சமீபத்தில் படித்தவை 2- இளங்கோவன், அசதா, எம் வேதசகாயகுமார், இடாலோ கால்வினோ(தமிழாக்கம் பிரம்மராஜன்), சந்திரன், மணா, உமா மகேஸ்வரி,

This entry is part [part not set] of 52 in the series 20040513_Issue

ஜெயமோகன்


ஊடாடி [நாடகம்]

இளங்கோவன்

த்வனி வெளியீடு . திலீப்குமர் , 216/ 10 ராமகிருஷ்ண மடம் சாலை மயிலாப்பூர் சென்னை 4

சிங்கப்பூர் நாடக ஆசிரியரான இளங்கோவன் எழுதிய இந்நாடகம் தார்மீகமான ஓர் அவமரியாதைக்கு நம்மை உள்ளாக்குவது. இதை ஒருவகை தலித் நாடகம் எனலாம். கடல் கடந்து பிழைப்புக்காக சிங்கப்பூர் சென்ற தலித்துக்கள் அங்கேயுள்ள தமிழர்களால் மட்டுமல்ல அங்குள்ள சீனர்களாலும் ‘கிலெங் ‘ என்று மனிதர்களில் கடையராக நடத்தப்பட்டமை , அதன் மூலம் அவர்களே தங்கள்மீது சுமத்திக் கொண்ட சுய இழிவு , ஒவ்வொரு தமிழனும் இன்னொருவரை காட்டிக் கொடுத்தும் கூட்டிக்கொடுத்தும் சில்லறை லாபங்களை அடைந்து தனக்கு கீழே உள்ளவர்களை எல்லாம் தன்னைவிட இழிந்தவர்களாக எண்ணி அடையும் பூரிப்பு , மேலே உள்ளவர்களிடம் கொள்ளும் அடிமைபக்தி என்று ஒவ்வொன்றாக அப்பட்டமாகத் தோலுரிக்கிறது இந்த நாடகம். காறிமுகத்தில் உமிழும் வகைப்பட்ட வசனங்கள், நோய்கொண்ட நகைச்சுவை, விசித்திரமான பேய்கள் மூலம் உருவாக்கப்படும் அமங்கல அழகியல் என்று இது எதிர்மறைத் தன்மை மேலோங்கிய ஆக்கம்.

இதன் எளிய கூறுமுறைக்குள் பலவகையான பாடங்கள் ஒளிந்துள்ளன. உதாரணமாக ஒன்று . அயோத்திதாசப் பண்டிதர் தன் கட்டுரைகளில் ஒரு விஷயத்தை திரும்பத்திரும்பச் சொல்கிறார். பறையர்களை இழிசினராக நடத்துவது சாதி இந்துக்கள் மட்டுமே, வெள்ளையன் அல்ல. இந்தியாவுக்கு வெளியே பிழைக்கச்சென்ற பறையர்கள் எல்லாரும் சாதி இழிவை விட்டுவிட்டு நன்றாக இருக்கிறார்கள் என. இந்நாடகம் அந்தக்கூற்றை உக்கிரமாக மறுக்கிறது. புலம்பெயர்ந்த நாட்டிலும் பறையர்கள் இழிவாகவே நடத்தப்படுகிறார்கள். சீனராலும் வெள்ளையராலும் வெறுக்கப்படுகிறார்கள். பிரச்சினையின் ஊற்றுக்கண்ணை வேறெங்கோ தேடச்சொல்கிறது இந்நாடகம்.

