அணிந்துரைகள்

This entry is part [part not set] of 52 in the series 20040422_Issue

சோதிப் பிரகாசம்


( வாழ்க்கையின் கேள்விகள் இரண்டாம் பதிப்பில் இருந்து . . . )

எனக்குத் தெரிந்த மார்க்ஸியக் கருத்துகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுகின்ற நோக்கத்தில் நான் எழுதி இருக்கின்ற நூல்கள்தாம் ‘வாழ்க்கையின் கேள்விகள் ‘, ‘மனத்தின் விடுதலை ‘, ‘வரலாற்றின் முரண் இயக்கம் ‘, ஆகிய நூல்கள்!

விவாதங்களின் பொருட்டுக் கட்டாயமாகத் தேவைப் பட்டால் ஒழிய, மார்க்ஸியம் குறித்து வேறு நூல்களை எழுதுகின்ற எண்ணம் எதுவும் தற்பொழுது எனக்கு இல்லை. எனவே, எனது நூல்களுக்கு எழுதப் பட்டு வந்து இருக்கின்ற அணிந்துரைகளைப் பற்றிய எனது கருத்துகளை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள நான் விரும்புகிறேன்.

‘முதல்:அதிகாரம் ஒன்று: பணம் ‘ என்பது எனது நூல் அல்ல; ஒரு தமிழாக்கம்; என்பது அனைவரும் அறிந்தது. மிகவும் பொருத்தமானது ஓர் அணிந்துரையினை வழங்கி அந்த நூலுக்கு அணி செய்து இருப்பவர் பேராசிரியர் க.ப.அறவாணன்! அவருக்கு எனது நன்றிகள் உரித்து ஆகின்றன.

எனது நூல்களுக்குப் பாயிரம் எழுதி இருப்பவர்கள் எனது நண்பர்கள்; என்னுடன் இணைந்து பணி ஆற்றி வந்தவர்கள்! என்னைப் பாராட்டித்தான் அவர்களால் எழுதிட முடியும் என்பதை ஈண்டு நான் விளக்கிடத் தேவை இல்லை. ஆனால், எனது கடந்த காலத்துக் கதைகளை எல்லாம் வாசகர்களின் கவனத்திற்குக் கொண்டு வருவது அல்ல, இப் பாயிரங்களின் நோக்கம்! மாறாக, எத் தகைய சூழ் நிலைகளில் எத் தகைய சிந்தனைகளை வளர்த்துக் கொள்ள நான் முற்பட்டு வந்து இருக்கிறேன் என்பதை வாசகர்களின் கவனத்திற்குக் கொண்டு வருவதுதான் அவற்றின் நோக்கம்!

எனது கருத்துகளுக்கு நேர் எதிரான கருத்துகளைக் கொண்டு இருப்பவர்தாம் நண்பர் ஜெய மோகன் என்பது பலரும் அறிந்தது. எனினும், இந் நூலுக்கு அணிந்துரை எழுதிடத் தக்கவர் அவர்தாம் என்று நான் கருதினேன். பலப் பல் ஆண்டுகளாக என்னையும் எனது எழுத்துகளையும் தெரிந்தவர்தாம் கோவை ஞானி என்பதால், இந் நூலுக்கு அணிந்துரை எழுதுமாறு அவரைக் கூட நான் கேட்டுக் கொண்டு இருந்து இருக்க முடியும். அதனை அவர் ஏற்றுக் கொண்டு இருந்து இருப்பாரா, இல்லையா, என்பது வேறு விசயம்!

எனினும், இந் நூலுக்கு ஜெய மோகன்தாம் அணிந்துரை எழுதிட வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. ஏனென்றால், ஆழம் இல்லாத ஆதரவுக் கருத்துகளை விட, ஆழமான எதிர்க் கருத்துகள்தாம் பெரிதும் என்னைக் கவர்கின்றன.

க.நா.சு.

‘வரலாற்றின் முரண் இயக்கத்திற்கு ‘க் கருத்துரை ஒன்றினை எழுதுமாறு கவிஞர் இன்குலாப்பை நான் கேட்டுக் கொண்டதற்குக் கூட எதிர்க் கருத்துகளை வரவேற்கின்ற எனது பான்மைதான் காரணம். இதே காரணத்தினால்தான் 1987-இல் நடை பெற்ற ‘மனத்தின் விடுதலை ‘ வெளியீட்டு விழாவிற்குக் க.நா.சு. அவர்களையும் நான் அழைத்து இருந்தேன். அவரை அழைத்துக் கொண்டு வந்தவர் நண்பர் சொ.கண்ணன்!

அந்த விழாவிற்கு நான் அழைத்து இருந்த கவிஞர் இன்குலாப் எந்த அளவுக்கு ‘மனத்தின் விடுதலை ‘யைப் புரிந்து கொண்டு இருந்தார் என்பது இன்னமும் எனக்குத் தெரிய வில்லை. ஆனால், தெள்ளத் தெளிவாக அதனைக் க.நா.சு. அவர்கள் புரிந்து கொண்டு இருந்தார் என்பதை மேடையில் அவர் வெளிப் படுத்திய கருத்துகள் எனக்குச் சுட்டிக் காட்டின.

மார்க்ஸியத்திற்கு எதிர் ஆனவர்களாகத் தங்களைக் கருதிக் கொண்டு வந்து இருக்கின்ற — கருதிக் கொண்டு வருகின்ற — பெரும்பாலான எழுத்தாளர்கள், உண்மையில் ஸ்தாலினிசத்திற்குதான் எதிர் ஆனவர்களே அன்றி மார்க்ஸியத்திற்கு அல்லர் என்று எனக்குத் தோன்றுகிறது.

ஏனென்றால், மார்க்ஸியத்தை ஸ்தாலினிசமாக நமக்கு அறிமுகப் படுத்தி வந்து இருக்கின்ற பொதுமை வாதக் கட்சிகள்தாம், பொதுப்படையான எழுத்தாளர்கள் இடையே ஏற்பட்டு வந்து இருக்கின்ற இத் தகு சிந்தனைத் தடுமாற்றங்களுக்குக் காரணம். இதனால்தான், ‘பின் தொடரும் நிழலின் குரலில் ‘ ஜெய மோகன் எழுப்பி இருக்கின்ற கேள்விகள் முக்கியம் ஆனவையாக எனக்குப் படுகின்றன.

எதிர்க் கருத்துகளை வரவேற்றிட முடியாத எந்த ஒரு கருத்தும் வளர்ச்சி அடைந்திட முடியாது என்பது எனது கருத்து. எதிர்க் கருத்துகளை எதிர் கொண்டு வந்து இருக்கின்ற கருத்துகள் மட்டும்தாம் சமுதாயத்தில் வளர்ச்சி அடைந்து கொண்டும் வந்து இருக்கின்றன. எதிர்க் கருத்துகளுக்குப் புற முதுகுகளைக் காட்டி, தம்மை மூடி மறைத்தோ அல்லது தாம் ஓடி ஒளிந்தோ கொள்கின்ற கருத்துகள் வளர்ந்ததும் இல்லை; வளரப் போவதும் இல்லை.

எனினும், எதிர்க் கருத்துகளை மூடி மறைத்து — யாரும் காண முடியாத இருட்டிற்குள் அவற்றைச் சிறைப் படுத்தி விட்டதாகக் கற்பனை செய்து கொண்டு — தமது கருத்துகளை நிலைநிறுத்தி விடுகின்ற உத்திகளைக் கையாண்டு வந்து இருக்கின்ற புகழாளர்களுக்கோ வரலாற்றில் என்றும் பஞ்சம் இருந்தது இல்லை.

கார்ல் மார்க்ஸின் முதல், ஒன்றாம் தொகுதி வெளி வந்த பொழுதும் கூட இப்படித்தான் அதனை மூடி மறைத்திட முயன்றார்களாம் எதிர் வரிசைப் புகழாளர்கள்! ஆனால், முடிந்து இருக்கிறதா இன்று வரை யாராலும் அதனை மூடி மறைத்திட!

இப்படி, எதிர்க் கருத்துகளை வரவேற்கின்ற நோக்கத்தில்தான் இந் நூலுக்கு அணிந்துரை எழுதுமாறு நண்பர் ஜெய மோகனை நான் கேட்டுக் கொண்டேன். அவருக்கும் இது தெரியும் என்பதனால்தான் அவரும் இதில் வியப்பு அடைந்து விட வில்லை. ஆனால், வரலாற்றின் முரண் இயக்கத்திற்குக் கருத்துரை எழுதுமாறு கவிஞர் இன்குலாப்பை நான் கேட்ட பொழுது அவர் வியப்பு அடைந்தார்; மற்றவர்களின் கருத்துரைகளைக் கேட்டு வாங்கி வெளியிடுவதில் ஓர் எச்சரிக்கை தேவை என்பதையும் எனக்கு அவர் உணர்த்தி இருக்கிறார்.

சொ.கண்ணன்

‘மனத்தின் விடுதலை ‘க்கு அணிந்துரை எழுதி இருப்பவர் எனது நண்பர் சொ.கண்ணன். ஆனால், அணிந்துரைக்காக அவரை ஏன் நான் அணுகினேன் என்பதற்குப் பின்னால் ஒரு கதையே இருக்கிறது. எங்கள் தோழர்களான கே.எம்.வேணுகோபாலுக்கும் இளவேனிலுக்கும் இது தெரியும்.

சோவியத் ருஷ்யாவின் வீழ்ச்சிக்குப் பின்னராவது அதிகார வருக்கத்தின் அரசு முதலாண்மைக் கோட்பாடான ஸ்தாலினிசம் பற்றிப் பலருக்கும் தெரிந்து இருக்கலாம். ஜெய மோகனின் ‘பின் தொடரும் நிழலின் குரலை ‘யும் அது பற்றிய எனது அலசலையும் படித்தவர்களுக்கும் இது புரிந்து இருக்கும்.

