golden Light came down into my brain

And the grey rooms of mind sun-touched became

A bright reply to Wisdom ‘s occult plane,

A calm illumination and a flame.

Thy golden Light came down into my throat,

And all my speech is now a tune divine,

A paean-song of Thee my single note;

My words are drunk with the Immortal ‘s wine.

Thy golden Light came down into my heart

Smitting my life with Thy eternity;

Now has it grown a temple where Thou art

And all its passions point towards only Thee.

Thy golden Light came down into my feet;

My earth is now Thy playfield and Thy seat.

—-

அதிகாலைத் துயில் எழுதல் உனது இயல்புதான். எனினும் தானாகவே விழிப்பு வருதல் என்பது எப்படி உனக்குப் பழக்கமாயிற்று என நீ யோசிப்பதேயில்லை. சூட்சுமத்தில் இருந்து ஒரு குயில்த்தேவதை உன்னை உசுப்புவதாக ஒருபோதும் நீ நினைத்துப் பார்த்ததேயில்லை என்பதே வியப்புக்குரியதுதான். பிரபஞ்சம் நற்தேவதைகளால் ஆனது. நீ ஆசிர்வதிக்கப் பட்டிருக்கிறாய். ரகசியமாய் சதா அவர்களோடு நீ உரையாடிக் கொண்டிருக்கிறாய். உன்னை அறியாமலேயேகூட கட்டாயம் அது அவ்விதம் நடந்து கொண்டிருக்கிறது. நல்ல சேதிகளை அவர்கள் உன் காதுகளில் உனக்கு மட்டுமேயாக அன்புசார்ந்த இனிய குரலில் ஓதிக்கொண்டேதான் உச்சரித்துக் கொண்டேதான் இருக்கிறார்கள். அதிகாலைப் பனியிலும் புதிதாய்ப் பூத்த மலர்களிலும் உனக்கான உவப்பான செய்திகளை உணர முடியாதவனா நீ ? அடடா, அதை அவ்விதம் நீ பொருட்படுத்தாதது குறித்து வருந்துதல் தேவையில்லை. இப்போது அறிந்து கொண்டது, இப்போது அறிந்துகொள்ள முடிந்தது எத்தனை அழகான விஷயம். நீ நற்தேவதைகளின் இனிய சொற்களுக்குப் பழக்கப் பட்டவன் ஆகிறாய். எத்தனை அற்புதமாய் இருக்கிறது அது.

உனது பகல்பூராவுமான சிந்தனை மூட்டங்களில் இருந்து உன்னை யாரோ – பெருங்கருணைக்காரர் ஒருவர் மீட்டிருக்கிறார், விடுவித்திருக்கிறார், என நீ இப்போது உணர்கிறாய். ஏனெனில் முழுமயக்கமும் இருளும் குழப்பமுமாய் நீ நேற்று உறக்கங் கொள்ளாமல் உனது சயன அறையில் பெருந்துயர் கண்டிருந்தாய்தானே ? . அப்போது தேவதைகள் உன்மீது இரக்கப் பட்டன. தேவதைகள் உன்மேல் அக்கறை காட்டின. உன் நினைவின் கதவுகளைச் சார்த்தி குழப்பங்களை நகர்த்தி, ஆகா மெல்ல உனக்கே தெரியாமல் அவை – அந்த தேவதைகள் உன் இமைகளை தாழிட்டாற்போலக் கீழிறக்கின. நீ அறிவாயா அதை ? நீ எப்படி அறிந்திருக்க முடியும் ? நீ அப்போது – நல்ல விஷயம் – உறங்க ஆரம்பித்து விட்டாய் அல்லவா ? ஆமாம் அந்த நற்தேவதைகள் மகிழும் வண்ணம் உறக்கத்தால் நீ ஆசிர்வதிக்கப் பட்டாய். நேற்றிரவு.