அதேபோல யாழ்ப்பாணத்து ‘கறுப்புத்துரை ‘ களின் அடிமைப்புத்தியையும் ஆணவத்தையும் தீவிரமாகப் போட்டுத்தாக்குகிறது இந்நாடகம். 1997ல் ஈழ நண்பர் ஒருவர் ஊட்டிக்கு என்னுடன் வந்திருந்தார். அங்கே சாஸ்திரி சிரிமாவோ ஒப்பந்தப்படி நாடுகடத்தப்பட்டு வந்து தேயிலைக்கூலிகளாக வாழும் தலித் மக்களை சந்திக்கச் சென்றோம். சிறு சாளைகளில் புழுக்கள் போல வாழ்ந்த அம்மக்கள் யாழ்ப்பாணத்தில் சிங்கள ராணுவம் குண்டு போட்டு மக்களைக் கொல்வதைப்பற்றி ‘ சாவட்டும் சாவட்டும் ‘ என்று மிகுந்த மகிழ்ச்சியுடன் சொன்னதைக் கேட்டு நான் அதிர்ந்தேன். என்னால் அதை ஏற்கவே முடியவில்லை. ஈழ நண்பர் அப்போதுதான் எனக்கு ஈழம் என நாம் எண்ணும் மக்கள்கூட்டத்தின் உள் அடுக்குகள் குறித்துச் சொன்னார். இந்நாடகம் அந்த தலித் மகக்ளின் குரலை எதிரொலிக்கிறது. படித்து முடித்த பின்னும் மனதில் கசப்பாக நிற்கும் நாடகம் இது

====

வார்த்தைப்பாடு [சிறுகதைகள்]

அசதா

தமிழினி வெளியீடு

அசதா என்ற பேரில் எழுதிவரும் அ. சகாய ஆரோக்கியதாஸ் எழுதிய சிறுகதைகளின் முதல் தொகுப்பு இது. அசதா ஏற்கனவே வீழ்த்தப்பட்டவர்கள் ‘ என்ற மெக்ஸிக நாவலை மொழியாக்கம் செய்திருக்கிறார். தமிழினி வெளியீடாக வந்துள்ளது. இச்சிறுகதைகள் நேரடியான எளிய மொழியில் வாசக ஆர்வம் கெடாதபடி எழுதப்பட்டுள்ளான. ஒரு சமகால மனம் கொள்ளும் தர்மசங்கடங்களையும் பிரமைகளையும் அதிகம் பேசும் கதைகள் இவை.இக்கதைகளில் வள்ளி ஒயின்ஸ் மட்டும் தனித்து நிற்கிறது. ஜி நாகராஜன், ராஜேந்திரசோழன் போன்றவர்களால் சொல்லப்பட்ட அடித்தள மக்களின் குற்றம் படிந்த உலகின் ஒரு சித்திரம் . பிழைப்பின் ஒரு கீற்று. மனதை சங்கடப்படுத்தும் சித்திரம் இது. வார்த்தைப்பாடு மெல்லிய சொற்களால் கனமான சோகத்தை சொல்லும் நல்ல கதை. குடும்ப நிர்ப்பந்தத்தை உள்வாங்கி ‘தானாகவே ‘ கர்த்தருக்கு மணாவாட்டியாகும் ரெஜினாவின் மென்மையான சித்தரிப்பு . கணிசமான கதைகளில் உத்தி தெளிவாக தெரியும்படி இருப்பதே முக்கியமான குறை எனலாம். ஆயினும் முதல் தொகுதி என்றமுறையில் முக்கியமான நூல்.

====

புனைவும் வாசிப்பும் [கட்டுரைகள்]

எம் வேதசகாயகுமார்

தமிழினி பதிப்பகம் சென்னை

இருவருடங்களில் எம் வேதசகாயகுமார் எழுதிய விமரிசனக்கட்டுரைகளின் தொகுப்பு இந்தநூல். தமிழின்சிறுகதைகள் விரித்துரைப்பதை முக்கியமாகக் கருதாமல் குறிப்புணர்த்துவதை ஆரம்பம் முதலே முக்கியமான முறையாகக் கொண்டமைக்கு [ மலையாளாம் வங்கம் முதலிய மொழிகளில் அப்படி அல்ல] சங்க காலக் கவிதைகளிலேயே காரணம் தேடவேண்டும் என்று வாதிட்டு குறிப்புணர்த்தலின் பலவகைப்பட்ட ரீதிகளை சங்கப்பாடல்களில் காணமுற்படும் கட்டுரை[ தமிழச்சிறுகதையின் சங்ககால வேர்கள் ] முக்கியமானது. தி ஜானகிராமன், ப சிங்காரம் ஆகியோரின் படைப்புகளை புதிய ஒளியில் ஆராயமுயலும் கட்டுரையும் குறிப்பிடத்தக்கது.