மார்க்ஸிய முக மூடியால் தனது முகத்தை மறைத்துக் கொண்டு, பொய்கள், வசைகள், அடக்கு முறைகள், முதலிய இழிவுகளின் மூலம் தன்னை வளர்த்துக் கொண்டு வந்து இருக்கின்ற ஒரு கோட்பாடுதான் ஸ்தாலினிசம்! பொதுமை வாதிகளுக்குத் தெரியாமலே அவர்கள் மேல் திணித்து விடப் பட்டு வந்து இருக்கின்ற இந்த ஸ்தாலினிசத்தின் தாக்கங்களைப் பொதுமைக் கட்சிக் காரர்களிடம் இன்றும் கூட நாம் காண முடிகிறது என்பது வரலாற்றின் எள்ளனம் என்றுதான் நாம் சொல்ல வேண்டும்.

இத் தகு மரபுகளைச் சுமந்து கொண்டு வந்து இருந்த எங்கள் தோழர்கள் இருவர் கொஞ்சம் வசதியானவர்கள்! இந்த வசதியின் காரணமாகவே, தங்கள் வசதியின் மொழியில் கொஞ்சம் இழிவாகக் கண்ணனை அவர்கள் வசை பாடி இருக்கிறார்கள். எனது பெயரையும் தங்களுடன் அவர்கள் சேர்த்துக் கொண்டது கண்ணனுக்கு எரிச்சல் ஊட்டி இருக்க வேண்டும். எங்கள் எல்லோரையும் வசமாகச் சாடி விட்டுக் கண்ணன் சென்று விட்டார்.

இது நடந்து முடிந்த சிறிது நேரத்தில் அந்தத் தோழர்களை நான் சந்தித்த பொழுது அவர்கள் வாயிலாக அதே பான்மையில் நடந்ததைக் கேட்டு அறிந்த நான் பதறிப் போனேன். ‘தோழர்களை மதிக்கத் தெரியாத நீங்கள் எல்லாம் பொதுமை வாதிகள்! எனது நண்பரைப் பற்றி என்னிடம் புறணி பேசுவதற்குக் கூட நீங்கள் வெட்கப் பட வில்லை! கண்ணன் திட்டுவதால் நான் ஒன்றும் குறைந்து விட மாட்டேன்! ‘ என்று அவர்களைச் சாடி விட்டு அப்படியே சென்று கண்ணனை நான் சந்தித்தேன்.

என்னைக் கிண்டல் செய்வதற்குக் கண்ணன் தவற வில்லைதான் என்ற போதிலும், அவரிடம் காணப் பட்ட சோர்வு என்னை வருத்தியது. அவரிடம் இருந்து விடை பெற்றுக் கொண்டு மீண்டும் அந்தத் தோழர்களை நான் சந்தித்தேன்; ‘ ‘மனத்தின் விடுதலை ‘க்குக் கண்ணன்தான் அணிந்துரை எழுதப் போகிறார்; அவரது அறிவாழத்தைக் கண்டு நீங்கள் மிரளப் போகிறீர்கள் ‘ என்று சூளுரைத்து விட்டு நான் சென்று விட்டேன்.

இப்படித்தான், மனத்தின் விடுதலைக்குக் கண்ணன் அணிந்துரை எழுதிட நேர்ந்தது. இல்லை என்றால், அதற்கு அணிந்துரை எழுதுமாறு இளவேனிலைத்தான் நான் கேட்டுக் கொண்டு இருந்து இருப்பேன். சொந்தத் தோழர்களைக் கூட இழிவு படுத்திடத் துடிக்கின்ற இது போன்ற இழுக்குகளுக்கு ஸ்தாலினிசத்தின் தாக்கம்தான் காரணம்!

கண்ணனின் அணிந்துரையை அப்படியே அச்சுக்கு நான் கொடுத்து விட்டேன் என்ற போதிலும், அதன் கருத்துகள் அனைத்திலும் எனக்கு உடன்பாடு உண்டு என்று நான் கூறி விட முடியாது. ஓர் எடுத்துக் காட்டாக, ‘ஒரு சராசரி இந்தியன் தத்துவம் பேசாமல் இருக்க மாட்டான்; நீதிக்காகப் போராட வா என்றால் வந்து விடுவான் ‘ என்கின்ற கண்ணனின் கருத்துகள் முரணம் ஆனவை. ‘நலன் ‘ பற்றிய உணர்மைக்கும் ‘அறம் ‘ பற்றிய உணர்மைக்கும் இடையே உள்ள தீர்மானப்பாடுகளைப் பற்றிய ஒரு சிக்கலாக இதனைப் பார்க்கின்ற பொழுது மேம்போக்கான இந்தக் கூற்றின் அடிப்படைகள் தகர்ந்து விடுகின்றன.

கவிஞர் இன்குலாப்

தாம் படித்த அனைத்து நூல்களிலும் தமக்குப் பிடித்தமான நூல் என்று ‘மனத்தின் விடுதலை ‘ பற்றிக் கருத்துக் கூறியவர் நண்பர் ஆவுடையப்பன்! வரலாற்றின் முரண் இயக்கத்தை அவர் திறந்து பார்த்ததும் அவரது கண்களில் பட்டதோ கவிஞர் இன்குலாப்பின் ‘சொல்லாடல் ‘! அதுவும், மிகவும் எளிதாக அதனைத் தாம் படித்து முடிக்க வில்லை என்று கவிஞர் இன்குலாப் சாட்சி பகர்கின்ற இடம்!

‘படிப்பதற்குக் கடினமாகத்தான் இது இருக்கும் போலும்! ‘ என்று என்னிடம் ஆவுடையப்பன் கூறிய பொழுது நான் அதிர்ந்து போய் விட்டேன். ஏனென்றால், மனத்தின் விடுதலையை முழுமையாகப் படித்துப் புரிந்து கொண்டு இருந்தவர் அவர்!

வரலாற்றின் முரண் இயக்கத்தைக் கவிஞர் இன்குலாப் படித்துக் கூட பார்த்திட வில்லை என்பதை அதில் அவர் நிகழ்த்திக் காட்டி இருக்கின்ற சொல்லாடலைப் படித்தவர்கள் யாவரும் புரிந்து கொண்டு விட முடியும். ஆனால், 30 ஆண்டுகளாக மார்க்ஸியம் பேசி வந்து இருக்கின்ற கவிஞர் இன்குலாப்பின் கருத்தை வினயமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நண்பர் ஆவுடையப்பனுக்குத் தோன்றி இருக்கிறது. இதில் தவறும் இல்லைதான்.

ஏனென்றால், ஒரு மார்க்ஸிய வாதியாக — புரட்சிக் கவிஞராக — புகழ் பெற்றுத் திகழ்ந்து வந்தவர் அவர்! எனினும், நூலைப் படிக்க விரும்புபவர்களின் ஆர்வத்தைக் குறைத்திட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் எழுதப் பட்டதுதான் இன்குலாப்பின் சொல்லாடல் என்று கண்ணன் கூறி இருந்தது அப் பொழுதுதான் மிகவும் அழுத்தமாக எனது மனத்தில் பதிந்தது.

எனது முகத்தில் ஓங்கி ஓர் அறை விட வேண்டும் என்பதுதான் கவிஞர் இன்குலாப்பின் ஆசை! ஏனென்றால், கவிதையைச் சாராயம் என்றும் புரட்சிக் கவிதையைக் கள்ளச் சாராயம் என்றும்தாம் அவரிடம் நான் கூறிக் கொண்டு வந்து இருக்கிறேன். ஒரு தொழிலாக அல்லாமல், இயல்பான ஓர் எழுச்சியாகக் கவிதை பாடுவது, 25-30 வயதுக்கு மேல் முடியாது என்றும் அவரிடம் நான் வாதிட்டு வந்து இருக்கிறேன். அவரது கவிதைகளைக் கூட விள்ளன முறையாகத்தான் வரலாற்றின் முரண் இயக்கத்தில் நான் மேற்கோள் காட்டியும் இருக்கிறேன்.

எனினும், கலை-இலக்கியம் பற்றிய எனது கருத்துகளுக்கு எதிரான கருத்துகளை நேரடியாகத் தெரிவிப்பதை விட்டு விட்டு, பொய்மையாகச் சொற்களை ஆடி மவுனமாக அவர் புன்னகைத்துக் கொள்வதில் யாருக்கு என்ன பயன் ? ஆனால், இதுதான் ஸ்தாலினிசத்தின் பண்பாடு!

‘இன்குலாப்பின் சொல்லாடலைப் படித்த பின் உங்கள் நூலைப் படித்திடவே தோன்ற வில்லை ‘ என்றுதான் ‘காலக்குறி ‘யின் ஆசிரியர் அ.ஜபாருல்லாகான் என்னிடம் கூறினார். தமிழ்ச் சிந்தனைகளையும் நான் கணக்கில் எடுத்துக் கொண்டு இருப்பதை வரவேற்ற மற்றும் பலர், இன்குலாப்பின் சொல்லாடலை எனது நூலில் நான் வெளியிட்டது தவறு என்றுதான் கருத்துக் கூறினார்கள்.