ஆமாம், நீ சொல்வது மிகச்சரி. உறக்கமே உன் வசம் இல்லையாமாகில் பிறகு கண்விழித்தல் சார்ந்து நீ உரிமை கொண்டாட ஏதும் இல்லைதான். நற்தேவதைகள் உன்னைப் பார்த்து சிரிக்கும் கண்களால் வருடித் தருகின்றன. எத்தனை நல்லனுபவம் அது. தீமையெல்லாம் அழிந்து போகும். திரும்பி வாரா. சிறுதுயர் இடைவெளிகள் திரையிறக்கம் போலத்தான். மீண்டும் நற்காட்சிகள் நம்மில் தரிசனப்பட அவை தேவைதானே ? அது இல்லாமல் எப்படி ? பழையன கழிந்து புதிய காட்சிகள் மனசில் தரிசனப்பட சிறு இடைவெளி வேண்டியே இருக்கிறது. கரும்பலகை எழுத்துகளை அழித்துக் கொள்கிறாய் நீ. புதிய எழுத்துக்களுக்கு வரவேற்பே அது. இருளெனும் கரும்பலகை காத்திருக்கிறது. புதிய எழுத்துகளை அது எத்தனை வரவேற்புடன் ஏற்றுக் கொள்கிறது. அவற்றில் உனக்கானவை எவை என நற்தேவதைகள் உனக்குக் காட்டித் தருகின்றன. அத்தேவதைகள் ஒருபோதும் உன்னைக் கைவிடமாட்டா.

எழுத்துகள் அழிக்கப்பட்ட மாலைவேளையில் மெல்ல உலகை இருள் சுத்திகரிக்கிற திவ்ய காரியம் அன்றாடம் நடக்கத்தானே செய்கிறது. ஒலிகள் இரையுண்ட நாகமாய் மெளனத்தை நோக்கி சரிவுகொண்டன. ஒலிகளும் காட்சிகளும் இருளிடம் சரணடைகின்றன. தமது பொக்கிஷங்களை பத்திரப்படுத்துமாறு அவை இருளிடம் ஒப்படைக்கின்றன. சகல ஜீவராசிகளும் தங்களை இருளிடம் சமர்ப்பிக்க தேவதைகள் உதவி செய்கின்றன.

நற்சகுனங்களுடன் தேவதைகளின் கலகலப்பான நகையொலிகளுடன் நீ அந்த அதிகாலை கண்விழிக்கிறாய். அந்த தேவதைகளின் இசையொலிகள் உன் காதில் எப்படியோ உள்நுழைந்து மடல்களை வருடி உன் சூட்சுமத்தைச் சிலிர்க்கத் தட்டியிருக்கிறது. கண்விழித்தலை இத்தனை மகிழ்ச்சிகரமான அனுபவமாக நீ கண்டுகொண்டதே இல்லை அல்லவா ? தேவதைகளுக்கு வணக்கம். கரிய பெரும் பலகை உனக்கான சேதிகளைத் தரக் காத்திருக்கிறது. வெளியெங்குமாக அது உனக்குப் பிரியமான நற்சேதிகளை அறிவிக்க உன்னை நற்தேவதைகள் முன்வந்து மனமுவந்து துயில்கலைத்ததை நற்சகுனமாக நீ உணர்கிறாய். மேலே அதோ உயரத்தில் இப்பூவுலகின் மீதாக இருந்த வெளி தற்போது கருபேருருவென உலகமும் சகலமுமாக ஓங்கிவளர்ந்து தாழ்ந்து நிற்கிறதை நீ அவதானிக்கிறாய். முற்றிலும் உன் சூட்சுமம் சார்ந்த, ஆனால் நீ எதிர்கொள்ள மாத்திரமேயான, நீ வினைபுரியாத கணங்கள் அவை. அறிவித்தல் அல்ல, உரையாடுதல் அல்ல… அறிவிக்கப் படுதல், வழங்கப்படுதல். எத்தனை பெரிய கரிய வெளி வளாகம் அது. அதில் நீ கூட வெறும் நினைவெனவே உள்மறைந்து கொண்டிருக்கிறாய். உன்னையே நீ கண்டுகொள்கிற அல்ல- உணரமாத்திரம் முடிகிற புனித கணம் அது. ஏனெனில் உன்னிலான சில கேள்விகளின் குமுறல்களை நீ நேற்றிரவு உணர்ந்தவன் அல்லவா ? அப்படியா