====

கால்வினோ கதைகள்[மொழியாக்கசிறுகதைகள்]

இடாலோ கால்வினோ

தமிழாக்கம் பிரம்மராஜன்

தமிழினி பதிப்பகம்

இடாலோ கால்வினோ உலக இலக்கியத்தின் நட்சத்திரங்களில் ஒன்று ஏற்கனவே கால்வினோவின் சிறுகதைகள் ஒரு தொகுதியாக தமிழில் வந்துள்ளன. சா தேவதாஸ் மொழிபெயர்த்துள்ளார் . கால்வினோவின் மூன்று நாவல்களையும் தேவதாஸ் தமிழாக்கம் செய்துள்ளார். இந்த தொகுதியில் சிறிதும் பெரிதுமான 19 கதைகளும் ஒரு கட்டுரையும் [ஏன் கிளாசிக்குகளைப் படிக்கவேண்டும் ?] இருக்கிறாது. பிரம்மராஜன் கால்வினொ குறித்து நீண்ட ஒரு முன்னுரையும் எழுதியிருக்கிறார். கால்வினோ தன் புனைவுலகை யதார்த்தம் என்ற கதைத்தளத்துக்கும் மிகுகற்பனை என்ற தளத்துக்கும் நடுவே ஓடவிட்டு சுவாரஸியமான வாழ்க்கைசந்தர்ப்பங்களை உருவாக்கும் முக்கியமான படைப்பாளி. வரலாறும் வாழ்க்கையும் எப்படி மனிதனின் அச்சங்களினாலும் இச்சைகளினாலும் ஆகியுள்ளன என மீண்டும் மீண்டும் நம்மை உணரவைப்பவை அவரது ஆக்கங்கள்.

ஆனால் சமகாலத்தை பாதித்த முக்கியமான இப்படைப்பாளியின் கணிசமான கதைகள் இதுவரை தமிழில் வந்தபிறகும் தமிழ் மண்ணில் நின்று தமிழ் பண்பாட்டையும் தமிழ் புனைவிலக்கிய வரலாற்றையும் முன்வைத்து எளிய மதிப்பீடு கூட இவரைப்பற்றி செய்யப்படவில்லை என்பதைக் காணமுடிகிறது. அப்படிப்பட்ட மதிப்பீடு செய்யப்படாதவரை அவரது ஆக்கம் பெரிதாக நம்மை பாதிக்கப்போவது இல்லை. இந்நூலில் பிரம்மராஜன் எழுதியிருப்பதுபோன்ற வழிபடும் தன்மை கொண்ட கட்டுரைகள்தான் மீண்டும் மீண்டும் எழுதப்படுகின்றன.. இவை மேலைநாட்டில் அவரைப்பற்றி எழுதப்பட்டவற்றை அப்படியே எதிரொலிக்கின்றன. கப்ரியேல் கார்சியா மார்க்யூஸ் குறித்தும் இன்றுவரை இப்படித்தான் வந்தபடி உள்ளது. விளைவாக முதிரா மன இளம் படைப்பாளிகள் இதுவே உலக இலக்கியம் என்று எண்ணி இவற்றை போலிசெய்ய முயல்கிறார்கள்.

இத்தொகுதியில் பல கதைகள் ஆர்வமூட்டும் வாசிப்புத்தன்மையுடன் உள்ளன. ‘தெரசா என்று கத்திய மனிதன் ‘ போன்ற சர்வசாதாரணமான கதைகளும் உள்ளன. மொழிபெயர்ப்பு சரளமாக உள்ளது

====

ஆஸ்கர் அ முதல்

சந்திரன்

தமிழ் வெளியீடு

2/15 நேதாஜி நகர் முதல் தெரு

திருவொற்றியூர்

சென்னை 600019

இந்நூலில் ஆஸ்கார் விருது குறித்த தகவல்களை பல்வேறு இணையதளங்கள் மற்றும் நூல்களில் இருந்து திரட்டி வரிசைப்படுத்தி அளித்திருக்கிறார் சந்திரன். ஆஸ்கர் விருதின் வழிமுறைகள் , விருதுகள் முதலிய தகவல்கள் விரிவாக தரப்பட்டுள்ளான. பெரும்பாலானவை பட்டியல்கள். சிறந்த படங்களுக்கான ஆஸ்கார் விருது பெற்ற படங்களைப்பற்றிய தகவல் தொகுப்பு படிக்க ஆர்வமூட்டுகிறது.