‘சமன்மை ‘ என்னும் பொருளில் ‘சமுகாண்மை ‘ என்பது தவறாகப் புரிந்து கொள்ளப் பட்டு வந்து இருக்கின்ற காரணத்தை வரலாற்றின் முரண் இயக்கத்தில் நான் சுட்டிக் காட்டி இருக்கிறேன். ஆனால், சமனியம் என்பதுதான் சோஷலிசம் என்பதன் பொருள் என்று சற்றும் தயங்காமல் கருத்துத் தெரிவிக்கிறார் கவிஞர் இன்குலாப்! மார்க்ஸியத்தைப் புரிந்து கொண்ட எந்த ஒரு மனிதனும் இப்படி ஒரு பிழையைச் செய்திடவே முடியாது என்பது மட்டும் உறுதி! அதே நேரத்தில், ஆண்மையை வெறுப்பவராகவும் தம்மைக் காட்டிக் கொள்ள அவர் முற்படுகிறார்.

கதை-கவிதைகளுக்கு அப்பால் தமது அறிவை வளர்த்துக் கொண்டு விட முடியாதவர் கவிஞர் இன்குலாப்! வரலாற்றின் முரண் இயக்கத்திற்குக் கருத்துரை எழுதுமாறு அவரிடம் நான் ‘பிடிவாதம் ‘ பிடித்ததற்குக் கூட, வாழ்க்கையில் ஒரு முறையாவது மார்க்ஸின் எழுத்துகளை அவர் படித்துதான் பார்க்கட்டுமே என்ற எனது விருப்பம்தான் காரணம்; எனது நூலுக்கு அவரிடம் இருந்து சான்றிதழ் பெற வேண்டும் என்ற நோக்கம் அல்ல!

ஏனென்றால், தொடக்கம் முதற் கொண்டே அவரது கருத்துகளுக்கு எதிராகத்தான் எனது கருத்துகளை நான் வளர்த்துக் கொண்டு வந்து இருந்தேன். வரலாற்றின் முரண் இயக்கத்திற்கு மூன்று பக்கங்களில் நான் எழுதி இருந்த முன்னுரையைப் பல பக்கங்களுக்கு நான் நீட்டி இருப்பதற்கும் அவரது கருத்துகள்தாம் காரணம். ஆனாலும், தமது கோபத்தைத் தணித்துக் கொள்ளுகின்ற ஒரு சிறு பிள்ளை விளையாட்டாகச் சொல்லாடித்தான் தமது கருத்துரையை அவர் எழுதி இருக்கிறார்; கேட்டு வாங்கியதை வெளியிட்டுதான் பார்ப்போமே என்றுதான் அதனை நான் வெளியிடவும் நேர்ந்தது.

வரலாற்றின் முரண் இயக்கத்தின் தட்டச்சுப் பிறதியைத் தடவித் தடவி அவர் பார்த்ததாகவும் புதிதாக ஒரு நூலைப் படிப்பதற்கே அவர் தயங்குவதாகவும் நூலினுள் நுழைந்து விட்டால் வேறு மார்க்ஸிய நூல்களைத் தேடிப் பிடித்து அவர் படித்திட வேண்டியது ஏற்பட்டு விடும் என்றும், ஆனால், அவரது பிற படைப்பு வேலைகள் குறுக்கிட்டு விட்டன என்றும் தமது சொல்லாடலைத் தொடங்கி இருக்கிறார் கவிஞர் இன்குலாப்!

வரலாற்றின் முரண் இயக்கத்தைத் தடவித் தடவிப் பார்த்துச் சொல்லாடுவதற்குக் கவிஞர் இன்குலாப் எடுத்துக் கொண்ட காலம் எவ்வளவு தெரியுமா ? ஓர் ஆண்டு! புதிய கருத்துகளைத் தடவிப் பார்ப்பதற்குக் கூட அவர் நடுங்கத் தொடங்கிய ஆண்டு எது தெரியுமா ? 1977!

கோவை ஞானியின் கட்டளையை ஏற்று, ‘இந்திய வாழ்க்கையும் மார்க்ஸியமும் ‘ என்னும் தலைப்பில் அவர் எழுதி இருந்த நூலுக்கு விரிவான ஒரு திறனாய்வினை எழுதி, ‘ஞானியின் ஞானம் ‘ என்று அதற்குப் பெயரும் இட்டு, அதன் கையெழுத்துப் பிறதியைக் கவிஞர் இன்குலாப்பிடம் கொடுத்து அவரது கருத்தினைக் கூறும் படி நான் கேட்டுக் கொண்ட பொழுதுதான், முதன் முதலாக அவரிடன் இந்த நடுக்கம் ஏற்படத் தொடங்கியது.

புதிய கருத்துகளைக் கண்டு நடுங்குபவர்களைப் பற்றி இந் நூலில் (1978-80), நான் குறிப்பிட்டு இருந்தது கூட, கவிஞர் இன்குலாப்பைக் கருத்தில் கொண்டுதான்! (பக்.171.) அன்று தொடங்கிய இந்த நடுக்கம், 23 ஆண்டுகளாக அவரைத் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது என்றால், அவரது அறிவாண்மையையோ அதன் நாணயத்தையோ பற்றி நாம் என்ன கருதுவது! மார்க்ஸின் நூல்களை வெறுமனே தடவித்தான் அவர் பார்த்து இருக்கிறார் என்பதற்கு இதை விட வேறு என்ன சான்று வேண்டும்!

ஆனால் அவரோ, மார்க்ஸின் நூல்களைத் தாம் படித்து முடித்து விட்டது போலவும் மீண்டும் அவற்றிற்குள் நுழைய முடியாதபடி அவரது படைப்பு வேலைகள் குறுக்கிட்டு விட்டது போலவும் காரணம் கூறி நம்மிடம் பெருமைப் பட்டுக் கொள்ள முற்படுகிறார்!

‘படைப்பு ‘ என்று கவிஞர் இன்குலாப் இங்கே குறிப்பிடுவது கதை-கவிதைகளைத்தாம் என்பது பலரும் அறிந்தது. எத்தனையோ பொருள்கள் பற்றி எவ்வளவோ ஆழமான நூல்களை எத்தனையோ எழுத்தாளர்கள் எழுதி இருக்கிறார்கள். ஆனால், படைப்புகள் என்று அவற்றை யாரும் கூறிக் கொண்டது இல்லை; கொள்வதும் இல்லை.

ஆனால், சில கதை-கவிதை எழுத்தாளர்களோ தங்கள் எழுத்துகளைப் படைப்புகள் என்று கூறித் தற்பெருமை அடைந்து கொண்டு வருகிறார்கள். எனினும், ஸ்தாலினிசத்தின் பல தந்திரங்களில் ஒரு தந்திரம்தான் இது. இந்தத் தந்திரமோ, மார்க்ஸியத்திற்குள் நுழைந்து விடாத படி, கதை-கவிதைகளுக்குள் கட்சிக் காரர்களைக் கட்டிப் போட்டு விட முயல்கின்ற ஒரு தந்திரம்!

கலை-இலக்கியம்தான் எல்லாம் என்கின்ற மன நிலை கவிஞர் இன்குலாப்புக்கு இப் பொழுது ஏற்பட்டு விட்டதாம்! ஏனென்றால், இத்தனை காலமும் கவிதையைத்தான் அவர் தேடிக் கொண்டு இருந்தாராம்! ஆனாலும், அவரது கண்களுக்கு இன்னமும் அது தட்டுப் பட்டு விடவும் இல்லையாம்! (பார்க்க: ஒவ்வொரு புல்லையும், முன்னுரை.) கவிதையைப் பற்றிய ஒரு மாய்மையை விதைத்து, அந்த மாய வலையில் வீழ்ந்து விடுகின்ற இளைஞர்கள் இடையே தனிப் பெரும் புகழ் பெற்றிடத் துடிக்கின்ற ஒரு தந்திரம் இது என்பது சொல்லாமலே விளங்கும்.

எனினும், இவரது கருத்துகளுக்கு எதிராக யாராவது கருத்துக் கூறினால், அதற்குப் பதில் கூறிட அவர் முன் வர மாட்டாராம்! மாறாக, மவுனப் புன்னகைகளை மட்டும்தாம் உதிர்த்துத் தள்ளிக் கொண்டு இருப்பாராம்! கோழைத் தனத்தின் மயக்கும் வெளிப்பாடுதான் இந்த மவுனப் புன்னகை என்பது கூட இன்னமும் இவருக்குப் புரிய வில்லை!

மார்க்ஸியத்தின் ஆனா ஆவன்னா கூட தெரியாத கவிஞர் இன்குலாப் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக மார்க்ஸியம் பேசிக் கொண்டு வந்து இருக்கிறாரே, அதே நேரத்தில், தடவித் தடவித் தாம் பார்த்துக் கொண்டதுதான் இவருக்குத் தெரிந்த மார்க்ஸியம் என்று சான்று வேறு இவர் உரைத்துக் கொள்கிறாரே, அப்படி என்றால், மார்க்ஸியக் கருத்துகள் என்று இவரது கருத்துகளை எண்ணிக் கொண்டு வந்து இருக்கின்ற இளைஞர்களுக்கு இவர் செய்திடப் போகின்ற பரிகாரம் என்ன ? அவர்கள் எல்லோரிடமும் இன்று இவர் மன்னிப்புக் கேட்கப் போகிறாரா ? அந்த நாணயமாவது இவரிடம் உண்டா ? ஆனால், இவரோ இன்று ஒரு பின்-புதின வாதியாம்!

ஏன் இந்தத் தடுமாற்றம் ? ஏனென்றால், சோவியத் ருஷ்யா வீழ்ந்த உடன் மார்க்ஸியமும் வீழ்ந்து விட்டது என்று இவர் கற்பனை செய்து கொண்டார்; பின்-புதின வாதம்தான் இனிக் கொடி கட்டிப் பறந்திட முடியும் என்றும் இவர் நம்பிக் கொண்டார்! எப்படியும், தனிப் பெரும் புகழாளராகத் தம்மை இவர் நிலை நிறுத்திக் கொண்டு ஆக வேண்டும் அல்லவா! அற்ற குளத்து அறு நீர்ப் பறவைகளிடம் நாணயத்தையும் நேர்மையையும் யாரும் எதிர் பார்த்திட முடியுமா, என்ன!