ய் இத்தருணம் இல்லை என்பது எப்பெரும் ஆசுவாசம், எப்பெரும் இறுக்கத் தளர்ச்சி. இன்று புதிதாய்ப் பிறந்தேம் என காலத்தின் மடியில் குழந்தைபோலும் உன்னைக் கிடத்திய இயற்கை நியதிகளை என் சொல்லி வாழ்த்துவது. நீ மகாசமிக்ஞைகளுக்காய்க் காத்திருக்கிறாய். மெளனம். அது இரகசிய அந்தரங்க நல்லொலிகளைக் கொண்டது. மனது பெருவிருந்துக்குத் தயாராகும் வேளை அது. இயற்கை உன் மனக் கற்பனைகளின் ஒப்பனை வேளை. அகங்காரம் களைவித்த அலங்கார வேளை.

திசையும் அறியவொண்ணா கரிய வெளி அல்லவா ? பிரம்மாண்டமான கரும் பலகை எனில் உலகும் பிரம்மாண்டமானது. உனது உலகம் அது. சொர்க்கவாசலில் நீ காத்திருக்கிற மனவெழுச்சியை உன்னால் தவிர்க்க முடியவில்லை. வெளியின் கருமை சற்று நெகிழ்ந்து கொடுக்கிறது, கருணையுடன். பெரும் பட்டுத் துணியின் பளபளப்பு அப்போது அதற்கு அமைவதை நீ களிப்புடன் பார்க்கிறாய். பிரபஞ்சத் தாமரை கண்விழிக்கிற கண்கொள்ளாக் காட்சி. பூவுக்கு சிறகு முளைக்கிற வியப்பான நிகழ்ச்சி. இருளின் பாய் மெல்ல உள்சுருள்கிறது அல்லவா ? உன் கண்கள் தாமே அப்போது தீபமேற்றிக் கொண்டன. உபயம் தேவதைகள். ஓவியம் வரையவல்ல தேவதைகளுக்கு நன்றி. ஆகாவென்றெழுந்தது பார் தகதகவெனப் பொலியும் பொன்னொளி. தங்கரச்மி. கரும்பட்டின் ஜரிகைரேகையா அது ? சந்தனம் குழைத்த கிண்ணத்தை அடாடா யார் கவிழ்த்துகிறார்கள் உன்மேல். தேவதைகள் நகையொலியுடன வாழ்த்துப் பாடி அப்படிச் செய்கின்றன. உன் உச்சியில் சூர்யரேகையின் முதல்முத்தம் சிலிர்ப்பேற்படுத்துகிறது. சந்தனக் குளுமை வாசனைபரத்துகிறது. தேவதைகள் மெளன ஒலிகளால் உன் உள்ளெங்கும் பரவசமூட்டுகிறார்கள் அல்லவா ? தலைமேல் ஐயன் கையெழுத்திட்ட உன்னதப் பொழுது அது. மங்கலான உள்வெளிகளில் அந்த ரச்மி சஞ்சரிக்கிற உள்ளனுபவம் – கூற

ீதே யாரிடத்தும் – அது உனக்கேயானது. தேவதைகள் உனக்குக் கொடையளித்த நற்தருணங்கள் அவை. மெல்லிய நீண்ட கிரண விரல்கள் அவை. நேற்றைய உள்சாம்பல்களை விலக்கி அந்த ரேகை முற்றிலும் புதிய ஞானவிதானத்தை உனக்கு அளிப்பதை நீ கண்டுகொள்கிறாய். இயற்கையின் கருணை.