====

தீராநதி நேர்காணல்கள்

மணா

மோகனா

புதிய எண் 10[39] கபூர்தெரு ராயப்பேட்டை

சென்னை 600014

துக்ளக் இதழ்மூலம் அறியவந்த இதழாளரான மணா[ எஸ் டி லட்சுமணன்] தமிழ் இதழியல் சூழலில் முக்கியமானவர். அகிலா நியூஸ் என்ற செய்தி நிறுவனத்தை நடத்தினார். குறுகிய காலம் குமுதத்தில் இருந்தபோது அதில் மிக ஆர்வமூட்டும் பேட்டிகள் மற்றும் கட்டுரைகளை எழுதினார். அவரது கட்டுரைகள் ஏற்கனவே நூலாக வெளிவந்துள்ளன. அவரது பொறுப்பில் தீராநதி இதழ் வெளிவந்த காலத்தில் எடுக்கப்பட்ட பேட்டிகள் அடங்கிய நூல் இது. இதழியல்த்தேவைக்கான பேட்டிகளானமையால் இவை விரிவான முழுமையான பேட்டிகளாக இல்லை. பொதுவான அறிமுகத்தையும் ஆர்வத்தையும் தூண்டும் பேட்டிகள் எனலாம். ஆனால் பெரும்பாலானவர்களிடம் அவர்களுடைய சாதனைகளையும் பலங்களையும் அறிந்து சூழலுக்குப் பொருத்தமான வினாக்களை மணா கேட்டிருக்கிறார்.புண்படுத்தாமலும் திசைதிருப்பாமலும் மறுவினாக்களையும் தொடுத்துள்ளார். பேரா. தொ பரமசிவம், நாட்டாரியலாளார் கெ ஏ குணாசேகரன்,லாஅஸ்திரேலிய மருத்துவர் பொன் சத்தியநாதன், பினாங்கு பயனீட்டாளார்குரல் ஆசிரியர் என் வி சுப்பாராவ், பிரேமீள் ஆகியோருடனான பேட்டிகளை மிக வித்தியாசமானவை. சாதாரணமாக பார்க்கக் கிடைக்காதவை எனலாம்.

====

நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று [கட்டுரைகள்]

நாஞ்சில்நாடன்

தமிழ்நாட்டில் மிகச்சில எழுத்தாளார்கள் மட்டுமே எதை எங்கு எழுதினாலும் சுவாரசியம் குறையாமல் எழுதக்கூடியவர்கள். அப்பட்டியலில் அசோகமித்திரன், சுஜாதாவுக்குப் பிறகு நாஞ்சில்நாடனைத்தான் சொல்லமுடியும். இக்கட்டுரைத்தொகுதியை ஒரு சிறந்த சிறுகதைத்தொகுதியை படிப்பதுபோல புன்னகைத்தபடி படித்துச்செல்லலாம். ஆனால் நாஞ்சில்நாடன் ‘ஜோக் ‘ எழுதுவதில் நம்பிக்கையே இல்லாதவர். அவரது சிறப்பான நடையே அந்த இனிய நகைச்சுவையை- கரித்துக் கொட்டும்பொதுகூட – உருவாக்குகிறது. பழந்தமிழ் மேற்கோள்களை பகடியாக்கும் இடத்திலும், கிராமவாழ்க்கையின் படிமங்களைப் பயன்படுத்தி நவீனவாழ்க்கையை விளக்க முற்படும்போதும் இயல்பாக அந்த அங்கதம் உருவாகி விடுகிறது. அந்த அங்கதத்துடன் இழையும் ஆத்மார்த்தமான வெளிப்படையான ஒரு சமூக விமரிசன, சுய விமரிச்னக் குரல் . இம்மூன்று கூறுகளினால் ஆனது நாஞ்சில்நாடனின் நடை.