ஆனால், இது போன்ற ஒரு பான்மையினைக் கோவை ஞானியிடமும் நாம் காண முடிகிறது என்பதுதான் மிகப் பெரிய விந்தை! ஸ்தாலினிசத்தின் பிடியில் இருந்து இன்னமும் விடு பட்டு வந்திடாத கோவை ஞானி, மார்க்ஸியத்தைப் பரப்புவதில் மும்முரமாக ஈடு பட்டுக் கொண்டு வருகிறார் என்பது சரிதான்! ஆனால், மார்க்ஸியத்திற்குப் புகழ் மாலைகளைச் சூட்டுவதுதான் மார்க்ஸியச் சிந்தனையின் வளர்ச்சிக்கு வழி வகுக்கும் என்று இவர் எண்ணிக் கொண்டு இருப்பதுதான் வேடிக்கை!

கோவை ஞானி

கவிஞர் இன்குலாப்பைப் போன்ற ஒரு புகழாளர்தாம் கோவை ஞானி என்ற போதிலும், அவரில் இருந்து சற்று வேறுபட்டவர் இவர்!

சோவியத் ருஷ்யாவின் வீழ்ச்சியுடன் மார்க்ஸியம் மடிந்து போய் விட்டது என்று கவிஞர் இன்குலாப் நம்புகிறார் என்றால், மார்க்ஸியத்தின் கால்கள் மட்டும்தாம் அந்த வீழ்ச்சியில் ஒடிந்து போய் விட்டன என்று கோவை ஞானி கருதுகிறார். எனவே, வெள்ளைக் காரச் சீமையில் இருந்து எழுந்து வருகின்ற எல்லாச் சிந்தனைகளையும் பற்றிப் பிடித்துக் கொண்டு, மார்க்ஸியத்திற்கு முட்டுக் கொடுத்து விடுகின்ற முயற்சிகளில் மும்முரமாக இவர் ஈடு பட்டுக் கொண்டு வருகிறார். இந்த ஈரோப்பியச் சிந்தனைகளுக்குள் இடது சாரிப் பின்-புதினச் சிந்தனைகளும் அடங்குமாம்!

மார்க்ஸியத்தை இவர் புரிந்து கொண்டதே இல்லை என்பது மார்க்ஸியத்திற்கு இவர் சூட்டிக் கொண்டு வருகின்ற புகழ் மாலைகளில் இருந்தே நமக்குத் தெரிந்து விடுகிறது. எனது நூல்களையும் இவர் படித்துப் பார்த்து இருக்கிறார் என்பது உண்மைதான் என்ற போதிலும், அவற்றையும் நுனிப் புல்தான் இவர் மேய்ந்தும் இருக்கிறார்.

ஓர் எடுத்துக் காட்டாக, ‘மதத்தின் வழியிலும் வருக்கப் போராட்டம் நடக்கும் ‘ என்னும் இவரது கருத்தினை நாம் எடுத்துக் கொள்வோம்.

மதங்களின் பெயரால் நடைபெற்று வருகின்ற போராட்டங்கள் கூட வருக்கப் போராட்டங்கள்தாம் என்று ஏங்கெல்ஸ் கூறுகிறார் என்பது சரிதான்! மதம் மட்டும் என்ன ? மொழியின் பெயராலும் தேசியத்தின் பெயராலும் நடைபெற்று வருகின்ற போராட்டங்கள் கூட வருக்கப் போராட்டங்கள்தாம் ஆகும்.

ஆனால், மதப் போராட்டங்களின் வழியாக வருக்கப் போராட்டங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்பது அல்ல ஏங்கெல்ஸின் கருத்து. மாறாக, வருக்கங்களது பொருளாதார நலன்களின் மோதல்களில் இருந்துதான் மதப் போராட்டங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதுதான் ஏங்கெல்ஸின் கருத்து!

மார்க்ஸியத்தின் ஆழங்களுக்குள் உற்றுக் கூட இவர் பார்த்தது இல்லை என்பதனால்தான், இவரது கருத்துகளை ஜெய மோகனால் ஏற்றுக் கொள்ள முடிய வில்லை போலும்! ஏனென்றால், ஆய்வுகளில் ஆழங்களைத் தேடி வருபவர் ஜெய மோகன்; மனத்தில் கூட ‘ஆழ் மனத்தை ‘த் தேடுபவர் அவர்!

மார்க்ஸியம் பற்றிப் பேசுகின்ற ஒவ்வொரு முறையும் அதனைக் கொச்சைப் படுத்தி விடுகிறார் கோவை ஞானி! ஏனென்றால், அதிசயங்களை நிகழ்த்திடத் தக்கது ஒரு மந்திரக் கோலாக அதனை அவர் சித்தரித்து விடுகிறார். இதன் மூலம், உலகின் முகத்தில் வடியும் கண்ணீரைத் துடைத்திட முயல்கின்ற கரங்களாகத் தமது கரங்களை உயர்த்திக் கொள்ள இவர் முற்படுகிறார்! ஏனென்றால், தனிப் பெரும் புகழாளராகத் தம்மை நிலை நிறுத்திக் கொண்டு விட இவர் துடிக்கிறார்!

ஸ்தாலின் கூட ஒரு தனிப் பெரும் புகழாளர்தாம்! மக்களின் கண்ணீரைத் துடைத்திட முயன்ற அவரது பெருந் தன்மைதானே, அதிகாரப் பீடத்தில் அவரை அமர்த்தி வைத்தது! மக்களின் கண்ணீரைத் துடைத்துத் துடைத்துத் தமது கரங்கள் ஓய்ந்து விட்ட நிலையில்தானே, ஒரு போதும் கண்ணீர் வடித்திடத் தேவை இல்லாத வகையில் மக்களை அவர் சுட்டுத் தள்ளிடவும் நேர்ந்தது!

ஆனால், மார்க்ஸியத்தைப் புரிந்து கொண்ட எவரையும் ‘தனிப் பெரும் புகழ் ‘ பற்றிய மாயைகள் பற்றிக் கொள்வது இல்லை என்பதுதான் உண்மை! ஏனென்றால், இத் தகு தனிப் பெரும் புகழாளர்கள் எல்லாம் இறுதியில் போய்ச் சேர்வது வரலாற்றின் குப்பை மேட்டில்தான் என்பது மிகவும் நன்றாகவே அவர்களுக்குத் தெரியும்!

தெரியாததை எல்லாம் தெரிந்தது மாதிரிப் பேசித் தமது மடமைகளை எல்லாம் மற்றவர்கள் மண்டைகளில் திணித்து விட முயல்கின்ற இவர்கள் எல்லாம், ‘பண்பாடு ‘ பற்றிப் பேசுவதுதான் மிகப் பெரிய வேடிக்கை! ஆனால், படிக்காததைப் படித்து முடித்து விட்டதாக — தெரியாததைத் தெரிந்து கொண்டு விட்டதாக — புரியாததைப் புரிந்து கொண்டு இருப்பதாக — இவர்கள் நடித்துக் கொண்டு வருவது ஏன் ? ஏனென்றால், படிக்காததிலும் தெரியாததிலும் புரியாததிலும் தனிப் புகழை எய்திட வேண்டும் என்று இவர்கள் விரும்புகிறார்கள்; பிறவி ஞானிகளாகத் தங்களைக் காட்டிக் கொள்ள முற்படுகிறார்கள்!

இந் நிலையில், மார்க்ஸின் நூல்களைத் தாம் படித்தது இல்லை என்பதை இயல்பாக ஏற்றுக் கொள்கின்ற ஜெய மோகனின் நாணயத்தை நாம் பாராட்டாமல் இருந்திட முடியாது! அவரது தேடல்களின் தீவிரத்திற்கு இந்த நாணயம்தான் காரணம் என்றும் எனக்குத் தோன்றுகிறது!

ஜெய மோகன்

‘சொல் புதிது ‘ இதழ் எனக்குக் கிடைத்திடாதது குறித்துப் பலருக்கும் மடல் எழுதி, இறுதியாகக் ‘காலச் சுவடு ‘ ஆசிரியர் திரு.கண்ணன் அவர்களுக்கு நான் மடல் எழுத, அவர் மூலமாக இதனை அறிந்த ஜெய மோகன் எனக்கு மடல் எழுத, இப்படித் தொடங்கியதுதான் எங்கள் தொடர்பு! நண்பர் ஜெய மோகன் ஒரு பண்பாளர் என்பதை அவரது முதல் மடலிலேயே நான் தெரிந்து கொள்ளவும் முடிந்தது.

‘பின் தொடரும் நிழலின் குரல் ‘ குறித்து நான் எழுதி இருந்த ‘ஓர் அலசல் ‘ அப் பொழுது ஒளி-அச்சாகி இருந்தது. எனது விள்ளனம் குறித்து ஜெய மோகன் வருத்தம் அடைந்திடக் கூடுமோ என்று எண்ணி அது பற்றி அவருக்கு நான் எழுதிய பொழுது, தீவிரமான விவாதங்களை வரவேற்கின்ற அவரது பான்மையை நான் தெரிந்து கொண்டேன்; ஒளி-அச்சுப் பிறதி ஒன்றினையும் அவருக்கு நான் அனுப்பி வைத்தேன்.

எனது விள்ளனம் குறித்து விரிவாகக் கருத்துக் கூறி இருந்த ஜெய மோகன் இறுதியில் குறிப்பிட்டு இருந்தார் — அழகான ஓவியம் ஒன்றைத் தடவிப் பார்த்துக் கருத்துக் கூறுகின்ற ஒரு குருடனின் பார்வையைப் போல் அது இருந்தது என்று!