தொடுதல் அல்ல – நம்பிக்கையின் ஈரமுத்தம் அது. இயற்கையின் முதல் கிரணம். முதல் முத்தம். குழந்தையென நீ கண்விரியச் சிரிக்கிறாய் உன் தாய்முகம் பார்த்தவாக்கில். கிரணம் அல்ல- கிரணவிழுது அது. உன் அவயவங்களை ஆச்சர்யப் படுத்த அது முன்வருகிறது. நாசிகள் அப்போது நல்வாசனை காண்கின்றன. குரல்கேந்திரத்தில் கிரணமந்திரம் வியப்பான மாற்றங்களை சாதிக்கின்றன. உன் குரல் எப்படி நற்சொற்களால் இத்தனை இசைமீட்டல் காண முடிந்தது. நல்யாழின் துடிப்பான ஒற்றை ஸ்வர எடுப்பாக மிக இனிமையாக ஆத்மபூர்வமாக அபூர்வமாக அது உருமாற்றம் பெற்ற பேருவகைக் கணத்தை விவரிக்க முடியவில்லை. புரிந்து கொள்ளவே முடியவில்லை. பரிசுத்த ஜோதி இத்தனை போதை தருமா ? உள்ளே அந்த லகரியை நிரந்தரமாகத் தக்க வைக்குமா ? ஆச்சர்யம். மகா ஆச்சர்யம். ஞாயிறு போற்றுதும்.

உலகமும் சகலமுமான நல்லொளி என் மனதினில் நிறைக. நான் உன்னைத் தாங்கிக் கொள்கிறேன். தாய்ப்பாலின் குளுமையும் தெம்பும் ஆசிகளும் எனக்கு வழங்கப் படுகின்றன. அதன் மகத்துவத்தை நான் அறியப் பெற்றவன் ஆகிறேன். என்னை விட்டு நீங்காது எனக்கு வழிகாட்டிடுக. என் கண்களைச் செலுத்திடுக. விழிகள் என்னுடையவை – காட்சி உன்னுடையவை என ஆகுக. என் புலன்களை நல்வழி செலுத்திடுக. எனை வழிநடத்திடுக. வாழ்க்கை அழகானது. மகிழ்ச்சிகரமானது. அனுபவ ஆனந்தம் அது. நித்தியானந்தம். என்னில் நித்தியானந்தம் நிறைந்து பொலிக. நான் அந்த ஞானப்பேரொளியைத் தக்க வைத்துக் கொள்கிறேன். எங்கும் நிறைந்தது என்னில் நிரம்பியது.

அழிவற்றது ஒளி. ஞானம் அழிவற்றது. நின்னை உள்ளே கொண்டதால், உட்கொண்டதால் நான் அழிவு ஒழிந்தவன் ஆகிறேன். என் உடல் உன் விளையாட்டுத் திடல். நான் உன் ஞானப் பல்லக்கு. உன் பேரொளியை நான் சிவிகையாய் உவகையுடன் சுமந்து திரிகிறவன் ஆகிறேன். எனக்கு வாழ்வில் இனி துயர் இல்லை. துன்பம் இல்லை. நான் தளைகளில் இருந்து தறிக்கப் பட்டேன். தவிர்க்கப் பட்டேன். சுத்திகரிக்கப் பட்டேன். விடுவிக்கப் பட்டேன். ஆனந்தப் பட்டேன். நற்காலை ஒளி அது. அது அமர்ந்த நாற்காலி நான் ஆவேன். அதிகாலையின் முதல்கிரணம் வழங்கிய முதல் முத்தம். ஒவ்வொருவரிடமும் தனியே இரகசியமாய் நற்செய்திகளைக் கொணர வல்லது அது.

பெருவிழிப்பு கண்டவர்கள் ஆசிர்வதிக்கப் பட்டவர்கள்.

artsankar@poetic.com

Series Navigation

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்