அவரது இலக்கியப் பிரகடனம் என்று இதைச் சொல்லலாம். ‘ ‘ வயல் அறுவடையின்போது காலில் மண் ஒட்டாத காலடித்தடம் பதியும்படி உலர்ந்த வயலில் ஏராளமான நெல்மணிகள் தொளிவதை பார்த்து அப்பாவிடம் கேட்டேன்

‘இவ்வளவு நெல்லும் நமக்குச் சேதம்தானே .இப்படி தொளிந்து போகாமல் இருக்க விஞ்ஞானிகள் வழிகண்டுபிடிக்கக் கூடாதா ? ‘

அப்பா சொன்னார் ‘இங்க வீசக்கூடிய காத்துக்கு பெய்யப்பட்ட மழைக்கு அடிக்கக் கூடிய வெயிலுக்கு எல்லாம் ரூபாயா கொடுக்கோம் ? நாம பாடுபட்டதுக்குக் கூலி எடுத்துக் கிடலாம். நம்மைச்சுத்தி காக்கா குருவி எலி பாம்பு தவளை விட்டில் புழு பூச்சி எல்லாம் சீவிக்கணும் அதை மறந்திரப்பிடாது ‘

இந்த விவசாய உலகம் என் படைப்பு உலகத்தினுள் புகுந்துகொண்டது. அவன் அடுத்தவன் மாவில் இரு காய்கள் பறிக்காதவன் அல்ல. தளும்பி நிற்கும் மேட்டு வயலில் போடுவைத்து தன் வயலுக்கு கொஞ்சம் நீர் பாய்ச்சாதவன் அல்ல. என்றாலும் அவனுக்கு கறுப்பு உளுந்தில் அதே அளவிலான களிமண் உருண்டைகள் சேர்க்கத்தெரியாது. வெண்டைக்காயை நீளக்காம்புவிட்டு பறிக்கத்தெரியாது. … ‘

தன் மதுப்பழக்கம் குறித்து அவர் எழுதியுள்ள தலைப்புக்கட்டுரை சமீபகாலத்தில் எழுதப்பட்ட மிக வெளிப்படையான மிக உற்சாகமான வாசிப்பனுபவம் அளிக்கும் ஆக்கம்

.====

ஏற்கனவே [சிறுகதைகள்]

யுவன் சந்திரசேகர்

உயிர்மை பதிப்பகம் சென்னை

எம் . யுவனின் இரண்டாவது சிறுகதைத்தொகுதி இது. முதல் தொகுதி காலச்சுவடு வெளியீடாக வந்த ‘ ஒளிவிலகல் ‘. எம் யுவன் வடிவத்தில் புதிய சோதனைகள் செய்யும் படைப்பாளி. ஆனால் வடிவச்சோதனை என்ற பேரில் வாசிப்புச் வேகத்தைத் தவற விட்டுவிடுவதில்லை . அவரது எழுத்தின் சிறப்புக் கூறுகள் அன்றாடவாழ்க்கை சார்ந்த நுட்பமான அவதானிப்புகள் அவற்றை மெல்லிய சிரிப்புடன் முன்வைக்கும் நடை ஆகியவை . வெவ்வேறு வகையான மனிதர்கள், அவர்களின் மாறுபட்ட பேச்சுவழக்குகள் பாவனைகள் ஆகியவற்றை அவரால் அழகாகச் சொல்ல முடிகிறது. இந்த நுண்சித்தரிப்புகளே இத்தொகுதியில் உள்ள கதைகளின் முக்கியமான பலம் எனலாம்.

எம்.யுவன் கதைகளை சிறு சிறு அலகுகளாக பிரித்து சொல்கிறார். ஒவ்வொரு அலகும் தன் போக்கில் தனித்து நிற்கிறது. அவ்வலகுகளைக் கூட்டி சிறுகதையின் வடிவத்தை வாசகன் கற்பனைசெய்துகொள்ளவேண்டியிருக்கிறது. அப்படி ஒரு மைய இழை வாசகனுக்குச் சிக்காமல்போனால் இக்கதைகளை குட்டிக்கதைகளின் தொகைகள் என்று எண்ணிக்கொள்ளும் அபாயம் உள்ளது. ‘நூற்றிச் சொச்சம் நண்பர்கள் ‘ வாசிப்புக்கு ஆர்வமூட்டும் கதையென்றாலும் இணைவு இயல்பாக நிகழவில்லை, வலிந்து செய்யவேண்டியுள்ளது. கருநிற மை இத்தொகுதியின் சிறந்த கதை. தமிழுக்கு முக்கியமான புதிய வரவு எம் யுவனின் புதுமையான சிறுகதைகள்.