அதைப் படித்ததும் நான் மகிழ்ச்சி அடைந்தேன்! சுற்றி வளைத்துத் தந்திரம் பண்ணாமல் நேரடியாக என் மேல் அவர் தொடுத்து இருந்த இந்தத் தாக்குதல் எனக்குப் பிடித்து இருந்தது. எனது மகிழ்ச்சியைத் தெரிவித்து அவருக்கு நான் மடல் எழுதினேன். ‘கலைக் கண் ‘ குருடாகிப் போன சோதிப் பிரகாசம் என்று அவரது கிண்டலை வளப் படுத்திடவும் நான் தவற வில்லை. மடல்களின் மூலமாக எங்கள் விவாதங்கள் தொடர்ந்தன.

எங்கள் விவாதங்களுக்கு இடையே ஜெய மோகன் எழுப்பி வந்த கேள்விகள் ஆழமானவை; தீவிரமானவை! அவரது தேடல்களின் இந்தத் தீவிரம்தான் பெரிதும் என்னைக் கவர்ந்தது என்று நான் சொல்லி ஆக வேண்டும். பொதுப்படையான ஒரு கதை எழுத்தாளராக நண்பர் ஜெய மோகனை என்னால் பார்த்திட முடிய வில்லை; தீவிரமான ஒரு சிந்தனையாளராகத்தான் அவரை நான் பார்க்கிறேன்.

இந்த நூலுக்கு ஜெய மோகன் எழுதி இருக்கின்ற அணிந்துரை மிகவும் நீளமானது. அமெரிக்காவில் இருந்து பரப்பப் பட்டு வருகின்ற ‘திண்ணை ‘ என்னும் இணைய தளத்திற்காகவும் அதனை அவர் எழுதி இருந்ததுதான் இதற்குக் காரணம் என்றும் எனக்குத் தோன்றுகிறது.

மிகவும் விரிவாக நான் பதில் கூறித்தான் ஆக வேண்டும் என்கின்ற வகையில் அமைந்து இருக்கின்ற எதிர் வாதங்களை விட்டு விட்டு, எனினும், அவரது எதிர்க் கருத்துகளைப் புறக் கணித்து விடாத வகையில், கொஞ்சம் சுருக்கமாக அவரது அணிந்துரையினை வெளியிடலாம் என்று அவருக்கு நான் வேண்டுகோள் விடுத்தேன். குறிப்பாக, கலை-இலக்கியம் பற்றிய எனது கருத்துகளுக்கு எதிரான கருத்துகளாம் அவை; எனினும், எனது வாதங்களை அவை எதிர் கொள்ளவும் இல்லை! ‘திண்ணை ‘ இணைய தளத்தில் முழுமையாக அவற்றை வாசகர்கள் காணலாம்.

அதே நேரத்தில், இந் நூலுக்கு எழுதி இருப்பது போல, ‘மனத்தின் விடுதலை ‘, ‘வரலாற்றின் முரண் இயக்கம் ‘, ஆகிய நூல்களுக்கும் விரிவான விள்ளனங்களை எழுதிட அவர் முன் வர வேண்டும் என்றும் அவரது விள்ளனங்களை எதிர் கொண்டு எனது கருத்துகளை நான் எழுதிட வேண்டும் என்றும், எங்கள் இருவரதும் நூலாக அவற்றை நாங்கள் வெளியிட வேண்டும் என்றும் அவருக்கு நான் வேண்டுகோள் விடுத்து இருக்கிறேன்.

ஒரு சிந்தனை விருந்தாக எங்கள் நூல் அமைந்திடக் கூடும் என்று எனக்குத் தோன்றுகிறது. இந்தப் புதிய முயற்சியை வரவேற்றிட வாசகர்கள் முன் வருவர் என்றும் நான் நம்புகிறேன்.

ஜெய மோகனின் அணிந்துரையில் காணப் படுகின்ற கருத்துகளுக்கு அவர்தாம் பொறுப்பு என்ற போதிலும், அவரது சில கருத்துகளை மட்டும் ஈண்டு நான் சுட்டிக் காட்டிக் கொள்ள விரும்புகிறேன்.

முதலாவதாக, ஒரு குறுக்கல் வாதமாக மார்க்ஸியத்தை ஜெய மோகன் வரையறுக்கிறார்; இரண்டாவதாக, முரணியக்க ஆய்வு முறைக்கு எதிரானது ஒரு சிறப்பான ஆய்வு முறை, ஈரோப்பில் உருவாகி வந்து இருக்கிறது என்றும் அவர் கூறுகிறார். இந்த இரண்டு கருத்துகளிலும் எனக்கு உடன்பாடு இல்லை.

மேலும், ‘கரணியம் ‘ பற்றிய எனது கருத்துகளை ‘மனத்தின் விடுதலை ‘, அதிகாரம் 5-இலும், ‘காரண அறிவு ‘ பற்றிய எனது கருத்துகளை ‘வரலாற்றின் முரண் இயக்கம் ‘: பாகம் ஒன்று:106; பாகம் இரண்டு:51, 59, 79-80, 84, 110, 126, முதலிய பக்கங்களிலும் ‘நிருபணம் ‘ பற்றிய எனது கருத்துகளை, ‘வரலாற்றின் முரண் இயக்கம் ‘: பாகம் ஒன்று: 144; பாகம் இரண்டு:13, 98, முதலிய பிற பக்கங்களிலும் வாசகர்கள் காணலாம்.

இனி, ‘கரணியம் ‘ மற்றும் ‘காரண அறிவு ‘க்கு எதிரான கருத்துகள் கடந்த 50 ஆண்டுகளில் முன் வைக்கப் பட்டு வந்து இருக்கின்றன என்றும் ஓர் அறிவியலாக மார்க்ஸியத்தை நாம் ஏற்றுக் கொள்வது முடியாதது என்பது போன்றும் ஜெய மோகன் கூறுகின்ற கருத்துகள், அவரது நம்பிக்கைக்கு உட்பட்டனவாகத் தெரிகின்றனவே ஒழிய, அவரது விளக்கங்களுக்கு உட்பட்டனவாக நமக்குத் தெரிய வில்லை.

ஏனென்றால், ஏன் சொன்னார் ? எப்படிச் சொன்னார் ? என்று இல்லாமல், அவர் சொன்னார்; இவர் சொன்னார்; என்று பெரிய பெரிய பெயர்களாகச் சில ஈரோப்பியப் பெயர்களைச் சொல்லி மற்றவர்களுக்குப் பூச்சாண்டி காட்டிட முயல்கின்ற உத்திகளைக் கைவிட்டு விட்டு, தமது விளக்கங்களுக்கு உட்பட்ட கொள்கைகளாகத் தமது நம்பிக்கைகளை முன் வைத்திட ஜெய மோகன் முன் வருகின்ற பொழுது மட்டும்தான் வினயமாக அவற்றை யாரும் எடுத்துக் கொள்ள முடியும்; எதிர் வாதங்களை நிகழ்த்திடவும் முடியும்.

ஓர் எடுத்துக் காட்டாக, இறைமை என்பதன் கருத்தமைவு என்ன ? இறைவன் என்பவர் யார் ? அவர் ஒருவரா ? பலரா ? எப் பொழுது அவர் பிறந்தார் ? எப்படி அவர் வளர்ந்தார் ? அவர் இறந்து போவதற்கு உரிய வாய்ப்புகள் என்ன ? என்று எல்லாம் எந்த வித விளக்கமும் இல்லாமல், ‘இறைவன் இறந்து விட்டான் ‘ என்று வெறுமனே கவிதை பாடுகின்ற மேதாவிகளைப் பற்றி நாம் என்ன கருதுவது — மாய்மையான நம்பிக்கைகளுக்கு அப்பால் தங்கள் அறிவினை வளர்த்துக் கொள்ள முடியாத பகட்டுக் கார வித்தகர்கள் என்பதைத் தவிர! ‘உயிர்த்து எழுந்து இறைவன் வருவான்! ‘ என்று வேண்டும் என்றால், இவர்களுக்கு நாம் ஆறுதல் கூறிக் கொள்ளலாம், அவ்வளவுதான்!

இதனால்தான், ‘மார்க்ஸியத்தின் போதாமை ‘ குறித்து, இந்த இரண்டு சொற்களில் மட்டும், ஜெய மோகன் கருத்து உரைத்து விடுவதை நாம் படிக்கின்ற பொழுது நமக்குத் திகைப்பு ஏற்படுகிறது. ஏனென்றால், மார்க்ஸியத்தில் ஏதோ போதாமை இருக்கிறது என்பது இவருக்குத் தெரிந்து இருக்கிறது என்பதுதான் இதில் இருந்து நமக்குத் தெரிய வருகிறதே ஒழிய, அந்தப் போதாமையைப் பற்றி இவருக்கு என்ன தெரிந்து இருக்கிறது என்பது அல்ல! குறைந்தது, இந்த நூலில் காணப் படுகின்ற போதாமைகளையாவது விளக்கிக் காட்டுவதற்கு ஜெய மோகன் முன் வந்து இருக்கலாம்; ஒற்றைப் படையான எனது வாதங்களைச் சுட்டிக் காட்டியும் இருக்கலாம்.

அப்படி இல்லாமல், போதாமை, ஒற்றைப் படை, என்று எல்லாம் வெற்று உரைகளை வெறுமனே உச்சரித்துக் கொண்டு இருப்பதில் யாருக்கு என்ன பயன் ? எல்லாம் தெரிந்தவன், எதுவும் தெரியாதவன் என்று ஹே:கல் கூறியது ஒரு புறம் இருக்க, எதையாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் எழுத்தாளர்களை நாம் நாடுகிறோம் என்பதுதான் முக்கியம்!

மார்க்ஸைப் புரிந்து கொள்ளாமலே அவரைக் கடந்து வந்து விட்ட சிந்தனை யாளர்கள் பலர், புதிது புதிதாக இப் பொழுது கிளம்பி வந்து கொண்டு இருக்கிறார்கள்; புதிய புதிய நம்பிக்கைகளை அவிழ்த்து விட்டுக் கொண்டும் வருகிறார்கள். கனமான எதையோ சொல்ல வருவது போன்ற பாவனை காட்டி, எதனையும் சொல்லாமல் வெறுமனே கதையாடி முடித்து விடுகின்ற இவர்களது பான்மை, சமுதாயச் சிந்தனையின் வளர்ச்சியை அன்றி இவர்களது பகட்டுகளைத்தாம் குணவரைப் படுத்திக் கொண்டு வருகின்றன. ஆனால், இந்தப் பகட்டுகளைத் தெரிந்து கொள்வதனால் எதையாவது நாம் புரிந்து கொள்ள முடிகிறதா ? என்பதுதான் அடிப்படையான கேள்வி. இவர்கள் பயன் படுத்துகின்ற சொற்கள் கூட வெறும் பகட்டுகளாகத்தாம் வெளிப் பட்டுக் கொண்டும் வருகின்றன.

குறிப்பாக, ‘சொல் புதிது ‘-இல் கையாளப் பட்டு வருகின்ற முக்கியமான சொல்லாட்சிகள், மிகவும் ‘பொருள் புதிதாக ‘ அமைந்து குழப்பத்தில் நம்மை ஆழ்த்தி வைத்து விடுகின்றன என்பதை அதன் வாசகர்கள் கவனித்து இருக்கலாம். இந்த எழுத்தாளர்களின் குழப்பங்களை எல்லாம் நாம் சுமந்து திரிந்திட வேண்டும் என்று நமது தலையில் எதையோ யாரோ விதித்து விட்டார்கள் போலும்!

எடுத்துக் காட்டாக, எந்த வகையான ‘இயல் ‘ என்று எந்த ஒரு விளக்கமும் இல்லாமல், கருத்தியல் ( கருத்து+இயல் ) என்னும் ஒரு பதம் சொல் புதிதில் பெரிதும் பயன் படுத்தப் பட்டு வருகிறது. ஐடியாலஜி ( கோட்பாடு ) என்பதைத்தான் கருத்து இயல் என்று இவர்கள் தமிழ்ப் படுத்தி வைத்து இருக்கிறார்கள் என்று தெரிகிறது. ‘சைக்காலஜி ‘ என்பது உள வியல் என்றால், ‘ஐடியாலஜி ‘ என்பது கருத்து இயலாகத்தானே இருந்து ஆக வேண்டும்! ஆனால், ஐடியாலஜி என்ற ஆங்கிலச் சொல்லே பிழையானது என்பதுதான் எனது கருத்து. ‘நாலெட்ஜ் அட் த லெவல் ஆஃப் ரீசன் ‘ என்று நீட்டி முழக்கப் பட்டு வருகின்ற கருத்தை, ‘ரீசனல் நாலெட்ஜ் ‘ என்று நானோ சுருக்கிடவும் நேர்ந்தது. (பார்க்க: வரலாற்றின் முரண் இயக்கம்: பாகம் ஒன்று: பக். 241, 251, 258.)

ஒவ்வொரு கண்டு பிடிப்பின் உள்ளும் அதனைப் பொய்ப்பித்திடத் தக்க இயன்மைகள் ஒளிந்து கிடக்கின்றன என்று நாம் கூறுகின்ற பொழுது, அக் கண்டு பிடிப்புப் பொய்ப்பிக்கவும் படலாம், அல்லது, பொய்ப்பிக்கப் படாமலும் போகலாம்; என்றுதான் நாம் குறிப்பிட முற்படுகிறோம். ஆனால், ‘பொய்ப்பிக்கும் இயன்மை ‘ என்பதை வெறுமனே ‘பொய்ப்பித்தல் ‘ என்று எடுத்துக் கொண்டு, சொல் புதிது எழுத்தாளர்களோ நமது காதில் பூச் சுற்றி விட்டு விடுகிறார்கள். மனப் பிம்பம் ( மன நிழல் ), மனப் படிமம் ( மனச் சிலை ), மனப் பதிவு ( மனப் பதிப்பம் ), முதலிய ஜெய மோகனின் சொல்லாட்சிகளை எப்படி நாம் புரிந்து கொள்வது ? — வெறும் மயக்கங்கள் என்பதைத் தவிர! ‘நடை முறை ‘ என்றால் ‘செயல் படும் முறை ‘ என்றுதான் பொருள். ஆனால், செயற்பாடு என்று எப்படி அது பொருள் தந்திட முடியும் ?

அறிவியலின் உண்மைகள் கூட ‘வரையறைக்கு உட்பட்டவைதாம் ‘ என்று ஜெய மோகன் கூறுகின்ற பொழுது, ‘வரம்புக்கு உட்பட்டவை ‘ என்றுதான் அவற்றை அவர் குறிப்பிட முற்படுகிறார் என்பதில் ஐயம் இல்லை. ஆனால், மனித வாழ்க்கை மட்டும் என்ன, இந்த வையகம் கூட வரம்புக்கு உட்பட்டதுதான் என்கின்ற பொழுது, அவை பற்றிய உண்மைகள் மட்டும் வரம்புக்கு உட்பட்டு விடாமல் எப்படி இருந்திட முடியும் ? இந் நூல்:84-85 மற்றும் வரலாற்றின் முரண் இயக்கம்:பாகம் ஒன்று: துணைத் தலைப்பு: உற்பத்திச் சக்திகள் ( திறல்கள் ): 126 முதலிய பிற பக்கங்களில் மனித விடுதலையின் வரம்புபாடு பற்றிய எனது கருத்துகளை வாசகர்கள் காணலாம்.

வாழ்வின் வண்ணங்களும் கோலங்களும் அற்புதத்தில் நம்மை ஆழ்த்தி வருகின்ற மாய்மைகளைப் புனைவதற்கு, உள்ளுறையும் சிவத்தின் முன்னால் மண்டி இட்டு நின்று மன்றாடுவது மட்டும் போதும் ஆனதாக இருக்கலாம். ஆனால், இந்த உள்ளுறையும் சிவத்தின் வெளித் தோற்றத்தைத் துளைத்துச் சென்று, அதன் மூலத்தில் ஊடாடி நிற்கின்ற உண்மையைக் காண்பதற்கு, அறிவியல் முறையான, அதாவது, காரண முறையான, அதாவது, மெய்ப்பொருண்மை முறையான ஒரு தவத்தில் நாம் ஈடு பட்டு ஆக வேண்டும். அப் பொழுது மட்டும்தான், அயன்மையான இந்த வண்ணங்களின் அவலங்களையும் பருப் பொருள் வயமான இந்தக் கோலங்களின் கேவலங்களையும் பிரமாண்டமான இந்த அற்புதங்களின் மாய்மைகளையும் நம்மால் புரிந்து கொள்ள முடியும். ( பார்க்க: வரலாற்றின் முரண் இயக்கம்: பாகம் ஒன்று: பக்.109-10; பாகம் இரண்டு: பக்.43-44, 46 (அடிக் குறிப்பு-6), 66. )

மற்ற படி, வண்ணங்கள், கோலங்கள், பிரமாண்டங்கள், அனைத்தையும் மனிதர்களின் சுய-உணர்மைக்குள் அடக்கி முடித்து விட்ட ஆதி சங்கரர் முன்னால் இவர்கள் எல்லாம் எம் மாத்திரம் ? உள்ளுறையும் சிவத்தின் கருவறையை நமது மனவறைக்குள் கொண்டு வந்து விட்டவர் அல்லவா, அந்தக் கிளர்ச்சிக் காரர்!

கடந்த 50 ஆண்டுகளில் மட்டும் என்ன, சுமார் 2000 ஆண்டுகளுக்கும் முன்னரே ‘ஐயப்பாடு ‘ பற்றிய கருத்துகள் தமிழ் நாட்டில் நிலவி வந்து இருக்கின்றன என்பதை ‘மணிமேகலை: சமயக் கணக்கர்தம் திறம் கேட்ட காதை ‘யில் இருந்து யாரும் தெரிந்து கொள்ள முடியும். ஐயம் இல்லாமல் அறிவு ஏது ? அல்லது ஐயம் கொள்வதில்தான் புதுமையும் ஏது ? தொல் காப்பியர் கூட ஐயக் கிளவி பற்றிக் கருத்து உரைத்திட நேர்ந்து விட வில்லையா ? அல்லது, அண்டம் என்பது என்ன, தேவன் இட்ட முட்டையா ? என்று பரம் பொருள் வாதத்தை ஐயத்திற்கு உட்படுத்தியவர்கள்தாம் தமிழ் நாட்டில் இருந்தது இல்லையா ?

இனி, காரண முறையான வாதங்களாக இல்லாமல் ஒற்றை வரி மறுப்புகளாக எதிர் வாதங்களை நிகழ்த்தி விடுவது, வெறும் வசைகளாக வேண்டும் என்றால் வெளிப் பட்டு வரலாமே ஒழிய எதிர் வாதங்களாக விளங்கி வந்திட முடியாது என்பதையும் ஈண்டு நான் சுட்டிக் காட்டிக் கொள்ள விரும்புகிறேன். ஏனென்றால், ‘காரண முறையான முரணியக்க ‘ வாதங்களை, ‘அனுபவ முறையான கரணிய ‘ வீச்சினால் எதிர் கொண்டு விட முற்பட்டு விடுவது, வெறுமனே மூளைச் சோம்பல்தான் ஆகுமே ஒழியக் காரண அறிவின் முதிர்ச்சி ஆகி விட முடியாது.