====

புனலும் மணலும்[ நாவல்]

ஆ.மாதவன்

காவ்யா பதிப்பகம் சென்னை

ஆ.மாதவனின் இந்நாவல் எண்பதுகளில் வெளிவந்து சிறியவட்டத்தில் மட்டும் கவனிக்கப்பட்டு மறக்கப்பட்ட ஒன்று. மாதவனுக்கு எப்போதுமே மனித மனத்தின் ஆழங்கள் ஈர்ப்பு அளிக்கின்றன. குரூரம் , காமம், வெறுப்பு ஆகியவற்றின் ஊற்றுக் கண்களை நோக்கி செல்வது அவரது பார்வை. இந்நாவலும் மனித மனத்தில் வெறுப்பு உருவாகி கெட்டிப்படும் நுட்பத்தை நோக்கி செல்கிறது. அங்குசாமி மணல் அள்ளும் தொழிலாளி. அவரது மனைவியின் முதல் கணவனின் பெண்ணான குரூபி பாச்சியின் மீது அவருக்கு இருக்கும் கரையற்ற வெறுப்பை மீள மீள தோண்டிப்பார்க்கிறது இந்நாவல். பாச்சி அவர் மீது கொண்டுள்ள பேரன்பு, அவரை அவள் பேணும் வகை, அவளது நிராதரவான நிலை எதுவுமே அவர் வெறுப்பை குறைக்கவில்லை. அவள் குரூபியாக இருப்பது ஒரு காரணமாக இருக்குமா, பார்க்க நன்றாக இருந்துவிட்டால் அந்த வெறுப்பு குறைந்துவிடுமா என்ற வினாக்களுக்கு நாவலில் விடைகள் இல்லை. அதேபோல எந்த உறவும் இல்லாத தாமோதரனுக்கு பாச்சி மீது உருவாகும் தடையற்ற சகோதர அன்பையும் விளாக்க முடியாது. நாவல் எழுப்பும் பலவகையான வினாக்கள் மானுட உறவுகளை மீளவும் பரிசீலிக்கவைக்கின்றன. முப்பது வருடங்களுக்குப் பின்பும் நாவல் வலிமையுடன் இருப்பது அதனாலேயே.

====

வெறும் பொழுது [கவிதைகள்]

உமா மகேஸ்வரி

தமிழினி பதிப்பகம்

நவீனத்தமிழ் பெண்கவிஞர்களில் முதலிடம் இயல்பாகவே உமாமகேஸ்வரிக்குத்தான் என்று நான் எண்ணுகிறேன். சற்றும் செயற்கைத்தனம் இல்லாத அதேசமயம் அழுத்தமும் செறிவும் மிக்க கவிதைநடை அவருடையது. முக்கியமாக அதில் வேறு எந்தக் கவிஞரின் சாயலும் இல்லை. பெண் கவிஞர்கள் பொதுவாக அவர்களுடைய எல்லைவகுக்கப்பட்ட புறவாழ்வை மீறுவதற்கான உந்துதலையே முக்கியப்படுத்தி எழுதுகிறர்கள். உமா மகேஸ்வரியும் அப்படித்தான். ஆனால் அவ்வரிகள் மேலும் கவித்துவ அழுத்தம் கொண்டு மானுட விடுதலைக்கான உருவகத்தன்மையையும் கொள்வதனாலேயே இக்கவிதைகள் முக்கியமான ஆக்கங்கள் ஆகின்றன.

‘ குழந்தைக்கால் நுனிகள் என

ஆரம்ப மழைத்தடங்கள் என்

கார்த்திகைக் கோலத்தில்

நேர்த்திதான் பார்ப்பதற்கு

தீபங்களுக்குப் பதிலாக நீர்ச்சுடர்கள்

வலுத்துப் பெருத்ததில்

வர்ணப்பொடிக் கரைசல்

திரவ வானவில்லாக

நின்றதும் மறுபடி வரைதல்

முடித்து திரும்பும் முன்

வெடித்துச் சாடும் மழையின் ஆக்ரோஷம்

கனவின் சிதைவை

கண்ணுற்றேன் இம்முறை ‘

கடைசிவரியின் மூலம் ஒரு வீட்டு அனுபவத்தை பல்வேறு மானுட அனுபவங்களின் தளங்களுக்கு கொண்டு செல்கிறது இக்கவிதை. உமா மகேஸ்வரியின் பலம் இதுவே