உற்பத்திச் சாதனங்களையும் உழைப்பு ஆற்றலையும் அவற்றிற்கு உரிய விலையில் வாங்கி, தமது உற்பத்திப் பொருள்களையும் அவற்றிற்கு உரிய விலையில் மட்டும் விற்று, அதே நேரத்தில், ஆதாயத்தையும் முதலாளிகள் கைப் பற்றிக் கொள்கிறார்கள் என்று ஜெய மோகன் சுட்டிக் காட்டி இருக்கின்ற மார்க்ஸின் கூற்றினை ஈண்டு நாம் எடுத்துக் கொள்வோம்.

முதலாவதாக, உழைப்பு என்பது வேறு; உழைப்பு ஆற்றல் என்பது வேறு! இரண்டாவதாக, உழைப்பு ஆற்றலின் மதிப்பு என்பது வேறு; அது படைக்கின்ற மதிப்பு என்பது வேறு!

ஆடம் ஸ்மித்தும் ரிக்கார்டோவும் அவர்களுக்கும் முந்திய எத்தனையோ ஆய்வாளர்களும் புரிந்து கொள்ள முடியாமல் தத்தளித்துக் கொண்டு இருந்த இந்த வேறுபாடுகளைக் கார்ல் மார்க்ஸ் மட்டும் புரிந்து கொள்ள முடிந்தது என்றால், அவரது சமுதாய அக்கறையின் தீவிரம் மட்டும் அல்ல அதற்குக் காரணம்; அவரது முரணியக்கச் சிந்தனையின் தீவிரம்தான் காரணம்!

தங்கள் உழைப்பிற்குக் கைமாற்றாக ஒரு குறிப்பிட்ட அளவு கூலியை உழைப்பாளர்கள் பெறுகிறார்கள் என்பது நமது பகுத்தறிவின் மேற் பரப்பில் யாவரும் காணக் கிடக்கின்ற ஒரு நிகழ்மை!

கூலி-உழைப்பு பற்றிய இந்த மேம்போக்கான அறிவினோடு கூட நமது தேடல் நிறைவு அடைந்து விடலாம்; உழைப்பாளர்களின் உழைப்பினை முதலாளிகள் சுரண்டுகிறார்கள் என்று பேசுவதற்கும் ‘சுரண்டல் ஒழிக! ‘ என்று நாம் முழக்கம் இட்டுக் கொள்வதற்கும் இந்த அறிவே நமக்குப் போதும் ஆனதாகவும் இருக்கலாம்.

ஆனால், இந்த அறிவோ ஓர் அனுபவ அறிவு! அதே நேரத்தில், மேம்போக்கான வெறும் அனுபவ அறிவு என்பது மட்டும் அல்ல, இதன் குறைபாடு! பிழையானது ஓர் அறிவு இது என்பதுதான் இதன் குறைபாடு!

காரணம், தங்கள் ‘உழைப்பு ‘க்குக் கைமாற்றாக உழைப்பாளர்கள் பெறுவது அல்ல, கூலி! மாறாக, தங்களது ‘உழைப்பு ஆற்றலு ‘க்கு விலையாக உழைப்பாளர்கள் பெறுவதுதான் கூலி!

ஏனென்றால், ‘உழைப்பு ‘ என்பது உழைப்பு ஆற்றலின் செலவீடு! இந்த உழைப்போ, அவசியமான உழைப்பு மற்றும் மிகையான உழைப்பு என்னும் இரண்டு கூறுகளைக் கொண்டது. இவற்றில், ஆதாயமாக மெய்மைப் படுத்திக் கொள்ளப் படுவதோ, மிகையான உழைப்பு!

இங்கே, (1) ‘உழைப்பிற்குக் கூலி ‘ என்னும் நமது ‘அனுபவ அறிவின் ‘ மேற் பரப்பினை, (2) நமது ஐயப்பாட்டின் கேள்விகளால் உடைத்துப் பிளந்து, அதனோடு ‘முரண் பட்டு ‘த் தொடர்ந்து ‘இயங்கி ‘ச் சென்று, (3) உழைப்பு ஆற்றலின் விலைதான் கூலி; மதிப்பு-விதியின் வெளிப்பாடுதான் விலை-விதியின்மை; என்னும் ‘காரண அறிவினை ‘ வந்து நாம் அடைவதை நாம் காண்கிறோம்.

கூடவே, வெளித் தோற்றத்தின் குறிகளிலும் குணங்களிலும் கோலங்களிலும் (குமர குருபரர்) மயங்கிக் கிடந்திடாமல், சாரத்தைச் சென்று நாம் அடைகின்ற பொழுதுதான், வெளித் தோற்றத்தின் மாய்மைகளை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது என்பதும் நமக்குத் தெளிவு ஆகிறது. இல்லை என்றால், நமக்கு எதற்கு முரணியக்க ஆய்வு முறை ?

மேலும், இயற்கையின் இயங்கு விதிகளையும் வரலாற்றின் இயங்கு விதிகளையும் அடைவானவை என்று எடுத்துக் கொண்டு, தாங்களும் குழம்பி மற்றவர்களையும் குழப்பத்தில் ஆழ்த்திக் கொண்டு வருகின்ற எழுத்தாளர்களும் நம் இடையே இல்லாமல் இல்லை. ஆனால், இயற்கையின் முரண் இயக்கம் என்பது வேறு; வரலாற்றின் முரண் இயக்கம் என்பது வேறு; என்பதுதான் எனது கருத்து.

ஏனென்றால், இயற்கையின் இயக்கத்தில் உணர்மை முறையான பங்கு என்று எதுவும் இல்லை. ஆனால், வரலாற்றின் இயக்கத்திலோ, மனிதர்களின் உணர்மைக்கு ஒரு பங்கு இருக்கிறது. இதனால்தான், உழைப்பு ஆற்றலின் மதிப்பினது தீர்மானப் பாட்டில் வரலாறும் நெறி உணர்வும் கலந்த ஒரு மூலகமும் செயல் ஆற்றுகிறது என்று கார்ல் மார்க்ஸ் கணித்திட நேர்ந்தது. வரலாற்றைப் படைப்பது மனிதர்கள் அல்லவா ?

உழைப்பு ஆற்றலின் மதிப்பினது தீர்மானப் பாட்டினுள் அடங்கிக் கிடக்கின்ற இந்த முரண் துடிப்புதான், வரலாற்றின் உயிர்த் துடிப்பு என்றால் அது மிகை ஆகாது.

கைமாற்று-மதிப்பின், அதாவது, பணத்தின் விடுதலைத் தன்மைதான் முதலாண்மையின் எழுச்சிக்கும் தனி மனித விடுதலைக்கும் காரணம் என்றால், உழைப்பு ஆற்றலினது கைமாற்று மதிப்பின் தீர்மானப் பாட்டில் அடங்கிக் கிடக்கின்ற இந்த முரண் துடிப்புதான், பொதுமைச் சமுதாயத்தின் தோற்றத்திற்கும் காரணம் ஆதல் வேண்டும். எனினும், மார்க்ஸியத்தை வளப் படுத்திட முயல்பவர்களுக்கு இதில் நிறைய வேலை இருக்கிறது என்பதை மட்டும் ஈண்டு நான் சுட்டிக் காட்டிக் கொள்ள விரும்புகிறேன்.

இப்படி எல்லாம் நான் கருத்துக் கூறுவதற்கு, எனது கருத்துகள் அனைத்தும் சரியானவை என்று நான் கருதிக் கொள்கிறேன் என்பது காரணம் அல்ல; சரியானதை நோக்கி முனைப்புடன் நாம் முன்னேறிட வேண்டும் என்று நான் கருதுகிறேன் என்பதுதான் காரணம்! விரிக்கில் பெருகும் என்பதால் இத்துடன் ஈண்டு நான் நிறுத்திக் கொள்வதுதான் பொருத்தமும் ஆகும்.

:க்ராம்சியை நான் படித்தது இல்லை என்பது முற்றிலும் உண்மை! ஆனால், மார்க்ஸின் கருத்துகளில் நின்று வேறு பட்ட கருத்துகளைக் கொண்டு இருந்தவர்தாம் :க்ராம்சி என்றால், அவரது கருத்துகளைக் :க்ராம்சியிசம் என்று நாம் அழைத்தால் என்ன ? அப்படி இல்லாமல், செவ்வை மார்க்ஸியம், புது வகை மார்க்ஸியம், ஈரோப்பிய மார்க்ஸியம், ஆசிய மார்க்ஸியம், என்று எல்லாம் மார்க்ஸியத்தை வகைப் படுத்திட முயல்வது மார்க்ஸியத்தைக் கொச்சைப் படுத்துவதுதான் ஆகும்.

மதிப்பு-விதிக்குக் காந்த மையத்தையும் விலைகளின் ஏற்ற-இறக்கங்களுக்குக் காந்தத் துகள்களின் இயக்கத்தையும் உவமித்து எழுதுகின்ற ஜெய மோகனின் கருத்து, மிகவும் சிறப்பாக வெளிப் பட்டு இருக்கிறது — ஒரு வரம்புக்கு உட்பட்டு! இது போல, பலவந்தமாகச் செயல் படுத்தப் படுகின்ற மதிப்பு-விதிதான், அரசு-முதலாண்மையின், எனவே, ஸ்தாலினிசத்தின் அடிப்படை என்பதை அவர் சுட்டிக் காட்டி இருப்பது சிறப்பானது மட்டும் அல்ல, அசலானதும் கூட! இந்த நூல் பற்றிச் ‘சங்கொலி ‘யில் எழுதி இருந்த சொ.கண்ணன், இதே கருத்தைதான் ஒரு கேள்வியாக எழுப்பி இருந்தார்; மதிப்பு-விதியின் ‘வன்முறை வடிவம் ‘தான் அரசு என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார். இங்கே, ஒரே மாதிரியாகச் சிந்திக்கின்ற இரண்டு சிந்தனையாளர்களைக் காண்கின்ற மகிழ்ச்சி நமக்கு ஏற்படுகிறது.

கலையைப் பற்றியும் மதத்தைப் பற்றியும் இந் நூல், அதிகாரம்-15-இல் நான் வெளிப் படுத்தி இருக்கின்ற கருத்துகள், மார்க்ஸின் கருத்துகள் அல்ல என்பதை ஈண்டு நான் தெளிவு படுத்திட விரும்புகிறேன். எனது மார்க்ஸியச் சிந்தனையின் விளைவுகள்தாம் அவை என்ற போதிலும், நான் மட்டும்தான் அவற்றிற்குப் பொறுப்பு ஆவேன்; கார்ல் மார்க்ஸ் அல்லர்! கதை-கவிதைகளைப் பற்றிய எனது கருத்துகளையும் நண்பர் ஜெய மோகனின் கருத்துகளையும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வது வாசகர்களின் பொறுப்பு!

எந்தக் கலைக்கும் நான் எதிரி அல்லேன்! எனது எதிர்ப்பினால் கலைகள் பாதிக்கப் பட்டு விடப் போவதும் இல்லை. எல்லோரையும் போல கலைகளை நானும் சுவனித்துக் கொண்டுதான் வருகிறேன். அதே நேரத்தில், இல்லாத பெருமைகளை எல்லாம் கலைகளுக்குச் சூட்டி விடுவதில் எந்தப் பொருளும் இல்லை என்பதுதான் எனது கருத்து.

இது போல, ஸ்தாலினிசத்திற்குதான் ஜெய மோகன் எதிராளரே ஒழிய மார்க்ஸியத்திற்கு அல்லர்! மார்க்ஸியம் குறித்து அவர் எழுப்பி வருகின்ற கேள்விகள் ஆழமானவை; மார்க்ஸியத்திற்கு வளம் சேர்ப்பவை! கூர்மையான கேள்விகளை எழுப்பி வருகின்ற நண்பர் ஜெய மோகன், மார்க்ஸியத்தை வளப் படுத்திடவும் முன் வரலாம் என்னும் நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

ஏனென்றால்,

‘வகுத்து விட முடியாத படி உலகமும் வாழ்க்கையும் இருக்கும் வரைதான், ஓர் எழுத்தாளனாக எனது பணி உள்ளது. அடிப்படைகள் வகுத்து முடிக்கப் பட்ட வாழ்க்கையைப் பற்றிச் சொல்வதற்கு ஓர் எழுத்தாளனுக்கு ஏதும் இல்லை. பிறகு தத்துவ வாதிக்கும் அதிகம் வேலை இல்லை என்றே படுகிறது ‘

என்று ஜெய மோகன் கூறுகின்ற பொழுது, உண்மையில் அவர் பேசிக் கொண்டு இருப்பது ஏங்கெல்ஸின் மொழியில்தான்:

‘அனைத்தையும் விஞ்சிய செல்தகையும் உண்மையைக் கண்டு விட்ட முற்றான உரிமையும் வாய்ந்த சிந்தனை முடிவுகளுடன், ‘நிலைவான உண்மை ‘களின் மூலம் மட்டும்தான் இனிச் செயல் ஆற்றிட வேண்டும் என்கின்ற கட்டத்தை என்றாவது மனித இனம் எய்தி விட முடியும் என்றால், உள்ளுறைவான நிலையிலும் உண்மமான நிலையிலும், ‘அறிவாண்மை உலகின் பொன்றாமை ‘ என்பது தீர்ந்து போய் விட்ட கட்டத்தை அது எட்டி விட்டது என்றுதான் பொருள்! (ஏங்கெல்ஸ், டூரிங்கிற்கு எதிராக, மாஸ்கோ ஆங்கிலப் பதிப்பு, பக்.103.)

இறுதியாக, ஈரோப்பின் அறிவு ஒளி இயக்கம்தான் மனிதக் குலத்தின் இன்றைய சிந்தனை எழுச்சிக்குக் காரணம் என்றும் ஈரோப்பிய மெய்ப்பொருண்மை எழுச்சியின் உச்சம்தான் மார்க்ஸியம் என்றும் ஜெய மோகன் கூறுகின்ற கருத்துகளில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதை மிகவும் அழுத்தம்-திருத்தமாக ஈண்டு நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

ஏனென்றால், ஒரு குறிப்பிட்ட காலத்தில், ஒரு குறிப்பிட்ட நிலப் பகுதியில், ஒரு குறிப்பிட்ட வகையான அறிவு எழுச்சி ஏற்பட்டு இருந்தது என்றால், அதற்குக் காரணம் என்ன ? என்பதுதான் அடிப்படையான கேள்வி.

ஈரோப்பாக ஈரோப் இருந்ததுதான் இந்த அறிவு எழுச்சிக்குக் காரணம் என்றோ, அல்லது, அந்த நேரம் பார்த்து மிகவும் திறமையாக ஈரோப்பியர்களின் மூளைகள் சிந்திக்கத் தொடங்கி இருந்ததுதான் அதற்குக் காரணம் என்றோ, அல்லது, ஈரோப்பியர்களின் சிந்தனைகளில் புதிய முரண்கள் அப் பொழுது செயல் படத் தொடங்கி இருந்ததுதான் அதற்குக் காரணம் என்றோ, இந்தக் கேள்விக்குப் பதில் கூறுவது போன்ற கூற்றுகள்தாம், ஜெய மோகனின் கூற்றுகளும் ஆகும். ‘ஈரோப்பிய அறிவு எழுச்சி = ஈரோப்பிய அறிவு எழுச்சி ‘ என்பது ஈரோப்பிய அறிவு எழுச்சிக்குக் காரணம் கூறுவது ஆகாது.

‘யாதும் ஊரே; யாவரும் கேளிர்! ‘ என்று 2500 ஆண்டுகளுக்கு முன்னர் கணியன் பூங்குன்றனார் மனித நேயம் பேசினார் என்றால், திரவிடர்களின் மூளைகளில் திடிரென்று அப் பொழுது மனித நேயம் குடி புகுந்து விட்டு இருந்தது என்று அதற்கு நாம் காரணம் கூறிக் கொள்ள முடியுமா ? ஏனென்றால், ஊர் விட்டு ஊரும் நாடு விட்டு நாடும் சென்று வணிகம் புரிந்து வந்தவர்கள் திரவிடர்கள்! இந்த வணிக நேயத்தின் விளைவான ஓர் அறிவு எழுச்சிதான் கணியன் பூங்குன்றனாரின் மனித நேயச் சிந்தனைகளுக்குக் காரணம்!

இது போல, பழைய பண்ணைய உற்பத்தி உறவுகளின் அடித் தளங்களை — அடிமைத் தனங்களை — அசைத்துக் காட்டுகின்ற அளவுக்கு ஈரோப்பில் வணிக மையங்கள் அன்று எழுச்சி கண்டு இருந்ததுதான், ஈரோப்பின் அன்றைய அறிவு எழுச்சிக்குக் காரணம். (பார்க்க: வரலாற்றின் முரண் இயக்கம்: பாகம் ஒன்று, பக்.114-21.)

இந்த வணிக வளர்ச்சியின் தொடர்ச்சியில், உச்சமாகத் தோன்றி வளர்ந்து வந்ததுதான் முதலாண்மை என்பதால், முதலாண்மையைப் பற்றிய மார்க்ஸின் சிந்தனைகள், ஈரோப்பியச் சிந்தனைகளின் உச்சமாக நமக்குத் தோற்றம் அளிக்கலாம். ஆனால், மார்க்ஸியமோ உலகு அளாவியது! ஏனென்றால், முதலாண்மையும் உலகு அளாவியது; வெறுமனே ஓர் ஈரோப்பிய உற்பத்தி மற்றும் மறு உற்பத்தி முறை மட்டும் அல்ல!

அதாவது, பண்டைத் திரவிடத்தின் அறிவு எழுச்சி என்பது, பண்டைத் திரவிடர்தம் வணிகத்தின் விளைவு என்றால், ஈரோப்பின் அறிவு எழுச்சி என்பது, ஈரோப்பியர்தம் வணிகத்தின் விளைவு என்றால், மார்க்ஸியமோ, முதலாண்மை பற்றிய சிந்தனைகளின் உச்சமான விளைவு! கடந்த காலச் சிந்தனைகள் அனைத்தினதும் வரலாற்று முறையான உச்சமாக மார்க்ஸியம் இன்று திகழ்கிறது என்றால், அதற்குக் காரணம், கடந்த காலப் பொருளாதார வளர்ச்சிகள் அனைத்தினதும் வரலாற்று முறையான உச்சமாக முதலாண்மை இன்று திகழ்ந்து வருவதுதான் ஆகும்.

ஆக, முதலாண்மை உற்பத்தி முறையினைப் பற்றிய, வரலாற்று முறையான திறனாய்வும் விள்ளனமும்தான் மார்க்ஸியம் என்பது தெளிவு.

இனி, நூலினுள் நாம் நுழைவோம்.

சொக்கன் குடியிருப்பு, அன்புடன்

30-04-2002 சோதிப் பிரகாசம்

sothipiragasam@lycos.com

தொலைபேசி: சென்னை: 2644 4637 ; 2617 2823.

Series Navigation

சோதிப் பிரகாசம்

சோதிப் பிரகாசம்