====

அகி [கவிதைகள்]

முகுந்த் நாகராஜன்

வரப்புயர வெளியீடு

விற்பனை உரிமை உயிர்மை பதிப்பகம் சென்னை

முகுந்த் நாகராஜன் கவிதைகளின் முக்கியமான ஒரு தனித்தன்மை இவை இதுவரை எந்த இதழுக்கும் அனுப்பபடவில்லை என்பதே. முற்றிலும் சிற்றிதழ் தொடர்பு இல்லாமல் ஆனால் சிற்றிதழ்கள் உருவாக்கிய கவிதை அழகியலை எதிரொலித்து இவை உருவாகியுள்ளன. நூலாக இவை வந்ததுமே பரவலான வாசிப்பையும் பெற்றன. நல்ல கவிதைகளை நம் வாசகர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதற்கான தடையம் இது.

நாகராஜனின் கவிதைகளின் சிறப்பம்சங்கள் நான்கு. 1] உருவக, படிமச் சாயல்கள் இல்லாத நேரடியான மொழி. இது இன்றுவரை எழுதப்படும் கவிதைகளில் இருந்து இக்கவிதைகளை தனித்துக் காட்டுக்கிறது. 2] அன்றாட வாழ்வனுபவங்களைச் சார்ந்து கவிதைகளை எழுத முற்படுவது. தமிழ்க் கவிதை கவிதைக்கென பிரத்யேகமான அனுபவங்களைத்தேடிக் கொண்டிருக்கையில் இது ஒரு புதிய திறப்பு 3] காட்சித்தன்மை. பெரும்பாலான கவிதைகள் காட்சிகளாக இருப்பதனால் ஒருவகையான ஜென் அமைதி இக்கவிதைகளுக்கு உருவாகிறது. ஒருகாட்சியில் உறையும் முழு உண்மையை தொட முயல்கின்றன இவை 4] அப்பாவித்தனமான . சாதாரணமான ஒரு கூறுமுறையை நாகராஜன் அடைந்துள்ளார். தத்துவ பாவனைகளோ கனத்த சொற்களோ இல்லை. இது கவிதையையும் இலகுவாக்கி இதமான அக அனுபவங்களாக ஆக்கி விடுகிறது. எளிமையான அனுபவங்களை நம் கற்பனை மற்றும் சிந்தனைமூலம் பலவாறாக விரித்துக் கொள்ள இடமளிக்கிறது.

விளையாட்டுப்பிள்ளைகள்

====

இரண்டு குழந்தைகள் விளையாடிக்

கொண்டிருந்தன அந்தப் பூங்காவில்

ஒன்று

ஊஞ்சலில் நின்றும் உட்கார்ந்தும்

ஒற்றைக் காலைத்தூக்கியும்

வேகமாக வீசி ஆடியும்

ஓவென்று கத்திக் கொண்டும் இருந்தது

மற்றொன்று

காலி ஊஞ்சலை வேகமாக

ஆட்டிக் கொண்டும்

ஓவென்று கத்திக் கொண்டும் இருந்தது

எது நல்ல விளையாட்டு என்று

யார் கூற முடியும் ?

புன்னகையை எழுப்பும் எளிய காட்சியாகவே இதை ரசிக்க முடியும். மேலே சென்று யோசித்து இருவகை வாழ்க்கை நோக்குகள், இருவகையான குணாதிசயங்களை கண்டடைய முடியும். இன்னும் யோசித்தால் ‘மரக்கிளையில் இரு கிளிகள். ஒன்று பழம் தின்கிறது இன்னொன்று அதை வெறுமே பார்த்திருக்கிறது ‘ என்ற உபநிடத வாக்கியத்தின் தூரத்து ஒளியை இதில் காண முடியும்.

சமீபத்தைய முக்கியமான கவிதைத்தொகுதி இது.

====

Series Navigation

ஜெயமோகன்

ஜெயமோகன்